நாம் தமிழர் கட்சி ஆவணம் தொடர்பாக சில கருத்துக்கள்


 

##நாம் தமிழர் ஆவணத்தை ஒருவாறாக இன்று வாசிக்கக் கிட்டியது.  ஆவணத்தில் திராவிடர்கள் யாரென்பது தொடர்பாகக் கூறப்பட்டிருக்கின்ற கருத்துக்களிலும், தமிழ்நாட்டில் நிலவுகின்ற முகாமையான முரண்பாடுகள் என்று பட்டியலிடப்பட்டுள்ள 10 முரண்பாடுகளில் முகமதியர்கள், கிறீஸ்தவர்கள் தொடர்பாக எச்சரிக்கையோடும், விழிப்போடும், அன்போடும் கையாளப்படவேண்டிய தரப்பினர் என்று குறிப்பிடப்பட்டிருப்பதிலும் உடன்பாடு இல்லை.  முகமதியர்கள், கிறீஸ்தவர்கள் தொடர்பான இந்தப் பார்வை முழுக்கத் தவறானதும் கூட.  (இந்த முரண்பாட்டுப் பட்டியலில் எனக்கு உடன்பாடில்லாத வேறு முரண்பாடுகளுன் இருந்தாலும், முக்கியத்துவம் கருதி இங்கே இதனைச் சுட்டிக்காட்டுகின்றேன்.)

 

##அது போல சில இடங்களில் திராவிடத் தேசியம் எதிர் தமிழ்த் தேசியம் என்று குறிப்பிடப்படுகின்றது.  திராவிடத்தினை தேசியம் என்று எந்த இடத்திலும் குறிப்பிடாத பெரியாரின் தெளிவு இன்னமும் இவர்களுக்கு வரவில்லை என்பது ஏமாற்றமே..

 

##நாம் தமிழர் கட்சியினர் சொல்வதுபோல ஆவணத்தில் எந்த இடத்திலும் நேரடியாக பெரியார் மீதான குற்றச்சாற்றுகளை முன்வைக்கவில்லை என்றபோதும் “திராவிடம் சொன்னது”. ” திராவிடம் சொன்னது” என்று அவர்கள் பட்டியலிடும் குற்றச்சாற்றுகள் பல பெரியாரையே குறிவைக்கின்றன என்பதை இலகுவில் புரிந்துகொள்ளமுடிகின்றது.  ஆனால் ஆவணத்தில் குறிப்புடப்பட்டுள்ளது போன்று சிங்களத்தை திராவிட இனம் என்று எப்போது சொன்னார்கள் என்பது எனக்குத் தெரியவில்லை.  எனது நினைவில் அவ்வாறு கூறப்பட்டதாகத் தெரியவில்லை.  இதனைத் தெளிவுபடுத்தவேண்டியது நாம் தமிழர் கட்சியினர் அல்லது ஆதரவாளார்களின் பொறுப்பு.

 

## பக்கம் 42ல் தமிழ்த்தேசிய வழிகாட்டிகள் என்று பட்டியலிடப்பட்டுள்ளவர்களின் பெயர்களில் இராச இராச சோழன், இராசேந்திர சோழன், பாரதிதாசன் போன்றோரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டிருக்கின்றன.  இராச இராச சோழன், இராசேந்திர சோழன் பற்றி no comments.  அடுத்து ஆவணத்திலும், நாம் தமிழர் கட்சியினர் இணையத்திலும் முன்வைக்கின்ற பாரதிதாசனின் வைத்திருந்த சுய சாதிப்பற்றுப் பற்றி நாம் தமிழர் கட்சியினர் எந்த விமர்சனமும் இல்லாமல் இருக்கின்றனரோ என்றே தோன்றுகின்றது.

 

##அடுத்து திராவிடர் என்கிற பெரியாரின் கருத்துக்களுக்கும், பின்னாட்களில் திராவிடக் கட்சிகள் என்ற பெயரில் தமிழகத்தில் உருவாக அரசியல் கட்சிகளிற்கும் இருக்கின்ற பாரிய வித்தியாசத்தப் புரிந்துகொள்ளவேண்டும்.

 

##அடுத்து விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனது பெயரினை பெரும்பாகரன் என்று தூயதமிழ்ப்படுத்தி இருக்கின்றார்கள்.  இது போன்ற கோமாளித்தனங்களை உடனே நிறுத்தவேண்டும். (இவர்களின் தமிழ்ப்படுத்தலுக்கு இன்னமும் சில உதாரணங்கள் இராச ராசன்  à அரசர்க்கரசன், இராசீவ் காந்தி à அரசீவ் காந்தி

 

 

ஒரு கட்சியின் முதன்மை ஆவணம் இத்தனை தவறுகளுடனும், தவிர்த்திருக்கவேண்டிய கருத்துக்களுடனும் வெளியாகி இருப்பது மிகுந்த ஏமாற்றத்தையளிக்கின்றது என்றே சொல்லவேண்டும்.  இந்த ஆவண ஆக்கக் குழுவில் இருந்தவர்கள் தம்மைநோக்கி முன்வைக்கப்பட்டிருக்கின்ற குற்றச்சாற்றுகளைக் கவனித்து, ஆராய்ந்து தேவையான திருத்தங்களை உடனடியாகச் செய்யவும், அவற்றை நடைமுறைப்படுத்தவும் முன்வரவேண்டும் என்பதே என் அவா.  மேலும், பெரியார் தொடர்பாக தொடர்ச்சியாகக் குற்றச்சாற்றுகளை முன்வைக்கின்றபோது பெரியாரை ஒருமுறை முழுமையாகப் படித்துவிடுவது நலம்.  அண்மையில் கீற்று இணையத்தளத்திற்கு வழங்கிய நேர்காணலில் தொ.பரமசிவன் கூறிய “பெரியாரை யார் எதிர்க்கின்றார்கள் என்று பார்த்தால் பெரியாரின் வெற்றி புலப்படும்” என்ற கருத்து அத்தனை இலகுவாகத் தாண்டிச் செல்லக்கூடியதல்ல.

 

ஆவணத்தை மீள ஒருமுறை வாசித்துவிட்டு விரிவாக எழுதும் எண்ணம் உண்டு

(நாம் தமிழர் கட்சி தொடர்பாக எனக்கு ஆரம்பம் முதலே விமர்சனங்கள் இருக்கின்றபோதும் சில புள்ளிகளில் உடன்பாடும் இருந்தே இருக்கின்றன.  இன்று நாம் தமிழர் ஆவணத்தில் சொல்லப்படுகின்ற கருத்துக்களை வைத்து அவர்களை திமுகக் காரர்களும், மாற்றுக் கருத்தாளர்களும் மிக உற்சாகமாக எதிர்ப்பதைக் காணமுடிகின்றது.  அந்த வகையில் பாராது நாம் தமிழர் மீது அக்கறை கொண்டவனாகவே எனது கருத்துக்களை இங்கே பகிர்ந்துகொள்ளுகின்றேன்.)

 

தொடர்புள்ள இன்னுமொரு முக்கிய பதிவு

http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=20024:2012-06-06-12-51-14&catid=1469:2012&Itemid=711

 

பிடிக்க நினைத்தது பிள்ளையார்தான்………..


தமிழர் உணவுகள் என்கிற பக்தவத்சல பாரதி தொகுத்து காலச்சுவடு பதிப்பாக வெளியான புத்தகத்தைப் பார்த்ததும் உடனே படிப்பதில் ஆர்வம் உண்டானது.

என்னுடன் வேலைத் தளத்தில் பணிபுரிகின்ற ஈரானைச் சேர்ந்த வர்லாறு, வாசிப்பில் அதிகம் அக்கறை கொண்ட நண்பர் ஒருவருடன் மத்தியான சாப்பாட்டு நேரத்திலும் பேசுகையில் எமக்கும் பாரசீகர்களுக்கும் உணவுப் பழக்கங்களில் இருக்கின்ற அனேக ஒற்றுமைகளை அவதானிக்க முடிந்தது.  ஒரு உதாரணத்துக்கு நாம் குத்தரிசிச் சோற்றில் கஞ்சியை வடித்துக் குடிப்பது வழக்கம் (தமிழகத்தில் இவ்வழக்கம் இருக்கின்றதோ தெரியவில்லை).  அனேகம் அக்கஞ்சியுடன் தேங்காய்ப்பாலைக் கலந்து குடிப்பதும் வழக்கம்.  பாரசீகர்களும் இதே போன்றே கஞ்சியுடன் தயிரைக் கலந்து குடிப்பதை வழக்கமாக வைத்துள்ளனர்.

தவிர, புலம்பெயர் நாடுகளில் தமிழர்களின் உணவுகளில் நாம் உணவில் சேர்த்துக்கொள்ளுகின்ற செத்தல் மிளகாய்  காரம் அதிகம் பிற நாட்டவர்களுக்கு கலக்கம் தரவல்லது.  தமிழர்களின் உணவென்றாலே செத்தல் மிளகாய் காரந்தான் நிறையப் பேருக்கு நினைவுக்கு வரும்.  ஆனால் ஒப்பீட்டளவில் செத்தல் மிளகாயை உணவில் சேர்த்துக்கொள்ளுகின்ற வழக்கம் எமக்கு மிக அண்மைக்காலத்திலேயே ஏற்பட்டது.

இது போன்ற விடயங்களை “பண்பாட்டு மானிடவியலாளரான” பக்தவத்சல பாரதி தொகுத்த இந்தப் புத்தகத்தில் காணலாம் என்ற ஆர்வமே புத்தகத்தை வாசிக்கத் தூண்டியது.  காலையிலும் மாலையிலுமாக வீடு –> வேலை, வேலை — > வீடு வரையான பயண நேரங்களில் வாசிக்கவும் அதிகம் ஆழமான் வாசிப்புத் தேவைபப்டாத புத்தகமாக அதனைத் தேர்ந்து வாசிகக்த் தொடங்கினேன்.  என் போதாத காலம், புத்தகம் நான் எதிர்பார்த்த விதத்தில் இருக்காததுடன் (நான் எதிர்பார்த்தது போல புத்தகம் இருக்க வேண்டும் என்பதோ அப்படி இருக்காதது பெருங்குற்றம் என்றோ இதை விளங்கிக் கொள்ளவேண்டாம்) மிகுந்த வெறுப்புணர்வுடனும் குரூரமான கேலியுடனும் எழுதப்பட்ட மோசமான கட்டுரை ஒன்றை வாசித்துத் தொலைக்கவேண்டியும் ஏற்பட்டுவிட்டது.  கட்டுரையின் தலைப்பு புலம்பெயர்ந்தோர் சமையல்.  நாம் பெற்ற இன்பம் பெறுக என்று கட்டுரையை கீழே இணைத்துள்ளேன்.  அண்மைக்காலமாக கருத்துச் சுதந்திரம், ஊடக சுதந்திரம் என்று கூறிக்கொண்டு காலச்சுவடிற்கு வக்காலத்து வாங்குவோர் இது போன்ற காலச்சுவடின் குரூரமான முகத்தினையும் கண்டுணர வேண்டும் என்பது என் வேண்டுகோள்.

ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : சில குறிப்புகளும் கருத்துக்களும்


ஒரு புத்தகம் அது உள்ளடக்கியிருக்கின்ற விடயங்களில் மாத்திரம் அல்லாமல் அது வெளிவரும், எழுதப்படும், வாசிக்கப்படும் காலங்களாலும் முக்கியத்துவம் பெறுகின்றது.  அந்த வகையில் ஈழப்போராட்டம் மிகப்பெரியதோர் இனப்படுகொலையுடன் ராணுவ ரீதியாக முடிவுக்கொண்டுவரப்பட்டிருக்கின்ற காலப்பகுதியில் வந்திருக்கின்ற கணேசன் என்கின்ற, ஈழப்போராட்ட வரலாற்றில் ஐயர் என்று அறியப்பட்டவர் எழுதிய “ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்” என்கிற நூலை முக்கியமானதாகவே நான் உணர்கின்றேன்.  மிகப் பெரியதோர் அழிவிற்குப் பின்னரும் தமிழரின் தேசிய விடுதலைப் போராட்டத்திற்கான தேவைகள் அப்படியே இருக்கையில், இன ரீதியிலான ஒடுக்கல் இன்னமும் அதிகரித்து வருவதாக அவதானிக்கப்படுகின்ற காலப்பகுதியில், தமிழ்த் தேசிய உணர்வு இன்னமும் கூர்மை அடைந்திருப்பதை அவதானிக்கக்கூடியதாக இருக்கின்ற இந்நாட்காளில் தமிழரின் தேசிய விடுதலைப்போராட்டத்தையும் அது முன்னெடுக்கப்பட்ட விதத்தையும் ராணுவ, அரசியல் ரீதியிலான அணுகுமுறைகளை சுய பரிசோதனை செய்வதற்கும், மீள்பரிசீலனை செய்வதற்குமான தேவையும் அதிகரித்தே இருக்கின்றது.  மேற்குறித்த பார்வைகள் மற்றும் கூறுகள் தொடர்பான முழுமையான பிரக்ஞையுடன் ஈழப்போராட்டத்தில் எனது பதிவுகள் என்கிற இந்தப் புத்தகத்தைப் பற்றிய எனது பார்வையை இங்கே பதிவாக்குகின்றேன்.

 

இனியொரு இணையத்தளத்தில் தொடர்ச்சியாக வெளியாகி பின்னர் இனியொருவின் முதலாவது அச்சு வடிவ வெளியாடாகி இருக்கின்ற இந்நூல் தொடர்பான இந்நிகழ்வினை தேடகம் ஒருங்கமைத்திருக்கின்றது.  இனியொருவிற்கும், தேடகத்திற்கும் இந்த முயற்சிக்கு நன்றி சொல்லிக்கொள்ளுகின்ற அதேவேளை அவை இரண்டின் அரசியல் தொடர்பாக இருக்கின்ற விம்பத்தில் இருந்து விடுபட்டு இந்நூலில் சொல்லப்படுகின்ற காலப்பகுதியில் பிறந்தவன் என்கிற முறையில் எனது தலைமுறையின் பார்வையை இயன்றவரை இதில் பதிய முனைகின்றேன்.

 

இந்நூலில் 1972ல் தமிழ் இளைஞர்கள் ஆயுதம் தாங்கிய போராட்டங்களைத் தொடங்கிய காலப்பகுதிகளில் இருந்து அதில் ஈடுபட்டு பின்னர் தமிழ்ப் புதிய புலிகள் அமைப்பிலும் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பிலும் ஆரம்பகால மத்திய குழு உறுப்பினர்களுல் ஒருவரான ஐயர் பின்னர் புலிகள் அமைப்பு இரண்டாக உடைந்தமை, பின்னர் புளொட் இயக்கத்தின் தோற்றம் வரையான காலப்பகுதிகளிலான தனது அனுபவங்களை பதிவாக்கியுள்ளார்.  இதில் முக்கியமாகக் குறிப்பிடவேண்டிய விடயம் என்னவென்றால் இயன்றவரை தான் சார்ந்திருந்த அமைப்பின் தவறுகளைச் சுட்டிக்காட்டுகின்ற போது, அந்தத் தவறுகளில் இருந்து தன்னை விடுவித்து பிறர் மீது பழி சுமத்துவதைத் தவிர்த்து அந்நாட்களில் மேற்குறித்த முடிவுகள் எடுத்தபோது அதிலிருந்த தன்து வகிபாகத்தையும், தனது நிலைப்பாட்டையும் ஒத்துக்கொண்டே ஐயர் எழுதிச்செல்லுகின்றார்.  அதே நேரம், புலிகள் இயக்கத்தை விட்டு வெளியேறி கிட்டத்தட்ட 25 வருடங்களின் பின்னர் அன்றைய புலிகள் இயக்கத்தின் தவறான நடவடிக்கைகளாக எவை அமைந்திருந்தன, அவற்றை எவ்வெவ்வாறு செய்திருக்கலாம் என்று சொல்லிக்கொள்ளுகின்ற ஐயருக்கின்ற சலுகை புலிகள் இயக்கத்தில் தொடர்ந்து இருந்தவர்களுக்கு அதன் தலைமை உட்பட இருந்திருக்காது என்றே சொல்ல விரும்புகின்றேன்.  இதனை சிந்தனைக்கும் அதனை நடைமுறையில் பிரயோகிப்பதற்கும் இடையில் இருக்கின்ற நடைமுறைப்பிரச்சனைகள் சார்ந்தே இங்கே குறிப்பிடுகின்றேன்  அதுவும் குறிப்பாக தொடர்ச்சியாக ராணுவ நடவடிக்களில் ஈடுபட்டுக்கொண்டிருக்குகின்ற ஒரு குழுவினர் எதிர்கொள்ளக் கூடிய புற அழுத்தங்களின் மத்தியில் எதிர்கொள்ளக்கூடிய சிக்கல்களை நாம் கருத்தில்கொள்ளவேண்டும்.

 

குறிப்பாக இந்த நூலிலும், இன்னும் நிறைய இடங்களிலும் பிரபாகரனின் தூய ராணுவ நோக்கு தொடர்ச்சியாக விமர்சிக்கப்பட்டுகின்றது.  அதே நேரத்தில் வரலாற்றில் பிரபாகரனின் பாத்திரத்தை அணுக முற்படும்போது அன்றைய அரசியல் சமூக சூழல், அவர் எதற்காக போராட முன்வருகின்றார், தனது போராட்டத்தை அவர் ஆரம்பிக்கின்ற போது அதற்கான தேவை எப்படி இருந்து, என்ன தேவையாக இருந்தது என்று அவர் கருதினார், அவரைப் பாதித்த தலைமைகள் போன்ற காரணிகளையும் சேர்த்தே ஆராயவேண்டி இருக்கின்றது.  அதன் தேவை கருதி தனது ஆரம்ப கால நேர்காணல்களில் பிரபாகரன்  தெரிவித்த சில கருத்துக்களை அவதானிப்போம்,

1984 ல் சண்டே (இந்தியா) இதழில் வெளியான அனிதா பிரதாப்பிற்கு வெளியான நேர்காணலில்,

இலங்கைத் தமிழர்களுக்கு ஆயுதப் போராட்டமே ஒரே வழியென்று நீங்கள் தீர்க்கமான முடிவுக்கு வர நிர்ப்பந்தித்த உங்களின் தனிப்பட்ட  அனுபவங்களைச் சற்றுக் கூறுவீர்களா? கல்வி, வேலை வாய்ப்பு ஆகியவற்றில் இலங்கை அரசு காட்டிய பாரபட்சமான கொள்கையால் நீங்களோ உங்கள் குடும்பத்தவரோ அல்லது உங்கள் நண்பர்களோ நேரடியாகப் பாதிக்கப்பட்டுள்ளனரா?

என்கிற கேள்விக்கு

“நான் பள்ளிச் சிறுவனாக இருந்த போது 1958 ஆம் ஆண்டின் இனக் கலவரங்களில் நிகழ்ந்த பயங்கரச் சம்பவங்கள் என் மனதில் ஆழமான பாதிப்பை ஏற்படுத்தின.  சிங்கள இன வெறியர்களால் எம் மக்கள், ஈவிரக்கமில்லாமல் கொடூரமாகக் கொல்லப்பட்ட  நெஞ்சை உலுக்கும் சம்பவங்களை நான் கேள்விப்பட்டேன்.  எங்கள் குடும்பத்துக்குத் தெரிந்த  ஒரு விதவைத் தாயை நான் ஒரு முறை சந்தித்த போது அவர் இந்த இன வெறியாட்டத்தால் தனக்கு நேர்ந்த துயரமான அனுபவத்தை என்னிடம் சொன்னார்.  இனக்கலவரத்தின் போது சிங்களக் காடையர்கள் கொழும்புவில் இருந்த அவர் வீட்டைத் தாக்கினார்கள்.  அவரது வீட்டிற்குத் தீ வைத்து அவருடைய கணவரையும் கொடூரமாகக் கொண்டார்கள்.  அவரும் அவரது பிள்ளைகளும் பலத்த எரி காயங்களுடன் தப்பினார்கள்.  அவரது உடம்பில் காணப்பட்ட எரிகாயத் தழும்புகளைப் பார்த்த போது நான் மிகவும் அதிர்ச்சியடைந்தேன்.  சிறு குழந்தைகளைக் கொதிக்கும் தாருக்குள் உயிருடன்  வீசிக்கொன்ற கோரச் சம்பவங்களை நான் கேள்விப்பட்டேன்.  அநாதரவான அப்பாவித் தமிழர்கள் எவ்வாறெல்லாம் கொடூரமான தாக்குதலுக்கு உள்ளாகின்றார்கள் என்று கேட்கும்போதெல்லாம் எம்மக்கள் மீது ஆழ்ந்த அனுதாபமும் அன்பும் ஏற்பட்டன.  இந்த இனவெறி அமைப்பின் பிடிக்குள் இருந்து  எம்மக்களை மீட்கவேண்டும் என்ற பெரும் உந்துதல் என்னிடம் தோன்றியது.  நிராயுத பாணிகளான  அப்பாவித் தமிழர்களுக்கெதிராக  ஆயுத வலிமையைப் பிரயோகிக்கும்  இந்த அமைப்பினை  ஆயுதப் போராட்டத்தின் மூலமே எதிர்கொள்ளமுடியும் என்று நான் ஆழமாக உணர்ந்தேன்” (மாவீரர் உரைகள், நேர்காணல்கள் – பக்கம் 254-255)

என்று பதிலளிக்கின்றார் பிரபாகரன்.  இதை ஒத்த கருத்துக்களையே இதே கருத்தையே பின்னர் 30/12/1985 ஃப்ரொன்ட்லைன் இதழிற்கு வழங்கிய நேர்காணலிலும், பின்னர் 23/மார்ச்/1986 ல் வீக் இதழிற்கு வழங்கிய நேர்காணலிலும் தெரிவித்துள்ளார்.

எனவே தமிழ்மக்கள் மீது இலங்கை அரசின் நேரடியான மற்றும் மறைமுகமான ஆதரவுடன் நிகழ்த்தப்பட்ட ஆயுத மற்றும் அரசியல் ரீதியான வன்முறைகளை எதிர்கொள்வதற்கு தமிழர்களுக்கென ஒரு ராணுவம் தேவை என்பதே பிரபாகரன் உள்ளிட்ட பலரின் கருத்தாக அந்நாட்களில் இருந்தது.  இதனையே ஐயரும் குறிப்பிடுகின்றார்,

“பிரபாகரன் உட்பட நாம் அனைவருமே இன அடக்குமுறைக்கு எதிரான எமது கோபத்தை, பெருந்தேசிய வன்முறைக்கு எதிரான எமது  உணர்வுகளை, ஆயுதப் போராட்டமாக முன்னெடுக்க, தமிழர் விடுதலைக் கூட்டணி சட்ட வரம்புகளுக்கு உட்பட்ட வகையில் போராட்டத்தை முன்னெடுத்தது என்பதே எமது நம்பிக்கை” (பக்கம் 62)

என்றும்

“பிரபாகரனது நோக்கமும் அதன் வழி எமது நோக்கமும் ஒரு பலமான இராணுவக் குழு ஒன்றைக் கட்டியமைத்துக் கொள்வதே.  தமிழர் விடுதலைக் கூட்டணியின் அரசியலை நாம் போதுமானதாக எண்ணியிருந்தோம்” (பக்கம் 65)

என்றும் குறிப்பிடுகின்றார்.  தவிர இன்னோரிடத்தில்

“நான் இந்தியாவில் இருந்த வேளையில் எமது மத்திய குழுவும் தமிழர் விடுதலைக் கூட்டணியும் ஒரு எழுதப்படாத ஒப்பந்தத்திற்கு வந்திருந்தனர்.  தமிழர் விடுதலைக் கூட்டணி அரசியல் அமைப்பு என்றும், இளைஞர் பேரவை வெகுஜன அமைப்பு என்றும் புலிகள் இவற்றிற்கான ராணுவ அமைப்பு என்றும் முடிவிற்கு வருகின்றனர்” (பக்கம் 56).

இந்தச் சம்பவம் கிட்டத்தட்ட 77ல் நடக்கின்றது.  எனவே புலிகள் ஆரம்பகாலத்தில் இருந்தே தம்மை ஒரு ராணுவக் குழுவினராகவே வளர்ந்து வந்தனர்.  ஏற்கனவே இருந்த தமிழர் விடுதலை கூட்டணியை தமக்கான அரசியலை முன்னெடுப்பவர்களாகவே அவர்கள் அன்று நம்பி இருந்தனர்.  அந்த அடிப்படையிலேயே தமிழ்ப் புதிய புலிகளின் முதலாவது அமைப்பு விதிகளும் தூய ராணுவ நோக்கிலேயே அமைந்திருந்தன.  தமிழர்களுக்கென வலிமையான ராணுவம் ஒன்றைக் கட்டியெழுப்புவதே முதன்மையான தேவை என்பதில் உறுதியாக இருந்த பிரபாகரன் அவ்வாறு கட்டியெழுப்பபப்படும் ராணுவம் ராணுவ ஒழுக்கத்துடனும் கட்டுப்பாடுனும் இருக்கவேண்டும் என்று கருதினார்.  1986ல் நியூஸ் வீக் இதழிற்காக தீபக் மஷூம்தாரிற்கு வழங்கிய நேர்கானலிலும் இந்தக் கருத்தையே பிரதிபலித்துள்ளார் பிரபாகரன்.  இந்தப் புத்தகத்தில் புலிகள் இயக்கத்திற்குள் பிரபாகரன் செலுத்திய ராணுவப் போக்குப் பற்றிய விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டிருக்கின்றபோதும், அவற்றை மேற்குறித்த நிபந்தனைகளுடன் சேர்த்து ஆராய்வதே பொருத்தமானதாக இருக்கும்.

அது போல அன்றைய சூழலில் ஐயர் உள்ளிட்ட இளைஞர்கள் தமது அரசியல் பாதையைத் தீர்மாணிப்பதில் செல்வாக்குச் செலுத்திய காரணிகளையும் பார்ப்போம்.  1970ல் லங்கா சம சமசமாஜக் கட்சியும், இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சியும் சிறீமாவோ தலைமையிலான சுதந்திரக்கட்சியுடன் இணைந்து ஆட்சி அமைந்திருந்த காலப்பகுதியில்  இனவாரியான தரப்படுத்தல், பௌத்த மதச்சார்பான அரச கொள்கை, சிங்களம் அரச கரும மொழி ஆக்கப்படல் போன்றவை நடைமுறைப்படுத்தப்படுகின்றன.  இக்காலப்பகுதி பற்றி ஐயர் சொல்வதைப் பார்ப்போம்,

“இந்த நேரத்தில் நாமெல்லாம் தூய தேசியவாத சிந்தனையுடனேயே செயற்பட ஆரம்பித்தோம்.  எமக்குத் தெரிய சண்முகதாசனின் மாவோயிசக் கட்சி போன்றன தீவிர இடதுசாரிக் கருத்துகளுடன் வெளிவந்திருந்தாலும், தேசியப் பிரச்சனையில் அவர்கள் அக்கறை காட்டவில்லை.  தமிழ் பிரச்சனைகள் பற்றிப் பேசுவதெல்லாம் அண்ணாத்துரை, கருணாநிதி, தமிழரசுக் கட்சி என்பன என்பதே எமக்குத் தெரிந்திருந்தவை” (பக்கம் 8)

 

இங்கே கருணாநிதி, தமிழரசுக்கட்சிகளை ஐயர் சுட்டிக்காட்டியிருப்பது இன்று நகைப்பிற்கு உரிய ஒன்றாகக் கருதப்படலாம் என்றாலும், அவர்களின் அன்றைய காலப்பகுதியிலான பங்களிப்புகளை அவர்களின் பின்னைய அரசியல்களைக் காரணங்காட்டி மறுத்துவிடமுடியாது.  ஈழப்போராட்டத்தின் ஆரம்பகாலப்பகுதியில் அதன் எல்லாப் பலவீனங்களையும் தாண்டி எவ்வாறு தமிழரசுக்கட்சி போன்றவற்றின் செயற்பாடுகள் மிகுந்த ஆதரவாக இருந்தன என்று அண்மையில் “தமிழர்களின் நாடு கடந்த அரசியல்” என்கிற புத்தக வெளியீட்டு விழாவில் செழியனும் குறிப்பிட்டிருந்தார்.

 

தவிர இக்காலப்பகுதி இலங்கையைப் பொறுத்தவரை அரசாங்கம் தமிழர்கள் மீது இன ரீதியிலான ஒடுக்குதல்களை மீகத் தீவிரப்படுத்தியிருந்த, அதே நேரம் இடது சாரிக்கட்சிகள் இனப் பிரச்சனை பற்றிய கரிசனைகளை தமது நிகழ்சி நிரலில் இருந்து அகற்றியிருந்த காலம்.  இந்தச் சூழ்நிலையில் ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்த அன்றைய இளைஞர்களுக்கு ஏற்ற அரசியல் ரீதியான தலைமை அமையவில்லை என்றே கருதவேண்டும்.  புலிகள் இயக்கத்தைப் பொறுத்தவரை பிரபாகரன் அதன் ஆளுமை செலுத்தியவராக இருந்த போதும் அதன் தலைவர் என்று ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுகின்ற போது அவர் உமா மகேஸ்வரனையே பிரேரிப்பதையும் இங்கே அவதானிக்கவேண்டும்.  பிரபாகரனைப் போலவே வலிமையான ராணுவம் ஒன்றைக் கட்டமைக்கவேண்டும் என்ற கருத்துடையவராக இருந்தபோதும் ஏற்கனவே இளைஞர் பேரவையின் செயலாளர் என்ற வகையில் அறியப்பட்டவராகவும், தம்மை விட அதிகம் தொடர்புகளைக் கொண்டிருந்தவரும் உமா மகேஸ்வரன் என்றும், ஏற்கனவே அரசியல் போராட்டங்களில் அவர் தொடர்ந்து ஈடுபட்டுவந்தார் என்றும் ஐயர் குறிப்பிடுவதையும் இங்கே சுட்டிக்காட்டுவது முக்கியமானதாகவே தோன்றுகின்றது.  ஏனெனில் உமா மகேஸ்வரனுக்குப் புலிகள் இயத்துடன் ஏற்பட்ட பிளவே பிரபாகரனை அதிகம் இறுக்கமானவராக்கியது என்று ஐயரும் (பக்கம் 211) குறிப்பிடுகின்றார்.  அது போல பின்னர் புலிகளில் ஜனநாயகத் தன்மை இல்லை என்பதைக் காரணம் காட்டிப் புலிகளில் இருந்து சுந்தரம் போன்றோர் பிரிந்து செல்கின்ற போது அவ்வாறான குற்றச்சாற்றுகள் இயக்கத்தை இரண்டாக உடைக்கும் நோக்குடையவை என்றே பிரபாகரன் மறுக்கின்றார்.  அதன் பின்னரும் சுந்தரம் தலைமையில் சிலர் பிரிந்துசெல்கின்ற போதும் உடனடியாகவே உமா மகேஸ்வரனும் சுந்தரம் போன்றோருடன் இணைந்து கொள்வதுடன் அந்நிகழ்வு பற்றி ஐயர் தொடர்ந்து,

“ஊர்மிளா தொடர்பான பிரச்சனையில் உமா மகேஸ்வரனைக் கொல்வதற்காக அனுப்பப்பட்டவர்களில் சுந்தரமும் ஒருவர்.  அவ்வேளையில் இருந்தே உமா மகேஸ்வரனுடன் சுந்தரத்துக்குத் தொடர்பிருந்திருக்கலாம் என்று எம்மில் பலருக்கிருந்த சந்தேகம்  இப்போது உறுதியானது போலிருந்தது.

சுந்தரத்தின் அனுசரனையோடு சுழிபுரம் பகுதியிலேயே உமா மகேஸ்வரன் தங்கியிருந்ததாகவும் அவர்கள் (இங்கே அவர்கள் என்று ஐயர் குறிப்பிடுவது கண்ணன் மற்றும் சுந்தரத்தை – அருண்மொழிவர்மன்) எமக்குத் தெரிவிக்கின்றனர்” (பக்கம் 210).

இதைத் தொடர்ந்து நடைபெற்ற PLOTE மத்திய குழு விவாதங்களில் புலிகள் இயக்கத்தில் இருந்தது போலவே ராணுவத் தாக்குதல்களை முன்னெடுக்கவேண்டும் என்ற கருத்தை  உமா மகேஸ்வரன், சந்ததியார், சுந்தரம் போன்றோர் முன்வைப்பதுடன் உமா மகேஸ்வரன், சுந்தரம் போன்றோரால் பணத் தேவைகளை நிவர்த்தி செய்ய கொள்ளைகளில் ஈடுபடவேண்டும் என்ற கருத்தும் முன்வைக்கப்படுகின்றது.  தவிர PLOTE இயக்கத்திலும் உமா மகேஸ்வரன், சந்ததியார், சுந்தரம் போன்றோர் அதிகம் செல்வாக்கு செலுத்தியதாகத் தாம் உணைர்ந்ததாகவும் ஐயர் இங்கே பதிவுசெய்கின்றார்.  அதாவது எந்தக் குற்றச்சாற்றுகளை முன்வைத்து புலிகள் இயக்கத்தை விட்டுப் பிரிந்து புளொட் இயக்கம் உருவாக்கப்படுகின்றதோ அதே செயற்திட்டங்களையும், அரசியலையுமே புளொட் இயக்கத்தினரும் தமது மிகத் தொடக்க கால மத்திய குழு விவாதங்களில் இருந்தே முன்னெடுத்தனர் என்பது தெளிவாகின்றது.  தவிர சுந்தரம் முதலானோர் மீதான் தனது சந்தேகம் சரியானதுதான் என்பதில் பிரபாகரன் உறுதியடைந்திருக்கவும் முடியும்.

இவற்றை நான் இங்கே பதிவுசெய்வது புலிகளை முழுக்க பழி நீக்கம் செய்யவேண்டும் என்கிற முனைப்போடு அல்ல.  புலிகள் பற்றிய விமர்சனங்களை முன்வைப்பவர்கள் அவர்களுக்காக நியாயங்களைப் பரிசீலனை செய்வதில்லை என்பதே எனது வாதம்.  இந்தப் புத்தகத்தில் புலிகள் மக்கள் அமைப்புகளை உருவாக்கவில்லை என்பதுவும், அரசியல் ரீதியான போராட்டங்களில் ஈடுபடவில்லை என்பதுவும் இந்தப் புத்தகத்தில் அடிக்கடி சொல்லப்பட்டிருக்கின்றது.  அதே நேரம் 83ல் இருந்த அதே புலிகளை அமைப்பாகவே 2008 வரை இருந்த புலிகள் அமைப்பைப் பார்ப்பது ஏற்புடையதல்ல.  90களிற்குப் பின்னர் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் நிறைய அமைப்புகள் புலிகளால் உருவாக்கப்பட்டிருந்தன.  எத்தனையோ நூலகங்கள், படிப்பகங்கள், மாணவர் அறிவியல் கழகம் போன்ற அமைப்புகள், இது தவிர நிறைய வெளியீடுகள் என்று பல்வேறு தளங்களிலும் அதன் பின்னர் புலிகளின் செயற்பாடுகள் இருந்தன.  Building the Tamil Eelam State: Emerging State Institutions and Forms of Governance in LTTE-controlled Areas in Sri Lanka  என்கிற Kristian Stokke எழுதிய ஆய்வறிக்கையினை இது பற்றிய முக்கியமான பதிவொன்றென்று  குறிப்பிடவிரும்புகின்றேன்.

 

இங்கே எனது கட்டுரையின் நோக்கம் யாரையும் புண்படுத்துவதோ அல்லது புலிகளைப் பாவ நீக்கம் செய்வதோ அல்லது பழியை பிறர் மீது சுமத்திச் செல்வதோ அல்ல.  ஈழத்தில் மிக மோசமாக அடக்கப்பட்டிருக்கின்ற தமிழர்களின் தேசிய உரிமைப் பிரச்சனைகளைத் தொடர்ந்து முன்னெடுக்க, எமது கடந்த கால போராட்டங்களை சுய விமர்சனம் செய்யவும், மறு பரிசீலனை செய்யவும் வேண்டி இருக்கின்றது.  ஆனால் மறு பரிசீலனை என்பது எல்லாத் தவறுகளையும் ஒரு தரப்பில் சுமத்தி விடுவதல்ல.  இன்று பல்வேறு கட்டுரைகளிலும், விவாதங்களிலும் புலிகளை வெறும் பயங்கரவாதிகளாகச் சித்திரிப்பதையும், அடையாள அரசியல் என்ற பெயரால் நிராகரிப்பதையும், பாசிஸ்டுகள் என்று கடந்து போவதையும் அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது.  முதலில் அரச பயங்கரவாதத்தையும் அரசுக்கு எதிராக பயங்கரவாதத்திற்குமான வேறு பாட்டை இவர்கள் உணர்ந்து இது போன்ற வாதங்களை முன்வைக்க வேண்டும்.  பாசிஸ்டுகள் என்று கூறும்போது எதனால் புலிகள் பாசிஸ்டுகள் என்று சொல்கிறோம் என்பதை முன்வைக்க வேண்டும்.  பாசிஸ்டுகள் என்ற வார்த்தையை பொதுவாக தம்மை அடையாளபடுத்துவதை விட தமக்கு எதிரானவர்களை களங்கம் கற்பிக்கவே பிரயோகிக்கின்றனர் என்கிற Samanth Power ன் கூற்றையே இங்கே குறிப்பிடவிரும்புகின்றேன்.  ஒரு விடுதலைப் போராட்ட அமைப்பொன்றினை பாசிஸ்டுகள் என்று குறிப்பிடுவதில் இருக்கின்ற அபத்தத்தை இங்கே வலியுறுத்த விரும்புகின்றேன்.

 

இங்கே என்னுடன் பேச அல்லது கட்டுரை வாசிக்க அழைக்கப்பட்டிருக்கும் மற்றையவர்கள் அனேகம் வெவ்வேறு இயக்கங்களில் பங்கேற்றவர்கள், 90களின் முன்னர் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களை விட்டு வெளியேறியோர். அவர்களின் பார்வையிலிருந்து, 90 களின் பின்னர் புலிகளின் பூரண கட்டுப்பாட்டுப் பகுதிகளிலும் பின்னர் சில காரணம் ராணுவ ஆக்கிரமிப்பின் கீழும் வாழ்ந்த எனது பார்வை நிச்சயம் வேறுபட்டே இருக்கின்ற அதே வேளை, இந்தக் காலப்பகுதியில் புலிகளின் நிர்வாகத்தின் கீழ் காவல்துறை, நீதி மன்றம், அரசியல் துறை, வைப்புழி என்று பல்வேறு நிர்வாக அலகுகளுடன் கூடிய நிகர் அரசாங்கமே நிகழ்ந்தது.  புத்தகம் உள்ளடக்கும் காலப்பகுதியைத் தாண்டி இவற்றை நான் சுட்டிக் காட்டக் காரணம், புலிகள் போராட்டத்தை மக்கள் மயப்படுத்தவில்லை, அரசியலில் அக்கறை காட்டவில்லை என்று இந்தப் புத்தகத்தில் சுட்டிக் காட்டப்படுகின்ற போதும் அதன் பின்னர் தமது பூரண கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் புலிகள் செய்த திறமையான நிர்வாகம் பற்றி ஏதும் சொல்லப்படவில்லை என்பதே.  அதே நேரத்தில் புலிகளில் அரசியல் பிரிவினரைவிட ராணுவப் பிரிவினரே அதிகம் செல்வாக்குச் செலுத்தியவர்களாக இருந்தார்கள் என்பதையும் மறுப்பதற்கில்லை.  அறிவுஜீவிகளுடன் புலிகள் இணைந்து செயற்பட விரும்பவில்லை, அவர்களின் கருத்துக்களை புலிகள் செவிமடுக்கவில்லை என்பதில் ஓரளவு உண்மை இருப்பினும், நாட்டை விட்டு வெளியேறிய அனேக அறிவு சீவிகள் புலிகள் மீதான தமது கசப்புணர்வினை தொடர்ந்து புலிகளை நிராகரிப்பதன் மூலமாகவே வெளிக்காட்டினர்.  மேற்கத்திய சட்டகங்களுக்குள் நின்று புலிகளை மதிப்பிடுவதும், அரச தரப்பு, புலிகள் தரப்பு வன்முறைகள் போன்றவற்றை ஒரே சட்டகத்தில் வைத்து மதிப்பிடுவதுமாகவே அவர்களின் செயற்பாடு அமைந்தது,  அது போலவே புலிகள் தரப்பினை கடுமையாக விமர்சிக்கின்ற இவர்கள் ஒரு போது புலிகள் தரப்பு நியாயங்களை ஏற்றுக்கொள்ளத் தவறியதுடன், அரச தரப்பு தவறுகளில் சில சமயங்களில் கள்ள மௌனம் சாதித்ததுடன், பல சமயங்களில் அது எல்லாருக்கும் தெரிந்ததுதானே எனவே நாம் அது பற்றிக் கூறவேண்டியதில்லை என்றும் விலகிக் கொண்டனர்.  புலிகள் மீதான காழ்ப்புணர்வினால் ஒட்டு மொத்த போராட்டத்திற்கான நியாயங்களையும் நிராகரிப்பதும் எதிர்ப்பதும் முறையாகாது.

 

நான் அறிந்து இதுவரை ஈழப் போராட்டம் பற்றிய பதிவுகளாக புதியதோர் உலகம், முறிந்த பனை,  அடேல் பாலசிங்கத்தின் சுதந்திர வேட்கை, புஷ்பராஜாவின் ஈழப் போராட்டத்தில் எனது சாட்சியம், செழியனின் வானத்தைப் பிளந்த கதை, எல்லாளனின் ஒரு மனிதனின் நாட்குறிப்பு, ஐயரின் ஈழப் போராட்டத்தின் எனது பதிவுகள் புத்தகங்களாக வெளிவந்திருக்கின்றன.  இவற்றிற்கிடையே சில முரண்கள் இருந்தாலும் இவை அனைத்துமே ஈழப்போராட்டத்தில் அக்கறை கொண்டோர் வாசிக்கவேண்டிய புத்தகங்கள் என்றே சொல்வேன்.  இவர்களிலும் இவர்கள் சார்ந்து நின்ற இயக்கங்களிலும் விமர்சனங்கள் இருந்தாலும் தமிழரின் தேசிய விடுதலைப் போராட்டத்தில் இவர்கள் எல்லாருமே களமிறங்கிப் போராடியவர்கள்.  எனவே இவர்களின் அனுபவங்களும் இவர்கள் கூறும் வரலாறுகளும் முக்கியமானவை.

 

அதே நேரம், ஐயர் தொடர்ந்து PLOTE மற்றும் NLFT தொடர்பான தனது அனுபவங்களையும் பதிவாக்கவேண்டும் என்பதையும் ஒரு வேண்டுதலாக முன்வைக்கின்றேன்.  இன்றைய சூழலில் ஈழம் மற்றும் தமிழ்த் தேசியம் தொடர்பான வாசிப்புகளிலும் விவாதங்களிலும் ஈடுபடுவது முக்கியத்துவம் வாய்ந்ததாகவே கருதுகின்றேன்.

 

உதவிய புத்தகங்கள்

  1. ஈழப்போராட்டத்தில் எனது பதிவுகள்: கணேசன், இனியொரு வெளியீடு
  2. மாவீரர் உரைகள், நேர்காணல்கள் – தோழமை பதிப்பகம்
  3. Building the Tamil Eelam State: Emerging State Institutions and Forms of Governance in LTTE-controlled Areas in Sri Lanka –

குறிப்பு: ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் புத்தகத்தில் 1970 தேர்தல் பற்றிக் குறிப்பிடும்போது நவ சமாஜக் கட்சி என்றே குறிப்பிடப்பட்டிருந்தது.  ஆனால் உண்மையில் அன்று கூட்டணி வைத்திருந்தது லங்கா சமசமாஜக் கட்சி.

 

ரொரன்றோவில் பெப்ரவரி 25, 2012ல் நடைபெற்ற ஈழப்போராட்டத்தின் எனது பதிவுகள் என்கிற ஐயர் (கணேசன்) எழுதிய புத்தகத்தின் வெளியீட்டு விழாவில் வாசித்த கட்டுரை

 

புத்திசீவிகளின் அறிக்கை தொடர்பாக சில சந்தேகங்கள்………


1.  அடித்தவர் sorry சொன்னால்தான் அடிவாங்கியவரின் வலி குறையும் என்று தமிழர் – முஸ்லீம்கள் பிரச்சனைகளில் சொல்லுபவர்கள்தான் சிங்கள அரசுடன் நல்லிணக்கம் செய்யுமாறு தமிழர்களைக் கூறுகின்றனர், எனது கேள்வி இங்கே அடித்தவர்கள் சிங்களவரா அல்லது தமிழரா………..

2.  இங்கே முஸ்லீம்களின் வெளியேற்றம் பற்றிப் பேசுபவர்கள் அதன் பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகளும் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரசும் செய்துகொண்ட ஒப்பந்தம் பற்றி ஏன் வாய் திறப்பதேயில்லை.  தமிழர்கள் – முஸ்லீம்களிடையான அடிப்படைப் பிணக்கள் தொடர்பான குறைந்த பட்ச இணக்கப்பாடுகள் அல்லது அதற்கான ஒப்பந்தங்களேனும் இல்லாமல் இந்த ஒப்பந்தம் சாத்தியமாகி இருக்குமா…. (இது போலவே தமிழீழ விடுதலைப் புலிகளிற்கும் மலையக மக்கள் சார்பிலுமான ஒரு ஒப்பந்தமும் செய்யப்பட்டிருக்கின்றன)

3. போர் முடிந்த பின்னர் இலங்கை சென்ற அறிவுசீவிகள் குழுவினர் தமிழர்கள் இனிமேலேனும் அறிவு பூர்வமாக சிந்திக்கவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தனர்.  கனடாவில் நடைபெற்ற பெண்கள் சந்திப்பில் நிர்மலா தொடர்ச்சியாக” மொக்குப் புலிப் பெட்டைகள்” என்ற பிரயோகத்தைப் பாவித்ததாகக் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.  அண்மையில் நடைபெற்ற கேள்விநேரத்திலும் “போய் க்ராம்சியை வாசியும் பிறகு theory கொஞ்சம் தெரியும்” என்று நிர்மலா சொல்வதிலும் தெரிவது இந்த அறிவு மேட்டிமை வாதப் போக்கே.  அதாவது தம்மைத் தவிர எல்லாரும் முட்டாள்கள் என்கிற போக்கு, இதே போக்குத்தான் இங்கேயும் வெளிப்பட்டிருக்கின்றது.

4.  இப்படிச் சொல்லுகிற நிர்மலாவின் இன்னும் அரிய சில கருத்துக்களை அவர் பின்வரும் இணைப்பிலும் தெரிவித்திருக்கின்றார்

http://amvarmanshares.wordpress.com/2011/12/06/394/

5. இது தொடர்பான முகநூல்விவாதம் ஒன்றில் @ஆதிஆதித்யன் தெரிவித்திருந்த சில கருத்துக்களில் உடன்பாடில்லாவிட்டாலும் அவர் கேட்கின்ற “அதாவது விடுதலைப்புலிகளால் முஸ்லிம் மக்களின் ஒரு தொகுதியினர் பாதிக்கப்ட்டனர் என்று சொல்லி இது வரையில் தொடர்ந்து தமிழ் மக்கள்தான் குரல் கொடுத்து வருகின்றனர் ஆனால் முஸ்லிம் தீலிரவாத குழுக்களால் கிழக்கு மாகாணத்தில் கண்டம் துண்டமாக வெட்டியும் உயிருடன் கொழுத்தியும் படுகொலை செய்யப்ட்ட தமிழ் மக்களுக்காக எந்த முஸ்லிம் சகோதரர்களும் வலுவாக குரல் கொடுக்கவில்லையே ஏன் ” என்ற கேள்வி முக்கியமானதாகவே படுகின்றது.  தமிழர் தரப்பு விடும் தவறுகளுக்கு “மண்ணாங்கட்டித் தமிழ்த் தேசியம்” தான் காரணம் என்றால் முஸ்லீம்களைத் தடுக்கின்ற காரணிகள் எவை??

6. அடுத்து மக்கள் மீள் குடியேற்றம் தொடர்பாக தமிழ் மக்களின் மீள் குடியேற்றம் பற்றியும், பாதுகாப்பு வலயம் என்ற பெயரில் இலங்கை அரசாங்கம் கைப்பற்றியிருக்கின்ற தமிழ் மக்களின் நிலங்கள் பற்றியும் இந்த அறிக்கையில் ஏன் எதுவும் சொல்லப்படவில்லை என்ற கேள்வி எழுவதையும் தவிர்க்கமுடியவில்லை…

மெற்படி அறிக்கை வருமாறு

71 “புத்திசீவிகள்” கையெழுத்திட்ட அறிக்கை:

தமிழ் சமூகத்திற்கும் அதனுடைய சிவில், அரசியல் பிரதிநிதிகளுக்கும் ஒரு வேண்டுகோள்

2009ஆம் ஆண்டு மே மாதத்தில் யுத்தம் முடிவுற்ற பின்னணியில், இலங்கையில் வாழ்கின்ற அனைத்து இனக் குழுக்களும் தமது கடந்த காலத்தை மீள்பார்வை செய்வதும், மீள்மதிப்பீடு செய்வதும் முக்கியத்துவம் வாய்ந்ததாக விடயங்களாக விளங்குகின்றன. எமது கடந்த கால செயற்பாடுகளின் மீதான ஒரு விமர்சன ரீதியான சுய பார்வையின் மூலமாகவே அரசின் முன்னும் சிவில் சமூகத்தின் முன்னும் இன்று தீர்வை வேண்டி நிற்கும் பிரதானமான விடயங்கள் பற்றி எதிர்காலத்தில் கருத்தாழம் மிக்க வழிமுறைகளில் நாம் சிந்திக்க முடியும்.
யுத்தம் தீர்க்கமாகமுடிவுற்ற போதிலும், இனப்பிரச்சினைக்கான முடிவு இன்னமும் தென்படவில்லை. இனப்பிரச்சினையானது குறுகிய மற்றும் நீண்ட காலத் தீர்வுகளை வேண்டி நிற்கிறது. பெரும்பான்மைவாத அரசிடமிருந்து ஒரு நீடித்திருக்கக் கூடிய தீர்வைப் பெறுவதற்கான தேடுகையில் தமிழ்ச் சமூகம் இன்று பிரதானமாகக் கரிசனை கொண்டுள்ளது. இராணுவ மயமாக்கத்தினாற் தொடரும் பாதுகாப்பற்ற நிலைமை ஓர் உடனடிக் கவனமாக அமைந்துள்ளது. ஆயுதப் போராட்டமும், வன்முறை நிறைந்த அரசியற் கலாசாரமும் சமூகத்தின் ஜனநாயகக் கட்டமைப்புக்களை மேலும் சிதைவுக்குட்படுத்தியுள்ளன. மீள்குடியமர்வு, மீள்நிர்மாணம் போன்ற விடயங்கள் இன்னமும் தீர்க்கப்படாத பிரச்சினைகளாக உள்ளன. காணிப் பகிர்வு, அரச மற்றும் சமூக வலையமைப்புக்களினைத் தொடர்புகொள்ளுதல், மொழி சமத்துவம், அதிகாரப் பகிர்வு, இனங்களுக்கிடையிலான நல்லிணக்கம், பால், வர்க்க, மற்றும் சாதி அடிப்படையிலான அடுக்கமைவுகளின் தொடரும் இருப்பு போன்றன இன்றைய அரசியல் நிலவுருவின் பகுதிகளாக விளங்குகின்றன.
இந்த வகையில் 21 ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த முஸ்லிம் மக்களின் வெளியேற்றம் தொடர்பான விடயத்தை நாம் இங்கு எழுப்புகின்றோம். 1990ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம், வடக்கு மற்றும் கிழக்கு பிராந்தியங்களில் யுத்த நடவடிக்கைகளும், ஆயுதப் போராட்டமும் வலுப்பெற்று வந்த சூழலில், தமிழீழ விடுதலைப் புலிகள் ஏறத்தாழ் 80, 000 முஸ்லிம் மக்களை வடக்கிலிருந்து பலவந்தமாக வெளியேற்றினார்கள். அன்றைய காலத்தில் ஆயுத ரீதியாகப் பலம் மிக்க அமைப்பாக, வட பகுதியின் பெருமளவிலான நிலப்பரப்பை தன்வசம் வைத்திருந்த விடுதலைப் புலிகள் ஒரு சமூகம் முழுவதையுமே இரண்டு தினங்களுக்குள் வட மாகாணத்தில் இருந்து வெளியேறும்படி உத்தரவிட்டனர். யாழ்ப்பாணக் குடாநாட்டில் அவர்களுக்கு 2 மணி நேர அவகாசம் மாத்திரமே வழங்கப்பட்டது. இந்த வெளியேற்றத்தின் பின்பு, வெளியேற்றப்பட்ட சமூகங்கள் தமது சொந்த நிலங்களுக்கு மீளவும் திரும்பிச் செல்வதற்கு உதவும் வகையில் பல்வேறு அமைப்புக்களாலும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன. போர் நிறுத்த உடன்படிக்கைக் காலப்பகுதியில், உடனடி மனிதாபிமான மற்றும் மீள்கட்டுமாணத் தேவைகளுக்கான செயலகம், இலங்கை அரசுடனும், விடுதலைப் புலிகளுடனும் தொடர்புகளை ஏற்படுத்துவதன் ஊடாக, முஸ்லிம் மக்களின் மீள்திரும்புதலுக்கு வழிசெய்யும் முயற்சிகளில் ஈடுபட்டது.
இன்றைய அரசியல் சூழலில், வட புலத்தில் இருந்து முஸ்லிம் மக்கள் வெளியேற்றப்பட்டமையும், அவர்களின் மீள்திரும்புகையும், மீள்குடியமர்வும் தமிழ் மக்களின் அரசியல் மற்றும் சிவில் சமூகங்களின் மீதான தெளிவான ஒரு சவாலாக உள்ளது. போர் நிறுத்த ஒப்பந்த காலப்பகுதியில் இருந்து முஸ்லிம் மக்கள் வடக்கில் உள்ள தமது தாயகங்களுக்கு படிப்படியாகத் திரும்பத்தொடங்கியிருந்த போதிலும், அவர்கள் மீளத்திரும்புவதற்கு உகந்த சூழல் அமைந்திருந்திருக்கவில்லை. மீளத்திரும்பியவர்கள் அரசிடமிருந்து குறைந்தபட்ச உதவிகளைக்கூடப் பெறமுடியவில்லை. மேலும் அவர்கள் நிருவாக மையங்களின் விரோதப் போக்குகளுக்கும் முகங்கொடுக்க நேரிட்டுள்ளது. முஸ்லிம் மக்களின் பண்பாடு மற்றும் நிறுவனங்கள் கடந்த 20 ஆண்டுகளாக இல்லாமற் போனமை அவர்களின் மீள்வருகையினை வட பகுதியில் உள்ள சமூகங்கள் குறைந்த அளவிலேயே ஏற்றுக்கொள்கின்ற தன்மையினை ஏற்படுத்தியிருப்பதுடன், திரும்பி வரும் மக்களுக்கு இடராகவும் அமைகின்றது.
போரின் போதும், போரின் பின்னரும் தமிழ் சமூகம் மிகுந்த உளைச்சலுக்கு உள்ளாகியிருக்கின்றது என்பதனை ஏற்றுக்கொள்ளும் அதேவேளை, அதே போன்ற இடர்பாடுகளுக்கு உட்படுத்தப்பட்ட வட பகுதியில் இருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்களின் நிலையினை நாம் நினைவில் நிறுத்துவது அவசியமானது. தமிழ் சமூகம் அனுபவித்த வேதனைகளையும், இன்னல்களையும் காரணங்காட்டி முஸ்லிம் மக்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட விடயத்தை ஓரங்கட்ட முடியாது. வெளியிலிருந்தும் உள்ளிருந்தும் பிரயோகிக்கப்படுகின்ற அழுத்தங்களின் முன் எமது இருப்புக்காக எந்த அளவுக்கு நாம் போராடுகிறோமோ அதே அளவுக்கு நாம் எமது செயல்களின், எமது உறுதிக்கூற்றுக்களின், எமது மௌனங்களின் அரசியலினை மீளாய்வுக்குட்படுத்துவது அவசியமாகும்.
முஸ்லிம்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்டமை கடந்த முப்பதாண்டு காலத் தமிழ்த்தேசிய அரசியற் பிரசாரத்தின் குறுகிய நோக்குடைய, பிற சமூகங்களினை ஒதுக்கித்தள்ளும் பாங்குடைய உந்துகையின் மிகவும் மோசமான எடுத்துக்காட்டுகளில் ஒன்றாகும். எங்களுடைய சிவில் மற்றும் அரசியற் தலைமைகள் இதனை விளங்கிக் கொள்ளவோ ஏற்றுக்கொள்ளவோ தவறியமை, கடந்த காலத்தினையும், எம்மத்தியில் வாழும் சிறுபான்மையினர் தொடர்பாக எமக்கு உள்ள தார்மீக மற்றும் அரசியற் பொறுப்புக்களையும் நாம் நியாயபூர்வமான முறையில் அணுகுவதிலிருந்து எம்மை தடுத்துவிட்டது. தமிழ், முஸ்லிம் சமூகங்களின் இடையிலான உறவுகள் துருவப்பட்டுப்போவதற்கு நாம் எவ்வாறு காரணங்களாக இருந்திருக்கிறோம் என்பது பற்றிய ஒரு சுயவிசாரணை முப்பது ஆண்டு காலப் போரின் முடிவின் பின்னரும் கூடஎம்மத்தியில் உருவாகவில்லை. அரசியல் அதிகாரப் பகிர்வு, சமவுரிமை என்பன அனைத்து சிறுபான்மை சமூகங்களுக்கும் உரித்தான விடயங்கள் என்பதனையும், தமிழ் சமூகத்துக்கு மாத்திரமே உரித்தான ஏனையோரைக் கருத்திற் கொள்ளாத ஒரு அரசியற் தீர்வு இல்லை என்பதனையும் நாம் இப்போதாவது உணர்ந்து கொள்ள வேண்டும்.
நீடித்திருக்கக்கூடிய ஓர் அரசியற் தீர்வினை அடைவதற்கு இனங்களுக்கு இடையில்– குறிப்பாக தமிழ், முஸ்லிம் சமூகங்களுக்கு இடையே– நல்லிணக்கமும், உரையாடலும் அவசியமான செயற்பாடுகளாகும். விடுதலைப் புலிகளால் வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்கள் மீதான பிரசைகளின் குழுவினால் தயாரிக்கப்பட்ட “மீட்சிக்கான தேடுகை: வடக்கு முஸ்லிம்களின் கதை” என்ற ஆவணம், முஸ்லிம்கள் பலவந்தமாக வெளியேற்றப் பட்டமை தொடர்பாக தமிழ் சமூகத்தின் மௌனம் பற்றி கண்டனம் மிக்க வெளிப்படுத்தல் ஒன்றை அண்மையில் மேற்கொண்டுள்ளது. நல்லிணக்கம் பற்றிய ஓர் உண்மையான செயற்பாட்டினை நோக்கி நாம் நகர வேண்டுமாயின் நாம் இந்த மௌனத்தைக் கலைக்க வேண்டும்.
எங்களது இருப்புக்காக நாம் புதிய செயற்பாட்டியற் பாதைகளை உருவாக்கிக்கொள்ள நிர்ப்பந்திக்கப்பட்டுள்ள இன்றைய காலப்பகுதியில், ஏனைய சமூகங்களுடன் நாம் மேற்கொள்ளும் உரையாடல்களிலிருந்து உதயமாகும் பதில்களை நாம் வகுத்துக்கொள்ள வேண்டும். நாம் நீதியானதும், ஜனநாயக பூர்வமானதுமான ஒரு அரசியற் தீர்வைத் தேடுகையில் இது மிகவும் பிரதானமானது. இதற்கான ஒரு படியாக முஸ்லிம் மக்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்டமைக்கு எதிராக பகிரங்கமான எதிர்ப்பு வெளியிடப்படல் வேண்டும். இந்தப் பலவந்தவெளியேற்றம் போன்ற ஒரு வெறுக்கத்தக்க செயல் எம்மத்தியில் இனிவருங் காலங்களில் ஒரு போதும் நிகழமாட்டாது என நாம் முழுமனதுடன் கூறவேண்டும். இனச்சுத்திகரிப்பு நடவடிக்கைகளை நாம் ஒரு போதும் குற்றம் எனக்கருதாது இருக்கமாட்டோம் எனக் கூறவேண்டும். இந்த சம்பவத்தையும், அதன் தொடர்ச்சியையும் மீள்நோக்க வேண்டிய அதேவேளை, உரையாடல்களை ஏற்படுத்தவும், வடக்கில் முஸ்லிம் மக்களின் இலகுவான மீள்திரும்புகைக்கும், மீள்குடியமர்வுக்கும் உதவும் வகையில் பல்லின சமூகங்களை உள்ளடக்கிய பொறிமுறை ஒன்றினை ஏற்படுத்துதல் அவசியமானது.
ஏனைய சமூகங்களின் இடர்களையும், நலன்களையும் கருத்திற் கொள்ளாது, தமிழ் சமூகம் தன்னிச்சையாகவும், மற்றைய சமூகங்களிலிருந்து தன்னை முழுவதுமாக விலக்கியும் தொடர்ந்து செயற்பட முடியாது. எந்தவொரு சமூகத்தினையும் பாதிக்கும் அநீதிகள், ஒடுக்குமுறைகள், வேற்றுமைப்படுத்தல்களினை நாம் அக்கறையுடன் அணுக வேண்டும். எல்லா மட்டங்களிலும் சமூகத்தின் பன்முகத்தன்மையினை எம்மத்தியில் ஊக்குவிப்பதற்கும், ஜனநாயகம், நீதி, சமத்துவம் என்பவற்றின் நலனை மையமாகக் கொண்ட பல்வேறு சமூகங்களையும் இணைத்துச் செயற்படுகின்ற ஓர் அரசியலினைப் பற்றிக் கொள்ளவும் நாம் எதுவித தயக்கமும் இன்றி உறுதி பூணுவோம்.

Signatories:

1. Mr. P. Ahilan 2. Dr. Darshan Ambalavanar 3. Ms. Jovita Arulanantham 4. Ms. Kundhavi Balachandran 5. Mr. Sivakolunthu Buvanakumar 6. Dr.GodwinConstantine 7. Dr.KumarDavid 8. Mr. R. Devarajan 9. Ms. Cayathri Divakalala 10. Dr. S. Ganesan 11. Mr. Shaseevan Ganeshananthan 12. Mr. P.B. Gowthaman 13. Dr. Rajan Hoole 14. Ms. Sithiravel Ithaiyarani 15. Mr. T. Antony Jeganathan 16. Ms. Vasuki Jayasankar 17. Dr. T. Jayasingam 18. Mr. D.B.S.Jeyaraj 19. Mr. Theliwattai Joseph 20. Mr. Ahilan Kadirgamar 21. Mr. Silan Kadirgamar 22. Ms. Niyanthini Kadirgamar 23. Ms. Sarvam Kailasapathy 24. Ms. Dushiyanthini Kanagasabapathipillai 25. Dr. S.V. Kasynathan 26. Mr. Thirukovil Kaviyuvan 27. Mr. Sathy Kulasingam 28. Mr. Prithiviraj Kulasingham 29. Prof. Vijaya Kumar 30. Ms. Maha Luxmy Kurushanthan 31. Mr. K.C. Logeswaran 32. Mr. S. Manisegaran 33. Mr. Chandrasekaran Manimaran 34. Mr. P. Muthulingam 35. Mr. V. Nandakumar 36. Ms. Malini Paramaguru 37. Ms. Nirmala Rajasingam 38. Ms. Vasuki Rajasingam 39. Mr. Sanjayan Rajasingham 40. Mr. C. Rajeshkumar 41. Ms. A. Renu 42. Ms. Kumudini Samuel 43. Ms. Rani Samuel 44. Dr. Paikiasothy Saravanamuttu 45. Dr. Muthukrishna Sarvananthan 46. Ms. Ambika Satkunanathan 47. Mr. Shyam Selvadurai 48. Rev. Jothini Seenithamby 49. Dr. T. Shanaathanan 50. Ms. M. Mangaleswary Shanker 51. Ms. C. Shanthini 52. Mr. Shobashakthi 53. Mr. P.N. Singham 54. Ms. Vasuki Sivakumar 55. Mr. K.S. Sivakumaran 56. Dr. Sumathy Sivamohan 57. Mr. Subramaniam Sivathasan 58. Mr. Balasingam Skanthakumar 59. Mr. M. Sooriyasekaram 60. Dr. K. Sritharan 61. Rev. M. Jude Sutharshan 62. Mr.H.D. Thampoe 63. Ms. Priya Thangarajah 64. Mr. Kandiah Thanikasalam 65. Mr.R. Thevamaran 66. Prof. S.Thillainathan 67. Dr.Sharika Thiranagama 68. Mr.M.Thiruvarangan 69. Mr.UmaVaratharajan 70. Mr.GodfreyYogarajah 71. Mr.RonnieYogarajah

Rob Ford மற்றும் Kristyn Wong-Tam கற்கவேண்டிய பாடங்கள்


ரொரன்றோ மேயர் Rob Ford ன் நடவடிக்கைகளை தொடர்ந்து கவனிப்பது நல்லது.  இப்படி ஒருவர் எப்படி மேயரானார் என்கிற கேள்வியே தொடந்து எழுகின்றது.  2008 ல் இவர் கவுன்சிலராக இருந்த போது “Those Oriental people work like dogs. … They’re slowly taking over என்றும் they even sleep beside machines என்றும் கூறியிருந்தார்.  அப்போது இதற்கான த்மது எதிர்ப்பைக் காட்டும் போராட்டம் ஒன்றை ஒருங்கிணைத்தவர் ஆன Krystyn Wang-Tam அதன் பின்னர் தானும் அல்ல்து தன்னைப் போன்றவர்களும் அரசியலில் முழுமையாக ஈடுபடவேண்டிய தேவையை உணர்ந்து 2010 ல் கவுன்சிலர் தேர்தலில் நின்று 27ம் வட்டாரத்திற்கான கவுன்சிலராகத் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.  Rob Ford போன்ற அது தீவிர வலது சாரிகள் செய்கின்ற மக்கள் விரோத அரசியலை பார்க்கின்ற அதே நேரம் அதற்கான எதிர்ப்பாக உருவான Krystyn Wang-Tam போன்றவர்களை ஆதரிப்பது ஆரோக்கியமானதாக இருக்கும் என்று நம்புகின்றேன்.  Krystyn Wang-Tam பற்றிய விக்கி பீடியா பக்கம் http://en.wikipedia.org/wiki/Kristyn_Wong-Tam

 

சமீபத்திய Toronto Life இதழில் The Anti-Ford என்கிற Nicholas Hune-Brown எழுதிய கட்டுரை ஒன்று வந்துள்ளது,  அதில்  Krystyn Wang-Tam எப்படி ஒரு புதிய குடிவரவாளராகக் கனடாவில் நுழைந்து தனது Sexual Orientation காரணமாக வீட்டைவிட்டு வெளியேறி தனது பல்கலைக்கழகக் கல்வியில் இருந்து இடையில் வெளியேறி, தான கற்கவேண்டியது மக்களிடம் தான் இருக்கின்றது என்று, தனது வாசிப்பினூடக தன்னைத் தகவமைத்து, ஒரு வெற்றிகரமான Realtor ஆகி தனது Political Activism காரணமாக இன்று மக்கள் பிரச்சனையை முன்வைத்து பேசிப் போராடும் ஒரு கவுன்சிலராக வந்தது வரை குறிப்பிடப்படுகின்றது.

 

பின் இணைப்பு :- Rob Fordன் பத்தாண்டு கால சர்ச்சைகள் என்று the gloe and mailல் வெளியான கட்டுரை ஒன்று http://www.theglobeandmail.com/news/national/toronto/rob-ford-and-a-decade-of-controversy/article1678543/

 

பெயரிடாத நட்சத்திரங்கள் தொகுப்பை முன்வைத்து ஈழப் போராட்டத்தில் பெண் புலிகள்


“பெயரிடாத நட்சத்திரங்கள்: ஈழப் பெண்போராளிகளின் கவிதைகள்” அறிமுகவிழாவில் வாசித்த கட்டுரை

பெயரிடாத நட்சத்திரங்கள் என்கிற பெயரில் ஈழத்துப் பெண் போராளிகளின் கவிதைகள் தொகுக்கப்பட்டு வெளிவந்திருக்கின்றன என்று அறிந்தபோது, அந்தப் புத்தகம் என் கைக்கு கிட்டும் முன்னர் அந்தப் புத்தகம் எவ்வாறு எதிர்கொள்ளப்படும் என்று ஒருமுறை யோசித்துப் பார்த்தேன்.  புலி எதிர்ப்பு எதிர் புலி ஆதரவு என்கிற தீர்மாணிக்கப்பட்ட பார்வைகளோடே பிரதிகள் அணுகப்படும் இன்றைய சூழலில் இப்புத்தகம் முழுக்க முழுக்க புலிகளின் பெண் போராளிகளின் கவிதைகளுடன் வெளிவந்திருப்பது எவ்வாறு அணுகப்படும் என்ற சந்தேகமே எனது யோசனைக்குக் காரணம்.  இன்றைய தினம், நவம்பர் 13 இந்நிகழ்வு நடைபெறுவது கூட ஒரு எதிர்பாராத அனுகூலத்தைத் தந்திருக்கின்றது.  இரண்டு நாட்களின் முன்னர் கனடாவில் “நினைவு தினம்” (remembrance day) கடைப்பிடிக்கப்பட்டிருந்தது.  அன்றைய தினம் ரொரன்றோ ஸ்ரார் பத்திரிகையில் வெளியான Rick Salutin என்பவர் எழுதிய at the tomb of unknown soldier (1) என்கிற பத்தி இவ்வாறு கூறுகின்றது,

“நினைவு தினங்கள் என்பவை நினைவு செய்வதற்காக மாத்திரமே.  அவை வேறெதற்காகவும் அல்ல.  மல்வர்ன் கல்லூரியில் இருந்த ஞாபகார்த்த பொருட்கள் தாக்கப்பட்டவை போன்ற செயல்கள் குழப்பகரமானவையும், ஏற்றுக்கொள்ள முடியாதவையுமாகும்.  முதலாம உலகபோரின் முடிவிற்குப் பின்னர் நினைவுதினங்கள் கடைப்பிடிக்கப்படுகின்றன.  இந்தப் போரை விமர்சித்த போருக்கு எதிரான கவிஞர்கள் காரசாரமாக எழுதியிருக்கின்றனர்.  ஆனால் இன்றைய தினம் இறப்புகளைப் பற்றிய தினம்.  போரைப் பற்றிதல்ல.  இவர்கள் அப்பாவிகள், இவர்களைப் போருக்கு அனுப்பியவர்கள் அப்பாவிகளில்லாமல் இருக்கலாம்.  இந்த நாள் இவர்களுக்குரியது.“

 

இந்த மனநிலையுடன் நாம் போராளிகளைப் பார்க்கவேண்டும்.  இங்கே நான் போராளிகள் என்று கூறுகின்றபோது விடுதலைப் புலிகளை மாத்திரம் கூறவில்லை.  ஈழ விடுதலையை முன்வைத்துப் பேசுகின்றபோது தமிழ்மக்களின் விடுதலைக்காகப் போராடிய அத்தனை போராளிகளும் மதிக்கப்படவேண்டியவர்களே.  அதிலும் குறிப்பாக தமிழ் சமூகத்தில் இருக்கின்ற ஆணாதிக்க மனப்பாங்கைத் தாண்டி தமக்கான தளைகளை அறுத்து பெண்கள் ஈழப் போரில் ஈடுபட்டிருக்கின்றனர் என்பதை நாம் எல்லாருமே அறிந்திருக்கின்றோம்.  இன்று தொடர்ச்சியாக தீவிர புலி ஆதரவாளர்களால் போராளிகள் தெய்வத்தன்மை பொருந்தியவர்கள் போன்று சித்திகரிக்கப்பட்டு கூறப்பட்டு வருகின்ற அதே நேரத்தில் புலி எதிர்ப்பாளர்களால் அவர்கள் துப்பாக்கி முனையில் வைக்கப்பட்டிருந்தனர் என்றும் , பெண்களும், குழந்தைகளும் அவர்களது மரபான இயல்புகள் அழிக்கப்பட்டு வந்தனர் என்றுமே கூறப்பட்டு வருகின்றது, ஆனால் உண்மையாகவே அப்படியா பெண் போராளிகள் இருந்தனர்?

இந்தத் தொகுப்பில் அம்புலி எழுதிய மீண்டும் துளிர்க்கும் வசந்தம் என்கிற கவிதையில் கூறுகிறார்,

எனக்காய் இரங்குமாறும்

கண்ணீர் வடுக்குமாறும்

யாரையும் கேட்கப் போவதில்லை,

பாவப்பட்ட உயிரென்றெனக்குப்

பிச்சையளிக்க முன்வராதீர்

வீண் கழிவிரக்கத்தில் என்னை

புரிந்துகொள்ள முயலாதீர்

எனது சுயத்தை அறிக.

 

வற்றாத வளத்துடன்

எனக்கென்றோர் வாழ்வு இவ்

வையகத்தில் இருந்தது

யாரையும் பற்றியிருக்காச்

சீவியச் செழிப்பில் வாழ்ந்த

தடயங்கள் இப்போதும் உண்டு.

மானம் பெரிதென மதித்த


உமைப்போல தலை நிமிர்த்தி
மாண்பு எனது மரபு

மீண்டும் இங்கு

வாழ்வதற்காய் எழுகின்றேன்.

இந்தப் பெண்கள் போரில் தம்மை ஈடுபடுத்திகொண்டிருந்தபோதும், போராளிகளாக இருந்த போதும் அவர்கள் தமக்குரிய அடையாளங்களோடும், சுயத்தோடும், வாழ்ந்தார்கள்.  தவிர, மிகுந்த மனோவலிமையும், தைரியமும், தாம் எந்த விதத்திலும் ஆணாதிக்கத்துக்கு உட்பட்டிருக்கவேண்டியதில்லை என்பதை முழுமையாக உணர்ந்தும் வாழ்ந்து வந்தார்கள்.  இன்று பெண்விடுதலை பற்றிப் பரவலாகப் பேசப்படுகின்ற போது பெண் விடுதலை, பெண்களுக்கான சுதந்திரம், பாதுகாப்பு என்பன கடைப்பிடிக்கப்பட்ட அமைப்பாக புலிகள் இருந்திருக்கின்றனர் என்பதை இந்தப் புத்தகம் உள்ளிட்ட பெண் போராளிகளின் எழுத்துக்களின் ஊடாகவும், அவர்களது கள மற்றும் அரசியல் பணிகள் ஊடாகவும் அறியமுடிகின்றது.  அதே நேரம், புலிகளில் கட்டுப்பாட்டில் இருந்த பெண்விடுதலையை மேற்கு நாட்டுப் பெண்ணியச் சிந்தனைகளோடு நேரடியாக ஒப்பிட்டு விவாதிப்பது பொருத்தமற்றதுமாகும்.  Enemy Lines என்கிற Margaret Trawick எழுதிய புத்தகத்தீல் Girls in the LTTE என்றொரு அத்தியாயம் வருகின்றது. அதை வாசிக்கும்போது நாம் பெண்போராளிகள் பற்றி வைத்திருந்த விம்பங்களுக்கு மாற்றாக எப்படி அவர்கள் குழந்தைத்தன்மையுடனும், சினேக பாவத்துடனும், வயதை மீறிய மன முதிர்ச்சியுடனும் அதே நேரம் இயல்பான கூச்ச சுபாவத்துடனும் இருந்தனர் என்று அறிய முடியும்,  அதே அபிப்பிராயத்தை இந்தத் தொகுப்பில் இருக்கின்ற கவிதைகளும் உறுதி செய்கின்றன.

“எந்த மகனுக்காய்

என் கால்களை நகர்த்த ?

நேற்று விதையுண்டு போன

மூத்தவனுக்கா? இல்லை

இப்போதுதான் விதைக்கப்பட்ட என்

இளைய குஞ்சுக்கா”

என்கிற அ.காந்தாவின் கவிதை போன்றவை புறநானூற்று வீரத்தாய் மரபில் இருந்தாலும், ஆதிலட்சுமி, அம்புலி, கஸ்தூரி, மலைமகள் போன்றவர்கள் எழுதிய கவிதைகள் மிகவும் இயல்பாகவும் மிகைப்படுத்தலின்றியும் இருக்கின்றன.  குறிப்பாக “அந்தத் தீபாவளியும் அழகிய என் கிராமமும்” என்கிற கவிதை  1987 தீபாவளி அன்று இந்திய இராணுவம் ஈழத்தில் அரங்கேற்றிய படுகொலைகளை கவிதை பேசுகின்றது (2).  தொகுப்பின்  பதிப்பாளர்கள் “கவிதைகளில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.  சொற்களில் கூட (அதற்கான உரிமை படைப்பாளர்களைத் தவிர யாருக்குமே கிடையாது)” என்று குறிப்பிட்டிருந்தபோதும், 1987 ம் ஆண்டு தீபாவளி ஒக்ரோபர் 21ம் திகதியே வந்தது என்பதும் அன்று இந்திய ராணுவம் தனது கோடூரமான கொண்டாட்டத்தை யாழ்ப்பாணம் ஆஸ்பத்திரியில் அரங்கேற்றியது என்பதுமே உண்மை.  ஆனால் இந்தக் கவிதையின் ஆரம்பத்தில் 1987 நவம்பர் 22 என்று தொடங்குகின்றது.  இது திருத்தப்பட / குறிப்பிட்டுச் சொல்லவேண்டிய தவறென்றே கருதுகின்றேன்.  இந்தக் கவிதையிலும், நிழல் விரிக்கும் நினைவுகள் என்ற கவிதையிலும் இந்திய ராணுவத்தின் காலத்தினைப் பதிவுசெய்யும் ஆதிலட்சுமி, அதன் பின்னர் பாரதிக்கு என்ற கவிதையில் ஆணாதிக்க சமூகம் ஒன்றில் தன் அடிமத்தனத்தை உதற முற்படும் பெண் எதிர்கொள்ளுகின்ற சிக்கல்களையும், பின்னர் உங்களுக்காய் நன் உருகித்துடிக்கின்றேன் என்ற கவிதையில் ருவாண்டா நாட்டுச் சிறுவர்களை நோக்கியும் தன் அக்கறைகளை பதிவுசெய்கின்றார்.

அதுபோல எழுதாத கவிதை என்ற தனது இறுதிக் கவிதையில் கப்டன் வானதி இவ்வாறு குறிப்பிடுகின்றார்,

“எழுதுங்களேன் !

நான் எழுதாது செல்லும் என்

கவிதையை

எழுதுங்களேன்

 

ஏராளம் எண்ணங்களை எழுத

எழுந்து வர முடியவில்லை

எல்லையில் என்

துப்பாக்கி எழுந்து நிற்பதால்

எழுந்துவர என்னால் முடியவில்லை

எனவே

எழுதாத என் கவிதையை

எழுதுங்களேன்”

1991 ஆனையிறவுச் சமரின் போது இந்தக் கவிதையை கப்டன் வானதி எழுதிக்கொண்டிருந்தபோது அவர் அருகில் இருந்த போராளி நாதினி , 2000ல் ஆனையிறவு மீட்கப்பட்டபின்னர் தனது முதலாவது கவிதையை

“எழுதாத என் கவிதையை

எழுதங்களேன் எனும்

உன் கவிதை

எழுதப்பட்டுவிட்டது.

உப்பு வெளியில்

உருகிய உங்கள்

உடல்கள் மீது

எமது வீரர்கள்

எழுதாத உன் கவிதையை

எழுதி முடித்தனர்”

என்று எழுதி ஆரம்பிக்கின்றார்.  வானதியின் கவிதை எழுதப்பட்டு, பின்னர் 2000ல் ஆனையிறவு மீட்கப்படும் வரை 9 ஆண்டுகளும் இந்தக் கவிதை வைராக்கியமாக நாதினியின் மனதில் சூலிரிந்திருக்கின்றது போலும்.

எதைத்தான் பாடுவது என்ற மலைமகளின் கவிதையில் வருவது போல

“ஊர்ந்து போன கதை

ஊர் கலைத்த எதிரிகளை

உளவறிந்த கதை

கொல்லவந்த பகைவருக்கு

குண்டெறிந்த கதை

அலையலையாய் நாம் புகுந்து

ஆட்டி அடித்த கதை என

ஆயிரம் கரு எமக்கு

கவிதை எழுத”

என்று போர்ச்சூழலில் வாழ்ந்த பெண்களால், போரியல் மாத்திரமன்றி பல பரப்பிலும் இந்தக் கவிதைகள் எழுதப்பட்டிருக்கின்றன.  போராளிகளைத் தவிர வேறு யாருக்கும் கிட்டாத

“உன் சாதனை உன்னதம்

உயிலும் மேலான உன் தோழிக்கும்

தெரியாமல் நீ சென்றாய்

உயிரைத் துறந்த அக்கணம்

உடல் சிதறிய அந்நேரம்

அறியேன் தோழி”

என்ற நகுலாவின் கவிதை வரிகளாகட்டும், அல்லது எல்லாரும் கண்ட, ஆனால் இத்தனை அழகியலுடன் பெரும்பாலும் சிந்தித்திராத

“கிழிந்த காற்சட்டை ஒன்றை

தைத்தவாறிருந்தாள் ஒருத்தி

ஊசியில் நூல் கோர்த்தவாறு

அவள் மெல்லச் சொன்னாள்

வானமும் பீத்தலாப் போச்சிது

இது முடிய அதையும் நான்

பொத்தித் தைக்கப் போறேன்”

என்ற கவிதையும் சரி,இந்தப் போராளிகளின் கவிதைகள் மிகப் புதிய அனுபவத்தைத் தருகின்றன.  இந்தக் கவிதைகளை இசங்களோடும், கவிதைக்கான இலக்கண, இலக்கியங்களோடும் சேர்த்துப் பாராமல், போராட்ட சூழ்நிலையில், போரின் மத்தியில் இருந்துகொண்டு எழுதப்பட்ட கவிதைகள் என்ற உணர்வோடு படிப்பது முக்கியம்..

//ஓராயிரம் விழிகளின் உறக்கத்துக்கான

என் காவலிருப்பு

நாளையும் நான் வாழவேண்டும்//  (அம்புலி, பக்கம் 15)

என்ற வரிகளோ,

//எப்பொழுதும்

யுத்தம் எனக்குப் பிடிப்பதில்லை

ஆயினும் அதன் முழக்கத்தினிடையே

எனது கோலம் மாற்றமடைந்தது,

கால நிர்ப்பந்தத்தில்.//  (அம்புலி பக்கம் 16)

என்ற வரிகளோ

//ஆயினும்

ஒரு வண்ணத்துப் பூச்சியின் சிறகடிப்பில்

எனை மறக்கவும்

ஒரு குழந்தையை மென்மையாக

தாலாட்டவும்

என்னால் முடியும்,

குளத்தடி மர நிழலில்

எனது புல்லாங்குழலைத் தழுவும்

காற்றோடு கதைபேச

நான் தயார்.

நிம்மதியான பூமியில் நித்திரைகொள்ள

எனக்கும் விருப்புண்டு//  (அம்புலி – பக்கம் 17)

என்ற வரிகளோ ஏற்படுத்தும் தாக்கம் அதன் வார்த்தைகளில் மாத்திரம் தங்கிவிடவில்லை.    மாறாக இந்தக் கவிதைகள் எம் ஆழ்மனதுடன் நேரடியாக  பேசுகின்றன.

பெயரிடாத நட்சத்திரங்கள் என்ற இந்தத் தொகுப்பை ஈழவிடுதலை பற்றிய அக்கறையை முன்வைத்து நான் பார்க்கின்ற பார்வைக்கும், பெண்ணிய வாசிப்பொன்றை மேற்கொள்ளுகின்ற ஒருவருக்கும் முரண்படுகின்ற புள்ளிகள் இருக்கலாம்.  ஆயினும், வறட்டுத்தனமாக மேற்கத்தின் பெண்ணியக் கோட்பாடுகளையோ அல்லது இந்தியாவின் பாலசந்தர் திரைப்படப் பாணி பெண்ணியத்தையோ முன்வையாமல் எமது இன, மத, தேசிய, பண்பாட்டு, நடைமுறை, மானுடவியல்  சார்ந்த பெண்ணிய நோக்கில் இந்தப் பிரதியை அணுகுவதே சரியானதாயிருக்கும் என்பதையும் கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.

கவிதைகள் வாசிப்பதை கடந்த 3 ஆண்டுகளாக ஏறக்குறைய நிறுத்தியே வந்திருந்த நான், இந்தக் கவிதைத் தொகுப்பை ஆர்வத்துடன் அணுகக் காரணம் ஈழப் போராட்டம், போராளிகள் வரலாறு, குறிப்பாக புலிகள் தொடர்பாக அறிவு சீவிகள், மற்றும் மாற்றுக் கருத்தாளர்கள் கட்டியெழுப்பிய, இன்னமும் எழுப்பிக்கொண்டிருக்கின்ற கருத்தியல்களை மீள் பரிசீலனை செய்யும் நோக்குடனான என் வாசிப்புச் சார்ந்து எழுந்தது எனலாம்.  ஈழம் பற்றிய பேச்சுக்கள் வரும்போதெல்லாம் எம்மால் எதையும் செய்ய முடியாது என்பதுதான் யதார்த்தம் என்று சொல்லப்படுவதை அண்மைக்காலமாக நான் கவனித்தும் எதிர்கொண்டும் இருக்கின்றேன்.  இந்த மண்டபத்தில் இருப்பவர்கள் மிகப் பெரும்பான்மையானவர்கள் எழுத்தாளர்கள் அல்லது படைப்பாளிகள் அல்லது அரசியல் செயற்பாட்டாளர்கள்.  எம்மால் உண்மையாகவே ஏதும் செய்யமுடியாதா? இன்று இணையத்தளங்களில் தேடிப்பாருங்கள், குறிப்பாக ஆங்கிலத்தில்.  தமிழரின் விடுதலைப் போராட்டத்துக்கெதிரான கருத்துக்களே அதிகம் குவிந்து கிடக்கின்றன.  ஏன் இது விடுதலைப் போராட்டமேயல்ல என்றம் கூட இன்று சொல்லப்படுகின்றது.  அறிவுசீவிகள் என்ற பெயரில் ஈழப் போரில் தமிழர் தரப்புக்கெதிராக செய்யப்பட்ட பரப்புரைகளை இணையவெளி எங்கும் குவிந்திருக்கக் காணலாம்.  குறைந்த பட்சம் இந்த திட்டமுறையில் செய்யப்படும் பரப்புரைகளை கருத்தியல் ரீதியாக நாம் எதிர்கொள்ள முடியாதா?  இங்கே நான் தெளிவாக ஒன்றைக் குறிப்பிடவிரும்புகின்றேன்.  தமிழர் விடுதலை என்று பேசியவுடனேயே நான் புலிகளை நியாயப்படுத்துகின்றேன் என்று அர்த்தப்படுத்திக்கொள்ளாதீர்கள்.  புலிகள் மீது எனக்கும் விமர்சனங்கள் உண்டு,  அவை பெரிதும் புலிகளின் ஜனநாயக விரோதப் போக்கை விமர்சிப்பவை.  அதை விடுத்து புலிகள் தலித் விடுதலையை முன்னெடுக்கவில்லை, பெண் விடுதலையை முன்னெடுக்கவில்லை, வர்க்கப் போராட்டத்தை முன்னெடுக்கவில்லை என்று சொல்லி ஒட்டுமொத்தமாக புலிகளை நிராகரிப்பது சரியானதல்ல.  ஈழத்தில் இனரீதியான ஒடுக்குமுறை தமிழர் மீது பிரயோகிக்கப்பட்டபோது அதற்கெதிராக இனவிடுதலைப் போராட்டம் தொடங்கியது.  அதன் கூறுகளாகவே சமூகவிடுதலைக்கான சாதி ஒழிப்பு, பெண் விடுதலை போன்றவை பார்க்கப்படவேண்டும் என்பதே எனது கருத்து.  மிக அண்மையில் புலிகள் ஆணாதிக்கவாதிகள் என்ற சொல்லாடலை கேட்க நேர்ந்தது.  புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் வாழ்ந்தவர்களுக்குத் தெரியும் பெண்கள் அங்கு எவ்வளவு மதிக்கப்பட்டார்கள் என்பதும், எத்தனை சமத்துவத்துடன் பார்க்கப்பட்டார்கள் என்பதும்.  குறிப்பாக தமிழீழச் சட்டக் கோவையின் பிரகாரம் முன்னர் வழமையில் இருந்த தேசவழமைச் சட்டத்தில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டு பெண்களுக்கு சொத்துரிமை, கருக்கலைப்பு தொடர்பான உரிமைகள், பாலியல் பலாத்காரம் போன்றவற்றில் விசேட சட்டங்கள் கொண்டுவரப்பட்டதுடன், சொத்துக்களை ஆண்ளைப் போலவே சுதந்திரமாக விற்பதற்கான உரிமையும் இருந்தது.  இது குறித்து பரா வழங்கிய நேர்காணல் ஒன்றின் சிறுபகுதி,

“We made special laws for women regarding their property rights, rape, abortion etc. Under our laws women are totally free and on par with men in property transactions. As you know, this is not the case under Jaffna’s traditional law, Thesawalamai. Our civil code has done away with the stipulation in Thesawalamai that a woman should obtain her husband’s consent to sell her property. We made caste discrimination a crime. These could be considered some of the milestones of the Thamil Eelam judicial system. ” (3)

ஈழப் போராட்டம் எனது எழுத்துக்களில் முக்கிய புள்ளி என்று தீர்மாணித்தபின்னர் அதற்கான தீவிர வாசிப்பில் ஈடுபட்டேன்,  கடந்த ஓராண்டில் கிட்டத்தட்ட 25 புத்தகங்களை ஈழப்போராட்டம் பற்றி வாசித்தேன்.  அவை எனக்கு நிறைய விடயங்களில் தெளிவைத்தந்தன.  நிறைய விடயங்களில் மிகப் பிழையான புரிதல்களுடன் இருந்திருக்கின்றேன் என்பதையும் உணர்ந்துகொண்டேன்.  இது போல இயன்றவரை எல்லாரும் ஈழப்போராட்டம் பற்றிய முக்கிய புத்தகங்களை தொடந்து வாசிப்பது அது பற்றி கலந்துரையாடுவதும் முக்கியம் என்று எனது கருத்தாக முன்வைக்கின்றேன்.  அது மாத்திரமன்றி ஒரு தார்மீகக் கடமையாக ஈழத்தில் இருந்து வெளிவரும் டெய்லி மிரரையோ, உதயனையோ அவற்றின் குறைகளைத் தாண்டி அங்கிருந்து வெளிவரும் நாளிழ்களில் சிறப்பாக வெளிபருவவை என்றளவிலாவது தொடர்ந்து வாசிக்கும்படியும் கேட்டுக்கொள்ளுகின்றேன்,   மாற்று அரசியல் செய்கிறோம் என்ற பெயரில் வெறும் காழ்ப்பை மாத்திரம் முன்வைப்பவர்களையும், அவர்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் பத்திரிகைகள், இணையங்களையும், இலங்கை அரச பின்னணியுடன் இயங்குகின்ற ஊடகங்களையும் வாசித்து அதன் அடிப்படையில் ஈழப் போராட்டம் பற்றியும், புலிகள் அமைப்புப் பற்றியும் தீர்மாணங்களை மேற்கொள்ளுவது சேகுவரா பற்றி அமெரிக்க அரசின் அதிகாரபூர்வ இணையங்களூடாக அணுகுவதைப்போல முட்டாள்தனமானது என்றும் இங்கே தெரிவிக்க விரும்புகின்றேன்,

அண்மையில் குழந்தைப் போராளிகள் பற்றி தொடர்ச்சியாக சில புத்தகங்களை வாசித்தேன்.  அவற்றில் குறிப்பிடப்பட்டிருந்த ஒரு  முக்கிய விடயம், சியரா லியோன், கொங்கோ, கம்போடியா என்று குழந்தைப் போராளிகள் போரில் ஈடுபடுத்தப்பட்ட நாடுகளில் எல்லாம் பெண்கள் பாலியல் அடிமைகளாக பயன்படுத்தப்பட்டதாகவும், பாலியல் சுரண்டல்களுக்குள்ளானதாகவும், அதே நேரம் புலிகள் இயக்கத்தில் பெண்கள்  எந்தவிதமான பாலியல் துஷ்பிரயோகங்களுக்குள்ளாக்கப்படவில்லை என்றும், எல்லா விதங்களிலும் ஆண்களுக்கு சமமாகவே மதிக்கபப்ட்டார்கள் என்றும், ஆண்கள் ஈடுபட்டிருந்த அனைத்துத் துறைகளிலும் பெண்களும் ஈடுபட்டிருந்தனர் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.  இதே நேரத்தில் Margaret Trawickன் Enymy Linesல் கூறுகிறார்

 “நான் அங்கே இருந்த காலங்களில் போராளிகளின் நிறைய திருமணங்கள் நடைபெற்றன.  நான் கேள்விப்பட்டவை எல்லாமே ஆண் போராளிகளுக்கும் சாதாரண பெண்களுக்குமானவையாகவே இருந்தன.  இதே போலா சாதாரண ஆண்கள் போராளிப் பெண்களை திருமணம் செய்வார்களா அல்லது செய்ய முடியுமா என்று அறிவதில் ஆர்வமாக இருந்தேன்.  அதன் பின்ன்ர் சில நாட்களில் பிரபாகரன் ஆண் போராளிகள் பெண் போராளிகளை மாத்திரமே திருமணம் செய்யலாம் என்று கட்டளையிட்டதாகவும் அறிந்தேன்.  ஆனாலும் இந்தச் செய்தியை என்னால் உறுதிப்படுத்த முடியவில்லை”

என்று.  போரின் பின்னால், குறிப்பாக போரில் விடுதலைப் புலிகள் ராணுவரீதியில் தோற்கடிக்கப்பட்ட பின்னர் பெண் போராளிகள் அடைந்திருக்கின்ற கையறு நிலை பேசப்படவேண்டியதே.  அதே நேரம், போரின் பின்னரான பெண்போராளிகளின் நிலையச் சுட்டிக்காட்டி, புலிகள் பெண்களின் விடுதலையையும், உள்ளொளியை உணரவும் கற்றுத்தரவில்லை என்றும் சொல்லபடுகின்ற வாதம் அபத்தமானது என்பதையும் கூறிக்கொள்ளுகின்றேன்.  சில மாதங்களிற்குப் முன்னர் நான் இலங்கை சென்றிருந்தபோது அங்கே தமிழ்ப் பெண்கள் பாலியல் தொழிலில் ஈடுபடுவதை தெரிந்துகொண்டேன்.  கற்பென்றும், புனிதமென்றும் கட்டியெழுப்பிய கற்பனைகளிலேயே குளிர்காயும் எமது சமூகம் இதையும் கலாசாரச் சீரழிவென்றே ஒப்பாரி வைக்கும்.  இந்த மடத்தனத்தை துறந்து, இது post war விளைவுகளில்  (post என்பதற்கு பரவலாகப் பாவிக்கப்படும் பின் என்பதில் எனக்கு உடன்பாடில்லை என்பதால் ஆங்கிலத்திலேயே போஸ்ட் என்கிற வார்த்தையை பிரயோகிக்கின்றேன்) ஒன்று என்பதை நேர்மையாக ஏற்றுக்கொண்டு, இவ்வாறு பாதிக்கப்பட்ட பெண்கள் இயல்பு வாழ்க்கைக்கு மாற நாம் என்ன செய்யலாம் என்று பேசுவதே நேர்மையான செயல்.  இங்கிருந்து பெண்ணியம், பெண் விடுதலை, மாற்றுக்கருத்து, புதிய அரசியல் என்று பேசிக்கொண்டிருப்பதை விடுத்து, இது குறித்து ஆக்கபூர்வமாக செயற்படுவது முக்கியம்.  அப்படி யார் ஒரு முன்னெடுப்பை மேற்கொண்டாலும் அவர்களுடன் இணைந்து உதவ நான் எப்போது தயாராக உள்ளேன் என்று கூறிக்கொள்வதுடன், இதற்குக் காரணமும் புலிகள் என்று யாராவது அரற்ற ஆரம்பித்தால் அவர்களுக்குப் பதிலேதும் எனக்கு இல்லை என்றும் கூறிக்கொள்ளுகின்றேன்.  அவர்களைப் பசித்த புலி தின்னட்டும்.

  1. http://www.thestar.com/opinion/editorialopinion/article/1084998–salutin-at-the-tomb-of-the-unknown-soldier
  2. இந்தப் படுகொலைகள் பற்றிய கட்டுரை ஒன்று http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=17094&Itemid=139
  3.  http://www.tamilnet.com/art.html?catid=79&artid=10277
  4. இது விழாவில் நான் வாசித்த கட்டுரை.  இந்தப் புத்தகத்தை தொகுத்து வெளியிட்ட ஊடறு பதிப்பகம், விடியல் பதிப்பகத்தினருக்கு எனது நன்றிகள்.  அது போல போராளிகளின் இதர படைப்புகளும் தொகுக்கப்பட்டு வெளியிடப்பட்டால் அவை முக்கிய பதிவுகளாக இருக்கும்.
  5. தகவல்களுக்கு உதவிய புத்தகங்கள், Margaret Trawick எழுதிய Enemy Lines – Warfare, Childhood and Play in Batticaloa
  6.  தகவல்களுக்கு உதவிய புத்தகங்கள் Michael Wessells எழுதிய Child Soldiers – F
    rom Violence to Protection.

கீற்று இணையத்தளத்தில் பிரசுரமான கட்டுரை வடிவம்

பிரதீஸ் என்றொரு நண்பன் அல்லது ஜூலை 09, 1995


பிரதீஸுடன் நான் எப்போது நெருக்கமாக இருந்தேன் என்பது எனக்கு இன்றும் சரிவர தெரியவில்லை எனது முதல் நண்பன் யாரென்று இப்போது இணைய தளங்களில் கடவு சொல்லை ஞாபகப்படுத்த கேட்கும்போதெல்லாம் அவனது பேர் தான் ஞாபகம் வருகின்றது. ஆனால் எந்த காலப்பகுதியிலும் எனக்கு ஆக நெருக்கமான நண்பனாக அவன் இருந்ததில்லை.

அப்போது நாங்கள் நவாலியில் இருந்தோம். நவாலி மகாவித்தியாலயம் என்ற பள்ளிக்கூடத்தில் அப்போது இரண்டாம் வகுப்பு படித்துவந்தேன். புதிய இடம். புதிய சூழல். எவருடனும் பெரிதாக நெருங்கி பழக முடியவில்லை. கொழும்பில் இருந்துவிட்டு வந்திருந்ததால் எனது பேச்சு தமிழ் கூட அவர்கள் பேசிய தமிழுடன் வேறுபட்டு இருந்திருக்கலாம். இதனால் பள்ளிக்கூடம் போவதே ஏதோ சிறைக்கு போவதை போன்று இருந்தது. இந்த நாட்களில் தான் பிரதீஸ் அறிமுகம் ஆனான். ஏதோ அவனுடனும் துளசி(1) என்ற இன்னொருவனிடமும் தான் கொஞ்சம் பழக ஆரம்பித்தேன்.

எப்போதும் அந்த பள்ளிக்கூட நண்பர்களை விட்டு விலகியே இருந்த என்னை அவன் மெல்ல மெல்ல பூமிக்கு இழுத்துவந்தான். ஒரு மழை நாளில் பள்ளிக்கூட ஆசிரியர்கள் வராமல் மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்தபோது இரண்டு கற்களை எப்படி காந்தம் ஆக்குவது(2) என்ற ரகசியத்தை எனக்கு மட்டும் சொல்லி தந்தான். அந்த வயதிலேயே அவனுக்கு நிறைய விடயங்கள் தெரிந்திருந்தன. பூக்களை அவற்றின் காம்பை பிடித்து கிள்ளும்போது அவை விழும் விதத்தில் இருந்து ஆண் பூவா பெண் பூவா என்று கண்டறியும் வித்தையை(2) ஒரு முறை எனக்கு பள்ளிக்கூடம் விட்டு வரும்போது பொறுமையாக சொல்லி தந்தான்.

அப்போதெல்லாம் அவன் ஒரு சிறிய அளவிலான சூட் கேசில்தான் பள்ளிக்கூடத்துக்கு புத்தகம் கொண்டு வருவான். நானும் எனது அப்பாவிடம் அடம் பிடித்து அது மாதிரி ஒரு சூட்கேஸ் வாங்கிக்கொண்டேன். அவனது சொந்தக்காரை யாரோ அவனுக்கு கொடுத்த ஒரு தோடம் (orange) பழத்தின் அரைவாசிய அவன் எனக்கு தந்தான். அதை ஒரு பேப்பரால் சுற்றி அந்த சூட்கேசில் வைத்திருந்தேன். சனி, ஞாயிறுகளில் வீட்டில் எடுத்து உண்டால் யர் தந்தது என்று கேட்பார்களோ என்று பயந்து அதை ஒளித்தே வைத்திருந்ததில் எனது புத்தகம் எல்லாம் தோடை வாசம் அடிக்க தொடங்கியது. இந்த நேரம் பார்த்து காந்தம், விளையாட்டு பொருட்களில் வரும் மோட்டார், சைக்கில் பாகங்கள் என்று சேர்க்கும் ஆசையும் வந்தது. பள்ளிக்கூடத்தில் இருந்து வீட்ட போற வழியில் அரசடி சந்தி கடந்தவுடன் வரதனின் சைக்கில் கடை வரும். கடைக்கு முன்னால இருந்த நிலத்தில் பழைய சைக்கில் போல்ஸ், நட்டுகள் எல்லாம் எறிந்திருகும். நாங்கள் அதை பொறுக்கி சேர்ப்போம். என்னிலும் நிறைய உற்சாகமான பிரதீஸ் நிறைய சேர்த்து எனக்கும் பாதி தருவான். ஒரு முறை ஒரு பழைய விளையாட்டு ஹெலிகொப்டரை உடைத்து அதில் இருந்த காந்தத்தை இருவரும் பகிர்ந்து எடுத்தோம். எம்மிடம் இருந்த எல்லா இரும்பு உதிரிபாகங்களுக்கும் காந்தத்தை ஏற்றவேண்டும் என்பது எமது திட்டம்.

அப்போது நான் ஒரு மோதிரம் போட்டிருந்தேன். அடிக்கடி பிரதீஸ் அதை வாங்கி அணிந்து பார்ப்பான். ஒரு நாள் நான் அவனையே அதை வைத்திருக்க சொல்லிவிட்டேன். பிறகு இருவரும் வரதன் கடையை தாண்டி, ரோட்டோரத்தில் காயப்போட்டிருக்கிற எள்ளை(3) எல்லாம் எடுத்து சாப்பிட்டபடி வீட்ட போனோம். கொஞ்ச நேரத்தால எங்கட வீட்ட பிரதீஸ் அவன்ட அம்மாவோட வந்தி நிற்கிறான். ஏனோ தெரியேல்லை, அந்த மோதிரத்தை அவன் என்ட அம்மாவிடம் திருப்பி கொடுத்துவிட்டான். அதை பற்றி அவனிடம் அடுத்த நாள் கேட்கோணும் என்றிருந்தேன்.

இதற்குபிறகு சிறிது நாளில் அந்த ஆண்டும் முடிய நான் மிக சாதாரணமான புள்ளிகளையே பெற்றதால் என்னை சுதுமலையில் இருந்த எனது அப்பம்மாவீட்டிற்கு அனுப்பி அங்கு இருந்த பள்ளிக்கூடத்தில் சேர்த்தார்கள் இப்படியே மெல்ல மெல்ல பிரதீஸ்டனான உறவு அப்போதைக்கு முடிவடைந்தது.

இதற்கு பிறகு அவனுடன் மீண்டும் பழக தொடங்கியது 10 வருடம் கழித்து, நானும் அவனும் ஒரே டியூஷனில் படிக்கும்போது. அவன் நிறைய வளர்ந்திருந்தான். பெரிதாக மீசை கூட வந்திருந்தது. நிறைய சதை போட்டிருந்தான். முன்பிருந்த நெருக்கம் தொலைந்துபோயிருந்தாலும் அன்பாக கதைத்தான். டியூஷன் முடிய அடிக்கடி ஒன்றாக வருவோம். நவாலியில் எம் இருவர் வீட்டிற்கும் நடுவில் இருந்த எனது கல்லூரி தோழனும்(4) அவனும் மிக நெருக்கமாகியிருந்தார்கள். சந்தோஷமாக நாட்கள் போய் கொண்டிருக்கும்போது, அந்த எனது கல்லூரி தோழனுக்கும் எனது தோழன் ஒருவனுக்கும் ஏதோ சில சிறுபிள்ளை கோபங்கள் வர நட்பு இரண்டு அணியாக பிரிந்தது. எனது நண்பன் பக்க நியாயங்களை ஏற்று நான் பிரதீஸுடனும் மற்ற நண்பனுடனும் கதைப்பதை தவிர்த்தேன். ஒரு நாள் டியூஷன்(5) முடிய நவாலி அரசடி சந்தியில் நாகேஸ் கடையில் பொறித்த வேர்கடலை வாங்கி கொறித்தபடி வீடு செல்லும்போது பிரதீஸும் மற்றைய நண்பனும் அருகில் வந்து “எமக்கும் உனக்கும் ஒரு பிரச்சனையும் இல்லை, ஏன் நீ எம்மோட கதைக்கிறதில்லை” என்று கேட்டனர். ஒன்றுமில்லை என்றுவிட்டு நான் என் பாட்டில் போவிட்டேன். ஆனால் ஏனோ சின்ன வயது பிரதீஸின் ஞாபகங்கள் நிறைய வந்தன.

இதற்கு பிறகு பிரதீஸை நான் சந்தித்தது ஜூலை 9, 95ல். முதல் நாள் யாழ் இந்துக் கல்லூரி விளையாட்டு போட்டியை பார்த்து அதில் சாம்பியன் கிண்ணத்தை தவற விட்ட நண்பன் அனுஷனுக்கு(6) நானும் தயா என்ற நண்பனும் ஆறுதல் சொல்லிவிட்டு வீட்ட வர நேரமாகிவிட்டது. விடிய டியூஷனுக்கு போய்ட்டு வாறன். ஆமி முன்னேற அராலி பக்கத்தால முன்னேறுகிறான் என்று சனமு இடம்பெயர வெளிக்கிட்டுது. ரேடியோ எல்லாம் எதோ முன்னேறிபாய்ச்சல் என்று அலறுது. டியூஷன் முடிஞ்சு போனா உயரப்புலம் பிள்ளையார் கோயில், மூத்த நாயனார் கோயில், சிதம்பர பிள்ளையார் கோயில் என்று எல்லா இடமும் இடம்பெயர்ந்த சனம். நவாலி சர்ச் முன்னால் பெரிய கூட்டம். முன்னுக்கு இருந்த இந்து கோயிலிலும் நிறைய சனம். ஊரில் எனக்கு நன்கு தெரிந்த சனம் வேற நின்று உதவிசெய்து கொண்டிருந்தது. சர்ச்சுக்கு முன்னால் பிரதீஸ் அவன் ஒன்று விட்ட தமக்கையுடன் நின்றான். அவ அப்ப ஊர் விதானை. அதால இடம்பெயர்ந்த சனத்தின் விபரங்களை திரட்டி அவர்களுக்கு உதவிகள் வழங்க ஏற்பாடுகள் செய்துகொண்டிருந்தனர். நிறைய நாட்களின் பின்னர் அவனுடன் மனம் விட்டு கதைத்தேன். தூரத்தில் ஷெல் விழுந்து வெடிக்கும் ஓசைகள் கேட்க கேட்க அவனுடன் கதைத்துக் கொண்டிருந்தேன். சம்பந்தமேயில்லாமல் சின்ன வயசில் நான் கொடுத்த மோதிரம் பற்றி சொன்னேன். இதை இப்ப சொன்னால் பெடியள் பகிடி பண்ணுவாங்களடா என்று சிரித்தான். சில நாட்களின் முன்னர்தான் தனது தகப்பன் சவூதியில் இருந்து நீண்ட நாட்களின் பின்ன்ர் ஊர் வந்திருப்பதாக சொன்னான். குண்டுகள் வெடிக்கும் சத்தம் நெருங்குவதுபோல கேட்க, என்ன நடக்கும் என்று கேட்டேன். விட மாட்டங்களடா. ஏதாவது செய்வாங்கள் பாரன் என்றான். சிறிது நேரத்தில் விடைபெற்று வீட்ட வந்துவிட்டேன்.

நவாலிக்கு அருகில் குண்டுகள் விழ தொடங்க நாமும் சுதுமலை நோக்கி சென்றுவிட்டோம். பின்னேரம் ஒரு நான்கரை மணி அப்படி இருக்கும் தொடர்ச்சியான சத்தம். புக்காராவில்(7) வந்து ராணுவம் குண்டு போட்டு நிறைய சனம் செத்துவிட்டது(7) என்று ரோட்டால சனம் குளறிக்கொண்டு ஓடி திரியிது. எதுவுமே செய்யமுடியாத நிலை. இரண்டு நாட்களின் பின்னர் செத்தவர்கள் பேர் பேப்பரில் வருகிது. அதில் அவனது அக்காவின் பெயருடன் அவனது பெயரும். என் நினைவுகள் எல்லாம் ஒரு வெட்ட வெளியில் குவிக்கப்பட்டு ஒரு கணம் செயலிழந்தேன். கிட்ட தட்ட நான் யாழ்ப்பாணம் வந்த நாள் முதல் அறிமுகமான நண்பன். மற்றவர்கள் முன்னர் உணர்ச்சிகளை காட்டாமல் கழிவறை சென்றேன். என்னை கட்டுப்படுத்த முடியவில்லை. அழு அழு என்று அழுதேன். இனிய நண்பன் ஒருவன் இறந்துவிட்டன் என்று, வீணாக கதையாமல் விட்டு விட்டோமே என்று, அவன் சாவதற்கு கொஞ்ச நேரம் முன்னர் கூட கதைத்துள்ளோமே என்று எத்தனையோ எண்ணி எண்ணி அழுதேன். கிட்ட தட்ட 150 க்கு மேற்பட்டவர்கள் அந்த இடத்திலேயே இறந்திருக்கிறார்கள். நிறைய பேரின் உடல்களை எடுக்க முடியாமல் கட்டட இடிபாடுகளின் இடையேயே மண்ணெண்ணெய் ஊற்றி கொழுத்தி எரித்தார்கள். அவனது உடலை எடுக்க முடிந்ததாம். ஆனால் தலை வெடித்து பிளந்திருந்த அவனது உடலை பார்த்து அவனது தந்தை கதறி கதறி அழுதாராம்.

இதற்கு பிறகு எத்தனையோ நடந்துவிட்டது. எமது ஊரில் இருந்து நிறைய பேர் விடுதலை போராட்டத்தில் குதித்தார்கள். அந்த பகுதியில் கிட்ட தட்ட எல்லா வீட்டிலும் ஒரு சாவு விழுந்திருந்தது. பாலகுமார் என்ற உதைபந்தாட்ட வீரன் தன் கால்களை இழந்தான். ரெக்ஸன் என்கிற நண்பனின் தங்கை கொல்லப்பட்டாள். நிறைய இழப்புகள். ரத்தங்கள்.

இப்போதும் கையில் ஒரு மோதிரம் அணிந்துள்ளேன். எப்போதும் பேசாமல் இருக்கும் மோதிரம் திடீரென்று கையை உறுத்துவதுபோல தோன்றும்போது பிரதீஸுடன் கடைசியாக கதைத்த ஞாபகம் வரும்.

(1) துளசி – இவன் மானிப்பாயை சேர்ந்தவன் விடுதலை போராட்டத்தில் குதித்து அண்மையில் வீரமரணம் அடைந்தவன்

(2) புத்தகத்தில் வைத்த மயிலிறகு குட்டி போடும் என்பதுபோல எமது பால்யகால நம்பிக்கைகள்

(3) நவாலி, ஆனைக்கோட்டை பகுதிகள் நல்லெண்ணெய், அதாவது எள்ளில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய் செய்வதில் பேர்போனவை அதனால் பல வீடுகளின் வாசலில் காய் விடப்பட்ட எள்ளும், காதுகளில் விழும் செக்கிழுக்கபடும் ஓசையும் எப்போதும் நிறைந்திருக்கும்

(4) இப்போதும் இவனுடன் அடிக்கடி கதைப்பதுண்டு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தையுடன் நவாலியில் வசித்து வருகிறான்.

(5) இந்த டியூஷன் கால நினைவுகள் பற்றி முன்பு ஒரு முறை எழுதியுள்ளேன். அதன் சுட்டியை பெற இங்கே அழுத்தவும்

(6) அன்று அவன் பிறந்த தினம் வேறு, இதனால் அவன் சகஜ நிலைக்கு வரும்வரை காத்திருந்தோம்

(7) புக்காரா (Pucara) இவை ஆர்ஜெந்தீன தயாரிப்பு யுத்த விமானங்கள் 90களின் மத்திய பகுதிகளில் பெருமளவு இன அழிப்பில் பயன்பட்டவை. பின்னர் போராளிகளால் சுட்டு வீழ்த்தப்பட்ட இந்தவகை யுத்த விமானத்துடன் அப்போது குண்டுகளை வீசிய விமானியும் கொல்லப்பட்டதாக செய்திகள் வந்தது குறிப்பிடத்தக்கது.

(8) கிட்ட தட்ட 150 பேர் செத்தனர். இது பற்றிய பதிவுகள்
http://en.wikipedia.org/wiki/Navaly_church_bombing
http://www.tamilnation.org/indictment/genocide95/gen95012.htm
http://www.ltteps.org/?view=1750&folder=25