கண்ணை கட்டி கோபம்…………

 கடந்து போன எமது வாழ்வை வாழ்வின் அமைதியான ஒரு பொழுதில் திரும்பிப் பார்க்கும் போது முதல் காதல், முதல் முத்தம் போல சிறு வயதில் நண்பர்களுடன் கோபித்துக்கொண்டு கதைக்காமல் விட்ட, மீண்டும் கதைக்க தொடங்கிய நினைவுகளும் நெஞ்சில் பச்சை வயலில் பாத அடையாளம் போல மாறாமல் தொடர்கின்றன. சற்று பக்குவப்பட்ட இந்த வயதில் அந்த கோபங்கள் எல்லாம் ஒரு நகைச்சுவைக்கு இடமானதாக இருந்தாலும் எம் மனதை அதே பால்ய மனதாக்கி கொண்டு பார்த்தால், உள்ளொன்று வைத்து புறமொன்று பேசாத, பேச நினைக்க கூட முடியாத அந்த குழந்தை வயதில் எம்மிடம் இருந்த, இப்பொழுது தொலைந்து போன அந்த தெய்வ நிலையை எம்மால் மீண்டும் நினைவுக்கு கொண்டுவரமுடியும்.

உணர்ச்சிவசப்பட்டு திடீர் முடிவுகளை எடுப்பதற்கும் முற்கோபத்துக்கும் நண்பர்கள் மத்தியில் சற்று பிரபலமான எனக்கு, நண்பர்கள் இருக்கின்ற அதே அளவு பிழையான புரிதல்களால் தொலைந்து போன உறவுகளும், கோபித்து கொண்டிருந்துவிட்டு பின்னர் மீண்டும் கதைத்து கொண்ட நட்புகளும் ஏராளம். பாயாசத்தின் அடியில் அடைந்து போயிருக்கும் முந்திரி பருப்பு போல மனதடியில் தேங்கியிருந்த நினைவுகளை எல்லாம் என் நிச்சயதார்த்தத்திற்கு எனது ஆருயிர் நண்பன் தெய்வீகன் எழுதிய ஒரு கவிதை முத்தாய் மாற்றி கரையில் போட்டுவிட்டது.

அப்போது எமக்கு 13 வயது. பாடசாலைக்கு ஒரு பத்து பேர் (நான், தெய்வீ, ஜனா, தயா, தர்ஷன், பிரதீபன், பார்த்தீபன், பிரசன்னா, மமான்ஸ், ஜேனா, கெல்வின்) ஒன்றாக போய் வருவோம். பாராளுமன்றம் வரை லஞ்சமும் வராத, அந்த வல்லமையும் அமையாத அந்த வயதில் அந்த கூட்டணி திடீரென உடைந்துவிட்டது. பிரதீபனின் சைக்கிள் திறப்பை தெய்வீகன் ஒளித்து வைத்ததால் இந்த பிரச்சனை வந்தது என்று இப்ப காரணம் சொன்னால் சிலர் chaos theory என்று நினைக்கலாம். ஆனால் நேரடியான, மறைமுகமான இப்படி எப்படி பார்த்தாலும் இருந்த ஒரே காரணம். அது மட்டும் தான் காரணம் என்பதை கஸ்டம் என்றாலும் அதை நம்பத்தான் வேண்டும். அற்புதமான நண்பர்களாய் பவனி வந்தவர்கள் அற்ப விடயத்துக்காக பிரிந்துவிட்டோம். மீண்டும் நட்பு பாராட்ட நெஞ்சம் விளைந்தும் ஈகோ எம்மை தடுத்தே வைத்தது. புலம் பெயர் நாடுகளில் எல்லாம் கொடி கட்டி பறக்கும் குழு மோதல்களுக்கு அப்பவே “அ” போட்டு வைத்தவர்கள் நாங்கள் தான். “எமக்கிடையேயான மோதல் வீதியோர கற்களை எல்லம் சுத்தம் செய்தது” என்று தெய்வீகன்  அளவுக்கு எமது மோதல்கள் மிகுந்த பிரபலம். கற்கள், நெயில் கட்டர், மண்கட்டிகள் போன்ற “பேரழிவு ஆயுதங்கள்” பயன்படுத்தப்பட்ட அந்த “வீரப்போர்களில்” ஆனைக்கோட்டை வீதி முழுவதுமே அமளிப்பட்டது.

இந்த சந்தர்ப்பத்தில் மறக்கமுடியாத ஒரு நினைவு நாம் சண்முகராஜா மாஸ்டரிடம் மாட்டுபட்ட சந்தர்ப்பம் தான். கிட்டதட்ட ஆணைக்கோட்டை , குளப்பிட்டி சந்திக்கருகில் நாம் கற்களால் எறிபடும் போது அவர் பார்த்துவிட்டர். பின்னேரம் ட்யூஷனில் அவர் எமக்கு சமூகக்கல்வி (social studies) வகுப்பெடுக்கிறார். அத்தனை மாணவர்களையும் எதிர்பார்க்கவைக்கும் அற்புதமான ஆசிரியர். எல்லா ஆண்களுக்கும் தந்தைக்கு பின்னர் ஆசிரியர்கள் தான் ரோல் மாடலாக வருகிறார்கள் என்பதை எமக்கு நிரூபித்தவர். இப்பொழுது கனடாவில் குடிவரவு வழக்குகளில் மிகுந்த பிரபலமாக இருப்பவர். வகுப்புக்கு வந்தவுடன் எம்மை முன்னே அழைத்து கண்டித்துவிட்டு ஒரு புதுமையான தண்டனையை அறிவித்தார். அதாவது அவர் கேட்கும் கேள்விக்கு நாம் பதில் சொல்ல வேண்டும். இல்லாவிட்டால் தண்டனையாக 15 பிரம்படி. தெய்வீகனிடம் முதல் கேள்வி கேட்கிறார்; அவன் பதில் சொல்லி விடுகிறான். அடுத்த கேள்வி என்னிடம். தனிப்பட்ட முறையில் அவருக்கு என்மீதிருந்த தைரியத்தில் பாடத்திட்டத்தை விட்டு விலகி கேள்வி கேட்கிறார். “கிரேக்கத்தின் வெற்றியை சொல்ல எந்த வீரன் ஓடிய ஓட்டத்தின் நினைவாக மரதன் போட்டி நடத்தப்படிகிறது?” என்பது கேள்வி. தெரிந்திருந்தும் நாவில் பயம் இருந்ததோ சனி இருந்ததோ விடை வரவில்லை. ஒப்பொழுது அடுத்த சந்தர்ப்பத்தை எனக்காக தருகிறார். அவரை பொறுத்தவரை அது வாய்ப்பே இல்லாத சந்தர்ப்பம். அதாவது யாராவது ஒரு பெண் அதற்கு விடை சொல்லி என்னை பிணை எடுக்கலாம். கட்டுப்பாடுகள் அளவுக்கு அதிகமாகவெ இருந்த எமது ட்யூஷனில் இது நிறைவேறும் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை; நான் என்றும் மதிக்கும் அந்த பெண் என்னை பிணை எடுத்து எனக்கு வரம் கொடுக்கும் வரை. எப்போதோ தொடர்பறுந்த சகோதரியே இப்போதும் உன் நினைவு என் நெஞ்சில்.

“புகைந்திருந்தால் தொடர்ந்திருக்கும்; தொடக்கத்திலேயே எரிந்ததால் உடனேயே அணைந்து விட்டது” என்ற தெய்வீகனின் அற்புதமான வரிகளுக்கேற்ப அத்திவாரமில்லாமல் கட்டப்பட்ட எமது கோபம் ஆட்டம் போட, பாசம் வந்து மனசை மீண்டும் ஆட்டிப்பார்த்தது. “ இருவருமே சிந்தித்தோம், எம்மை நாமே நிந்தித்தோம்”. உண்மை நண்பனாக அவனிடம் நான் ரசித்த விடயம் நாம் கதையாத போதும் அவன் என் வீட்டாருடன் இருந்த தொடர்பை என்றும் பேணிய விதம். நான் கதையாத போதும் வீட்ட வருவான். எனது அம்மாவுக்கோ ஏனோ தெரியவில்லை எனது நண்பர்களிடையே இவனிடம் கொஞ்சம் ஸ்பெஷல் பாசம். அது போலவே அவனது வீட்டாரும். ஒரு முறை நவாலி சந்தைக்கு அவன் அம்மாவுடன் வந்தபோது அவனது அம்மா அவனது சைக்கிளை விட்டு இறங்கி வந்து என்னிடம் கதைத்தபோது நான் மிகவும் நெகிழ்ந்து போய்விட்டேன். எப்போ, எப்பொ என்று சந்தர்ப்பம் பார்த்து சொல்லாமல் வைத்திருக்கும் காதல் போலவே கதைக்க நினைத்தபோதும் கதைக்காமல் பிற்போடப்படும் நண்பர்களுடனான கோபம் கூட ஒரு சுகமான அவஸ்தை.

அந்த சந்தர்ப்பம் கூட ஒரு கவிதை போலவே எமக்கு அமைந்தது. விஞ்ஞான வகுப்பென்று நினைவு. எனக்கு முன் வாங்கில் இருக்கிறான் தெய்வீகன். தலையங்கத்துக்கு கீழே கோடு கீற சிவப்பு பேணாவை தேடுகிறான். அவனுக்கு பக்கத்தில் பிரசா. நான் சிவப்பு பேனாவை எடுத்து பிரசாவிடம் கொடுத்து “தெய்வீகனிடம் கொடும்” என்கிறேன். அவன் திரும்பி “நீ கோடு போட்டிட்டு தா” என்கிறான். இருவருக்கும் மனசு றெக்கை கட்டி பறக்கிது. அன்று வகுப்பு முடிந்து நான் வீட்ட போன கையோட தெய்வீகன் எண்ட வீட்ட வந்து நிக்கிறான். மௌனத்திரைகள் உடனே விலக நட்புப் பெருஞ்சுவர் பலமாய் எழுந்தது. அதற்குப்பிறகென்ன அலையில் துரும்பாய் அடிபட்ட நட்பு கல் மேல் எழுத்தாய் சரித்திரமானது. சில அற்ப காரணங்களுக்காக நான் நண்பர்களை விலத்தி இருந்த 96ன் பிற்பகுதிகளில் எத்தனையோ நாட்கள் அவன் எனக்கு பெருந்துணை புரிந்திருக்கிறான். புலம்பெயர்ந்த நாட்களில் சில நாட்கள் தொலைபேசாவிடால் உரிமயுடன் எடுத்து சண்டை போட்டிருக்கிறான். காலத்தால் அழியாத என் நண்பர்கள் பட்டியலில் சற்று பலமாகவே தனது அத்திவாரம் அமைந்திருக்கிறது.

மூன்று நாட்களின் முன் எனது பிறந்த நாளினை முன்னிட்டு நண்பர்களுடன் ஒரு சந்திப்பை அமைத்திருந்தேன். ஏனோ அவனுடன் கதைக்க வேண்டும் போல இருந்தது. உடனே தொடர்புகொண்டேன். பேசினோம்…. பேசிக்கொண்டேயிருந்தோம். அற்புதமான பாடகன் அவன். எனது all time favourites ஆன ஆனந்தம் ஆனந்தம் பாடும்……, நிலாக்காய்கிறது…. தீராத விளையாட்டு பிள்ளை……, பச்சை கிளிகள் தோளோடு…. என்று பாடித்தள்ளினான்.

இப்பொழுது யோசித்துப்பார்க்கும்போது அன்று நான் நீட்டிய சிகப்பு பேனா எத்தனை மரியாதைக்குரியது என்று வியப்பு தோன்றுகிறது. வைரமுத்துவின் வரிகளில் சொன்னால் “உனக்குப் பொன்னாடை போர்த்தும் லட்சியத்தோடு அந்தப்பேனாவை நீட்டினேன்”. அதற்குப் பிறகு நானும் அவனும் சில காதல்களை சந்தித்திருக்கிறோம். காதலை சொல்லாமல் தவித்தபோதும், சொல்ல திட்டமிட்டபோதும், சொன்னபோதும், சொல்லப்பட்ட காதல் ஏற்றுக்கொள்ளப்பட்டபோதும் அடைந்த அதே பரவசத்தை, அவனிடம் மீண்டும் கதைக்க நினைத்தபோதும் திட்டமிட்ட போதும், கதைத்தபோதும் அடைந்திருக்கிறேன். காதல் என்பதும், நட்பு என்பதும் ஆதியில் ஒரே அர்த்தத்தில்தான் இருந்திருக்குமோ………………..

தெய்வீகனின் கவிதை

பழைய கள்ளு

இன்று இவர்களுக்கு
இனிய நாள்

பிரசவித்த காதலுக்கு
பெயர் சூட்ட
கனிந்த நாள்

தேன் மொழி போல்
வான் மழை போல்
வாழ்வுரைக்க
வாழத்துகிறேன்

இந்த வரி படைக்க
வரயில் நிற்போர் சார்பில்
நான் கவி
சாற்றுகிறேன்

என்னடா கவிப்பா
வழமையான வாழத்து பா
என்று மனம் தவிப்பா?

இங்கு தரப்போகும் கவி
கால நதியில் கால் நனைத்து வந்த
என் நட்பின் சிறு மொழிபெயர்ப்பு
அதை இழந்து விட்டதின் தவிப்பு

சுதனுக்கும் எனக்குமான தொடர்பு
மதனுக்கும் விகடனுக்குமான உறவு

வாழ்க்கையை யணயமாக வைத்திருக்கும்
அழகிய இளமையில்
பயமற்ற பயணங்களாக
மணித்துளிகளை மாற்றியமைக்கும்
மாணக்க பருவமே
எங்கள் அறிமுக அரிவிரி

இடையில் கட்டை காற்சட்டை
அப்பர் பயத்தால் நெற்றியில் சிறு பட்டை
முளை விட்ட மீசை
துரத்தும் தினம் ஒரு பெட்டை
மானிப்பாயில் இரண்டு நெட்டை
சந்தித்துக் கொண்டதோ மரியரின் கோட்டை

காவாலிகளுக்கு
கடிவாளம் போடும்
நவாலி வாத்தியர்தான்
மரியதாஸ் மாஸ்டர்

பகிடி சேட்டை என
பல தகுதியுடன் அங்கு வந்த
கேலிப்படைகளில் நாமும்
கூலிப்படையாகி – ஈற்றில் மரியருக்கே
வேலிப்படையானோம்

ஆம்!!

அங்கு வகுப்பு தலைவர்களாக
அதிகாரம் பங்களிக்கப்பட்ட
ஆசாமிகள் நாமிருவர்

ஏனோ தெரியவில்லை
ஒரு உறையில்
இரு வாள்கள்
ஒத்துவரவில்லை

குறுகிய காலத்தில்
ஆம்பித்ததது
குத்துவெட்டு

அமெரிக்காவும்
அல் கெய்டாவுமாக பிரிந்தோம்

அந்த ஊடல்
உலகையே நம் பக்கம்
திரும்பி பார்க்க வைத்தது.
தத்தமது வெளியுறவுக் கொள்கைகளை
பரிசீலிக்க செய்தது

அப்போதேல்லாம்
எமக்கிடையில்
கோள் மூட்டுதல்களும்
கோப தாபங்களும்
முகச்சுழிப்புகளும்
முரட்டுப்பார்வைகளும்

அப்பப்பா…
இன்றைய சன் டீ.வி சீரியல்களுக்கு
அன்றே
வரைவிலக்கணம்
எழுதியாயிற்று

எமக்கிடையிலான பகை
பாடசாலை விட்டு வரும்போது
வீதியோர கற்களை கூட
சுத்தப்படுத்தியது
பல கூட்டணிகளை உருவாக்கியது
பாட்டாளி பங்காளி பாராமல்
அவரவர் எதிரியுடன் சேர்ந்தவர்கள்
துரோகிகளாக்கப்பட்டனர்

எனினும்
புகைந்திருந்தால்
பகை எரிந்திருக்கும்
இது எடுத்த எடுப்பிலேயே எரிந்ததனால்
அணையத்தொடங்கியது

இருவரும்
சிந்தித்தோம்
எமது செயல்களை
நிந்தித்தோம்

ஒரு நாள்
வகுப்பில்
தலையங்கத்துக்கு
கோடு கீறுவதற்கு பேனா தேடியபோது
தன் சிவப்பு பேனாவை தந்து
பச்சை கொடி காட்டினார் சுருள் முடி சுள்ளான்

வெட்கத்த விட்டு
வெடுக்கென எடுத்து
தன் பக்க சிக்னலை காட்டினார் சிம்பு

ஆம்
ஒரு தலையங்கத்தால்
இரு தலைகள்
இணைந்தன

பிறகென்ன….

அலையில் துரும்பாபக அடிபட்ட நட்பு
கடலில் கப்பலாக அசைய தொடங்கியது

மௌன மதில்கள்
வெடித்து சிதற
பரஸ்பர நட்பு
பரவசம் கண்டது

நவாலி ஆனைக்கோட்டை
மானிப்பாய் சுதுமலை
வீதிகளெல்லாம்
எம்மால் புனரமைத்த
பாதைகள் ஆயின

ரெண்டொரு குடும்பங்கள் மாத்திரமே பாவித்த
குச்சொழுங்கைகள் எல்லாம்
எம்மால் பெரு வீதிகளாயின
அப்பகுதி பெண்களுக்கு அவை
திரு வீதிகளாயின

குண்டன் விசாகன்
உருளை சயந்தன்
கண்ணாடி தயா
கவிதா மயூரன்
விஞ்ஞானி குணாளன்
கற்றர் தர்சன் என
எங்கள் பாசறை எப்போதும்
பகிடி புகையும் பட்டறை

களவோடை அம்மன் கேணிக்கட்டு
குச்சு வீதி செறிந்த சாவக்கட்டு
சுதன் வீட்டு முன்னால் படிக்கட்டு
எதைத்தான் விட்டோம் கொஞ்சம் காட்டு

கரியரில் புத்தகத்துடன் – ஆமி
பரியரில் நின்று தினம்
படிக்கத்தான் யாழ் சென்றோம் என்றால்
மரித்துப்போன மரியர் கூட எம்மை
மன்னிக்க மாட்டார்

தட்டார் தெரி ஆமி பொய்ன்டில்
வரிசையில் நிற்கும் அந்த
உரிசையை தந்த பல
வேம்படி கன்னிகளே!!!!
இன்று நீங்கள்
எவரின் காதலிகளோ அல்லது
இன்னமும் எங்களை காதலிக்கிறீர்களோ தெரியாது
எம் இளமைக்கு உபயமான உங்களுக்கு எம்
உளம் கனிந்த நன்றிகள்

அதுவும்
கண்ணாடி போட்டு வந்து – சுதனின்
பின்னாடி டயரால் இடித்து
யூனிபொர்மில் கறைபதித்த
ஹிண்டு லேடீஸ் காரிகையே
மதனிகாவுக்கு முன்னர் சுதனுள்
இளமை முரசறைந்த பேரிகையே

நீ எங்கிருந்தாலும் வாழ்க!!!

அப்துல் கலாமுக்கு முன்னரே எமக்கு
கனவு காண கற்றுத்தந்த
எத்தகையோ கன்னிகள்
அத்தனையும் இளமை கண்ணிகள்

பட்டியல் போட்டால்
தீராது இக்கவிதை
பட்டி போட்டாலும்
அடங்காத உணர்ச்சிக்குதிரை

இப்படியாய்
இருந்த எமக்கு
சுதனின் கொழும்பு பயணம்
வாழ்வில் பெரிய தழும்பு பயணமானது

எல்லோரும் சென்று வழியனுப்பிவைத்தோம்
அவன் சென்ற பஸ்ஸை வேம்படி சந்தி வரை
கலைத்து சென்று
கை காட்டிய நாளை
நினைத்தால்
இன்றும்
கண்ணீர் சுரப்பிகள்
பிரசவமாகுது.

அவன் இன்று
புது வாழ்வில் புகுகிறான்
‘நானறிய”
மதுவோடு இணையாதவன்
இன்று இன்னொரு
‘மது”வோடு இணைகிறான்.

புலரட்டும் புது வாழ்வு
மலரட்டும் அதில் மகிழ்ச்சி

14 thoughts on “கண்ணை கட்டி கோபம்…………

Add yours

  1. நட்பு என்ற வார்த்தைக்குள் நாமும் வாழ்ந்து பார்த்தோமே எத்தனை இனிமைகள் இருக்கின்றன்.கடைசிவரை கட்டையில் வேகும் போதும் வேணும் இந்த நட்பு.

    Like

  2. நட்பு என்ற வார்த்தைக்குள் நாமும் வாழ்ந்து பார்த்தோமே எத்தனை இனிமைகள் இருக்கின்றன்.கடைசிவரை கட்டையில் வேகும் போதும் வேணும் இந்த நட்பு.

    Like

  3. நட்பு என்ற வார்த்தைக்குள் நாமும் வாழ்ந்து பார்த்தோமே எத்தனை இனிமைகள் இருக்கின்றன.இந்த நட்பு கடைசிவரை கட்டையில் வேகும் போதும் வேணும். அதை பேணுவோம்.

    Like

  4. நட்பு என்ற வார்த்தைக்குள் நாமும் வாழ்ந்து பார்த்தோமே எத்தனை இனிமைகள் இருக்கின்றன.இந்த நட்பு கடைசிவரை கட்டையில் வேகும் போதும் வேணும். அதை பேணுவோம்.

    Like

  5. நாமெல்லாம் எழுதனும் அல்லது இப்படி நினைவுகள் எமக்கும் இருக்கு என்று நினைக்கும் போதெல்லாம் நீங்கள் முந்திவிடுகிறீர்கள். எப்படித்தான் முடிகிறதோ? ம்ம்ம்ம்ம்

    Like

  6. நாமெல்லாம் எழுதனும் அல்லது இப்படி நினைவுகள் எமக்கும் இருக்கு என்று நினைக்கும் போதெல்லாம் நீங்கள் முந்திவிடுகிறீர்கள். எப்படித்தான் முடிகிறதோ? ம்ம்ம்ம்ம்

    Like

  7. வணக்கம் விசாகன்உறாவுகளிலே மிகவும் நுண்ணிய ஒரு உறவு நட்பு….. அது எவ்விதமான் வரைவிலக்கணங்களுக்குள்ளும் சிக்காதது. அப்பா, அம்மா, தம்ப், தங்கை, அண்ணன், தம்பி, அக்கா எல்லம் மாறாத உறவுகள், ஆனால் எவ்விதமான வரைவிலக்கணமும் இன்றி எல்லம் தங்இ நிற்கின்ற உறவு நட்பு தான்

    Like

  8. வணக்கம் விசாகன்உறாவுகளிலே மிகவும் நுண்ணிய ஒரு உறவு நட்பு….. அது எவ்விதமான் வரைவிலக்கணங்களுக்குள்ளும் சிக்காதது. அப்பா, அம்மா, தம்ப், தங்கை, அண்ணன், தம்பி, அக்கா எல்லம் மாறாத உறவுகள், ஆனால் எவ்விதமான வரைவிலக்கணமும் இன்றி எல்லம் தங்இ நிற்கின்ற உறவு நட்பு தான்

    Like

  9. நட்பு,அதுக்கு இருக்கும் அற்புதமான உணர்வு எதுக்கும் இல்லை. பிரிவுதான் சொல்லும் நட்பின் பெறுமதியை. அருமையான பதிவு. “சின்ன சின்ன ஊடல்கள் சில நேரம் நம்மை சீண்டி பார்த்தது.அன்பில் நனைத்து போட்டது. என்ன என்ன தவறுகள் செய்தாலும் அதை மறக்கும் நாளிது. நட்பின் மகுடம்தானிது”.நன்றி நண்பா.

    Like

  10. நட்பு,அதுக்கு இருக்கும் அற்புதமான உணர்வு எதுக்கும் இல்லை. பிரிவுதான் சொல்லும் நட்பின் பெறுமதியை. அருமையான பதிவு. "சின்ன சின்ன ஊடல்கள் சில நேரம் நம்மை சீண்டி பார்த்தது.அன்பில் நனைத்து போட்டது. என்ன என்ன தவறுகள் செய்தாலும் அதை மறக்கும் நாளிது. நட்பின் மகுடம்தானிது".நன்றி நண்பா.

    Like

Leave a comment

Website Powered by WordPress.com.

Up ↑