தமிழ் சினிமாவில் எழுத்தாளர் பாலகுமாரன்

தமிழ் சினிமாவில் தொடர்ந்து காணாப்படும் கதை வறட்சிக்கு பலராலும் முன்வைக்கப்படும் காரணங்களில் ஒன்று அதில் எழுத்தாளார்களின் குறைவான பங்களிப்பாகும். இந்த தலைமுறை எழுத்தாளர்களை எடுத்துக்கொண்டால் சுஜாதா, பாலகுமாரன், பட்டுக்கோட்டை பிரபாகர், சுபா போன்ற வெகு சிலர் மட்டுமே திரையுலகிலும் பங்களித்து வருகிறார்கள்.

பாலகுமாரனை பொறுத்தவரை அவரது திரையுலக பங்களிப்பு சற்று தீவிரமானதாகவே இருந்தது. நடிகர் கமல்ஹாசனின் நெருங்கிய நண்பரான பாலகுமாரன், அதே கால கட்டத்தில் வசந்த் (அப்போது பாலசந்தரின் உதவியாளராக இருந்தார்), பாக்கியராஜ் போன்றவர்களுடனும் நெருக்கமாக இருந்தார். இக்காலகட்டத்தில் திரையுலகினாலும் அதில் கிடைக்கும் ஒரு விதமான புகழினாலும் தான் கவரப்பட்டதாக கூறியிருக்கிறார் பாலகுமாரன். பாக்கியராஜ் முந்தானை முடிச்சு திரைப்பட கதை விவாதத்தில் ஈடுபட்டிருந்த அக்காலத்தில் பாலகுமாரனும் கலந்து கொண்டிருக்கிறார். பாலகுமாரனின் கதைகளை படித்த எவருமே அவர் கதையை கொண்டு செல்லும் விதத்தையும், காட்சிகளை கோர்த்து கதையை கொண்டு செய்வதில் இருக்கும் கட்டுமானத்தையும் ரசித்தேயிருப்பார்கள். இந்த கதை விவாதங்களின் போது பாக்கியராஜும் பாலகுமாரனை திரையுலகுக்கு வருமாறு அழைப்புவிடுத்திருக்கிறார். இதன்பிறகு முந்தானை முடிச்சு படத்தின் ப்ரீவியூ பார்த்தபோது அப்படத்தில் பாக்யராஜுடன் இணிந்து பணியாற்றவில்லையே என்று தான் வருந்தியதாகவும் பாலகுமாரன் கூறியிருக்கிறார். பாலகுமாரன் தான் அக்காலத்தில் புகழ் மீது பெரும் போதை கொண்டிருந்ததாக பலமுறை கூறியிருக்கிறார். சுஜாதாவின் போஸ்டர்களை பார்த்து அப்படி தனது போஸ்டர்களும் வரவேண்டும் என்று ஏங்கியதாகவும் சினிமாவின் ஜிகினா வெளிச்சம் தன்னை அதிகம் ஈர்த்ததாகவும் ஓரிருமுறை எழுதியிருக்கிறார். காலச்சுசுவடு, உயிர்மை போன்ற பதிப்பகங்கள் புத்தக பதிப்பில் ஈடுபட முதல் வானதி, விசா (திருமகள்), பாரதி பதிப்பகம் போன்றவை புத்தகங்கள் வெளியிடும்போது பெரும் எழுத்தில் புத்தகத்தின் பெயரும் சிறிய எழுத்தில் எழுத்தாளரின் பெயரும் இருக்கும். இந்நிலையை மாற்றியது சுஜாதா, பின்னர் இது பாலகுமாரனுக்கும் தொடர்ந்தது.

இதன்பிறகு கமல்ஹாசனிடம் ஆலோசனை கேட்டிருக்கிறார் பாலகுமாரன். “புகழுக்காக சினிமாவுக்கு வாரதீங்க பாலா, அந்த புகழ் உங்களுக்கு இப்பவே இருக்கு. உங்கட புத்தக வெளியீட்டு விழாவில (இரும்பு குதிரைகள்) வைரமுத்து உங்கள புகழ்ந்ததே இதுக்கு உதாரணம். அத தாண்டி வரணும்ணு நினச்சா இப்படி அட்வைஸ் கேக்காதீங்க,” என்று கமல் கூற அதை தொடர்ந்து தனக்கு நெருக்கமான சாருஹாசன், சுஹாசினி, அனந்து, சிவகுமார் என்று அனைவரிடமும் ஆலோசனை கேட்டிருக்கிறார். பலதரப்பட்ட கருத்துகளால் அவர் குழம்பிபோயிருந்த நேரத்தில் சாருஹாசன் ஏற்பாடு செய்த seven samurai (Akira Kurasawa -1954) என்ற திரைப்படத்தை பார்த்து தான் திரைப்பட உலகின் நுழைய துடிப்பதற்கு தனக்குள் இருக்கும் போர்க்குணமும் காரணம் என்று தெளிந்து சினிமாவில் நுழைவதாக தீர்மானம் எடுத்ததாகவும் கூறுகிறார். இதனை தொடர்ந்து 1984/85ல் தான் பார்த்து வந்த ட்ராக்டர் கம்பனி வேலையை உதறிவிட்டு சினிமாவில் முழுநேரமாக நுழைகிறார்.

இது கூட அவரது ரசிகர்கள் / வாசகர்கள் உணர்ந்ததுதான். பாலகுமாரன் பிரபலமாக முன்னர் நடந்த நிகழ்வு இது. ஒரு இலக்கிய ஒன்று கூடலில் சுஜாதா பேசுகிறார், பாலகுமாரனும் சுப்ரமணிய ராஜுவும் (பாலகுமாரனின் மிக நெருங்கிய நண்பர். சிறந்த எழுத்தாளர். 1985 காலப்பகுதியில் ஒரு விபத்தில் இறந்தார். அவரை பற்றி “தாக்கம்” என்று பாலகுமாரன் ஒரு சிறுகதை எழுதினார்) கலந்து கொள்ளுகிறார்கள். அப்போது சுஜாதாவை இடைமறித்து தகராறும், வாக்குவாதமும் செய்து அதனால் வெளியேற்றப்படுகிறார் பாலகுமாரன். இவருடன் சென்ற சுப்ரமணிய ராஜு உள்ளே நின்றுவிட, தான் தனித்துவிடப்பட்டதாக உணர்ந்ததாகவும் சுஜாதா போன்ற பெரும் எழுத்தாளராக தானும் வருவேன் என்று சபதம் செய்ததாகவும் கூறுகிறார் பாலா. இதனை தொடர்ந்து K. பாலசந்தரிடம் உதவி இயக்குனராக சேர்ந்து சிந்து பைரவியில் தனது திரைப்பயணத்தை தொடங்குகிறார்.

உதவி இயக்குனராக :
அடிப்படையில் ஒரு எழுத்தாளராக இருந்தாலும் பாலகுமாரன் திரைத்துறையில் நுழைந்தபோது ஒரு டைரக்டராக வேண்டும் என்றுதான் நுழைந்தார். திரைத்துறையில் நுழைவதன் மூலம் புகழும் பிரபலமும் பெறுவது, தன்னை ஒரு சாதனையாளனாக நிலைநிறுத்துவது என்று நுழைந்த பாலகுமாரனை பொறுத்தவரை
 இது மிகப் பொருத்தமான முடிவுதான். தமிழ் சினிமாவில் கதாசிரியர் புகழ்பெறுவது என்பது மிகவும் கடினமானது. சுஜாதா கூட ஒருமுறை தமிழ்சினிமாவை பொறுத்தவரை கதாசிரியரின் வேலை “நொட் (முடிச்சு)” என்பதுடன் முடிந்துவிடுகிறது என்று ஆதங்கப்பட்டிருக்கிறார். ஒரு நேர்முகத்தில் பாலகுமாரனிடம் அவரது மெர்க்குரிப் பூக்களை திரைப்படமாக்க முயற்சித்தபோது அவர் மறுத்ததாக வந்த செய்தி உண்மையா என்று கேட்டபோது அவர் ஒப்புக்கொண்டிருந்தார். சாவித்திரியின் காதலை, மற்ற கதாபாத்திரங்களை எவர் சரியாக திரையாக்கப்போகிறார்கள், அவர்களின் துடிப்பை யார் வெளிக்காட்டப்போகிறார்கள் என்பதாலேயே தான் மறுத்ததாக அவர் சொன்ன காரணம் ஏற்றுக்கொள்ளக்கூடியதே.

இவர் சிந்து பைரவி, புன்னகை மன்னன், சுந்தர சொப்பனகளு (கன்னடம்) முதலிய திரைப்படங்களுக்கு உதவி இயக்குனராக பணியாற்றினார்.

இயக்குனராக பணியாற்றிய படங்கள் :
ஒரு இயக்குனராகும் எண்ணத்துடன்தான் பாலசந்தரிடம் சேர்ந்து உதவி இயக்குனராக இவர் பணியாற்றினார். அதன் பின்னர் அப்படியான ஒரு வாய்ப்புன் வந்தது. K பாக்கியராஜ் – ஷோபனா நடிக்க பாக்கியராஜ் இசையமைத்து 88/89ல் வெளியான படம் இது நம்ம ஆளு. பெரு வெற்றி பெற்ற படம். இத்திரைப்படத்தை பார்த்தால் டைரக்க்ஷன் – பாலகுமாரன் என்ற டைட்டிலை காணலாம். படம் வெளியான பின்னர் பிராமணர்கள் உட்பட சாதிய ரீதியான கடும் எதிர்ப்பை சந்தித்த படம் இது. அப்போது எல்லாம் பாலகுமாரனின் பெயர் ஒரு கேடயம் போல பயன்பட்டது. ஆனால் பாக்கியராஜ் தரப்பில் இருந்து பாக்கியராஜே படத்தை இயக்கியதாகவும் கூறப்பட்டு படத்தின் பெருவெற்றியும் பாக்கியராஜின் திறனாகவே கருதப்பட்டது. இதனை தொடர்ந்து ராசுக்குட்டி என்ற திரைப்படம் உருவாகிக்கொண்டிருந்த காலப்பகுதியில் பாக்கியராஜ் இது நம்ம ஆளு திரைப்படத்தில் பாலகுமாரன் உதவியாளராக பணிபுரிந்ததாகவும் ஆனால் அவரால் ஒரு சிறு காட்சியை கூட விவரிக்க முடியவில்லை என்றும் கூறினார். இதனால் பாதிக்கபட்ட பாலகுமாரன் தான் இனிமேல் திரைப்படத்தில் வசனகர்த்தாவாக மட்டுமே பணிபுரிவேன் என்றும் அறிவித்தார்.

நடிகராக :
ஒரு நடிகராக வரவேண்டும் என்ற எண்ணம் அவருக்கு ஒரு போதும் இருந்ததாக தெரியாத போதும் தான் பரவலாக அறியப்படவேண்டும் என்பதில் அவருக்கிருந்த ஆர்வம்  அவர் சில திரைப்படங்களில் சில காட்சிகளில் தோன்றியதற்கு காரணமாக இருக்கலாம்.

இவரது நண்பர் வசந்த் முதன்முதலாக இயக்குனரானபோது கேளாடி கண்மணி திரைப்படத்தில் ஒரு ஆசிரம நிர்வாகியாகவும் (திரையில் கடைசி 20 நிமிடங்களுக்குள் வரும் காட்சி. தாடி இல்லாத, மெலிந்த, தலை நரைக்காத பாலகுமாரனை அடையாளம் காண்பது கூட கடினமாக இருக்கும்), இவரது பெரும் வாசகர்களான ஜேடி- ஜெர்ரி முதன் முதலில் இயக்கிய உல்லாசம் திரைப்படத்தில் பஸ் கண்டக்டராகவும் திரையில் தோன்றினார். அது போல மென்மையான படங்களை மட்டும் இயக்கிவந்த விக்கிரமன் முதன் முதலில் தனது பாணியை விட்டு விலகி புதிய மன்னர்கள் என்ற திரைப்படத்தை அரசியல் பிண்ணனியில் இயக்கியபோது மாணவர்கள் அரசியலுக்கு வருவது போல வருகின்ற காட்சிகள் ஏற்கப்படுமா என்ற கேள்வி வந்தபோது பாலகுமாரன் உட்பட சில பிரபலங்கள் திரையில் தோன்றி தமது கருத்தை கூறுவது போல படமாக்கியிருப்பார். மேலும் முன்னர் குறிப்பிட்ட இது நம்ம ஆளு திரைப்படத்தில் கூட ஒரு றெஸ்டாரண்ட் மனேஜராகவும் நடித்திருந்தார்.

வசனகர்த்தா:
திரையுலகை பொறுத்தவரை பாலகுமாரன் பெரு வெற்றிபெற்றது ஒரு வசனகர்த்தாவாகத்தான். திரைப்படங்களை பொறுத்தவரை வசனகர்த்தாவின் பங்கென்ன என்று ஒரு முறை கேட்டபோது வசனம் எழுதுவதுடன் சில காட்சிகளை அமைக்கவும் அதாவது கதையை கொண்டு செல்ல உதவுவது என்றும் கூறினார். உண்மையிலேயே அவரது பெரும் பலமான கதைஜ்களை இறுக்கமாக கட்டியமைஇகும் திறன் இயக்குனர்களுக்கு பெரும் துணைதான். இவர் பணியாற்றிய படங்களே அ
தற்கு சாட்சி. அதிலும் ஷங்கர் தனது படங்களுக்கு இவரையும் சுஜாதாவையும் மாற்றி மாற்றி பயன்படுத்தி தனது படங்களை மெருகேற்றி கொண்டது கவனிக்கதக்கது. அது போல பல இயக்குனர்கள் இவருடன் கைகொடுத்து அருமையான படங்களை தந்துள்ளனர். அவற்றின் முழு விபரம்
நாயகன் – (மணிரத்னம்)
குணா – (சந்தானபாரதி)
செண்பகத்தோட்டம்
மாதங்கள் ஏழு – (யூகி சேது)
கிழக்கு மலை (
ஜெண்டில்மேன்,காதலன், ஜீன்ஸ் – (ஷங்கர்)
பாட்ஷா – (சுரேஷ் கிருஷ்னா)
ரகசிய போலீஸ் – (சரத் குமார் நடித்தது)
சிவசக்தி – (சுரேஷ்கிருஷ்ணா)
வேலை – ( சுரேஷ் )
முகவரி, காதல் சடுகுடு – (துரை)
சிட்டிசன் – (சரவண சுப்பையா)
உல்லாசம் ( ஜேடி – ஜெர்ரி)
உயிரிலே கலந்தது (ஜெயா)
கிங் – (சாலமன்)
மன்மதன், வல்லவன் – (சிலம்பரசன்)
கலாபக் காதலன் – (இகோர்)
புதுப்பேட்டை – (செல்வராகவன்)
ஜனனம் – (ரமேஷ்)
ஜூன் ஜூலை – வெளியாகாத படம் / தயாரிப்பு நிறுத்தப்பட்டது
இது காதல் வரும் பருவம் – (கஸ்தூரி ராஜா)

திரைப்படமாக வரவேண்டும் என்று நான் எதிர்பார்க்கும் இவரது சில நாவல்கள்:

தாயுமானவன்
பயணிகள் கவனிக்கவும்
சினேகமுள்ள சிங்கம்
மெர்க்குரி பூக்கள்
அகல்யா
இரும்புக் குதிரைகள்
பொய்மான்

கரையோர முதலைகள்
ம்ம்ம்ம்ம்… இப்படியெல்லாம் நடிக்க, படம் எடுக்க இப்போது அல்லது இங்கே யார் இருக்கிறார்கள்… அவதாரங்கள் போலவே கையில் அரிவாளுடணும் உருட்டுக்கட்டையுடனும் துப்பாக்கியுடனும் திரியும் நம் திரை நாயகர்களுக்கு பாலகுமாரன் சொன்ன “என் அன்பு மந்திரம்” புரியுமா?

35 thoughts on “தமிழ் சினிமாவில் எழுத்தாளர் பாலகுமாரன்

Add yours

  1. வாவ்.. அருமையான தொகுப்பு அருண்மொழிவர்மன்.. பாலகுமாரனின் திரைப்பங்களிப்பைப் பற்றி இவ்வளவு விலாவாரியாக இப்போதுதான் காண்கிறேன்.. பதிந்தமைக்கு நன்றி.. :)அவர் கருத்துதான் எனக்கும்.. மெர்குரிப்பூக்களின் கண்ணியம் குறையாமல் காட்சியில் எடுக்கும் இயக்குனர் இப்போதைக்கு இல்லை என்றே கருதுகிறேன்.. அல்லது, ஜெயகாந்தன் மாதிரி அவரே வந்து இயக்கினால்தான் உண்டு..

    Like

  2. நல்ல பதிவு, நல்ல எழுத்து நடை.வாழ்த்துக்கள் நண்பரே.இன்றைய வேகமான சூழ்லில் வேகமான திரை படங்கள் மத்தியில் பாலகுமாரனின் நிதானமான வசங்கள் மிகவும் தேவை.தங்களது விருப்பம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.குப்பன்_யாஹூ

    Like

  3. நல்ல பதிவு. உங்களைபோல எனக்கு பாலகுமாரன் மீதான ஈடுபாடு இருக்கவில்லை. தவிர்க்க வேண்டும் என்றல்ல. வாய்ப்புக்கள் கிடைக்கவில்லை. இனிமேல் கிடைக்குமா என்று ஏங்குகிறேன்.

    Like

  4. நன்றி நண்பா,நீங்கள் எல்லோரும் பாலகுமாரன் பற்றி கதைக்கும் போது இருந்து கேட்ட கேள்வி ஞானமே உள்ளது. ஆனால் அவர் வசனம் எழுதிய படங்களைப்பார்த்து இருக்கிறேன். நறுக்கான வசனங்கள். அண்மையில் ஞாநி உடனான குமுதம் இணையத்தள பேட்டியில் கருத்துக்களை தனக்கே உரித்தான் முறையில் ஆணித்தரமாக முன்வைக்கிறார். ஞாநி தனிப்பட்ட வாழ்க்கையை கிளறினாலும், அவர் நிதானமாகவே பதில் அளிக்கிறார். மீண்டும் அவரை நினைவு கூர்ந்தமைக்கு நன்றி. உங்களைப்போல் நண்பா எங்களால் முடியாது.

    Like

  5. நல்ல விவரத் தொகுப்பு. பல விஷயங்கள் புதிதாய் தெரிந்துக் கொண்டே. பாலுகுமாரனின் எழுத்துக்களின் மீதான காதலை பதிவைப் படிக்கையிலேயே தெரிகிறது.http://blog.nandhaonline.com

    Like

  6. இப்பதிவை எழுத நிறைய உழைத்திருக்கிறீர்கள் என்பதை படிக்கும் போதே உணர முடிகிறது. வாழ்த்துக்கள்.குணா படத்தின் கதையை கமல்,பாலகுமாரன்,சந்தான பாரதி மூவரும் சேர்ந்து உருவாக்கினார்கள். அதே போல் பாபாவிலும் அவருடைய பங்கு இருந்ததாக கேள்வி பட்டிருகிறேன்.

    Like

  7. தாயுமானவன் தொலைக்காட்சி தொடராக வந்தது. அவர்களால எவ்வளவு கெடுக்க முடியுமோ அவ்வளவு கெடுத்து இருந்தார்கள்

    Like

  8. நல்ல விரிவான பதிவு. நான் தேடிக்கொண்டிருந்த பல தகவல்களை அநாயசமாகச் சொல்லிவிட்டீர்கள்.பழைய பாலகுமாரன் எழுத்துக்களுக்கு நான் வாசகன்.அவர் ஒரு சிறந்த இயக்குனராக முடியுமோ இல்லையோ…சிறந்த கதை,வசன,திரைக்கதை ஆசிரியராகச் சொலிக்கலாம்.அதாவது திரைத்துறையின் பேப்பர் வொர்க்கில்…

    Like

  9. வணக்கம் bee’morganவருகைக்கு நன்றி.ஜெயகாந்தன் மாதிரை அவரே வந்து இயக்கினால் தான் முடியும். ஆனால் இப்பொது வரும் சில புதுமுக இயக்குனர்களும் நம்பிக்கை தருகிறார்கள். பார்ப்போம்.

    Like

  10. குப்பன் யாஹூஅவருடைய வசனங்கள் மற்றும் கதைகளில் கூட ஒரு நிதானம் காணப்படும். உதாரணமாக அகல்யாவில் வரும் சிவசு அல்லது அவர் வசனம் அமைத்த உல்லாசம் படத்தில் வருகின்ற விக்ரம் கதாபாத்திரம்

    Like

  11. தமிழ் விரும்பிதொடர்ச்சியான ஆதரவுக்கு நன்றிகள். எந்த ஒரு வாசகனும் வாழ்வில் கட்டாயம் பாலகுமாரனை கடந்து தான் வரவேண்டும். அது ரசனைக்கு மட்டுமல்ல, தெளிவுக்கும் நல்லது. முக்கியமாக அவரது கற்றுகொண்டால் குற்றமில்லை, உயிரில் கலந்து உணர்வில் நனைந்து புத்தகங்கள்.

    Like

  12. விசாகன்சிலருக்கு பற்றவர்காளின் ரணங்களை கீறி கீறி சந்தோஷப்படும் ஒரு வித மனோ வியாதி உள்ளது. அதில் ஞாநியும் அடக்கம். கலைஞரை துணைவி -மனைவி என்று இவர் செய்யாத கிண்டலில்லை,. ஆனால் தனது தந்தையை இவர் விட்டு கொடுத்ததும் இல்லை.

    Like

  13. //குணா படத்தின் கதையை கமல்,பாலகுமாரன்,சந்தான பாரதி மூவரும் சேர்ந்து உருவாக்கினார்கள். அதே போல் பாபாவிலும் அவருடைய பங்கு இருந்ததாக கேள்வி பட்டிருகிறேன்.//கமலின் பல படங்களுக்கு, டைட்டிலில் பெயர் வருகிறதோ இல்லையோ, சுஜாதா, பாலகுமாரனின் பங்உ இருந்திருக்கிறது. இவர்கள் இருவருக்கும் கமல் மிக நெருக்கமான நண்பர் என்பது குறிப்பிடத்தக்கது .ஆனால், நான் அறிந்தவரை பாபா படத்தில் எஸ். ராமகிருஷ்ணனின் பங்குதான் இருந்திருக்கவேண்டும்.

    Like

  14. //தாயுமானவன் தொலைக்காட்சி தொடராக வந்தது. அவர்களால எவ்வளவு கெடுக்க முடியுமோ அவ்வளவு கெடுத்து இருந்தார்கள்//அப்படியா… யார் யார் நடித்தார்கள்…

    Like

  15. தமிழ்ப்பறவை…வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. ஒரு இயக்குனராகவேண்டும் என்ற ஆர்வத்தில் குறுகிய காலத்திலேயே சினிமாவின் பல துறைகளிலும் தீவிரமான அக்கறையை காட்டியிருக்கிறார் பாலா. அதை பார்க்கும்போது அவர் வென்றிருப்பார் என்றொரு நம்பிக்கை தோன்றுகிறது.

    Like

  16. வணக்கம் பிரபா.உங்கள் ஆதரவுக்குநான் பதிவுகள் எழுத தொடங்கிய நாட்களில் நீங்கள் தந்த ஆதரவு மிக முக்கியமானது. அது எனக்கு பெரும் ஊக்குவிப்பாக இருந்தது. இப்போது உங்கள் பதில்கள் காண்கையில் மிகுந்த உற்சாகம் கொள்கிறேன்.தொடர்ந்து நான் எழுத அது என்னை இன்னும் தயார்படுத்தும்நன்றிகள்

    Like

  17. நல்ல அலசல். பாலகுமாரனால் திரைப்பட இயக்குநராகவும் ஒளிர முடியும். ஆனால், அதற்குச் செலவிடும் நேரத்தில் அவர் பல புத்தகங்களை எழுதிவிட முடியும். புத்திசாலியான பாலகுமாரன், தன் நேரத்தை அநாவசியமாக வீணடிக்க மாட்டார்.

    Like

  18. நன்றிகள் அண்ணாகண்ணன்,//அதற்குச் செலவிடும் நேரத்தில் அவர் பல புத்தகங்களை எழுதிவிட முடியும். புத்திசாலியான பாலகுமாரன், தன் நேரத்தை அநாவசியமாக வீணடிக்க மாட்டார்//இதை பணம் உழைப்பது என்ற கருத்துடன் எழுதி இருந்தால் அதை ஏற்கச் சற்றுச் சிரமமாக உள்ளது, ஒரு எழுத்தாளரால் இயக்குனரை விட அதிகமாக (தமிழ்ச்சூழலில்) பணம் உழைக்க முடியுமா?

    Like

  19. இயக்குநராக மிளிர தமக்கு தகுந்த நிர்வாகத்திறமையும் இயக்குநருக்கேயுரிய சூட்சும புத்தியும் குறைவு என்பதால் தன் எல்லை உணர்ந்து வசனகர்த்தாவாகவும் திரைக்கதைக்கு சீன்கள் சொல்பவராகவும் தன்னை நிறுத்திக்கொண்டதாக ஒரு பதிலில் சொல்லியிருந்தார்.அன்புடன்முத்து

    Like

  20. பாலகுமாரனின் எழுத்துக்களை அந்த கால கட்டத்தில் தேடிச் சென்று படித்த பலரில் நானும் ஒருவன். அவரது திரையுல முயற்ச்சிகள் பற்றி ஓரளவு தெரிந்தாலும் இந்த பதிவில் கூறப்பட்டுள்ள பல விஷ்யங்கள் புதிது. ஒரு நல்ல‌இலக்கியவாதியை ஆன்மீகம் விழுங்கிவிட்டதோ என்று தோன்றுகிறது.

    Like

  21. வணக்கம் முத்து//இயக்குநராக மிளிர தமக்கு தகுந்த நிர்வாகத்திறமையும் இயக்குநருக்கேயுரிய சூட்சும புத்தியும் குறைவு என்பதால் தன் எல்லை உணர்ந்து வசனகர்த்தாவாகவும் திரைக்கதைக்கு சீன்கள் சொல்பவராகவும் தன்னை நிறுத்திக்கொண்டதாக ஒரு பதிலில் சொல்லியிருந்தார்.//அதையும் நான் வாசித்திருக்கின்றேன், ஆரம்பகாலத்தில் அவரே இயக்குணர் தொழில் தந்திரம் மிகுந்தது என்று சொல்லி அதை விட்டு விலகியதாக சொல்லியிருக்கின்றா. இன்னமும் சொல்லப் போனால், பந்தயப் புறா நாவலில் 'வாழ்வில் தந்திரம் மிகும்போது நேர்மை விட்டு விலகிவிடுகின்றது' என்றும் சொல்லி இருக்கின்றார்அவர் இயக்குணார் தொழில் பற்றிய விருப்பங்களில் இருந்தாலும், உதவி இயக்குணராக பணியாற்றிய காலங்கள் சலிப்புகளாலும், ஏமாற்றங்களாலுமே நிரம்பியிருந்தது குறிப்பிடத்தக்கது

    Like

  22. தலையணைப் பூக்களை எத்தனை தூரம் ப்டமாக்க முடியும் எனத் தெரியவில்லை,உதாரணமா அதில அலைபாயுதே பாடல் பற்றி எழுதியதை எந்டஹ் ஒரு இயக்குண்ர் கொம்பனாலும் காட்சிப்படுத்த முடியாது

    Like

  23. மிகவும் அருமையான தொகுப்பு…பாலகுமாரனின் பல நாவல்களை தேடித்தேடி சேர்த்து வைத்து படிக்கும் எனக்கே..இதில் பல விசயங்கள் புதிதாக இருந்தன..நன்றி நண்பரே

    Like

  24. ..இரும்புக் குதிரைகள்..இதில் க் கிடையாது. ஏன் கிடையாது என்பதற்கு நாவலில் அவரே ஒரு விளக்கம் கொடுத்திருப்பார். க்கை நீக்கிவிடவும். 🙂

    Like

  25. பாலகுமாரனை சிம்சன் குருப்-டாபே-யில் வேலை செய்யும்போது-பிரதாபசந்திரன்-வழக்கின்போது-தெரியும்.koviexpress ல் இது நம்ம ஆளு படப்பிடிப்பிற்காக அவர் சென்றுகொண்டிருந்தபோது,நானும் பயணித்தேன் .பல தகவல்களை பரிமாறிக்கொண்டோம்.அவருடைய எழுத்துக்கள்,கதைகளில் அவருடைய அன்றன்றைய நிலையையே பிரதிபலித்து வந்தது என்பதே உண்மை.அவர் நாஞ்சில் பி,டி.சாமியைபோலவோ,ராஜேஷ்குமாரைப்போலவோ,சுஜாதவைப்போலவோ ஒரே நிலைப்பாட்டுடன் எழுதுபவர் இல்லை என்பதால்தான் முதல் கதைகளால் கவரப்பட்ட வாசகர்கள் பின்னர் வந்த எழுத்துக்களால்,கதைகளால் ஏமாற்றம் அடைந்தார்கள்.அவரால் இனி இரும்புக்குதிரை,மெர்கு ரிபூக்கள் போன்ற கதைகளை தர முடியாது என்பதும் உண்மையே.மிக அழகாக பல செய்திகளை கொடுத்திருகிறீர்கள்.வாழ்த்துக்கள்.

    Like

  26. >மிகவும் அருமையான தொகுப்பு…பாலகுமாரனின் பல நாவல்களை தேடித்தேடி சேர்த்து வைத்து படிக்கும் எனக்கே..இதில் பல விசயங்கள் புதிதாக இருந்தன..நன்றி நண்பரே இனி இரும்புக்குதிரை,மெர்கு ரிபூக்கள் போன்ற கதைகளை தர முடியாது என்பதும் உண்மையே.மிக அழகாக பல செய்திகளை கொடுத்திருகிறீர்கள்.வாழ்த்துக்கள்.

    Like

  27. பாலகுமாரன் எழுதிய சிறுகதைகளின் ஒட்டுமொத்தத் தொகைநூல் ஒன்றுக்கு நான் முன்னுரைக்கக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளேன். நான் சிறுவன், எளியவன். அவர் எழுதிய புத்தகங்களின் எடைகூட இருக்கமாட்டேன். ‘இதற்குத்தானா ஆசைப்பட்டாய், பாலகுமாரா…!’ என்று சொல்லிப் பார்த்துக்கொண்டேன். ஆம், அவரேதான் ஆசைப்பட்டார்.

    முகநூலில் என் எழுத்துகளின் அறிமுகம்பெற்று தாமாக முன்வந்து என்னை உளப்பூர்வமாக வாழ்த்தினார். கவிஞரே’ என்று வாயார அழைத்தார். என் கவிதைகளில் ‘தமிழ் புதிது’ என்று பின்னூட்டமிட்டார். அவர் பின்னூட்டமிட்ட அடுத்த கணங்களில் என் முகநூல் உள்பெட்டியில் வாழ்த்துகள் குவிந்தன. ‘பாலகுமாரனே பாராட்டிவிட்டார் போங்கள்…’ என்ற வியப்புகள் பெருகின. அவர் தமக்கெட்டும் எழுத்துகளைக் கவனமாய் வாசித்து வந்தார் என்றே கருதுகிறேன். அவரால் எழுத்துகளின் நிறம் மணம் திடம் உணர்ந்து கூற முடியும். முன்னைப் பழைமைக்கும் பின்னைப் புதுமைக்கும் பாலமாகச் செயலாற்றிய மூத்தவர் அவரே.

    எழுபதுகளின் மையத்தில் நான் பிறந்தேன். அன்று நான் சிசுவாய்ச் சுருண்டிருந்தபோது பாலகுமாரன் தமிழ்க் கதையுலகில் புயலாய்ச் சுழன்றடித்துக்கொண்டிருந்தார். எண்பதுகளின் மையத்திலிருந்து நான் கதைகள் வாசிக்கத் தொடங்கினேன். அநேகமாக என் பதின்மத்தின் அகவைகளில் சிறுகதைகளை வாசித்துப் பழகிக்கொண்டிருந்தபோது பாலகுமாரன் முழுமையான ஆகிருதியாய்த் தமிழ்ச் சமூகத்தின்முன் பேருருப் பெற்றுவிட்டார். நாயகன் திரைப்படத்திற்கு எழுதிவிட்டார். ஆனந்தவிகடன் ‘பச்சை வயல் மனதினைத்’ தனி இணைப்பிதழாக வெளியிட்டுத் தன் வாசகப் பரப்பைப் பெருக்கிக்கொண்டது. வார இதழ்களிலெல்லாம் பாலகுமாரனின் தொடர்கதைகள். அவர் எழுதும் எழுத்தைப் படித்துத் தமிழ்நாட்டு இளையோர் பட்டாளம் உன்மத்தமடைந்து உள்ளம் நெகிழ்ந்து கிடந்தது. முக்கியமான காலகட்டமொன்றின் சமூக மாந்தருக்குக் காதல், இல்லறம், வாழ்க்கை, மனச்செயற் களங்கள், மனிதக் கீழ்மைகள் மேன்மைகள் என மாய்ந்து மாய்ந்து கற்பித்தார். பாலகுமாரன் எழுத்துகளின் சுவையுணர்ந்து கற்றவர்கள் அவரை மானசீகமாகக் கைதொழுதனர். ‘நான் வாழ்க்கையில் எதையுமே சாதிக்கலங்க… படிச்சு முடிச்சதும் வேலைக்குப் போனேன், நல்லபடியாக் கல்யாணம் பண்ணிக்கிட்டேன், பிள்ளைகளைப் பெரிய படிப்பு படிக்க வெச்சு வேலை வாங்கிக்கொடுத்து கல்யாணம் செஞ்சுவெச்சேன். வேற எதையுமே நான் உருப்படியாச் செய்யலயே…’ என்று தவித்து நின்ற இல்லறத்தாரிடம் ‘நீரே சாதனையாளர். நீர் செய்தவை என்ன, எளிய செயல்கள் என்றா நினைத்தீர்…. அல்ல, அவை மகத்தான செயல்கள். அரும்பெருங் காரியங்கள். இந்தக் கடமையாற்றலே பெருந்தவம்’ என்று தம் எழுத்துகளின் வழியாகப் புரியவைத்தார்.

    நான் கணையாழி என்ற இலக்கியப் பத்திரிகை மூலம் நவீன கவிதையுலகில் அறிமுகமானேன். அதற்கும் முன்னே வார இதழ்களில் நான் எழுத விரும்பிய கவிதைகளுக்கு அந்நியமாய்ப் போராடிக்கொண்டிருந்தேன். எனக்குக் ‘கணையாழி’ என்ற பத்திரிகை இருப்பதைத் தெரிவித்தது பாலகுமாரனின் தன்னனுபவக் கட்டுரைகள்தாம். அவர் சுப்ரமணியராஜு என்பவரோடு கணையாழி கவிதைக் கூட்டங்களில் புடுபுடு என்று ஈருருளியில் ஒலியெழுப்பியபடி தெனாவட்டாக வந்து பங்கெடுத்ததையும் விவாதங்களில் அனல் தெறிக்கப் பேசியதையும் எழுதியிருந்தார். விவாதம் முடிந்து வெளியே புகைக்குழல் கருக கருக பேசித் தெளிந்தவற்றைக் கூறியிருக்கிறார்.

    அங்கே அறிமுகமான ஞானக்கூத்தன் அவர் தோளில் கைபோட்டபடி சொல்லிக்கொடுத்தவை எண்ணற்றவையாம். எங்கே கணையாழி என்று தேடத்தொடங்கினேன். அப்பொழுதுதான் கணையாழியின் விநியோக உரிமை கல்கி குழுமத்திற்குக் கிடைத்து, அதன்மூலம் நான் வசித்த கடைமடை ஊரின் புத்தகக் கடைகளுக்குச் சில பிரதிகள் வந்து சேர்ந்திருந்தன. கண்பட்டவுடனே கணையாழியைக் கைப்பற்றினேன். என் இலக்கிய உலகத்திற்குக் கதவுகள் திறந்துகொண்டன. கணையாழிக்குக் கவிதைகள் அனுப்பினேன். அடுத்த இதழில் பிரசுரமாயிற்று. கணையாழி கவிதைகளால் அதே ஞானக்கூத்தனின் அன்பைப் பெற்றேன். ஒருமுறை ஞானக்கூத்தனுக்கு என் புதிய வீட்டில் விருந்தளித்தபோது, ஏனோ நான் பாலகுமாரனை நினைத்துக்கொண்டேன்.

    பாலகுமாரனின் இளமையில் பெரிய நட்சத்திர எழுத்தாளராக சுஜாதா புகழ்பெற்றிருந்தார். பத்திரிகை நிறுவனமொன்று அளித்த மதுவிருந்தொன்றில் சுஜாதாவுடனான உரையாடல் ரசாபாசமாகி அவரிடமே ‘நீ என்ன பெரிய எழுத்தாளனா… உன்னையே முந்திக் காட்டறேன் பார்’ என்று சவால் விட்டதாக பாலகுமாரனே எழுதியிருக்கிறார். சுஜாதா இதையெல்லாம் பார்க்காதவரா… ‘விட்ருங்க… பெரிதுபடுத்த வேண்டாம்’ என்று கூறியதையும் பாலகுமாரன் நன்றியுடன் பதிவு செய்திருக்கிறார். ஆனால், அந்தச் சூளுரைக்கும் பாலகுமாரனுக்கும்தானே மல்யுத்தம். சபதத்தை நிறைவேற்றியும் காட்டினார். அது ஒரு காலம், கனாக் காலம் ! கமல்ஹாசனைக் கவிஞர் புவியரசுடன் நான் சந்திக்கும் வாய்ப்பமைந்தபோது எழுத்துலக நட்சத்திரங்கள் பற்றியும் பேச்சு வந்தது. கமல்ஹாசன் ‘பாலகுமாரன் எழுத்துலக சூப்பர் ஸ்டார்’ என்று சொன்னது நினைவிருக்கிறது. நான் இவற்றையெல்லாம் நினைவில் தொகுத்துச் சொல்கின்றேனே அன்றி, இவர்கள் எல்லாருமே ஒரு மரத்துப் பறவைகள்தாம். பிற்பாடு என் கவிதைகளால் சுஜாதாவின் அன்பைப் பெற்றேன். பிற்பாடு பாலகுமாரனின் மனத்துக்கும் அணுக்கமானவனானேன். இவ்விருவரின் அன்பையும் ஒருசேரப் பெற்றுவிட்டேன் என்பதில் எனக்குப் பேருவகைதான்.

    அய்யனிடமிருந்து எனக்கு அவருடைய கதைத் தொகுதிகள் வந்தன. அவற்றில் அவருடைய கையெழுத்தைக் கண்ட என் மனைவின் தாயார், என் அத்தையார் கண்களில் நீர்தளும்ப நின்றார். அவர் ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியை. தம் வாழ்க்கைத் துயர்களுக்கு மருந்தாக பாலகுமாரனின் கதைகளில் மூழ்கியவர். அவற்றிலிருந்து போராடும் உரம் பெற்றவர். அந்தக் கண்ணீரின் அடர்த்தி எனக்குத் தெரியும்.

    இலக்கியத்தில் மேலும் மேற்செல்லலாமா என்ற குழப்பம் என்னைத் தீண்டியபோது பாலகுமாரன் தெளிவுபடுத்தியிருக்கிறார். எழுத்து என்பது வரம், அதை நலங்கெடப் புழுதியில் எறியத் தகாது என்று அவரைப் பார்த்துக் கற்றேன். சென்னையின் தெருக்களில் கால்கடுக்க நடந்து திரிந்துவிட்டு இருப்பூர்தியில் ஊர் திரும்பியபோது ‘இரவல் கவிதை’ என்ற புத்தகத்தைப் படித்தேன். அந்தக் கதையிலும் என்போல் பரிதவிக்கும் இளைஞன் வருவான். அவனுக்கும் காதல் வரும். அவற்றோடு அவன் படாதபாடுறுவான். அதே புத்தகத்தில் ‘ஒருநாள் போதுமா ?’ என்றொரு குறும்புதினமும் இருந்தது. மனைவியோடு அவனுக்கு நேரும் ஊடல்பாடல்களும் காதலும் கண்ணீரும் வாழ்க்கைப் பூசல்களுமே களம். எதிர்காலம் குறித்த நல்ல கனவை அந்தக் கதை எனக்குள் விதைத்தது என்பதை நன்றியுடன் நினைவுகூர்கிறேன்.

    என் நகரை ஐந்தாம் மாடியிலிருந்து இரவில் காணும்போதெல்லாம் மெர்க்குரிப் பூக்கள் என்ற சொற்றொடர் தோன்றாமல் போகாது. மெர்க்குரிப் பூக்களும் இரும்புக் குதிரைகளும் கரையோர முதலைகளும் தொடர்கதைகளுக்கென்று மேன்மையான இலக்கியத் தகுதிகளை நிறுவியவை.

    திருவல்லிக்கேணியின் ஆடை ஏற்றுமதி நிறுவனமொன்றில் ‘கோட்டா சான்றிதழ்களை’ வாங்குவதற்காக நாள்கணக்கில் வாரக்கணக்கில் காத்தமர்ந்திருக்கிறேன். என் எதிரில் முறையே இருபது, முப்பது, நாற்பது வயதுகளுடைய தட்டச்சு மகளிர் தலைநிமிராமல் பணியாற்றிக்கொண்டிருப்பர். அவர்கள் ஒவ்வொருவரும் அன்னாரின் பாத்திரங்களாகவே எனக்கு அடையாளப்பட்டனர். அந்த அலுவலகச் சூழலை அவர் கதைகளில் பலமுறை படித்துணர்ந்திருக்கிறேன். இந்தச் சரிபார்ப்பில் ஈடுபட்டதால் எனக்கு நாள்கணக்கில் நேரம் போனதே தெரியவில்லை. என் காத்திருப்பால் வியந்த அந்நிறுவன முதலாளி தம் ஏற்றுமதியைத் தள்ளிவைத்துவிட்டுத் தமக்குரிய அமெரிக்க ஏற்றுமதிக்கான ‘கோட்டா சான்றிதழை’ நான் பிரதிநிதியாய்ச் சென்ற திருப்பூர் நிறுவனமொன்றுக்கு விற்க முன்வந்தார். அந்த நல்வெற்றியில் அவருக்கும் நூதனப் பங்குண்டு.

    பாலகுமாரனின் சிறுகதைகள் என்பவை தனித்த உலகம். பாலகுமாரன் ஏன் புதினங்களுக்குள் நுழைந்தார் என்பதற்கான விடை அவற்றுள் உள்ளது. ஒவ்வொரு கதையும் உணர்ச்சிகளின் அடர்த்தியான பொதிகள். இருந்திருந்தாற்போல் சந்நதம் பொங்கிவர சாமியாடுவார்களே, அப்படிப்பட்ட விவரிப்பும் முடிப்பும். அவற்றில் துலங்குவது எழுபது எண்பதுகளின் தூய்மையான உலகம். நாம் அனைவருமே எண்பதுகளின் காதலர்கள். அதுதான் நம் சமூகத்தில் பெண்கள் தலையெடுக்கத் தொடங்கிய பிள்ளைப் பருவம். அன்றைய மெட்ராஸ், மாநகரத்தின் உயர்குணங்களைத் தண்மையோடு வெளிப்படுத்திய நிதானமான ஊர். அங்குலவிய மனிதர்கள் மாற்றுக் குறையாத மனித மாண்புகளின் பிரதிநிதிகளாக நடமாடியவர்கள். அவர்களே பாலகுமாரனின் கதை மாந்தர்கள். நம் விருப்பத்திற்குரியவர்கள். எப்படிப்பார்த்தாலும் அவர்கள் நமக்கும் தாய் தந்தைகள்.

    வெட்கத்தாலும் தனக்குள் அடங்கும் தன்மையாலும் சாதியிறுக்கக் கட்டுமானங்களாலும் காதல் என்பது சுமார் முப்பதாண்டுகளுக்கு முன்வரையில், இந்தச் சமூகத்தில் அடக்கி ஒடுக்கியே வைக்கப்பட்டிருந்தது. பெரும்பாவம் என்று நம்ப வைக்கப்பட்டிருந்தது. இலக்கியங்களும் கலைகளும் அதற்கு ஆதரவாக எத்தனையோ எடுத்தியம்பியிருப்பினும் காதலுக்கு எதிரான சமூக நடத்தை கடும் அடக்குமுறையைத்தான் கட்டவிழ்த்துவிட்டது. அன்றைய புதிய தலைமுறை அதற்கெதிராக அங்கொன்றும் இங்கொன்றுமாகப் போராடிக்கொண்டிருந்தது. திரைப்படங்களில் காதலுக்கு ஆதரவாகப் போதிக்கப்பட்டவை யதார்த்தத்தோடு பொருந்தியிருக்கவில்லை. முரண்கள் முற்றி முடிவொன்றுக்கு வரவேண்டிய முகூர்த்தம் நெருங்கியிருந்தது. கட்டுகளை விடுவிக்க ஏதோ ஒரு திசையிலிருந்து பலமான சொடுக்கி (Trigger) ஒன்று தோன்றாதா என்னும் நிலை. பாலகுமாரனின் கதைகள் அந்தச் சொடுக்கியாக, சாட்டையாகச் செயல்பட்டன என்பதே அவற்றின் வரலாற்றுப் பங்களிப்பு. ‘ஓ. நீ பாலகுமாரனெல்லாம் படிக்கிறாயா…?’ என்பது மூத்த தலைமுறையிடமிருந்து எழுந்த பயமான கேள்வி. இனி சொல்லுக்கு அடங்கமாட்டார்கள். தம் விதியைத் தாமே எழுதிக்கொள்ளும் வழியில் பயணப்பட்டுவிட்டார்கள். பாலகுமாரனைப் படித்த இளைய தமிழகம் தத்தம் மனங்கள் சொன்ன வழியில் நேர்கொண்டு நிமிர்ந்து நடந்தது. இந்த மாற்றத்தைக் காலம் ஏற்றுக்கொண்டுவிட்டது.

    இன்று காதல் திருமணங்கள் பெற்றோர் வாழ்த்துகளோடு சரிவிகிதத்தில் நிகழ்கின்றன. ஏற்பாட்டுத் திருமணங்கள் சாதி வேலி தாண்டியும் நடத்தப்படுகின்றன. பழைய கட்டுமானங்கள் முற்றாகத் தகர்ந்துவிட்டன என்று சொல்ல முடியாதுதான், என்றாலும் தொடரும் வழக்கங்கள் பொருந்தாப் போக்குகளை ஒழியச் செய்துவிடும் என்றே நம்புகிறேன். இந்த இடத்திற்கு நாம் வந்து சேர ஓர் எழுத்தாளர் தம் எழுத்துகளின் வழியாகக் கனவு கண்டார், தொடர்ந்து விமர்சனங்களுக்கு அஞ்சாமல் எழுதினார், தாம் கூறவந்ததை உலகேற்கச் செய்தார், அவற்றை இன்று நடைமுறையாகக் காண்கிறார். இந்தப் பார்வையில் நாம் பாலகுமாரனைப் பார்க்கவேண்டும் என்று சொல்வேன். ஓர் எழுத்தாளரால் விளைய வேண்டிய உச்சபட்ச நல்விளைவு, சமூக மாற்றம் இதுதான்.

    ஆண்கள் உணரும்படி பெண்மன ஆழத்தை பாலகுமாரன் அளவுக்கு விவரித்தவர்கள் மிகக் குறைவே. ‘நெட்டி பொம்மைகள்’ நீலாவையும் ‘யாதுமாகி நின்றாய் காளீ’ சவீதாவையும் படித்த ஆண் தனக்குள் மனங்குமையாது அமைந்துவிட முடியுமா ? இப்பேருலகின் மனித ராசியின் மாபெரும் மற்றொரு பாதி அல்லவா அவர்கள். ஈன்று புறந்தந்து அமுதூட்டும் அமிர்தவர்ஷினிகள். அவர்கள் நிரந்தமாகத் தாய்மையின் கருணையோடு நோக்குகிறார்கள். தாயுள்ளத்தோடுதான் உயிர்களை நேசிக்கிறார்கள். எல்லா ஆண்மைய நிமித்தங்களையும் எதிர்கொள்கிறார்கள். அந்தப் பெருமையைப் புரிந்துகொள்ளும் ஆண், பெண்களை மதிப்பான். நிபந்தனையின்றி நேசிப்பான். காப்பான். ஆண்களை அந்தப் புள்ளிக்குத் தம் கதைகளால் நெம்பித் தள்ளியவர் பாலகுமாரன். தனக்குள் மார்பு பெருகிச் சுரந்து தாயாகினால் மட்டுமே அப்படி எழுத முடியும்.

    சொற்களின் சொற்றொடர்களின் நுண்ணிய பொருள்களை உணர்வதில் எனக்குத் தீராத விருப்பமுண்டு. மொழித்தொடர்களில் நாம் அறிந்தேயிராத வேறு புதையல்கள் அப்படித்தான் புதைந்துள்ளன. அவற்றை உணர உணர மொழியும் மொழியால் கட்டப்பட்டுள்ள நம் சிந்தனைத் திறமும் ஒருபடி உயர்கிறது என்பது என் நம்பிக்கை. ஸ்திரீலோலன்’ என்னும் கதையை, கதைத் தலைப்பைப் பார்த்துப் புன்முறுவலோடு படிக்கத் தொடங்குகிறோம். பெண்களுக்காக அலைபவன் என்பதைத் தலைப்பின் பொருளாகப் புரிந்துகொள்கிறோம். கதைப்படி அந்நாயகன் பெண்களால் தர்க்கத்திற்குப் பொருந்தாத சூழ்நிலைகளால் அவதியுறுவதைக் காண்கிறோம். ஸ்திரீகளால் அவன் தகைமைகெட அல்லல்படுகிறான். ஸ்திரீ லோலன் என்பவன் பெண்களால் அவதியுறுகின்றவன். அந்த ஏளனத் தொடருக்குள் பொதிந்திருப்பது அழுத்தமான துக்கத்தின் பொருள். சொற்றொடரை நீட்டுவதில் பொருளின் மற்றொரு நிழல்பக்கம் நமக்குப் புலப்படுகிறது.

    கருவைக் கலைப்பதற்காகத் தன் அண்ணன் வீட்டுக்கு வந்து குமைந்து நிற்கும் ராஜியைச் சுடுசொற்கள் பொசுக்குகின்றன. கலைத்துவிட்டு வா என்றனுப்பும் அவள் மாமியாரும் கணவனும் இரக்கமற்றவர்களாகத் தோன்றுகிறார்கள். ஏச்சும் பேச்சுமான மனத்தோடு கலைப்புக்கூடங்களுக்கு வேண்டா வெறுப்பாக அழைத்துச் செல்கிறான் தமையன். அங்குள்ள குடும்ப மருத்துவர் மறுத்து, அதற்கென்று உள்ள மனைக்கு அனுப்புகிறார். அங்கு பெண்மைக்கு எதிரான முள்கேள்விகளை அடுக்குகிறாள் மருத்துவச்சி. எதுவும் ஒவ்வாமல் கலைக்காமல் உள்ளம் வெதும்பிப் புகுந்தகம் திரும்பும் ராஜியிடமிருந்து எந்தச் செய்தியுமில்லை. அங்கே சென்று பார்த்தால் அந்த அலைக்கழிப்பில் கரு தானாகக் கலைந்துவிட்டிருக்கிறது. ஏவிய மாமியார் தன் கொடுமை பொறுக்காமல் அழுகின்றாள். ஆயிரம் பரிகள் பூட்டிய தேரொன்றில் பவனி வரும் சூரியனின் ஒளிரும் கதிர்களைக் காண்பதற்காகக் கருவான அந்தப் புத்துயிர் தன் வருகை பொறாத இவ்வுலகை எண்ணித் தானாகத் தன்னை அழித்துக்கொள்கிறது…! இந்தக் கதையைப் படித்த பிறகு என்னால் தாளமுடியவில்லை. மௌனமான கதாபாத்திரம் ஒன்றைச் சுற்றி கண் நிரம்பும் உணர்வெழுச்சிகளை உருவாக்க முடியும் என்பதற்குச் இந்தக் கதை – செங்கல் – சான்று.

    பாலகுமாரனின் ஒவ்வொரு கதையைப் பற்றியும் விரிவாக எழுதவேண்டும் என்றே பரபரக்கிறேன். எல்லாக் கதைகளும் எதிர்பாராத திசையிலிருந்து ஒரு திறப்பை ஏற்படுத்த வல்லவை. புதிதான களத்திலிருந்து பொதுவான மனமொழியின் வழியாக அரிதான தளத்திற்குள் நுழைந்துவிடுபவை. அதுவே வாசிப்பின் இன்பமும் பயனும். சுமார் முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட அவருடைய பல கதைகள் இன்றும் அவற்றுக்கே உரிய புதுமை மங்காமல் மின்னுகின்றன. இன்றும் இவற்றோடு உறவுகொள்ள வாசகர்களுக்கு அதேயளவு தேவையிருக்கிறது.

    பாலகுமாரன் என்னும் பெருங்கதைகளின் ஆசிரியர், பெருமக்கள் திரளால் ஆசானாக ஏற்கப்பட்டவர் – மீது இலக்கியப் புலத்தில் முன்னும் பின்னுமான விமர்சனங்கள் தொடர்ந்து முன்வைக்கப்பட்டன. அவருக்கு எதிரான விமர்சனங்களுக்குப் புகழ்க்காய்ச்சலே முதன்மைக் காரணமாக இருக்கவேண்டும். எழுத்துலகில் அன்னார் பெற்ற புகழை இனியொருவர் பெறுதல் குதிரைக்கொம்புதான். மக்களால் ஏற்றுக் கொண்டாப்பட்டதைத்தான் புகழ் என்கிறேன். வேண்டுமானால் அங்கங்கே குழுக்குழுவாகச் சிற்றரசுகளை உருவாக்கிக்கொள்ளலாம்.

    எழுத்துக்குத் தரம்பிரிப்பவர்கள் எழுத்தாளர்களின் எழுத்தாளர்களோடு போராடிக்கொண்டிருக்கிறார்கள். வாசக மனத்தில் தோற்றுவிக்கப்படும் விளைவுகளை அவர்கள் எப்போதும் கருத்தில் கொண்டதேயில்லை. அதனால்தான் இலக்கிய மதிப்பீடுகள் ஒவ்வொரு பத்தாண்டுகளுக்குப் பிறகும் தகர்கின்றன. ஒரேயொரு எழுத்தாளர் முப்பது நாற்பதாண்டுகளுக்குத் தாக்குப் பிடிக்கிறார். பாலகுமாரன் தம் எழுத்துகளின் வழியாக மனிதர்கள் மனிதர்கள் மனிதர்கள் என்றே மழையாய்ப் பொழிந்தார். மழை பொழிந்ததுபோல் வெள்ளமாக எழுதும் எழுத்தாளர்கள் அடிக்கடி தோன்றமாட்டார்கள். அவர்கள் ஒரு சமூகத்திற்குக் கிடைத்த அபூர்வப் பரிசுகள்.

    சுபமங்களாவுக்கு அளித்த பேட்டியொன்றில் பாலகுமாரன் ‘தாம் இன்னும் நூறு ஆண்டுகளுக்கு வாசிக்கப்படுவேன்’ என்று கூறியதாக ஞாபகம். அவர் கூற்று உண்மையாவதற்கான எல்லாத் தடயங்களையும் பார்க்க முடிகிறது. இன்று தமிழ் எழுத்துகள் அசுர வேகத்தில் எழுதப்படுகின்றன், அதைவிடவும் மின்னல் வேகத்தில் வாசிக்கப்படுகின்றன. உடனடியாக இணையத்தில் ஏற்றுவதால் உலகத் தமிழர்கள் அனைவரையும் அது நொடிப்பொழுதில் சென்று சேர்கிறது. அச்சு ஊடகக் காலத்தில் செங்கோல் தாங்கியவர்கள் தம் எழுத்துகளில் காட்டிய நிதானமும் பொறுப்பும் மேதைமையும் இன்று அருகிப் போய்விட்டன. பொரி கடலையைப் போன்ற உடனடி எழுத்துகள் பெருகிவிட்டன. இந்தப் போக்கு அப்படியே தொடரும் அல்லது இன்றைவிடவும் கீழிறங்கும் என்றே தெரிகிறது. ஏனென்றால் அது எப்போதும் அப்படித்தான் ஆகியிருக்கிறது. அவ்வாறான ஒரு நிலைமையில்தான் நம் முன்னோர்களின் எழுத்துகளுக்கு மற்றொரு மதிப்பான கவனிப்பு கிடைக்கவிருக்கிறது. எழுத்தை, அது எழுதப்பட்ட காலத்தில் வாசித்துப் பயன்பெற்றதைக் காட்டிலும், பிற்காலச் சுற்றில்தான் அதன் முழுமை உணரப்பட்டது என்பதை வரலாறு காட்டுகிறது.

    ஐயனே… நீங்கள் இயற்கை எய்திவிட்டீர்கள் என்பதை ஏற்க முடியவில்லை. தமிழ்கூறு நல்லுலகின் நினைவுள்ளவரை எங்கள் நெஞ்சத்தில் என்றென்றும் வாழ்வீர்கள் !

    written by Magudeswaran on his facebook

    Like

Leave a reply to அருண்மொழிவர்மன் Cancel reply

Website Powered by WordPress.com.

Up ↑