நீங்களுமா சாரு நிவேதிதா அல்லது கருத்து சுதந்திரம்

சமூக பிரச்சனைகள் பற்றி அடிக்கடி தனது கருத்துகளை வெளிப்படையாக சொல்லிபருபவர் எழுத்தாளர் சாரு நிவேதிதா. விஜய் டிவியில் இடம்பெறும் நிகழ்வுகளில் அடிக்கடி இவர் கலந்து கொள்ளுபவர் இவர். அப்படி இவர் கலந்து கொள்ளும்போதெல்லாம் இவரை அறிமுகப்படுத்த “மனதில் பட்டதை பட்டவர்த்தனமாக சொல்லக்கூடிய எழுத்தாளர் சாரு நிவேதிதா அவர்கள்” என்று நீட்டி முழக்கி சொல்லப்படுவது உண்டு. காஷ்மீர் பிரச்சனை பற்றி (அஸாதி அஸாதி), சட்டக் கல்லூரி கலகம் பற்றியும் வேறு விடயங்கள் பற்றியும் உயிர்மையில் இவர் எழுதிய அரசியல் கட்டுரைகள் பலத்த கவனத்தை பெற்றவை. ஆனால் இலங்கை பிரச்சனை பற்றி இவர் அண்மையில் பெரிதாக எதையும் எழுதவில்லை. எனக்கு தெரிந்தவரை 6 மாதங்களுக்கு முன்னர் இணையத்தில் எழுதப்பட்ட ஒரு கட்டுரையை தவிர ஈழப்பிரச்சனை பற்றிய எந்த பதிவும் இவரால் மேற்கொள்ளப்படவில்லை (குறிப்பாக கடந்த இரண்டாண்டுகளில்). இந்த நிலையில் இன்று ”இலங்கையில் இருந்து” என்ற தலைப்பில் கொழும்பில் இருந்து தருண்யன் என்பவர் எழுதிய கடிதம் இவரது வலைத்தளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. இதுவரை சாருவின் எதிர்வினை அல்லது பதில் இடப்படவில்லை. இந்த நிலையில் சாருவின் கருத்தும் இதுவா அல்லது கருத்து சுதந்திரத்தின் அடிப்படையில் தருண்யனின் பதிவிடப்பட்டு இனி அது பற்றிய எதிர்வினை ஆற்றப்படுமா என்ற கேள்வி எழுகின்றது.

தருண்யன் முன்வைக்கும் கருத்துகள் தர்க்க ரீதியில் பலமானவை। ஆனால் அந்த தர்க்கங்கள் இரண்டுதரப்பாரையும் நோக்கி எழுப்பப்பட்டவையா என்ற கேள்வி எழக்கூடிய வகையில் அவரது கடிதம் அமைந்துள்ளது. இலங்கையில் நடைபெரும் பிரச்சனைகளை தமிழகத்தில் இடம்பெறும் உணர்ச்சியூட்டும் பேச்சுகள், கலகங்கள், எதிர்ப்புகள் போன்றவற்றால் மட்டும் நிறைவேற்றி வைக்கமுடியாது என்பது உண்மை. ஆனால் செய்தி தணிக்கை பலமாக அமுல் படுத்தப்பட்டுள்ள இலங்கையில் இடம்பெறும் பிரச்சனைகள் நோக்கி தமிழக, இந்திய மற்றும் உலக மக்களின் கவனத்தை ஈர்க்க இது போன்ற போராட்டங்கள் உதவும் என்பதில் எந்த ஐயமுமில்லை. எனது அலுவலகத்தில் முன்னர் ஒரு சிங்களவர் பணிபுரிந்து வந்தார். அவர் பிறநாடுகளை சேர்ந்த சக ஊழியர்களிடம் எல்லாம் இலங்கை சிங்களவர்களுக்கு மட்டுமே சொந்தமான நாடு. அங்கு வாழும் எல்லா தமிழர்களும் தேயிலை தோட்டங்களில் பணிசெய்ய இந்தியாவில் இருந்து அழைத்து வரப்பட்டவர்கள், வட பகுதியில் நடைபெறும் எல்லா கற்பழிப்புகளையும் தமிழர்களே செய்துவிட்டு ராணுவம் மீது போட்டு விடுகின்றனர் என்கிற வகையில் உண்மைக்கு முற்றிலும் புறம்பான பல செய்திகளை கூறியிருந்தார். இதையே அவர்களும் பரவலாக நம்பி வந்தனர். அண்மையில் எமது அலுவலகத்தை அண்டிய பகுதிகளில் தமிழ் இளைஞர்கள் இலங்கையில் நடைபெறும் இன அழிப்பு பற்றியும் சுதந்திரத்துக்கு பின்னர் இலங்கையில் தமிழருக்கு நடைபெற்ற அநீதிகள் மற்றும் இலங்கை வரலாற்றில் தமிழரின் பங்கு போன்றவற்றை வழங்கியபோது போர்த்துக்கீஸ், கயணா, யூத இனங்களை சேர்ந்த சிலர் தாம் முன்னர் தெரிவித்த கருத்துகளுக்காக என்னிடம் மன்னிப்பு கேட்டனர். இது போன்ற விளைவுகளை வித்திட்டு வைத்தது தமிழகம் தரும் தார்மீக ஆதரவுதான்.

நமக்கான கரிகாற் பெருவளவனை தேடுகின்றோமா என்றும் மக்கள் அழிவை தடுக்க வேறேதும் மார்க்கங்கள் இல்லையா என்றும் கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன. ஆனால் இலங்கையில் இப்போது உள்ள நிலையை சற்று பார்க்கவேண்டும். கடந்த சில வாரங்களாக வைத்தியசாலைகளையும், அம்புலன்ஸ் வாகனங்களையும் சேதமாக்கியுள்ளது அரசாங்கம். அது தவிர பாதுகாப்பு வலயம் என்று சொல்லப்பட்ட இடங்களை நோக்கியும் தொடர்ச்சியான குண்டு தாக்குதல்கள் நடைபெற்றுள்ளன. இப்படியான நிலையில் மக்களின் மீது தொடர்ச்சியாக செய்யப்படும் இன அழிப்பு நடவடிக்கைகள் பற்றி ஏன் எந்த நாடும் இதுவரை குரல் எழுப்பவில்லை?. அவர்களுக்கான அடிப்படை மருத்துவ உதவிகளாவது சரியாக நடைபெறுகின்றதா என்ற கேள்விகளுக்கெல்லாம் சரியான பதில்கள் இருக்கின்றதா?. மக்களை விடுதலைப்புலிகள் மனித கேடயங்களாக பயன்படுத்துகின்றனர் என்ற குற்றச்சாட்டு பலரால் முன்வைக்கப்படுகின்றது. இதே சமயம், இலங்கை ஒரு சிங்கள நாடு, சிறுபான்மையினர் எமக்கு கீழே வாழலாம் என்றும், துட்ட கைமுனுவின் காலம் மீண்டும் திரும்பிவிட்டது என்றும் சிங்கள தலைவர்கள் பகிரங்கமாகவே அறிக்கை விட்டுக்கொண்டிருகின்ற நிலையில் விடுதலை புலிகள் அனுமதித்தால் கூட மக்கள் ராணுவ கட்டுப்பாட்டுக்குள் போவார்களா என்ற கேள்விக்கும் யாரிடமும் பதில் இல்லை. ராணுவ கட்டுப்பாட்டு பிரதேசத்தில் அண்மையில் தமிழ் இளைஞர்களும் யுவதிகளுமாக நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டிருக்கின்றதாக சிங்கள மக்களே குற்றம் சுமத்தியுள்ள நிலையில் ராணுவ கட்டுப்பாட்டுக்குள் வரும் மக்களுக்கு என்ன சதவீதம் பாதுகாப்பு அல்லது உயிர்வாழும் உரிமை வழங்கப்படும் என்பது விடையே இல்லாத வினா. போராளிகளை விடுதலைப்புலிகள் கட்டாயமாகவே போராட்டத்தில் சேர்க்கின்றனர் என்று குற்றம் சாட்டும் அதேவேளை போராளி குடும்பத்தினர் எல்லாரையுமே ராணுவம் புலிகளாகவே பார்க்கின்றது. இதில் இருக்கும் முரண் நிச்சயம் கவனிக்கப்படவேண்டும். விடுதலைப்புலிகள் போராளிகளை கட்டாயமாக/பலவந்தப்படுத்தி போராட்டத்தில் இணைத்தால் ராணுவம் அந்த போராளிகள் குடும்பம் மீது அனுதாபம் தானே காட்டவேண்டும்; அப்படியிருக்க ஏன் ராணுவம் அவர்களையும் புலிகளாகவே பார்க்கின்றது? விடுதலப்புலிகள் பாவிக்கும் எல்லா ஆயுதங்களும் ராணுவத்தினரிடம் இருந்தே பெறப்பட்டவை என்பது இலங்கைத் தமிழ் மக்கள் நகைச்சுவையாக சொல்லும் ஒரு செய்தி. அதுபோல விடுதலைப் புலிகளுக்கான மக்கள் ஆதரவும் ராணுவத்தினராலேயே அதிகரிக்கப்பட்டது என்று வருங்காலம் பதிவு செய்யும்.

(2)

ஈழப்போராட்டம் பற்றிய கருத்து சுதந்திரம் பற்றிய நோக்கிலேயே இந்த கடிதம் இருந்திருக்குமானால், இலங்கையில் கருத்து சுதந்திரம் எப்போது செத்துவிட்டது. இது பற்றி ஷோபாசக்தி, இரயாகரன் போன்றவர்கள் நிறைய எழுதிவிட்டார்கள்। நிறையப்பேர் எழுதாமல் நண்பர்களிடம் மட்டும் பேசிக்கொண்டுள்ளனர்। “எல்லாக் கருத்தையும் வளர விடக்கூடாது” என்று சிலர் சொல்லலாம், ஆனால் அதைத்தான் “எல்லாருமே” (ராணுவம், விடுதலைப்புலிகள், இதர தமிழ் குழுக்கள்) கூறுகின்றனர்। ஷோபா சக்தியின் கொரில்லா நாவலில் வரும் ஒரு பேராசிரியர் கருத்து சுதந்திரம் பற்றி அடிக்கடி கூறுவார்। ஒருமுறை பேராசிரியரின் மனைவி பற்றி ஒருவர் கருத்து தெரிவிக்க (பேராசிரியரின் மனைவியுடன் உடலுறவு கொள்வது தன் ஆசை என்று) அந்தோனிதாசன் அவரை தாக்க முற்பட பேராசிரியர் அது அவனின் கருத்து சுதந்திரம் என்று சொல்லி சமாதானம் செய்வார். பிற்பாடு அதே பேராசிரியர் தனது மனைவி இன்னொருவனுடன் உடலுறவில் ஈடுபட்டார் என்றறிந்து கொலை கூட செய்கிறார். இது பற்றி எனது நண்பன் ஒருவன் அண்மையில் சொன்னபோது பின் நவீனத்துவ இலக்கியங்களில் அடிக்கடி மேற்கோள் காட்டப்படும் ”ஆசிரியன் இறந்துவிட்டான்” என்ற ரொலான் பார்த்தேஸ் Roland Barthesன் (தகவலை தந்துதவிய டிஜே தமிழனுக்கும் அந்நியனுக்கும் நன்றிகள்) வரிகளைதான் இங்கே நினைவு கூறவேண்டும் என்றேன். பொய் சொல்லாதே என்பது ஒரு பொது அறம். ஆனால் எல்லாருமே ஏதாவது ஒரு சமயத்தில் நிச்சயமாக பொய் சொல்லியிருப்பர். அதற்காக பொய் சொல் என்பதை எவரும் அறமாக்குவது இல்லைதானே. கருத்து சுதந்திரம் என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் இருக்கின்ற அடிப்படை உரிமை. தனிமனித சுதந்திரம். அது எங்கே மீறப்பட்டாலும் அது மிகுந்த கண்டனத்துக்கும் விமர்சனத்துக்கும் உள்ளாக்கப்படவேண்டியது. இதில் ஒரு வித மாற்றுக் கருத்துக்கும் இடமிருக்ககூடாது. ஏனென்றால் கருத்து சுதந்திரம் மறுக்கப்படுகின்ற சமுதாயத்தில் தனிமனிதனின் கேள்வி கேட்கும் உரிமை மறுக்கப்படுகின்றது. அவன் அடிமையாக்கப்படுகின்றான். பாஸிஸம் தலை தூக்குகின்றது. இலங்கையில் இன்றைய யுத்த சூழலில் இப்படியான நிலை நிலவுகின்றது என்பது நடு நிலையாளர்கள், நடுநிலையாளர்கள் என்று சொல்லி வருபவர்கள், ராணுவ ஆதரவாளர்கள் மற்றும் புலி ஆதரவாளர்கள் என்று அனைவருமே சொல்லுகின்ற் குற்றச்சாட்டு. விடுதலைப் புலிகள் மீதும் இந்த குற்றச் சாட்டு நிலவுகின்றது. அதே நேரம் தமிழ் மக்கள் அனைவரையுமே புலிகள் என்று கூறி ஒரு இன அழிப்பில் சிங்கள ராணுவம் ஈடுபட்டிருக்கின்ற நேரத்தில் விடுதலைப் புலிகளை நிராகரிப் பவர்களிடம் விடுதலைப்புலிகளுக்கு மாற்றாக நடைமுறைச் சாத்தியமான வேறேதும் ஒரு தீர்வு இருக்கின்றதா என்ற கேள்வி முக்கியமானது. ஒரு சமூக அலகுக்கான மாற்றீடு உருவாகும்வரை அதை விமர்சிப்பவன் கூட அந்த அலகை ஏற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயம் இருக்கின்றது.

29 thoughts on “நீங்களுமா சாரு நிவேதிதா அல்லது கருத்து சுதந்திரம்

Add yours

 1. HiWe have just added your blog link to Tamil Blogs Directory – http://www.valaipookkal.com. Please check your blog post link hereIf you haven’t registered on the Directory yet, please do so to update your new blog posts and bring before your work to the large base of Tamil readers worldwide.Sincerely YoursValaipookkal Team

  Like

 2. உங்கள் கருத்துகள் வலிமையானவை. தருண்யனின் கருத்துக்களை நான் வன்மையாக எதிர்க்கிறேன். தினமுரசு அற்புதன் இருந்த காலத்தில் இருந்த தரமோ அல்லது நடுநிலைமயோ இல்லை. அது இப்போ வெறும் விடுதலைப் புலிகள் எதிர்ப்பு பத்திரிகையாகவே போய்விட்டது. இதற்குத்தானன்றோ அற்தன் உயிரை வீணைக் கும்பல் பறித்தெடுத்தது. தமிழ் மக்கள் நிச்சயமாக துன்பப்படுகிறார்கள். அதற்கு எல்லோரும் தங்களால் ஆன சில காரியங்களை செய்து கொண்டிருக்கிறார்கள். இதுதான் தம்மால் ஏலும். இதைத்தான் என்னால் செய்ய முடியும் என செய்கிறார்கள். தயவு செய்து இந்த தருண்யன் கள், இரயாகரன் கள், சோபா சக்தி களின் கதைகளை புறந்தள்ளி ஆகவேண்டியதைக் கவனிப்போம். தேர் இருப்பை அடைந்து கொண்டிருக்கும் வேளையிது.இவர்கள் எல்லாம் அரசு மீதும் காட்டமான அறிக்கை விடுத்து அரசை கண்டித்தால் அது ஒருவகையில் ஏற்றுக் கொள்ளலாம். மரத்தின் மேலே இருக்கின்ற குருவிச்சைகளை வெட்டும் போது கீழே இருக்கின்ற மாமரத்தின் கொப்புகள் சேதமாகத்தான் செய்யும்.அதற்காக குருவிச்சையை அழிக்காமல் இருக்க முடியாது. அது காலப்போக்கில் மாமரத்தையே அழித்துவிடும். சில விலைகள் கொடுக்கப்பட வேண்டும். அதனை ஏற்றுக்கொள்ள முடியாதுதான். ஆனால் அதுதான் உண்மையும் கூட. விதண்டாவாதக் கதைகளை பேசி வீணடிப்பதை விட விடுதைலையை விரைவு படுத்த விழைவோம் வேகமாக. தமிழரின் தாகம் தமிழீழ்த் தாயகம்.

  Like

 3. தமிழ் விரும்பிஇரயாகரன், ஷோபாசக்தி இருவரும் புலம்பெயர் இலக்கியத்தின் முக்கியமான படைப்பாளிகள். அதிலும் ஷோபா மிகப்பெரிய வாசகர் வட்டத்தை உடையவர். எனக்கும் மிகப்பிடித்த எழுத்தாளர். ஆனால் விடுதலைப் புலி எதிர்ப்ப்பு என்ற நிலையில் இருந்து தமிழ் எதிர்ப்பு என்று அரசு மாறிக்கொண்டிருக்கின்றதோ அரசு என்று தோன்றும் இன்நாட்களில் இனி என்ன என்ற கேள்வியே எழுகின்றது,ஷோபா கூட முன்பொருமுறை “நான் விடுதலைப்புலிகளை 100% எதிர்க்கிறேன், ஆனால் அரசாங்கத்தை 200% எதிர்க்கின்றேன் என்று சொன்ன நினைவு

  Like

 4. ஆனால் தமிழ் விரும்பி “மரத்தின் மேலே இருக்கின்ற குருவிச்சைகளை வெட்டும் போது கீழே இருக்கின்ற மாமரத்தின் கொப்புகள் சேதமாகத்தான் செய்யும்.அதற்காக குருவிச்சையை அழிக்காமல் இருக்க முடியாது. அது காலப்போக்கில் மாமரத்தையே அழித்துவிடும்’’இந்த கருத்தையே எல்லா தரப்பும் தம் தரப்பு நியாயமாக கூறுகின்றன… இதை ஏற்க முடியாது. இது மிகப்பெரிய அடக்குமுறை என்றே சொல்லுவேன்

  Like

 5. அருண்,’க‌ட‌வுள் இற‌ந்துவிட்டார்’ என்று கூறிய‌து நீட்ஷே.பின்னாட்க‌ளில், ‘ஆசிரிய‌ர் இற‌ந்துவிட்டார்’ என்று பிர‌திக‌ளை முன்வைத்துச் (நீட்சித்துச்) சொன்ன‌து ரோல‌ன் பார்த்.

  Like

 6. அருண்,சாரு மீதெல்லாம் இன்னமும் நம்பிக்கை வைக்கத் தேவையில்லை.அவரது வலைப்பக்கம் இப்போதெல்லாம் அவரின் புகைப்படங்களை சேமித்து வைக்க மட்டுமே தோதாய் இருக்கிறது அதிகபட்சமாய் அர்த்த ஜாமக் கதைகள் எழுதிக் குவிக்கலாம் அவ்வளவே..

  Like

 7. God is dead என்பது சமூகவியல் பரிமாணம் பொருந்தியது. spirituality என்பதுடன் பெரும்பாலும் தொடர்புபட்டது. அது தொடர்பான விவாதங்கள் இன்றுவரை முக்கியம் பெறுகின்றன. சமூகவியலின் தீர்க்கமுடியாத சிக்கல்களுக்கும் அதனுடன் தொடர்புபட்ட மதத்திற்குமான தொடர்புகளுடன் சிந்திக்க வேண்டியவை. பின்னவீனத்துவத்தின் சில வளர்ச்சிக்கட்டங்கள் spirituality என்பதுடன் தொடர்புபடுத்தப்பட்டு இதற்கான ஆரோக்கியமான விவாதத்தை இன்றும் கோருபவை. அண்மையில் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தை மையமாக வைத்து இது தொடர்பான உரையாடல் அறிவுஜீவிகளுக்கிடையில் தொடர்ந்துகொண்டேயிருக்கின்றது. ஆனால், Death of the Author என்பது இலக்கியம் சார்ந்தது. அதிலும் முக்கியமாக மொழியியல் மற்றும் பிரதியின்பம் தொடர்பானது. பிரதியின் நுகர்வின் போது மட்டுமே எம்முன் Death of the Author வந்து விழுகின்றது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு பிரதியையும் வாசித்து முடிக்கும் போது ஆசிரியனைக் கொன்றே தீர்க்கின்றார். அதை நாம் தவிர்க்கவும் முடியாது. பார்த் சொன்ன ‘ஆசிரியனின் இறப்பு’ என்பதை நான் முற்றுமுழுதாக ஏற்றுக் கொள்வதில்லை. என்னைப்பொறுத்தவரை ஆசிரியனின் இறப்புடன் நாம் பிரதியை அணுகினாலும் அதனை முடிக்கும் போது நாமே ஒருதடவை கொல்கின்றோம். 🙂 இவ்விரண்டும் அதனதன் விடயத்தில் ‘மையப்பெறுமானம்’ சார்ந்து இயங்கின அளவில் அதன் மீதான மறுதலிப்பு என்ற வகையில் மாத்திரமே தொடர்புபடுத்த முடியும் என நினைக்கின்றேன். அண்ணன் டி. ஜே சொல்கின்றபடி அவ்வகையில் மாத்திரமே நீட்சி என்ற அளவிலும் அணுக முடியும் என நினைக்கின்றேன். -அந்நியன்

  Like

 8. ஈழவன் வணக்கம்….உணார்ச்சிவசப்பட்டு பட்டே தாழ்ந்துபோன இனம் எம் தமிழ் இனம் என்று நினைக்கிறேன். அவர்கள் வைத்த கருத்தை இவ்வளவு ஆவேசம் காட்டாமல் எதிர்வினை ஆற்றியிருக்கலாம் எனப்து எனது கருத்து

  Like

 9. அய்யனார், வணக்கம்வலைப்பதிவுகளில் நான் அதிகம் விரும்பி படிக்கும் எழுத்தாளர்களில் நீங்களும் ஒருவர். உங்கள் பதிலுக்கு நன்றி…வலையில் தொடர்ந்து எழுத தொடங்கிய பின்னர் சாருவின் எழுத்துகள் சற்று நீர்த்துபோனதுபோலவே தோன்றுகின்றன. தன்னை முன்னிறுத்திய சுய புலம்பல்களும் ஜெயமோகன் மீதான தாக்குதல்களும் இப்போது சலிப்பையே தருகின்றன. இவை எல்லாவற்றையும் தாண்டி இவரது அரசியல் கட்டுரைகள் மிக ஆழமாக அமைந்திருந்தன. அவரது அஸாதி அஸாதி கட்டுரை நான் வாசித்த நல்ல கட்டுரைகளில் ஒன்று

  Like

 10. அனாமியாக வந்து “கடவுள் இறந்துவிட்டார்”, “ஆசிரியர் இறந்துவிட்டார்” என்ற கூற்றுகளை விளக்கியவருக்கு நன்றிகள்.அந்த தகவலை உடனடியாக திருத்திவிட்டேன். ஏற்கனவே முன்னர் இட்ட பதிலிறிற்கு dj யிடம் உறுதி செய்து பதிலிடலாம் என்றிருந்தேன்… djயே வந்து விளக்கம் தந்தார்./எல்லாருக்கும் நன்றிகள்

  Like

 11. அருண் சாரு நன்றாக எழுதக்கூடியவர் என்பது உண்மைதான் ஆனால் இப்பொழுதெல்லாம் சாருவை புதிதாக படிப்பவர்களிற்குத்தான் அவரால் பாதிப்பை உருவாக்க முடிகிறது, மற்றப்படி பிம்பங்களால் வாழ்ந்து கொண்டிருப்பவரெனத்தான் எனக்கும் படுகிறது…

  Like

 12. எந்த ஒரு கருத்திற்கும் உடனடியாக எதிர்வினை ஆற்றக்கூடியவர் என்று நான் அறிந்த சாரு இங்கு எந்த எதிர்வினையும் ஆற்றாமல், அவருக்கு எழுதப்பட்ட ஒரு கடிதத்தை மட்டும் வெளியிட்டபோது அதுவே சாருவின் கருத்துவுமோ என்ற எண்ணத்தின் அடிப்படையிலேயே அமைந்த பதிவு இது.முன்னர் ஞாநி பற்றியும் இப்படி ஒரு பதிவை நான் முன்வைத்தபோது ஞாநி பக்க சார்புகளை எனக்கு ஒருவர் தெளிவாக்கினார்,கருத்துகள் மோதும்போது மட்டுமே சில தெளிவுகள் பிறக்கும்

  Like

 13. அருண், சாரு பற்றி நான் தெரிந்து கொண்டது மிக சில மாதங்களில் தான். அவரை பற்றி பெரிதாக குறிப்பிட இப்பொழுது எதுவும் இல்லை. அய்யனார் சொன்னது போல அது ஒரு புகைப்பட சேகரிப்பு தளம் தான். அவரை பற்றியும், அவருடைய காலனி விலை என்ன மற்றும் அவர் போடும் கண் கண்ணாடி என்ன விலை என்பது பற்றியே எழுத நேரம் இல்லை. தன்னை பற்றியே 24 மணி நேரமும் சிந்திப்பவர் போல் உள்ளது அவருடைய எழுத்து. மேலும் தண்ணி மற்றும் அது போல் எங்கு கூத்தடிக்கலாம் என்பது தான் அவருடைய recent updates 🙂

  Like

 14. /// இரயாகரன், ஷோபாசக்தி இருவரும் புலம்பெயர் இலக்கியத்தின் முக்கியமான படைப்பாளிகள்.///பாஸ், உங்களுக்கே இது நியாயமா படுதா? ரொம்ப ஓவரா இருக்கு!!! ஷோபா சக்தி ஓ.கே! நெஞ்சுல கைய்ய வச்சுச் சொல்லுங்க, இராயகரன் முக்கியமான படைப்பாளியா? அவரு பாட்டுக்குதன்னோட கற்பனை உலகத்துல மார்க்சேனு சஞ்சரிச்சுக் கிட்டு இருக்காரு, அவர போயிக் கூப்பிட்டு…அவரின் முக்கிய இலக்கியங்கள்ல கொஞ்சத்த எடுத்து பட்டியல் போடுங்க.. செயற்திறன் இல்லாம வெறும் வாயால கூவுற வார்த்தைகளால தோரணங் கட்டுறவங்கள ஈழத்தவர் யாரும் நம்பத் தயாரா இல்லை. மக்களுக்காக.. மக்களுக்காகன்னு பல ஆண்டுகளா சும்மா இருந்து பக்கம் பக்கமா எழுதித் தள்ளிட்டு இருக்கப் போறாங்க.. மக்களுக்காக ஒண்ணையும் கிழிக்கப் போறதில்ல..முடிஞ்சா வீடு வீடாப் போயி தமிழ் மக்களிடம் தங்கள் கொள்கைய எடுத்துச் சொல்லி ஒரு இயக்கத்த கட்டி எழுப்பச் சொல்லுங்க.. பார்த்து தமிழ்ப் பாட்டாளியும் சிங்களப் பாட்டாளியும்ன்னு ஏதாவது சொல்லி கடுப்புல இருக்கற மக்களிடம் அடி கிடி வாங்கிடப் போறாய்ங்க.ஷோபா சக்தி புலி எதிர்ப்பு பேசி அவர் புத்தகங்கள வெளிய கொண்டு வந்து, இப்ப பெரும்பான்மை ஈழத்தவர் தவிர்ந்த தமிழக மற்றும் புலம்பெயர் இலக்கிய வாசகர்களால அறியப் பட்டவரா இருக்கிறார் என்பது உண்மை தான்! அட, இவரு வித்யாசமா ஏதோ சொல்ல வாறாருங்கர குறுகுறுப்பு, விடுதலை ஆதரவா அரச சார்பா இரண்டுக்கும் இடையில சளம்பீட்டு கிடந்த உள்ளூர் அறிவுஜீவிகள, சேகுவேரா ரேஞ்சுக்கு தோப்பி போட்டு இந்திய வெகுசனப் பத்திரிகைகள்ல போசு கொடுத்தும், இந்திய தேசியவாத பத்திரிகைகள்ல பேட்டிகள் விடுத்தும் கொஞ்சம் அட! போட வச்சார். ஆண் பெண் பாலுறுப்புக்களை வெளிப்படையா எழுதறது மட்டும் ஒருத்தன சிறந்த எழுத்தாளனாக்கிடாது. இவர்கள் அரசியல் என்ன, திரட்டிய மக்கள் யார், மாற்றுக் கருத்து என்ன? கொட்டாவி விடுவதற்கே அ.மார்க்சிடம் ஆலோசனை கேட்கும் இவர்கள் என்ன செய்யப் போகிறார்கள்? எடுத்ததுக்கெல்லாம் பூக்கோ, எக்கோ என உதாரண உதார் விட்டே காலம் போய்விடும்!இறுதியா ஒரு வார்த்த, எழுதி வச்சுக்கோங்க! இவர்களால இடையில இருக்கர மக்கள் சிலரக் குழப்புர மற்றும் புத்தி சீவினு நிறையத் தத்துவங்கள, வெளிநாட்டு இசங்கள அறிய முற்படும் தமிழ்ள்ள படிக்கும் ஆர்வம் உடைய ஒரு தலைமுறை இளைஞர் கூட்டத்திற்கு மேலைத் தத்துவங்கள தங்கள் விருப்பு/வெறுப்பு முலாம் பூசி கொடுக்கும் இடைத்தரகு வேலையைத் தவிர வேறு எதுவும் செய்து விட முடியாது. இவர்களுக்குத் தமிழ் சமூகம் அயல் தத்துவங்களப் பொருத்தி சோதனை பார்க்கும் பரிசோதனைக் கூடமாத் தான் இருக்கும்.மத்தப் படி மெய்ன் மாட்டாருக்கு வந்தா, நம்ம சாரு போன்றோர், வழக்கமா, ஒரு கருத்து இருக்குன்னா அத வேணும்னே எதிர்த்து ஒரு பரபரப்பை உண்டு பண்ணி கிச்சுக் கிச்சுக் கிளர்ச்சி தரும் பணியத் தான் தங்கள் தூய எழுத்துக்கள் மூலம் கொடுப்பார்கள். கூடவே கொஞ்சம் சுய புராணமும் இருக்கும்! இது ஷோபா சக்திக்கும் பொருந்தும்!ஜெயமோகன், ஜெயகாந்தன் (போலி இடதுசாரி) போன்ற வலதுகளின் இன்னொரு extremeக்கள் தான் இவர்கள்!!!நன்றிகள்!- வெருளி

  Like

 15. நானாக நான்உங்கள் பதிவுக்கு நன்றிகள்.எனக்கும் கூட சாரு பற்றி ஆழமான பரிச்சயம் இல்லை. ஆனால் அவரது வலைப்பதிவு தொடங்கிய நாட்களில் இருந்த அவரது எழுத்தில் சில சொந்த சமாச்சாரங்கள் முக்கியம் பெறதொடங்கியது போன்ற கருத்தும் உண்டு.ஆனால் சாருவின் எத்தனையோ படைப்புகள் கட்டாயமாக கட்டாயமாக படிக்கப்படவேண்டியவை. அதுமட்டுமல்லாமல், அடிக்கடி இப்போது அவரது வாசகர் சந்திப்புகள் நடைபெறுகின்றன. இது ஒரு ஆரோக்கியமான நிலை என்றுதான் நினைக்கின்றேன். அடிக்கடி விளிம்பு நிலை வாழ்க்கை பற்றி குரல் தரும் சாரு, தந்து சந்திப்புகளாஇ மதுவுடன் நடத்துவதை வைத்து அவரை குறை கூறவும் முடியாது தானே

  Like

 16. வெருளி நீண்ட பதிலுக்கு நன்றிகள். இது போன்ற பதில்கள் எப்போதும் கருத்தை தெளிவாக்க உதவும்..இங்கே நான் இரயாகரனை முக்கியமான படைப்பாளி என்று சொன்னது அவர் தொடர்ந்து மாற்று கருத்துகளை வலுவாக முன்வைத்துவருபவர் என்றவகையில். அது மட்டுமல்லாமல் அவர் சொல்லும் கருத்துகளில் உள்ள செய்திகளும் கட்டாயம் கவனிக்கப்படவேண்டியவை.ஒர் குறிக்கப்பட்ட அமைப்பை அவர் எதிர்க்கின்றார் என்பதற்காக அவர் சொல்லும் கருத்துகளை அப்படியே நிராகரிக்கமுடியாது. அவ்ர்கள் வைக்கும் குற்ற சாட்டுகள் நேர்மையான முறையில் அணுகப்படாதவரை / தீர்க்கப்படாதாவரை மாற்றுக் கருத்துகளுக்கான தேவை வாழ்ந்துகொண்டேயிருக்கும்.ஷோபசக்தி – அ.மார்க்ஸ் உறவு, இட்னிய பத்திரிகைகளில் அவர் அடிக்ககடி தரும் பேட்டி (இந்தியா டுடேயை சொல்கின்றீர்கள் என்று நினைக்கின்றேன்)என்பவை பற்றிய தீவிரமான விமர்சனங்கள் உள்ளன. ஆனால் அதற்காக அவரை ஓரம் கட்டிவைக்கமுடியாது. அவரது சிறுகதைகளும், கொரில்லா, ம் நாவல்களும் ஏற்படுத்திய சலசலப்பு நிச்சயம் கவனிக்கவேண்டியவை. அவரது தேசத்துரோகி சிறுகதை தொகுப்பில் கதைகள் உயர் தரமானவை….எனினும் விரிவான பதிலுக்கு நன்றி

  Like

 17. அருண்மொழிவர்மன், நீங்கள் சொல்வது சரிதான். வலைப்பதிவுகளில் அவருடைய சொந்த சமாச்சாரங்கள் ஏராளம். அவரின் வாசகர் சந்திப்புகளை நான் குறை கூறுவதை விடவும், அதற்காக செலவு செய்பவர்களுக்காக தான் நான் வருத்தப்படுகிறேன். கீழே உள்ளது அவருடைய வலைப்பதிவில் இருந்து எடுத்தது “வாசகர் சந்திப்பின் மொத்த செலவு ரூ. 60,000/- அதில் எங்களுடைய அறை வாடகை, போக்குவரத்துச் செலவு என்று ரூ.10,000/- ஐ சூர்யா ஏற்றுக் கொண்டார். மீதி 50,000 குருவின் செலவு. குரு ஒரு சாதாரண மத்தியதரக் குடும்பப் பின்னணியைச் சேர்ந்தவர். பெங்களூரில் மூன்று நான்கு இளைஞர்களோடு வீட்டைப் பகிர்ந்து கொண்டு வாழும் ஒரு கல்யாணமாகாத இளைஞர். ஒரு பெரிய வர்த்தக நிறுவனம் செய்ய வேண்டிய காரியத்தை மாத சம்பளம் வாங்கும் ஒரு இளைஞர் செய்கிறார் என்றால் இலக்கியம், கலாச்சாரம் ஆகியவற்றின் மீது அவர் கொண்டிருக்கும் ஆர்வம் எத்தகையது என்று புரிந்து கொள்ளலாம். இம்மாதிரி இளைஞர்களின் மூலமே ஒரு கலாச்சாரம் செழுமை அடைய முடியும் என்று முழுசாக நம்புகிறேன்.” நானும் அவருடைய படைப்புகளை வாசித்திருக்கிறேன். இருப்பினும் எதோ ஒன்று தடை செய்கிறது அத்தனையும் ஏற்றுக்கொள்ள.

  Like

 18. //நானும் அவருடைய படைப்புகளை வாசித்திருக்கிறேன். இருப்பினும் எதோ ஒன்று தடை செய்கிறது அத்தனையும் ஏற்றுக்கொள்ள//தன்னை சற்று முன்னிலைப்படுத்துவதென்பது சாரு ஜெயமோகன் என்கிற இருவரிடமும் உண்டு. இது எழுத்தாளர்கள் பற்றி நாம் வைத்துள்ள விம்பங்களை சற்று வலுவிழக்கவே செய்கின்றது. அதே நேரம் அவருக்கு வாசகர்கள் செலவிடுவதை பெரியளவு குற்றம் சாட்ட முடியாது. ஒரு முன்னிலை எழுத்தாளனால் கூட தனக்கான அடிப்படை தேவைகளை கூட தன் சம்பாத்தியத்தால் வாங்க முடியாது என்ற நிலை இருக்கின்ற தமிழ் இலக்கிய சூழலில் இது போன்ற முயற்சிகள் ஒரு உற்சாகப்படுத்தலாகவே பார்க்கப்படவேண்டும். எந்த ஒரு எழுத்தாளனுக்கும் மானசீக வாசகன் பெரும் பலம். சடையப்ப வள்ளல், தம்பி மாமரைக்காயன் என்கிற வரலாறு இனியும் தொடரட்டும்தொடர்ச்சியான இந்த கருத்து பரிமாறல் மிகுந்த சுவையுடன் செல்கின்றது

  Like

 19. நீங்கள் முன்பே சொன்னது போல் விளிம்பு நிலை மக்கள் பற்றி எழுதும் இவர் ஏன் புரிந்து கொள்ள மாட்டார் பணத்தின் முக்கியத்துவத்தை. அவரை பற்றி எழுதி இருந்ததில் அனைத்திலும் பணம் முக்கியமாக கருத பட்டதாக எனக்கு தெரிகிறது. operate பண்ண பணம், ஆட்டோ -ல் போக யாரவது பணம் கொடுக்க வேண்டும். தனக்கு பஸ்ஸில் செல்வது பிடிக்காது என்பது போன்றவை. விளிம்பு நிலை மக்கள் பற்றி யோசிக்கும் இவரா இப்படி இருக்கிறார் என்பது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. அவருடைய எழுத்தில் அவர் மிகவும பணக்காரர் தான், ஆனால் இப்படி தன்னை பற்றி பெருமையாக மார்தட்டி கொள்ளும் குணம் சற்று எரிச்சலடைய செய்கிறது. இது முழுக்க முழுக்க என் கருத்துக்களே, இவற்றை மாற்றி கொள்ளுமாறு சந்தர்ப்பம் (?) கிடைக்கிறதா என்று காத்திருந்து பார்க்கிறேன்.உங்களுடைய பதிலுக்கும் என் நன்றிகள்.

  Like

 20. மீண்டும் ஒரு முறை நானாக நான்வணக்கம். இம்முறை நீங்கள் சொன்ன விடயங்களை / குற்ற சாட்டுகளை நான் முற்றாக ஏற்றுக் கொள்ளுகின்றேன். தனக்கு பணம் கிடைப்பது பற்றி புளகாங்கிதம் அடையும் இவர் அதே பணம் கிடையாதவர் பற்றியும் கவலை கொண்டிருக்கவேண்டும். இவரட்ரது தனி மனித இயல்பு பற்றி லிவிங் ஸ்டைல் வித்யா, டிஜே தமிழன் மற்றும் இவரது முன்னை நாள் நண்பர்கள் அப்தீன், பிரேம்-ரமேஷ் எழுதியவையை படிக்கவும்…அதே நேரம், ஆசிரியனை பாராதே, அவன் எழுத்தை பார் என்கிற சாருவின் கொஷத்தையும் பார்க்கவேண்டும் என்ற கருதையும் பார்க்கவேண்டும் என்பது என் கருத்து

  Like

 21. வணக்கம் அருண்மொழிவர்மன். கண்டிப்பாக இவரது முன்னால் நாள் நண்பர்கள் எழுதியவைகளை படிக்கிறேன். ஆம், ஆசிரியனை பார்த்தால் (அவரின் இயல்புகளை அறிந்தால்) கண்டிப்பாக இவருடைய புத்தகம் எதுவுமே என்னால் படிக்க இயலாது. 😉 மிக்க நன்றி உங்களுடைய பதிலுக்கு.

  Like

Leave a Reply to narsim Cancel reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

Website Powered by WordPress.com.

Up ↑

%d bloggers like this: