உலக ரட்சகர் ஒபாமாவும் உளுத்துப்போன தமிழர்களும்

அலுவலகத்தில் அவ்வப்போது கிடைக்கும் ஓய்வு நேரங்களிலும், ஓய்வு நேரங்களில் நூலகங்களுக்கு செல்லும்போதும் The new york times, Time, Macleans, The Economist என்கிற சில ஆங்கில இதழ்களை சற்று புரட்டிப்பார்ப்பது எனது அண்மைக்கால வழக்கம். இந்த நிலையில் பராக் ஒபாமா அமெரிக்க ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டதை தொடர்ந்து வந்த சில இதழ்களை பார்த்தபோது கட்டுக்கடங்காத அளவு கோபமே வந்தது. எந்த ஒரு இதழிலும் அதன் அட்டைப்பட செய்தி ( cover story ) பெரும் கவனத்தை பெறுவது வாடிக்கை. அதிலும் டைம், நியூ யோர்க் டைம்ஸ், மக்லீன்ஸ், நியூஸ்வீக், எகனமிக்ஸ் போன்ற இதழ்கள் வட அமெரிக்கர்களின் பொதுப்புத்தியில் கற்றோர் படிக்கும் இதழ்கள் என்று தொடர்ந்து கருதப்படுபவை.

இப்படி இருக்கும்போது சில மாதங்களின் முன்னர் வந்த நியூயோக் டைம்ஸ் இதழ் ஒன்றின் அட்டையில் பிடல் கஸ்ரோ அவரது போராட்ட கால தோழர்களுடன் ராணுவ உடை அணிந்து வாயில் சுருட்டுடன் கம்பீரமாக நிற்கும் படத்தை எதேச்சையாக பார்க்க நேரிட்டது. எனக்கு பிடித்த ஒரே புரட்சியாளன் “சே”யின் தோழனாயிற்றே, ”சே”யை பற்றியும் ஏதாவது எழுதியிருப்பார்கள் என்ற ஆவலில் இதழை புரட்டதொடங்கினேன். அட்டையில் சிறிய எழுத்துகளில் “what Obama can do to bring back Cuba to 21st century?” என்று எழுதியிருந்தது. இப்போது இருக்கின்ற அமெரிக்க பொருளாதார நிலையில் அமெரிக்காவே தடுமாறுகின்ற போது இப்படி ஒரு ஆசிரியர் தலையஙம் தேவைதானா? கூபாவின் சீரழிவுகளை நான் ஒருபோதும் ஆதரிக்கவில்லை. கூபிய போராட்டம், சே, அமெரிக்காவுக்கு அடிபணியாத 50 ஐ அண்மித்த ஆண்டு போராட்டம் இப்படியான காரணங்களால் எனக்கு எப்போதும் கூபா ஒரு பிரமிப்பாகவே இருந்தாலும் கூபாவின் இன்றைய நிலை நிச்சயமாக எலாரும் கவனத்துக்கு உள்ளாக்கப்படவேண்டியது. பாலியல் தொழில் அங்கே சட்ட விரோதம் என்று இருந்தாலும் பாலியல் தொழிலே அங்கு கொடி கட்டி பறக்கிறது. வெளிநாட்டில் இருந்து வரும் பெருமளவு சுற்றுலா பயணிகளை ஈர்ப்பவை கூபாவில் இருக்கும் பாலியல் தொழிலாளிகளும், மலிவு விலை மதுக்களுமே. இந்த நிலை முற்றாக மாறவேண்டும் என்பது உண்மைதான். ஆனால் அமெரிக்க பொருளாதாரமே அத்திவாரம் ஆட்டம் கண்டுள்ள நிலையில் அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி ஒபாமாவை ஒரு உலக ரட்சகர் போல உருவகித்து இப்படி பத்திரிகைகள் வெளியிடும் செய்திகள் அமெரிக்க மன நிலையின் அப்பட்டமான வெளிப்பாடே.

இது தவிர வெளியான வேறு சில பிரதான கட்டுரைகளின் தலையங்கங்கள்
1 What can Obama do to transform an economy that can no longer on wall street or silicon valley?
2 What Obama can do to control the deficit?
3 How the world leader Obama was welcomed in Ottawa?
4 What Obama going to do to control the tension arise in middle east?
இதை எல்லாம் படிக்கும் போதே ஒபாமாவை உலகையே மீட்க வந்த ஒரு சக்திபோல ஒரு கட்டமைப்பை முன்னெடுத்து, ஒபாமா என்கிற அமெரிக்க ஐக்கிய குடியரசின் தற்போதைய ஜனாதிபதியை ஒரு அகில உலகின் தலைவராக, ஒரு மீட்பராக உருவகிப்பது, நம் காலத்து கல்கியாக, யேசுவாக, நபிகளாக கட்டமைப்பது எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாதது.

அண்மைக்காலத்தில் பத்திரிகைகளிலும், மக்கள் வாயிலும் அதிகம் அடிபட்ட பெயர் ஒபாமாவாகத்தான் இருக்கும் என்னும் அளவுக்கு எம் சமகால வாழ்வை பெருமளவு சலனப்படுத்திய மனிதர் ஒபாமா என்பதில் எதுவித மறுப்பும் கிடையாது. மக்கள் தம்மை இலகுவாக தொடர்பு படுத்தக்கூடியதாக இருந்த அவரது பேச்சுக்களும், புஷ்ஷின் மிக மோசமான தலைமையின்கீழ் மிகப்பெரிய பொருளாதார அழுத்தத்தில் சிக்குண்டு மாற்றம் தேவை என்று இருந்த மக்களுக்கு “மாற்றம் தேவை” என்பதையே கருப்பொருளாக்கி ஒபாமா செய்த தேர்தல் பிரசாரங்களும் அனைத்து தரப்பு மக்களின் கவனத்தையும் ஈர்த்தது. தொடர்ந்து தான் போதைப் பொருள் உட்கொண்டது பற்றி மக்களிடம் கதைத்தும், நடனம் ஆடியும், கூடைப்பந்து ஆடியும் அவர் மக்கள் முன் ஏற்படுத்திய விம்பமானது மக்களுக்கு அவரை நெருக்கமானவராக உணரப்பண்ணியது. இதன் தொடர்ச்சியாக அவர் அமெரிக்காவின் முதலாவது கறுப்பின ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்படுகின்றார். இது போல கொண்டாடப்பட்ட நிகழ்வு அண்மைக்காலத்தில் அமெரிக்காவில் நடைபெற்றது இல்லை. கிட்டதட்ட 95/96 தமிழக சட்டசபை தேர்தலில் ரஜினி நேரடியாக குதித்திருந்தால் (அப்போது நிச்சயம் வென்றிருப்பார்) எப்படி ஒரு கொண்டாட்டம் இருந்திருக்குமோ அப்படி ஒரு கொண்டாட்டம். (ரஜினியை அரசியல் அணுகுமுறையில் ஒபாமாவுடன் நான் ஒப்பிடவில்லை. பிரபலம், என்கிற ஒரே தகுதியை வைத்துக்கொண்டு அரசியலுக்கு வரும் எவரையும் நான் ஏற்றுக்கொள்வதில்லை).

இனிதான் சோதனைக்காலம் தொடங்குகிறது. உடனடியாக குவண்டனாமா சிறைகளை மூடுவேன் என்றவர் இப்போது இயன்றவரை விரைவில் மூடுவேன் என்கிறார். இதில் முக்கிய விடயம் என்னவென்றால் குவண்டனாமா சிறை மூடுவதென்பது குவண்டனாமா சிறையில் கடைப்பிடிக்கப்பட்ட அணுகுமுறைகள் நிறுத்தப்படுவதாய் இருக்கவேண்டுமே தவிர, குவண்டனாமாவை மூடிவிட்டு இன்னுமொரு இடத்தில் அதே நடைமுறையுடன் கூடிய ஒரு சிறையை நிர்மாணிப்பதில் எந்தவித அர்த்தமும் இல்லை. (குவண்டனாமா சிறையால் பாதிக்கப்பட்ட கனேடிய இளைஞன் ஓமர் கடார் பற்றிய ஒரு பதிவு).

இதே சமயம் அமெரிக்கா வெளிநாட்டு உறவுகளில் ஏற்படுத்திய பிழைகள் உடனடியாக திருத்தப்படவேண்டும் என்று தேர்தலுக்கு முன்பும், பதவியேற்பின்போதும் முழங்கியவர் இப்போது ஆப்கானிஸ்தானில் இருக்கும் அமெரிக்க படைகள் இரு மடங்காக்கப்படும் என்று அறிவித்திருக்கின்றார். அப்படி இருமடங்காக்கியவுடன் அமெரிக்காவுக்கு உண்டாகும் இழப்புகள் இன்னும் பல மடங்காகும், அதற்காகத்தான் காத்திருக்கின்றோம் என்று அல்-கொய்தா தலைவர் ஒருவர் அறிவித்திருக்கின்றார். அதே சமயம் புஷ்ஷுக்கு ஆப்கான் போல ஒபாமாவுக்கு பாகிஸ்தான் என்று சில ஊடகங்கள் தொடர்ந்து சொல்லுகின்றன. தம்மை ரட்சிக்க வந்தவர் என்று உலகமே எதிர்பார்த்துக்கொண்டிருக்க, ஒபாமா இப்போது என்ன செய்கிறார் என்று அவர் பில்லியர்ட்ஸ் விளையாடும் அழகையும், அவர் நன்றாக நடனம் ஆடக்கூடியவர் என்றும், அவர் கூடைப்பந்தில் ஷூட் பண்ணும் அழகே தனி என்றும் இதழ்கள் நடுப் பக்கத்தில் “எந்திரன் படத்தின் புதிய காட்சிகள்” என்கிற அளவில் படங்களை வெளியிட்டு வருகின்றன. பழைய மொந்தையில் புதிய கள் என்று பெரியார் விமர்சித்தது நினைவு வருகின்றது. என் சொந்த கருத்தில் “அமெரிக்கர்கள் எப்போதும் அமெரிக்கர்களாகவே இருக்கின்றார்கள்”.

(2)

பொதுமக்கள் தம் வாழ்வில் இழந்துவிட்ட வசந்தங்கள் எல்லாவற்றையும் மீட்க வந்த ரட்சகராக ஒபாமாவை பார்ப்பதுபோல இன்னுமொரு ரட்சகரை 15 வருடங்களுக்கு முன்னரே பார்த்த அனுபவம் இலங்கை தமிழ் மக்களுக்கு உண்டு. 1994 ஆகஸ்டில் சந்திரிக்கா பண்டாரநாயக்கா குமாரதூங்க இலங்கை பிரதமராக பதவியேற்கிறார். தொடர்ந்து 1994 நவம்பரில் ஜனாதிபதியாக பதவியேற்கிறார். தேர்தல் காலங்களில் அவர் வெளியிட்ட கருத்துக்களால் பெருமளவு கவரப்பட்ட தமிழர்கள் எமக்கொரு மீட்பர் அவதரித்துவிட்டார் என்பதுபோல குதூகலிக்கின்றனர். வழமைபோல நல்லூர் திருவிழா நடைபெறுகின்றது. ஆனால் வழமைக்கு மாறாக மக்கள் சந்திரிக்கா காப்பு, சந்திரிக்கா பொட்டு, சந்திரிக்கா மாலை, சந்திரிக்கா சேலை எல்லாம் அமோகமாக விற்பனையாகின்றது. சிங்களப் பெண்ணான சந்திரிக்கா இவை எல்லாவற்றையும் அணிவாரா என்கிற கேள்வி யாரிடமும் எழவில்லை. பில்லா சாரி என்று வாங்கி அணிகிறோம், பில்லா படத்தில் யார் சேலையுடன் வந்தார்கள் என்று கேட்டோமா, எமது மூத்த தலைமுறையினர் தானே அவர்கள். தமிழர்கள் எப்போதும் ஏமாற தயாராக இருக்கின்றார்கள். ஏமாற்றுபவர்கள் மட்டும் காலத்துக்கு காலம் மாறிக்கொண்டு இருக்கின்றார்கள். ட்ரெண்டுக்கு ஏற்ப எடுக்கும் படம்தான் ஓடும் என்பதுபோல ட்ரெண்டுக்கு ஏற்ப செய்யும் ஏமாற்றுதான் எடுபடும்போல.

(3)

உலக ரட்சகர், இலங்கை ரட்சகர் என்பதுபோல தமிழ் நாட்டு ரட்சகர் ஒருவரும் இப்போது உதயமாகி இருக்கின்றார். எனக்கு தெரிந்து தனது கட்சியின் கொள்கை என்ன என்று கூட சொல்லாமல் சில தேர்தல்களை சந்தித்த ஒரே அரசியல் தலைவர் இவர்தான். கருணாநிதியின் தீவிர ஆதரவாளனாக இருந்து அவரிடமே கேட்டு ( ஆதாரம் – கலைஞர் பொன்விழா மலர்) படித்த வசனமான “வீழ்வது நாமாக இருப்பினும் வாழ்வது தமிழாக இருக்கட்டும்” என்று தனக்கே உரிய உச்சரிப்புகளுடன், இயலுமானவரை முழங்க முற்படும், தன்னை கறுப்பு எம் ஜி ஆர் என்று தானே பெயரிட்டுக்கொண்ட விஜயகாந்த், எம் ஜி ஆருக்கு ஒரே ஒரு உதவிதான் செய்திருக்கிறார். அதாவது எம் ஜி ஆர் முதல்வர் ஆனபோது அவரிடம் பத்திரிகையாளர்கள் உங்களது ஆட்சி என்ன கப்பிட்டலிஸமா, இல்லை கம்யூனிஸமா என்கிற ரீதியில் கேள்வி கேட்க அவர் சொன்னாராம் அண்ணாயிசம் என்று. பொதுவாக எம் ஜி ஆர் மீதான ஒரு நக்கலாக சொல்லப்படும் விடயம் இது. எம் ஜி ஆர் அதையாவது சொன்னார், அவரது நிலைப்பாடு அது. சினிமாயிஸம் என்கிற தன் நிலைப்பாடை கூட சொல்லாமல் இன்றுவரை கட்சி நடத்தும் விஜயகாந்த் உண்மையில் வருங்காலங்களிலும் எம் ஜி ஆருக்கு தொடர இருந்த இந்த அவப்பெயரை தீர்த்துவிட்டாரென்றே சொல்லவேண்டும்.

முன்னொரு காலத்தில் ஈழப்பிரச்சனை தீரும்வரை தன் பிறந்த நாளை கொண்டாட மாட்டேன் என்று அறிவித்து பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியவர் இவர். அதை தொடர்ந்து கப்டன் பிரபாகரன் என்று தன் படத்துக்கு பெயர் வைத்தும், விஜய பிரபாகரன் என்று தன் மகனுக்கு பெயர் வைத்தும் இலங்கை தமிழ் மக்களின் செல்லப்பிள்ளை போலவே மாறினார் இவர். இது அவருக்கு பெரும் பரபரப்புடன் கூடிய புகழையும் ஏற்படுத்தி தந்தது. அதன் பின்னர் கால ஓட்டத்தில் அவரும் ஒரு அரசியல்வாதியாகி போனார். குமுதத்தில் இயக்குனர் மகேந்திரன் வழங்கிய ஒரு நேர்காணலில் “விடுதலை புலி உறுப்பினர்களும், தமிழீழ மக்களும் நடிகர் விஜயகாந்தை சின்ன பிரபாகரன் என்றே அழைக்கின்றனர்” என்ற ஒரு கருத்து தான் சொல்லாமல் சேர்க்கப்பட்டதாக இய்க்குனர் மகேந்திரனே ஒரு கடிதம் வழங்கினார். ஆனால் அந்த சேர்க்கை ஏற்படுத்திய தாக்கம் பலமாக பரப்பப்பட்டது. இதில் விஜயகாந்தின் செல்வாக்கு இருந்ததாக பரவிய செய்தியை மறுக்க முடியவில்லை.

கருணாநிதி, ஜெயலலிதா என்கிற இருவருக்கும் தானே மாற்று என்று சொல்லும் விஜயகாந்த் அவரது பேச்சுக்களிலும், ஆனந்த விகடன் ஆதரவுடன் நடந்தேறிய ஊர்வலம் என்கிற நாடகத்திலும் (ஆனந்த விகடன் நிகழ்த்தும் இன்னுமொரு நாடகம் “சிவா மனசில சக்தி” படத்தின் வெற்றி தொடர்ந்து வெளியாகும் செய்திகள்) தான் ஒரு பக்கா நடிகன் என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்திருக்கின்றார். கருணாநிதி இலவச ரேஷன் அறிவித்தால் இவர் தான் ஆட்சிக்கு வந்தால் வீடுவரை இலவசமாக விநியோகம் செய்வேன் என்கிறார். என்ன, மக்கள் எல்லாரும் முடமாகி போய்விட்டார்களா? ஏன் இந்த பித்தலாட்டம். இங்கே நடப்பது மூன்றாந்தர சினிமா இல்லை. வாழ்க்கை. விஜயகாந்தை நினைக்கும்போது எனக்கு எழுத்தாளர் ஜெயகாந்தன் சொன்ன ஒரு கருத்து தான் நினைவுக்கு வருகின்றது. ஆனந்த விகடன் ஒரு நேர்காணலில் ஜெயகாந்தனிடம் “திமுக அதிமுக இரண்டுக்கும் மாற்றாக விஜயகாந்த் கட்சி தொடங்கியிருக்கின்றாரே?” என்கிற ரீதியில் கேட்கப்பட்டபோது அவர் சொன்னார் “கழுதை என்றொன்று இருந்தது, குதிரை என்றொன்று இருந்தது, இப்போது கோவேறு கழுதை என்றொன்று புதிதாக வந்திருக்கின்றது” என்று.

30 thoughts on “உலக ரட்சகர் ஒபாமாவும் உளுத்துப்போன தமிழர்களும்

Add yours

 1. ஒபாமா வந்து தமிழீம் பெற்றுத்தரப்போகிறார் என்று அமெரிக்கத் துர்தரகங்களுக்கு முன் இப்போதும் பலர் தவம்கிடக்கிறார்கள். இதையெல்லாம் கண்டுகொள்ளாமலிருந்தால் நீங்கள் அறிவாளி. ஆனாலும் ஒபாமாவுக்கும் சந்திரிக்காவுக்கும் இருக்கிற, இருந்த முக்கியத்துவம் மற்றவருக்கு இருப்பதாக எனக்குப் படவில்லை.

  Like

 2. //ஒபாமா வந்து தமிழீம் பெற்றுத்தரப்போகிறார் என்று அமெரிக்கத் துர்தரகங்களுக்கு முன் இப்போதும் பலர் தவம்கிடக்கிறார்கள்//ஒபாமா நினைத்தால் கூட எதையும் செய்ய இயலாத நிலையைதான் அமெரிக்க பொருளாதாரம் அனுமதிக்கின்றது. இந்த நிலையில் அவர் எப்படி இலங்கை பிரச்சனையை முடித்துவைக்கமுடியும்???????????

  Like

 3. Hiஉங்களுடைய வலைப்பதிவு இணைப்பை http://www.ntamil.com ல் சேர்த்துள்ளோம். இதுவரை இந்த http://www.ntamil.com இணையதளத்தில் நீங்கள் பதிவு செய்யவில்லை எனில், உங்களை உடனே பதிவு செய்து, உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, உங்கள் வலைப்பதிவை, உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்லுங்கள்.நட்புடன் nTamil குழுவிநர்

  Like

 4. ஒபாமா பற்றி நீங்கள் முன் வைத்தவை எல்லாம் யதார்த்தம். மீண்டும் ஒரு குவாண்டனாமா வேண்டாம். அமெரிக்காவின் இன்றைய நிலையில் அவரால் எதுவும் முடியாது. ஆனால் அவர் ஒரு பன்முக ஆளுமைத்தன்மை கொண்ட மனிதர் என்பதில் மாற்றுக்கருத்துக்கிடமில்லை. இருந்தாலும் அவர் மீதான மிகைப்படுத்தப்பட்ட விம்பம் நல்லதல்ல. பில்லா சேலை விடயம் செம கலக்கல் அண்ணாச்சி.உங்களின் எழுத்து நடையின் மெருகு நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்கிறது! வாழ்த்துக்கள்!! தொடரட்டும்!!!

  Like

 5. //மீண்டும் ஒரு குவாண்டனாமா வேண்டாம்//உலக அளாவில் மிகப்பெரும் மனித உரிமை மீறல்களுல் ஒன்றாக இருப்பது குவாண்டனாமா. இது நிச்சயம் ஒரு முடிவுக்கு கொண்டுவரப்படவேண்டிய ஒன்று

  Like

 6. அருண், இர‌ண்டு நாட்க‌ளுக்கு முன் ஒரு காட்டூன் மெட்ரோவில் வ‌ந்திருந்த‌து பார்த்திருப்பீர்க‌ளோ தெரியாது; ஈராக்கிலிருக்கும் ப‌டைக‌ள் Exit என்ற‌ க‌த‌வு திற‌க்க‌ அத‌ன் ம‌றுபுற‌ம் Welcome to Afghanistan என்று எழுத‌ப்ப‌ட்டிருக்கும். ஆக‌, ஈராக்கிலிருக்கும் ப‌டைக‌ள் திரும்ப‌ அமெரிக்காவுக்கு வ‌ர‌ப்போவ‌தில்லை; இன்னொரு நாட்டை ஆக்கிர‌மித்துக்கொண்டிருக்க‌ப்போகின்ற‌து என்ப‌தே ய‌தார்த்த‌ம். அமெரிக்காவிலோ அல்ல‌து இந்தியாவிலோ அவ்வ‌ள‌வு இல‌குவாய் நினைப்ப‌து மாதிரி எதையும் மாற்றிய‌மைக்க‌ முடியாது; முக்கிய‌மாய் வெளியுற‌வுக்கொள்கைக‌ள். ஏற்க‌ன‌வே க‌ட‌ந்த‌ ந‌வ‌ம்ப‌ரில் ஒபாமா ப‌த‌வியேற்ற‌வுட‌ன் இன்னும் இற‌ங்குமுக‌மாய் American Stock Market போகின்ற‌தென்று ‘பெருச்சாளிக‌ள்’ ஊளையிட‌த்தொட‌ங்கிவிட்ட‌ன‌. எல்லாம் ப‌ற்றிக் க‌வ‌லைப்ப‌டும் ஒபாமா Stock Market ப‌ற்றி எதையும் பேசாது ம‌வுன‌மாயிருக்கின்றார் என்று செய்தி ஊடக‌ங்க‌ளில் அவ‌ர்க‌ள் அல‌சி ஆராய‌த்தொடங்கிவிட்டார்க‌ள். இனி இவ‌ர்க‌ளோடு ம‌ல்லுக்க‌ட்டி முடிய‌வே ஒபாமாவின் ப‌தவிக்கால‌ம் முடிந்துவிடும் போல‌த்தான் தெரிகிற‌து.

  Like

 7. அண்மையில் இந்தியா ஸ்ரீலங்காவுக்கு ஆயுதம் கொடுப்பதை இரு நாடுகளுக்கிடையிலானா வியாபாரமாக ஏன் பார்க்கக்கூடாது என கேட்டவராயிற்றே?

  Like

 8. //IN SIX MONTHS OF TIME THE WORLD WILL REALIZE OBAMA IS THE BIGGEST FLOP//ஒபாமாவின் தோல்வியை எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் மனநிலை எனக்கு கிடையாது. ஆனால் உலகையே தாம்தான் ஆட்டிவைப்பதாக நினைக்கும் அமெரிக்க மனநிலைக்கு எதிர்வினையாகவே இந்த பதிவை எழுதினேன். அமெரிக்காவின் தொடர்ச்சியான அடக்குமுறைகளும், அராஜகங்களும் ஒரு முடிவுக்கு கொண்டுவரப்படவேண்டும். அப்படி ஒரு நிலை வரவேண்உம் என்றால் அமெரிக்காவின் இப்படியான நிலைப்பாட்டை முதலில் மக்கள் உணரவேண்டும்.

  Like

 9. dj உங்களின் விரிவான பதிலூட்டத்துக்கு நன்றி. நீங்கள் சொன்ன அந்த கார்ட்டூன் நான் பார்க்கவில்லை. ஆனால் அந்த கருத்தை புரிந்துகொள்ளுகின்றேன். உண்மையில் நடக்கபோவதும் அதுதான். மிகப்பெரும் மாற்றங்களை ஒபாமா நினைத்தால் கூட கொண்டுவரமுடியாது என்பதுதான் உண்மை. அப்படி ஒரு மாற்றம் வரவேண்டும் என்றால் அமெரிக்க மக்களின் ஒட்டுமொத்த மனநிலையே மாறவேண்டும். அமெரிக்காவும் இந்தியாவும் தமது வல்லரசு கனவுகளால் தீவிரவாதிகள் உருவாவதை தூண்டிவிட்டு இன்று ஆப்பிழுத்த குரங்காக அவதிப்படுகின்றார்கள்.

  Like

 10. //அண்மையில் இந்தியா ஸ்ரீலங்காவுக்கு ஆயுதம் கொடுப்பதை இரு நாடுகளுக்கிடையிலானா வியாபாரமாக ஏன் பார்க்கக்கூடாது என கேட்டவராயிற்றே?//இது புரட்சிகலைஞர் விஜயகாந்த் சொன்ன புரட்சிகரமான கருத்து. இது போல இன்னும் பல கருத்துகளை இவர் இனியும் வெளியிடுவார்.

  Like

 11. atleast the first two are well educated persons. vijayakanth even didn’t finish his primary school. he should desolve his party and concentrate on more movies

  Like

 12. -தமிழர்கள் எப்போதும் ஏமாற தயாராக இருக்கின்றார்கள். ஏமாற்றுபவர்கள் மட்டும் காலத்துக்கு காலம் மாறிக்கொண்டு இருக்கின்றார்கள்.-நீங்கள் சொன்னது 100 வீதமும் சரியே. உலக ரட்சகர், இலங்கை ரட்சகர், தமிழ் நாட்டு ரட்சகர் என்று எல்லோரையும் பற்றி சரியாக சொன்ன நீங்கள் இலங்கை தமிழர்களின் இரட்சகராக உருவாக்கபட்ட பிரபாகரன் பற்றி எதுவும் சொல்லவில்லை.

  Like

 13. “”இலங்கை தமிழர்களின் இரட்சகராக உருவாக்கபட்ட பிரபாகரன் பற்றி எதுவும் சொல்லவில்லை”siripu siripa varukithu. innum oru knosa waalila theriyum

  Like

 14. //atleast the first two are well educated persons. vijayakanth even didn’t finish his primary school//இதுபற்றி கேட்டால் படிக்காத மேதை காமராஜர் என்று தொடங்குவார்கள். என்னை பொறுத்தவரி அரசியல் வாதிகள் படிக்கவேண்டும் என்று சட்டமியற்றும்போது சில சிக்கல்கள் வரும். அதை தவிர்த்து, மக்களின் கல்வியறிவை கூட்டும்போதுதான் பிரச்சனையை தீர்க்கமுடியும்.

  Like

 15. // நீங்கள் இலங்கை தமிழர்களின் இரட்சகராக உருவாக்கபட்ட பிரபாகரன் பற்றி எதுவும் சொல்லவில்லை.//நல்ல கேள்வி. இது பற்றி விரிவாக எழுதவேண்டும். இலங்கை தமிழ் மக்களின் இரட்சகராக பிரபாகரன் வலிந்து உருவாக்கப்பட்டார் என்பதில் இருக்கும் தர்க்கத்தை தாண்டி, இலங்கை தமிழ் மக்களுக்கு ஒரு ரட்சகர் உருவாகவேண்டிய தேவை வெகுவாக இருந்தது எம்பதே உண்மை. தமக்கு ஒரு ரட்சகர் வேண்டும் என்று மக்கள் ஏங்கி இருந்த நிலையில், பிரபாகரன் அவ்வாறாக கருதப்பட தொடங்கினார்

  Like

 16. தமிழன் கறுப்பி,வருகைக்கும் பதிவுக்கும் நன்றி. தொடர்ச்சியான உங்கள் ஆதரவு என்னை தொடர்ந்து எழுத உற்சாகம் தருகின்றது

  Like

 17. “”இலங்கை தமிழர்களின் இரட்சகராக உருவாக்கபட்ட பிரபாகரன் பற்றி எதுவும் சொல்லவில்லை”siripu siripa varukithu. innum oru knosa waalila theriyum//என்ன அர்த்தமோ….இது சிரிப்பு சிரிப்பா சிரிக்கிற விஷயமில்லை, அதைவிட முகியமானது, இரண்டு ராணுவத்துக்கு இடையில் சிக்கி சாகும் சனங்கள்

  Like

 18. தங்கள் பதிவை http://www.newspaanai.com இல் சேர்த்து பலருடன் பகிர்ந்து கொள்ளுங்கள். http://www.newspaanai.com தமிழ் சோசியல் பூக்மர்கிங் சைட் தங்கள் பதிவில் newspaanai பட்டனை சேர்த்து பதிவுகளை http://www.newspaanai.com ல் எளிதாக சேர்க்கலாம். மேலும் விபரங்களுக்கு கீஷே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும். http://www.newspaanai.com/easylink.php நன்றி.

  Like

 19. நல்ல ஒரு அலசல்.அமரர் கல்கி அவர்கள் எழுதிய அலையோசையிலும் இந்தியநாட்டின் சுதந்திரம் பற்றி பேச்சு வரும்போது அது ஜப்பான் காரன் வந்து தரப்போவதாக பாத்திரங்கள் மூலம் பேசவைத்திருப்பார். அதுபோல தான் நாமும்.அந்நிய வல்லாதிக்க நாடுகள் அவற்றின் கொள்கைகள மற்றைய நாடுகளின் போராட்டங்களில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பது உண்மைதான் என்றாலும் அமெரிக்காவோ அல்லது இந்தியாவோ அல்லது இங்கு பேசப்படாத நாடோ வந்து பாதிக்கப் பட்ட மக்களுக்காக குரல் கொடுக்கப் போவதில்லை. ஆனால் நடக்கும் உண்மைகளை உலகறியச் செய்யவேண்டும் எனும் தேவையையும் மறுக்க முடியாது. அதற்காக மற்ற நாடுகள் எமக்கு எதவிசெய்யவில்லையெ என கோபப்படுவது முட்டாள் தனமானது என நினைக்கிறேன்.ஒரு உதாரணம் சொல்கிறேன். சோமாலியா எதியோப்பியா போன்றன வறிய நாடுகள் என நாங்கள் ஓ எல் மாணவராக இருக்கும்போதே எமக்கு தெரியும். ஆனால் வளர்முக நாடுகளின் பிரஜை என்ற அடிப்படையில் நாம் ஏதாவது செய்தோமா? நாடுகளின் பிரச்சனைகளே இப்படித்தான்.

  Like

 20. உண்மைதான் குரு. எமக்கெல்லாம் ஒரு குணம் உண்டு. அதாவது நாம் மற்றவரை பொருட்படுத்தமாட்டோம், ஆனால் மற்றவர்கள் எமக்காக எல்லா தியாகங்களாஇயும் செய்யவேண்டும் என்று எதிர்பார்ப்போம். இதில் கவலைக்குரிய விடயம் என்னவென்றால் இன்றளவும் நாம் இதை நியாயப்படுத்தியே வருகின்றோம். அண்மையில் தமிழர்களின் கவனயீர்ப்பு போராட்டத்திற்கு ருவாண்டா மக்கள் அமைப்பு கனடாவில் தமது பரிபூரண ஆதரவை வழங்கியது. ஆனால் இன்றளாவும் நாம் எந்த ஒரு பிறநாட்டு பிரச்சனையிலும் எமது நிலையை கூட தெரிவிக்கவில்லை. இன்றளாவும் புலம்பெயர் நாடுகளில் அந்நாட்டு நீரோட்டங்களுடன் கலந்து தமிழர்கள் எதையும் செய்ததாக கேள்விப்பட்டதாக கிடையாது. கனடாவில் remembrance day என்று உலகப்போரில் உயிரிழந்த கனேடிய வீரர்களின் நினைவாக ஒரு நாள் அனுஷ்டிக்கப்படும். நான் அறிந்தவரையில் அதில் தமிழர்கள் எவரும் கலந்துகொண்டது கிடையாது. இப்படி நாம் இருக்கும்போது எம் மீது பிற நாட்டவர்களின் நம்பிக்கையுடன் கூடிய ஒரு கவனயீர்ப்பு என்பஹ்டு மிக கடினமானது

  Like

 21. “கதைகளும் பெருங்கதைகளும் சொல்லப்பட்டுகொண்டே இருக்கிறது, எல்லாக் கதைகளையும் கேட்டுக்கொண்டே “ம்” சொல்லிக்கொண்டே இருக்கும் என் சனங்களுக்கு…” என்று ஆரம்பிக்கும் ஷோபா சக்தியின் “ம்” நவீனம். உண்மைதான் எங்களுக்கு பழகிப்போன அல்லது வசதியான ஒரு விஷயம் “ம்” தான். மற்றவர் விடயத்தில் மட்டுமல்ல எங்கள் இனம் சார்ந்த சொந்த விடயத்திலுமே பெரிதாக கருத்து ஒன்றையும் கொண்டிராத “பங்களிப்பற்ற கனவுகளை” மட்டும் சுமந்து “ம்” கொட்டும் ஒரே சாதி நம் தமிழ் சாதி தான் அதன் விளைவுகளை இனித்தான் உணரப்போகிறோம் என்றே தோன்றுகிறது.Lasantha Wickramasinge தனது இறுதி editorial இல்(11.01.2009- The Sunday Leader)மேற்கோள் காட்டிய Martin Niem”ller இன் அனுபவம் மிகுந்த வரிகள் எம் இனத்துக்கே மிகப்பொருந்தும்.”முதலில் அவர்கள் யூதர்களை பிடிக்க வந்தனர்.நான்பேசவில்லை: ஏனெனில் நான் யூதன் அல்ல.பின்னர் அவர்கள் கம்யூனிஸ்டுகளை பிடிக்க வந்தனர்.நான் பேசவில்லை: ஏனெனில் நான் கம்யூனிஸ்ட் அல்ல.பின்னர் அவர்கள் தொழிற்சங்கவாதிகளை பிடிக்க வந்தனர். அப்போதும்நான் பேசவில்லை: ஏனெனில் நான் தொழிற்சங்கவாதியும் அல்ல.பின்னர் அவர்கள் என்னை பிடிக்க வந்தனர்.அப்போது எனக்காக பேச யாருமே இல்லை.”நாங்களும் எப்போதும் எது குறித்தும் பேசவே இல்லை இன்று எமக்காக பேசவும் எவரும் இல்லை..உண்மையில் இதுவரை நிகழ்ந்ததை விட உரிமைகள் தொடர்பான கொடுமைகளை “ஒன்றுபட்ட விடுவிக்கப்பட்ட ஐக்கிய சிறீலங்காவில்” இனித்தான் தமிழன் சந்திக்கப் போகிறான். எமக்கான விதிகளை எவனோ எவனோ எல்லாம் எழுதப் போகிறான் அப்போதும் நாம் என்ன செய்யப்போகிறோம்?..என்கின்ற வேதனைதான் வினாவாக எழுகிறது.

  Like

 22. //Lasantha Wickramasinge தனது இறுதி editorial இல்(11.01.2009- The Sunday Leader)மேற்கோள் காட்டிய Martin Niem”ller இன் அனுபவம் மிகுந்த வரிகள் எம் இனத்துக்கே மிகப்பொருந்தும்.//lasantha போலவே martin Niemeller ம் அடக்குமுறையாளார்களின் இனத்தில் இருந்துகொண்டே அதற்கெதிராக குரல்கொடுத்தவர். இது எம்மினத்துக்கும் பொருந்தும். உதாரணமாக, உலக அளாவில் நடந்த எந்த ஒரு இன அழிப்பிற்கெதிராகவும் எம் கருத்துகளை நாம் பதிவு செய்தது கிடையாது. அதுபோல எம் இனத்துக்கு உள்ளேயே நடந்தவற்றை கூட நாம் எதிர்ப்பு தெரிவித்தது கிடையாது. இதற்கு நிறைய உதாரணங்களை சொல்லலாம். அது மட்டுமல்லாமல் எமக்கு எப்போதுமே மற்றவர்கள் மீதான எள்ளல் அதிகம் இருந்தது என்பது வரலாறு. இவற்றை எனியாவது திருத்தவேண்டும். வரலாற்று பிழைகளை திருத்தாத எந்த இனமும் வரலாற்றின் பக்கங்களில் இருந்தே அழிக்கப்படும்

  Like

 23. தமிழர்களுக்கு ஒரு ரட்சகன் தேவை என்ற நிலை இருந்தபோது பிரபாகரன் அவ்வாறு மக்களால் கருதப்பட்டார் என்பதைவிட மக்களுக்கு அவர் ஒருவர்தான் இரட்சகர் என அவராலேயே ஊட்டப்பட்டது என்பதே சாலப் பொருந்தும் என நினைக்கிறேன்

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

Website Powered by WordPress.com.

Up ↑

%d bloggers like this: