திமிர்


சாதி என்ற கண்ணோட்டத்தை இந்துகளின் மனதில் ஆழமாகப் பதிய வைத்திருக்கிற இந்து மதமே தவறானது என்று நான் கருதுகிறேன். நீங்கள் வீழ்த்த வேண்டிய எதிரி சாதியைக் கடைப்பிடிக்கும் மக்களல்ல. சாதிகளின் மதமான இந்து மதத்தை மக்களுக்குக் கற்றுத் தந்திருக்கிற சாத்திரங்களே உங்களின் பயங்கர எதிரி. சமபந்தி விருந்தில் கலந்து கொள்ளாதவர்களையும் கலப்புமணம் செய்யாதவர்களையும் விமர்சிப்பதும் கேலி செய்வதும் அல்லது எப்போதாவது சில சமயங்களில் சமபந்தி விருந்தை நடத்துவதும் கலப்பு மணவிழாவைக் கொண்டாடுவதும் வீண் வேலையாகும். – அம்பேத்கார்

வெகுதாமதமாக இன்றுதான் வெண்ணிலா கபடிக்குழு திரைப்படத்தை பார்த்தேன். வழமை போல கனடாவில் இத்திரைப்படத்தை திரையிடவில்லை. திரைப்படங்களை திரையரங்கில் சென்றுதான் பார்ப்பது அல்லது அத்திரப்படத்தின் உத்தியோகபூர்வ பிரதி வெளியான பின்னரே பார்ப்பது என்ற கொள்கையில் தீவிரமாக இருந்ததால் (கள்ள விசிடியில் திரைப்படம் பார்க்கும் எவருக்கும் நல்ல திரைப்படம் வரவில்லையே என்று கதைக்கவே உரிமையில்லை) இந்த நிலை. கனடாவில் நல்ல திரைப்படங்களை திரையிடுவதில்லை என்ற ஒரு கொள்கை நெடுநாட்களாக பின் பற்றப்படுகின்றது. சுப்ரமணியபுரம், அஞ்சாதே, சேது, சென்னை 600 028, போன்ற பரவலான பாராட்டுக்களை பெற்ற எந்த படங்களும் இங்கு திரையிடப்படவிலை. ஆனால் வில்லு, குருவி, குசேலன், ஏகன், ஆழ்வார், 1977 போன்ற திரைக்காவியங்கள் எல்லாம் பலத்த விளம்பரங்களுடன் திரையிடப்படுகின்றன.

பொதுவாக மலையாள, லத்தீன் அமெரிக்க, ஐரோப்பிய, இரானிய திரைப்படங்களை பார்ர்க்கும்போது அந்நாட்டு மக்களின் வாழ்க்கை முறைகளை, கலாசாரத்தை எம்மால் கண்டுகொள்ள முடிகின்றது. ஆனால் தமிழ் திரைப்படங்களில் ஒருபோதும் அப்படி இருந்தது கிடையாது. (அல்லது எப்போதாவது ஒரு முறை விதி விலக்காக இருந்திருக்கும் – விதி விலக்குகள் ஒரு போதும் விதிமுறைகள் ஆகா). ஒரு உதாரணத்துக்கு தமிழ் திரைப்படங்களில் எப்போதும் தொழிலாளி மீது முதலாளியின் மகள் காதல் கொண்டு அலைவார். அல்லது அதிகம் பிடித்த கதாநாயகி படிக்காத நாயகன் மீது / பணாக்கார பெண் ஏழை இளைஞன் மீது காதல் கொண்டலைவர். ஆனால் நடைமுறை அதுவல்ல. பொதுவாக திரைப்படங்கள் கிராமப்புற இளைஞர்களை குறிவைத்து எடுக்கப்படுவதால் அவர்களை திருப்திப்படுத்த இப்படியான கோமாளித்தனங்களை திரையில் காட்டுகின்றனர். இது பலருக்கு கனவாக இருக்கலாம், ஆனால் நடைமுறை அப்படியல்ல. உண்மையில் திருமண பந்தங்களில் குடும்ப செல்வாக்கும் அவர்களின் பொருளாதார கல்வி நிலைகளும் பெரும் செல்வாக்கு செலுத்துகின்றன. இதில் இருக்கின்ற நியாயங்களை நான் ஏற்றுக்கொள்ளுகின்ற அதே நேரம் நடைமுறையில் அப்படி நடக்காதபோது, பணக்கார பெண்களும், படித்த பெண்களும் படிக்காத, ஏழை இளைஞர்களை தான் விரும்புவர் என்று எம் ஜி ஆர் முதல் இன்றைய தனுஷ் காலம்வரை செய்யப்படுகின்ற கற்பனாவாதங்கள் முற்று முழுதாக எதிர்க்கபடவேண்டியன என்று கருதுகின்றேன். அதே போல நாயகனை சர்வ வல்லமை படைத்தவராகவும், நாயகி புனிதத்தின் பிம்பமாகவும் செய்யப்படும் கட்டமைப்புகள் தமிழ் சினிமாக்கள் எதுவுமே தமிழரின் சினிமாக்கள் அல்ல என்றே காட்டிவருகின்றன. சற்று யோசித்துப் பார்க்கும்போது தமிழர்களின் வாழ்க்கையுடன் மலையாள, சிங்கள சினிமாக்கள் கொண்டிருக்கும் நெருக்கத்தை கூட தமிழ் சினிமாக்கள் கொண்டிருப்பதில்லை. இந்த போலி விம்பங்களை தொடர்ச்சியாக உடைத்து தமிழர்களின் சினிமாவாக தன்னை அடையாளப்படுத்தி இருக்கின்றது வெண்ணிலா கபடிக் குழு. (இத்திரைப்படத்தில் கூட எம். எஸ். சி படிக்கின்ற பெண் பண்ணையில் வேலை செய்பவனை காதலிப்பதாக காட்டப்பட்டாலும், அது ஒரு இனக்கவர்ச்சியாகவே அடையாளம் செய்யப்பட்டிருக்கின்றது, மேலும் அதை தாண்டி இருக்கின்ற அம்சங்கள் இங்கு மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றன).

இத்திரப்படத்தில் என்னை மிகவும் கவர்ந்த விடயம் எல்லா திறமைகளையும் மீறி சாதி என்கிற அலகு எப்படி மனிதர்களை சிறுமை செய்கின்றது என்பது. எல்லா திறமைகள் இருந்தும் மாரி தொடர்ந்து சாதி என்கிற காரணத்தால் சிறுமைப்படுத்தப்படுகின்றான், அதேபோல ஒரு அணியாக வெற்றிபெறும் வெண்ணிலா கபடிக்குழுவை பிரித்துப்போடவும் வாகாக சாதீய வேற்றுமைகள் முன்வைக்கபடுகின்றன. திரைப்படத்தின் இந்த கூறு நேர்மையான விமர்சனங்கள் ஊடாக அணுகவேண்டிய மிகமுக்கியமான அங்கம் என்று நினைக்கின்றேன்.

2

என் சொந்த அனுபவத்தில் இலங்கை தமிழர்கள் மத்தியில் சாதி வெறி என்று கதை எழும்போதெல்லாம் தென்னிந்திய பிராமணரை முன்வைத்தே விவாதங்கள் எழுவது வழக்கம். சாதீய அடக்குமுறைகளின் உச்சக்கட்டமாக பிராமணர்கள் பிரயோகித்த அடக்குமுறைகள் தான் உதாரணம் காட்டப்படுவது வழக்கம். இலங்கையை பொறுத்தவரை பிராமணர்களின் அடக்குமுறைகள் குறைவென்பதால் (இலங்கையில் நிகழும் சாதிக் கட்டுமானங்களில் வெள்ளாளார்களுக்கு அடுத்ததாகவே பிராமணர்கள் கருதப்படுகின்றார்கள்.) இலங்கையில் சாதீய அடக்குமுறைகள் குறைவென்ற புள்ளிக்கு இலகுவாக வந்துவிடுகின்றார்கள். ஆனால் உண்மை முற்றிலும் இதற்கு எதிராக இருக்கின்றது.

தென்னிந்தியாவில் எப்படி பிராமணர்களால் அடக்குமுறை பிரயோகிக்கப்பட்டதோ அதற்கு சற்றேனும் குறையாத அடக்குமுறை இலங்கை தமிழர்களுல் வெள்ளாளரால், பிராமணர் உட்பட்ட மற்றைய சாதியினர் மீது கடுமையாக பிரயோகிக்கப்பட்டது. எனவே சாதீய அடக்குமுறை பற்றி நாம் கதைக்கின்றபோது இந்தியாவில் பிராமணர் மீது செய்யப்படும் எல்லா விமர்சனங்களுக்கும் பொருத்தமாக இலங்கை தமிழ் வெள்ளாளர் இருக்கின்றனர் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். இன்றும் கூட ஆதிக்க சாதியினர் வீடுகளில் வேலை செய்யவரும் பிற சாதியினருக்கு சிரட்டைகளில் தேனீர் கொடுப்பதையும், தமிழ் நாட்டை போன்ற இரட்டை குவளை முறை பின்பற்றப்படுவதையும் காணலாம்.

அதுபோல பாடசாலைகளில் கூட இந்த வேற்றுமை காண்பிக்கப்படுகின்றது. எனக்கு தெரிந்து பல ஊர்களில் தாழத்தப்பட்ட சாதியினருக்கு என்று வேறான பாடசாலைகளே இருந்திருக்கின்றன. அதையும் மீறி மற்ற பாடசாலைகளுக்கு வருகின்ற மாணவர்கள் கூட சமத்துவமான முறையில் மதிக்கப்பட்டது கிடையாது. என் சிறுவயதில் நான் படித்த ஒரு பாடசாலையில் ஒரு மாணவன் கல்வி கற்க வந்தபோது வகுப்பில் உரிய இடம் இருந்தும் அவன் நிலத்திலேயே அமர்த்தப்பட்டான். அப்போது எனக்கு சாதிப்பாகுபாடுகள் எதுவும் தெரிந்திருக்கவில்லை. எனவே அந்த மாணாவன் துர்க்குணங்களின் உருவானவன், அவனுடன் சேர்வதே பாவம் என்று சொல்லப்பட்டதை நானும் நம்பிவிட்டேன். பின்னாட்களில் இத்தனைக்கும் காரணம் அவனது சாதிப் பின்புலமே என்று தெரிந்துகொண்டேன்.

இதுபோல எனது ஊரில் இருந்த ஒரு பிரபல ஆலயத்தில் தேர்த்திருவிழா நடைபெறும்போது கூட சாதீய அடிப்படையில் ஒவ்வொரு நாட்களுக்கும் ஒவ்வொரு சாதியினர் என்று திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கம். இதில் என்ன கொடுமை என்றால் சில நாட்களில் திருவிழாவுக்குரிய செலவுகளை பொறுப்பெடுத்து இருந்தும் கூட அவர்கள் ஆலயத்துக்க்ள் அனுமதிக்கப்படாமல், தர்ப்பை கூட அணிவிக்கப்படாமல்தான் திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கம். அந்த ஆலயத்தின் திருவிழாக்காலங்களில் அமைக்கப்படும் தண்ணீர்ப்பந்தல் ஒன்றில் என் நண்பன் ஒருவன் இருக்கின்றான் என்று (அப்போது எனக்கு வயது 10) அவனுடன் சேர்ந்து நின்று அந்த தண்ணீர்ப்பந்தலில் நின்று எல்லாருக்கும் மோரும், சக்கரைத் தண்ணீரும் வழங்கினேன். திருவிழாவில் செலவழிப்பதற்காக என்று சேர்த்து வைத்திருந்த எனது உண்டியல் காசை கூட அந்த் தண்ணீர்ப்பந்தல் அமைப்பாளார்களிடம் கொடுத்திருந்தேன். அந்த் நாட்களில் நான் எனது அப்பம்மா வீட்டில் இருந்து படித்துக்கொண்டிருந்தேன். அன்று வீடு திரும்பினால் என்னால் குடும்ப மானமே போய்விட்டது என்று எனது அப்பம்மா அதிகம் திட்டி, நான் என் சொந்த ஊருக்கு உடனடியாகவே திரும்ப வேண்டும் என்று சொல்லி விரட்டிக்கொண்டிருந்தார். நல்ல வேளையாக சமூக சேவைகளில் அதிகம் நாட்டம் கொண்ட எனது பெரியம்மா வந்து என்னைக் காப்பாற்றினார்.

இதன் பின்னர் உயர் கல்வி கற்க என்று சைவமும் தமிழும் வளர்க்க அரும்பாடுபட்டதாக சொல்லிக்கொள்ளும் ஒரு கல்லூரியில் சேர்ந்தேன். இப்போதுதான் அந்தக் கல்லூரி எவ்வளவு தீவிரமான சாதி மற்றும் மத வெறிகளின் புகலிடமாக இருந்தது என்று தெரிகின்றது. அந்நாட்களில் அக்கல்லூரியில் மிகப்பெரிய புனிதராக அடையாளப்படுத்தப்பட்ட ஆறுமுக நாவலர் மீதான எல்லாப் புனிதங்களும் உடைந்து இன்று என்னளவில் அவர் முற்று முழுதாக நிராகரிக்கப்படவேண்டிய ஒரு மத, சாதி வெறியராகவே நினைவில் இருக்கின்றார். எனது கல்லூரியும் இலங்கையில் இருக்கின்ற பெரும்பாலான இந்துக்கல்லூரிகளும் சாதி வெறி திமிர் பிடித்து ஆடும் இடங்கள். என் சொந்த அனுபவத்தில் சாதி வெறி பற்றி வெளிப்படையாகவே கதைக்கின்ற பல ஆசிரியர்கள் அந்த கல்லூரிகளில் புனித பிம்பங்களுடன் நடமாடுவதை கண்டிருக்கின்றேன். என் சக மாணவன் – என் நண்பன் ஒருவன் தாழ்த்தப்பட்ட குலத்தை சேர்ந்தவன், நல்ல கெட்டிக்காரன், நிறைய துடுக்கானவன். வகுப்பில் அவன் கேட்ட கேள்வி ஒன்றுக்கு பதில் சொல்ல தெரியாத ஒரு ஆசிரியரால் “உண்ட சாதிக்குணம் தான் உன்னை இப்படி வச்சிருக்கு” என்று சொன்னதை கேட்டு அதிர்ந்திருக்கின்றேன். இது போல இன்னுமொரு ஆசிரியர் நேரடியாகவே சாதிகளுக்கு பரவலாக அந்நாட்களில் வழங்கப்பட்ட குறியீடுகளூடாக தன் வகுப்பு மாணவர்களின் சாதிகள் பற்றி பிற மாணவர்களுடனேயே விவாதிப்பதை கண்டிருக்கின்றேன்.

மேலும் இந்த இந்துக்கல்லூரி என்ற பெயருடன் இயங்குகின்ற அரச பாடசாலைகளில் இந்துமதம் மட்டுமே போதிக்கப்படுகின்றதே தவிர கிறீஸ்தவ மதம் கற்பிக்கப்படுவதில்லை. இவை அரச பாடசாலை என்கிற ரீதியில் அங்கே கிறீஸ்தவ பாடமும் நிச்சயமாக கற்பிக்கப்பட்டிருக்க வேண்டும். யாழ்ப்பாணத்தில் நடைபெறுகின்ற அனேகமான கத்தோலிக்க பாடசாலைகளில் இந்து மதம் ஒரு பாடமாக கற்பிக்கப்டடுகின்றாது. ஆனால் ஒரு இந்து / சைவ மத வெறிச்செயலாகவே இந்துக்கல்லூரிகளில் கிறீஸ்தவமதம் கற்பிக்கபடுவதில்லை இது பற்றி சில நண்பர்களுடன் கதைத்தபோது அங்கே இந்துக்கள் பெரும்பான்மை என்பதால் இது நியாயமானது என்று சொன்னார்கள். இதில் வேடிக்கை என்னவென்றால் அப்படி சொன்ன எல்லாருமே தமிழ் தேசியத்தின் பிரதான ஆதரவாளர்கள். அவர்களை நோக்கி நான் வைக்கும் கேள்வி, பெரும்பான்மையினருக்கு சிறுபான்மை சமூகம் தலை வணங்கித்தான் போகவேண்டுமென்றால் சிங்கள அரசுக்கு எதிரான போராட்டம் எதற்கு?. இலங்கையில் சிங்களவர் 74%ம் தமிழர்கள் 25%ம் இருக்கின்றனர். (இந்த குடிசன மதிப்பீட்டுக் கணக்கு கீழே இணைக்கப்பட்டுள்ளது. இதில் என்ன வேடிக்கை என்றால் தமிழர்கள் என்று சொல்லப்படும் 25% மலையகத் தமிழர்கள், முஸ்லீம்கள் எல்லாரையும் இணைத்தே பெறாப்படுகின்றது. ஆனால் இதை வடக்கில் வாழும் தமிழர்கள் உணர்வு பூர்வமாக செய்கிறார்களா அல்லது தம் சுய நலத்துக்காக செய்கிறார்களா என்ற கேள்வி எழுவது தவிர்க்கமுடியாமல் உள்ளது) இவர்களுக்கு சம உரிமை வேண்டுமென்பது போல இதைவிட ஆரோக்கியமான விகிதாசாரம் உள்ள கிறீஸ்தவர்களுக்கும் சம உரிமை கொடுக்கப்பட்டிருக்கவேண்டுமே? ஏன் கொடுக்கபடவில்லை? இப்படியான் கல்லூரிகளை தேசிய கல்லூரிகள் என்று அழகு பார்த்து எம் தேசிய குணமே இதுதான் என்று வெளிக்காட்டுவதில் என்ன பெருமை இருக்கின்றது?

இன்றுவரை யாழ். நூலகம் திறப்பது தொடர்பாக அப்போதைய யாழ். மேயர் செல்லன் கணபதி எதிர்கொண்ட பிரச்சனைகள் பற்றியோ, யாழ். மத்திய கல்லூரி அதிபர் இராசதுரை படு கொலை பற்றியோ எந்த விதமான திறந்த வாக்குமூலங்களும் யாழ்ப்பாண மக்கள் மத்தியில் இல்லை என்பது குறிப்பிடதக்கது. தம் பேச்சு / எழுத்து வல்லமைகளை காட்டி இந்த பிரச்சனையை அணுகாமல் மனதுக்கு நெருக்கமாக உண்மைகளை பேசுவதன் மூலமே இதுபோன்ற நிகழ்வுகளின் அவிழாத முடிச்சுகளை அவிழ்க்கமுடியும். மக்கள் புரட்சி என்பதையே தம் போராட்டங்களின் உச்ச கட்ட வெற்றியாய் கொண்டமைந்த இயக்கங்கள்/போராட்ட குழுக்கள் கூட மக்கள் புரட்சியின் அடிநாதமான சமத்துவத்தை பேணவில்லை என்ற குற்றசாட்டு மறுக்கமுடியாது. விமல் குழந்தைவேலின் வெள்ளாவி நாவல் தடை செய்யப்பட்டபோதும் சரி, 95ல் வேள்வி முறை வழிபாடுமுறை தடுக்கப்பட்டபோதும் சரி (கவனிக்க இது கிராம தெய்வ வழிபாட்டுமுறையின் ஓரம்சம், பிராமணர்களால் எதிர்க்கப்படுவது, வெள்ளாளர்களால் ஏற்றுக்கொள்ளப்படாதது. இது நாகரீகம் அற்றாது, மிருகவதை என்று சொன்னால், இதைவிடக் காட்டு மிராண்டித்தனமான அலகு குத்துதல், பறவைக் காவடி, செதி குத்தி காவடி எடுத்தல், தீ மிதித்தல் என்பனவும் தடுக்கப்பட்டிருக்க வேண்டும்), அதுபோல இன்றளவும் தொடரும் குலத்தொழில் முறை போன்ற விடயங்களை முன்வைத்துப் பார்க்கும்போது இனப்பிரச்சனை கொழுந்து விட்டெரிய தொடங்கிய பின்னும் இன்னும் அங்கே இருக்கின்ற சாதீய கட்டமைப்புகளை புரிந்துகொள்ளவேண்டும். ஒவ்வொரு போராட்ட குழுக்களும் ஒரு சாதி பின் புலத்துடன் இயங்கின என்றும் அவை தத்தம் சாதியை உயர்சாதியாக நிறுவி இயங்கினார்கள் என்றும் சொல்லப்படும் குற்றசாட்டை முழுதாக நிராகரிக்கமுடியவில்லை.

3

புலம்பெயர் நாடுகளில் கூட இன்று தீவிரமாக சாதி வேறுபாடுகள் பார்க்கபடுகின்றன. சென்ற கோடை காலத்தில் ஒரு ஊரின் ஒன்று கூடலிற்கு நண்பன் ஒருவனுடன் சென்றிருந்தேன். அப்பொழுது சிறுவர்களுக்கான ஒரு போட்டியில் பரிசுகள் வழங்கப்பட்டுக்கொண்டிருந்தன. இரண்டாம் பரிசு வென்ற ஒரு சிறுவன் தகப்பனை நோக்கி சந்தோஷத்துடன் ஓடி வருகிறான். தகபன் அவன் காதை முறுக்கி கன்னத்தில் ஓர் அறை அறைந்து சொன்னார் “பள்ளப் பெடியன் முதலாவந்திட்டான், நீ எனக்கு பிறந்தனீயா, இல்லாட்டி கொம்மா வேசையாடி பெத்தவளோ” என்று. தமிழ் திரைப்பட நாயகர்களுக்குரிய வீரத்தில் ஒரு சிறு பங்கு இருந்திருந்தால் கூட அந்த தகப்பனை அந்த இடத்திலேயே ஹதம் செய்திருப்பேன். இதே எண்ணம் எல்லாருக்கும் வரும் வரை எம்மினம் அடிமைப்பட்டே இருக்கும்


பின்னிணைப்பு
கடைசியாக இனப்பிரச்சினை இடப்பெயர்வு தொடங்கு முன்பு எடுத்த கணக்கின் படி.
சிங்களவர்கள் —74%
ஈழத்தமிழர்கள் –13%
மலையகத்தமிழர்கள்–5%
தமிழ் பேசும் முஸ்லிம்கள் -7%மற்றவர்கள் -1%
மொத்தத்தில் தமிழ் பேசுவோரின் விகிதம் –25%

சுய விலக்கம்

நகரத்தின் மோஸ்தருக்குள்
முற்றாய் பொருந்திவிட்ட என்னை
அத்தனை சுளுவாய்
அடையாளம் கண்டுவிடமுடியாது

எனக்கே தெரியுமன்றாலும்
அறுந்த செருப்பை
தெருவோர காப்ளரிடம் தான்
தைத்துக்கொள்கிறேன்
வீட்டுக்கே வந்து டோபி
துணியெடுத்துப் போகிறான்
முன்னொரு காலத்து என் அம்மா போல
நீயமரும் இருக்கையிலேயே
எனக்கும் சவரம் சலூனில்

பரம்பரையின் அழுக்கு
அண்டிவிடக்கூடாதென்று
நகங்களைக்கூட
நறுவிசாக வெட்டிக்கொள்கிறேன்
அதீத கவனத்தோடு ஊரை மறக்கிறேன்
புறப்பட்டுவந்த சுவடு தெரியாதிருக்க

சண்டேக்களில் மட்டனோ சிக்கனோதான்
பீப் என்றால் என்னவென்றே
தெரியாது என் பிள்ளைகளுக்கு

ரிசர்வேசனுக்கெதிரான உங்களின்
உரையாடலின் போதும்
“நாயைக் குளிப்பாட்டி
நடுவீட்டில் வைத்தாலும்…” என்கிற போதும்
யாரையோ வைவதாய்
பாவனை கொள்கிறேன்
பதைக்கும் மனமடக்கி

“உங்கம்மாளப் போட்டு
பறையன் சக்கிலிப் போக …”
என்ற வசவுகளின் போது
அதுக்கும் கூட உங்களுக்கு
நாங்க தான் வேணுமா என்றும்
சாவு வீடுகளில் வதக்வதக்கென்று
யாராச்சும் ஜதிகெட்டு கொட்டடித்தால்
எங்கப்பனாட்டம் உன்னால
அடிச்சி ஆடமுடியுமா என்றும்
கேட்கத்துள்ளும் நாக்கை எத்தனை
சிரமப்பட்டு அடக்கிக்கொள்கிறேன் தெரியுமா

இருப்பினும்,
தடயங்களை அழிக்காமல்
உள்நுழைந்தத் திருடனைப்போல்
என்றாவதொரு நாள் எப்படியேனும்
பிடிபட்டு அவமானப்படும் அச்சத்தில்
உங்களோடு ஒட்டாமல்
ஓட்டுக்குள் ஒடுங்கும் என்
புத்தியிலிருந்து நீங்கள்கண்டுபிடிக்கக்கூடும்….

பதிவர் அய்யனாரின் பதிவில் பார்த்த ஆதவன் தீட்சன்யாவின் கவிதை

55 thoughts on “திமிர்

Add yours

 1. //சாதி என்ற கண்ணோட்டத்தை இந்துகளின் மனதில் ஆழமாகப் பதிய வைத்திருக்கிற இந்து மதமே தவறானது என்று நான் கருதுகிறேன்.//அது இந்து மதம் செய்த வேலை அல்ல, அதன் பெயரால் பிழைப்பு நடத்தும் சிலரின் வேலை. மதங்கள் என்றுமே தவறானவை அல்ல, எந்த மதமுமே. மதங்களை விடுத்து மனிதர்களைத் திருத்துங்கள்.

  Like

 2. இதை நான் ஏற்றுக்கொள்ளுகின்றேன். ஆனால் இந்து மதத்தின் காவலர்களாஅக நாம் ஏற்றுக்கொள்ளுகின்றவர்கள் செய்யும் பிழைகள் அனைத்தும் இந்து மதம் செய்யும் பிழைகள் என்றே கருதப்படும். ஒன்று அவர்கள் இந்து மதத்தின் காவலர்கள் என்ற நிலையில் இருந்து அகற்றி இந்து மதத்தை மனிதர்களுக்கானதாக்க வேண்டும், அல்லாவிட்டல் இண்டு மதத்தையே புறக்கணிக்க வேண்டிய கட்டாயம் உருவாகும்

  Like

 3. பார்ப்பாண பீடைகள் இருக்கும்வரை இந்த தரித்திரம் இருந்துதான் தீரும்.மேற்கத்திய அடிவருடி பார்ப்பாண்களை வேருடன் ஒழித்தால் தான் தமிழன் வாழ முடியும்

  Like

 4. //சிறுபான்மை சமூகம் தலை வணங்கித்தான் போகவேண்டுமென்றால் சிங்கள அரசுக்கு எதிரான போராட்டம் எதற்கு?. இலங்கையில் சிங்களவர் 78%ம் தமிழர்கள் 10%ம் இருக்கின்றனர். இவர்களுக்கு சம உரிமை வேண்டுமென்பது போல இதைவிட ஆரோக்கியமான விகிதாசாரம் உள்ள கிறீஸ்தவர்களுக்கும் சம உரிமை கொடுக்கப்பட்டிருக்கவேண்டுமே? ஏன் கொடுக்கபடவில்லை? //குறிப்பிடப்பட வேண்டிய ஒன்று…. எனக்கு தெரிந்து சாதி வெறித்தனம் இலங்கையில் அதிகம் என்றே நினைக்கின்றேன்..

  Like

 5. // நக்கீரன் said… பார்ப்பாண பீடைகள் இருக்கும்வரை இந்த தரித்திரம் இருந்துதான் தீரும். மேற்கத்திய அடிவருடி பார்ப்பாண்களை வேருடன் ஒழித்தால் தான் தமிழன் வாழ முடியும்//100% உண்மை,

  Like

 6. //மேற்கத்திய அடிவருடி பார்ப்பாண்களை வேருடன் ஒழித்தால் தான் தமிழன் வாழ முடியும்//என் பதிவின் ஆரம்பத்திலேயே இந்தியாவ்ல் பிராமணார்கள் செய்யும் அதே அடக்குமுறையை இலங்கையில் வெள்ளாள சமூகத்தினரும் செய்கின்றனர் என்ற கருத்தை முன்வைத்திருந்தேன். அதையும் தாண்டி பிராமணார்கள் என்பதற்காகவே அவர்களை பீடைகள் என்று நீங்கள் அழைப்பதும் ஒரு சாதீய வெறிதான்

  Like

 7. //குறிப்பிடப்பட வேண்டிய ஒன்று…. எனக்கு தெரிந்து சாதி வெறித்தனம் இலங்கையில் அதிகம் என்றே நினைக்கின்றேன்..//இதை நானும் ஏற்றுக்கொள்ளுகின்றேன். எல்லா மக்களும் ஏற்று தம்மை மறு பரிசீலனை செய்யவேண்டும் என்ற ஆசைதான் இந்த பதிவின் அடிநாதம்

  Like

 8. //even karuna raised his voice against prabakaran’s racism and prabakaran responded to him by declaring karuka as an anti tamil person//வணக்கம் அனாமி, கருணா பிரதேச ரீதியா பிழையான பார்வை என்றுதான் தன் கருத்தை முன்வைத்தார். அவர் முன்வைத்த கேள்விகளுக்கு விடுதலை புலிகளிடம் இன்றூவரை சரியான பதில் இல்லாதபோதும், பிரிவினைக்கு பிந்திய தன் நிலைப்பாடுகளால் கருணா முற்றாக தன் முகமிழந்துபோனார்

  Like

 9. வெள்ளாள சாதி வெறி என்பது சிங்கள இனவெறிக்கு ஒப்பானது. இன்று கிழக்கில் மக்கள் போராட்டத்தில் இருந்து விலகிச் செல்வதற்கும் இந்த சாதித் திமிர்தான் அடித்தளம். அன்று தமிழ்பேசும் முஸ்லீம்கள் வெளியேற்றப்பட்டதுக்கும் இந்த சாதி வெறிதான் அடித்தளம். மக்கள் சிதைந்து கிடப்பதற்கு எல்லாம் இநத சாதி வெறிதான் அடித்தளம். இன்றும் புலம்பெயர் நாடுகளில் வெள்ளாள சாதி வெறியே ஈழத்தமிழருக்கு தலமை ஏற்கின்றது. ஆதிக்கம் செலுத்துகின்றது. இதனால் மக்கள் பிளவுபட்டுள்ளனர். இந்த போராட்டம் வெல்லமுடியாமல் சிக்கலுக்குள் சென்று கொண்டிருப்பதற்கு மக்களின் பிளவுபட்ட நிலையே முதன்மைக் காரணம். இந்த நிலைக்கு வெள்ளாள சாதி வெறியே காரணம். இந்த யாழ்பாணத்து சாதி வெறித்திமிர் என்பது ஏனைய சாதிகளை பலிகொடுத்து ஈழம் அடைந்து விட துடிக்கின்றது. அவ்வாறு அடையப்பட்ட ஈழத்தில் அது ஆட்சி செய்ய துடிக்கின்றது. இந்த நிலையில் இதை சாதியாக மட்டும் பார்க்காமல் சாதியோடு கூடிய வர்க்கமாகவும் பார்த்தல் அவசியமாகின்றது. பிராமணர்களுடன் ஒப்பிடுகையில் வெள்ளா சாதி வெறி என்பது வித்தியாசமானதும் மோசமானதும் என்றே சொல்ல முடியும். பிராமணர்கள் தமக்கென்று சில அடிப்படைகளை வைத்திருந்தனர். மாமிசம் உண்ணா நிலை, வேதங்கள் மூலம் முன்நிறுத்தப்பட்ட சாதி உயர்நிலை. கடவுளுக்கு அடுத்த நிலை. பூணூல் தரித்த நிலை என்பன போன்ற அம்சங்கள் அவர்கள் குறைந்தளவு ஒடுக்குமுறையை செய்து சாதியத்தை பேணக் கூடியதாக இருந்தது. ஆனால் யாழ் வெள்ளாள சாதி வெறி என்பது இவ்வாறான கூறுகள் எதுவும் இன்றி சாதியை தக்கவைக்க ஏனைய சாதிகளை மிக கடுமையாக துன்புறுத்த வேண்டியிருந்தது. அதற்கும் மேலக யாழ்ப்பாணத்தில் பிராமணரை விட வெள்ளாளன் உயர்ந்தவன் என்றே இருந்தது என்றால் அது எவ்வகையான சாதித்திமிராக இருக்கும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். ஒரு பிராமணன் சாதி திமிர்கதைத்தால் அவனுடன் தர்க்கம் செய்ய மனம் வரும் ஆனால் யாழ்பாணத்து வெள்ளாளன் கதைப்பானாக இருந்தால் கொல்லவேணும் போல் வெறி வரும். அவ்வளவு மோசமாக கேவலமாக இருக்கும். அவர்களின் சாதராண ஊர்பாசை கூட அடுத்தவனை புண்படுத்துவதாகவே வெளிப்படும். அதை தமிழக மக்கள் பெரும்பாலும் புரிந்து கொள்வது கடினம். ஆனால் ஈழத்தை பொறுத்தவரை ஒரு நல்ல விசயம் என்னவெனில் கிழக்கு தமிழ் மக்கள் மற்றும் யாழ்பாணம் தவிர்ந்த ஏனைய பகுதியில் வாழும் தமிழ் மக்களிடம் இவ்வாறான மோசமான வெறித்தனம் இருந்ததில்லை. அனுசரித்துப் போக கூடிய மனோபாவத்தை உடையவர்கள்.

  Like

 10. //கிழக்கு தமிழ் மக்கள் மற்றும் யாழ்பாணம் தவிர்ந்த ஏனைய பகுதியில் வாழும் தமிழ் மக்களிடம் இவ்வாறான மோசமான வெறித்தனம் இருந்ததில்லை. அனுசரித்துப் போக கூடிய மனோபாவத்தை உடையவர்கள்.//கொழும்பு வாழ் தமிழர்களிடம் பெரிதாக இல்லை, ஆனால் யாழ்ப்ப்பாணா தமிழர்கள் கொழும்பில் இருக்கும்போது கொழும்பில் நெடுங்காலமாக வாழும் தமிழர்களாஇ மதிப்பதில்லை என்பது குறிப்பிடதக்கது. நீங்கள் சொன்ன இந்த் சாதி திமிர் தான் எமது போராட்டம் வலுவிழக்க காரணாம் என்பதிலும் முஸ்லீம்கள் வெளியேற்றப்பட காரணாம் என்பதையும் முழுமையாக ஏற்றுக்கொள்ளுகின்றேன்

  Like

 11. இது மனதார எல்லோரும் உணர்ந்து திருத்தினாலேயே ஒழிய அல்லாவிடின் என்றும் இது கொழுந்து விட்டெரியும். கருத்துகள் இடுவதும், பகிர்வதும் சுலபம். நடைமுறையில் நிறைய சிக்கல்கள் உள்ளன. உள்ளத்தால் இணைந்தாலே ஒழிய அன்றி இதை அழிக்க முடியாது. உங்கள் கருத்துகளும் அதை முன்வைக்கும் விதமும் நன்றாக உள்ளது. தொடருங்கள்.

  Like

 12. யாழ். மாநகர முதல்வர் திரு. செல்லன் கந்தையா நூலகத்தை திறக்கவிடாமல் தடுத்ததற்கு வேறு ஒரு வலிதான காரணம் இருக்கின்றது என்றே நான் கருதுகின்றேன். இதை சாதிய வெறி கொண்டு கதைகளை திரிபு படுத்துகிறார்கள். இதை எல்லோரும் பயன்படுத்துகிறார்கள். இப்படியான பிழையான வழியில் கதைகள் சாதியத்தை நோக்கி திசை திருப்பப்படுகின்றன. உண்மையில் யாழ்.நூலகத்தை திறக்க விடக்கூடாது என்பதுதான் நோக்கமே தவிர, செல்லன் கந்தையா வை தடுக்க வேண்டும் என்பதல்ல. ஒரு வரலாற்றுச் சின்னம் அழிக்கப்பட்டு விட்டது. அதை அப்படியே புணருத்தாரணம் செய்து அந்த அழிப்பை மூடி மறைக்க முயன்றதை தடுப்பதுதான் நோக்கமாக இருந்தது. அதில் கூட தடுத்தவர்கள் தாமதமாகிவிட்டார்கள் என்றே எண்ணத்தோன்றுகிறது. அதை புணருத்தாரணம் செய்ய முன் தடுத்திருக்க வேண்டும். கிளிநொச்சி மத்திய கல்லூரி எவ்வாறு வரலாற்றுச்சின்னமாக பேணப்படுகிறதோ, அவ்வாறு இதனையும் செய்திருக்க வேண்டும். ஆனால் முயன்றார்கள்.காலம் கடந்து விட்டது. யாழ்ப்பாணத்தில் சாதி வெறி உள்ளது என்று சொல்லுங்கள் உங்களை விட அதை 100 மடங்கு மனப்பூர்வமாக ஆதரிக்கிறேன். ஆனால் சில சம்பவங்களை சாதியத்துடன் இணைத்து திரிபுபடுத்தப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.பின்குறிப்பு :- யாழ். பொதுநூலகம் எரிக்கப்பட்டு அது பின்னர் புணருத்தாரணம் செய்யப்பட்டது. ஆனால் எரிக்கப்பட்ட நூலகத்தின் எந்த ஒரு புகைப்படமும் அங்கே நூலகத்தில் இல்லை என்பது மனதை பிழிகின்ற ஒரு விடயம். மனம் வருந்தினேன். என்னால் முடியவில்லை ஏதும் செய்ய. ஆனால் காலம் அதற்கு கட்டளை இடும். காத்திருப்போம்.

  Like

 13. நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை தான். உங்களைப் போல பலர் சிந்திக்கத் தொடங்கி விட்டால் சமூகம் மாற்றமடையும். இல்லாவிட்டால் தமிழர்கள் சாதிரீதியாக பிரிந்தே இருப்பார்கள். தமிழ் தேசியக் கனவும் கானல்நீராகி விடும்.

  Like

 14. யாழ்ப்பாணத்துச் சாதித்தமிரைப் பொறுத்தவரை நீங்கள் சொல்வதை முழுமையாக ஏற்றுக்கொண்டாலும், யாழ். நூலகம் உள்ளிட்ட சில விடயங்களில் உடன்பட முடியவில்லை. அவை திரிபுபடுத்தப்பட்ட பரப்புரைகளுக்குக் கிடைத்த வெற்றியாகவே இருக்கின்றன. உண்மையில், அந்தச் சமயத்தில் வேறு யாராவது திறப்புவிழாவுக்கு முயன்றிருந்தாலும் இதே விளைவுதான் ஏற்பட்டிருக்கும். இந்தியாவில் உள்ளதுபோல மதத்தை அடிப்பைடையாகக் கொண்டதல்ல யாழ்ப்பாணச் சாதிவெறி, அது சமூகத்தை மையமாகக் கொண்டது. அதேநேரம் சாதிவெறிக்கு இணையான பிரதேசவாதமும் யாழ்ப்பாண்த்தில் இருக்கிறது. இவை குறித்து பின்னூட்டத்தில் எழுதினால் அது நீண்டுவிடும். எனவே இதற்கான பின்னூட்டத்தைத் தனிப்பதிவாகவே எழுதுகிறேன்.

  Like

 15. இன்றைக்கும் சிரட்டையில் தண்ணீர் கொடுப்பதை நான் காணவில்லை ஆனால் அந்த வேறு பாத்திரங்கள் என்கிற இரட்டைகுவளை முறை இருக்கிறதென்பதை ஒப்புக் கொள்கிறேன். எங்கள் ஊரில் எல்லா பாடசாலைகளிலும் கிறிஸ்தவமும் கற்பிக்கப்பட்டது ஆனால் சில பாடசாலைகளில் அதற்கான ஆசரியர் நியமிக்கப்படாமல் வேறொரு அசிரியர் அதனை படிப்பிப்பார் அப்படியும் இருந்திருக்கிறது.மற்றப்படி யாழ்ப்பாணத்தார் சாதி பாக்குறது கூடத்தான்.சாதாரணமாய் குலத்தொழில் என்று செய்பவர்ளின் வீடுகளில் சாப்பிட மாட்டோம் என்றிருப்பவர்கள் கோவில்களில் பெரிய நாட்டாமை கட்டுறதை பாத்திருக்கிறன் ஊரில நல்ல மனிசர் எண்டுற பெயர் வேறை அவையளுக்கு.என்னுடைய விளையாட்டுக்கழகத்தில் இந்த விசயம் நடந்திருக்கிறது எங்கடை மைதானம் இருந்தது அந்த மக்கள் அனேகம் வாழ்கிற பகுதியல் அதனால் அவர்களும் வந்து விளையாடுவார்கள் அப்படி ஒரு முறை அவர்களுடைய புதுவருட விருந்துக்கு எங்கள் எல்லோரையும் அழைத்த போது எங்கள் கழகத்தில் பல மூத்த உறுப்பினர்கள் சமாளிச்சுக்கொண்டு நழுவினதைப்பற்றி நான் பார்த்திருக்கிறேன்.ஏன் என்னுடைய பல நண்பர்கள் அப்படித்தான் இருந்தார்கள் இப்பொழுதும் இருப்பார்கள்…காலையியேயே எழுதிய பின்னூட்டம் பதிவிட நேரமில்லாமல் விட்டிருந்தேன் இப்பொழுது பதிந்திருக்கிறேன். எங்கடை சனம் தெளிய இன்னும் சில தசாப்தங்கள் தேவைப்படலாம் அருண்.

  Like

 16. இந்தியா மாதிரி மத அடிப்படையில் இல்லாவிட்டாலும் சமூக தளதடதைக்கொண்டுதான் யாழ்ப்பாணம் சாதி பிரிவினை செய்து கொண்டிருந்தது இருக்கிறது அது எவ்வளவு படிச்சும் (வெறும் புத்தகமும், உழைப்புக்காகவும்) தெளியாமல் இருப்பது தான் திர்வுகள் கிடைக்காமலிருப்பதற்கான காரணம்…

  Like

 17. //இலங்கை தமிழர்கள் மத்தியில் சாதி வெறி என்று கதை எழும்போதெல்லாம் தென்னிந்திய பிராமணரை முன்வைத்தே விவாதங்கள் எழுவது வழக்கம். சாதீய அடக்குமுறைகளின் உச்சக்கட்டமாக பிராமணர்கள் பிரயோகித்த அடக்குமுறைகள் தான் உதாரணம் காட்டப்படுவது வழக்கம். இலங்கையை பொறுத்தவரை பிராமணர்களின் அடக்குமுறைகள் குறைவென்பதால் இலங்கையில் சாதீய அடக்குமுறைகள் குறைவென்ற புள்ளிக்கு இலகுவாக வந்துவிடுகின்றார்கள். ஆனால் உண்மை முற்றிலும் இதற்கு எதிராக இருக்கின்றது.//தென்னிந்தியாவிலும் இதே நிலைமைதான்.பிராமணர்களுக்கு ஒருபடி மேலே செனறு உடல் ரீதியால வனமுறைகளை கட்டவிழ்த்தபடி உள்ளன பிற்படுத்தப்பட்ட சாதிகள். ஆனால் பெரியார் உட்பட எல்லா தலைவர்களும் இந்த சாதிகாரர்கள் என்பதாலும் இச்சாதியினர் பெருபான்மையிராதாலால் இவர்களின அசிங்கங்கள் ஆதரவிற்காகவும் கண்டுகொள்ளாமல் விடப்படுகின்றன.

  Like

 18. யாழ்ப்பாணத்தில் சாதி பாகுபாடு பார்ப்பது அதிகம் என்றாலும் நீங்கள் அதை தமிழரின் விடுதலைப் போராட்டத்தை கொச்சைப் படுத்த ஒரு கருவியாக பயன்படுத்துகிறீர்களோ என்ற ஐயம் எனக்கு உண்டாகிறது.நான் ஒரு சைவ பாடசாலையில்தான் படித்தேன்.அங்கு கிறிஸ்தவ மாணவர்களுக்கு கிறிஸ்தவ பாடம் கற்பிக்கப் பட்டது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.நீங்கள் சொன்ன நிலைமை பல வருடங்களுக்கு முந்தியது. இப்போது மாற்றங்கள் வந்திருக்கும்.அத்துடன் நீங்கள் சொல்லும் இலங்கையின் இன விகிதாசாரக் கணக்கு தவறானது..பல காலமாக இலங்கையில் சரியான கணக்கு எடுக்கவில்லை.கடைசியாக இனப்பிரச்சினை இடப்பெயர்வு தொடங்கு முன்பு எடுத்த கணக்கின் படி.சிங்களவர்கள் —74%ஈழத்தமிழர்கள் –13%மலையகத்தமிழர்கள்–5%தமிழ் பேசும் முஸ்லிம்கள் -7%மற்றவர்கள் -1%மொத்தத்தில் தமிழ் பேசுவோரின் விகிதம் –25%நீங்கள் சிங்கள அரசின் பிரச்சாரம் செய்பவர் மாதிரி தமிழ் பேசும் மக்களின் எண்ணிக்கையை இப்படிக் குறித்தும் ,சிங்கள மக்களின்எண்ணிக்கயை இப்படிக் கூட்டியும் சொல்வதற்கு காரணம் என்ன?

  Like

 19. //கருத்துகள் இடுவதும், பகிர்வதும் சுலபம். நடைமுறையில் நிறைய சிக்கல்கள் உள்ளன. உள்ளத்தால் இணைந்தாலே ஒழிய அன்றி இதை அழிக்க முடியாது//வணக்கம் கதியால்…நடைமுறாஇயில் சிக்கல்கள் இருக்கின்றன என்பதற்காக ஒரு போதும் அடக்குமுறாஇயை அங்கீகரிக்க கூடாஅது. அடக்குமுறையின் வலிகள் அதிகம் அனுபவித்த ஒரு இனம் தனக்குள்ளேயேயும் அடக்குமுறைகளை பிரயோகிப்பது தான் வேதனை.

  Like

 20. //யாழ்ப்பாணத்தில் சாதி வெறி உள்ளது என்று சொல்லுங்கள் உங்களை விட அதை 100 மடங்கு மனப்பூர்வமாக ஆதரிக்கிறேன். ஆனால் சில சம்பவங்களை சாதியத்துடன் இணைத்து திரிபுபடுத்தப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை//தமிழ் விரும்பி,பெருங்கதையாடல்களும் சின்னக்கதையாடல்களும் நடந்து கொண்டே இருக்கின்றன, நாம் எல்லாத்துக்கும் ம் சொல்லிக்கொண்டேயிருக்கின்றோம் என்ற வரிகள் தான் நினைவு வருகின்றனஎந்த சம்பவத்தையும் நான் கட்டாயமாக சாதீயத்துடன் கட்டாயப்படுத்திக் காட்டவில்லை. அப்படியான நோக்கமும் எனக்கு இல்லை. மேற்குறித்த சில பிரச்சனைகள் பற்றிய திறந்த வாக்குமூலங்கள் மக்களிடம் இல்லை என்றுதான் குறிப்பிட்டேன். நீங்கள் வலுவான காரணம் ஒன்று சொன்னீர்கள். நீங்களே சொன்னதுபோல அப்படியான நோக்கமென்றால் அது முன்னரே செய்யப்பட்டிருக்கவேண்டும். இதேபோல இது சாதிய காரணங்களாலேயே நடைபெற்றது என்று வலுவாக சொல்பவர்கௌம் இருக்கின்றனர். எனவே இப்படியான பிரச்சனைகள் பற்றிய திறாந்த விமர்சனக்கள் மூலமாகவே அடிப்படை காரணிகளை அறியலாம் என்றெண்ணுகின்றேன்.மேலும் நான் இங்கே எந்த விடயத்தையும் நான் திரிபு படுத்தவில்லை. யாழ்ப்பாணத்தில் சாதிப் பிரச்ச்னையே இல்லை, எல்லா சாதியினரும் சமமாக மதிக்கப்படுகின்றனர். என்று சொல்வது தான் திரிபு படுத்தல். ஆனால் அப்படி சொல்லி செல்வது பாத்திக்கப்பட்ட மக்களாஇ எவ்வ்ளவு பாதிக்கும் தெரியுமா???

  Like

 21. வாருங்கள் கலையரசன்//இல்லாவிட்டால் தமிழர்கள் சாதிரீதியாக பிரிந்தே இருப்பார்கள். தமிழ் தேசியக் கனவும் கானல்நீராகி விடும்.//இந்த நோக்கில் நான் எழுதப்போக, நான் எழுதுவதே தமிழ் தேசியத்தை கொச்சைப்படுத்துகின்றாது என்று சிலர் நினைக்கின்றனர்.

  Like

 22. வணக்கம் கிருஷ்ணா,யாழ்ப்பாணாதில் பிரதேச வாதம், சாதிப்பாகுபாடு இரண்டும் பெருமளவிலேயே உள்ளாது. மதப்பிரச்சனை பெருமளவு இல்லாதபோதும், பெரும்பான்மை மதத்தினரின் ஆதிக்கம் கல்லூரிகளில் சிறுபான்மை இனத்தவரின் மீது திணிக்கப்படுகின்றது உண்மை.

  Like

 23. வணக்கம் தமிழன் கறுப்பி, மீள் வருகைக்கு நன்றி//என்னுடைய விளையாட்டுக்கழகத்தில் இந்த விசயம் நடந்திருக்கிறது எங்கடை மைதானம் இருந்தது அந்த மக்கள் அனேகம் வாழ்கிற பகுதியல் அதனால் அவர்களும் வந்து விளையாடுவார்கள் அப்படி ஒரு முறை அவர்களுடைய புதுவருட விருந்துக்கு எங்கள் எல்லோரையும் அழைத்த போது எங்கள் கழகத்தில் பல மூத்த உறுப்பினர்கள் சமாளிச்சுக்கொண்டு நழுவினதைப்பற்றி நான் பார்த்திருக்கிறேன்.//இப்படியான பல விடயங்களை நான் அவதானித்து இருக்கின்றேன். என் சிறு வயதில் நான் படித்த ஒரு பாடசாலை ஒன்றில் கட்டடத்தினுள்ளே பலசமயங்கள் நாய் நரகல் காணப்படும். அப்படி காணப்படும்போதெல்லாம் ஒரு குறித்த மாணவனை கூப்பிட்டே அதை அள்ள சொல்லுவர். அவனுக்கும் எமது வயது. அது ஏனென்று நான் பள்ளிக்கூடம் கூட்டிப்போகும் ஒரு அக்காவிடம் கேட்டபோது அவன் ஒரு குறிப்பிட்ட சாதியை சேர்ந்தவன் என்றூ பதில் சொன்னார்கள்

  Like

 24. மீண்டும் தமிழன் கறுப்பி,//தளதடதைக்கொண்டுதான் யாழ்ப்பாணம் சாதி பிரிவினை செய்து கொண்டிருந்தது இருக்கிறது அது எவ்வளவு படிச்சும் (வெறும் புத்தகமும், உழைப்புக்காகவும்) தெளியாமல் இருப்பது தான் திர்வுகள் கிடைக்காமலிருப்பதற்கான காரணம்…//இது தான் நிஜம்.. அதிலும் புலம்பெயர்ந்த நாடுகளிலும் இது தொடர்வது இன்னும் வருத்தம் தரப்படவேண்டியது.

  Like

 25. வணக்கம் அனாமி, அருமையான சில விடயங்களை முன்வைத்துள்ளீர்கள்//வெள்ளாள சாதி வெறி என்பது சிங்கள இனவெறிக்கு ஒப்பானது.//இரண்டுமே மிருகத்தனமானவை// அவர்களின் சாதராண ஊர்பாசை கூட அடுத்தவனை புண்படுத்துவதாகவே வெளிப்படும். அதை தமிழக மக்கள் பெரும்பாலும் புரிந்து கொள்வது கடினம். ஆனால் ஈழத்தை பொறுத்தவரை ஒரு நல்ல விசயம் என்னவெனில் கிழக்கு தமிழ் மக்கள் மற்றும் யாழ்பாணம் தவிர்ந்த ஏனைய பகுதியில் வாழும் தமிழ் மக்களிடம் இவ்வாறான மோசமான வெறித்தனம் இருந்ததில்லை. அனுசரித்துப் போக கூடிய மனோபாவத்தை உடையவர்கள்//கிழக்கு பற்றி எனக்கு அனுபவமில்லை. ஆனால் வடமராட்சி, தென்மராட்சி பகுதிகளிலும் இந்தப் பிரிவினைகளி கண்டிருக்கின்றேன்.

  Like

 26. வணக்கம் அனாமி//தென்னிந்தியாவிலும் இதே நிலைமைதான்.பிராமணர்களுக்கு ஒருபடி மேலே செனறு உடல் ரீதியால வனமுறைகளை கட்டவிழ்த்தபடி உள்ளன பிற்படுத்தப்பட்ட சாதிகள். ஆனால் பெரியார் உட்பட எல்லா தலைவர்களும் இந்த சாதிகாரர்கள் என்பதாலும் இச்சாதியினர் பெருபான்மையிராதாலால் இவர்களின அசிங்கங்கள் ஆதரவிற்காகவும் கண்டுகொள்ளாமல் விடப்படுகின்றன.//பிராமணர்களின் ஆதிக்கத்தை எதிர்க்கின்றோம் என்ற பெயரில் பிராமணர்களை தம் ஆதிக்க்த்தின் கீழ் வைத்திருக்க முயல்கின்றனரோ என்று நானும் சில சமயம் யோசித்திருக்கின்றேன். அப்படி இருப்பின் அது ஒரு போதும் ஒரு தீர்வாக அமையாது. எல்லா சாதியினரும் எந்த ப்பகுபாடுமில்லாமல் ஒருவரை ஒருவர் சமமாக, சமத்துவமாக, எந்த துவேஷமும் இன்றி பார்க்கும் நாளே உண்மையான மாற்றம் வந்த நாளாக கொள்ளப்படமுடியும்

  Like

 27. வணக்கம் சென்,//நீங்கள் அதை தமிழரின் விடுதலைப் போராட்டத்தை கொச்சைப் படுத்த ஒரு கருவியாக பயன்படுத்துகிறீர்களோ என்ற ஐயம் //விடுதலைப்போராட்டத்தை கொச்சைப்படுத்தவேண்டிய எந்த தேவையும் எனக்கு கிடையாது. சிங்களவர்கள் 78%ம் தமிழர்கள் 10%ம் என்று நான் சொன்னது அண்மையில் tvo தொலைகாட்சி ஒன்றில் நடந்த விவாதம் ஒன்றில் தமிழர்களின் (அனேகமாக அது வக்கு கிழக்கு வாழ் தமிழர்கள்) சதவீதம் 8% என்று கூறப்பட்டது. அப்போது அதே மேடையில் இருந்த தமிழ் காங்கிரஸ் பேச்சாளார் டேவிட் பூபாலபிள்ளை அதை மறுக்கவில்லை. அதை தான் நான் 10% என்று கூறினேன். முஸ்லீம்களையும் தமிழ் பேசுபவர்களாக கருதி அவர்களியும் சேர்த்து, மலையத தமிழர்களையும் சேர்த்து தமிழர்கள் 20% என்ற ஒரு தரவும் அதில் தரப்பட்டது.நீங்கள் குறிப்பிட்டதை அடுத்து அதை பதிவுசெய்துவிட்டேன்.அதே நேரம், நான் கூறிய கருத்து சிறுபான்மை தமிழர்கள் எப்படி பெரும்பான்மை சிங்களவரால் சமமாக மதிக்கப்படவேண்டுமோ, அதே அளவு நியாயம் தமிழர்களுல் சிறுபான்மையாக உள்ள தமிழ் கிறீஸ்தவர்களும் சமமாக மதிக்கப்படவேண்டும் என்பதே…இதனை புரிந்துகொள்ளாமல் நீங்கள்//நீங்கள் சிங்கள அரசின் பிரச்சாரம் செய்பவர் மாதிரி தமிழ் பேசும் மக்களின் எண்ணிக்கையை இப்படிக் குறித்தும் ,சிங்கள மக்களின்எண்ணிக்கயை இப்படிக் கூட்டியும் சொல்வதற்கு காரணம் என்ன?//என்று கூறியுள்ளீர்கள். நாம் எம் சமுதாயத்தில் உள்ள மக்களை சமத்துவமாக நடத்தாத வரை எமக்கு விடுதலை கிடையாது, அப்படி கிடைத்தால் கூட அது கொண்டாட்டகரமாக இருக்காது. இந்த கருத்தின் அடிப்படையில்தான் இந்த கட்டுரை அமைந்தது. எனது சமூகத்தில் இருக்கும் பிழைகளை சொன்னதற்காக இப்படி அவசரப்பட்டு சிங்கள அரசின் பிரசாரகர் என்றெல்லாம் நீங்கள் உவமானம் காட்டுவது அழகல்ல

  Like

 28. //Jaffna people developed muchthey use “Jam bottles” to give “un sweetened plain tea” to ladies who sweep the road and gents who remove “buckets”…//திரைப்படங்களில் கதா நாயகர்கள் தாழ்த்தப்பட்ட சாதியினராய் காட்டப்படும்போது வருந்தும் எம்மவர்கள் நிஜத்தில் இப்படித்தான் இருப்பார்கள்

  Like

 29. Well, I did hear, as it will naturally be so, that casteism has reduced much in the last 25 years, and is attributed to some of the policies of the LTTE. So people have been brought to change. Of course, people seeing reason before religion and dead customs is another cause. Certainly, the Tamil society that lives outside, apart from a few rare incidences, is much more harmonized. It would be extreme to compare current Tamil Eelam or Tamil diaspora, with that of India at large. India is still greatly influenced by the 2% of Brahmins and of the other higher caste people. And will be so for a long time to come. Personally, I feel that it is more than Hindu religion, especially the last 200 years or more. Wherever you look, the South Asians have an inferiority complex to Caucasians. Not a surprise. Even upper caste men feel this inside them, if you look at the actions of some prominent personalities in India. So to maybe ease their subconscious of the past feelings, these people now are being more cruel to their own, since they have some excuse, and makes them feel better. Even the latest uproar against Slumdog Millionaire, was more because the ‘White man’ is looking down on us, than any real anger at the way the country was portrayed. -kajan

  Like

 30. உங்கள் பதிலுக்கு நன்றி அருள்மொழிவர்மன்.நீங்கள் ஒரு பதிலில் சொன்னமாதிரி சாதி பாகுபாடு ,பிரதேச பாகுபாடு என்று யாழ்ப்பாணத்தமிழர் மத்தியில் அன்று இருந்தது உண்மைதான்.நான் சிறுவனாக இருந்தபோது அது இருந்தது .இன்றைய நிலைமை நிச்சயம் மாறி உள்ளது.இன்னும் முழுதாக மாறாவிட்டாலும் நிலைமையில் திருத்தங்கள் ஏற்ப்பட்டுள்ளது .அதே சமயம் சிலர் இதைச்சொல்லி தமிழர்கள் விடுதலைக்கே தகுதி இல்லாதவர்கள் மாதிரி அவர்களின் விடுதலைப் போராட்டத்தின் நியாயத்தன்மையை மறுப்பதற்கு இந்த விடயங்களைப் பற்றி மிகைப்படுத்தி எழுதி வருகிறார்கள் என்ற ஆதங்கத்தில்தான் அப்படி எழுதினேன்.இங்கு வரும் ஒரு சில ஈல்த்தமிழ் எதிர்ப்பு பதிவர்கள் சிலர் இதைத்தான் கையாளுகிறார்கள்.அத்துடன் யாழ்ப்பாணத்திலோ அல்லது பொதுவாக ஈழத்தமிழர் மத்தியிலோ மதவாதம் என்பது மிகவும் குறைவாகத்தான் உள்ளது.பொதுவாக சைவர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் புரிந்துணர்வு உள்ளது.அப்படி இருக்கும் போது இல்லாத ஒரு குற்றச்சாட்டை அவர்கள்மீது போட்டு அவர்களை இந்தியாவில் இருக்கும் ஹுந்துதுவா மதவாதிகள் மாதிரியானவர்கள் என்பது போன்ற ஒரு பிழையான ஒரு கருத்து எமது இந்திய தமிழ் சகோதரர்கள் மத்தியில் உருவாக நாங்கள் காரணமாக இருக்க கூடாது.உங்களுக்கே தெரியும் மாவீரர்களில் பலரும் சைவம் கிறிஸ்தவம் என்று இரு மதங்களையும் சேர்ந்தவர்கள் என்று.ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு.எங்களை பிரதேச ரீதியாக மதரீதியாக பிரித்து எங்கள் விடுதலை உணர்வை பலவீனமாக்கி சிதைக்க சிங்கள ஏகாதிபத்தியம் பல சதிகளை செய்தது ,செய்து கொண்டு இருக்கிறது. ஓரளவு வெற்றியும் அடைந்துள்ளது.அதற்க்கு எதிராக நாங்கள் செயல்பட வேண்டும்.தமிழர்களின் மிகப் பெரிய பலவீனங்கள் சாதி வேறுபாடு.ஒற்றுமை இன்மை.மற்ற இனங்களை விட கூடுதலான அளவில் துரோகக் கும்பல்.தன்னம்பிக்கை இல்லாமை.தாழ்வு மனப்பான்மை .தமிழரின் பெரிய பலங்கள் பலநாடுகளிலும் ,பல கண்டங்களிலும் பரவி அந்தந்த நாட்டு அரசியலில் தாக்கம் உண்டாக்கவும் ,பல முக்கிய மொழிகளில் புலமை பெறவும் அதன் மூலம் பல இன மக்களோடு பழக வாய்ப்பு உள்ளது.பழமை வாய்ந்த அதே சமயம் பல கோடிக்கணக்கான மக்களால் பேசப்படும் ஒரு மொழியைத் தாய்மொழியாகக் கொண்டிருப்பது.பல திறைமைசாலிகளையும் மூளைசாளிகளையும் தன்னகத்தே கொண்டுள்ளது.கடுமையான உழைப்பாளிகள் நீங்கள் சொல்வது மாதிரி சாதி பாகுப்பாடு என்பது மிகப்பெரிய ஒரு பலவீனம்தான்.அதை இல்லாமல் செய்ய இளைய சமுதாயம்தான் முன்னிற்க வேண்டும்.–சென்

  Like

 31. வணக்கம்ணா…நானும் இருபதுவருடங்கள் யாழ்பாணத்தில் குப்பை கொட்டியவன் என்ற தகுதியில் சொல்கிறேன்…நீங்கள் சொல்வது போண்ற இந்த நிலமைகள் கடந்த இரு சகாப்தங்களின் முன்னர் இருந்திருக்கலாம்…ஆனால் அவை இப்போது பல மாறுதல்களினை கண்டுவிட்டது..

  Like

 32. //I did hear, as it will naturally be so, that casteism has reduced much in the last 25 years, and is attributed to some of the policies of the LTTE. So people have been brought to change.//வணக்கம் கஜன், நீங்கள் சொன்ன படி இந்த பாகுபாடு கடந்த்ச இருபதாண்உகளில் குறாஇந்திருக்கின்றது. ஆனால் அது குறாஇந்திருக்கின்றது என்பதற்காக அதனுடன் சமரசம் செய்ய முடியாது தானே. எனக்கு தெரிந்து பாடசாலைகளில் இந்த பாகுபாடுகளை அவதானித்தேன். இன்றளவும் சில நண்பர்களுடன் பேசும்போதும் அவர்களும் அதை ஏற்றுக்கொள்ளுகின்றனர். இந்த சந்தர்ப்பத்தில் பாதிக்கப்பட்டவர்கள் மன நிலை எப்படி இருந்திருக்கும்……. இந்த பதிவு எழுதியதே அந்த நோக்கத்துடன் தான். நாம் பொதுவாக யாரையாவது பேசும்போது “பற” என்ற சொல்லை முன்னால் இணைத்து பேச தொடங்குவது வழக்கம். கேட்டால் இது அர்த்தம் கவனியாது வழங்கும் ஒரு சொல் (slang) என்று சொல்லுவோம். இத் மனதளாவில் எவ்வளவு தாக்கத்தை உண்டாக்கும். நாம் இது சிலர் மட்டும்தான் பாதிக்கப்படுகின்றனர் என்று சொல்லி நழுவி விடுவோம் / இது தவிர்க்க முடியாதது என்று சொல்லி தப்பித்துவிடுவோம். ஆனல் ஒருவேளை அப்படி பாதிக்கபடும் சிலருள் ஒருவனாக நாமும் இருந்தால்????

  Like

 33. மீண்டும் வணக்கம் சென்//தமிழர்கள் விடுதலைக்கே தகுதி இல்லாதவர்கள் மாதிரி அவர்களின் விடுதலைப் போராட்டத்தின் நியாயத்தன்மையை மறுப்பதற்கு இந்த விடயங்களைப் பற்றி மிகைப்படுத்தி எழுதி வருகிறார்கள் என்ற ஆதங்கத்தில்தான் அப்படி எழுதினேன்.//அப்படியான பதிவுகளை நானும் வாசித்திருக்கிறேன். அந்த வகைப்படுத்தல்காளுல் எனது எழுத்துக்கள் ஒரு போதும் வரா. எம் சமுதாயத்தில் இருக்கும் சில குறைகள் மீதான விமர்சனமாகவே இந்தப்பதிவு எழுத்தது. மீண்டும் ஒரு முறை வாசித்து பார்த்து புரிதுகொள்ளுவீர்கள் என்றூ நம்புகின்றேன்

  Like

 34. வணக்கம் கவின்//நீங்கள் சொல்வது போண்ற இந்த நிலமைகள் கடந்த இரு சகாப்தங்களின் முன்னர் இருந்திருக்கலாம்…ஆனால் அவை இப்போது பல மாறுதல்களினை கண்டுவிட்டது..//மாற்றம் வந்திருக்கின்றது என்பது உண்மை, இன்னும் மாறாவேண்டும் என்பது அதையும் தாண்டிய உண்மை. இது போன்றா விடயங்கள் zero tolerance என்கிற ரீதியில் அணுகப்படவேண்டியவை

  Like

 35. “சிவனுக்கு” முதன்மை கொடாத போது இங்கே அவிப்பொருளுக்கு ஆசைப்பட்டு வந்தீர்களா? என்ற வீரபத்திர தோரணையிலே தான் யாழ் நூலக திறப்புகள் அன்றிரவு பறித்துச்செல்லப்பட்டது என்பதுதான் உண்மை. நண்பர் ஒருவர் பின்னூட்டத்தில் குறிப்பிட்ட காரணம் வலியது தான், அனால் அதற்காக அந்த நிகழ்வு தடுக்கப்படவில்லை. அதற்கும் தொடர்புபட்டவர்களின் சாதிக்கும் உள்ள தொடர்பு ஏற்படுத்தப்பட்ட ஒன்று என்பதுதான் என் விளக்கமும்…

  Like

 36. அருண், சொல்லப்போனால் புலம்பெயர் நாடுகளில் தான் இது தீவிரமாய் இருக்கிறது யாழ்ப்பாணம் மாறி பல காலம் ஆயிட்டுதெண்டு நினைக்கிறேன் ஏனெனில் புலம்பெயர் நாடுகள் இன்னமும் 86- 92 ல் தான் இருப்பதாக நான் நினைக்கிறேன்…

  Like

 37. வணக்கம் துர்க்காஉங்கள் கவிதை வரிகள் போலவே வீரியமான வரிகளில் பதில். நவாலி தேவாலய தாக்குதல், ஒபாமா பற்றிய பதிவுகளிற்கும் நீங்கள் இட்ட பின்னூட்டத்தின் வரிகளை அணு அணுவாக சுவைத்தவன் நான்.கருத்துக்கு நன்றி. இப்படியான கருத்து பரிமாறல்களாத்தான் நான் கோருகின்றேன்.

  Like

 38. //அருண், சொல்லப்போனால் புலம்பெயர் நாடுகளில் தான் இது தீவிரமாய் இருக்கிறது யாழ்ப்பாணம் மாறி பல காலம் ஆயிட்டுதெண்டு நினைக்கிறேன் ஏனெனில் புலம்பெயர் நாடுகள் இன்னமும் 86- 92 ல் தான் இருப்பதாக நான் நினைக்கிறேன்…//தமிழன் கறுப்பி, யாழ்ப்பாணம் மாறிவிட்டது என்பத நான் ஒத்துக்கொள்ளாமாட்டேன். போர் சூழலில் சற்று ஓய்ந்து போயிருக்கலாம், ஆனால் மக்கள் மனநிலை மாறிவிட்டது என்று ஏற்றுக்கொள்ளமுடியாது. மேலும், குறைந்து விட்டது என்பதற்காகவே சகித்துக்கொண்டு போக முடியாத விடயம் இது என்பது எனது கருத்து

  Like

 39. you have excellently handled a vesy sensitive problem. even when responding to comments you gently stressed your opinions.good job. keep it up

  Like

 40. ஜெகாதொடர்ச்சியான உங்கள் ஆதரவுக்கு மிகுந்த நன்றிகள். கடுமையான அலுவலக பணிகளுக்கும் நேரப்பற்றாக்குறாஇக்கும் வளாரும் நிலையில் உள்ள எமக்கு நீங்கள் தரும் பேராதரவுக்கு மிக்க நன்றிகள்

  Like

 41. theepan…என் வலைப்பூக்களுக்க் முதன் முதலாக இட்ட பதிவுகளுக்கு நன்றிகள். தொடர்ச்சியான எத்தனையோ விவாதங்களுக்கு பின்னர் எழுதியே ஆகவேண்டும் என்ற கட்டாயத்தில் தான் இந்த பதிவை எழுதினேன் அனாமி..பாராட்டுகளுக்கு நன்றிகள்

  Like

 42. ஆனால் என் அனுபவத்தில இப்ப நான் அனுபவிக்கிற வேதனை கூட இதே தான்… அரும்பிய காதல் சிலவினாடிகளிலேயே என் சாதி என்ன என்று தெரிய ஆவல் பட்டது, சொன்னேன்… பிரச்சனை இல்லை என்றது… (இத்தனைக்கும் நான் என சாதியை மற்றவருக்கு சொன்னது இது தான் முதல் தரம்… உயர்தரம் படிக்கும் வரை என் சாதியே தெரியாமல் வளர்ந்தேன்…). அப்புறம் சரி திருமணம் என்று போனால் பெற்றாரின் அனுமதி தேவைப் படுகிறது… ஏதோ என் அம்மா செய்த தப்பு?? அப்பாவின் சாதியை தான் சொல்லோனுமாம், அதால அவை விசாரிச்சதில என்னை கட்டின பிறகு தங்கள சமூகத்தில ஒதுக்கிடுவானுகலாம் என்று அவையிண்ட அக்காவும் அம்மாவும் சொல்லுகினம் இப்ப.ஆனாலும் இணைந்த மனம் வாழத் துடிக்குது என்று நம்புகிறேன்… இருந்தும் ஒவ்வொரு முறையும் சாதி பற்றி கதைக்கும் போது.. “திருமணத்தின் (பெற்றார் ஆசீர்வாதம் இல்லாமல் களவா தான்) பின் எல்லாம் சரி,மீண்டும் இதே பிரச்சனை எங்கட பிள்ளைகள் கட்டும் போது தான் வரும்” என்று ஆறுதல் சொல்லுது என்னோட வாழத் தயாராகியும் சாதி வெறி இன்னும் தணியாமல்…. 😦 .முதல் தரம் வாழ்க்கையில் பாதிக்கப் படுகிறேன்… என் வீட்டில சாதியை சொல்லி மற்றவைய தாழ்த்துறது நடந்திருக்கு… இப்ப என்னக்கே திரும்பி நடக்குது… அம்மாக்கு இதை சொல்லமுடியாமல் என் படிப்புக்கு வெளில நானே இதை சொல்லவும் விரும்பாமல் (same as in the poem in this article) இதுவரை எப்படி என் சாதி மற்றவைக்கு விசேடமாக என் நண்பர்களுக்கு தெரியாமல் இருந்ததோ அப்பிடியே இருக்கோனும் என்றால் சாதிக்காக காதலை இரண்டாம் முறை தியாகம் பண்ண வேணும்… குழப்பத்தில் இருக்கும் போது தான் உங்கள் பதிவு பார்த்தேன்.. நாங்களா பாத்து திருந்தினாலே ஒழிய மற்றவை பற்றி யோசிச்ச வாழ்க்கை இல்லை என்று நான் தேடிப் பிடிச்ச உறவுக்கு சொல்ல முடியாமல் இங்க பின்னூட்டமாப் போடுறன்…உண்மையில நான் இரண்டு சாதிக்கு சொந்தமா இருந்தும்.. என்னை குறைவு என்று சொல்லுறது அதில ஒரு சாதியை சேர்ந்த காதல் உறவு தான்… இது ஒரு சின்ன வித்தியாசம் எப்பிடி பாதிக்குது இந்த பிரதேச வாத (they are from another area – high standard???) சாதிவெறியர்களால்( in my parents only one is from another cast) என்றதுக்கு நல்ல உதாரணம்… முப்பது வருடத்துக்கு முன் என் பெற்றார் அனுபவித்தது நான் அறியவில்லை.. அனால் ஒரு பக்க உறவுகள் இல்லாமல் போனது இந்த சாதி வெறியால் என்று உயர் தரத்தில் கற்கும் போது தான் உணர்ந்தும்.. இனிமேல் எங்கட காலத்தில இதெல்லாம் சகஜம் (those elatives (for a long time non-related) came to me and started to say the relationship to me – when i was in 16+.)…. சாதி வெறி இல்லை என்று வளந்தவன் நான்….. கடைசியில எல்லாமே கானல் நீர் தானோ…………..இப்பவும் யாழ்ப்பாணத்திலை அதே நிலைமை தான் என்று என் சொந்த அனுபவத்தில சொல்லுறன்… என்ன தான் செய்வது என்று யோசிக்கும் போது தான் இந்த பதிவு கண்டேன்.. இதுவரை உணராத சாதியை இப்ப உணர்கிறான்…சில மாதங்களுக்கு முன் இந்த பதிவை பார்த்திருந்தால் உங்களுக்கு தேசத் துரோகி பட்டமே தந்திருப்பன்… அனால் இப்ப அனுபவிக்கிறான் என்றதால முடியேல்ல நிஜத்தை ஜீரணிக்க…

  Like

 43. பிளாட்டினம் வணக்கம்..உங்கள் நீண்ட பதிவை பார்த்து எனக்கௌ என்ன தீர்வு சொல்வதிலை என்றே தெரியவில்லை. காதல் மட்டுமே ஜாதி மத பேதங்களை ஒழிக்கும் என்று சினிமாவில் சொல்வார்கள். ஆனால் நிஜத்தில் இவை எல்லாவற்றிற்கும் உட்பட்டே காதல்கள் தீர்மானிக்கப்படுகின்றன. இப்படியான முட்டாள்தனங்களால் காதல் தீர்மானிக்கப்படுவது கொடுமை. எனக்கு இந்த பதிவெழுதியபோது பலரும் யாழ்ப்பாணத்தில் இதெல்லாம் இப்போதில்லை. நீங்கள் சொல்வதெல்லாம பழைய கதை என்றூ சொன்னார்கள். ஒருவர் நீங்கள் சிங்கள அரசு போலவே பிரச்சாரம் செய்கின்றீர்கள் என்று கூட சொன்னார். ஆனால் யாழ்ப்பாணத் தமிழர்கள் மத்தியில் ஜாதி வெறியும், பிரதேசவாதமும் இன்னும் அப்படியே இருக்கின்றன..உங்கள் நிலைக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. எதையும் எதிர்கொள்ள உங்களை தயார்ப்படுத்திக் கொள்ளுங்கள்

  Like

 44. இது அருமையான எழுத்தல்ல… ய தார்த்தம்! யாழ்ப்பாணத்தில் ஜாதி வெறி குறைந்து விட்டது என்று எண்ணுபவர்களுக்கு நான் சொல்ல விரும்புவதெல்லாம் இன்றைய நிலையில் அவர்களுக்கு வேறு பல பிரைச்சனைகள்… அவையெல்லாம் தீர்ந்துவிட்டால் பழையாடி சாதியைக் கையிலெடுப்பார்கள்

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

Website Powered by WordPress.com.

Up ↑

%d bloggers like this: