சாதி என்ற கண்ணோட்டத்தை இந்துகளின் மனதில் ஆழமாகப் பதிய வைத்திருக்கிற இந்து மதமே தவறானது என்று நான் கருதுகிறேன். நீங்கள் வீழ்த்த வேண்டிய எதிரி சாதியைக் கடைப்பிடிக்கும் மக்களல்ல. சாதிகளின் மதமான இந்து மதத்தை மக்களுக்குக் கற்றுத் தந்திருக்கிற சாத்திரங்களே உங்களின் பயங்கர எதிரி. சமபந்தி விருந்தில் கலந்து கொள்ளாதவர்களையும் கலப்புமணம் செய்யாதவர்களையும் விமர்சிப்பதும் கேலி செய்வதும் அல்லது எப்போதாவது சில சமயங்களில் சமபந்தி விருந்தை நடத்துவதும் கலப்பு மணவிழாவைக் கொண்டாடுவதும் வீண் வேலையாகும். – அம்பேத்கார்

வெகுதாமதமாக இன்றுதான் வெண்ணிலா கபடிக்குழு திரைப்படத்தை பார்த்தேன். வழமை போல கனடாவில் இத்திரைப்படத்தை திரையிடவில்லை. திரைப்படங்களை திரையரங்கில் சென்றுதான் பார்ப்பது அல்லது அத்திரப்படத்தின் உத்தியோகபூர்வ பிரதி வெளியான பின்னரே பார்ப்பது என்ற கொள்கையில் தீவிரமாக இருந்ததால் (கள்ள விசிடியில் திரைப்படம் பார்க்கும் எவருக்கும் நல்ல திரைப்படம் வரவில்லையே என்று கதைக்கவே உரிமையில்லை) இந்த நிலை. கனடாவில் நல்ல திரைப்படங்களை திரையிடுவதில்லை என்ற ஒரு கொள்கை நெடுநாட்களாக பின் பற்றப்படுகின்றது. சுப்ரமணியபுரம், அஞ்சாதே, சேது, சென்னை 600 028, போன்ற பரவலான பாராட்டுக்களை பெற்ற எந்த படங்களும் இங்கு திரையிடப்படவிலை. ஆனால் வில்லு, குருவி, குசேலன், ஏகன், ஆழ்வார், 1977 போன்ற திரைக்காவியங்கள் எல்லாம் பலத்த விளம்பரங்களுடன் திரையிடப்படுகின்றன.

பொதுவாக மலையாள, லத்தீன் அமெரிக்க, ஐரோப்பிய, இரானிய திரைப்படங்களை பார்ர்க்கும்போது அந்நாட்டு மக்களின் வாழ்க்கை முறைகளை, கலாசாரத்தை எம்மால் கண்டுகொள்ள முடிகின்றது. ஆனால் தமிழ் திரைப்படங்களில் ஒருபோதும் அப்படி இருந்தது கிடையாது. (அல்லது எப்போதாவது ஒரு முறை விதி விலக்காக இருந்திருக்கும் – விதி விலக்குகள் ஒரு போதும் விதிமுறைகள் ஆகா). ஒரு உதாரணத்துக்கு தமிழ் திரைப்படங்களில் எப்போதும் தொழிலாளி மீது முதலாளியின் மகள் காதல் கொண்டு அலைவார். அல்லது அதிகம் பிடித்த கதாநாயகி படிக்காத நாயகன் மீது / பணாக்கார பெண் ஏழை இளைஞன் மீது காதல் கொண்டலைவர். ஆனால் நடைமுறை அதுவல்ல. பொதுவாக திரைப்படங்கள் கிராமப்புற இளைஞர்களை குறிவைத்து எடுக்கப்படுவதால் அவர்களை திருப்திப்படுத்த இப்படியான கோமாளித்தனங்களை திரையில் காட்டுகின்றனர். இது பலருக்கு கனவாக இருக்கலாம், ஆனால் நடைமுறை அப்படியல்ல. உண்மையில் திருமண பந்தங்களில் குடும்ப செல்வாக்கும் அவர்களின் பொருளாதார கல்வி நிலைகளும் பெரும் செல்வாக்கு செலுத்துகின்றன. இதில் இருக்கின்ற நியாயங்களை நான் ஏற்றுக்கொள்ளுகின்ற அதே நேரம் நடைமுறையில் அப்படி நடக்காதபோது, பணக்கார பெண்களும், படித்த பெண்களும் படிக்காத, ஏழை இளைஞர்களை தான் விரும்புவர் என்று எம் ஜி ஆர் முதல் இன்றைய தனுஷ் காலம்வரை செய்யப்படுகின்ற கற்பனாவாதங்கள் முற்று முழுதாக எதிர்க்கபடவேண்டியன என்று கருதுகின்றேன். அதே போல நாயகனை சர்வ வல்லமை படைத்தவராகவும், நாயகி புனிதத்தின் பிம்பமாகவும் செய்யப்படும் கட்டமைப்புகள் தமிழ் சினிமாக்கள் எதுவுமே தமிழரின் சினிமாக்கள் அல்ல என்றே காட்டிவருகின்றன. சற்று யோசித்துப் பார்க்கும்போது தமிழர்களின் வாழ்க்கையுடன் மலையாள, சிங்கள சினிமாக்கள் கொண்டிருக்கும் நெருக்கத்தை கூட தமிழ் சினிமாக்கள் கொண்டிருப்பதில்லை. இந்த போலி விம்பங்களை தொடர்ச்சியாக உடைத்து தமிழர்களின் சினிமாவாக தன்னை அடையாளப்படுத்தி இருக்கின்றது வெண்ணிலா கபடிக் குழு. (இத்திரைப்படத்தில் கூட எம். எஸ். சி படிக்கின்ற பெண் பண்ணையில் வேலை செய்பவனை காதலிப்பதாக காட்டப்பட்டாலும், அது ஒரு இனக்கவர்ச்சியாகவே அடையாளம் செய்யப்பட்டிருக்கின்றது, மேலும் அதை தாண்டி இருக்கின்ற அம்சங்கள் இங்கு மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றன).

இத்திரப்படத்தில் என்னை மிகவும் கவர்ந்த விடயம் எல்லா திறமைகளையும் மீறி சாதி என்கிற அலகு எப்படி மனிதர்களை சிறுமை செய்கின்றது என்பது. எல்லா திறமைகள் இருந்தும் மாரி தொடர்ந்து சாதி என்கிற காரணத்தால் சிறுமைப்படுத்தப்படுகின்றான், அதேபோல ஒரு அணியாக வெற்றிபெறும் வெண்ணிலா கபடிக்குழுவை பிரித்துப்போடவும் வாகாக சாதீய வேற்றுமைகள் முன்வைக்கபடுகின்றன. திரைப்படத்தின் இந்த கூறு நேர்மையான விமர்சனங்கள் ஊடாக அணுகவேண்டிய மிகமுக்கியமான அங்கம் என்று நினைக்கின்றேன்.

2

என் சொந்த அனுபவத்தில் இலங்கை தமிழர்கள் மத்தியில் சாதி வெறி என்று கதை எழும்போதெல்லாம் தென்னிந்திய பிராமணரை முன்வைத்தே விவாதங்கள் எழுவது வழக்கம். சாதீய அடக்குமுறைகளின் உச்சக்கட்டமாக பிராமணர்கள் பிரயோகித்த அடக்குமுறைகள் தான் உதாரணம் காட்டப்படுவது வழக்கம். இலங்கையை பொறுத்தவரை பிராமணர்களின் அடக்குமுறைகள் குறைவென்பதால் (இலங்கையில் நிகழும் சாதிக் கட்டுமானங்களில் வெள்ளாளார்களுக்கு அடுத்ததாகவே பிராமணர்கள் கருதப்படுகின்றார்கள்.) இலங்கையில் சாதீய அடக்குமுறைகள் குறைவென்ற புள்ளிக்கு இலகுவாக வந்துவிடுகின்றார்கள். ஆனால் உண்மை முற்றிலும் இதற்கு எதிராக இருக்கின்றது.

தென்னிந்தியாவில் எப்படி பிராமணர்களால் அடக்குமுறை பிரயோகிக்கப்பட்டதோ அதற்கு சற்றேனும் குறையாத அடக்குமுறை இலங்கை தமிழர்களுல் வெள்ளாளரால், பிராமணர் உட்பட்ட மற்றைய சாதியினர் மீது கடுமையாக பிரயோகிக்கப்பட்டது. எனவே சாதீய அடக்குமுறை பற்றி நாம் கதைக்கின்றபோது இந்தியாவில் பிராமணர் மீது செய்யப்படும் எல்லா விமர்சனங்களுக்கும் பொருத்தமாக இலங்கை தமிழ் வெள்ளாளர் இருக்கின்றனர் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். இன்றும் கூட ஆதிக்க சாதியினர் வீடுகளில் வேலை செய்யவரும் பிற சாதியினருக்கு சிரட்டைகளில் தேனீர் கொடுப்பதையும், தமிழ் நாட்டை போன்ற இரட்டை குவளை முறை பின்பற்றப்படுவதையும் காணலாம்.

அதுபோல பாடசாலைகளில் கூட இந்த வேற்றுமை காண்பிக்கப்படுகின்றது. எனக்கு தெரிந்து பல ஊர்களில் தாழத்தப்பட்ட சாதியினருக்கு என்று வேறான பாடசாலைகளே இருந்திருக்கின்றன. அதையும் மீறி மற்ற பாடசாலைகளுக்கு வருகின்ற மாணவர்கள் கூட சமத்துவமான முறையில் மதிக்கப்பட்டது கிடையாது. என் சிறுவயதில் நான் படித்த ஒரு பாடசாலையில் ஒரு மாணவன் கல்வி கற்க வந்தபோது வகுப்பில் உரிய இடம் இருந்தும் அவன் நிலத்திலேயே அமர்த்தப்பட்டான். அப்போது எனக்கு சாதிப்பாகுபாடுகள் எதுவும் தெரிந்திருக்கவில்லை. எனவே அந்த மாணாவன் துர்க்குணங்களின் உருவானவன், அவனுடன் சேர்வதே பாவம் என்று சொல்லப்பட்டதை நானும் நம்பிவிட்டேன். பின்னாட்களில் இத்தனைக்கும் காரணம் அவனது சாதிப் பின்புலமே என்று தெரிந்துகொண்டேன்.

இதுபோல எனது ஊரில் இருந்த ஒரு பிரபல ஆலயத்தில் தேர்த்திருவிழா நடைபெறும்போது கூட சாதீய அடிப்படையில் ஒவ்வொரு நாட்களுக்கும் ஒவ்வொரு சாதியினர் என்று திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கம். இதில் என்ன கொடுமை என்றால் சில நாட்களில் திருவிழாவுக்குரிய செலவுகளை பொறுப்பெடுத்து இருந்தும் கூட அவர்கள் ஆலயத்துக்க்ள் அனுமதிக்கப்படாமல், தர்ப்பை கூட அணிவிக்கப்படாமல்தான் திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கம். அந்த ஆலயத்தின் திருவிழாக்காலங்களில் அமைக்கப்படும் தண்ணீர்ப்பந்தல் ஒன்றில் என் நண்பன் ஒருவன் இருக்கின்றான் என்று (அப்போது எனக்கு வயது 10) அவனுடன் சேர்ந்து நின்று அந்த தண்ணீர்ப்பந்தலில் நின்று எல்லாருக்கும் மோரும், சக்கரைத் தண்ணீரும் வழங்கினேன். திருவிழாவில் செலவழிப்பதற்காக என்று சேர்த்து வைத்திருந்த எனது உண்டியல் காசை கூட அந்த் தண்ணீர்ப்பந்தல் அமைப்பாளார்களிடம் கொடுத்திருந்தேன். அந்த் நாட்களில் நான் எனது அப்பம்மா வீட்டில் இருந்து படித்துக்கொண்டிருந்தேன். அன்று வீடு திரும்பினால் என்னால் குடும்ப மானமே போய்விட்டது என்று எனது அப்பம்மா அதிகம் திட்டி, நான் என் சொந்த ஊருக்கு உடனடியாகவே திரும்ப வேண்டும் என்று சொல்லி விரட்டிக்கொண்டிருந்தார். நல்ல வேளையாக சமூக சேவைகளில் அதிகம் நாட்டம் கொண்ட எனது பெரியம்மா வந்து என்னைக் காப்பாற்றினார்.

இதன் பின்னர் உயர் கல்வி கற்க என்று சைவமும் தமிழும் வளர்க்க அரும்பாடுபட்டதாக சொல்லிக்கொள்ளும் ஒரு கல்லூரியில் சேர்ந்தேன். இப்போதுதான் அந்தக் கல்லூரி எவ்வளவு தீவிரமான சாதி மற்றும் மத வெறிகளின் புகலிடமாக இருந்தது என்று தெரிகின்றது. அந்நாட்களில் அக்கல்லூரியில் மிகப்பெரிய புனிதராக அடையாளப்படுத்தப்பட்ட ஆறுமுக நாவலர் மீதான எல்லாப் புனிதங்களும் உடைந்து இன்று என்னளவில் அவர் முற்று முழுதாக நிராகரிக்கப்படவேண்டிய ஒரு மத, சாதி வெறியராகவே நினைவில் இருக்கின்றார். எனது கல்லூரியும் இலங்கையில் இருக்கின்ற பெரும்பாலான இந்துக்கல்லூரிகளும் சாதி வெறி திமிர் பிடித்து ஆடும் இடங்கள். என் சொந்த அனுபவத்தில் சாதி வெறி பற்றி வெளிப்படையாகவே கதைக்கின்ற பல ஆசிரியர்கள் அந்த கல்லூரிகளில் புனித பிம்பங்களுடன் நடமாடுவதை கண்டிருக்கின்றேன். என் சக மாணவன் – என் நண்பன் ஒருவன் தாழ்த்தப்பட்ட குலத்தை சேர்ந்தவன், நல்ல கெட்டிக்காரன், நிறைய துடுக்கானவன். வகுப்பில் அவன் கேட்ட கேள்வி ஒன்றுக்கு பதில் சொல்ல தெரியாத ஒரு ஆசிரியரால் “உண்ட சாதிக்குணம் தான் உன்னை இப்படி வச்சிருக்கு” என்று சொன்னதை கேட்டு அதிர்ந்திருக்கின்றேன். இது போல இன்னுமொரு ஆசிரியர் நேரடியாகவே சாதிகளுக்கு பரவலாக அந்நாட்களில் வழங்கப்பட்ட குறியீடுகளூடாக தன் வகுப்பு மாணவர்களின் சாதிகள் பற்றி பிற மாணவர்களுடனேயே விவாதிப்பதை கண்டிருக்கின்றேன்.

மேலும் இந்த இந்துக்கல்லூரி என்ற பெயருடன் இயங்குகின்ற அரச பாடசாலைகளில் இந்துமதம் மட்டுமே போதிக்கப்படுகின்றதே தவிர கிறீஸ்தவ மதம் கற்பிக்கப்படுவதில்லை. இவை அரச பாடசாலை என்கிற ரீதியில் அங்கே கிறீஸ்தவ பாடமும் நிச்சயமாக கற்பிக்கப்பட்டிருக்க வேண்டும். யாழ்ப்பாணத்தில் நடைபெறுகின்ற அனேகமான கத்தோலிக்க பாடசாலைகளில் இந்து மதம் ஒரு பாடமாக கற்பிக்கப்டடுகின்றாது. ஆனால் ஒரு இந்து / சைவ மத வெறிச்செயலாகவே இந்துக்கல்லூரிகளில் கிறீஸ்தவமதம் கற்பிக்கபடுவதில்லை இது பற்றி சில நண்பர்களுடன் கதைத்தபோது அங்கே இந்துக்கள் பெரும்பான்மை என்பதால் இது நியாயமானது என்று சொன்னார்கள். இதில் வேடிக்கை என்னவென்றால் அப்படி சொன்ன எல்லாருமே தமிழ் தேசியத்தின் பிரதான ஆதரவாளர்கள். அவர்களை நோக்கி நான் வைக்கும் கேள்வி, பெரும்பான்மையினருக்கு சிறுபான்மை சமூகம் தலை வணங்கித்தான் போகவேண்டுமென்றால் சிங்கள அரசுக்கு எதிரான போராட்டம் எதற்கு?. இலங்கையில் சிங்களவர் 74%ம் தமிழர்கள் 25%ம் இருக்கின்றனர். (இந்த குடிசன மதிப்பீட்டுக் கணக்கு கீழே இணைக்கப்பட்டுள்ளது. இதில் என்ன வேடிக்கை என்றால் தமிழர்கள் என்று சொல்லப்படும் 25% மலையகத் தமிழர்கள், முஸ்லீம்கள் எல்லாரையும் இணைத்தே பெறாப்படுகின்றது. ஆனால் இதை வடக்கில் வாழும் தமிழர்கள் உணர்வு பூர்வமாக செய்கிறார்களா அல்லது தம் சுய நலத்துக்காக செய்கிறார்களா என்ற கேள்வி எழுவது தவிர்க்கமுடியாமல் உள்ளது) இவர்களுக்கு சம உரிமை வேண்டுமென்பது போல இதைவிட ஆரோக்கியமான விகிதாசாரம் உள்ள கிறீஸ்தவர்களுக்கும் சம உரிமை கொடுக்கப்பட்டிருக்கவேண்டுமே? ஏன் கொடுக்கபடவில்லை? இப்படியான் கல்லூரிகளை தேசிய கல்லூரிகள் என்று அழகு பார்த்து எம் தேசிய குணமே இதுதான் என்று வெளிக்காட்டுவதில் என்ன பெருமை இருக்கின்றது?

இன்றுவரை யாழ். நூலகம் திறப்பது தொடர்பாக அப்போதைய யாழ். மேயர் செல்லன் கணபதி எதிர்கொண்ட பிரச்சனைகள் பற்றியோ, யாழ். மத்திய கல்லூரி அதிபர் இராசதுரை படு கொலை பற்றியோ எந்த விதமான திறந்த வாக்குமூலங்களும் யாழ்ப்பாண மக்கள் மத்தியில் இல்லை என்பது குறிப்பிடதக்கது. தம் பேச்சு / எழுத்து வல்லமைகளை காட்டி இந்த பிரச்சனையை அணுகாமல் மனதுக்கு நெருக்கமாக உண்மைகளை பேசுவதன் மூலமே இதுபோன்ற நிகழ்வுகளின் அவிழாத முடிச்சுகளை அவிழ்க்கமுடியும். மக்கள் புரட்சி என்பதையே தம் போராட்டங்களின் உச்ச கட்ட வெற்றியாய் கொண்டமைந்த இயக்கங்கள்/போராட்ட குழுக்கள் கூட மக்கள் புரட்சியின் அடிநாதமான சமத்துவத்தை பேணவில்லை என்ற குற்றசாட்டு மறுக்கமுடியாது. விமல் குழந்தைவேலின் வெள்ளாவி நாவல் தடை செய்யப்பட்டபோதும் சரி, 95ல் வேள்வி முறை வழிபாடுமுறை தடுக்கப்பட்டபோதும் சரி (கவனிக்க இது கிராம தெய்வ வழிபாட்டுமுறையின் ஓரம்சம், பிராமணர்களால் எதிர்க்கப்படுவது, வெள்ளாளர்களால் ஏற்றுக்கொள்ளப்படாதது. இது நாகரீகம் அற்றாது, மிருகவதை என்று சொன்னால், இதைவிடக் காட்டு மிராண்டித்தனமான அலகு குத்துதல், பறவைக் காவடி, செதி குத்தி காவடி எடுத்தல், தீ மிதித்தல் என்பனவும் தடுக்கப்பட்டிருக்க வேண்டும்), அதுபோல இன்றளவும் தொடரும் குலத்தொழில் முறை போன்ற விடயங்களை முன்வைத்துப் பார்க்கும்போது இனப்பிரச்சனை கொழுந்து விட்டெரிய தொடங்கிய பின்னும் இன்னும் அங்கே இருக்கின்ற சாதீய கட்டமைப்புகளை புரிந்துகொள்ளவேண்டும். ஒவ்வொரு போராட்ட குழுக்களும் ஒரு சாதி பின் புலத்துடன் இயங்கின என்றும் அவை தத்தம் சாதியை உயர்சாதியாக நிறுவி இயங்கினார்கள் என்றும் சொல்லப்படும் குற்றசாட்டை முழுதாக நிராகரிக்கமுடியவில்லை.

3

புலம்பெயர் நாடுகளில் கூட இன்று தீவிரமாக சாதி வேறுபாடுகள் பார்க்கபடுகின்றன. சென்ற கோடை காலத்தில் ஒரு ஊரின் ஒன்று கூடலிற்கு நண்பன் ஒருவனுடன் சென்றிருந்தேன். அப்பொழுது சிறுவர்களுக்கான ஒரு போட்டியில் பரிசுகள் வழங்கப்பட்டுக்கொண்டிருந்தன. இரண்டாம் பரிசு வென்ற ஒரு சிறுவன் தகப்பனை நோக்கி சந்தோஷத்துடன் ஓடி வருகிறான். தகபன் அவன் காதை முறுக்கி கன்னத்தில் ஓர் அறை அறைந்து சொன்னார் “பள்ளப் பெடியன் முதலாவந்திட்டான், நீ எனக்கு பிறந்தனீயா, இல்லாட்டி கொம்மா வேசையாடி பெத்தவளோ” என்று. தமிழ் திரைப்பட நாயகர்களுக்குரிய வீரத்தில் ஒரு சிறு பங்கு இருந்திருந்தால் கூட அந்த தகப்பனை அந்த இடத்திலேயே ஹதம் செய்திருப்பேன். இதே எண்ணம் எல்லாருக்கும் வரும் வரை எம்மினம் அடிமைப்பட்டே இருக்கும்


பின்னிணைப்பு
கடைசியாக இனப்பிரச்சினை இடப்பெயர்வு தொடங்கு முன்பு எடுத்த கணக்கின் படி.
சிங்களவர்கள் —74%
ஈழத்தமிழர்கள் –13%
மலையகத்தமிழர்கள்–5%
தமிழ் பேசும் முஸ்லிம்கள் -7%மற்றவர்கள் -1%
மொத்தத்தில் தமிழ் பேசுவோரின் விகிதம் –25%

சுய விலக்கம்

நகரத்தின் மோஸ்தருக்குள்
முற்றாய் பொருந்திவிட்ட என்னை
அத்தனை சுளுவாய்
அடையாளம் கண்டுவிடமுடியாது

எனக்கே தெரியுமன்றாலும்
அறுந்த செருப்பை
தெருவோர காப்ளரிடம் தான்
தைத்துக்கொள்கிறேன்
வீட்டுக்கே வந்து டோபி
துணியெடுத்துப் போகிறான்
முன்னொரு காலத்து என் அம்மா போல
நீயமரும் இருக்கையிலேயே
எனக்கும் சவரம் சலூனில்

பரம்பரையின் அழுக்கு
அண்டிவிடக்கூடாதென்று
நகங்களைக்கூட
நறுவிசாக வெட்டிக்கொள்கிறேன்
அதீத கவனத்தோடு ஊரை மறக்கிறேன்
புறப்பட்டுவந்த சுவடு தெரியாதிருக்க

சண்டேக்களில் மட்டனோ சிக்கனோதான்
பீப் என்றால் என்னவென்றே
தெரியாது என் பிள்ளைகளுக்கு

ரிசர்வேசனுக்கெதிரான உங்களின்
உரையாடலின் போதும்
“நாயைக் குளிப்பாட்டி
நடுவீட்டில் வைத்தாலும்…” என்கிற போதும்
யாரையோ வைவதாய்
பாவனை கொள்கிறேன்
பதைக்கும் மனமடக்கி

“உங்கம்மாளப் போட்டு
பறையன் சக்கிலிப் போக …”
என்ற வசவுகளின் போது
அதுக்கும் கூட உங்களுக்கு
நாங்க தான் வேணுமா என்றும்
சாவு வீடுகளில் வதக்வதக்கென்று
யாராச்சும் ஜதிகெட்டு கொட்டடித்தால்
எங்கப்பனாட்டம் உன்னால
அடிச்சி ஆடமுடியுமா என்றும்
கேட்கத்துள்ளும் நாக்கை எத்தனை
சிரமப்பட்டு அடக்கிக்கொள்கிறேன் தெரியுமா

இருப்பினும்,
தடயங்களை அழிக்காமல்
உள்நுழைந்தத் திருடனைப்போல்
என்றாவதொரு நாள் எப்படியேனும்
பிடிபட்டு அவமானப்படும் அச்சத்தில்
உங்களோடு ஒட்டாமல்
ஓட்டுக்குள் ஒடுங்கும் என்
புத்தியிலிருந்து நீங்கள்கண்டுபிடிக்கக்கூடும்….

பதிவர் அய்யனாரின் பதிவில் பார்த்த ஆதவன் தீட்சன்யாவின் கவிதை