எந்த விதத்திலும் அழகியலுடன் ஒன்றிக்க முடியாத அளவுக்கு குரூரத்தை எம் வாழ்வுடன் பிணைத்து எம்மை அழைத்துச் செல்லுகின்றது நாம் வாழும் தலைமுறை. ஒரு கொலை நடந்தாலும் பதைக்கின்ற மனம் போய் 10, 20 என்றாகி பின் ஐம்பது, நூறாகி இப்போது இதெல்லாம் சாதாரணம் என்று வாழப் பழகிவிட்டது எம் தலைமுறை. கொத்து கொத்தாக இன அழிப்பு நடந்தாலும், தம் தினசரி வாழ்வை அப்படியே வாழப்பழகி விட்டது ஒரு சமூகம். இத்தனை கொலையும் கண்டு, இத்தனை சதைப்பிடங்களையும், அவை சிதறிக்கிடப்பதையும் கண்டு சாவே எமக்கொரு வாழ்வாகிப்போன ஒரு சமுதாயமாக எம் சகோதரங்கள் சிக்குண்டு இருக்கின்றன. இதைப் பார்த்து எல்லாருக்கும் மனதளவான ஒரு பாதிப்புத்தன்னும் வரவேண்டும். அதை விட்டு, “அங்க சனம் எல்லாத்துக்கும் பழகீட்டுது, நாங்கள் தான் இங்க இதை பெரிசா எடுக்கிறம்” என்று அறள பேந்துகொண்டிருக்கின்றது ஒரு கூட்டம். (நான் படித்த பெரியாரும், தொடர்ந்த மரபுகளும் சேர்த்து குழப்பி அடித்து) கடவுள் இருக்கிறாரா, இல்லையா என்று குழம்பிக் கொண்டிருக்கும் நான் கடவுளின் இருப்பை ஏற்றுக்கொள்வேன்; இந்த அதி புத்திசாலைகளை ஒரு வாரமேனும் முல்லை தீவில் கொண்டுபோய் இருக்க விட்டால்.
2
ஈழத்தில் பிறந்தவனாகவும், கனடாவில் வசிப்பவனாகவும் நான் எம் சமூகம் (கனேடிய தமிழ் சமூகம்) மீது தொடர்ந்து வைக்கின்ற குற்றச்சாட்டுகளில் ஒன்று, நாம் எமது பிரச்சனைகளை அதாவது சொந்த நாட்டை விட்டு துரத்தப்பட்ட அகதியாகவும், புலம்பெயர்ந்தவர்களாகவும் புலம் பெயர்ந்த நாடுகளில் எதிர் நோக்கும் இன்னல்களை பதிவு செய்யவில்லை/பதிவு செய்தது போதாது என்பது. கனடாவை எடுத்துக்கொண்டால் இங்கு இயங்கி வருகின்ற 24 மணிநேர வானொலிகள் நான்கு, பகுதிநேர பண்பலை வரிசை ஒன்று, பத்திரிகைகள் கிட்ட தட்ட 20. இதுதவிர கோயில் என்றூ சொல்லப்படுகின்ற கட்டட/வியாபார அமைப்புகளை சொல்வதென்றால்…………… கனடாவில் எத்தனை தமிழ் கராஜ் இருக்குதோ அத்தனை கோயில்களும் இருக்குது. இங்கே நான் கோயில் என்கிற வியாபார / கட்டட அமைப்பு என்று சொல்ல காரணம் இவை கோயில் என்ற பெயரை தாங்கும் வியாபார அமைப்பாக இருந்துவருகின்றனவே தவிர ஆலயங்களாக இருப்பதில்லை என்பதுதான். (இது பற்றி பின்னர் விரிவாக.) இத்தனை இருந்தும் என்ன பயன், மக்களுக்காக உருவாக்கப்பட்ட இவை மக்களுக்காக என்ன செய்தன?
இங்கு இயங்கிவரும் ஒரு 24 மணிநேர தமிழ் வானொலி. அதன் முதன்மை அறிவிப்பாளர் ஊரில் ஐஸ் பழ வானுக்கு அறிவிப்பு செய்யக்கூட தகுதி இல்லாத அறிவிப்பு திறன் கொண்டவர். சில மாதங்களுக்கு முன்னர் வரை தன்னை தீவிர தமிழ் தேசிய வாதியாக அடையாளம் செய்ய முயன்றவர். இப்பொழுது வானொலியில் பகல் நேரங்களில் நடக்கும் தொலைபேசி உரையாடல்களில் நடுநிலைவாதி என்ற பெயரில் நச்சுக் கருத்துகளை அள்ளி வழங்குகிறார். நான் ஒரு போதும் மாற்றுக் கருத்துகளை மறுதலிப்பவன் கிடையாது. ஆனால் இவர் சொல்பவை மாற்றுக் கருத்துகள் கிடையாது. அது மட்டுமல்ல, தீவிர புலி எதிர்ப்பாளர்கள், புலி எதிர்ப்பை மட்டும் மையமாகக் கொண்டு சொல்லும் கருத்துகளை விட தீமை தரக்கூடிய கருத்துக்கள் அவை. இவரது கூத்துக்களில் எல்லாம் பெரிய கூத்து சில ஆண்டுகளுக்கு முன்னர் இவருக்கும் கனடாவில் வானொலி ஒலிபரப்பை பணம் பண்ணும் ஒரு தொழிலாக்கி வெற்றிகண்ட இன்னொருவருக்கும் மிகப்பெரிய போட்டி/துவேஷம் நடந்துவந்தது. இதன் உச்சக்கட்டமாக இவரால் உசுப்பப்பட்ட (அல்லது அப்படி குற்றம் சாட்டப்பட்ட) ஒருவர் மற்றைய வானொலியில் அதன் முதன்மை அறிவிப்பாளர் மீது ஏதோ பழி சுமத்த அவர் அழ தொடங்கிவிட்டார். (தமிழ்நாட்டில் ரசிகர் மன்றாங்கள் என்ற பெயரில் நடிகர்கள் அடிக்கின்ற பித்தலாட்டங்களை விட மோசமான பித்தலாட்டக்காரர் இவர்). இதைப்பார்த்து பொங்கி எழுந்த இன்னுமொரு சக அறிவிப்பாளர் “இப்படியான பொய் சேதிகளை ______________________ வானொலியில் ___________________தான் தருகிறார், எல்லா நேயர்களும் அவர்களுக்கு கண்டணம் தெரிவிக்க வேண்டும்” என்று அறிக்கைவிட்டார் (அறிக்கை விடுவதுதானே திராவிட பண்பாடு- நன்றி: கருணாநிதி). இதெல்லாம் நடந்து சில காலத்தின் பின்னர் “நடுநிலைவாத” அறிவிப்பாளர் கனேடிய தேர்தல் ஒன்றில் நின்றார். அப்போது நடந்தது பாருங்கள் ஒரு அதிசயம், வைகோ, ராமதாஸ், திருமா எல்லாம் கெட்டார் போங்கள். இருவரும் சேர்ந்து ஒரு சந்திப்பு, அதை இரண்டு வானொலிகளிலும் நேரடி ஒலிபரப்பினார்கள். இருவரும் சகோதரர்கள் என்றூ ஒருத்தர் பித்தலாட்ட, மற்றவர் தனது அம்மாவுக்கு தான் மூத்த பிள்ளை என்றாலும் மற்றவரைத்தான் அவ மூத்த பிள்ளை என்று பாசம் செலுத்துவதாக “நடுநிலையாக” சொன்னார். எனக்கு தானும் எம்ஜிஆரும் ஒரு தட்டில் உணவருந்தினவர்கள் என்று தொடங்கி அடிக்கடி கருணாநிதி சொல்லும் கதையும், கேக்கிறவன் கேனயனா இருந்தா எருமை மாடு சொல்லுமாம் ஏரோப்பிளேன் ஓட்டிக்காட்டுறன்” என்ற கதையும் ஞாபகம் வந்தது.
இதே பித்தலாட்டம் செய்யும் வானொலியில்தான் ஒருமுறை பெரிசா பகிடி விடிறன் என்ற பெயரில் சமாதான காலப்பகுதியில் வந்த ஒரு ஏப்ரல் முட்டாள் தினத்தில் பிரபாகரனும், ரணில் விக்ரமசிங்காவும் ஒரே விமானத்தில் ஜெனீவாவில் உள்ள ஐ. நா அலுவலகத்துக்கு உடன்படிக்கை ஒன்றில் கையெழுத்திடுவதற்காக போய்க்கொண்டு இருக்கின்றார்கள் என்று ஒரு செய்தியை வெளியிட்டிருந்தார்கள். இதெல்லாம் என்ன வித தர்மம். உங்களுக்கு வியாபாரம்தான் முக்கியம் என்றால் வியாபாரம் செய்துவிட்டுப்போங்கள், அதை விட்டு ஏன் இந்த தேசிய வாத நாடகம். இவர்களைப் பற்றி ஒரு அறிக்கை வெளியிட்டு பரபரப்பாக ஒரு குழு பிரிந்து சென்றது. கடைசியில பார்த்தா எல்லாம் ஒரே குடையில ஊறின மட்டைகள். இதில பெரிய வேடிக்கை என்னவென்றால், இதுக்கிடையில வானொலி உரையாடல்களில் தமிழக அரசியல் வாதிகள் பற்றிய கிண்டல் வேறு. ஐயா, இது மட்டும் வேண்டாம். குருத்துரோகம் கூடாது. குருவை மிஞ்சிய சிஷ்யர்களாய் நீங்கள் வளர்ந்து வருகையில் உங்கள் குருமாரை கிண்டல் செய்து குரு நிந்தனை செய்துவிடாதீர்கள்
3
இந்த நிலையில் இவர்களுக்கு மாற்றாக, எம் நம்பிக்கைகளுக்கு பாத்திரமாக வரும் என்ற நம்பிக்கைகளுடன் ஒரு பண்பலை வரிசை தொடங்கியது. சும்மா சொல்லக்கூடாது. எனக்கு தெரிந்து முதன் முதலாக ஒரு வானொலியில் சினிமா கிசு கிசுக்களை அதுவும் வாரத்தில் இரண்டு நாள் வெளியிட்ட ஒரே வானொலி இது தான். அதிலும் மிக மட்டமான குப்பைகள். உதாரணமாக, ஒரு திரைப்படத்தில் நாயகன் நாயகிக்கு உதட்டில் முத்தமிடவில்லை என்றும் அதற்கு காரணம் நாயகியின் வாயில் வீசிய துர்நாற்றம் என்றும் கிசு கிசு சொல்லும் கேவலமான மனப்பாங்கு வேறு யாரிடமும் வராது. அண்மையில் கல்மடு தாக்குதலின்போது கூட ஆதாரமில்லாத செய்திகள் பரவியபோது மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் இந்த வானொலியை கேட்டுக்கொண்டிருந்தனர். அப்போது ஆதாரமில்லாமல் பரவிய எல்லா செய்திகளையும் உறுதி செய்வதுபோல இவர்கள் அடித்த கூத்து இருக்கிறதே. ஐயா, ஊடகம் என்கிற பொறுபான இடத்தில் இருக்கின்றீர்கள். அது மட்டுமலாமல் உங்கள் ஊடகத்தை வெறும் ஊடகமாக பாராமல், ஒரு அதிகார பூர்வ ஊடகமாக மக்கள் பார்க்கின்றார்கள். இப்படியிருந்தும் பொறுப்பில்லாமல் நடக்கும் உங்களை எல்லாம் “பசித்த புலி தின்னட்டும்”.
4
வானொலி மீடியாக்கள் தான் இப்படியென்றால் தொலக்காட்சி மீடியா இதைவிட பல படி மோசம். அண்மையில் எனது பெரியம்மா வீட்டுக்கு ஒரு குறிப்பிட்ட தொலைக்காட்சி (தமிழ்) நிலையத்திடமிருந்து தமது சேவையை பெற்றுக்கொள்ளும்படி ஒரு அழைப்பு வந்தது. தனது கடுமையான அலுவலகப் பணிகளை சொல்லி தனக்கு அந்த தொலைக்காட்சி சேவைகளை பார்க்க நேரம் கிடையாது என்று அவர் மறுக்க, அழைப்பாளர் சொன்னார் “நானும் தான் பார்க்கிறதில்லை, அது பரவாயில்லை எடுங்கோ” என்று. இது 100% உண்மை. இந்த அணுகுமுறையை யாரையா உங்களுக்கு தந்தது?.
இது மட்டுமல்ல கனடாவில் இயங்கும் இரண்டு 24 மணிநேர தொலைக்காட்சிகளும் பெரும்பாலும் தமிழ்நாட்டின் சன், கலைஞர் தொலக்காட்சிகளையே நம்பியுள்ளன. புலம் பெயர் வாழ்வில் உள்ள எத்தனையோ அர்த்தமுள்ள சாரங்களை ஏனையா மறந்து போகின்றீர்கள். குடும்ப பிரச்சனை, கணவன் – மனைவி இடைவெளிகளால் ஏற்படும் பிரச்சனை, கணாவன், மனைவியரிடையே அவரவர் பெற்றோரால் ஏற்படும் பிரச்சனைகள், முதியோர் புலம்பெயர் வாழ்வில் எதிர்கொள்ளும் பிரச்சனைகள், ஆண்-பெண் நட்பு அதனால் ஏற்படும் பிரச்சனைகள் என்று எத்தனையோ பிரச்சனைகள் உள்ளதையா. அது பற்றி ஏதும் பேசாமல் அதே அர்த்தமில்லாத நாடகங்களை ஏனையா இங்கும் ஒலிபரப்பி இம்சை செய்கின்றீர்கள். எமது படைப்பாளிகள் எத்தனை பேர் உள்ளனர் இங்கு. அவர்களில் யாரையாவது ஒருவரை எப்போதாவது மனதில் நிறுத்தினீர்களா?. அண்மையில் கனேடைய வானொலி ஒன்றில் ஒருவரை (அவர் ஒரு கவிஞராம்) அவரது அறுபதாண்டு காலப்பணி என்று சொல்லி ஒவ்வொரு நாளும் ஒரு மணி நேரம் என்று அவரது அனுபவ பகிர்வு நடைபெற்றது. எனக்கு ஒரே ஒரு சந்தேகம், என்ன அடிப்படையில் அவரை ஒரு கவிஞர் என்று சொல்கின்றீர்கள்?. அவரது இள வயதில் அவர் சற்று சமூக சிந்தனையுடன் இருந்ததாக அவருடன் நெருங்கிப்பழகிய ஒருவர் சொன்னார். இருக்கலாம். அதற்காக அவருக்கு ஏற்படுத்தப்படும் ஒளிவட்டம் அளவுக்கு மீறியது. எனக்கு தெரிந்து ஒரு மேடையில் இவரைப்போற்றி இவர் இன்னோரன்ன கவிஞர் என்று ஒருவர் போற்றிய பிற்பாடு பேசஎழுந்த இவர் சொன்னார் “முன்னர் பேசியவர் என்னை கவிஞர் என்று மட்டும் சொல்லிச் சென்றுவிட்டார். நான் ஒரு நல்ல கவிஞன், அற்புதமான நடிகன். நல்ல சிறுகதை எழுத்தாளர்”…………….இப்படி, எங்கும் எதிலும் இருப்பவன் ஞானே என்ற ரேஞ்சில் அவரது பில்டப். ஒரு வருடம் முழுக்க அவருடன் காலம் தள்ளியதுக்கு / சகித்துக்கொண்டதுக்கு காரணம் உங்களில் உள்ள மாறி மாறி முதுகு சொறியும் குணம் என்று எமக்கு தெரியும். அப்படி இல்லாவிட்டால், கனடாவில் உள்ள புலம் பெயர் ஈழத்தமிழ் படைப்பாளிகளில் முக்கியமான காலம் செல்வத்தையோ (அனைத்து சிரமங்கள் மத்தியிலும் காலம் இதழையும், சில புத்தகங்களையும் தொடர்ந்து வெளியிடுவதற்காக) இளங்கோவையோ (டிசே தமிழன், அவரது சமூக கோபம், கட்டுரைகள் / ஹேமா அக்கா என்ற சிறுகதை ஒன்றுக்காகவேனும்), சேரனையோ, திருமாவளவனையோ, சுமதி ரூபனையோ (பெண்ணியத்துக்காக), திருமாவளவனையோ இல்லை தொன்றுமுளதென் தமிழ் என்று இன்னும் பாடினால் அத் தமிழில் தன் ஆளுமைகளை தொடர்ந்து காட்டிய கவிஞர் பஞ்சாட்சரத்தையோ அலது எனது பிரத்தியேக பட்டியலில் என்றும் முண்ணணியில் உள்ள வித்துவான் இராசரத்தினத்தையோ ஏன் உங்களுக்கு நினைவு வரவில்லை?
…………………………….மீதி அடுத்த பாகத்தில்
Leave a Reply