உண்மைக்கு நெருக்கமாக: அ. முத்துலிங்கம்

குழந்தைகளாக பிறக்கின்றபோது நாம் நூறு வயதுடன் பிறக்கின்றோம். அதன் பின்னர் வாழ்க்கை வெள்ளம் இழுத்துச் செல்ல செல்ல அதன் திசையிலும், அதை எதிர்த்தும் பயணித்து ஒதுக்கப்பட்ட ஆண்டுகள் மெல்ல கழிந்து செல்ல ஆயுள் கரைந்து இறந்து போகின்றோம். எல்லா மனிதர்களும் பால்யத்தில் ஒரே சாயலான வாழ்வையே வாழ்கின்றனர். அதனால் தான் அந்த வயதில் பொறாமையுணர்வும், ஏற்றத்தாழ்வுகளும் மனதில் குடியேறுவதில்லை. நாட்கள் போக போக, திறந்து வைத்த கற்பூரம் போல பால்யம் கரைந்து செல்ல பொய்மையும் கசடும் குடியேறி மனிதம் மெல்ல மெல்ல பாழாகின்றது.

பறந்து செல்லும் என் ஞாபக காக்கைகள் எங்கெல்லாமோ பறந்து என் பால்யத்தின் பருக்கைகளைத் தான் மீட்டி வருகின்றன. எந்த பருவத்தில் பார்த்தாலும், எந்த உணர்ச்சியுடன் பார்த்தாலும் பால்யம் சொந்த தலையணையில் வீசும் மணம் போல மனதுக்கு நெருக்கமான உணர்வையே தருகின்றது. பால்யத்தை நினைவுபடுத்தும் பாடல்களும், சம்பவங்களும், வாசனைகளும், நண்பர்களும், திரைப்படங்களும், புத்தகங்களும், கிராமத்து மனிதர்களும், காதலியரும் எப்போதும் மீண்டும் மீண்டும் நினைத்துக் கொள்ளப்படுகின்றனர்.

2

அண்மையில் வாசித்த உண்மை கலந்த நாட்குறிப்புகள் என்ற அ. முத்துலிங்கம் எழுதிய நாவல் அவரது பால்யத்தை விரைவாக கடந்து சென்றாலும், மீண்டும் ஒரு முறை அதன் வாசனையை மீட்டி இருக்கின்றது. கதை சொல்லி தன் வாழ்வில் நடந்த சம்பவங்களை மையமாக வைத்து உண்மைக்கு மிக நெருக்கமாக எழுதிய புத்தகம் இது. இதில் வருகின்ற ஒவ்வொரு கதைகளும் தன்னளவில் பூரணம் பெற்றிருந்தாலும் (சிறுகதை அமைப்புடன்), தொடர்ச்சியான வாசிப்பில் ஒரு நாவலின் தன்மையை கொண்டமைகின்றது. சில ஆண்டுகளுக்கு முன்னர் கொடுத்த பேட்டி ஒன்றில் இந்த கதை வடிவத்தை குறிப்பிட்ட அ.மு. அது போன்ற ஒரு வடிவில் ஒரு நாவலை எழுதும் எண்ணம் உள்ளது என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. கதை சொல்லி தவிர மிக சில பாத்திரங்களே மீண்டும் மீண்டும் வருகின்றார்கள். அதிலும் சிறு பராயத்தில் நடைபெறும் சம்பவங்களில் குடும்ப உறுப்பினர்களும், பின்வரும் சம்பவங்களில் மனைவி, மகள், பேத்தி தவிர மீண்டு வருகின்ற கதாபாத்திரங்கள் மிக குறைவே. இது போன்ற தன்மை முன்னர் சுஜாதா எழுதிய ஸ்ரீ ரங்கத்து தேவதைகளிலும் இருந்திருக்கின்றது. இரண்டு புத்தகங்களிலும் உள்ள முக்கிய சிறப்பம்சம், கதை சொல்லிகள் உயர் கல்வி கற்று, சிறப்பான பணிகளில் இருந்த போதும் அவர்கள் அவ்வவ் வயதுக்குரிய இயல்பு குன்றாமல் அவ்வவ் வயதுக்குரிய சம்பவங்களை எழுதியிருப்பதாகும். ஆர். கே. நாராயண் எழுதிய Swamy and Friends, மற்றும் Malgudi பற்றிய கதைகளிலும் உணர்வுகளை அனுபவித்துள்ளேன்.

ஆனால், தன் 65 வருட அனுபவங்களை சொல்லும் கட்டாயம் இருப்பதால் வருடம் முழுதும் எதிர்பார்த்து காத்திருந்த ஊர்த் திருவிழாவை ஒரே நாளில் கடந்து செல்வதுபோல பால்யத்தின் நினைவுகளை சட்டென்று கடந்து செல்கின்றார். கதை சொல்லி கொக்குவிலில் இருந்து, பேராதனை, கொழும்பு, சியரா லியோன், நைரோபி, சூடான், பாகிஸ்தான், கனடா, அமெரிக்கா என்றெல்லாம் இடம் மாறி செல்லும்போதெல்லாம் அந்தந்த நாட்டு மக்களிடையே இருந்த வழக்கங்களையும், நாகரிகங்களியும் கதை ஊடாக மெல்ல சொல்லி செல்கின்றார். சிறு வயதில் லேனா தமிழ்வாணன் கல்கண்டில் எழுதிய மேலைநாட்டு பயண அனுபவங்கள், கீழைநாட்டு பயண அனுபவங்கள், துபாய் அழைக்கின்றது, கண்ணுக்குள் நிற்கும் கங்காரு நாடு போன்றவற்றை எல்லாம் விழுந்து விழுந்து பதுங்கு குழிக்குள் வைத்துக் கூட படித்த எமக்கு சுவையாக கதை சொல்லும் அ.முவின் இயல்பால் இன்னும் சற்று விரிவாக எழுத மாட்டாரா என்ற ஏக்கம் எழுகின்றது. அதிலும் சியாரா லியானில் இறக்கப் போகின்ற தாயை சுமந்து ஓடி வரும் இளைஞனின் கதையை சொன்னபோதும் சரி, குதிரைக்கு உணவு தீத்தினால் கரு உண்டாகும் என்ற அமெரிக்கர்களின் நம்பிக்கையையும், மூவாயிரம் ஆண்டு பழமை வாய்ந்த மேசன் ரகஸ்ய சங்கம் பற்றியும், பட்டும் படாமலும் ஓரின சேர்க்கை பற்றி எழுதிய பிரேமச்சந்திரன் – தர்மதாச – நடேசன் கதையையும், நாசாவில் பணிசெய்யும் ரொக்கெட் விஞ்ஞானியான ஒலிவியா பற்றிய கதையையும் அந்தந்த சந்தர்ப்பங்களில் தான் அடைந்த அதே அனுபவங்களை சோர்வுறாமல் வாசகர்களுக்கு சொல்லும்போது சுவை பட கதை சொல்லும் ஆற்றல் ஈழத்து எழுத்தாளர்களுக்கு இல்லை என்று சுமத்துப்படும் குற்றச்சாற்று (குற்றச்சாட்டு என்று நாம் குறிப்பிடுவதன் சரியான வடிவம் இது என்று அண்மையில் வாசித்தேன், மேலதிக விபரம் அறிந்தவர்கள் தரவும்) மீண்டும் ஒரு முறை பிழைத்துப்போகின்றது.

அதேநேரம் சக பதிவர் டிசே தமிழன் குறிப்பிட்டிருந்தது போல சாதிய மோதல்களும் அடக்குமுறைகளும் மிக மோசமாக தலைவிரித்து ஆடிய காலப்பகுதிகளை கடந்து வரும்போது கூட ஆசிரியர் அவை பற்றிய எந்த பதிவையும், சம்பவத்தையும் குறிப்பிடாமல் தாவியிருக்கின்றார் என்பதையும் குறிப்பிடவேண்டும். அதிலும் கொக்குவில் பகுதி மக்களிடம் இந்த ஏற்றத்தாழ்வுகளும், அடக்குமுறைகளும் நிறையவே இருந்தது என்பது உறுதியாக தெரிந்ததே. செல்லி என்ற வண்டியோட்டி பற்றி ஆரம்பத்தில் வருகின்றபோது செல்லி மேற்கொண்டு எவ்வாறு நடத்தப்படுகின்றார் என்று பார்க்க ஆவலாக இருந்தேன். ஆனால் செல்லி வித்தை செய்து சிரிப்பூட்டும் வண்டியோட்டி என்ற அளவிலேயே காணாமல் போய் விடுகின்றார். செல்லி என்று அழைக்கப்படும் செல்லத்தம்பி என்று குறிப்பிட்டாலும், செல்லத்தம்பி என்ற பெயருக்கும் செல்லி என்ற பெயருக்கும் அக்காலத்தில் நிறைய வித்தியாசங்கள் இருந்தன என்பதும், சாதீய மற்றும் சமூக நிலைகளே இந்தப் பெயர்களை தீர்மானித்தன என்பதும் நிதர்சனம். எதை எதை எழுதவேண்டும் என்ற எழுத்தாளரின் சுதந்திரத்தில் தலையிடமுடியாது என்றாலும், சுய சரிதைதன்மை வாய்ந்த இந்த கதை அம் மனிதனின் கதையாக இருப்பதுடன், கதை நிகழ்ந்த தேசங்களின் கதையாகவும், கதை நிகழ்ந்த காலங்களின் கதையாகவும் இருந்தால் இன்னும் சிறப்பு.

ஈழத்து எழுத்தாளராக இருந்தும் ஈழப்பிரச்சினை பற்றி அ.மு எழுதவில்லை என்ற குற்றச்சாற்றை தகர்க்கின்ற அவர் தரப்பு நியாயம் இந்த கதையூடாக ஓரளவு புரிகின்றது. முன்பொருமுறை சொல்புதிதுக்காக ஜெயமோகனுக்கு வழங்கிய (சொல்புதிது – 11, ஏப்ரல்-ஜூன் 2003) பேட்டியில் சொன்னதுபோல “1972ம் ஆண்டிலேயே என் வெளிநாட்டுப் பயணம் தொடங்கிவிட்டது. அதற்குப் பிறகு நான் இலங்கைக்கு போன சந்தர்ப்பங்கள் வெகு குறைவுதான். மிஞ்சிப் போனால் இந்த முப்பது தடவைகளில் ஒரு ஆறு தடவை போயிருக்கலாம்”; யுத்தம் தன் கோர கரங்களால் மக்களை தழுவ தொடங்கும் முன்னரே அவர் நாட்டை விட்டுப் புறப்பப்பட்டுவிட்டார். அத்துடன் அவர் இருந்த நாடுகளில் கூட, அதாவது 90களின் இறுதிகளில் அவர் கனடாவரும்வரை அவர் இருந்த நாடுகள் தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழாத நாடுகள். எனவே அவருக்கு புலம் பெயர் தமிழர்களுடன் நேரடியான தொடர்புகள் இருந்திருக்கக் கூடிய வாய்ப்புகள் மிகக்குறைவு. கதை வழியே ஈழத்தில் பழக்கத்தில் இல்லாத சில சொற்கள் இடம்பெறுவதற்கு கூட இது காரணாமாக இருக்கலாம். கதை சொல்லி குறிப்பிட்ட அந்த இடங்களில் கதாபாத்திரத்தையும் மீறி தான் அறிந்த சொற்களை பேசிவிடுவதன் விளைவே இது என்று நினைக்கிறேன். அதே நேரம் ஈழத்தில் மட்டக்களப்புத் தமிழ், யாழ்ப்பாணத் தமிழ், கொழும்புத் தமிழ், மலையக தமிழ், முஸ்லீம் மக்கள் பேசும் தமிழ் என்று இருந்த பாகுபாடு எல்லாம் புலம்பெயர் தமிழ் என்ற தமிழுடன் கலந்து வருகின்ற நிலையில் புலம்பெயர் எழுத்தாளர் ஒருவர் வட்டார வழக்கில் ஒரு படைப்பை செய்வது சாத்தியம் குறைந்ததாகவே படுகின்றது.

எனது பார்வையில் சின்ன சின்ன குறைகளுடன் தன் வாழ்பனுபவங்களை மிக சுவாரஸ்யமான நடையில் சொல்லப்பட்டு இருக்கின்றது. ஈழத்து எழுத்தாளர் என்ற வகையில் ஈழப்பிரச்சனை பற்றி என்ன சொல்கின்றார் என்று பார்க்க விரும்புவோர்க்கு ஏமாற்றம் அளித்தாலும், தனக்கு தெளிவாக தெரியாததை தெரியாது என்றே ஒப்புக்கொண்டு எழுதாமல் விட்டது கூட நல்ல முடிவே. இலங்கை போரால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்த சிங்களப் பெண்ணை தேடிக் கண்டுபிடித்து(???) கண்ணீர் விட்ட கே. பாலசந்தரையும், இந்திய ராணுவத்தால் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்ட சிங்கள பெண் மீது இரக்கம் காட்டிய (உன்னத சங்கீதம்) சாரு நிவேதிதாவையும் விட இது எவ்வளவோ பரவாயில்லை.

**புத்தகத்தை தந்துதவிய நண்பருக்கு நன்றி

23 thoughts on “உண்மைக்கு நெருக்கமாக: அ. முத்துலிங்கம்

Add yours

 1. //ஆனால், தன் 65 வருட அனுபவங்களை சொல்லும் கட்டாயம் இருப்பதால் வருடம் முழுதும் எதிர்பார்த்த ஊர் திருவிழாவை ஒரே நாளில் கடந்து செல்வதுபோல பால்யத்தின் நினைவுகளை சட்டென்று கடந்து செல்கின்றார். கதை சொல்லி //எனது பதிவிற்குப் பின்னூட்டம் இட்ட நீங்கள் யார் என்று தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் வந்தவன் உங்கள் இந்தப் பதிவைப் படித்தேன்.அருமையான் எழுத்து,அருண்மொழிவர்மன்.கூடிய விரைவிலேயே நீங்களே ஒரு மிகச் சிறந்த படைப்பாளியாக மிளிரப் போகும் சாத்தியக் கூறுகளைக் கண்கூடகக் காண்கிறேன்.வாழ்க.வளர்க.

  Like

 2. பால்யம் என்ற காலம் பசுமரத்தாணி நினைவுதான். எல்லோருக்குள்ளும் இருக்கும் ஏகாந்தம். வெளிக்கொணர்ந்தவன் மகிழ்ச்சியடைந்து மற்றவர்களையும் மகிழ்விக்கிறான். வெளிக்கொணர தெரியாதவன் மனதுக்குள் ரசித்துவிட்டு போகிறான். இதயம் உள்ளவரை இது இதமான சுகம் தரும் நினைவுதான்.கதை வாசிக்கவில்லை நண்பரே. கிடைத்தால் வாசிக்க வேண்டும் போல் உள்ளது. எல்லாவற்றிற்கும் மேலாக உங்கள் எழுத்து நடை சிகரமாக உள்ளது. அண்மையில் ஒரு நண்பர் எனக்கு இதனை குறிப்பிட்டு மகிழ்ந்தார். அதனை உங்களுடன் பகிர்ந்து மகிழ்கிறேன்.

  Like

 3. //வாழ்க.வளர்க.//வாழ்துக்களுக்கு நன்றிகள். ஒருவர் வாழும் ஆலயம் எனக்கு மிகவும் பிடித்த படம். அதில் வரும் சிங்காரப் பெண்ணொருத்தி, உயிரே உயிரே பாடல்கள் என் என்றைக்குமே உரிய விருப்பங்கள். உங்களின் வெளிப்படையான ஆதரவும், பாராட்டுகளும் பெரும் மகிழ்வளிக்கின்றன. நன்றிகள். பின்னொரு சந்தர்ப்பத்தில் உங்களுடன் ஒருவர் வாழும் ஆலயம் பற்றி கதைக்கவேண்டும்

  Like

 4. வணக்கம் கதியால்//இதயம் உள்ளவரை இது இதமான சுகம் தரும் நினைவுதான்.//மீட்டப்படும் நினைவுகள் தரும் சுகம் சொற்களை கடந்த இன்பம் தருவது, அது எல்லா மனிதரும் ஓரளவு உணர்ந்ததுஎல்லாவற்றிற்கும் மேலாக உங்கள் எழுத்து நடை சிகரமாக உள்ளது. அண்மையில் ஒரு நண்பர் எனக்கு இதனை குறிப்பிட்டு மகிழ்ந்தார். அதனை உங்களுடன் பகிர்ந்து மகிழ்கிறேன்.//உங்களிடன் பகிர்ந்த நண்பருக்கும், அதை என்னிடம் பகிரும் உங்களுக்கும் நன்றிகள்

  Like

 5. நான் விரும்பும் எழுத்துகள். ராமகிருஷ்ணன், சுஜாதா ஆகியோர் போல தன் எழுத்தின் வீச்சு பற்றிய எந்த அலட்டலும் இல்லாதவர்.அனந்த கிருஷ்ணன்

  Like

 6. வணக்கம் அருண்மொழிவர்மன்தாயகத்தில் இருந்த போது முத்துலிங்கம் அவர்களின் எழுத்துக்களை வாசிக்கும் வாய்ப்புக் கிட்டவில்லை. புலம்பெயர்ந்த பின்னர்தான் வாய்த்தது. உண்மையைச் சொல்லப் போனால் எமது தாயக எல்லைகளைக் கடந்த பொது நோக்கில் அவர் படைப்புக்கள் பல இருந்தன, உட்பொருளும் பேச்சு வழக்கும் ஈழத்தின் பகைப்புலமாக இருந்தாலும் கூட. அதனால் தான் இவரின் எழுத்துக்களை தமிழகமும் விதந்து சிலாகிக்கின்றது. குமுதம் அரசு பதில்களில் கூட சில மாதங்களுக்கு முன்னர் முத்துலிங்கம் அவர்களது எழுத்துக்களை நேசித்து சொல்லியிருந்தார்.உங்களின் எழுத்தின் பரந்த வீச்சை மெளனமாக இருந்து பார்த்துப் பிரமித்து வருகின்றேன். இந்தக் கட்டுரை இணையம் தவிர்ந்த அச்சூடகம் ஒன்றில் வரத் தகுதியான ஒன்று. மிக்க நன்றி.

  Like

 7. நானின்னும் இவருடைய எழுத்துக்களை வாசிக்கவில்லை என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும் டிசே சொன்னதையும் வாசித்திருக்கிறேன்,பகிர்வுக்கு நன்றி…

  Like

 8. \\இலங்கை போரால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்த சிங்களப் பெண்ணை தேடிக் கண்டுபிடித்து(???) கண்ணீர் விட்ட கே. பாலசந்தரையும், இந்திய ராணுவத்தால் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்ட சிங்கள பெண் மீது இரக்கம் காட்டிய (உன்னத சங்கீதம்) சாரு நிவேதிதாவையும் விட இது எவ்வளவோ பரவாயில்லை.\\சாரு – பாவம்யா இவரு…

  Like

 9. நன்றி நண்பா. இப்படி ஏராளமான தேடல்களை அறிமுகப்படுத்தி வைத்திருக்கிறாய்.பதிவின் முதலாவது பந்தியை வாசித்தபோது The Curious Case of Benjamin Button திரைப்படம் ஏனோ ஞாபகம் வந்தது. முதல் இரண்டு பந்திகளுக்குள் மனம் மீண்டும் மீண்டும் சுற்றிச்சுழல்வதைத் தவிர்க்க முடியவில்லை.நாளுக்குநாள் உன் எழுத்துநடை மெருகேறிக்கொண்டே போகிறது. வாழ்த்துக்கள்…

  Like

 10. //நான் விரும்பும் எழுத்துகள். ராமகிருஷ்ணன், சுஜாதா ஆகியோர் போல தன் எழுத்தின் வீச்சு பற்றிய எந்த அலட்டலும் இல்லாதவர்//உண்மைதான். அதே நேரம் அவர்கள் அளாவு ஆளுமையும், சுவையும் கொண்ட எழுத்துக்களுக்கும் சொந்தக்காரர்

  Like

 11. வணக்கம் பிரபா// குமுதம் அரசு பதில்களில் கூட சில மாதங்களுக்கு முன்னர் முத்துலிங்கம் அவர்களது எழுத்துக்களை நேசித்து சொல்லியிருந்தார்.//நானும் வாசித்திருக்கின்றேன். அதுபோல நவீன இலக்கியத்தின் முக்கிய ஆளுமைகளான சாரு நிவேதிதா, ஜெயமோகன் இருவரும் விதந்து சொல்லும் எழுத்தாளர்.//உங்களின் எழுத்தின் பரந்த வீச்சை மெளனமாக இருந்து பார்த்துப் பிரமித்து வருகின்றேன். இந்தக் கட்டுரை இணையம் தவிர்ந்த அச்சூடகம் ஒன்றில் வரத் தகுதியான ஒன்று. மிக்க நன்றி.//நன்றிகள் பிரபா. எனக்கு தொடக்கத்தில் இருந்து ஆதரவு தந்து வருகின்றீர்கள். அதற்கும் இப்படியான வாழ்த்துக்களுக்கும் நிறைந்த நன்றிகள்

  Like

 12. ஜெகா//good writing. i read his short story collection and enjoyed a lot. i will try my max to read this too//அங்கே இப்ப என்ன நேரம், அ.முத்துலிங்கம் சிறுகதைஅள் இரண்டும் நல்ல தொகுப்புகள். அந்த அனுபவங்களை நானும் உணர்ந்திருக்கின்றேன்

  Like

 13. வணக்கம் தமிழன் கறுப்பி//இவருடைய எழுத்துக்களை வாசிக்கவில்லை என்பதை ஒப்புக்கொள்ளத்தான்//திண்ணை இணையத்தஆத்திலும், பதிவுகளிலும் இவரது சில ஆக்கங்கள் இருக்கின்றன, படித்துப் பாருங்கள்

  Like

 14. வணக்கம் தமிழன் கறுப்பி//சாரு – பாவம்யா இவரு…// இந்த நிலைக்கு அவர் சில சமயங்களில் தெளிவில்லாமல் சொல்லும் கருத்துக்கள் தான் காரணம்

  Like

 15. வணக்கம் கிருஷ்ணா//நன்றி நண்பா. இப்படி ஏராளமான தேடல்களை அறிமுகப்படுத்தி வைத்திருக்கிறாய்//அப்படி சொல்லமுடியாது, எனக்கு தெரிந்தவற்றை பரிமாறிக் கொள்ளுகின்றேன்.//பதிவின் முதலாவது பந்தியை வாசித்தபோது The Curious Case of Benjamin Button திரைப்படம் ஏனோ ஞாபகம் வந்தது. முதல் இரண்டு பந்திகளுக்குள் மனம் மீண்டும் மீண்டும் சுற்றிச்சுழல்வதைத் தவிர்க்க முடியவில்லை.நாளுக்குநாள் உன் எழுத்துநடை மெருகேறிக்கொண்டே போகிறது. வாழ்த்துக்கள்…//அந்த திரைப்படத்தைப் பார்த்து இருக்கின்றேன். ரசனையுடன் அனுபவித்த படம் அது.பாராட்டுகளுக்கு நன்றிகள்

  Like

 16. //தாயகத்தில் இருந்த போது முத்துலிங்கம் அவர்களின் எழுத்துக்களை வாசிக்கும் வாய்ப்புக் கிட்டவில்லை. புலம்பெயர்ந்த பின்னர்தான் வாய்த்தது//நான் நினைக்கின்றேன் அவர் ஒரு பெரிய இடைவெளிக்குப்பின்னர் 90களின் மத்தியில்தான் எழுத தொடங்கினார் என்றூ. எனவே தாயகத்தில் நீங்கள் இருந்த காலத்தில் அவரது படைப்புகள் வெளியாகி இருக்காதென்றே நினைக்கின்றேன்

  Like

 17. //அருண்மொழிவர்மன் said… (கிருஷ்ணா said… நன்றி நண்பா. இப்படி ஏராளமான தேடல்களை அறிமுகப்படுத்தி வைத்திருக்கிறாய்)அப்படி சொல்லமுடியாது, எனக்கு தெரிந்தவற்றை பரிமாறிக் கொள்ளுகின்றேன்.//எனக்கு அறிமுகப்படுத்தி வைத்திருக்கிறாய் என்பதைத்தான் சொல்ல வந்தேன். அதைச் சரியாகச் சொல்லாதது என்னுடைய தவறுதான்.

  Like

 18. அழகாயிருக்கிறது உங்கள் பதிவு அருண்மொழி!அனுபவங்களை அழகியல் படுத்தும் தருணங்கள் அனைவராலும் கொண்டாடப்படுபவையே. அந்தவகையில் உங்கள் அறிமுக வரிகள் சிகரம் என்று சொல்ல முடிகிறது.அழகான உவமைகளை இயல்போடு பொருத்துவதில் அற்புதமாக ஜெயித்திருக்கிறீர்கள் வாழ்த்துக்கள்!!அ.முவின் படைப்புலகம் குறித்து என்னளவிலான பின்தொடர்தலில் அவரை ஒரு கணவான் எழுத்தாளராகவே கருத முடிகிறது. எழுத்தாளன் செத்துவிட்டான் என்பதை படைப்புலகின் வேதமாகக் கொள்ளும் எழுத்துலக சிரஞ்சீவீகளே அவரின் பின்புலங்கொண்டே அவரை அணுகுவதாகத் தோன்றுகிறது. அவரும் தேர்ந்த அனுபவம் சொல்லியாக அறம் சார்ந்த இலக்கியம் படைக்கிறார்.அவரின் எழுத்து நேர்த்தி மிக்கது,பொழுது போக்கு நிறைந்தது மறுப்பதற்கில்லை. அதே சமயம் அதிர்வுகளையும் ஏற்படுத்தவில்லை என்றுதான் ஒரு வாசகனாய் நானுணர்கிறேன். நாங்கள் எழுதினால் அது குருதியாயும் கண்ணீராயும் மட்டும் தான் என்று குரோதம் பேசவில்லை ஆனால் புலம்பெயர் சூழலில் சொல்லவும் நாங்கள் கேட்கவும் இன்னும் எங்கள் கதைகள் நிறைய இருப்பதாகவே படுகிறது.தீயில் தூசாகித் திசை கெட்டழிந்த எங்கள் இருப்புச் சொல்லி நாளைய இலக்கியங்கள் எழுதப்பட வேண்டும் என்பது என் கருத்து.

  Like

 19. விரிவான பகிர்விற்க் நன்றிகள் துர்க்கா//அ.முவின் படைப்புலகம் குறித்து என்னளவிலான பின்தொடர்தலில் அவரை ஒரு கணவான் எழுத்தாளராகவே கருத முடிகிறது.//இந்த புத்தகத்தில் கூட நில அளாவைக்காரன் என்ற க்தை ஒன்று வருகின்றது. அதில் விடுதி மாணவர்கள் மத்தியில் இருந்த் ஓரின சேர்க்கை பற்றிய ஒரு கதையில் தன்னால் இயலுமானவரை பட்டும் படாமலேயே கதையை சொல்லி இருப்பார். அப்போது நானும் இதையே தான் யோசித்தேன். ஈழப்பிரச்சனை பற்றி பெரிய அளாவு தெரியாவிட்டாலும்கூட ஆகக் குறைந்தது புலம்பெயர் வாழ்வில் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் பற்றியாவது எழுதியிருக்கலாம் என்று நினைப்பதுண்டு.//தீயில் தூசாகித் திசை கெட்டழிந்த எங்கள் இருப்புச் சொல்லி நாளைய இலக்கியங்கள் எழுதப்பட வேண்டும் என்பது என் கருத்து.//அண்மையில் மலர்ச்செல்வன் எழுதிய பெரிய எழுத்து என்ற சிறுகதை தொகுப்பி படித்தேன். நவீன இலக்கிய வடிசில் “தனக்கு கிடைத்த சுதந்திரத்தில்” அருமையாக எழுதியிருந்தார். அதில் இருந்த பெரிய எழுத்து என்றா சிறுகதை எனக்கு நன்கு பிடித்திருந்தது

  Like

 20. அழகான ந‌டையில் எழுதி இருக்கிறீர்கள்.நீங்கள் குறிப்பிட்ட புத்தகம் நான் இதுவரை வாசிக்கவில்லை எனினும்அங்கே இப்ப என்ன நேரம், திகட சக்கரம், கடிகாரம் அமதியாக எண்ணிக்கொண்டிருக்கிறதுபோன்றவை வாசித்து இருக்கிறேன்.அ.முத்துலிங்கத்தின் எழுத்துக்கள் கிட்டத்தட்ட சுஜாதாவை போல இருப்பதாகவே நான் உணர்கிறேன்.

  Like

 21. வணக்கம் வாசுகிநீங்கள் சொன்ன புத்தகங்களில் திகட சக்கரம் தவிர்ந்த ஏனையவை வாசித்திருக்கின்றேன். பகிவுக்க நன்றிகள்.//அ.முத்துலிங்கத்தின் எழுத்துக்கள் கிட்டத்தட்ட சுஜாதாவை போல இருப்பதாகவே நான் உணர்கிறேன்.//இதை நானும் உணர்ந்திருக்கின்றேன். சுவாரஸ்யமாக கதை சொல்லும் பாங்கு, தாவி செல்லும் வேகமான அதே நேரம் அழுத்தமான நடை, சில விடயங்களை சொல்லும்போது வெளிப்படும் குழந்தைதனம், ஓயாமல் சிரிப்பெழவைக்கும் குறும்புத்தனம் இவை இவர்களின் சொத்து

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

Website Powered by WordPress.com.

Up ↑

%d bloggers like this: