வரலாற்றுப் பெருமைகளை தொடர்ந்து பேசிப் பேசியே வரலாற்றில் தன் இடத்தை இழந்து கொண்டு வருகின்றான் தமிழன். கனக விசயனின் முடியினை… என்று தொடங்கி தம்புகழ் பாடி, புற நானூற்று வீரம் என்றெல்லாம் பழையதையே மீண்டும் மீண்டும் பேசி மீண்டும் மீண்டும் தமிழனின் தலையில் மிளகாய் அரைத்து வளர்ந்தவர்கள் அடுத்த தேர்தலுக்கு புதிய கூட்டணிகளுடனும், புதிய (கு)யுக்திகளுடனும் மக்களை ஏமாற்ற தயாராகிவிட்டனர். திமுக, அதிமுக என்கிற பெரிய முதலைகள் குழப்புகிற குட்டையில் குதித்து மருத்துவர் ராமதாஸ், கலிங்கப்பட்டி வீரன் வைகோ, தமிழ் நாட்டு சேகுவேரா திருமா ஆகியோரும் செய்த குழப்பத்தில் தமிழன் முகமெல்லாம் சேறாக, தேர்தலுக்கு முன்னமே கரும் புள்ளி குத்தப்பட்டுவிட்டான்.
வன்னியில் நடந்த குண்டுத் தாக்குதல்களில் சிதறி தமிழர்கள் இறப்பதை வீடியோ ஒன்றில் (திருமா மூலமாக என்று சொல்லப்பட்டது) பார்த்து நா தழ தழக்க கருணாநிதி இதுக்கு பிறகு ஆட்சி இருந்தென்ன, போயென்ன என்றொரு அறிக்கை விட்டு, பதவி விலகல் என்று ஒரு அஸ்திரத்தை பிரயோகிக்க, கருணாநிதி மீண்டும் தமிழின தலைவராக பார்க்கபட்டார், அவரது தமிழ் பற்று பற்றி பலரின் சந்தேகமும் கலைந்தது. சுய மரியாதை சிங்கங்கள் ராமதாஸும், திருமாவும் இன்ன பிறரும் தோள் கொடுக்க 80களின் தொடக்கம் மீண்டும் நினைவு கூறப்பட்டது. இதே நேரம் முன்னை நாள் அன்னை வேளாங்கன்னி, என்றென்றைக்குமான புரட்சி தலைவி ஜெயலலிதா ஈழத்தமிழர்கள் என்றால் யார்?, போர் என்றால் இறப்புகள் சகஜம் தானே என்றெல்லாம் சொல்லி வரலாறு காணாத புரட்சி செய்ய கருணாநிதி தமிழின தலைவர் என்பது இன்னும் உறுதி செய்யப்பட்டது.

ஆனால் இதற்குப் பிறகு நடந்தது தான் ஒரு திடீர் க்ளைமாக்ஸ். விடுதலைப் புலிகள் ராஜீவை கொலை செய்தனர், சகோதர படு கொலை செய்தனர், கட்டாய ஆட் சேர்ப்பு செய்தனர் என்றேல்லாம் திடீரென்று கருணாநிதி நினைவு கூர்ந்து, தனது ஞாபக சக்தியை நினைவு கூற கருணாநிதிக்கு எதிர்தரப்பு என்பதை மட்டுமே தனது அரசியலாக கொண்ட அன்னை ஜெயலலிதா ஒரே நொடியில் தமிழருக்கான ஆபத் பாந்தவராக அவதாரம் எடுத்து தனது மதிய உணவையே ஒரு வேளை தியாகம் செய்தார். இதை பார்த்து வழமைக்கு ஒரு படிமேலாகவே உணர்ச்சிவசப்பட்ட கலிங்கப்பட்டி சிங்கம் வைகோ, எம்ஜிஆர் வழியில் சகோதரி ஜெயலலிதா என்று ஆனந்தக் கண்ணீர் உகுத்தார்.
இதை பார்த்து இங்கிருக்கும் அரசியல் ஆய்வாளர்கள் எல்லாம் தமது எதிர்வுகூறும் திறமையை காட்டி விமர்சனங்களாக எழுதி தள்ளினார். சொன்னதை செய்பவர் ஜெயலலிதா, எனவே எமக்கான புதிய மீட்பராக அவர் உருவெடுப்பார் என்பது முதல், கலைஞரின் 60 ஆண்டு கால அரசியல் வாழ்வின் பிழைகள் வரை எல்லாம் மீள் பரிசீலனை செய்யப்பட்டன. ஜெயலலிதாவுடன் கூட்டணி வைப்பது பெற்ற தாயுடன் உறவு கொள்வதைவிட கேவலமானது என்று அறிக்கை விட்ட ராமதாஸ் கண்ணில் திடீரென ஜெயலலிதா மீது சகோதர பாசம் உருவாக, 19 மாத காலம் தன்னை உள்ளே வைத்திருந்த அம்மாவுடன் 10 மாதம் உள்ளே வைத்திருந்த அம்மாவின் சொல்லை மீறி கூட்டணி வைத்த வைகோ அன்னை ஜெயலலிதாவால் புறக்கணிக்கப்பட்டு வருகின்றார். மதவெறியும், பாசிசமும் தன்னிரு கண்ணென போற்றும் ஜெயலலிதாவுடன் கூட்டணி வைத்து கம்யூனிசத்துக்கான புதிய விரிவுரைகளை தோழர்கள் எழுத தொடங்கிவிட்டனர்.

வழமை போல ஏட்டிக்கு போட்டியாக திமுகவும் தன் பக்க பித்தலாட்டத்தை அரங்கேற்ற தொடங்கிவிட்டது. தமிழ் நாட்டில் காங்கிரஸை வேரோடு அறுப்போம் என்று அறுதி இட்ட திருமா திமுக கூட்டணியில் தான் உள்ளேனா, இல்லையா என்று கருணாநிதி சொல்லவேண்டும் என்று கேட்க தன் பக்தனை கவர்ந்தாற் கொள்ளும் கலியுக கண்ணனாக கருணாநிதியும் அவருக்கு அருள் பாலித்தார். தோடுடைய செவியன் பாடிய ஞானக் குழந்தையாக கருணாநிதி புகழ் பாடிய திருமா தமிழின தலைவர் கலைஞருடன் கூட்டணி வைப்பதில் மகிழ்வடைகின்றேன் என்று சொல்லி தன் பக்தியை மெய்ப்பித்தார். இலவச விளக்கவுரையாக தனக்கு திமுகவுடன் தான் கூட்டணி என்றும், திமுக தான் காங்கிரஸுடன் கூட்டணி வைத்துள்ளது என்றும் தன் நிலையை தெளிவு செய்தார். இது பற்றி தனது ஓ பக்கங்களில் ஞாநி இதே அடிப்படையில் தமிழகத்தின் அனைத்து கட்சிகளும் ஒரே அணியில் நின்று போட்டியிடலாம் என்று ஒரு யோசனையை கிண்டலாக சொல்லியிருந்தார். ஞாநியின் சில கருத்துகளில் கடுமையான விமர்சனங்கள் இருந்தாலும், அவரது அரசியல் விமர்சனங்கள் காத்திரமானவை. அவற்றில் இருக்கும் வேகமும் வீச்சும் அவரை எதிர்ப்போரால் கூட மறு பரிசீலனைக்கு உள்ளாக்கப்படுபவை. இது போல சாரு நிவேதிதாவும் தேர்தல்: மாஃபியாக்களின் திருவிழா என்று ஒரு கட்டுரை எழுதியிருந்தார். இரண்டையும் படித்துப்பார்ப்பது அவசியம்.

இது பற்றியெல்லாம் கவலையில்லாமல் வெகுஜன பத்திரிகைகளும் ஊடகங்களும் ”தளபதி சூரியனுக்கு, தல இலைக்கு” என்று சினிமாக் கொட்டகைக்குள் தமக்கான அரசியல் தலைவர்களை தேடப் புறப்பட்டுவிட்டனர். கல்விக்கண் திறந்த படிக்காத மேதை, கர்மவீரர் காமராஜர் என்று முழங்கி அதனால் தான் அரசியல்வாதிகளுக்கு எந்த தகுதியும் தேவை இல்லை என்கிறோம் என்று சினிமாவில் வசனம் வைப்பார்கள். அதற்கு நன்றியாக இப்போது அரசியல்வாதியாக ஒரே தகுதி சினிமா உலகில் இருப்பதுதான் என்றாகிவிட்டது. இல்லாவிட்டால் மேலாண்மை பொன்னுச்சாமிக்கு சாகித்ய அகாதமி விருது கொடுத்ததை விட பல மடங்கு பெரிதாக ரம்பா – கருணாநிதி சந்திப்பு பெரிதாக செய்திகளில் வராது. சினிமாக்காரர்கள் அரசியலுக்கு வருவது பிழை என்று சொல்லவில்லை, ஆனால் அது ஒன்றே அரசியலுக்கான தகுதி என்றாகிவிடாது என்றுதான் சொல்லுகின்றேன். விஜயகாந்திடம் ஒரு முறை நீங்கள் ஏன் அரசியலுக்கு வந்தீர்கள் என்று கேட்க நான் ஒவ்வொரு ஆண்டும் ஏழைகளுக்கு தையல் மெஷின் கொடுத்தேன், அன்ன தானம் செய்தேன், நான் மதுரைத்தமிழன், பலருக்கு கல்வி கற்க உதவினேன் அதனால்தான் அரசியலுக்கு வந்தேன் என்று சொன்னார். இது சொல்லும் நீதி: நிறைய பணத்தை சனத்துக்கு வீணாக்கி விட்டேன், அதை வட்டியும் முதலுமாய் வசூலிக்க அரசியலுக்கு வந்தேன்.

தையல் மெஷின் கொடுப்பதும், நோட்டுப் புத்தகம் கொடுப்பதுதான் அரசியலுக்கான ஒரே தகுதி என்றால் இவர்களை விட சமூகப் போராளிகள் எத்தனையோ பேர் உள்ளனர். அவர்களை கூப்பிட வேண்டியது தானே? சமூக சேவை என்ற ஒரே காரணத்தால் அப்போதைய இந்திய பிரதமர் வாஜ்பாயையே காலில் விழ வைத்தாரே ஒரு தமிழ்ப் பெண், அவரது பெயராவது நினைவிருக்கின்றதா? அவரை யாராவது அரசியலுக்கு அழைத்து உண்ணாவிரதம் இருந்தீர்களா???? யாராவது ஒரு பேராசிரியரை??? ஒரு முறை விஜய் தொலைக்காட்சியில் நீயா நானாவில் கோபிநாத் ஒரு மனிதரை காட்டி இவர் யாரென்று யாருக்காவது தெரியுமா என்று ஆசிரியர்களையும் மாணவர்களையும் கேட்க ஒருவருக்குக் கூட தெரியவில்லை.  ஏன், ஒரு எழுத்தாளரையாவது நீங்கள் அரசியலுக்கு வருவீர்களா என்று கேட்டீர்களா?? இப்போது ரவிக்குமார், சல்மா, கனிமொழி, தமிழச்சி போன்றவர்கள் அரசியலில் நுழைந்துள்ளார்கள். இவர்களால் ஏதாவது சமுதாய மாற்றம் வருமா என்று சற்று காத்திருந்துதான் பார்க்கவேண்டும். கருணாநிதியின் மகள் என்பதையும் தாண்டி ஒரு எழுத்தாளர் அரசியலில் இருக்கின்றார் என்று கனிமொழி சில நம்பிக்கைகளை உருவாக்கியிருந்தார். ஆனால் இந்த நம்பிக்கைகளை எல்லாம் சிதறடிக்கும்படி கவியரங்கங்கள் என்று சொல்லப்படும் கலைஞர் புகழ் அரங்கங்களில் வாலி, வைரமுத்து, பா. விஜய் எல்லாம் அடிக்கும் கூத்து தாங்கமுடியவில்லை. “நீ கோபால புரத்தில் இருக்கும் தாஜ்மகால், ஆக்ராவில் இருக்கும் மீனாட்சி கோபுரம்” என்று வித்தக கவிஞர் பா. விஜய் ஒரு முறை வாசிக்க கைதட்டல் காதைப் பிளாந்தது. மீண்டும் மீண்டும் கேட்டேன். இதற்கு ஏன் இந்த கைதட்டல் என்று இன்றுவரை விளங்கவில்லை. சரியான விளக்கம் யாரும் சொன்னால் கம்பராமாயண அரங்கேற்றத்துக்கு அடுத்ததாக புகழ் பெற்ற இவரது பத்து புத்தகங்களின் அரங்கேற்ற நிகழ்வின் ஒளி நாடா அனுப்பி வைக்கப்படும்.

சிலர் சொல்வார்கள் எம் ஜி ஆர் திரையுல்கை சார்ந்தவர் தானே. அவர் எமக்கான பெற்காலத்தை உருவாக்கித் தரவில்லையா என்று. இதற்கு எனது முதலாவது பதில் எம்ஜிஆர் திரை உலகத்தில் இருந்து வந்திருந்தாலும் அவர் அரசியலுக்கு வந்த பின்னர் தனது திரையுலக கவர்ச்சியை காட்டவில்லை; மேலும் அவர் தனக்கு ஆலோசகராக வைத்திருந்த பலரும் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரிகள். இரண்டாவது பதில், எம்ஜிஆர் ஆட்சி பொற்காலம் என்பது முழுக்க முழுக்க உண்மையில்லை. எம்ஜிஆர் ஆட்சிக்கும் கலைஞர் ஆட்சிக்கும் வித்தியாசம் அப்போது ரவுடிகளும் திருடர்களும் அரசியலுக்கு வருவது பற்றி விகடன் கார்ட்டூன் போட்டுவந்தது, இப்போது சினிமா நடிகர்களும் நடிகைகளும் ஆட்சி அமைப்பது பற்றி கார்ட்டூன் போட்டு வருகின்றது.

இந்த தேர்தலில் அழகிரி நேரடியாக களத்தில் இறங்குவது உறுதியாகிவிட்டது. இந்த நிலையில் இந்த தேர்தலின் பரிணாம மற்றும் பரிமாண வளர்ச்சி எல்லாருக்கும் உறுதியாகிவிட்டடு. அனேகமாக காஷ்மீர் மற்றும் பாகிஸ்தானிய எல்லைகளில் இருக்கும் பாதுகாப்பை விட அதிக பாதுகாப்பு தமிழக வாக்கு சாவடிகளுக்கு வழங்கப்படலாம். அதிமுக கூட்டணி வெல்லுமிடத்தில் கருணாநிதி, ஸ்டாலின், அழகிரி விவாகரங்கள், தினகரன் அலுவலகம் எரிக்கப்பட்டமை, ஸ்பெக்ட்ரம் ஊழல் போன்ற விபரங்கள் தோண்டியெடுக்கப்பட்டு திமுகவின் பெருந்தலைகள் சிறை செல்லலாம். கருணாநிதி ஈழத்தமிழர் விவகாரத்தில் இந்தியா மாற்றாந்தாய் மனப்பாங்கு காட்டுகின்றது என்று உடன் பிறப்புக்கு அதிகாலை ஐந்து மணிக்கு எழும்பி கடிதம் எழுதலாம். ஜெயலலிதா பிரபாகரன் கைது செய்யப்படவேண்டும், அதே நேரம் ஈழத்தமிழர் விவகாரத்தில் அரசியல் தீர்வு காணப்படும் என்று திருவாய் மலர்வார். திமுக வெல்லுமிடத்து இந்திய இறையாண்மை கட்டிக்காக்கப்படும். தமிழர் என்ற அடிப்படையில் கருணாநிதி – ராமதாஸ் உறவு மலரும். உதயநிதியின் மகனுக்கு திமுகவின் குழந்தைகள் அணியின் தலைவர் பதவி கட்சியின் ஏகமனதான தீர்மாணத்தின்படி வழங்கப்படும். ஜெயலலிதா சில மாதங்கள் கொடநாடு விஜயம் புரிவார். மனுஷ்யபுத்திரன் எழுதியபடி ஈழத்தமிழருக்கு சில ஆயிரம் சவப்பெட்டிகளும், ஒப்பாரிகளும் வழங்கப்படும். அடிக்கடி ஞாநி வலியுறுத்தும் 49 “0” பிரிவு ஒரு தொகுதியிலேனும் வென்றால் மாத்திரம் தமிழனும், பெரியார் சொன்ன பகுத்தறிவும் வெற்றிபெறும்.

***வாஜ்பாயை காலில் விழவைத்த சமூக சேவகியின் பெயர் சின்னப்பிள்ளை