கடல்புரத்தில் நாவலும் கரையோர நினைவுகளும் சில எண்ணங்களும்

“மனுஷன் அப்படியில்லை. அவனுக்கு ஒன்றின் மீதும் நம்பிக்கையில்லை. வல்லம் ஒரு ஜீவனுள்ள சாட்சியம். அது பேசாது. அது சொல்லுகிற கதைகளை கேட்டால் அந்தப் பறையக்குடியே தீப்பிடித்துவிடும். எல்லா வல்லங்களுக்கும் எல்லாம் தெரிந்திருந்தது. ஆனால் தங்கள் எஜமானர்களுடைய நன்மையைக்கருதி பேசாமல் இருக்கின்றன. கடல் காற்றில் புதிய லாஞ்சிகள் கூட துருப்பிடித்துவிடுகிறதுண்டு. இந்த மரம் துருப்பிடிக்கிறதேயில்லை. அது கடலுக்கு விசுவாசமாயிருக்கின்றது. வல்லங்களைக் கடல் அலைகள் கவர்ந்து கொண்டதில்லை. சிலுவைப் பாறைச்சுழலில் வல்லங்கள் கவிழ்ந்தால் வல்லங்கள் கரையில் ஒதுங்கிவிடுகின்றன. அந்தச் சுழலில் கடல் மோகினி வாசம் செய்கின்றாள். அவள் மனுஷருடைய ரத்தத்தை விரும்புகிறவள். ஆனால் இந்தப் பறையர்களுக்கு அவளைப் பற்றிய பயம் மறாட்ன்ஹுவிடுகிறதும் நிஜம்தான். கடலோடு போட்டி போட்டு மனுஷன் ஜெயித்ததில்லை. இதை உணராமல் லாஞ்சிகள் மிகுந்த சத்ததுடன் வல்லங்களோடும், நாட்டுப் படவுகளோடும் போட்டியிட்டுக்கொண்டு போகின்றன.” – கடல்புரத்தில் வண்ணநிலவன்”

 

குரூரத்தை மட்டுமே பரிசாகத் தந்துவிட்டு நாட்காட்டித் தாள்கள் நகர்ந்துகொண்டு போகின்றன. ஒரு சிறு குழந்தையின் சிரிப்புக் கூட செத்துப்போய் பிண்டங்களாகக் கிடக்கின்ற வேறு பல குழந்தைகளின் சிரிப்பையே ஏனோ நினைவூட்டுகின்றது. கருட புராணம் சொன்னதாய் கதைகள் கூறும் தண்டணைகள் அனைத்தும் எந்த பாவமும் செய்யாத எம் சக உதரங்களுக்கு நேர்ந்து விடப்பட்டிருக்கின்றது. நாடோறும் கட்சிகளும், அரசியல்வாதிகளும், அமைப்புகளும், சில ஊடகங்களும் இவற்றை காட்சியாக்கி தமக்கான கணக்கு வழக்குகளை நேர் செய்துகொண்டு போகின்றனர். தொடர்ச்சியான மன உளைச்சல்களே நாளாந்த அனுபவங்களாகிப் போன இன்றைய நாட்களில் நல்ல புத்தகங்களும் சில திரைப்படங்களுமே அவ்வப்போது நிஜத்தின் தழலில் இருந்து எம்மை கரை சேர்க்கின்றன. அந்த வகையில் அண்மையில் வாசித்து முடித்த “கடல் புரத்தில்” என்ற வண்ணநிலவனின் நாவல் என்னளவில் மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றது. வண்ணநிலவனின் எழு த்துக்கள் பற்றி நிறைய கேள்விப்பட்டும், வாசித்தும் இருந்தாலும் அவரது எஸ்தர் டீச்சர் போன்ற ஒரு சில சிறுகதைகளை மட்டுமே வாசித்திருக்கின்றேன். கடல் புரத்தில் நாவலை வாசித்து முடித்தபோது எத்தனை அருமையான ஒரு வாசிப்பனுபவத்தை இத்தனை காலம் தவற விட்டிருக்கின்றேன் என்று உணர முடிந்தது.
ம்ணப்பாடு என்கிற கடலோர கிராமம் ஒன்றில் வாழும் குரூஸ் என்பவனின் குடும்பத்தையும் அந்த குடும்பத்துடன் தொடர்புற்றவர்களையும் பற்றி அவர்கள் வாழும் கிராமம் சார்ந்து நாவல் அமைகின்றது. அதே நேரம் பாராம்பரியத்தின் மீது நவீனம் செலுத்தும் ஆதிக்கம் வள்ர்வதையும், அதை ஏற்றுக்கொளள முடியாது பாரம்பரியத்தின் மீது கொண்ட தீராத காதலுடன் போராடுபவர்களை பற்றி சொல்வதாயும் எடுக்கவும் முடியும். மனப்பாடு கிராமத்தில் பாரம்பரியமாக மீன்பிடித்தொழில் செய்துவருகிறான் குரூஸ். தன் தகப்பன் காலத்து வல்லத்தையே ஒட்டுக்களுடன் பாவித்து வருகின்றான். அவனது மகன் செபஸ்தி படித்து வெளியூர் ஒன்றில் ஆசிரியனாகப் பணிசெய்கின்றான். சம்பளம் வாங்கித் தொழில் செய்தால் முன்னேற முடியாது என்ற எண்ணம் கொண்ட அவன் வல்லத்தையும் வீட்டையும் விற்றுவிட்டு பட்டணத்துக்கு வந்துவிடும்படி தகப்பனை கேட்டுவருகின்றான். இதனால் தொடர்ச்சியாக தகபனுக்கும் மக்னுக்கும் இடையில் வாக்குவாதங்கள் எழுந்துவருகின்றன. இன்றைய சூழலில் நாம் அடிக்கடி காண்கின்ற மாற்றங்களுடன் தம்மை பொருத்தி வாழும் தலைமுறைக்கும், மாறக்கூடாது என்பதில் பிடிவாதமாய் இருக்கும் ஒரு தலைமுறைக்குமான போராட்டமாகவே இது காணப்படுகின்றன. தலைமுறை இடைவெளி என்று இன்றைய காலங்களில் அடிக்கடி பாவிக்கப்படும் சொல் இன்று மட்டுமல்ல மிக நீண்ட காலமாக / அடி நாள் முதலாகவே இருந்துவருகின்றது என்பது தெளிவாகின்றது. விழா நாளில் மீன்பிடிக்க கடலுக்கு செல்லக்கூடாது என்ற மரபை மீறி லாஞ்சியில் சிலர் மீன்பிடிக்க செல்கின்றனர் என்று அறிந்த குரூஸ் வாளையும் எடுத்துக்கொண்டு க்டற்கரைக்கு செல்கின்றான். அதே நேரம் லாஞ்சி வைத்திருக்கும் ஐசக், ரொசாரியா, சாமிதாஸ் போன்றவர்கள் தம் முடிவில் உறுதியாக இருந்தும் பின்னர் அது தடைப்படுகின்றது. பொதுவாக லாஞ்சியில் கடலில் வெகுதூரம் சென்று மீன்பிடிக்கும் வசதி இருப்பதால் அவர்களால் பெருந்தொகை மீன்களை பிடிக்க முடிகின்றது. இதனால் வல்லங்களில் சென்று மீன்பிடிப்பவர்களுக்கு மீன் கிடைப்பது அரிதாகும் அதே வேளை சந்தையை தீர்மானிக்கும் வல்லமையும் அவர்களிடம் இருந்து பறிக்கப்பட்டுவிடுகின்றது. உண்மையில் பொருளாதார ரீதியாக ஏற்படுத்தும் இந்த பிளவுதான் அவர்களிடையே இருந்த உறவிலும் விரிசலை உண்டாக்குகின்றது.

 

கடல் புரத்தில் நாவலில் கூட படித்த செபஸ்தியன் தான் காதலித்த ரஞ்சியை கல்யாணம் செய்ய முடியாமல் போக, அவள் நினைவுவரும்போதெல்லாம் குடிக்கிறான். இந்த கையறு நிலைதான் அதிகம் காசு உழைக்கவேண்டும் என்ற அவனின் ஆவேசத்துக்குக்கூட காரணமாக இருந்திருக்கக்கூடும். அதுபோல பிலோமிக்குட்டியை காதலித்த சாமிதாஸ் தனக்கு பூரண சம்மதம் இல்லாதபோதும் வேறொரு பெண்ணை கல்யாணம் செய்கின்றான். சாமிதாஸின் தகப்பன் சொந்தமாக லோஞ்சி வைத்திருப்பவன். இதுபோல குரூசுக்கு நெருக்கமான நண்பனான ஐசக், (இவனும் லோஞ்சி வைத்திருப்பவன்) தனது மனைவியை துரத்திவிட்டு குரூஸின் மகள் பிலோமிக்குட்டியை திருமணம் செய்யவேண்டும் என்று நினைக்கின்றான். மக்களிடையே இருந்த இயல்பான உறவுநிலைகள் நாகரிகத்தின் வருகை தரும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளால் சீர் குலைக்கப்படுகின்றது. ஆனால் சற்று யோசித்துப்பார்த்தால் லாஞ்சியின் வருகையினை விரும்பாத வல்லம் வைத்திருப்போரின் முன்னோரைக்கூட அதற்கு முன்னைய மரபுரீதியான மீன் பிடித்தல்களை செய்தவர்கள் இதுபோலத்தான் எதிர்த்திருப்பார்கள். இலகுவாக சொல்வதென்றால், ஏ. ஆர். ரஹ்மானின் வருகையின்போது அவரை எப்படி இளையராஜா ரசிகர்கள் எதிர்த்தார்களோ அதேபோலத்தான் இளையராஜாவின் வருகையை விஸ்வநாதனின் ரசிகர்களும் எதிர்த்திருப்பார்கள். இது சக்கரம் போன்ற தொடர்ச்சியான இயக்கம். ஆனால், நாகரிக வளர்ச்சி முக்கியமாக உள்ள அதே நேரம், அடிப்படை வாழ்வாதார தொழிலாக இத் தொழில்களை செய்வோரின் நலன் காக்கப்படவேண்டியதும் அவசியம்.

 

இந்த நாவலில் முக்கியமாக நான் கருதுகின்ற இன்னுமொரு அம்சம் பெண்கள் துணிச்சல் மிக்கவர்களாக காட்டப்படும் முறை. கற்பு என்கிற மனம் சார்ந்த இரு பாலாருக்கும் பொதுவான ஒரு விடயத்தை பெண்களுக்கு உடல் சார்ந்த ஒரு விடயமாகவே சமூகம் பார்ப்பது வழக்கம். இந்த நாவலில் பிலோமிக்குட்டி, சாமிதாஸை ஆழமாக நேசித்து அவனிடம் உறவும் கொண்டபின்னரும் கூட, சாமிதாஸ் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்யப்போவதாக சொன்னவுடன் அழுகிறாள்; தொடர்ச்சியாக அவன் எண்ணங்களால் அலைக்கழிக்கப்படுகின்றாள்; ஆனால் இதுவும் கடந்துபோகும் என்ற மனத் துணிவுடன் வாழ்வை எதிர்கொள்ள தயாராகின்றாள். கிட்ட தட்ட இவளின் அனுபவத்தையே உடைய அவள் சினேகிதி ரஞ்சி அவளுக்கு துணைநிற்கின்றாள். இது போன்ற ஒரு பெரிய நிகழ்வின் பின்னர் அதை தாண்டி வர முற்படும் எவருக்கும் ஒரு ஆதரவு அவசியம். அண்மையில் நான் பார்த்த DEV. D என்கிற ஹிந்தி திரைப்படத்தில் வரும் என்கிற லெனி/சந்தா என்கிற கதாபாத்திரம் இது பற்றி சில ஆதாரமான கேள்விகளை எழுப்புகின்றது. சாரு நிவேதிதா மிகப்பெரிய அளவில் பாராட்டுகளை தெரிவித்த இந்த திரைப்படத்தில் எனக்கு மிகவும் பிடித்த காட்சி சந்தா, தேவ் இடம் கேட்கும் அந்த கேள்விகள்தான். அதாவது, சந்தாவுடன் தனிமையில் காமமுற்று இருந்த வேளைகளில் எடுத்த வீடியோ ஒன்றை அவள் காதலன் எம்.எம்.எஸ் மூலம் பரப்புகின்றான். இதை பலரும் பார்க்கின்றனர். இதை அறிந்த அவள் பெற்றோரும் அவளை திட்டுகின்றனர். உன்னால் எனக்கு அவமானம் என்று திட்டி அவள் தகப்பன் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொள்கின்றார். அதன் பின்னர் பாட்டி வீட்டிற்கு செல்லும் அவள் மீண்டும் மீண்டும் இந்த நிகழ்வை ஞாபகமூட்டி திட்டப்படுகின்றாள். இதனால் ஒரு நிலையில் வீட்டை விட்டு வெளியேறும் சந்தா மும்பையில் உள்ள விபச்சார விடுதி ஒன்றில் சேர்கின்றாள். அங்கே அவள் தேவ் ஐ சந்தித்டு அவனிடம் தன்னுடைய கடந்த காலம் பற்றி கூறும்போது “அந்த சோதனைக்காலத்தில் எனக்கு அப்பா எனக்கு ஆறுதலாக இருக்கவில்லை. மாறாக அவர் தன்னை சுட்டுக்கொண்டு இறந்ததால் என்னை மேலும் சோதனைக்குள்ளாக்கி என்னை சிக்கல்களில் இருந்து மீளவே முடியாமல் பண்ணினார்”. ஒழுக்கம் பற்றி அதிகம் நன் சமூகம் கவலைப்படுவதால் மனித நேயத்தையும் மறந்து, பாதிக்கப்பட்ட ஒருத்திக்கு இனப்பெருக்க உறுப்புகளின் வழி தீர்மாணிக்கப்படும் ஒழுக்கங்களை முன்வைத்து தீர்ப்பெழுதுகிறோம். “மயிர் நீப்பின் உயிர்வாழாக் கவரிமான்” என்றுதாம் எமக்கு உதவிக்கு வர நிறைய விடயங்களும் இருக்கின்றனவே. ஜெயகாந்தன் அக்கினிபிரவேசம் கதையை எழுதியபின்னர் அதன் முடிவு பற்றி பல விமர்சனங்கள் வர, அவர் விமர்சகர்கள் சொல்லும் பாதையிலேயே கதை போய் இருந்தால் பாதிக்கப்பட்ட பெண் என்னென்ன சிக்கல்களை எல்லாம் எதிர்கொண்டிருப்பார் என்று சில நேரங்களில் சில மனிதர்கள் என்ற கதையாக தந்தார். அதிலும் முக்கியமாக ஒருமுறை உடலுறவு கொண்டாலே பெண் வாந்தியெடுத்து, கர்ப்பம் ஆகிவிடுவதை காலம் காலமாக திரைப்படங்களில் சொல்லிவரும் சமூகத்தில் பிலோமிக்குட்டியும், ரஞ்சியும் முன்மாதிரிகள்.
பெற்றோர், காதல், நட்பு என்று உறவுகள் தொடர்ந்து போற்றப்படும் சமூகத்தில் எல்லா உறவுகளும் உள்ளபடியே, அவர்களுக்கான குறைபாடுகளுடன் காண்பிக்கப்படுவது கதையின் இயல்புத்தன்மையை அதிகரிக்கின்றது. ஐசக் தன் உற்ற நண்பன் குரூஸின் மகளை இரண்டாம் தாரமாக கல்யாணம் கட்ட வேண்டும் என்று ஓயாது எண்ணுகின்றான். அவள் உடை மாற்றும்போது ஜன்னலுக்கால் பார்த்தப்டி இருக்கின்றான். குரூஸின் மனைவி மரியம்மை அவனுக்குப் பிடிக்காமல் மாலை வேளைகளில் வாத்தி வீட்ட போய் வருகிறாள். ரஞ்சியும், சாமிதாஸும் தாம் நேசித்தவர்களை கைவிட்டு இன்னொருத்தரை பொருளாதார நிர்ப்பந்தங்களை ஏற்றுக்கொண்டு கல்யாணம் செய்துவிடுகின்றனர். குரூஸின் நம்பிக்கைக்குரிய சிலுவை, குரூஸ் பழைய நினைவுகளை மறந்ததும் அவனுக்கு கொடுக்கவேண்டிய காசை கொடுக்காமல் ஏமாற்றி விடுகிறான். அது மட்டுமல்ல ஏற்கனவே கல்யாணமான அவனுக்கும் பிலோமினாவை கல்யாணாம் செய்யவேண்டும் என்ற எண்ணம் கூட உள்ளது. ஒரு முறை பிலோமினா படுத்திருக்கும்போது அவளது விலகிய ஆடைகளூடாக அவள் உடலழகை பார்த்தபடி இருக்கின்றான். ஆனால் எல்லாக் கசடுகளையும் தாண்டி எல்லார் மனதுக்குள்ளும் இருக்கும் மானுட நேயம் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் பீறிட்டு வருவதை அழகாக காட்டியுள்ளா வண்ணநிலவன்.

 

இந்தக் கதையை வாசித்தபோது என்னை நிரடிய வித சாதிப்பெயர்களால் தொடர்ந்து மனிதர்கள் அழைக்கப்படுவது. அதே நேரம், சாதீய கூறுகள் சமூகத்தில் ஆழமாக வேரோடிப்போயிருந்த 70களில் எழுதப்பட்ட நாவல் இது என்பது கவனத்தில் கொள்ளப்படவேண்டியது முக்கியம். கதைக்கு முன்னுரை ஒன்று வழங்கியுள்ள ஞாநி கூட இன்றைய நாட்களில் இந்த நுலை மறுபதிப்பிக்க தயங்கியதாகவும் “எழுச்சிக் காலத்தில்தான் நமது அடிமை மரபு நினைவு படுத்தப்படவேண்டும். அப்போதுதான் எத்தனை போராட்டத்துக்குப்பின் இன்றாஇய எழுச்சியை அடைய வேண்இ வந்தது என்பது புதிய தலைமுறைகளுக்குப் புரியும்” என்றூ சொல்லி ஊக்குவித்ததாயும் சொன்னார். எமது சமூகத்தில் ஜாதி வேறுபாடு இல்லை, வறுமை இல்லை, அறியாமை இல்லை என்று பிதற்றுவதை தவிர்த்து இலக்கியங்களை எழுதும்போது அக்காலங்களில் அந்த சமூகத்தில் இருந்த பிரச்சனைகளையும் சொல்லி எழுதுவதே நேர்மையானதாக இருக்கும் என்றூ நினைக்கின்றேன். அந்த் வகையிலும் வண்ணநிலவன் ஓரளவுக்கு திருப்திகரமாக தன் கடனை செய்கின்றார்.

 

புதிய தலைமுறையின் மாற்றத்தையும், நவீனத்தின் வருகையையும் எதிர்த்து பாராம்பரியத்தை காக்க விடாப்பிடியாக போராடிய குரூஸ் எனப்படும் குரூஸ் மைக்கேல் தன் பிடி தளர்ந்து தொடர்ந்து போராடும் தெம்பில்லை என்ற நிலை வரும்போது வீட்டையும், படகையும் விற்றுவிட்டு வெளியூர் செல்ல முற்படுகிறான். புதியவற்றின் எழுச்சிகளுக்கெதிரான அவனது போராட்டத்தின் வீழ்ச்சியையே இது காட்டுகின்றது. இந்த நிலையில் அவனால் எதிர்காலத்தின் யதார்த்தத்தை ஏற்றுக்கொள்ள முடியாமல் இருக்க, மனப் பிறழ்வினால் தன் பழைய நினைவுகளை எல்லாம் மறந்த நிலையை அடைகின்றான். குரூஸ் விற்ற வீட்டை அவன் மகன் மீட்டுக்கொடுக்க, அவன் விரும்பிய அதே பழைய சூழலில் ஒரு நடைப்பிணம் போல குரூஸின் இயக்கம் தொடர்கின்றது. சாமிதாஸின் கல்யாணம், அது, இதென்று உலகம் தொடர்ந்து இயங்கிக்கொண்டே இருக்கின்றது. மாறும் உலகுடன் சேர்ந்து மாறாமல் அதை எதிர்த்து போராடுபவர்களை எங்கோ தூக்கி எறிந்துவிட்டு காலச்சக்கரம் தொடர்ந்து இயங்கும் என்று சொல்வது நிஜம்தானோ என்ற எண்ணம் பலமாகவே எழுகின்றது.

*****இந்தக் கதையை வாசித்து முடித்து அசை போடுகையில், பிலோமிக்குட்டி கதாபாத்திரத்தையும் DEV. Dல் சந்தா கதா பாத்திரத்தையும் நினைக்கையில் ஏனோ மனுஷ்யபுத்திரன் அவரது நீராலானது தொகுதியில் எழுதிய “ஒரு பெரிய அவமானத்திற்குப் பிறகு” என்ற கவிதை நினைவு வந்தது. எப்போது எந்த தொடர்ச்சியும் இல்லாதவைகளாகவே என் நினைவுகள் இருந்திருக்கின்றன. பிறிதொரு பொழுதில் பார்த்தபோது அந்த தொடர்ச்சியின்மைக்குள்ளும் ஒரு தொடர்ச்சி இருந்திருக்கின்றது

“ஒரு பெரிய அவமானத்திற்குப் பிறகு”

நன்றாக குளிக்கவேண்டும்
வெந்நீராக இருந்தால் மிகவும் நல்லது
இருப்பதிலேயே நல்ல அதிகம் பயன்படுத்தாத
தெம்பூட்டும் ஆடையை அணியலாம்

தெருவில் இறங்கி நடக்கும்போது
அடிக்கடி திரும்பிப் பார்க்க வேண்டியதில்லை

அதிக இறுக்கம் அதிக இணக்கம்
இரண்டுமே நம்மைக் காட்டிகொடுத்துவிடும்
குழந்தைகளை இயல்பாக கொஞ்ச வேண்டும்

மர்மமாக புன்னகைப்பவர்கள்
கேட்காமலேயே தம் கனிவை வழங்குபவர்கள்
செயற்கையாகப் பேச்சை மாற்றுபவர்கள்
எல்லாரையும் நாகரீகமாக வணங்கலாம்

சாதுரியமாக விரைவாக
தப்பிச் சென்று விடவேண்டும்
நாம் மதிக்கப்படும் ஒவ்வொரு இடத்திலிருந்தும்

தனித்த அறை ஒன்றில்
மனங் கசந்து அழும்போது
கதவு தட்டும் ஓசை கேட்டு
கண்களைத் துடைத்துக்கொள்ளவேண்டும்

எல்லையற்றது
இந்த உலகின் தீமை
எல்லையற்றது இந்த உலகின் கருணை

 

11 thoughts on “கடல்புரத்தில் நாவலும் கரையோர நினைவுகளும் சில எண்ணங்களும்

Add yours

 1. பாலகுமாரன் இதே நாவலை காப்பியடித்து தனது பெயரில் வெளியிட்டார். பின்னர் தான் புகழ்பெற்றதும் அதனை ஒத்துக்கொண்டார். இந்த சம்பவம் பற்றி அறிந்து பின்னர் சாமியார் வேஷம் கட்டும் எல்லாருமே திருடர்கள் என்று உறுதியாகத் தெரிந்துகொண்டேன்

  Like

 2. வணக்கம் நண்பரே வருகைக்கு நன்றி. ஆனால் பிழையான் தகவலுடன் அறிமுகமாகி இருக்கின்றீர்கள். தனது சுய சரிதையான முன் கதை சுருக்கத்தில் பாலகுமாரன் தெளிவாக சொல்லி இருக்கின்றார். வண்ண நிலவனின் கதை ஒன்றை டஅவருக்கு பணம் தந்து வாங்கி தந்து கதையென்று தான் பயன் படுத்தியதாக. அது கடல் புரத்தில் அல்ல. ஏதோ ஒரு நதியில்” என்பது போன்ற ஒரு தலைப்பு. இதனால் தான் சொல்லுகின்றேன், எந்த விடயத்திலும் இறுதி தீர்ப்பெழுதிவடாதீர்கள்

  Like

 3. //அவரது எஸ்தர் டீச்சர் //எஸ்தர் சித்தி என நினைக்கிறேன்.அவரது எஸ்தர் கதை மட்டுமே நான் படித்திருக்கிறேன்.

  Like

 4. எல்லையற்றதுஇந்த உலகின் தீமைஎல்லையற்றது இந்த உலகின் கருணை //காரணம் -எல்லையற்றது நம் மனம்.அருண்மொழி,எனக்கும் உங்களுக்கும் நிறைய வேறுபாடுகள் இருப்பினும் உங்கள் சிரத்தை பாராட்டுக்குரியது.அது உங்களை நல்லதோர் இடத்திற்குக் கொண்டு செல்லும் என நம்புகிறேன்.

  Like

 5. வணக்கம் வாசுகி, தவறாக குறிப்பிட்டிருக்கின்றேன் என்று தான் நினைக்கின்றேன். திருத்திவிடுகின்றேன்.அந்த கதை அவரின் கதைகளில் முக்கியமான ஒன்று என்று நினைக்கின்றேன். கதையின் முடிவை மனதில் பெரும் பாரம் நிலைக்கும்படி அமைத்திருப்பார்

  Like

 6. வணக்கம் ஷண்முகப்பிரியன்//அருண்மொழி,எனக்கும் உங்களுக்கும் நிறைய வேறுபாடுகள் இருப்பினும் //என்ன வேறுபாடுகளை சொல்கின்றீர்கள் என்று புரியவில்லை. இந்த கதையை அணுகிய விதத்திலா அல்லது பொதுவாகவேயா?எனினும் பாராட்டுக்கு நன்றிகள்

  Like

 7. வணக்கம் தவநாதன்அந்த திரைப்படம் பற்றி கானா பிரபா செய்த அறிமுகத்தின் பின்னர் அந்த படத்தை தேடிப்பார்த்திருக்கின்றேன். அருமையான படம். என்னைப் பொறுத்தவரை மீனவ சமுதாயத்தை வைத்து வெளியான படங்களில் பல படங்கள் என்னை நன்கு கவர்ந்திருக்கின்றன. கடல் பூக்கள், கடல் மீன்கள், நிலாவே வா போன்றவை உதாரணமாக சொல்லலாம்

  Like

 8. வணக்கம் அருண்,இந்த நாவலை இதுவரை படிக்காத என் போன்றவர்களை கூட படிக்கத்தூண்டும் விதத்தில் அமைந்துள்ளது நீங்கள் இந்த நாவலை அணுகியிருக்கும் பாங்கு.வாழ்த்துகள். உஙளை தொடர்பு கொள்ள ஆவலாக உள்ளேன்.barathji@gmail.com

  Like

 9. அருண்,//சாரு நிவேதிதா மிகப்பெரிய அளவில் பாராட்டுகளை தெரிவித்த இந்த திரைப்படத்தில்//ஏன் சாருவின் ரசனை தான் திரைப்பட மதிப்பாய்வு நியமமா??இதெல்லாம் நியாயமா??

  Like

 10. வணக்கம் பாரதி,யதார்த்தமான கதை சொல்லல் இந்தக் கதையின் பெரிய பலம். அருமையான நாவல், கட்டாயம் வாசித்துப் பாருங்கள்.எனக்கும் உங்களை தொடர்புகொள்ள ஆசைதான். கருத்துப் பரிமாறல்கள் எமக்கு தெளிவையும், நல்ல வாசிப்பனுபவத்தையும் தரும் என்று நம்புகின்றேன்.////சாரு நிவேதிதா மிகப்பெரிய அளவில் பாராட்டுகளை தெரிவித்த இந்த திரைப்படத்தில்//ஏன் சாருவின் ரசனை தான் திரைப்பட மதிப்பாய்வு நியமமா??இதெல்லாம் நியாயமா??//அப்படி சொல்லவில்லை. சாரு மிக மோசமாக் விமர்சித்த எத்தனையோ திரைப்படங்களை நான் வெகுவாக ரசித்திருக்கின்றேன். அதே போல அவர் சிலாகித்த சில படங்களை என்னால் பெரியளாவு ரசிக்க முடியாமலு ம் இருந்திருக்கின்றது.ஆனால் தேவ்.டி படம் பார்க்க தூண்டலாக இருந்தது சாரும் அதன் மீது எழுதிய விமர்ச்னமும், விமர்ச்னம் குறிப்பிட்ட கதையினை எப்படி படமாக்கி உள்ளனர் என்று பார்ப்பதில் இருந்த ஆர்வமும்…வேறென்ன பாரதி, கருத்துப் பரிமாறல்களுக்கு நன்றி

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

Website Powered by WordPress.com.

Up ↑

%d bloggers like this: