காலம் – 2009: சில எண்ணங்கள்

கனடாவில் நல்ல படைப்பாளிகள் இருக்கின்ற அளவுக்கு இலக்கிய அமைப்புகளோ, இலக்கிய இதழ்களோ வெளிவருவதில்லை என்றிருக்கின்ற பொதுக் கருத்தை அவ்வப்போது வெளிவந்தாலும் “காலம்” தழ் அடிக்கடி தகர்த்து வருவது வழக்கம். இந்த வகையில் ஜூன் – ஆகஸ்ட் 2009 ற்கான 32வது காலம் இதழ் இதுவரை வெளிவந்த காலம் இதழ்களில் என்னளவில் அதிக நிறைவை தந்ததாக இருக்கின்றது.

கடந்த காலம் இதழ்களுடன் ஒப்பிடுகையில் அதிகளவு சிறு கதைகளையும், கவிதைகளையும் தன்னகத்தே கொண்டிருந்தாலும் அகோரமான யுத்தத்தில் அகப்பட்டிருக்கின்ற ஒரு காலத்தின் சாட்சியாக போர்க் கொடுமைகள் பற்றிய ஆக்கங்களே அதிகளவில் இடம்பெற்றிருக்கின்றன. பதினேழாம் நூற்றாண்டில் இரண்டாவது சார்ள்ஸ் மன்னனின் காலத்தில் இங்கிலாந்தில் பிளேக் நோய் பரவியபோது மக்கள் நூற்றுக்கணக்கில் செத்துவிழுந்தார்களாம். இந்த நாட்களில் அரச சேவகர்கள் “பிணங்களை வெளியில் கொண்டுவாருங்கள்” என்றூ கூவியபடி கை வண்டியுடன் தெருத் தெருவாக வருவார்களாம். இந்த நிகழ்வை தற்போதைய வன்னிக் கொடுமைகளுடன் ஒப்பிட்டு அ. முத்துலிங்கம் “பிணங்களை வெளியே கொண்டுவாருங்கள்” என்ற அருமையான ஒரு கட்டுரையை எழுதியுள்ளார். அவர் கூறிய படி முற்றான இன அழிப்பு முடிவடைந்த பின்னர் “இலங்கை அரசு ஆறுதலான ஒரு பெரிய பெரு மூச்சை விடலாம். என்ன நடக்கிறது என்பதை உன்னிப்பாக வேடிக்கை பார்த்து வந்த உலக நாடுகளும் பெரு மூச்சு விடும். இந்தியாவின் பெரு முச்சு மிக நீண்டதாக இருக்கும்” போலத்தான் இருக்கின்றது. எனக்குத் தெரிந்து இது இலங்கைப் பிரச்சனை பற்றி இவர் எழுதிய மிகச் சொற்பமான ஆக்கங்களுல் (கிட்டுமாமாவின் குரங்கு ?????, பொற்கொடியும் பார்ப்பாள், மற்றும் 83 கலவரம் பற்றி ஆனந்த விகடனில் வெளிவந்த ஒரு கதை) இதுவே சிறப்பானதாக இருக்கின்றது. இதே இதழில் பத்து நாட்கள் என்ற இவர் எழுதிய இன்னுமொரு சிறு கதையும் இருக்கின்றது. அண்மையில் இவர் எழுதிய “உண்மை கலந்த நாட் குறிப்புகள்” என்ற நாவலில் (?) எந்த ஒரு அத்தியாயத்துக்கு இடையிலும் இதை தூக்கிப் போட்டுவிடலாம். அ. முத்துலிங்கத்தைப் பொறுத்தவரை அவரது எழுத்துக்களின் உச்சத்தில் இருக்கின்றார். அண்மைக்காலமாக அவர் எழுதுபவை எல்லாம் நல்ல “மகிழ்வூட்டும் பிரதிகளாக” இருக்கின்றன.

ஒரு கவிஞராகவும், புனைவு எழுத்தாளாராகவும் பரவலாக அறியப்பட்ட டிசே தமிழனின் “ஹேமாக்கா” என்ற சிறு கதை இந்த இதழில் வெளிவந்திருக்கின்றது. அண்மையில் நான் வாசித்த ஆகச் சிறந்த கதை என்று இன்னும் சில காலத்துக்கு நான் சொல்லிக் கொண்டிருக்கப்போகும் கதை இது. போர்க்கால வன் முறைகளால் பாதிக்கப்பட்ட ஒருவன் அந்த அந்த வயதுக்குரிய ஆச்சரியங்களுடன் கதை சொல்வதாக அமைகின்றது. யுத்தம் நடந்த பிரதேசங்களில் வாழ்ந்தவர்கள் பலர் அந்தந்த இடங்களை நீங்கி பலகாலம் பிற தேசங்களில் வாழ்ந்தாலும் வன்முறையின் தாக்கம் அவர்கள் மனதில் பலத்த தாக்கமாக தங்கியிருப்பதை பல தடவைகள் அவதானித்து இருக்கின்றேன். தொடர்ச்சியான கசப்புகளும், ஏமாற்றங்களும் வடுக்களுமே நிலையாகிப்போன எம் மனதில் ஹேமாக்காவும் நெடுங்காலம் வாழ்வார் என்பதற்குரிய எல்லா சாத்தியங்களும் கதையில் தெரிகின்றன. இந்தக் கதையை வாசிப்பவர்கள் முடிவில் ஒரு சொல்ல முடியாத பாரத்தை மனதில் உணர்வார்கள். ஹேமாக்காவின் கண்ணீரை எல்லார் மனதிலும் ஏற்றி வைத்துவிட்டார்போலும்.

ஈழப்போராட்டத்தின் ஆரம்ப கட்டங்களில் நடைபெற்ற நிகழ்வுகளை மையமாக வைத்து செழியன் எழுதிய “தோற்றோடிப்போன குதிரை வீரன்” என்ற கதை ராணுவ ரோந்துகள் என்ற அட்டூழியங்களை கண் முன்னர் நிறுத்துகின்றது. அதே நேரம் உரையாடல்களில் அடிக்கடி பாவிக்கப்படும் “தோழர்” என்ற சொல் வலிந்து திணிக்கப்பட்டதாகவே தோன்றுகின்றது. இக்கதையில் பாவிக்கப்படும் அளவுக்கு தோழர் என்ற சொல் ஈழத்தில் விடுதலை இயக்கங்களிடையே பாவனையில் இருந்ததா என்று அக்காலத்தில் இருந்த யாராவதுதான் தெளிவு படுத்த வேண்டும். அதேநேரம் யுத்த காலக் கொடுமைகளை உக்கிரமாகப் பதிவு செய்யும் இன்னொரு சிறுகதையாக பா. அ. ஜயகரன் எழுதிய அடேலின் கைக்குட்டை என்ற சிறு கதை சிறப்பாகவே அமைந்திருக்கின்றது. யுத்த காலக்கொடுமைகள் பற்றி சொல்லும்போது எந்தவிதமான பிரச்சாரத் தொனியும் விழுந்துவிடாமல் கதைசொல்லி சொல்லிச் செல்ல எல்லா உணர்ச்சிகளும் படிப்பவர் மனதில் ஆழமாகப் பதியும் வண்ணம் “ஹேமாக்கா”, மற்றும் “அடேலின் கைக்குட்டை” என்ற இரண்டு கதைகளும் அமைந்திருப்பது வெகு சிறப்பு.

எப்போதும் கனவுகள் பற்றியே ரசனையாக பேசும் மெலிஞ்சி முத்தன் இந்த இதழில் எழுதியுள்ள கதைகூட கனவுடன் தான் ஆரம்பிக்கின்றது. தனக்கேயுரிய கவிதைத் தன்மை வாய்ந்த நடையில் அவர் கதையும் அமைந்துள்ளது. பெரியதொரு இலக்கிய முயற்சியில் ஈடுபடிருக்கும் மெலிஞ்சி முத்தன் அதன் பின்னர் மிகப்பரவலான கவனத்தை பெறவேண்டும் என்பது என் விருப்பம். யுத்தகால அவலம் பேசும் இன்னுமொரு கதையாக சிங்களத்தில் தயாசேன குணசிங்ஹ எழுதி தமிழில் மொஹம்மட் ராசூக் மொழி மாற்றம் செய்த பிசாசுகளின் இரவு, 83 கலவரத்தின் இன்னுமொரு கோணமாக அமைகின்றது.

இந்த இதழில் “உறவுகள் ஊமையானால்” என்ற ரஞ்சனி எழுதிய கதையில் பெண்களின் பிரச்சனைகள் பற்றி பேசப்படுகின்றது. பெண்களின் எழுத்துக்களும், பெண்ணியம் சார்ந்த செயல்களும் பெரு வீச்சுடன் வளர்ந்துவரும் இந்நாட்களில் இக்கதை சொல்லும் கருத்துகள் யாவும் மிக ஆரம்பத்தில் எழுப்பப்பட்ட பெண்களுக்கான பிரச்சனைகளாகும். அந்த பிரச்சனை இன்னும் தீரவில்லை என்ற போதிலும், அந்த பிரச்சனைகளுக்கான தீர்வுகளாக கதை சொல்லி கதையின் கடைசிப் பகுதியை கொண்டு செல்லும் பாங்கு நாடகத் தன்மையானதாக இருக்கின்றது. அது மட்டுமல்ல கதையில் அதிகளவு ஆங்கிலச் சொற்கள் Englishலேயே வருகின்றன. அதிலும் நடைமுறை வாழ்வில் கூட நாம் தமிழுடன் கலந்து பேச்சுவாக்கில் அதிகம் பாவிக்காத Perhaps என்ற சொல் கூட கதையின் கடைசிப் பகுதியில் வருகின்றது. இவற்றைத் தவிர்த்திருக்கலாம். இந்த முறை இதழை எடுத்தவுடனேயே நான் முதலில் படித்தது பொ. கருணாகரமூர்த்தி எழுதிய “நல்லாய்க் கேட்டுதான் என்ன செய்யப் போகின்றேன்” என்ற சிறுகதையை. அண்மையில் அவரது சில சிறு கதைகளையும், பெர்லின் இரவுகளையும் படித்து அவரது எழுத்தில் ஒரு ஈர்ப்பு உருவாகியிருந்தது. இந்த கதையை பொறுத்தவரை, இதைவிட சிறந்த கதைகளை மிக இலகுவாகவே எழுதும் வல்லமை பொ. கருணாகரமூர்த்திக்கு உள்ளது என்பது எனது கருத்து. இது தவிர திருமாவளாவன், நிவேதா, உமா வரதராஜன், மலரா, விமலா போன்றோர் எழுதிய கவிதைகளும் புத்தக விமர்சனங்களும் வந்திருக்கின்றன. கவிதைகள் ஆழ்ந்த வாசிப்புக்கும், விமர்சனத்துக்கும் உரியவை. இயன்றவரை எல்லாரும் இந்தக் கவிதைகளை வாசிக்கவேண்டும்.

புலம்பெயர்ந்த நாடொன்றில், அதிலும் கனடா போன்ற இலவச பத்திரிகைகளையும், தென்னிந்திய சின்னத்திரை நாடகங்களையுமே பொழுது போக்கு முயற்சிகளாக கொண்ட பெரும்பான்மை தமிழ் சமுக்கத்தின் மத்தியில் இருந்து, வணிக ரீதியில் எழும் கடுமையான சிக்கல்களையும் தாண்டி இதழை வெளியிடும் காலம் செல்வமும் மற்றும் காலம் குழுவினரும் படைப்பாளிகளும் மரியாதைக்குரியவர்கள்

27 comments

 1. சுதன் அண்ணா,என் போன்ற வாசகர்களின் தேடல்களின் வறட்சியோ…அல்லது கனடிய தமிழ் எழுத்தாளர்களின் ஒன்றுகூடல் நிகழ்வுகள் மற்றும் அவர்கள் வெளியிடும் இதழ்கள் போன்றவற்றுக்கான மார்கெட்டிங் குறைபாடோ….எதுவாகவிருந்தாலும்,”காலம்” என்ற பெயரில் ஒரு இதழ் வெளிவருவதையே நான் அறியேன்.ஏதோ உங்கள் பதிவு மூலமாகவாவது அறிந்தேன்.நன்றி.வாசிக்கும் ஆவலை தூண்டுகிறது.எங்கே இப்புத்தகத்தை பெறலாம்.?பி.கு:- நீங்கள் குறிப்பிட்ட புத்தக வெளியீடு இதுவா??e-mail பண்ணுவதாக கூறியிருந்தீர்கள். மறந்துவிட்டீர்கள் போலும்.

 2. வாசிக்க வேண்டும் என்ற ஆவலை தூண்டியிருக்கிறீர்கள்.ஆனால் புத்தகம் வாசிக்கும் மன நிலை தான் இப்போது இல்லை.//அண்மைக்காலமாக அவர் எழுதுபவை எல்லாம் நல்ல “மகிழ்வூட்டும் பிரதிகளாக” இருக்கின்றன.//நிச்சயமாக, அவரது எழுத்துக்கள் எல்லோரையும் கவரக்கூடியவை.அவரது திகட சக்கரம், வம்ச விருத்தி, வடக்கு வீதி போன்ற சிறுகதைத்தொகுதிகள் வாசித்துஇருக்கிறேன். வாசிக்கும் போது ஒரு சந்தோசம், அதை எப்படி எழுதுவது என்று தெரியவில்லை.எனக்கு மிக மிக மிக பிடித்த எழுத்தாளர். “உண்மை கலந்த நாட்குறிப்பு, மகா ராஜாவின் ரயில் வண்டி,பூமியின் பாதி வயது ” எல்லாம் வாசிக்க வேண்டும் என்ற ஆசை தான்.கடைகளில் ரமணிச்சந்திரன் புத்தகம் தவிர வேறு புத்தகம் எடுப்பது கஸ்டம்.தமிழ்ச்சங்கத்தில் தேடி “அங்கே இப்ப என்ன நேரம் ” மட்டும் கிடைத்தது.மின் நூலாக சில புத்தகம் கிடைக்கிறது.உங்களுக்கும் தெரிந்திருக்கும் என நினைக்கிறேன்.noolaham.orgஆனால் அவரது எழுத்தை புத்தகத்தில் ஆற அமர இருந்து வாசிக்கவே விருப்பம் .

 3. டி.சே தமிழனின் ஹேமா அக்கா பற்றிய கதை மனதுக்கு பாரமாக இருந்தது.ஆரம்பத்தில் ஒரு நகைச்சுவைக்கதை என்று நினைத்தே வாசித்தேன்.அந்த மொழி நடை பிடித்து இருந்தது.காலம் இதழ் இது வரை நான் வாசிக்கவில்லை. நல்ல அறிமுகம் தந்ததுக்கு நன்றி.ஈழப்பிரச்சினை பற்றி அ.மு பெரிதாக எழுதுவதில்லைத் தான்.ஆனால் அவரது கதையில் எமது ஊரை பார்க்கும் போது சந்தோசமாக இருக்கும்.சாரு, ஜெ.மோ போல் அறிவுஜீவித்தனம் என்ற பெயரில் கட்டுரை எழுதுவதற்குஅ.மு பரவாயில்லை என்பது என் கருத்து.

 4. தகவலுக்கு நன்றி சுதன். (அருண்மொழிவர்மன் என்று பெயர் பார்த்தேன்) இசையோடு தொடர்புடைய அந்த அருண்மொழிவர்மனா நீங்கள்?இங்கு சென்னையில் நியூ புக் லான்ட்ஸ் இல் ‘காலம்’கிடைத்தது. தீவிர இலக்கியப் பத்திரிகை என்று சொல்லத்தக்கதாக அங்கு ஒன்று வெளிவருகிறதென்றால் அது காலந்தானே… முன்பு ‘ழகரம்’என்று ஒன்று வந்ததாக நினைவு. பிறகு அற்பாயுளில் நின்றுபோயிற்று. பிறகு ‘வைகறை’வருவதாகச் சொன்னார்கள். இங்கு இருப்பதால் கண்ணால் காணக்கிடைக்கவில்லை.

 5. வாசுகி,”சாரு, ஜெ.மோ போல் அறிவுஜீவித்தனம் என்ற பெயரில் கட்டுரை எழுதுவதற்குஅ.மு பரவாயில்லை என்பது என் கருத்து.”அ.முத்துலிங்கத்தின் எழுத்துக்களில் இடையிடை வந்துபோகும் அங்கதச்சுவைக்கு இணையாக எங்கும் படித்ததில்லை. அவர் எடுத்த நேர்காணல்கள் (வேற்றுமொழி எழுத்தாளர்களை)தொகுப்பு ஒன்று இருக்கிறது. பெயர் மறந்துபோயிற்று. அவசியம் படியுங்கள். எழுத்தைப் பற்றி நிறையத் தெரிந்துகொள்வீர்கள். நீங்கள் தர்சினியின் சகோதரி வாசுகிதானே…?

 6. இந்தப் பதிவுகளின் மூலம்தான் எனக்கு அறிமுகமான இந்த எழுத்துக்களைத் தேடிப் படிக்க வேண்டுமெனும் ஆவல் கிளர்கிறது.நன்றி,சுதன்.

 7. உங்கள் பதிவு நிறைய விடயங்களை வெளிக்கொணர்கிறது. அன்னப்பட்சி போல் நீரை விலக்கி சுத்தமான பாலை பருகுமாம். நீங்களும் தெரிந்தெடுத்து தரும் கதைகளை படிக்க ஆவலாக உள்ளோம். தொடரட்டும். ‘காலம்’ கடக்கட்டும் பல படிகள்.தோழர் என்ற பதம் நீண்டகாலமாகவே விடுதலைப்போராட்ட அமைப்புகளில் இருந்து வருகின்ற ஒன்று. இப்பொழுதும் சனநாயக நீரோட்டத்தில்(?) கலந்து இருக்கும் கட்சியாகிய ஈபிடிபி தன்னுடைய உறுப்பினர்களை ‘அன்பாக’ தோழர் என்றே அழைக்கின்றனர். யாழ்ப்பாணத்தில் யாரும் நண்பர் ஒருவரை ‘தோழர்’ வாறார் என்றால் ஒருமாதிரியாகத்தான் பார்ப்பார்கள்.

 8. காலம் பற்றிய உங்கள் கருத்தாடல் நன்றாக இருக்கிறது. சமகாலத்தில் வெளிவருகின்ற இவ்வாறான முயற்சிகள் பாராட்டப்பட வேண்டியதும் மக்கள் தளத்துக்கு எடுத்துச் செல்லவேண்டியதுமாகும். அதன் ஒரு அங்கமாக உங்கள் சமூக கடமையை சரியாகவே செய்துள்ளீர்கள். உங்கள் அவதானிப்பின் பின்புலம் அழகாக இருக்கிறது. வாழ்த்துக்கள்!

 9. வணக்கம் பாரதி//….எதுவாகவிருந்தாலும்,”காலம்” என்ற பெயரில் ஒரு இதழ் வெளிவருவதையே நான் அறியேன்.//காலம் சஞ்சிகை மூன்று மாதங்களுக்கு ஒரு முறை என்ற அடிப்படையில் வெளிவருகின்றது. கனடாவில் வெளிவரும் ஒரெ இலக்கிய இதழ் என்று இதனை தயக்கமின்றி சொல்லலாம்.இந்த புத்தகம் வேண்டுமென்றால் பெற்றுத் தருகின்றேன். கடைகளில் அனேகமாக முருகன் புத்தக கடையில் கிடைக்கலாம்.நான் குறிப்பிட்ட புத்தக வெளியீடு அ. முத்துலிங்கத்தின் புத்தக வெளியீடு. சனிக்கிழமை என்று சொன்னேன். ஆனால் உறுதிப்படுத்த தவறி விட்டேன். மன்னிக்கவும்

 10. வணக்கம் வாசுகி//எல்லாம் வாசிக்க வேண்டும் என்ற ஆசை தான்.கடைகளில் ரமணிச்சந்திரன் புத்தகம் தவிர வேறு புத்தகம் எடுப்பது கஸ்டம்.தமிழ்ச்சங்கத்தில் தேடி “அங்கே இப்ப என்ன நேரம் ” மட்டும் கிடைத்தது.மின் நூலாக சில புத்தகம் கிடைக்கிறது.உங்களுக்கும் தெரிந்திருக்கும் என நினைக்கிறேன்.noolaham.org//அவரது கதை சொல்லும் பாங்கு தனித்துவமானது. அதற்கு அவரே நிகர்.நூலகம் என்பது எம்மிலும் இளையோர் சேர்ந்து செய்யும் மிகப்பெரிய முயற்சி. சேவை. அது எனது தேடல்களுக்கு பெரும் துணாஇ தருகின்றது. அச்சிலே இப்போது இல்லாத (செல்வி, சிவரமணி, சேரன் போன்ற ) பலரது புத்தகங்கள் அங்கே நிறைந்து கிடக்கின்றன.டிசேயின் ஹேமா அக்கா அண்மையில் நான் வாசித்த மிகச் சிறந்த சிறுகதை. தொடர்ச்சியாக அவரது எழுத்துக்கள் இணையத்தில் வந்து கொண்டுள்ளன. வாசிப்பது அதிகம் ஈட்டம் தரும்.அ.மு இலங்கை பிரச்சனை பற்றி எழுதாதது பற்றி கடந்த மாதம் நான் அவரது உண்மை கலந்த நாட்குறிப்புகள் பற்றி எழுதியபோது இதே கருத்தை சொல்லியிருந்தேன்.நன்றி.

 11. வணக்கம் தமிழ்நதி.// இசையோடு தொடர்புடைய அந்த அருண்மொழிவர்மனா நீங்கள்?//இசையோடு எனக்கிருக்கும் தொடர்பு ரசனை சம்பந்தமானது. அதுவும் பெரிது தமிழ் திரை இசையுடன்…..இந்தியாவிலும் காலம் கிடைத்து வாசிப்பது மகிழ்ச்சி. ழகரம் , பறை போன்ற இலக்கிய இதழ்கள் இப்போது நின்றுபோய்விட்டன. வைகறை வார இதழாக வெளியானது. தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. அதில் டிசே, சக்கரவர்த்தி, சுமதி ரூபன் போன்ற பலரது ஆக்கங்கள் தொடர்ந்து வெளியாகின….

 12. //”சாரு, ஜெ.மோ போல் அறிவுஜீவித்தனம் என்ற பெயரில் கட்டுரை எழுதுவதற்குஅ.மு பரவாயில்லை என்பது என் கருத்து.”//அறிவுஜீவித்தனமோ பைத்தியக்காரத்தனமோ அவர்கள் ஒரு கருத்தை தன்னும் மக்கள் முன் வாதப் பிரதிவாதங்களுக்கு முன்வைக்கின்றனர் என்பது என் கருத்து. “நாங்கள் கவிதை எழுதுவதற்குள் வியட்நாம் யுத்தம் நின்று விட்டது..” என்கின்ற ஒரு போர்க்கால கவிதையை போல இங்கே மேற்குலகுக்கும் வட அமெரிக்கனுக்கும் வாழ்க்கைப்பட்ட சிலர் வாய் திறப்பதற்குள் எல்லா பிணங்களும் கைவண்டியில் கூட எடுப்பாரின்றி மண்மூடிபோனது தான் கண்ட நிஜம். நாங்கள் பேச வேண்டிய சபையில் சோரம் போனோம் அவர்கள் எமக்கான குரலிலுமாய் பேசினார்கள். முடிந்தது கதை இனி மகிழ்வூட்டும் பிரதிகளை தொடரலாம்.

 13. மீண்டும் வணக்கம் தமிழ் நதி….//சாரு, ஜெ.மோ போல் அறிவுஜீவித்தனம் என்ற பெயரில் கட்டுரை எழுதுவதற்குஅ.மு பரவாயில்லை என்பது என் கருத்து//சாரு எழுதிய உன்னத சங்கீதம் என்றா கதை பற்றி எனக்கு கருத்து ரீதியான விமர்சனம் ஒன்று உண்டு. ஆனால் அவர்கள், அதிலும் அண்மைக்காலமாய் சாரு ஈழப்பிரச்சனை பற்றி எழுதும் பல கருத்துக்களில் எனக்கு உடன்பாடு உண்டு. அவர் சொல்லும் நிஜத்தின் கசப்பை எம்மால் ஏற்க முடியவில்லை என்பதற்காக அவரை நாம் திட்டிப் பலனென்ன?நாம் பேச வேண்டிய இடத்தில் பேசாமல் இருந்ததால் / இருக்க வேண்டி வந்ததால் இன்று அழ வேண்டிய இடத்தில் கூட அழாமல் / அழ முடியாம வெட்டியாய் பேசிக்கொண்டிருக்கின்றோம்.எமக்குரிய குரல்கள் எல்லாம் ஒரே ஆழியினூடாக ஒலிக்கவேண்டிய கட்டாயம் எம்மீது சுமத்தப்பட்டது. இன்று அந்த ஆழி செயலிழந்தவுடன், எமக்கான குரல்களே இல்லாமல் போய்விட்டது.அ. மு தான் ஈழப்பிரச்சனை பற்றி எழுதாதற்கு தான் மிக ஆரம்பத்திலேயே இலங்கையை விட்டு புறப்பட்டதே கரணம் என்று ஒரு முறை சொன்னார். அந்த காரணாத்தை ஏற்கின்ற அதே வேளை; அவர் தனது குரல் மாற்றுக் குரலாக ஒலித்து விமர்சனமாகுமே என்றா தயக்கத்தில் எழுதாமல் விட்டிருப்பாராரேயானால் அது மிகுந்த முட்டாள்தனத்துக்குரியது.இறுதியாக ஒன்று;பக்கிங்ஹாம் அரண்மனையில், பிரிட்டிஷ் மகாராணி செவிலியாக இருக்க நான் பிறந்தேன் என்று வரலாறூ எழுத எல்லாருக்கும் விருப்பம் தான். ஆனால் நிஜம் அது இல்லையே???/இனியாவது நிஜம் பேசுவோம்

 14. வணக்கம் அண்ணா,//”ஆனால் அவர்கள், அதிலும் அண்மைக்காலமாய் சாரு ஈழப்பிரச்சனை பற்றி எழுதும் பல கருத்துக்களில் எனக்கு உடன்பாடு உண்டு. அவர் சொல்லும் நிஜத்தின் கசப்பை எம்மால் ஏற்க முடியவில்லை என்பதற்காக அவரை நாம் திட்டிப் பலனென்ன?//நீங்கள் குறிப்பிடுவது போன்ற மாற்றுக்கருத்துகளின் முரண்விவாதங்கள் வரவேற்கப்படவேண்டியவையே. அவர் சொல்லும் நிஜங்கள் கசப்பதால் மட்டும் நான்(ம்) அவரை திட்டவில்லை, அவர் நிஜங்களை “எல்லாவேளையிலும்” உரத்துக்கூற தவறியமையாலேயே…அத்துடன் அவரின் ஜனநாயகவாதம் புலியெதிர்ப்புடன் மட்டும் அமிழ்ந்துபோவதாலுமே. சாரு “சார்ந்திருக்கும்” தளத்தில் (“இந்திய தேசியவாதம்”)நின்று கொடுக்கும் குரலின் “தூய்மை” குறித்தான சந்தேகம் எனக்கு எப்போதுமே உண்டு.மற்றபடி…நீங்கள் குறிப்பிட்டது போலவே நாங்கள் மாலுமி இல்லாத கப்பலில் பயணம் போகின்றோம் என்பதும்..இது எவ்வளவு ஆபத்தானதென்பதும்..காலம் நிச்சயம் பதிவு செய்யும்.

 15. வணாக்கம் கதியால்//தொடரட்டும். ‘காலம்’ கடக்கட்டும் பல படிகள்//காலம் வெற்றிகரமாக இயங்கவேண்டும் என்பதில் எனக்கும் பெரு விருப்பம் உள்ளது.//தோழர் என்ற பதம் நீண்டகாலமாகவே விடுதலைப்போராட்ட அமைப்புகளில் இருந்து வருகின்ற ஒன்று. //போராட்ட இயக்கங்கள் ஆரம்ப காலத்தில் தோழர் என்ற பெயரை உபயோகித்ததாக அறிந்திருக்கின்றேன். ஆரம்ப காலத்தில் இடது சாரிக் கொள்கை சார்பானவையாக இயக்கங்கள் இயங்கியபோது தோழர் என்ற பதம் பயன்பட்டிருக்கலாம். ஆனால் கண்ணன் வருகிறார் என்பதைக் கூட “கண்ணன் தோழர் வருகிறார்” என்றூ சொல்லும் அளாவு நடை முறையில் அந்த பதங்கள் பயன்பட்டனவா என்பது எனக்கு சரிவர தெரியவில்லை.எனினும் விளக்கத்துக்கு நன்றிகள்

 16. வணக்கம் துர்க்கா//உங்கள் சமூக கடமையை சரியாகவே செய்துள்ளீர்கள். உங்கள் அவதானிப்பின் பின்புலம் அழகாக இருக்கிறது. வாழ்த்துக்கள்!//நன்றிகள். அண்மையில் ஈழத்தவர்களால் கொண்டாடப்படவேண்டிய ஒரு அற்புதமான எழுத்தாளரிடம் பேசிக் கொண்டிருந்தேன். கனடாவில் இருக்கின்ற ஒரு தமிழ் புத்தக கடையில் தனது புத்தகங்களை விற்பனைக்கு வைத்தபோது ஏதோ ஒரு மூலையில் எவருக்கும் தெரியாத ஒரு இடத்தில் தனது புத்தகங்கள் தொடர்ந்து இருந்ததாக குறிப்பிட்டார். என்ன வேடிக்கை என்றால் அதே கடையில் நான் பல தடவைகள் அவரது புத்தகங்களை தேடி இருக்கின்றேன். ஆனால் எனக்கு கிடைக்கவில்லை. மண்வாசம் என்ற ஒரு இதழை அதை வெளியிடுபவரே விற்கப்படாத பிரதிகளை இலவசமாக விநியோகிப்பதை நான் கவனித்து இருக்கின்றேன்……..//நாங்கள் கவிதை எழுதுவதற்குள் வியட்நாம் யுத்தம் நின்று விட்டது..” என்கின்ற ஒரு போர்க்கால கவிதையை போல இங்கே மேற்குலகுக்கும் வட அமெரிக்கனுக்கும் வாழ்க்கைப்பட்ட சிலர் வாய் திறப்பதற்குள் எல்லா பிணங்களும் கைவண்டியில் கூட எடுப்பாரின்றி மண்மூடிபோனது தான் கண்ட நிஜம்//கற்றதும் பெற்றதுமில் அறிமுகம் பெற்ற வியட்னாமிய கவிதை வரிகள். உங்களுடைய இந்தக் கருத்தில் எனக்கும் உடன்பாடு உண்டு.

 17. வணக்கம் பாரதி,//சாரு “சார்ந்திருக்கும்”தளத்தில் (“இந்திய தேசியவாதம்”)நின்று கொடுக்கும் குரலின் “தூய்மை” குறித்தான சந்தேகம் எனக்கு எப்போதுமே உண்டு.//ஈழப்பிரச்சனை பற்றிய சாருவின் நிலைப்பாடில் எனக்கு முழுமையான் உடன் பாடு கிடையாது. ஆனால் அவர் அண்மையில் எழுதிய பல கட்டுரைகளில் நிறைய நிஜங்கள் இருந்தன. மேலும், சாரு ஒரு போது இந்திய தேசிய வாதத்தை தூக்கிப் பிடித்தவர் கிடையாது. அவரது அஸாதி அஸாதி கட்டுரையை படித்துப் பாருங்கள்.

 18. நன்றி அருண். காலம் குறித்த பகிர்வுக்கும், எனது கதை குறித்த கருத்துக்கும்….இன்னமும் முழுதாய் 'காலம்' வாசிக்கவில்லை. எத்தனையோ விமர்சனங்கள் இருந்தாலும் செல்வம் காலத்தைக் கொண்டு வருவதையிட்டு நாம் அவரை உற்சாகப்படுத்தத்தான் வேண்டும்.

 19. சுதனா அருண்மொழியா அதை சொல்லுங்கோ முதல்ல கனடாக்கு ஒருக்காலெண்டாலும் வரோணும் எண்டு ஒரு கனவுல இருக்கிறன் பாக்கலாம் சந்தர்ப்பம் கிடைக்கட்டும்,டிசேயின் கதையை முன்பும் வாசித்து, பின் அவர் இப்பொழுது பதிவிட்டபொழுதும் வாசித்திருக்கிறேன் இப்போதைக்கு நானும் அதே… அடுத்த கதை வரும் வரையும்.பகிர்வுக்கு நன்றி..

 20. வணக்கம் டிசே//இன்னமும் முழுதாய் 'காலம்' வாசிக்கவில்லை. எத்தனையோ விமர்சனங்கள் இருந்தாலும் செல்வம் காலத்தைக் கொண்டு வருவதையிட்டு நாம் அவரை உற்சாகப்படுத்தத்தான் வேண்டும்//அதிலும் அவர் மீது பலமாக வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் பலவற்றை இம்முறை தாண்டியுள்ளார் என்றே தோன்றுகின்றது. அது பற்றிய வாய்வழி விளம்பரங்கள் செய்யவேண்டிய பொறுப்பும் எமக்குள்ளது

 21. வணக்கம் தமிழன் கறுப்பி//சுதனா அருண்மொழியா அதை சொல்லுங்கோ முதல்ல//என்னை சுதன் என்று தெரிந்தவர்கள் அழைப்பர். அருண்மொழிவர்மன் என்ப்து முன்பு, ராஜ ராஜன் மீது பெரும் காதல் கொண்டிருந்தகாலத்தில் நான் புனைவாக பாவிக்க தொடங்கிய பெயர்

 22. Arulmozhivarman,"சாரு ஈழப்பிரச்சனை பற்றி எழுதும் பல கருத்துக்களில் எனக்கு உடன்பாடு உண்டு."I don't agree with this statement. If we start to discuss about this issue, we won't come to a conclusion but an argument. So i don't want to discuss. (Sorry i am away from home. could not type in tamil)

 23. ஆம் தமிழ் நதி, ஈழப் பிரச்சனையில் சாருவின் கருத்துக்கள் , அவர் கண்ட இந்திய நக்சல் குழுக்கள் மற்றும் வீரப்பன் ஆகியவற்றால் அவர் உருவகித்துக் கொண்டவை. அத்துடன் , மாற்றுக் கருத்தாளர்கள் எனச் கூறிக் கொள்பவர்களின் அழைப்பின் பேரில் அடிகடி பாரிஸ் போய், அதனால் அவர்களின் கருத்துச் செல்வாக்குக்கு அடிமையாகிப் போனவர். அதுதான் அவரை வாழ வைக்கும் தின மலர் பற்றி அனைவருக்கும் தெரியும். உலகத்தில் எல்லா விடயங்களிலும் ஒவொருவருக்கும் ஒரு தனிப்பட்ட கருத்து இருக்கும். அதே கருத்தானது அவர்களினது சுற்று வட்டாரத்தில் ஏற்கப்பட்ட , பின்னர் அதுவே ஒருவரின் அசைக்க முடியா கருத்தாக மாறுகின்றது. நக்சல்களை பார்த்து வளர்ந்த சாரு, அவ்வாறே ஈழ பிரச்னையை முடிவுகட்ட அவரது பாரிஸ் நண்பர்களும் தின மலர் காரர்களும் ஒத்து ஊதிவிட்டனர்.காந்தியால் தான் சுதந்திரம் கிடைத்தது என்னும் போதே அவரது பார்வை புரிந்து விடுகின்றது. அந்த ௨௨ போலீஸ் காரர்களுக்காக உண்ணாவிரதத்தை முடித்த காந்தி தூக்கிடப்பட்ட ௧௯ இந்தியர்களுக்காக ஒரு குரல் குடுத்தாரா ? அவர்தான் பகத் சிங்கை தூக்கில் போட்ட பின்தான் லண்டன் பேச்சு வார்த்தைக்கு வருவேன் என்ற சத்தியவான் ஆச்சே .

Leave a Reply to அருண்மொழிவர்மன் Cancel reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s