இருள்-யாழி : திருமாவளவனுடன் ஒரு இலக்கிய சந்திப்பு


கவிஞர் திருமாவளவனுடனான எனது அறிமுகம் சென்ற ஆண்டு நடந்த குறுந்திரைப்பட விருது வழங்கும் விழா ஒன்றில் நடந்தது. வழமை போல காலம் செல்வம் அறிமுகம் செய்து வைத்தார். அப்
போது அவரைப் பற்றி எனக்கு பெரிதாக தெரிந்திருக்கவில்லை. அதன் பின்னர் அவர் நடத்திய வலைத்தளத்திலும் இணையத்திலுமாக அவரது சில கவிதைகளை ரசித்திருக்கின்றேன். பின்னர் நண்பர்களுடனான உரையாடலின்போது அவர் “உயிர் நிழல்” கலைச்செல்வனின் சகோதரர் என்று அறிந்தேன். புலம் பெயர் சூழலில் கலைச்செல்வன் இலக்கிய வளர்ச்சிக்கு பெரும் ஆதரவு தந்தவர் என்று பலரும் சொல்லக் கேட்டிருக்கின்றேன். இதே நேரம் திருமாவளவன் ஏற்கனவே எழுதிய “பனி வயல் உழவு”, ”அதே இரவு, அதே பகல்” தொகுதிகளும் ஓரளவு கவனிப்பை பெற்றிருக்கின்றன. பொதுவாக ஈழத்து எழுத்தாளர்கள் புலம் பெயர்ந்து எழுதும் கவிதைகளில் தத்தமது அரசியல் நிலைப்படுகள் பற்றிய தொனிகளோ அல்லது ஈழம் பற்றிய நனவிடை தோய்தல்களோ கருப்பொருள்களாக இருப்பது வழக்கம். ஆனால் திருமாவளவனின் எழுத்துக்களில் புலம் பெயர் வாழ்வென்பதே பெரிதும் கருப்பொருளாக இருக்கின்றது. நமக்கான கதையை நாமே எழுதுவோம் என்ற வாதம் வலுப்பெற்றுவரும் இந்நாட்களில், புலம்பெயர்ந்தவர்களின் கதைகளை, வாழ்வை, அவர்கள் எதிர்கொள்ளும் சவால்களை, சாதனைகளையும் அவர்களே எழுதவேண்டும் என்றே நினைக்கின்றேன். அந்த வகையில் திருமாவளாவன் ஒரு முக்கியமான படைப்பாளி என்றே சொல்வேன்.

சென்ற ஆண்டிறுதியில் அவரது மூன்றாவது தொகுப்பாக “இருள் – யாழி” என்ற கவிதைத் தொகுப்பு காலச்சுவடு வெளியீடாக வந்திருக்கின்றது. இதில் பெரும்பாலும் 2004 முதல் 2008 வரை அவர் எழுதிய கவிதைகள் தொகுக்கப்பட்டிருக்கின்றன. நண்பர்களுக்கிடையேயான இந்நூல் குறித்த ஒரு சந்திப்பு மே 30ம் திகதி அவரது வீட்டிலேயே இடம்பெற்றது. ஏற்கனவே இயல் விருது நிகழ்வுகளுக்காக வந்திருந்த மௌனகுரு, சித்ரலேகா, அம்பை போன்றவர்களும் கனடா வாழ் முக்கியமான இலக்கிய நண்பர்களும் சந்தித்துக்கொண்டனர்.


நிகழ்வின் சில துளிகள்


  • விழாவிற்கு வந்தவர்கள் அனைவருக்குமே அவரது “இருள் -யாழி” புத்தகப் பிரதி வழங்கப்பட்டது. அதன் பின்னரே புத்தகம் குறித்த விவாதங்கள் ஆரம்பித்தன. எல்லா விழாக்களிலும் முன் மாதிரியாய செய்யவேண்டிய ஒரு விடயம் இது. இதனால் கவிதைகள் வாசிக்கப்படும்போது அந்த வாசிப்பில் எல்லாரும் கலந்து கொள்ளுவது சாத்தியமாகின்றது.


  • கவிஞர் சேரன் பேசும்போது, இருள் யாழி என்று வைக்கப்பட்ட பெயர் எமது இன்றைய சூழலுக்கு பொருத்தமாக உள்ளது என்று சொன்னார். யாழி என்பது சீனாவின் சின்னமான ட்ராகனுக்குரிய தமிழ்ப் பெயர். இலங்கையில் நடந்த இன அழிப்பில் சீனா பெரிதளவு பங்கேற்றது தெரிந்ததே.


  • மே 17, 18ல் நடைபெற்ற சம்பவங்களின் தொடர்ச்சியாக மாற்றுக்கருத்தாளர்கள், தீவிர புலி ஆதரவாளார்கள், நடு நிலையாளர்கள், அரசியல் விமர்சகர்கள், அப்படி தம்மை சொல்லிக் கொண்டிருந்தோர் என்று எல்லாத் தரப்பிலும் கனத்த மௌனமே வெளிப்படுவதை குறிப்பிட்ட அவர், இரண்டாம் உலகப் போர் நடைபெற்று முடிவுற்ற காலத்திலும் இப்படியான ஒரு நிலை நடைபெற்றதாயும், அந்நாளைய பெரும் கவிஞர் ஒருவர் ”இனி கவிதைழுதப் படக்கூடிய மனநிலை ஒருவருக்கும் கிடைக்கப் போவதில்லை” என்று சொன்னதையும் சுட்டிக்காட்டினார். இதை ஒட்டிப் பேசிய சக்கரவர்த்தி 20 பேர், 30 பேர் சாகும் போதெல்லாம் தான் கவிதை வந்தது, 20,இரு000 பேர் ஒரே நாளில் கொல்லப்பட்டார்கள் என்ற போது கவிதை வராது. அழுகைதான் வரும் என்றார். அதே நேரம் சுமதி ரூபன், இது ஒரு அதிர்ச்சி தரும் மௌனமே என்றும், இனி வரும் நாட்களில் இது பற்றி நிறைய எழுத்துக்கள் உருவாகும் என்றும் கூறினார்.


  • சேரன் என்ற ஆளுமை மீது எனக்கு நீண்ட காலமாகவே பெரு மதிப்பிருந்தது. அவர் பற்றி இங்கிருக்கும் இன்னொரு இலக்கியப் பிரபலமிடம் கேட்டபோது சேரன் பழகுவதற்கு மிகக் கடினமான கோபக்காரன் என்று சொல்லியிருந்தார். அவர் எழுதிய “உயிர் கொல்லும் வார்த்தைகள்” என்ற கட்டுரைத் தொகுப்பில் கோபம் தெறிக்கும் அந்த தொனி எனக்கும் மிகப் பிடித்திருந்தது. அந்நாட்களில் கனடாவில் தமிழ் குழுக்களிடையே தொடர்ந்து நிகழ்ந்த மோதல்கள் பற்றி கோபமாக அவர் எழுதிய “கையில் பியர் போத்தலும், பேஸ் போல் பட்டுமாய் கொடிகட்டிப் பறக்கிறது மறத்தமிழ் வீரம்” என்ற வரிகள் எனது உணர்வுகளாகவே இருந்தன. இந்த நிகழ்வில் கூட பல இடங்களில் அவர் பட்ட கோபங்களுடன் உடன்பட முடியாவிட்டாலும் ரசிக்கவே செய்தேன்.
  • இது போல அன்று நான அதிகம் ரசித்த இன்னொருவர் சக்கரவர்த்தி. இவர் மிகப் பெரும் கலகக்காரர் என்ற விம்பம் எனக்கு நெடு நாளாக இருந்தாலும் அவருடன் முதன் முதலில் அறிமுகமானது அன்றுதான். முன்பொருமுறை முரசொலிக்கு எழுதிய கடிதத்திலும், பின்னர் வைரமுத்து கனடா வந்த போது கவியரங்கில் இவர் வாசித்த கவிதையாலும் பெரும் சலனத்தை ஏற்படுத்தியவர் இவர். அது போல வைகறையில் இவர் எழுதிய கட்டுரைகளும் என்னை கவர்ந்திருந்தன. அன்று நடந்த விவாதங்களிலும் அவரது கலகக் குரல் ஓங்கியே ஒலித்தது. சேரன் சொன்ன இருள்-யாழிக்கான பெயர் விளக்கத்தை தவிர்த்து இவர் சொன்ன விளக்கமும், யாழ்ப்பாண மையவாதம் பற்றிய கருத்தும் என்னைப் பொறுத்தவரை கசப்பான நிஜங்களே. கசப்பை விரும்புபவர்கள் குறைவென்பதாலோ என்னவோ அந்த விவாதம் கூட இடையில் நிறுத்தி வைக்கப்பட்டது. புத்தகமாக வந்திருக்கும் அவரது ஆக்கங்களை இன்னும் வாசிக்கவில்லை என்றாலும் வாசிக்கும் ஆர்வம் அதிகம் உயர்ந்திருக்கின்றதே என்றே சொல்ல வேண்டும்.
  • அம்பை பேசியபோது தான் சிறு வயதில் கவிதை எழுத முயன்று தோற்றதாயும் அதனால் தனக்கு மோசமான கவிதைகள் எப்படி இருக்கும் என்று தெரியும் என்று அடக்கத்துடன் தொடங்கியவர் பெண் கவிஞர்கள் எதிர் கொள்ளும் சிக்கல்களை பற்றி அதிகம் பேசினார். அது போல ஈழத்துக் கவிஞர்கள் , அரசியல்கள், தற்போதைய நிலை என்பன பற்றிய பேச்சுகள் எழுத்தபோது ஆர்வமாகவும் பொறுமையாகவும் கேட்டறிந்துகொண்டார். தனக்கு எல்லாம் தெரியும் என்று முட்டாள்த்தனமாக உளறிக்கொட்டாமல் அவர் ந்டந்து கொண்ட விதம் அவர் மீதான மதிப்பை அதிகரிக்க செய்தது.


  • காலம் – ஜூன் 2009 இதழ் பற்றிய தன்னுடைய வருத்தத்தை திருமாவளவன் பகிர்ந்து கொண்டபோது, மீண்டும் காலம் பற்றி வழமையாக முன் வைக்கப்படும் விமர்சனங்கள் எழுந்தன. உண்மையில் முன்னைய காலம் இதழ்களுடன் ஒப்பிடும்போது இம்முறை மிக அதிகமான அளவு இலங்கை எழுத்தாளர்களின் எழுத்துக்கள் வந்திருந்தும் அது பற்றி யாரும் குறிப்பிடாமல் தொடர்ச்சியான குற்றச் சாட்டுகளையே சொன்னது சரியாகப்படவில்லை. அது மட்டுமல்லாமல் கனடா போன்ற ஒரு வறண்ட இலக்கிய வாசகர்கள் உள்ள (200, 000க்கு அதிகமான ஈழத்தமிழர்கள் வசிக்கும் டொரண்டோவில் நட்க்கும் எந்த இலக்கிய நிகழ்வுக்கும் 100 பேர் கூட வருவது கிடையாது.) மோசமான சூழலில் ஒரு இலக்கிய இதழை தொடர்ந்து கொண்டு வருவதிலும் சந்தைப்படுத்துவதிலும் உள்ள சிக்கல்களை முதலில் புரிந்துகொள்ளவேண்டும். ஏற்கனவே இலக்கிய விடயங்களுக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுத்து வெளியான வைகறை வார இதழ் கூட நின்று விட்ட நிலையில் எமக்கிருக்கும் ஒரே ஆறுதல் காலம்தான் என்பதை நிச்சயம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.


  • நிகழ்வு முடிந்து திரும்பும் போது அதிகம் பாராட்டிக் கொண்ட விடயம் திருமாவளாவனினதும், அவரது குடும்பத்தாரதும் விருந்தோம்பல்தான். தொடர்ச்சியாக எல்லாரையும் அக்கறையுடன் உபசரித்த அவரது மனைவி, மகன், மகளுக்கும், புறப்பட்ட எம்மை தடுத்து இரவு உணவு தந்து உபசரித்த திருமாவளவனும் குடும்பத்தாரும் நிச்சயமாக நன்றிக்குரியவர்கள்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

Website Powered by WordPress.com.

Up ↑

%d bloggers like this: