போன நூற்றாண்டில் செத்த மூளை | கலாசாரம் காக்கும் தமிழ் வம்சம்

சில நாட்களுக்கு முன்னர் நண்பர் ஒருவருடன் பேசிக்கொண்டிருந்தேன். யாழ்ப்பாணத்திலும் கனடாவிலுமாக கிட்ட தட்ட 20 ஆண்டுகளை அண்மித்த நட்பு. இப்படியான நெருக்கங்களை உணரும்போது தனிப்பட்ட ரசனை நோக்கி பேச்சினை திருப்புவது என் வழக்கம். மெல்ல, தற்கால தமிழ் சினிமா இசை பற்றி பேச்சு திரும்பியது. ஒரு காலத்தின் ஆதர்சமாக இருந்த இளையராஜா மெல்ல ஒதுங்கிய நிலையில் எமது தற்போதைய ரசனை தேர்வுகள் பற்றி பேசினோம். நண்பர் ரஹ்மானை வெகுவாக சிலாகித்துப் பேசிக்கொண்டிருந்தார். எனக்கும் ரஹ்மானின் இசை பிடித்தம் என்றாலும் கூட இந்நாட்காளில் ரஹ்மானின் இசை இந்தி சினிமாக்களில்தான் சிறப்பாக வெளிப்படுகின்றது என்பது எனது கருத்து. அதே நேரம் யுவன் ஷங்கர் ராஜா மாறுபட்ட பாணிகளை படத்துக்கு படம் பின்பற்றி சிறப்பான இசை அனுபவத்தை தருகின்றார் என்றேன். அப்போது நண்பர் இல்லை, யுவனின் இசையை நாம் ஆதரிக்க கூடாது என்று சில ஏற்றுக்கொள்ள முடியாத காரணங்களை பட்டியலிட்டார். ஒரு மையம் நோக்கிய விவாதமாக இல்லாமல் யுவனை எதிர்க்கவேண்டும் என்ற ஒரே நோக்கிலேயே அவரது கருத்துகள் அமைவதை இலகுவாகவே அவதானிக்க முடிந்தது. “உங்களுக்கு யுவன் மேல் அப்படி என்ன கோபம்?” என்று நேரடியாகவே கேட்டேன். ”இல்லை, யுவன் க்ளப்புக்கு எல்லாம் போறான். தலையெல்லாம் கலரடிச்சு என்ன கோலமிது? இதெல்லாம் எங்கட பண்பாடில்லை. இவங்கள பார்த்து எங்கட பிள்ளைகளும் கெட்டுப் போயிடும். ரஹ்மானைப் பார். எவ்வளவு அமைதியாக இருக்கிறார்” என்றார். நண்பரின் கலாசார காவலர் அவதாரமும், கலாசாரத்தை முன்வைத்து அவர் எடுக்கும் சமூக மதிப்பீடுகளும் தெளிவாகிவிட மேற்கொண்டு எதுவும் பேசாமல் திரும்பினேன்.


2

பொதுவாக தமிழர்கள் பற்றி எனக்கிருக்கும் முக்கிய கவலைகளில் ஒன்று அவர்களின் ஒழுக்கம் பற்றிய ஓயாத பேச்சு. இந்த ஒழுக்கம் என்பது கூட கலாசாரம் என்பதின் அடிப்படையில்தான் கட்டி எழுப்பப்படுகின்றது. கலாசாரம் என்பது எப்போதும் மாறிக்கொண்டிருப்பது. கடந்த இரு நூறாண்டு தமிழர் வரலாற்றை திரும்பிப் பார்த்தாலே அதில் ஒரு காலத்தில் தவிர்க்கவே முடியாத கலாசாரமாக இருந்து இன்று காணாமலே போய்விட்ட எத்தனையோ வழக்கங்களை காணலாம். அப்படி இருக்கின்றபோது ஒரு குறித்த புள்ளியினை சுட்டி இதுதான் தமிழனின் கலாசாரம், இனி மேல் இது மாறவே கூடாது என்று வசை சொற்களும், தூற்றல்களும், அதிகாரமும், அனைத்தும் தாண்டி தமிழின துரோகி என்ற சொல்லும் கொண்டு அடக்குவது என்ன நியாயம் என்று விளங்கவில்லை. வரம்புமீறல்களை சொல்லும் இலக்கியங்களும் சினிமாக்களும் தொடர்ந்து கடுமையாக விமர்சிக்கப்படுவதும், எதிர்க்கப்படுவதும் கடந்த சில ஆண்டுகளில் அதிகம் நிகழ்ந்திருக்கின்றது. எல்லா இலக்கியங்களும், திரைப்படங்களும் அறம் சார்ந்தவையாகத்தான் எழ வேண்டும் என்பதும், நல்லவன் வாழ்வான் என்பதையே சித்தாந்தமாக கொள்ளவேண்டும் என்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. அறம் சார்ந்த இலக்கியங்கள் மூலமாகத்தான் சமுதாய ஒழுக்கம் காக்கப்படும் என்றால், நீதி நெறிக்காலம் என்றே குறிக்கப்படும்படி ஒரு கால கட்டத்தில் இலக்கிய முயற்சிகள் எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்னர் நிகழ்ந்திருக்கின்றன. திருக்குறள், ஆத்தி சூடி, கொன்றாஇவேந்தன், மூதுரை, நாலடியார் என்றெல்லாம் தமிழில் உள்ள அளவுக்கு வேறு எந்த மொழியிலாவது இலக்கியங்கள் இருக்குமா என்று தெரியாது. இதையெல்லாம் படித்து சமுதாயம் திருந்திவிட்டதா? திரைப்படங்களில் நீங்கள் சொன்னதை கேட்டு வோட்டுத்தானே போட்டார்கள், எவராவது திருந்தினார்களா? என்று சிவாஜி வேடமிட்ட ஒருவர் எம்ஜிஆர் வேடமிட்டவரிடம் கேட்பதாய் ஒரு காட்சி வரும்.

அதிலும் ஒழுக்கம் என்கிற விடயம் பெரும்பாலும் கற்பு நோக்கியும் பெண்கள் நோக்கியும் தான் அதிகம் பிரயோகிக்கப்படுகின்றது. இதற்கு நல்ல உதாரணம் இங்கு நடைபெறூம் திருமண விழாக்கள். ஆண்கள் கோட்டும் சூட்டும் போட்டு களைகட்ட பெண்கள் எங்காவது சேலை கட்ட தெரிந்த ஒருவரை தேடிப் பிடித்து சேலை அணிந்து தலையில் பிளாஸ்டி பூ அணிந்து ஒரு நாற்பது பவுண் நகையை காவிக்கொண்டு வந்தால் அது தமிழ் கலாசார காப்பு. சில சமயம் இன்னும் கொஞ்சம் கூடிய தமிழ்ப் பற்றான ஆண்கள் குர்தா அணிந்து தம்மை நிரூபிப்பதும் உண்டு. தப்பி தவறி யாராவது ஒரு பெண் சேலை தவிர்த்து வேறு உடை அணிந்து வந்தால் அந்த பெண்ணின் கற்பு அன்றைய தினம் பூரணமாக விவாதிகப்படும். ஏன் பொதுவாக மாப்பிள்ளைகள் கூட மாப்பிள்ளை சூட் என்றொன்று அணிந்து பாப்பிள்ளைகளாகத்தான் (எமது ஊரில் பொம்மைகளை பாப்பிள்ளைகள் என்றும் சொல்வார்கள், சில சமயங்களில் ஆண்களின் இந்த மணக்கோலம் கம்பீரம் தொலைந்த பொம்மைகள் போன்றும் எனக்குத் தோன்றுவது உண்டு) காட்சி தருகின்றனர். முதலில் யோசித்துப் பாருங்கள். பெண்கள் சேலை அணிந்து தான் கலாசாரத்தை காக்க வேண்டும் என்றால் ஆண்களும் வேட்டிதானே அணியவேண்டும். பிறகெப்படி கோட்டும் சூட்டும் குர்தாவும் ஆண்களுக்கான கலாசார ஆடைகளாகின. தமிழ் நாட்டில் இது போன்ற கலாசார காவலர்களாக தம்மை தொடர்ந்து காண்பித்துவரும் இருவரை கவனித்திருக்கின்றேன். மைக் கிடைக்கும்போதெல்லாம் தமிழ் கலாசாரம் பற்றி ஓயாது பேசி, இந்த அரங்கிலே பெண்கள் சுடிதார் அணிந்தும், வேறு ஆடைகள் அணிந்தும் வந்துள்ளார்கள். சேலை அணிந்து வரவில்லை என்றும் உணர்ச்சிவசப்படுவார்கள். அரங்கில் விசிலும் கைதட்டலும் பறக்கும். ஆனால் அவர்கள் ஜீன்ஸும், டி-சர்ட்டும் அணிந்திருப்பார்கள். அப்போது கண்ட முரண் நகையை தொடர்ந்து தருகின்றன எம்மவர் திருமண விழாக்கள். ஏன் இந்த கல்யாண விழாக்களில் மந்திரம் என்று தமிழில் எழுதி வைத்த (பல சமயங்களில் ஆலயங்களில் அர்ச்சகர்கள் சம்ஸ்கிருதத்தை அறிந்திருப்பதில்லை, அவர்கள் சம்ஸ்கிருத ஸ்லோகங்களை தமிழிலேயே எழுதி மனனம் செய்கின்றனர், சில சமயங்களில் அவர்கள் தொடர்ச்சியாக மந்திரங்களை புத்தகங்களைப் பார்த்துச் சொல்வார்கள். அந்த புத்தகங்கள் பெரும்பாலும் தமிழிலேயே சம்ஸ்கிருத மந்திரங்களை எழுதி இருக்கின்றன) சம்ஸ்கிருதத்தை உச்சரிக்கின்றார்களே, அதன் அர்த்தத்தை யாராவது சொன்னால் தமிழர் சொல்லும் கற்பொழுக்கம் காற்றோடு போய்விடும். இந்த திருமண மந்திரங்களின் அர்த்தங்கள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. (இதன் அர்த்தங்கள் வயதுக்கு வந்தவர்கள் மட்டுமே வாசிக்க கூடியவை.) அதை வாசித்துப் பார்த்தால் தமிழர் சொல்லும் ஒருவனுக்கு ஒருத்தி என்பதை தயக்கத்துடன் தான் சொல்லவேண்டிவரும்.

3

அது போல மது அருந்தும் பழக்கம். எனக்கு தெரிந்து ஆண்களில் சிறுபான்மையானோர் பிறர் தெரிய குடிப்போர். மீதிப்பேர் பிறர் அறியாமல் ரகசியமாக குடிப்போர். (மிக குறைந்த பங்கானோர் குடிப்பழக்கம் அறவே இல்லாதார்) ஆனால் எல்லாரும் குடியை பற்றி கேவலமான செயல் என்ற மனோநிலையுடனேயே இருக்கின்றனர். குடியினால் வரும் தீங்குகளுக்கு நான் எதிர்காரணம் சொல்லவில்லை. அதே நேரம் புலம் பெயர் நாடுகளில் குடிப்பழக்கம் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு சமுதாய பழக்கம் என்ற வகையில் அதனை ஏற்றுப் போவது முறையான தீர்வாக இருக்கும். எனக்கு தெரிந்த வட்டத்தில் நான் பார்த்தபோது மது அருந்தும் பழக்கத்தை ஏற்றுக்கொண்ட குடும்பத்தின் இளையோரைவிட மது அருந்துவதை முற்றாக மறுக்கும் குடும்பத்தின் இளையோரே அதிகளவு மதுவுக்கு அடிமையாகின்றனர். வீட்டில் மது அருந்தும் பழக்கம் மறுக்கப்படும்போது அவர்க்அள் நண்பர்களுடன் சேர்ந்து காருக்குள் வைத்து மது அருந்துகின்றனர். ஓட்டுனரும் மது அருந்துபவராகவே பெருமளவு இருக்க குடி போதையில் வாகனம் செலுத்தி பாதிப்புக்குள்ளாகின்றனர். அதுபோல கோடை காலம் தொடங்கிவிட்டால் மக்கள் இளைப்பாறவும், மன அமைதி பெறவும் என்று பராமரிக்கப்படும் பூங்காக்களில் நாண்பர்களுடன் கூட்டமாக மது அருந்தி அந்த பியர் போத்தல்களை அதே பூங்காவிலேயே எறிந்து உடைத்து, அவ்வப்போது அனுமதி இல்லாத பொது இடத்தில் மது அருந்தியதற்காக காவல் துறையால் தண்டிக்கபட்டு தடுமாறுகின்றனர். கனடாவில் தமிழர்கள் செறிந்துவாழும் பகுதியில் உள்ள எந்த ஒரு பூங்காவுக்கு சென்றாலும் கூட்டமாய் நின்று மது அருந்தும் தமிழ் இளையோரையும், ஆங்காங்கே உடைந்து கிடைக்கும் பியர் போத்தல்களையும் காணலாம். இளையோர் என்று மட்டும் சொல்லி கடந்து விடாமல் திருமணமாகி பிள்ளை பெற்றோர் கூட இப்படியே நடந்துகொள்ளுகின்றனர். இதே நேரம் மற்றைய சமூகத்தினரும் தமிழர்களில் சிலரும் தமது பிள்ளைகளுக்கான சுதந்திரத்தை வீட்டில் தருவதன் மூலம் தம் பிள்ளைகள் தம் கண்காணிப்பின் கீழேயே அந்த சுதந்திரத்தை அனுபவிக்கும் வெளியை உருவாக்கித் தருகின்றனர். என் சொந்த அனுபவத்தில் கடந்த ஆண்டு நத்தார் காலப்பகுதியில் எனக்கு தெரிந்த ஒரு இளைஞன் ஒரு விருந்தொன்றில் தன் சக பணியாளர்களுடன் சேர்ந்து மது அருந்தியுள்ளான். பல்கலைக் கழகம் முடித்து கௌரவமான சம்பளத்துடன் நல்ல உத்தியோகத்தில் இருப்பவன் அவன். அவனது தாயார் செல் பேசியில் அழைக்க அவன் தான் சற்று மது அருந்தியுள்ளதாயும், தனது அலுவலகம் ஏற்பாடு செய்த இடத்திலேயே தங்கவுள்ளதாயும் சொல்லியுள்ளான். இதனை ஏற்காத அவனது தாய் “நீ உடனே வராவிட்டால் நான் மருந்து குடிச்சு சாவன்” என்றூ சொல்ல த்னது காரை எடுத்து போனவன் இன்னொரு வாகன ஓட்டுனரின் தவறால் ஏற்பட்ட விபத்தில் சிக்குண்டு கடுமையாக காயப்பட்டு, போலிசாராலும் கடுமையாக தண்டிக்கப்பட்டு தன் வசந்தங்கள் அத்தனையும் தீய்க்கப்பட்ட நிலையில் உள்ளான். இந்த நிலைக்கு அவனது தாயின் அணுமுறை தான முக்கிய பொறுப்பேற்கவேண்டும்.

4

இதுபோல பெண்களை அடிமைப்படுத்துவதன் மூலமாயே தம் ஆண்மையை நிறுவும் மனப்பாங்கும் பரவலாக உள்ளது. இந்த மன நிலையின் ஒரு வெளிப்பாடாகவே புலம்பெயர் நாடுகளில் இருந்து இலங்கை அல்லது இந்தியா சென்று பெண்பார்த்து மணம் செய்துவருவதும் இருக்கின்றது. புலம் பெயர் வாழ்வில் எனக்கு நெருக்கமான நண்பன் ஒருவன் அண்மையில் இந்தியா சென்று மணம் புரிந்துவந்தான். அவனிடம் “கனடாவில் 15 ஆண்டுகள் இருக்கும் உனக்கும் புதிதாக நீ கனடாவிற்கு அழைத்து வரப்போகும் பெண்ணிற்கும் கலாசார வித்தியாசம் இருக்காதா” என்றேன். “இனி அவ இங்கே தானே இருக்கப் போறா, அதனால் எனது வாழ்க்கை முறைக்கு அவரும் தன்னை தயாராக்கிவிடவேண்டும்” என்றான். “அந்த பெண்ணிற்கு எந்த உறவினரும் நண்பர்களும் இங்கில்லாதபோது அவரது தனிமை எவ்வளவு கொடூரமாயிருக்கும்” என்றேன். “இல்லை உனது காதலி, (வேறு சில நண்பர்களின் பெயரை சொல்லி) யின் மனைவியர்/காதலியரை அறிமுகம் செய்வேன் அவர்களுடன் அவர் பழகலாம் தானே, எனது உறவினர்கள் நிறையப்பேர் உள்ளனர். அவர்களுடனும் பழகலாம் தானே” என்றான். நண்பன் என்ற வகையில் மிகப்பெரிய நம்பிக்கைகளை உருவாக்கிய அவன் சக மனிதன் என்றளவில் மிகப் பெரிய அவநம்பிக்கைகளை உருவாக்கினான். இருவருக்கும் இடையில் கனத்த மௌனம் உட்கார்ந்திருந்தது. அதை உணார்ந்தவனாக “பொம்பிளைகளுக்கு சம உரிமை என்று யோசிச்சா நாங்கள் சந்தோஷமா இருக்கேலாதடா, சில நேரங்களில் இப்படித்தான் நாங்கள் மூளையை பாவிக்கோனும்” என்றான். என்னால் எதையுமே சொல்ல முடியவில்லை.

ஒழுக்கத்தின் மற்றும் கலாசாரத்தின் பேரால் எம் சமூகத்தில் ஆணாதிக்கம்தான் தொடர்ந்து நிறுவப்படுகின்றது. வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ் மொழி…, எந்தையும் தாயும் மகிழ்ந்து குழாவி…, யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல்…., என்றெல்லாம் பாரதி பாடியதை நினைவு கொள்பவர்கள் மாதர் தம்மை இழிவு செய்யும் மடமைய்யை கொளுத்துவோம் என்று பாடியதை மட்டும் வசதியாக மறந்துவிட்டார்கள். இதனால் தமிழர்கள் ஒரு அதிகாரம் செலுத்துபவனுக்கும் ஒரு அடிமைக்குமாகவே பிறக்கின்றார்கள். வளர்ந்து நாளாக ஒரு ஆதிக்க வம்சமாக அல்லது ஒரு அடிமை மனத்தவனாக உருவெடுக்கின்றனர். ஒவ்வொரு தமிழனும் தன்னளவில் விடுதலை பெறும்வரை அல்லது அப்படி பெறும் வெளியை நாம் உருவாக்காதவரை தமிழின விடுதலை என்பது ஊமைகள் கூடி வைத்த கவியரங்கமாகவே இருக்கும்

நன்றி – தலையங்கத்தில் வரும் போன நூற்றாண்டில் செத்த மூளை என்பது சாரு நிவேதிதா எழுதிய ஒரு கட்டுரையில் இருந்து பெறப்பட்டது

25 thoughts on “போன நூற்றாண்டில் செத்த மூளை | கலாசாரம் காக்கும் தமிழ் வம்சம்

Add yours

 1. தமிழனுக்கென்று எப்பய்யா கலாச்சாரம் இருந்தது? முதல்ல பிராமணரிண்ட கலாசாரம்.பிறகு கிந்திக்காரண்ட கலாச்சாரம். இடையில சிங்களவண்ட கலாசாரம். பிறகு வெள்ளைக்காரண்ட கலாசாரம்…

  Like

 2. தமிழன்பன் said… தமிழனுக்கென்று எப்பய்யா கலாச்சாரம் இருந்தது? முதல்ல பிராமணரிண்ட கலாசாரம்.பிறகு கிந்திக்காரண்ட கலாச்சாரம். இடையில சிங்களவண்ட கலாசாரம். பிறகு வெள்ளைக்காரண்ட கலாசாரம்…///இல்லை தமிழன்பன். தமிழனுக்கென்று ஒரு கலாசாரம் இருந்தது. பின்னர் ஏற்பட்ட படையெடுப்புகளில் அது மெல்ல மெல்ல காணாமல் போனது. எமது சிறு தெய்வங்களும், வழி பாட்டு முறைகளும் தொலைந்துபோனது ஒரு நல்ல் உதாரண்ம். எமது இசை வடிவங்களும் இப்படித்தான் தொலைந்துபோயின.ஆனால், பின்னர் எமது கலை வடிவங்களைப் பின்பற்றுவது மரியாதை குறைந்த விடயமாக மாறியதுதான் வேதனை. உதாரணம் எமது பாராம் பரிய இசைக்கருவிகளில் ஒன்றான பறை பின்னர் மரணச் சடங்குகளில் மட்டும் பயன்படுத்தப்படும் ஒன்றாக மாறிப்போனது..

  Like

 3. போன நூற்றாண்டல்ல..எப்போதோ ​செத்த மூளை. என்னுடைய மூளை ​செத்து எவ்வளவு நூற்றாண்டாயிருக்கும்னு எனக்கே ​தெரியவில்லை. எந்த புராதனத்தின் ​தேக்கம் என் வரையறைகள், கொள்​கைகள், கோட்பாடுகள், கூப்பாடுகள், மரபுகள்…?? இப்படி ஒவ்வொருத்தரும் அவங்கவங்களோட ​கொள்கைகளை கிளற ஆரம்பிச்சா, மூளைக்கு திரும்பவும் உயிர் வந்திரும்ணு நம்பறேன். சில மூளைங்களுக்கு ஷாக்-ட்ரீட்மெண்ட் கூட கொடுத்துப் பாக்கலாம். நடிகைகள் முன்னெடுத்து செயல்படலாம்! (ஆனா குஷ்பூ சொன்ன கற்பு கலாச்சாரம் ரேஞ்சுக்கு போயி கடைசிலே கோர்ட் ​கேஸுன்னு கும்மியடிக்கிற மாதிரி ஆயிடக் கூடாது) இன்னும் சில மூளைகள் உள்ளன – அவைகள் ​செத்துக்கிடப்பதே எல்லா மூளைகளுக்கும் நல்லதுன்னு தோணுது!நல்ல ஆய்வுக் கட்டுரை என்பேன். நீங்கள் எடுத்துக் கொண்ட மூன்று விஷயங்களும் சமூகத்தின் முதுகெலும்பிலிருந்து மூளையில் முடிச்சுப் போடும் நரம்புகள்தான். தொடர்க!

  Like

 4. //சிறப்பாக இருக்கிறது. தங்கள் கருத்துகளில் உடன்படுகிறேன்//நான் கூட ஒத்துக்கொள்கிறேன்

  Like

 5. வணக்கம் ஜெகநாதன்//இப்படி ஒவ்வொருத்தரும் அவங்கவங்களோட ​கொள்கைகளை கிளற ஆரம்பிச்சா, மூளைக்கு திரும்பவும் உயிர் வந்திரும்ணு நம்பறேன். சில மூளைங்களுக்கு ஷாக்-ட்ரீட்மெண்ட் கூட கொடுத்துப் பாக்கலாம்///அப்படி செய்யாத வரை எந்த முனேற்றமும் ஏற்படப்போவதில்லை….

  Like

 6. கலாசாரம் பற்றி பேசுபவர்கள் எல்லாம் அதை பேணுகிறார்களா என்றா இல்லை. ஆகவே விரும்பியோ விரும்பாமலோ நாம் காலாசாரத்தை விட்டு விலகி செல்கிறோம். கலாசாரம் இருக்கா இல்லையா என்பதற்கு அப்பால், இப்போ எந்த கலாசாரம் இருந்தாலும் அதை பின்பற்றக்கூடிய நிலையில் நாம் இல்லை. உங்கள் சிந்தனை அருமை. நானும் உங்களோடு ஒத்து வருகிறேன்.

  Like

 7. நாங்கள் பாருங்கோ தமிழற்றை கலாச்சாரத்தை 2000 வருசமா தமிழ்ப்பெண்ணின்ரை தொடைக்குள்ளை வைச்சுக் காப்பாத்தி வாறம்.. முந்தியொருக்கா வேட்டியே தமிழ் இல்லையெண்டும்.. இல்லை துணியை வெட்டிச்செய்ததால வேட்டியென்றும் வந்ததா ஒரு உணர்வுச் சண்டை புளொக்கில நடந்தது.–தமிழ்பெண்களின்ரை உடைக்கலாச்சாரம் எல்லாமட்டத்திலயும் கட்டுப்பாடுகளைத்தான் கொண்டிருந்தது. பெண்போராளிகளுக்கு கழுத்தைத்தொடும் வரையிலும் பட்டன் போடவேண்டியிருந்தது. மோட்டசைக்கிளில போகேக்கை.. பின்னால சேர்ட் பறக்கும் என்று.. பெல்ட் கட்டவேண்டியிருந்தது.. (இவற்றை நான் கண்டுபிடிக்கவில்லை.. ஒரு கேள்வியில் எனக்கு அதிகாரபூர்வமா சொல்லப்பட்டவை. பதில்களில் தமிழர்களின் கலாசாரம் கலக்கப்பட்டிருந்தது. )நிறைய கதைச்சதால… பெயரைப்போடாமல் போறன்..

  Like

 8. பகிரங்கமாக வீட்டில் மது அருந்த அனுமதிப்பது பல்வேறு விபத்துக்களை குறைக்கும் என்ற வாதத்தை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. வெளிநாட்டுக்கு புலம் பெயர்ந்த இளைஞர்கள் பலரும் கட்டுப்பாடுகள் குறைவாக இருந்த காரணத்தாலும் வேலைப் பளு மற்றும் குளிர் காலநிலை போன்றவற்றின் மீது பழியை போட்டும் மதுப் பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளனர். மது எங்கு வைத்து அருந்தினாலும் தீமை பயக்கும். அது மருத்துவ ரீதியாகவும் பொருந்தும் சமுதாய கண்ணோட்டத்திலும் பொருந்தும். ஆனால் தாயகத்தில் இருப்பவர்கள் ஏதோ தூய்மையானவர்களாக இருப்பதாக அர்த்தம் கொள்ளக் கூடாது. அண்மையில் மது அருந்தி வந்த சச்சரவில் தாக்குண்டு நம்மூர் இளைஞன் கொழும்பில் மரணித்ததை அறிந்திருப்பீர்கள்.யாழ்ப்பாணத்தில் மதுவுக்கு மக்கள் தற்போது செலவளிக்கும் காசு ஒரு கிராமத்துக்கு உணவளிக்க போதுமானது. தவிர யாழ்ப்பாணத்திற்கு செல்லும் அத்தியாவசிய பொருள்கள் ஏற்றிய லொறிகளில் மது புட்டி ஏற்றிய லொறிகளும் அடங்கும். நீங்கள் வியர்வை சிந்தி உழைத்ததை தண்ணியாக செலவளிப்பதை நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்களா?தவிர பகிரங்கமாக வீட்டில் பாவிக்க அனுமதிப்பது மதுவால் வீதிவிபத்து ஏற்படுவதை குறைக்கும் என்றாலும் வீட்டில் வேறு பல விபத்துக்கள் நிகழ வாய்ப்புண்டு.தவறு என்று கருதுமிடத்து அதை தவிர்க்கவே முயற்சி செய்ய வேண்டும்.

  Like

 9. அருமையான கட்டுரை.ஆனாலும் கலாச்சாரக் காவலர்கள் திருந்துவதாயில்லை. திரிசூலத்துடன் அலைந்த பஜ்ரங் தல்காரர்கள் இப்போது இணையத்திலும் உலாவுகிறார்கள். //கனடாவில் தமிழர்கள் செறிந்துவாழும் பகுதியில் உள்ள எந்த ஒரு பூங்காவுக்கு சென்றாலும் கூட்டமாய் நின்று மது அருந்தும் தமிழ் இளையோரையும், ஆங்காங்கே உடைந்து கிடைக்கும் பியர் போத்தல்களையும் காணலாம்.//அங்கே போயுமா? கனடாவுக்கு போகலாம்னு நினைத்தேன், மனதை மாற்ற வைத்து விடுவீர்கள் போலத் தெரிகிறதே…கலாச்சாரம் குறித்து எனது இடுகையைப் படித்தீர்களா?http://joeanand.blogspot.com/2009/06/blog-post_06.html

  Like

 10. திராவிடம், கலாசாரம், மயிர் மட்டை என்று கத்தினவன் எல்லாம் ரெண்டு பெண்டாட்டி, மூன்று வப்பாட்டி என்றிருக்கிறான். கலாசாரம் காக்கிறாங்களாம். கலாசாரம். அரசியலில் இதெல்லாம் சாதாரணமென்றல்லோ கவுண்டர்ஜி கூட சொல்லியிருக்கார்

  Like

 11. ”இல்லை, யுவன் க்ளப்புக்கு எல்லாம் போறான். தலையெல்லாம் கலரடிச்சு என்ன கோலமிது? இதெல்லாம் எங்கட பண்பாடில்லை. இவங்கள பார்த்து எங்கட பிள்ளைகளும் கெட்டுப் போயிடும். ரஹ்மானைப் பார். எவ்வளவு அமைதியாக இருக்கிறார்//:))

  Like

 12. வணக்கம் கதியால்…//காலாசாரத்தை விட்டு விலகி செல்கிறோம். கலாசாரம் இருக்கா இல்லையா என்பதற்கு அப்பால், இப்போ எந்த கலாசாரம் இருந்தாலும் அதை பின்பற்றக்கூடிய நிலையில் நாம் இல்லை.//கதியால் கலாசாரம் இருக்கா இல்லையா என்ற கேள்வியே அவசியமற்றது. தமிழனின் கலாசாரம் என்று எதை சொல்வீர்கள்?? 1000 வருடங்களுக்கு முன்னர் இருந்ததையா??/ 500 வருடங்களுக்கு முன்னர் இருந்ததையா???? 50 வருடங்களுக்கு முன்னர் இருந்ததையா???? தினமும் மெல்ல மெல்ல மாறிவரும் கலாசாரத்தை ஒரு குறித்த புள்ளியைவிட்டு அசையவே விடமாட்டேன் என்று “கல்சார காவலர்கள்” புறப்பட்டிருப்பதுதான் பிழையானது. அப்படியே இவர்கள் கலாசாரம் காக்க புறப்பட்டால், அதை ஆண்கள், பெண்கள் என்ற எந்த பேதமும் இல்லாமல் எல்லா மக்களுக்கும் ஒரே அளவில் காக்கட்டும். ஆண்களுக்கு வேறு, பெண்களுக்கெ வேறூ, இந்த இந்த ஜாதிகளுக்கு வேறு என்று இவர்கள் பிரித்து காக்கும் கலாசாரம், இவர்கள் நவீன “மனு”க்களாகி வருகின்றார்களோ என்றும்தான் சிந்திக்க வைக்கின்றது…..

  Like

 13. வணக்கம் அனாமி…//.. ஒரு கேள்வியில் எனக்கு அதிகாரபூர்வமா சொல்லப்பட்டவை. பதில்களில் தமிழர்களின் கலாசாரம் கலக்கப்பட்டிருந்தது. )நிறைய கதைச்சதால… பெயரைப்போடாமல் போறன்//சமூகங்களில் எல்லாக் காப்புகளிலும் அதிகாரவெறி எப்படி பாய்ந்தது என்றுதான் யோசிக்கவைக்கின்றது…நன்றிகள் அனாமி

  Like

 14. வணக்கம் குருபரன்….தங்களின் விரிவான் பதிலுக்கு நன்றிகள்…மதுப்பழக்கம் பற்றிய தீமைகளை நான் ஒருபோதும் மறந்துவிடவில்லை. அதே நேரம் மது அருந்துவது, மதுவுக்கு அடிமையாஅவது என்றா நிலைகள் இருக்கின்றன. மேலும், நான் இங்கே சொல்லவந்தது மதுப் பழக்கம் சாதாரணமாக கருதப்படும் இங்கெ, அதனை ஏற்றுக் கொள்ளாத, வீட்டில் வைத்து மது அருந்தும் அனுமதி மறுக்கப்படுபவர்களே அதிகம் மதுவுக்கு அடிமையாகின்றார்கள் என்பதும், அவர்கள் வீட்டில் வைத்து மது அருந்தாமல் பூங்காக்களிலும், வாகனங்கலிலும் வைத்து மது அருந்துவதால் ஏற்படும் சிக்கல்கள் பற்றியதே. கனடாவில் பொது இடங்களில் மது அருந்துவது தடை செய்யப்பட்டிருக்கின்றது. (சில மாநிலங்கள் நீங்கலாக) அப்படி இருக்கையில் அனேக தமிழ் இளாஇஞர்கள் பூங்காக்களில் இருந்து கூட்டம் கூட்டமாக குடிப்பதை (அருந்துவது இல்லை…) காணலாம். மற்ற இனத்தவர்களை காணாமுடியாது… அல்ல்லது மிக மிக அரிது….மேலும் நான் வாகவிபத்து பற்றி சொன்னது, குறிக்கப்பட்ட அந்த சம்பவத்தில் அவன் தாய் அவன் மது அருந்தியிருப்பாய் சொல்லியும், நீ உடனே வராவிட்டால் நான் மருந்து குடிப்பேன் என்று சொல்லியது பற்றியதே….. இது முழுக்க முழுக்க அந்த தாயின் புரிதல் இன்மையே….நன்றிகள் குருபரன்

  Like

 15. அத்தனையும் உண்மை அருண்மொழிவர்மன். சமுதாயத்தின் தலைகளுக்கு வசதியாக கட்டுப்பாடுகளை உருவாக்கிவிட்டு, அல்லது மாற்றிவிட்டு அதைக் கட்டாயம் பின்பற்றவேண்டும் என்று உணர்ச்சிகளால் மிரட்டி வைப்பவர்களைத்தான் அதிகம் கண்டிருக்கிறோம். தங்களுக்கு ஒரு தேவை வரும்வரை கட்டுப்பாடுகளை மாற்ற முன்வராதவர்கள்தான் அதிகமிருக்கின்றனர். அதேசமயம், தமிழ்க் கலாசாரம் என்பது இந்தியா, இலங்கை போன்ற நாடுகளின் புவியியலோடு இணைந்த வாழ்க்கை முறையை ஒட்டியதான பல அம்சங்களைத் தன்னகத்தே கொண்டதாகத்தான் இருக்கிறது. அதையே வட அமெரிக்கக் கண்டத்திலோ ஐரோப்பாவிலோ பின்பற்றாவிட்டால், கலாசாரச் சீரழிவு என்று சொல்வதை என்னால் ஏற்று்க்கொள்ள முடியவில்லை. குடிகாரனுக்கும் மது அருந்துபவனுக்கும் இடையிலான வித்தியாசத்தையும் பிரித்துப்பார்க்க விரும்பாத குருபரனுக்கும் மேற்குலகின் வாழ்க்கை முறையும் கலாசாரமும் முழுமையாகப் புரியவில்லை என்று நினைக்கிறேன். அது குருபரனுடைய தவறல்ல. கனடாவுக்கு வரும்வரை நான்கூட அவ்வாறான நிலைப்பாட்டில்தான் இருந்திருக்கிறேன்.

  Like

 16. மிக அருமை நண்பரே:கலாச்சாரம் பற்றி நான் படித்ததில் இதுவே முதல் தரம் (best blog)என்னோட இந்த பதிவை பற்றிய உங்கள் கருத்துகளை அறிய ஆவலை இருகிறேன் நேரம் இருந்தால் படித்துவிட்டு பின்னுடம் இடவும்http://oviya-thamarai.blogspot.com/2009/06/1.ஹ்த்ம்ல்நன்றி

  Like

 17. வணக்கம் ஜோ//அருமையான கட்டுரை.ஆனாலும் கலாச்சாரக் காவலர்கள் திருந்துவதாயில்லை. திரிசூலத்துடன் அலைந்த பஜ்ரங் தல்காரர்கள் இப்போது இணையத்திலும் உலாவுகிறார்கள்.//கலாசார காவல் என்றா அவதாரமே மிகப் பிழையான் ஒரு நிலைப்பாடு.. இவர்கள் ஏதாவது ஒரு விடயம் பற்றிய துவேசத்துடனேயே இப்படியான நிலைகளை எடுக்கின்றார்கள் என்று நினைக்கின்றேன்

  Like

 18. Anonymous said… திராவிடம், கலாசாரம், மயிர் மட்டை என்று கத்தினவன் எல்லாம் ரெண்டு பெண்டாட்டி, மூன்று வப்பாட்டி என்றிருக்கிறான். கலாசாரம் காக்கிறாங்களாம். //திராவிடக் கட்சிகள் தம்மை பெரியார் வழியில் வந்தவர்கள், கம்யூனிஸ்டுகள் என்றெல்லாம் விளித்துக்கொண்டு செய்தவைகள் பல தமிழ் சமுதாயத்தை மீட்கவே முடியாத படு குழியில் தள்ளின… அதில் ஒன்று தற்போதைய திராவிட தலைவர்கள் என்று சொல்லப்படுபவர்களின் பெண்ணடிமைத்தனம்..

  Like

 19. கிருஷ்ணா said… //சமுதாயத்தின் தலைகளுக்கு வசதியாக கட்டுப்பாடுகளை உருவாக்கிவிட்டு, அல்லது மாற்றிவிட்டு அதைக் கட்டாயம் பின்பற்றவேண்டும் என்று உணர்ச்சிகளால் மிரட்டி வைப்பவர்களைத்தான் அதிகம் கண்டிருக்கிறோம்.// இது கூட தமது அதிகாரத்தை மற்றவர்கள் கருத்தின் மீது செலுத்தும் ஒரு செயல் தான். நாங்கள் உணர்ச்சி அடிப்படையில் முட்டாளகளாக இருந்ததுதான் எல்லா ப் பின்னடைவுகளுக்கும் கரணாம் (emotional crooks) என்று நினைக்கின்றேன்.//அதேசமயம், தமிழ்க் கலாசாரம் என்பது இந்தியா, இலங்கை போன்ற நாடுகளின் புவியியலோடு இணைந்த வாழ்க்கை முறையை ஒட்டியதான பல அம்சங்களைத் தன்னகத்தே கொண்டதாகத்தான் இருக்கிறது. அதையே வட அமெரிக்கக் கண்டத்திலோ ஐரோப்பாவிலோ பின்பற்றாவிட்டால், கலாசாரச் சீரழிவு என்று சொல்வதை என்னால் ஏற்று்க்கொள்ள முடியவில்லை.//இந்த கருத்து உண்மையில் ஒரு உரையாடலுக்கான தொடக்க புள்ளியாக இருக்கவேண்டியது, இது பற்றி நானும் யோசித்திருக்கின்றேன்.

  Like

 20. என் பக்கம் said… // கலாச்சாரம் பற்றி நான் படித்ததில் இதுவே முதல் தரம் (best blog)//நன்றிகள் நண்பரே//என்னோட இந்த பதிவை பற்றிய உங்கள் கருத்துகளை அறிய ஆவலை இருகிறேன் நேரம் இருந்தால் படித்துவிட்டு பின்னுடம் இடவும் http://oviya-thamarai.blogspot.com/2009/06/1.ஹ்த்ம்ல்//உங்கள் பஹிவு பற்றிய கருத்த்களை நான் பகிர்ந்து கொள்ளுகின்றேன்

  Like

 21. மிக நல்ல பதிவு. அது எப்படி குர்த்தா தமிழ் ஆண்களுக்கான கலாசார ஆடைகளாகின?

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

Website Powered by WordPress.com.

Up ↑

%d bloggers like this: