வடலி வெளியீடுகள் மற்றும் எழுத்தாளனும் பதிப்பகங்களும்

1என் முன்னைய பதிவொன்றில் நண்பர் ஒருவர் குறிப்பிட்டது போலவே வாசிப்பதற்கு உரிய மன நிலை முன்னெப்போதையும் விட அதிகமாகிவிட்டது போலவே தோன்றுகின்றது. அதிகம் வாசித்தேன் என்பதைவிட பரந்து பட்ட அளவில் வாசித்தேன் என்று சொல்வதே பொருத்தமாக இருக்கின்றது. இதுவரை காலமும் இல்லாத அளவுக்கு கடந்த சில மாதங்களாக குடிக் கலாச்சாரம், மாற்றுப் பாலினர் தொடர்பான பதிவுகள் முன்வைக்கப்படுகின்றன. காலச்சுவடில் சுகிர்தராணி கவிஞர்கள் சந்திப்பை முன்வைத்து குடிக் கலாச்சாரம் பற்றிய ஒரு கட்டுரையை எழுத அதில் இருக்கும் உள்குத்து, வெளிக்குத்து போன்ற விடயங்கள் பலராலும் ஆராயப்பட்டு, லீனாமணிமேகலை X சுகிர்தராணி என்கிற தனிநபர் பிரச்சனைகள் எல்லாம் (அப்படித்தான் ஆராயப்பட்டடது) கூறப்பட்டு இப்போது லீனா மணிமேகலை இதுபற்றிய தனது கட்டுரை விரைவில் வெளியாக உள்ளதாக உறுதியளித்துள்ளார். இது பற்றி பேசும்போது உயிர்மை, காலச்சுவடு போன்ற இதழ்கள் புலம் பெயர் எழுத்தாளர்களிடம் பணம் வாங்கிக்கொண்டு புத்தகம் வெளியிடுவதாகவும் லீனா குற்றஞ்சாட்டியுள்ளார். (இது போன்ற ஒரு கருத்தை தமிநதியும் கூறியதாக முன்பொருமுறை விகடனில் வெளியான அவரது பேட்டியில் கூறப்பட்டிருந்தது. ஆனால் தனது பேட்டி திரிக்கப்பட்டிருந்ததாக தமிழ்நதி வெளியிட்ட மறுப்பும் அடுத்த விகடனில் வெளியானது. இது பற்றி முழுமையாக நினைவிருப்பவர்கள் பகிர்ந்து கொள்ளவும்). உண்மையில் இது பற்றிய முறைப்பாடுகளை நானும் பல இடத்தில் கேட்டுள்ளேன். எழுத்தாளர்கள் மரியாதையுடன் நடத்தபடவேண்டும் என்கிற சில அடைப்படையான விவாதங்களுடன் பார்க்கும்போது இது நியாயமாக தெரிந்தாலும் இது பற்றிய ஒரு வேறுபட்ட பார்வையும் எனக்குள்ளது.

காலச்சுவடு, உயிர்மை போன்ற நிறுவனங்கள் தற்போது தமது பெயரை ஓரளவு திடப்படுத்தி, தமக்கென ஒரு சந்தையை உருவாக்கி உள்ளன. அது தவிர தீவிரமாக சந்தைப்படுத்தவும் செய்கிறார்கள். இப்படியான நிறுவனங்கள் ஊடாக புத்தகங்கள் வெளிவரும்போது அது நிச்சயம் புதுமுக எழுத்தாளர்களுக்கு நல்லதொரு வாய்ப்பாகவே அமையும். தவிர ஒரு எழுத்தாளன், அறியப்படாத வரை அவனுடைய படைப்பினை வெளியிடுவதில் செய்யப்படுகின்ற சூதாட்டம் நிச்சயம் கவனிக்கப்படவேண்டியது. இது போன்ற புறக்காரணிகளும் நிச்சயம் கவனிக்கப்படவேண்டியன. முன்பு ஜெயந்தன் வெகுஜனப் பத்திரிகைகளில் எழுதியபோது அது பற்றிய பலத்த விமர்சனங்கள் எழுந்தபோது வெகுஜனப் பத்திரிகை என்ற குதிரையில் ஏறிப் பயணிக்கும்போது நான் செல்கின்ற வீச்சம் அதிகமாகின்றது என்று ஜெயந்தன் கூறியதாக எங்கோ வாசித்திருக்கின்றேன். அதே கருத்துடனேயே மேற்சொன்ன குற்றச்சாற்றையும் அணுகவேண்டும். தமிழர்கள் உலகெல்லாம் பரவிக் கிடந்தும் வாசிப்பவர்கள் மிகக் குறைவாகவே இருக்கின்ற ஒரு சூழலில், பெரு நிறுவனங்களூடாக சந்தைப்படுத்தப்படும், முன்னெடுக்கப்படும் படைப்புகளும் படைப்பாளிகளுமே அதிக வீச்சில் அறியப்படுகின்ற ஒரு நிலை இருப்பது கசப்பான உண்மையே.

2

ஒரு உதாரணத்துக்கு நம் காலத்து ஈழத்துப் படைப்பாளிகள் இருவரை எடுத்துக் கொள்வோம். ஈழத்துப் படைப்பாளிகளுல் இன்று அதிகம் அறியப்பட்டவர் அ.முத்துலிங்கம். இந்தியாவில் அவருக்கு இருக்கும் வாசக வட்டம் பெரியது. அதற்கு காரணமாக அவர் ஈழத்து எழுத்தாளர் என்று பல ஈழத்தவர்கள் கொண்டாடும்போதும், ஈழத்தில் பிறந்தது தவிர அவரது எழுத்துகளில் ஈழத்து எழுத்துகளுக்கான எந்த ஒரு அடையாளமும் இல்லாமல் இருப்பதும் காரணமாக இருக்கலாம். ஆனால் அதே நேரம் அவரது எழுத்துக்களும் காலச்சுவடு, உயிர்மை, காலம், திண்ணை, தாய்வீடு, பதிவுகள் உட்பட்ட நிறைய இதழ்களில் தொடர்ச்சியாக வெளியாகின்றன. அவ்வப்போது ஆனந்த விகடனிலும், தீராநதியிலும் கூட வருவதுண்டு. இதுதவிர அவ்வப்போது இவர் பற்றி நாளொன்றுக்கு 2000 சொற்கள் எழுதும் இவரது நண்பர் ஒருவரும் ஏதாவது எழுதிவைப்பார். சென்ற புத்தக சந்தையில் கூட இவரது “உண்மை கலந்த நாட்குறிப்புகள்” வெளியான போது அவரும் எழுதிவைக்க சாருவும் கூட எழுதிவைத்து, தனக்கு மட்டுமல்லாமல் ஜெயமோகனுக்கும் பிடிக்கக் கூடிய வகையில் இவரது எழுத்துக்கள் இருப்பதாக சொல்லிவைத்தார். அ.மு. வைப் பொறுத்தவரை அவர் சர்ச்சைக்குரிய விடயங்கள் எதையும் கருப்பொருளாக எடுப்பதில்லை. எதையும் அழகியலாக பார்க்கின்ற மகிழ்வூட்டும் பிரதிகள் அவர் எழுத்துக்கள். அதாவது முன்பொருமுறை உயிர்மையில் குடும்பங்களில் நிகழும் பாலியல் துஷ்பிரயோயங்களைப் பற்றி “அகில் ஷர்மா” என்பவர் எழுதிய An Obedient Father” என்ற புத்தகம் பற்றி எழுதும்போது, இவ்வளவு காலம் எடுத்து, உழைத்து எழுத்திய நாவலில் இப்படியான ஒரு விடயத்தைக் கருப்பொருளாக எடுத்துவிட்டாரே என்று கவலைப்பட்டு எழுதும் அளவுக்கு ஒரு gentleman writer இவர்.

இதே நேரம் கிட்டத்தட்ட இவருக்கு சமவயதினரான தேவகாந்தன் கவனிக்கத்தக்க அளவு நல்ல படைப்புகளைக் கொடுத்த போதும் கவனிக்கப்பட்டது மிகக் குறைவு. அவர் எழுதி, தேர்ந்த பல வாசகர்களால் சிலாகிக்கப்பட்ட “விதி”யும் சரி, தமிழின் மிக முக்கியமாக மறுவாசிப்புகளுள் ஒன்றான கதாகாலமும் சரி, இலங்கை பிரச்சனையை ஐந்து பாகங்களாக நாவல் வடிவில் தந்த கனவுச் சிறையும் சரி பெறவேண்டிய கவனிப்பில் சிறுபங்கைத்தன்னும் பெறவில்லை. இதற்கு இவரது நாவல்களைத் தாங்கிவந்த பதிப்பகங்களின் பிரபலமின்மையோ அல்லது மோசமான சந்தைப்படுத்தல்களோ கூட காரணமாக இருக்கலாம்.

அது மட்டுமல்லாமல் அ.முத்துலிங்கம், மனுஷ்யபுத்திரன் போன்றவர்கள் தமது முதலாவது புத்தகத்தை அறிமுக எழுத்தாளர் புத்தகவெளியீட்டுத் திட்டத்தை பின்பற்றிய மணிமேகலைப் பிரசுரம் மூலமாகத்தான் வெளிக்கொணர்ந்தார்கள். புத்தகத்தின் தரம் பற்றிய எதுவித மரியாதையும் மணிமேகலைப்பிரசுரத்துக்கு இல்லாதபோதும் அவர்களின் சந்தைப்படுத்தல் முறைகளும், உலக நாடுகளில் அவர்கள் ஒழுங்கு செய்யும் கண்காட்சிகளும் குறிப்பிடத்தக்கன. இது போன்ற காரணிகளால் ஒரு எழுத்தாளனுக்கு உருவாகும் கவனிப்பு, அவன் எழுத்துக்களை செழுமையாக்க உதவும்.

3

அண்மையில் வடலி பதிப்பகம் இலங்கைத் தமிழ் எழுத்துகளுக்கு ஒரு களமாக எதிர்காலத்தில் உருவாகும் என்கிற நம்பிக்கையை ஓரளவுக்கு உருவாக்கியுள்ளது. அவர்களிடம் இருந்து அகிலனின் மரணத்தின் வாசனை, கருணாகரனின் பலி ஆடு, கானாபிரபாவின் கம்போடியா என்கிற மூன்று புத்தகங்களை தபால் மூலம் பெற்றிருந்தேன். அகிலனின் மரணத்தின் வாசனை ஒரு கவிதைப் புத்தகம் என்பது போன்று பிரமை சிலரால் ஏற்படுத்தப்பட்டுள்ளது. கவிஞர் த. அகிலனின் மரணத்தின் வாசனை என்று சொல்லப்படும்போது அதுவும் ஒரு கவிதை நூல் என்று கருதப்படும் வாய்ப்பு அதிகம். இது போன்று அவர் படைப்புகளைக் கைதுசெய்யும் தடையீடுகளை (கவிஞர் போன்ற குறியீடுகளை) அகிலன் கடந்து வரவேண்டும் என்று ஆசைப்படுகிறேன். கருணாகரனின் பலி ஆடுகள் புத்தகம் நண்பர் ஒருவரிடம் கொடுத்துவிட்டதால் வாசிக்க முடியவில்லை. ஏறத்தாழ என் ஒத்த ரசனை கொண்ட நண்பர் நன்றாக இருக்கிறாது என்றூ சிலாகித்ததால் எனக்கும் பிடித்துப்போக அதிகம் வாய்ப்புகள் இருக்கின்றன. கானா பிரபாவின் கம்போடியா – இந்தியத் தொன்மங்களை நோக்கி நிச்சயமாக நல்ல முயற்சி. இதற்கு முன்னர் இதயம் பேசுகிறது மணியன், லேனாதமிழ்வாணன், சிவசங்கரி, ஜெயகாந்தன் போன்றவர்கள் பயணக்கட்டுரைகளை தமிழில் எழுதினார்கள். சுஜாதாவும், அசோகமித்திரனும் தம் பயண அனுபவங்களை நாவல் வடிவில் (பிரிவோம் சந்திப்போம், மேற்கே ஒரு குற்றம் போன்ற சுஜாதாவின் நூல்களும், அசோகமித்திரனின் ஒற்றன்). நீண்ட கால இடைவெளியின் பின்னர் கானா பிரபாவின் கம்போடியா, இந்தியத் தொன்மங்களை கம்போடியாவில் தேடி காண்பதாய் அமைகின்றது. இது ஒரு அரிய முயற்சியாக இருந்தபோதும், இந்தப் புத்தக வடிவமைப்பு இன்னும் மேன்மைப் பட்டிருக்கலாம் என்பது என் கருத்து. தவிர, கானாபிரபா இணையத்தில் மலையாளத் திரைப்படங்கள் பற்றியும், நினைவு மீட்டல்களாகவும், நல்லூர் திருவிழாவை வைத்து எழுதிய பதிவுகளும் இதைவிட அதிகம் செறிவாகவும், சிறப்பாகவும் இருந்தன.

வடலி வெளியீடுகளின் அறிமுகவிழா கனடாவிலும் எதிர்வரும் வெள்ளி மாலை ஒழுங்குசெய்யப்பட்டுள்ளது. கிட்ட தட்ட 6 மாதங்களின் முன்னர் மரணத்தின் வாசனை பற்றிய பரபரப்பு இருந்த காலப்பகுதியில் இந்த வெளியீடுகள் நடந்திருந்தால் இன்னும் பயன் தருவதாக இருந்திருக்கும். எனினும், later always better than never. இனி வரும் காலங்களில் வடலி குழுவினர் இவற்றிலும் கவனம் செலுத்தவேண்டும் என்று எதிர்பார்க்கின்றேன்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

Website Powered by WordPress.com.

Up ↑

%d bloggers like this: