யாழ்ப்பாண நூலகம் எரிக்கப்பட்டு 28 ஆண்டுகளாகிவிட்டன. சில வருடங்களின் முன்னர் எரியும் நினைவுகள் என்ற பெயரில், இப்போது பார்த்தாலும் நெஞ்சை உலுக்கும் அந்த நினைவுகளை சோமிதரன் ஆவணப்படுத்தியிருந்தார். இந்த நூலக எரிப்புப் பற்றி அதிகம் பேசும் பலர் கூட இந்த ஆவணப் படத்தைப் பார்க்கவில்லை என்று பலருடன் பேசியபோது தெரிந்து கொண்டேன். ‘யாழ்ப்பாணம் எரிகிறது’, ’24 மணி நேரம்’ ஆகிய இரண்டு நூல்களிலும் யாழ்ப்பாண எரிப்புப் பற்றிச் சொல்லப்பட்டிருக்கிறது. சுஜாதா “ஒரு லட்சம் புத்தகங்கள்” என்ற பெயரில் அந்த வலியை, அதற்குப் பின்னால் நடந்த மோசமான சிங்கள மற்றும் சில தமிழர்களின் அரசியலை ஒரு குறுநாவல் ஆக்கினார். இவையெல்லாம் நிச்சயம் எல்லாரும் பார்க்கவும், படிக்கவும், பத்திரப் படுத்தவும் வேண்டிய ஆவணங்கள். தமிழர்களிடம் இருக்கும் மிக மோசமான வழக்கம் சரியான முறையில் ஆவணப்படுத்தாமை என்று பேசப்பட்டுக் கொண்டிருக்கும் காலங்களிலேயே அதே தவறை திருப்பித் திருப்பிச் செய்துவருகிறோம்.
ஈழத்தமிழ் எழுத்தாளர்களின் பல முக்கியமான புத்தகங்கள் தற்போது அச்சிலேயே இல்லை. சில அவசர தேவைகளின்போது உசாத்துணை செய்யக்கூட அவை கிடைப்பதில்லை. அண்மையில் முக்கியமான ஈழத்து எழுத்தாளர் ஒருவரது படைப்புகளை முன்வைத்து ஒரு விரிவான ஆய்வு ஒன்றினை ஒருவர் செய்ய விரும்பியபோது அவரது பல புத்தகங்களைப் பெற்றுக்கொள்வதில் ஏற்பட்ட சிரமம் பெருந்தடையாக அமைந்தது. இது போன்ற சந்தர்ப்பங்களில்தான் நூலகம் (www.noolaham.net) என்கிற பெயரில் இணையத்தில் செய்யப்படுகிற ஈழத்தமிழ்ப் படைப்புகளின் தொகுப்பின் முக்கியத்துவத்தை அறியமுடிகின்றது. 5000 இற்கும் அண்மித்த புத்தகங்களை ஒழுங்கான பகுப்புகளுடன் மிகவும் நேர்த்தியாகத் தொகுத்துள்ளது தமிழர்க்கும், தமிழ் இலக்கியத்துக்கும் ஈழத்தமிழ் படைப்பிலக்கியத்தின் பங்கைச் சரியான முறையில் வெளிப்படுத்தும் என்றே நினைக்கிறேன். தவிர, இணையத்தில் பதிவேற்றப்பட்டவற்றுக்கு இருக்கும் சாகாவரம் காரணமாக மோசமான போர்ச் சூழலையும் தாண்டி படைப்புகள் சிரஞ்சீவித்தனம் பெற்றுவிடுகின்றன. எந்த ஒரு விடயத்தையும் அது வாழும் காலத்தில் கொண்டாடாத தமிழர்கள், நூலகத்தின் பயனையாவது சரியான முறையில் நுகர்வார்கள் என்ற கிளர் ஒளி நம்பிக்கை இருக்கின்றது.
2
தமிழ் வாசகப் பரப்பில் வெகுஜன எழுத்து, தீவிர எழுத்து என்கிற கதையாடல்கள் அடிக்கடி பாவிக்கப்படுவதுண்டு. வெகுஜனப் பத்திரிகைகளில் வருவன எல்லாம் வெகுஜன எழுத்துக்கள் அல்ல என்பதும் தீவிர இதழ்களில் வருவன எல்லாம் தீவிர எழுத்துக்கள் அல்ல என்பதும் பொதுவாக எல்லாரும் அறிந்ததே. அதே நேரம் தமிழின் முக்கிய சிற்றிதழ்கள் என்று சொல்லப்படும் உயிர்மையும், காலச்சுவடும் உண்மையாக சிற்றிதழ்களாகவே இருக்கின்றானவா என்ற கேள்வியும் நான் உட்பட பலரிடம் உண்டு. எனது கருத்தில் இவை இரண்டுமே இப்போது சிற்றிதழ் X வெகுஜன இதழ் என்கிற நிலைகளைத் தாண்டி, நடுவாந்திர இதழ்கள் என்கிற நிலையிலேயே இயங்கிக் கொண்டிருக்கின்றன என்று சொல்வேன். ஆனந்த விகடன், குமுதம், குங்குமம் என்கிற முக்கிய மூன்று வெகுஜன இதழ்களுமே “கமர்ஷியல் குப்பைகள்” என்ற இடத்தை அடைந்துவிட்ட நிலையில் அவற்றுடன் ஒப்பிடும்போது இவற்றைத் தீவிர இதழ்கள் என்று கொண்டாட வேண்டிய நிலை இருப்பினும், பரவலான அறிமுகத்தைப் பெறாமலே தீவிர தளத்தில் இயங்கி வருகின்ற இதழ்கள் பற்றிப் பேசவேண்டிய பொறுப்பும் இருக்கின்றது.
எனது அண்மைக்கால வாசிப்பு அனுபவத்தில் தமிழில் சிற்றிதழ்களுக்கான இடைவெளியை நிரப்பும் பங்கை கௌதம சித்தார்த்தனின் “உன்னதம்” சஞ்சிகை சரியாகச் செய்கின்றது. இச்சஞ்சிகையின் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் இதழ்களை வாசித்திருக்கிறேன். அவற்றில் முறையே “போரும் வாழ்வும்”, இனப்படுகொலைகள், போன்ற விடயங்கள் மையமாக (தீம்) எடுக்கப்பட்டு ஆக்கங்கள் அமைந்துள்ளன. தவிர நிறைய புதியவர்கள் எழுதுவதால் புதிய சிந்தனைகளுக்கான களமாகவும் இது அமைகின்றது. அதுபோல உயிர்நிழல் இதழின் 31ஆவது இதழும் வாசிக்கக் கிடைத்தது. வழமையைவிட அளவில் பெரிதாக வந்துள்ள அதே நேரம் தரத்திலும் குறை வைக்கவில்லை.
பெரும்பாலும் ஈழத்து எழுத்தாளர்களின் எழுத்தில், ஆழமான விடயங்கள் இந்த இதழில் பேசப்பட்டுள்ளன. தமிழில் நல்ல இதழ்கள் வெளிவருவதில்லை என்ற அங்கலாய்ப்பை சற்றே தள்ளிவைத்து விட்டு இதை ஒருமுறை படிப்பது நலம்.
இலங்கையில் இருந்து ஜீவநதி, அம்பலம் என்கிற இதழ்கள் வெளிவருகின்றன. அம்பலத்தின் தரம் சிறப்பாக இருப்பதாகப் பலரும் கருத்துத் தெரிவித்துள்ளனர். இது போன்ற இதழ்களை புலம்பெயர்ந்து வாழ்பவர்கள் ஒருவரிடம் இருந்து ஒருவர் இரவல் வாங்கி வாசிக்காமல் தனித்தனியே வாங்கி வாசிப்பது பதிப்பாளருக்குப் பெரும் ஆதரவாக அமையும். பொருளாதார நெருக்கடிகளை எதிர்த்தபடி வெளிவரும் முக்கியமான சிற்றிதழ்களை பிறருக்கு அறிமுகம் செய்வதே தவிர இரவலாக தொடர்ந்து தருவதில்லை என்ற கொள்கையில் ஓரளவு உறுதியாகவே இருக்கிறேன்.
3
புலம்பெயர் நாடுகளில் குடும்ப விழாக்களில் அடிக்கப்படும் கூத்துக்களை அவ்வப்போது சகித்துக்கொண்டு எமது சகிப்புத் தன்மையைப் பரிசோதித்துப் பார்த்து விடுகின்ற சந்தர்ப்பங்கள் நேர்ந்துவிடுவது உண்டு. பூப்பு நீராட்டுவிழா என்ற பெயரில் செய்யப்படும் ஆபாசங்களில் கலந்து கொள்வதில்லை என்ற என் கொள்கையையும் உறவுமுறைச் சிக்கலகளைச் சமாளிக்கும் பொருட்டு தளர்த்திக் கொண்டு சென்றவாரம் ஒரு பூப்பு நீராட்டு விழாவில் கலந்து கொண்டு அதன் அபத்தங்களைத் தரிசித்தேன். பத்து வயது மட்டுமே ஆன அந்தப் பெண் மேடை ஏறியதும், பெண்ணின் அண்ணனும் அண்ணியும் சேர்ந்து அவருக்கு ஆண்டாள் மாலை அணிவித்தனர்.
அந்த நேரம் பார்த்து அறிவிப்பாளர், “ஆண்டாள் மாலையுடன் பார்க்கும்போது ஆண்டாளே கண்ணெதிரே தோன்றியது போல உள்ளது, இவர் ஆண்டாள் போலவே புகழ்பெற வாழ்த்துங்கள்” என்றார். அடப்பாவிகளா, கண்ணனைக் காலமெல்லாம் காதலித்துக் கிடந்தவள் ஆண்டாள் என்றுதானே எமக்குச் சொல்லப்பட்டிருக்கிறது. அப்போ, இவரும் காலெமெல்லாம் அதே கதிதானா?, அதுக்கு ஒரு வாழ்த்தா?. இது தன்னும் பரவாயில்லை, ‘தாயாரும் அறியாமல்’ என்ற “உயிரோடு உயிராக” திரைப்படப் பாடலுடன் ஓரளவு பொருத்தமாகவே பாடல்களைத் தொடங்கிய DJ தொடர்ந்து ஒலிபரப்பிய பாடல் மேமாதம் 98ல் மேஜரானேனே…பாடல். அந்தப் பெண்ணின் தந்தை, சகோதரர் மற்றும் உறவினர்கள் எவருக்குமே அந்தப் பாடலின் பொருள் விளங்கிவிடக்கூடாது என்று DJ யின் நலன் வேண்டி பிரார்த்திக் கொண்டேன். இது தன்னும் பரவாயில்லை இறுதியில் பஃபே முறையில் உணவு பரிமாறல் தொடங்கியபோது ஒலிபரப்பப்பட்ட பாடல் “டாடி மம்மி வீட்டில் இல்லை”. அன்று DJ பணி செய்த இளைஞரே கவனம், குழந்தைகளைப் பாலியல் ரீதியில் வர்ணித்துப் பாடல் ஒலிபரப்பினீர்கள் என்று சட்டம் உங்கள்மேல் பாயக்கூடச் சந்தர்ப்பம் இருக்கிறது.
இந்த பதிவு ஈழநேசன் இணைய இதழில் வெளிவந்தது.
படங்கள் : நன்றி ஈழநேசன்
Leave a Reply