நடிகர் விஜயின் அரசியல் | தலைமறைவான எழுத்தாளர்கள் | புதிய வரவுகள்

 

– 1 –

நடிகர் விஜய் இதோ அரசியலுக்கு வருகிறார், காங்கிரஸ் கட்சியில் சேரப் போகிறார், சேர்ந்தே விட்டார், என்ற செய்திகள் எல்லாம் மெல்லக் கரைந்து போய், அவரது வேட்டைக்காரன் திரைப்படம் தான் வரப் போகிறது என்பது மெல்ல உறுதியாகி இருக்கின்றது. பரபரப்புச் செய்திகளை அள்ளிக் குவித்து, மோசமான வியாபாரம் செய்து கொண்ட பத்திரிகைகளும், இதழ்களும் மெல்ல மெல்ல இப்போது “விஜய் சொன்ன நோ, சூர்யாவுக்கு வலை வீசும் காங்கிரஸ்” என்று அடுத்த சரவெடியை பற்ற வைத்துள்ளனர். இந்த மோசமான வணிகத்தை புலம்பெயர் நாடுகளிலும் பெரும்பாலான பத்திரிகைகளும், ஊடகங்களும் தம் பங்குக்கு பெரிதாக்கி, நாளும் பொழுதுமாக செய்திகளை வெளியிட்டு செய்யும் அட்டகாசம் பெரிதாகியே வருகின்றது. முதலில் நடிகர்கள் அரசியலுக்கு வருவது அவர்களது தனிப்பட்ட சுதந்திரம், உரிமை.

ஆனால் நடிகர்கள் மட்டுமே முதல்வர்கள் ஆகலாம் என்கிற பிம்பத்தை உரிவாக்கியவை எல்லாமே ஊடகங்கள் தானே. விஜயை எடுத்துக் கொள்வோம். அவருக்கு அரசியலில் என்ன அரிச்சுவடி தெரியும்?. எந்த மக்கள் பிரச்ச்னை பற்றி அவர் தீவிரமாக குரல் கொடுத்திருக்கிறார்? இது பற்றிய எந்தக் கேள்விகளும் இல்லாமல் அவர் செய்யும் ஒவ்வொரு செயலையும் அரசியலுடன் முடிச்சுப் போட்டு, ஒவ்வொரு பேட்டியிலும் அவரிடம், நீங்கள் அரசியலுக்கு வருவீர்காளா? என்கிற அதி முக்கியமான கேள்வி ஒன்றைக் கேட்டுத் தொலைத்ததெல்லாம் ஊடகங்கள் தானே. விஜய் தன்னும் ஓரளவு தன்னை திரை உலகில் நிலைப்படுத்திக் கொண்ட நடிகர். ஆனால் சிம்பு, தனுஷ், பரத், ஆர்யா, விஷால் என்று மூன்று படம் நடித்து முடித்துவிட்டாலே அவர்களைப் பார்த்து நீங்கள் அரசியலுக்கு வருவீர்களா என்று கேட்பது போன்ற கேனத்தனம் வேறு எதுவும் இல்லை.

இது பற்றி என்ன சொன்னாலும் உடனே எம்ஜிஆர் நடிகர் தானே அவர் 13 வருடம் நாடாளவில்லையா என்பார்கள். எம்ஜிஆர் என்ன செய்தார், அது இலவசம், இது இலவசம் என்று வாக்குக் கொடுத்து மக்களை நிரந்தர சோம்பேறி ஆக்கினார். அதை ஜெயலலிதா தொடர்ந்தார். இப்போது இலவச டிவி வரை கருணாநிதி கொண்டுவந்திருக்கிறார். ரேஷன் பொருட்கள் இலவசம் என்று இந்நாளைய முதல்வர் சொல்ல, அதை வீடு வீடாக இலவச டெலிவரி செய்வேன் என்று “வருங்கால முதல்வர்” விஜயகாந்த் அறிவித்திருக்கிறார். மக்களுக்கு உழைப்பதற்கான ஆற்ற்லும், சக்தியும் நன்றாக இருக்கின்றபோது ஏனையா இலவசம்?. இப்படி இலவசம் மேலாக இலவசம் என்று கொடுத்து ஒரு மக்கள் கூட்டத்தையே சிந்திக்க விடாமல் அடக்கி வைத்திருக்கிறீர்கள். விஜய் ஏன் அரசியலுக்கு வருவார் என்பதற்கு அவரது முதல் கட்ட தகுதியாக அவர் பலருக்கு உதவுகிறார், பலரைப் படிப்பிக்கிறார் என்றெல்லாம் அவர் தந்தை சொல்ல அதை ஊடகங்கள் மாய்ந்து மாய்ந்து பிரசுரித்தன. உண்மையாக இருக்கலாம். ஆனால் அது மட்டுமே தகுதியாகிவிடுமா? அபப்டிப் பார்த்தால் இவரை விட அதிகம் சமூக சேவை செய்த அன்னை தெரஸா, வித்யா சாகர் போன்றவர்களை எல்லாம் யாராவது அரசியலுக்கு இழுத்தார்களா? பிறகேன் இவரை மட்டும் அதோ வாறார், இதோ வாறார், ஆடி வாறார் அசைந்து வாறார் என்ற அளவுக்கு ஆலாபனை செய்கிறீர்கள். இது போன்ற செய்திகளைப் பார்த்து பார்த்து விகடன், குமுதம், குங்குமம் என்கிற மூன்று கமர்ஷியல் குப்பைகளையும் படிப்பதென்றாலே அலர்ஜி ஆகிவிடுகின்றது.

– 2 –

நன்றாக எழுதி, பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்துவிட்டு திடீரென்று தம்மை மௌனப்படுத்திக் கொள்ளும் எழுத்தாளர்கள் இருவர் பற்றி கடந்த வாரம் ஒருமுறை அசைபோட்டேன். முதலில் சச்சிதானந்தன் சுகிர்தராஜா என்ற ஈழத்து எழுத்தாளர். 80களில் கணையாழியில் பத்திகள், சிறுகதைகள் என்று பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்த சுகிர்தராஜா இப்பொழுதெல்லாம் பெருமளவு எழுதுவதில்லை என்றே தெரிகின்றது. அவரது சில சிறுகதைகளை தொகுத்து அ/சாதாரண மனிதன் என்ற பெயரில் ஒரு புத்தகமாக காலச்சுவடு வெளியிட்டிருக்கிறது. 80களில் எழுதப்பட்ட இந்தக் கதைகளின் சிறப்பு, அக் காலப்பகுதிகளில் நடைபெற்ற அரசியல் மாற்றங்கள் எப்படி சாதாரணர்களைப் பாதித்தது என்று சொல்லிச் செல்வதாகும். எனது வாசிப்பில் இதில் முக்கியமான கதை என்று “அ/சாதாரண மனிதன்” என்ற கதையையே சொல்வேன். பொதுவாக செழிப்புடன் வாழ்ந்த ஒருவன் திடீரென்று வீழ்ச்சி நடைந்துவிட்டால் நான் முதலிலேயே யோசித்தனான். இது எனக்கு முதலிலேயே தெரியும் என்கிற பீடிகைகளுடன் ஆலோசனை தர ஒரு கூட்டமே தயாராக இருக்கும். அப்படி தெரிந்திருந்தால் அதை முன்னரேயே சொல்லியிருக்கலாம் தானே?. இந்தக் கதையிலும் டேவிட் முரே என்ற பாத்திரம் இப்படி ஒரு நிலைக்கு வரும்போது அவரது முன்னாள் சக ஊழியர், இவை எல்லாவற்றையும் விட அவருக்குப் பிடித்த மட்டன் கபாப்களில் கொஞ்சம் வாங்கிக் கொடுப்பது இந்த ஆலோசனை எல்லாவற்றையும் விட மேலானது என்று முடிவு செய்வதுடன் கதை முடிகின்றது. இவரது அண்மைக் கால எழுத்தாக “காலம்” இதழில் வெளியான ஒரு கட்டுரையையும், “ஸ்லம் டோக் மில்லியனியர்” பற்றிய ஒரு கட்டுரையையும் தவிர எதையும் வாசிக்கவில்லை. வாசிக்கும் ஆர்வம் நிறையவே இருக்கின்றது.

அடுத்ததாக, ஜே. பி. சாணக்யா வின் கனவுப் புத்தகம் என்ற சிறுகதைத் தொகுதியை சில வாரங்களுக்கு முன்னர்தான் வாசித்து முடித்திருந்தேன். அவரது பல கதைகளை தனித் தனியாக வாசித்து இருந்தாலும் ஒரு புத்தகமாக வாசிப்பது இதுவே முதல் முறை. தலித் மக்களின் வாழ்வில் எதிர்கொள்ளும் உறவு முறைச்சிக்கல்கள் பற்றி அழுத்தமாகப் பதிவு செய்யப்பட்ட கதைகள் அவருடையவை. உயிர்மை இதழ் ஆரம்பித்த காலங்களில் அதில் வெளியான அமராவதியின் பூனை என்ற கதை இந்தத் தொகுதியில்தான் இடம்பெற்றுள்ளது. பத்துக் கதைகள் அடங்கிய இந்தத் தொகுதியில் எனக்கு அதிகம் பிடித்த சிறு கதை “ஆண்களின் படித்துறை “ தான். கோடை வெயில் என்கிற கதை ஒரு கதையாக பிடித்திருந்தபோதும், யோசித்துப் பார்க்கையில் தன் கணவனின் வேலைக்காக தான் அண்ணா என்று அழைத்த உறவு முறைக்காரனுடனேயே வசந்தா உடலுறவு கொள்ளுகின்றாள் என்று வ்ரும் முடிவு தரும் தாக்கம், புதுமைப்பித்தனின் பொன்னகரம் கதையை நினைவூட்டுகின்றது. (இந்த முடிவை முன்வைத்து வியாகூல சங்கீதம் என்ற கட்டுரையில் சாரு நிவேதிதா புதுமைப்பித்தனை காய்ச்சி எடுத்திருப்பார்) இந்தக் கதைக்கு முடிவாக புரட்சிகரமாக கதையை முடித்து வைக்கிறேன் என்று வேறு விதமாக எழுதியிருந்தால் அங்கே ஒரு நாடகத் தன்மை வந்திருக்கும் என்பது உண்மையாக இருந்தாலும், மனதளவில் இந்தக் கதையின் முடிவு அமைதியின்மையை ஏற்படுத்தியது உண்மை. சமீபகாலமாக அவர் பெரிதாக எழுதுவதில்லை என்று அறிந்தேன். சில வேளை அவர் ஈடுபட்டிருக்கும் உதவி இயக்குனர் பணிகள் காரணமாக அவரது எழுத்துப் பணி தடைப்பட்டிருக்கலாம். அதைக் கடந்து தொடர்ந்து எழுதும்போது இது போன்ற நல்ல கதா அனுபவங்களையும், சமுக அமைப்பு பற்றிய அடிப்படையான சில கேள்விகளையும் நாம் அடையப்பெறலாம் என்றெண்ணுகின்றேன்.

– 3 –

கனேடிய மண்ணில் இருந்து மெலிஞ்சி முத்தனின் முதலாவது நூல் உயிர்மை வெளியீடாக வெளிவர இருக்கின்றது. “நான் தனிமையில் இருந்த போது எழுதத் தொடங்கினேன், பின்பு எழுதுவதால் தனியனானேன்” என்று தன் படைப்புகளின் ஊடாகச் சொல்கின்ற மெலிஞ்சிமுத்தன் கூத்து மற்றும் கவிதை ஆகிய துறைகளிலும் தன் ஆளுமையை ஏற்கனவே ஆழப் பதித்தவர். அச்சில் வர இருக்கும் இவரது முதல் புனைவு இதுவே. அண்மையில் எஸ். ராமகிருஷ்ணன் தன் இணையத் தளத்தில் இந்த நூலுக்காக தான் எழுதியிருந்த முன்னுரையினை வெளியிட்டிருந்தார். பொதுவாக ஈழத்து எழுத்தாளர்கள் பலருக்கு நல்ல ஆளுமையும், திறமையும் இருந்தும் அவர்கள் பெருமளவுக்கு வெளியில் தெரிய வராமைக்கு அவர்கள் சரியான முறையில் வெளிக்கொணரப் படாமையும் காரணமாக இருக்கவேண்டும். அதிலும் இளம் ஈழத்து எழுத்தாளர்கள் எவரையும் கண்டு கொள்ளாத அல்லது கடுமையான விமர்சனங்கள் மூலமாக நிராகரித்து விடுகிற சூழலே பரவலாக இருக்கின்ற நிலையில் – உதாரணமாக ஜெயமோகன் சிலாகிக்க வேண்டும் என்றால் அ.மு எழுதவேண்டும், சாரு நிவேதிதா கொஞ்ச நாள் ஷோபா சக்தியையும் சுகனையும் சொன்னார். மற்றும்படி இந்த விடயங்களில் பாபாவை நினைத்து தியானத்தில் மூழ்கிவிடுவார் – எஸ். ராமகிருஷ்ணனின் இந்த செயல் பாராட்டுக்கு உரியதே.

அண்மைக்காலமாக காலச்சுவடு, உயிர்மை, அடையாளம் போன்ற பதிப்பகங்கள் பல ஈழத்தமிழர்களின் எழுத்துக்களை வெளியிட்டு வருகின்றன. இது நிச்சயம் ஒரு நல்ல அறிகுறியே. ஆனால் எம்மிடையே இருக்கின்ற சொல்ல மறந்த / மறுக்கப்பட்ட எல்லாக் கதைகளையும் இந்தியப் பதிப்பகங்கள் ஊடாகச் சொல்ல முடியாது என்பதுதானே யதார்த்தம். அண்மையில் த. அகிலனின் மரணத்தின் வாசனை வெளியிடப்பட்டபோது கூட அதன் பெயரை மாற்றுமாறு திணிக்கப்பட்ட நிர்ப்பந்தம் தானே வடலி பதிப்பகம் உருவாகக் காரணமாக அமைந்தது. இப்படியான நேரங்களில்தான் எமக்கென்று ஒரு பதிப்பகம் அமையவேண்டிய தேவை எழுகின்றது. இதுவரை வடலி வெளியீடாக வெளிவந்த 4 புத்தகங்களுமே ஈழத்து எழுத்தாளர்களின் எழுத்துக்களாக அமைந்ததுடன், வெவ்வேறு விடயங்கள் சார்ந்தனவுமாக இருக்கின்றன. தவிர, புலம்பெயர் நாடுகளில் வடலி நண்பர்கள் வட்டம் என்று அமைத்து புத்தக அறிமுகங்களைச் செய்யும்போது அது பலரைச் சென்றடையவும் வாய்ப்பாகின்றது. இளைஞர்கள் சேர்ந்து செய்த இம்முயற்சி தொடர்ந்து வெற்றிபெறுவது வாசகர் கையிலேயே இருக்கின்றது.

ஈழ நேசன் இணைய இதழுக்காக எழுதப்பட்டது

 

புகைப்படங்கள் நன்றி: ஈழநேசன்

 

 

Comments are closed.

Website Powered by WordPress.com.

Up ↑

%d bloggers like this: