சென்றவார ஆனந்த விகடனில் எஸ். ராமகிருஷ்ணன் எழுதிய வெளிநாட்டுக்காரர்கள் அறிவு ஜீவிகளா என்ற கட்டுரை இடம்பெற்று இருக்கின்றது. வெளிநாட்டுக்காரர்கள் பற்றி எம்மவரிடையே இருக்கின்ற பொதுப் புத்தி பற்றி இந்தக் கட்டுரையில் அலசப்பட்டிருக்கின்றது. இது போன்ற பொதுப் புத்திகளை நாமும் நிறைய அவதானித்தே இருக்கின்றோம். அதிலும் ஒழுக்கம் சார்ந்த மதிப்பீடுகள் அதிகம். வெள்ளையர்கள் எல்லாரும் குடிப்பவர்கள் என்றும், கறுப்பினத்தவர்கள் எப்போதும் துப்பாக்கியுடனே திரிவார்கள் என்றும் இவர்கள் எல்லாம் பாலியல் தேவைகளுக்காக இலகுவாக அணுகக்கூடியவர்கள் என்றும் எம்மிடையே இன்றும் அபிப்பிராயம் இருக்கவே செய்கின்றது. 10 ways to find a Srilankan என்றோ, 10 ways to find an Indian என்றோ அனுப்பப்படும் மின்னஞ்சல்கள் கூட இது போன்ற பொத்தாம் பொதுவான விடயங்களையே கேலியாக சொல்கின்றன. இது போன்ற எந்த மின்னஞ்சல்களையும் இன்னொருவருக்கு அனுப்பி அஞ்சல்-ஓட்டத்தில் பங்கேற்பதில்லை என்பதில் அதிகம் உறுதியாகவே இருக்கின்றேன். பாம்பாட்டிகளும், பிச்சைக்காரர்களும் நிறைந்த நாடு என்று இந்தியா மேற்கு நாட்டவர்கள் மத்தியில் அடையாளப்படுத்தப்படுவது போலத்தான் அவர்கள் மேல் நாம் உருவாக்கி வைத்திருக்கும் அடையாளங்களும் என்று உணரவேண்டும். பொதுவாக எந்த ஒரு சமூகத்தைச் சேர்ந்தவர்களும் பிற சமூகத்தவர் மீது இது போன்ற முன் அனுமானங்களை ஏற்படுத்தி வைத்திருக்கின்ற போதும், இந்த முன் அனுமானங்களையும், பொதுப் புத்திகளையும் விட்டு எம்மை விலக்கிக் கொள்வது எமது பார்வையை ஆரோக்கியமாக்கும்.

பொதுவாக கயானாவைச் சேர்ந்தவர்கள் என்றாலே அவர்களை குடியும், கும்மாளமும் நிறைந்த வாழ்வை வாழ்பவர்கள் என்றுதான் பொதுவாக புலம்பெயர் மக்களிடையே அடையாளம் இருக்கின்றது. இவர்களில் (Guyanese) பெரும்பாலோனோர் இந்திய வம்சாவழியைச் சேர்ந்தவர்கள். பல தலைமுறைகளாக தாய் நாட்டை விட்டு வாழ்ந்து, ஆங்கிலத்தையே பிரதான மொழியாக ஏற்று வாழ்பவர்கள் இவர்கள். ஆனால் எனது Guyanese நண்பர் ஒருவர் ஊடாக மதுவே அருந்தாத, இன்றூவரை காலையில் எழுந்து சூர்ய நமஸ்காரம் செய்து, காலைப் பூஜை செய்து, ஆசாரமானவர்கள் என்று பொது மட்டத்தில் தீர்மாணிக்கப்படும் எல்லா விடயங்களும் செய்தே அலுவலகங்களுக்குப் புறப்படுபவர்களை நான் அறிவேன். இதில் கவனிக்க வேண்டிய விடயம், இவர்கள் எவருமே புரோகிதத்தைத் தொழிலாகக் கொண்டவ்ர்கள் அல்லர் என்பது.

சென்றமாத வைகறையில் கன்னிகா (ஆங்கிலத்தில்) எழுதி இருந்த கட்டுரை ஒன்றில் கூட (Eppadi Naan Tholaintheen?) தம்மைப் புதிதாகக் காணும் தமிழர்கள் முதல் சந்திப்பிலேயே “யாழ்ப்பாணத்தில எந்த இடம்? என்ற கேள்வியை எழுப்புவதைக் குறிப்பிட்டிருந்தார். இலங்கைத் தமிழராயிருந்தால் அது யாழ்ப்பாணத்தவராய் இருக்கவேண்டும் என்ற பொதுப் புத்தியே இங்கும் எழுப்பப்படுகின்றது. இப்படி ஒருவரைக் கண்ட மாத்திரத்திலேயே சுற்றிச் சுற்றி அவர் எந்த சாதியை / சமூகத்தைச் சேர்ந்தவர் என்று அறியும் நோக்குடன் கேல்விகள் எழுப்பப்படுவதை பல இடங்களிலும் அவதானித்தும் இருக்கிறேன். இது போன்ற, ஊரில் நாம் கட்டிக் காத்த வழக்கங்களை புலம்பெயர் நாடுகளுக்கும் கட்டிக் காவி வந்து அடுத்த தலைமுறைக்கும் அள்ளிக் கொடுப்பது மிகக் கேவலமானது.

-2-

அங்கிள் சாம்’க்கு மண்ட்டோ கடிதங்கள் என்ற சாதத் ஹசன் மண்ட்டோ எழுதிய கடிதங்களின் தொகுப்பை ராமாநுஜமின் தமிழாக்கத்தில் பயணி வெளியீட்டகத்தினர் அழகாகப் புத்தகம் ஆக்கியிருக்கின்றார்கள். கொழும்புவில் வாங்கிய இந்தப் புத்தகத்தை வாங்கிய உடனேயே வாசிக்கவும் தொடங்கினேன். அதற்கு முக்கிய காரணம் ஜமாலன் வழங்கியிருந்த முன்னுரை. இணையத்தில் ஜமாலனின் எழுத்துக்களைத் தொடர்ந்து படித்து வருபவன் என்ற முறையில் ஆழமாகவும், தெளிவாகவும் எந்த ஒரு விடயத்தையும் அலசும் அவரது பாணி எனக்கு அதிகம் பிடித்தே இருக்கிறது. இதற்கு அண்மைக்காலத்தில் நல்ல உதாரணம் அவர் எழுதிய குடிக் கலாச்சாரம் அல்லது கலாச்சாரக் குடி, பின்நவீனத்துவம் பற்றிய கட்டுரைகள். இந்த தமிழ் மொழிபெயர்ப்புக்கும் ஒரு விரிவான முன்னுரை எழுதியிருக்கிறார் ஜமாலன். மண்டோ எழுதிய கடிதங்களை வாசிப்பவர்களுக்கு, முன் தீர்மானங்களை ஏற்படுத்தாத அறிமுகங்களை விரிவாகத் தருகின்றது ஜமாலனின் முன்னுரை.

அங்கிள் சாம் என்பது, இந்தியாவை பாரத மாதா என்று உருவகப்படுத்துவது போல அமெரிக்காவுக்கான உருவகம். எனவே இதில் இடம்பெற்றிருக்கும் ஒன்பது கடிதங்களும் அமெரிக்காவை நோக்கி சதாத் ஹாசன் மண்டோ கடித வடிவில் முன்வைத்த பகிரங்க விமர்சனங்களும் கேள்விகளுமேயாகும். பிரிவினைக்கு முந்திய இந்தியாவில் 1912ல் பிறந்து வெறும் 43 வயதிலேயே இறந்து போன மண்டோ 22 சிறுகதைத் தொகுதி
கள் 5 கட்டுரைத் தொகுதிகள் உட்பட எழுத்து மற்றும் திரைப்பட, நாடகத் துறைகளில் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறார். ஆனால் அவரது உச்ச பட்ச சாதனையாக அமெரிக்கா பற்றிய அவரது முன்கூட்டிய தீர்மானங்களையே என்னால் சொல்ல முடியும். இரண்டாம் உலகப்போரின் முடிவிற்குப் பிறகு உலகைத் தன் கட்டுக்குள் கொண்டுவர ஓயாமல் துடித்த / ஓரளவு கொண்டு வந்த அமெரிக்கா அப்படி கொண்டு வர எடுத்த முயற்சிகளை முளையிலேயே இனம் கண்டு கொண்டு அவை பற்றிய தன் கேள்விகளையும், விமர்சனங்களையும், தீர்மானங்களையும் தனக்கேயுரிய கிண்டலுடன் முன்வைத்தார் மண்டோ. உதாரணத்துக்கு

//நீங்கள் கொரிய யுத்தத்தை முடித்துக் கொண்டதால் தான் உங்களுடைய தொழிலும் வியாபாரமு பாதிக்கப்பட்டுள்ளது. இது மிகப் பெரிய தவறு. உங்களுடைய டேங்குகள், குண்டுகள், பீரங்கிகள், துப்பாக்கிகள் இவற்றெயெல்லாம் வைத்துக்கொண்டு நீங்கள் என்ன செய்யப் போகின்றீர்கள்?………நீங்கள் ஏன் இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் ஒரு யுத்தத்தை தொடங்கக் கூடாது? இதில் கிடைக்ககூடிய லாபம் கொரிய யுத்தத்தோடு ஒப்பிட்டால், அவை ஒன்றுமே இல்லாமல் போகும்.//
என்று மண்டோ சொல்வது இன்று கூட அமெரிக்கா மீது முன்வைக்கப்படும் குற்றச்சாற்றுத்தான். அது போல சிவப்பு பயங்கரவாதம் என்று சொல்லி கம்யூனிசத்தை அழிக்க பின்னாளில் அமெரிக்காவாலேயே பச்சைப் பயங்கரவாதம் என்று சொல்லப்படப்போகும் முஸ்லீம் பயங்கரவாதத்தை அமெரி
க்கா எப்படிக் கட்டமைத்தது என்று அவர் எழுதும் கடிதம் அதிசயிக்கவைக்கின்றது. அவர் இந்தக் கடிதங்களை எழுதிய காலப் பகுதி டிசம்பர் 51 முதல் ஏப்ரல் 54 வரையான இரண்டரை ஆண்டுகள். இந்தக் காலப்பகுதியில் பாகிஸ்தான் உருவாகி (அல்லது உருவாக்கப்பட்டு) வெறும்ம் 4 ஆண்டுகளே ஆகியிருந்தன. இதனை குறுகிய காலத்தில் வருங்கால அரசியலை முன்கூட்டியே கணித்து எழுதியிருப்பது நிச்சயம் ஆச்சரியமூட்டுகின்றது. மேலும் அமெரிக்காவையும் அதன் நேச நாடுகளையும் விமர்சிப்பவர்கள் கம்பூனிஸ்டுகள் என்ற ஒரு பொது புத்தி உள்ளது. ஆனால் மாண்டோவோ கம்யூனிஸ்டுகளின் தவறுகளையும் உடனடியாக விமர்சித்தது மட்டுமன்றி நான் ஒரு கம்யூனிஸ்டு அல்லவே அல்ல என்று பலமுறை அறிவித்தவர்.

தனது முதலாவது கடிதத்தில்
“எனக்குத் தெரியவேண்டியதெல்லாம் நிலையான உலக அமைதியை ஏற்படுத்த இன்னும் எத்தனை நாடுகள் இந்தப் பூமியின் முகத்தில் இருந்து அகற்றப்படவேண்டும் என்பதுதான். பள்ளியில் படிக்கும் என் அக்கா மகள் நேற்று உலக வரை படத்தை வரையச் சொல்லிக் கேட்டாள். சற்றுக் காத்திருக்க வேண்டும் என்று சொல்லிவிட்டு, முதலில் நிலைத்திருக்க போகிற நாடுகளின் பெயரை அங்கிள் சாமிடம் (அமெரிக்காவிடம்) கேட்டுக் கொள்கிறேன் என்றேன். உங்களிடம் கேட்ட பிறகே உலக வரை படத்தை வரைந்து கொடுப்பதாக உறுதி தந்தேன்”.
என்று எழுதுகிறார்.

உண்மையில் யோசித்துப் பார்த்தால் இன்றைய உலக வரைபடமே அமெரிக்காவும், பிரிட்டனும் மற்றும் அதன் நேச நாடுகளும் கூட்டாகத் தீர்மாணித்து வரைந்ததுதானே. நாளை, உலக வரைபடத்தின் திருத்திய பதிப்புகளை வெளியிடக்கூட இவர்கள் தானே துப்பாக்கித் தூரிகைகளுடனும், ரத்த மையுடனும் தயாராக காத்து இருக்கின்றனர்.