கொழும்புக் காட்சிகளும், ஊடகங்களும், தமிழ் மொழிக்கான எதிர்காலத் தேவைகளும் : சில பகிர்தல்கள்

பன்னிரண்டு ஆண்டுகளுக்குப் பின்னரான கொழும்புப் பயணம் என்பது எத்தனையோ ஆச்சரியங்களுடனும், சலிப்புகளுடனும், சந்தோசங்களுடனும் மெல்ல முடிவடைந்தது. தாய்நாடு பற்றிய ஏக்கமும், நனவிடை தோய்தல்களும் சராசரிக்கு சற்று அதிகமாகவே நிரம்பிய எனக்கு இது போன்ற உணர்வுகளின் சங்கமம் எதிர்பார்ககூடிய ஒன்றே.


-1-

தலதா மாளிகையை பார்வையிட குடும்பத்துடன் சென்றிருந்தோம். புத்தரின் புனிதப் பல் இருப்பதாக நம்பப்படும் பழம் சிறப்புடையது தலதா மாளிகை. தலதா மாளிகையில் முதலில் எம்மை வரவேற்றதே ஒரு தமிழ்ப் படுகொலைதான். அதன் வாசல் ஒன்றில் “உட் பேகவாண்டாம்” என்றூ எழுதியிருந்தார்கள். உட் போக வேண்டாமாம். நாம் எல்லாரும் இந்நாட்டு பிள்ளைகள் என்று சிங்களவரான ஜனாதிபதி தமிழில் (சில நிமிடங்களாவது) பேசும் காலத்தில், நாட்டின் மிக முக்கியமான ஒரு சுற்றுலா, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு மையத்தில் இப்படியான பிழைகளை அறிவித்தல் பலகைகளில் விடுவது எந்த விதத்திலும் ஏற்கமுடியாதது. கொழும்பில் ஓடும் பஸ்களில் பல இடங்களில் “அங்கவீனர்களுக்கு ஒதுக்கபப்ட்டது என்று எழுதுவதற்குப் பதிலாக “ங” என்பதற்குப் பதிலாக “நஃப் உ” என்றெல்லாம் போட்டு ஏதோ ஒரு புது எழுத்தை உருவாக்க பகீரதப் பிரயத்தனம் செய்து கொண்டிருக்கிறார்கள். இந்த விடயத்தில் முழுக்க சிங்கள அரசை மட்டும் என்னால் பழி கூற முடியவில்லை. சம்பந்தப்பட்ட இடங்களில் நிச்சயம் உயர் பதவிகளில் தமிழர்கள் பணி செய்வார்கள். அவர்கள் இந்த விடயத்தில் நிச்சயம் நடவடிக்கை எடுத்திருக்கலாம். இது போன்ற விடயங்கள் செய்வதைக் கூட அரச பயங்கரவாதத்தின் அச்சுறுத்தல் காரணமாக செய்ய முடிவதில்லை என்று சொன்னால் அது பம்மாத்து. சம்பந்தப்பட்டவர்களின் அக்கறையின்மையே இவற்றிற்குரிய காரணம்.

இதே நேரம் இந்த தமிழ்க் கொலைகள் கொழும்பில் எல்லாத் தரப்பாலுமே செய்யப்படுகின்றது. கொழும்பில் தமிழர்கள் அதிகம் வாங்கும் பத்திரிகைகளில் ஒன்றான தினக்குரலில் நவம்பர் முதல் வாரம் (அல்லது அதற்கு ஒருவாரம் முந்திய அல்ல பிந்திய) வந்த ஒரு செய்தித்தாளில் “நிலைவரம்” என்று பாவிக்கப்பட்டிருந்தது. சிறிய எழுத்துக்களில் வரும் எழுத்துப் பிழைகளை மன்னிக்கலாம். அது நேரும் வாய்ப்புகள் அதிகம். ஆனால் “நிலைவரம்” வெளியாகி இருந்தது ஒரு செய்தித் தலைப்பில். தமிழுக்கு வந்த ”நிலைவரத்தைப்” பாருங்கள்.

சக்தி தொலைக்காட்சியின் தமிழே ஒரு புதிய திசையில் பாய்கின்றது. உச்சரிப்புகளைக் கேட்கும்போதே சங்கடமாக இருக்கின்றது. தவிர சொற்களை தேவை இல்லாத இடத்தில் இடைவெளி விட்டும், தேவை இல்லாமல் சொற்களை சேர்த்தும் வாசிப்பது பரவலாக நடைபெறுகின்றது. கனடாவில் 24 மணி நேர வானொலி ஒன்றில் காலைச் செய்திகள் வாசிப்பவர் ஒருவர் இதே போல செய்தி வாசிப்பார். அவரது குரலில் இருக்கும் கம்பீரத்தையும் தாண்டி, அவர் உச்சரிக்கும் விதத்தைக் கேட்கும் போது அய்யோ என்று கத்த வேண்டும் போல இருக்கும். செய்திகள் நிறைவுபெறுகின்றன என்று வாசிப்பதை “நிறைவு …. பெறு … கின்றன” என்று வாசிப்பார். என்ன செய்வது ஆள் கொஞ்சம் தமாஷ் பேர்வழி. இப்படித்தான் ஒரு முறை இவர் தமாஷாக 2004 சமாதான காலப் பகுதியில் ஏப்ரல் முதலாம் திகதி செய்திகளிலோ அல்லது விசேட செய்திகளிலோ பேச்சு வார்த்தைகளின்போது விடுதலைப் புலிகள் முன்வைத்த முன் வரைவுத் திட்டத்தை இலங்கை அரசாங்கம் ஏற்றுக் கொண்டதைத் தொடர்ந்து பிரபாகரனும், ரணில் விக்ரமசிங்கேயும் தனி விமானத்தில் நோர்வே நோக்கி சென்றுகொண்டிருக்கிறார்கள் என்று அறிவித்ததை அவர் இலங்கை சென்றிருந்தபோது விடுதலைப் புலிகள் சார்பில் சற்று சீரியஸாகவே எடுத்துக்கொண்டதாக ஒரு செய்தியும் வந்தது. சக்தி தொலைக்காட்சியின் உச்சரிப்புகளைக் கேட்கும்போது இவரது உச்சரிப்புகளுக்காக ஒரு பொன்னாடையே போர்த்தலாம் போல இருக்கின்றது.

நான் கொழும்புவை விட்டுப் புறப்படும்போது இருந்த சக்தியின் FM வானொலி ஆதிக்கத்தை இப்பொழுது வெற்றி கைப்பற்றி இருக்கின்றது. பெரும்பாலும் காலை நேரங்களில் லோஷன் நிகழ்ச்சிகள் செய்கின்றார். பதிவராக லோஷன் இன்னும் சிறப்பாக செயற்படலாம் என்ற எண்ணம் எனக்கு வலுவாகவே இருந்தாலும், ஒரு ஒலிபரப்பாளராக லோஷன் நிச்சயம் திறமையாகவே செயற்படுகிறார். அதே நேரம் வானொலி ஒலிபரப்பாளர்கள் பற்றிய பெரும் குறை ஒன்றும் எனக்கு இருந்தது. பொதுவாக எல்லா வானொலி ஒலிபரப்பாளர்களும் ஒரே பாவனையில் பேசுகிறார்கள். அப்படி அவர்கள் பேச்சும் பேச்சும் இயற்கையாக இல்லாமல் வலிந்து திணிக்கப்பட்ட ஒன்றாகவே தெரிந்தது. அதாவது மலையகத் தமிழ், கொழும்புத் தமிழ், யாழ்பாணத் தமிழ், மட்டக்க்களப்புத் தமிழ், முஸ்லீம் தமிழ் என்றில்லாமல் வானொலித் தமிழ் என்கிற புதிய தமிழில் பேசுகிறார்கள். தவிர செய்திகள் தவிர்த்து, பெரும்ப்பாலான ஏனைய நிகழ்ச்சிகளின் போது அவர்கள் பேசுவதில் நேர்முக வர்ணனை செய்வது போல ஒரு ஓட்டம், வேகம் இருப்பதை உணர் முடிந்தது. இது பற்றி இலங்கையில் வானொலித் துறையில் பணியாற்றிய நண்பர் ஒருவருடன் பேசிய போது ஒலிபரப்பாளர்கள் அவர்களுக்கே உரிய விதத்தில் கதைத்தால் வேறுபட்ட தமிழ்கள் நிரம்பியதாக நிகழ்ச்சிகள் இருக்கும் என்பதால் திட்டமிட்டே இப்படியான ஒரு தமிழில் ஒலிபரப்பாளர்கள் பேசுகிறார்கள் என்கிற அவர்கள் பக்க நியாயத்தை தெரிவித்தார். சொல்லப் போனால் பெரும்பான்மையான தமிழ் சினிமாக்களில் பாத்திரங்கள் பேசும் தமிழ் தமிழகத்தில் எங்குமே பேசப் படாத, தமிழ்த் திரைப்படங்களுக்கேயுரிய தமிழ் வடிவம். முன்னர் இலங்கை வானொலியில் ஒலிபரப்பான வானொலி நாடகங்களில் பேசப்பட்ட தமிழ் வடிவம் கூட உண்மையில் இலங்கையில் பேசப்பட்ட தமிழ் வடிவமல்ல. ஆனால் துரதிஸ்ட வசமாக புலம் பெயர் நாடுகளில் தயாராகும் திரைப்படங்கள் பலவற்றிலும் இந்த வானொலி நாடகத் தமிழே பயன்படுத்தப் படுகின்றது. தெனாலி திரைப்படத்தில் கமல்ஹாசனும் இதே தமிழைப் பேச அது பெரும் விமர்சனத்தைக் கிளப்பியது. சமீபத்தில் கிருத்திகன் எழுதிய ஒரு பதிவுக்கான பின்னூட்டத்தில் ஆதிரை தன் நண்பர் சொன்னதாக பதிவிட்டிருந்த “நாங்கள் என்னவும் செய்வம். அதைப்பற்றி மற்றவன் மூச்சு விடக்கூடாது. ஆனா மற்றவன் மூச்சு விடுவதை நாங்கள்தான் தீர்மானிப்போம் – புலம்பெயர் தமிழர்” என்ற வரிகள் தான் ஞாபகம் வருகிறது.



-2-

மொழி என்பதற்குரிய தேவை என்ன என்பது ஒரு நீண்ட, ஆழமான விவாதத்துக்குரிய விடயம். மொழி என்பது ஒரு தொடர்புசாதன ஊடகம் என்பதுடன், வரலாறு, கலாசாரம், பண்பாடு, இலக்கியம், வாழ்க்கைமுறை என்று பல இடங்களிலும் தன் வேர்களை ஆழப் பதித்திருக்கின்றது. ”கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தில் முன் தோன்றிய மூத்த தமிழ்” என்கிற முட்டாள்த் தனமான உளறல்களை ஒதுக்கி வைத்து விட்டு சற்று அறிவு பூர்வமாக யோசிப்போம். நாமெல்லாம் மொழியை மொழியாகப் பார்க்காமல் அதிகம் உணர்ச்சிவசப்பட்டு, அதை தெய்வ நிலைக்கு உயர்த்தி அப்படியே வளர விடாமல் தடுத்து விடுகிறோமோ என்ற எண்ணம் எனக்கு உண்டு. “முலை கொடுத்த தமிழுக்கு மூண்டதொரு துயரென்றால் தலை கொடுக்கத் தயங்காத தற்கால குமணன்” என்றும், “தாயைப் பழிக்கினும் தாங்குவேன், தமிழைப் பழிப்பின் தாங்கேன்” என்றும் உணர்வு பூர்வமாக எழுதப்படும் வரிகளை மனப்பாடம் செய்துகொண்டு, உலகின் சிறந்த மொழி தமிழ் மொழி என்று யார் யார் சொன்னார்கள் என்று பட்டியல் போட்டுக்கொண்டு, வள்ளுவன் தன்னை உலகிற்குத் தந்து வான் புகழ் கொண்ட தமிழ்நாடு என்று திரும்பத் திரும்ப பேசிக் கொண்டிருக்கின்றோம். யாரோ எழுதி இருந்தார்கள், வள்ளுவனை நாம் உலகிற்கே தந்தோம் ஆனால் யார் வாங்கிக் கொண்டார்கள் என்று. இதுதான் உண்மையான நிலை. இன்றைய உலகில் தமிழுக்கான தேவை என்ன என்ற கேள்வி நிச்சயம் மகிழ்வூட்டக்கூடிய பதில்களைத் தராது.

இன்று புலம்பெயர் நாடுகளில் வளரும் குழந்தைகளுக்குத் தமிழ் தெரிவதில்லை என்று பலமாகப் பேசப்படுகின்றது. சில பெற்றோர் தம் குழந்தைகளுடன் தாம் தமிழ் தான் பேசுவோம், அவர்களும் தமிழில்தான் தம்முடன் பேசுவார்கள் என்று கர்வமாகச் சொல்வதுண்டு. இதில் அவர்கள் கவனிக்காத விடயம் என்னவென்றால், அந்தப் பிள்ளைகள் பெற்றோருடனும், ஏனைய பெரியோருடனும் கதைக்கும்போது மட்டுமே தமிழில் பேசுகின்றன. தம் வயதானவர்களுடன் பேசும்போது ஆங்கிலம் அல்லது அவர்கள் வாழும் நாட்டின் மொழியோ தான் பேசுகின்றார்கள். அப்படியானால் இந்தப் பிள்ளைகள் தமிழ் கதைப்பது தம் பெற்றோரின் தலைமுறையுடன் நின்றுவிடும் என்றுதானே தோன்றுகின்றது. இலங்கையிலும், இப்போது நிறைய தமிழர்கள் அதிலும் குறிப்பாக மத்திய கிழக்கு நாடுகளில் வசிப்பவர்களின் பெற்றோர்கள் தம் பிள்ளைகளை International School என்று சொல்லப்படுகின்ற இடங்களில் சேர்த்து ஆங்கில மொழியில் கல்வி கற்க அனுப்புவதைக் காணக் கூடியதாக இருக்கின்றது. உலகமயமாக்கலின் விளைவாக, இப்படி ஆங்கில மொழிமூலம் கல்வி கற்ற பிள்ளைகள் வேலை பெறும் வாய்ப்புகள் அதிகமாகவே இருக்கின்றன என்பதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டியிருக்கின்றது. இந்தியாவிலும் இதே நிலை. அப்படியானால் தமிழின் எதிர்காலம்?. முதலில், தமிழ் மொழி தெரியாமல் ஆங்கிலமோ அல்லது வேற்று மேற்கத்திய மொழி ஒன்றோ அறிந்து வளரும் ஒரு குழந்தையின் பார்வையில் பார்ப்போம். அந்தப் பிள்ளை தமிழ் தெரியாததால் என்ன இழக்கப் போகின்றது என்று கேட்டால் என்ன பதில் சொல்லலாம். உண்மையில் அந்தப் பிள்ளை தமிழ் பேசத் தெரியாமல் இருப்பதால் பிறப்பால் தான் சார்ந்திருந்த சமூகத்திடமிருந்து, அதிலும் அந்தப் பிள்ளை பேசும் மொழி தெரியாத சமூகத்திடமிருந்து விலகி, பிரிந்து போகின்றது. இதைத் தவிர வேறு எந்த இழப்புமில்லை (அந்த பிள்ளை வாழும் நாட்டில் வதிவுரிமை பெற்றிருக்கும் பட்சத்தில்).

மொழி பற்றிய இது போன்ற கருத்துகள் தொடர்ச்சியாகப் பேசப்படவேண்டியன. 2 மாதங்களின் முன்னர் என் வீட்டில் இது பற்றிய பல மணித்தியாலங்கள் நீடித்த ஒரு கல்ந்துரையாடல் நடைபெற்றது. நண்பர் மெலிஞ்சி முத்தனும் தர்ஷனும் பேசிக் கொண்டதை கேட்டுக் கொண்டேயிருந்தேன். இது போன்ற உரையாடல்கள் நிச்சயம் நிறைய தெளிவைத் தரும்.

-3-

தலதா மாளிகைக்குச் சென்றது பற்றி எழுதி விட்டு பின்னர் தடம் மாறிவிட்டேன். தலதா மாளிகை நிர்வாகத்தை ஆங்கிலேயரிடம் ஒப்படைத்த ஒப்பந்தத்தின் நகல் ஒன்று அங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. நிச்ச்யம் எல்லாரும் பார்க்கவேண்டிய விடயம் அது. அந்த ஒப்பந்தத்தில் மன்னனில் இருந்து எல்லாரும் தமிழிலேயே கையொப்பம் இட்டுள்ளார்கள். அதிலும் குறிப்பாக “ரத்வத்த” என்கிற பெயரும் இருந்தது. இந்த ரத்வத்த, சந்த்ரிக்கா பரம்பரையின் முன்னோடிகளில் ஒருவராம். அனுரத்த ரத்வத்தவின் நேரடி முன்னோடி. இதைவிட முக்கியமான விடயம், பெயரில் “ஈழம், தமிழ்” என்கிற (இவையெல்லாம் பெயரளவுக்குத்தான் இந்த அடையாளங்களைக் கொண்டுள்ளது வேறு விடயம்) அடையாளங்களைக் கட்சிகள் கொண்டிருப்பது பிரிவினைவாதத்தைத் தூண்டும் என்று கூறி அந்தக் கட்சிகளைத் தடைசெய்யப்போவதாக அறிவிக்கப்பட்டிருக்கும் சந்தர்ப்பத்தில் (அதே போல “சிங்கள என்கிற அடையாளத்தைப் பெயரில் கொண்டிருக்கும் கட்சிகளும் தடைசெய்யப்படுமா என்று தெரியவில்லை) விடுதலைப் புலிகள் மேற்கொண்ட தாக்குதலில் சிதைவடைந்த தலதா மாளிகையின் தோற்றத்தினை கிட்டத்தட்ட ஒரு முழு மண்டபம் அளவுக்குமே, எடுக்கக் கூடிய எல்லாக் கோணத்திலும் புகைப்படம் எடுத்து மாட்டி வைத்திருப்பதன் பின்னாலுள்ள அரசியல் தெரியவில்லை. சிலவேளை இனவாதம் சிங்களவர்களுக்கும், தமிழர்கள் ஒரு காட்டுமிராண்டிகள் என்ற எண்ணம் தலதா மாளிகையைப் பார்க்கவரும் பிற நாட்டவர்களுக்கும் தோன்றலாமே தவிர தமிழர்களுக்கு தம் மீது கட்டவிழ்க்கப்பட்ட பயங்கரவாதங்கள் எதுவுமே ஞாபகம் வரக்கூடாது என்ற எண்ணமோ?

**தொடர்ச்சியாக பல மணிநேரம் தொலைபேசிமூலமும், நேரிலும் பேசி நிறைய விடயங்களைத் தெளிவாக்கிய என் இளவலுக்கு நன்றிகள்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

Website Powered by WordPress.com.

Up ↑

%d bloggers like this: