நம்மை நாமே சிலுவையில் அறைவோம்

1

யூலை மாதம் 11ம் திகதி 20 பேர் கொண்ட இன்னொரு தமிழ்க் குழுவினரால் அடித்துக் கொலை செய்யப்பட்ட 23 வயது இளைஞரின் கொலையுடன், அதற்கு சில வாரங்கள் முன்னர் மோதல் ஒன்றின் தொடர்ச்சியாக காரால் இடித்துக் கொலை செய்யப்பட்ட இரண்டு இளைஞர்களுடன் சேர்த்துப் பார்க்கும் போது இந்த கோடை காலத்திலும் வழமை போல தமிழ் இனக்குழுக்களின் இடையிலான மோதல் வலுப்பெறத்தான் போகிறது என்பது தெளிவாகின்றது. அதிலும் பெரும்பாலும் 16 வய்து முதல் 28 வயதுக்கு இடையிலான, இளைஞர்கள் என்கிற பருவத்தில் இருந்து மனிதர்கள் என்கிற பருவத்திற்கு மாறும் வயதிற்கு உட்பட்டவர்களே பெரும்பாலும் இந்தக் குழு மோதல்களில் ஈடுபடுவதும், குழுக்களில் அங்கம் வகிப்பதும் நிச்சயமாக கவலைப்படவேண்டிய விடயமாகும். கனேடிய சமூகத்தைப் பொறுத்தவரை மிகக் குறுகிய காலத்தில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியடைந்த இனங்களுள் ஒன்றாக தொடர்ந்து குறிப்பிடப்படும் இலங்கைத் தமிழ் சமுதாயத்தில் இப்படியான நிகழ்வுகளும் இன்னோர் பக்கமாக அதிகரித்து வருவது ஏனென்ற கேள்வியுடன் சில விடயங்களை ஆய்வது கட்டாயமான ஒன்றாகவே தெரிகின்றது.

இலங்கையில் இனப் பிரச்சனை தீவிரமடைந்து ஆயுதப் போராட்டமாக மாறத் தொடங்கிய 80களின் பின்னர் தமிழர்கள் புலம்பெயர்வதும் அதிகரித்தது. ஆரம்ப காலத்தில் ஐரோப்பிய நாடுகளை நோக்கியே புலம்பெயர்வுகள் அமைய, 90களின் இறுதியில் கனடா நோக்கிய புலம்பெயர்வுகளும் பெரிதளவு நடக்க ஆரம்பித்தது. அதே காலகட்டத்தில் கனேடிய தமிழ் இளைஞர் குழுக்களும் உருவாக தொடங்கின. ஆரம்பத்தில் வடமராட்சியைச் சேர்ந்த உடுப்பிட்டி, வல்வெட்டித்துறை ஆகிய இரண்டு பிரதேச மக்களுக்கிடையில் ஈழத்தில் நிலவிய பிணக்குகளை மையமாகக் கொண்டே இந்த மோதல்கள் இடம்பெற்றன. அந்தப் பிதேசங்களில் இறுக்கமாக நிலவிய சாதிப் பிரச்சனைகளின் நீட்சியாகவே இந்த மோதல்கள் தொடர்ந்தன. டவுன்டவுனில் (Downtown ) இருக்கின்ற லான்ஸ்ரவுண், மற்றும் வெலஸ்லி & பார்லிமென்ற் பிரதேசங்களை மையமாகக் கொண்டே இந்த மோதல்கள் இடம்பெற்றன. இதில் என்ன வேடிக்கை என்றால் இரண்டு பிரதேச மக்களும் தத்தம் ஊர் சேர்ந்தவர்களை வீரர்களாகவும், நாயகர்களாகவுமே பார்த்தனர். இன்றும் இவ்வூர் ஒன்று கூடல்களில், இம்மோதல்களில் ஈடுபட்டவர்கள் இளைஞர்கள் மத்தியில் மிகுந்த மரியாதையுடன் நினைவு கூறப்படுவதைக் காணலாம். அதிலும் குறிப்பாக சப்வே (Subway) ஒன்றில் வைத்து துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்ட ஒருவரை அந்த ஊர் மக்களே பிணை எடுத்த்துடன் அது தொடர்பான வழக்குகளிற்கு செலவான தொகையையும் பொறுப்பேற்றது குறிப்பிடத்தக்கது. ஊரபிமானம், ஊர்ப் பற்று போன்ற கருத்தாடல்களுடன் செய்யப்பட்ட இது போன்ற செயல்கள் பின்னாட்களில் பலர் இதே வழியில் குழு மோதல்களில் ஈடுபடுவதற்கு வழியமைத்த மோசமான முன்மாதிரியாகவும் அமைந்தது.

92ல் ஏகே கண்ணன் என்ற பெயர் பரவலாக அறியப்பட்ட பின்னர் மோதல்கள் VVT, கண்ணன் குழு என்கிற இரண்டு குழுக்களிடையேயான மோதல்களாக தொடர்ந்தது. இரண்டு குழுக்களிலும் இருந்தவர்கள் அப்போதைய சூழலில் பாடசாலைகளுக்கு சென்றுவரும்போது புதிதாக வந்த இளைஞர்களை பெரிதும் கவர, பல இளைஞர்கள் அவர்களுடன் நட்பாகி, அந்த நட்பின் நிமித்தம் தாமும் அந்த அந்த குழுக்களை சார்ந்தவர்களாக வெளிப்படுத்திக் கொண்டனர். இதே சமயம் கனேடியச் சட்டங்களின் படி 18 வயதுக்கு குறைவானவர்களுக்கான தண்டனைகள் மிகமிக குறைந்த அளவே இருந்ததால் குழுக்களைச் சார்ந்தவர்கள் இந்த “வயது குறைவான” (Under Age) இளைஞர்களை வைத்து பல விடயங்களை செய்துகொண்டதுடன் தாம் செய்த சில குற்றங்களிற்காகவும் வயது குறைந்த சிலரை சரணடைய வைத்து தண்டனைகளில் இருந்து தாம் தப்பிக் கொண்டனர். இதன் எதிரொலியாக மாற்றுக் குழுக்களால் புதிதாக இணைந்த இளைஞர்கள் குறிவைக்கப்பட அடுத்த நிலைக்கு குழுமோதல்கள் எடுத்துச் செல்லப்பட்டன. இதுவரை காலமும் இலங்கையில் சொந்த இடம் சார்ந்தும், உறவுமுறை சார்ந்தும், சாதி பிரச்சனைகளை மையம் வைத்தும் நடந்த மோதல்கள் பிற்பாடு கனடாவில் பாடசாலைகளையும், இடங்களையும் பெரும்பாலும் மையமாகக் கொண்டு தொடரத் தொடங்கின. அது மட்டுமல்லாமல், சட்டவிரோதமான முறையில் பணம் ஈட்டும் கடனட்டை மோசடி (Credit Card Skimming) , திருட்டு, அடையாளத் திருட்டு (Identity Theft), முகவர் வேலைகளின் பிண்ணனி, போலி ஆவண தயாரிப்பு, காப்புறுதி மோசடி மற்றும் சிறிய அளவில் போதை மருந்து கடத்தல்/விற்பனை என்பனவற்றில் எழுந்த போட்டிகளும், பண ரீதியிலான பிரச்சனைகளும் மோதல்களுக்கு காரணமாகின. 90களின் பிற்பகுதியில் இருந்து இப்படி நிறைய குழுக்களாக இயங்கியவர்களுல் Gilders Boys, rough riders, B3, Brave Heartz, True Born Thugs, Marganeau Boyz போன்றவர்கள் முக்கியமானவர்கள். இக்குழுக்கள் அவற்றின் ஆரம்பகாலத்தில் ஏற்கனவே பலமாக வளர்ந்திருந்த இன்னுமொரு குழுவின் ஆதரவுடன் இயங்கினாலும் சிறிது காலத்தில் தம்மை தனியொரு குழுக்களாக அடையாளாப்படுத்தினர். இந்த அடிப்படையில் பார்க்கும்போது கனடாவில் இயங்குகின்ற ஏறாத்தாழ எல்லாப் பாடசாலைகளிலும் (பெரும்பாலான கத்தோலிக்க மற்றும் தனியார் பாடசாலைகள் நீங்கலாக) ஏதாவது ஒரு குழுவின் செல்வாக்கேனும் இருப்பது குறிப்பிடத்தக்கது. எனவே இந்தக் குழு மோதல்கள் யாரோ சிலர்தான் செய்கின்றார்கள் என்றோ, எம்மவரை மட்டம் தட்ட இது போன்ற நிகழ்வுகளை ஊதிப் பெரிதாக்குகின்றனர் என்றோ காரணம் சொல்லி எம்மை நாமே ஏமாற்றிக் கொள்ளாமல் இது குறித்த காரணங்களையும், இது பற்றிய விமர்சனங்களையும் திறந்த உரையாடல்களுக்கும், விவாதங்களுக்கும் உள்ளாக்குவது அவசியமானதாகின்றது.

2

ஆரம்ப காலத்தில் இலங்கையில் இருந்து புதிதாக வந்தவர்களேஎ இந்த இனக்குழுக்களில் ஈடுபடுவது போன்ற ஒரு கற்பிதம் இருந்தது. இதற்கு காரணமாக, ஆங்கில மொழியுடன் போதுமான பரிச்சயம் இல்லாதவர்கள் அதன் தொடர்பில் எதிர்நோக்கும் தொடர்பாடல் சம்பந்தமான பிரச்சனைகளே இந்த குழு மோதல்களுக்கு காரணம் என்று சொல்லப்பட்டது (அடிப்படையில் இது இலங்கையின் மேல்த்தட்டு வர்க்க மக்களின் மனோபாவத்தை ஒத்தது). ஆனால் இன்றைய கால கட்டங்களில் சிறு வயது முதலே கனடாவில் வளர்ந்து வந்தவர்களும், இங்கேயே பிறந்து வளர்ந்தவர்களுமே பெரும்பாலான குழு மோதல்களில் ஈடுபடுவதைக் காணலாம். சென்ற ஆண்டில் குழு மோதல்களில் ஈடுபட்ட தமிழ் இளைஞர் ஒருவரை (19 வயது என்று நினைவு) டொரண்டோ ஸ்டார் பத்திரிகை பேட்டி ஒன்று எடுத்தது. அப்போது அவர் சார்ந்த குழுவுக்கும் அவர் எதிர் குழுவினருக்குமான பிரச்சனைகளின் காரணமாக அவர் இருந்த வீட்டின் மீது பெற்றோல் குண்டுகள் வீசப்பட்டன. இந்த நிகழ்வுகளுக்கான காரணங்கள் பற்றிக் கேட்டபோது அவர் “இலங்கையில் இருந்து புதிதாக வந்த அவர்களைப் பார்த்தாலே எனக்கு வெறுப்பாக இருக்கின்றது. அவர்கள் உடை அணியும் முறை, போன்றவற்றைப் பார்க்கும் போது அவமானமாக இருக்கின்றது. அவர்கள் அணிந்து வரும் உடைகளில் இருந்து சமையல் வாசம் வீசுகின்றது…….” என்றெல்லாம் கூறியிருந்தார். உண்மையில் வேற்றினத்தவர்கள் கூட எம்மவர்களைப் பற்றி கூறாத அளவுக்கு துவேசம் பொங்கியிருந்தது அவர் பேச்சில். இந்த அளவு எம் இளைஞர்கள் தம்மிடையே பிளவுபட்டிருக்க என்ன காரணம்? அதற்குரிய விடையும் அவரது பேச்சிலேயே இருக்கின்றது. புதிதாக வந்தவர்களை மட்டமாக நினைக்கவும், வெறுக்கவும் அவர் எடுக்கின்ற நியம அலகு புதிதாக வந்தவர்ர்கள் கனேடிய நாகரிகத்துள் இன்னும் முழுமையாக புகவில்லை என்பதை சார்ந்து எடுக்கப்படுகின்றது. இது எந்த அளவிலும் ஏற்கமுடியாத ஒரு மன நிலை. இதற்கு காரணம் பெரும்பாலும் எமது வீடுகளில் பிள்ளைகள் ஆங்கிலம் பேசுவதை, மேற்கத்திய பாணியில் உடை அணிவதைப் பார்த்து பெருமித்து, மற்றவர்களை ம்ட்டம் தட்டும் மனநிலை. இதன் காரணமாக பிள்ளைகள் பலர் தமிழே தெரியாமல் / தமிழில் பேசாமலே வளர்கிறார்கள். இது மறைமுகமாக பெற்றோருக்கும், உறவினருக்கும் இடையில் (அவர்கள் அதிகளவு ஆங்கிலம் தெரியாமல் இருக்கும் இடத்து) பிள்ளைகளுடன் பெரும் இடைவெளிகளை உருவாக்கிவிடுகின்றது.

மேலும் இன்னொருவகை மக்கள் இருக்கின்றார்கால். அவர்கள் பிள்ளைகளை தாம் இலங்கையில் வளர்ந்த அதே நாகரீகத்தின் தொடர்ச்சியாகவே இங்கேயும் வளர்க்க முனைகின்றார்கள். அதே பாணியிலான் உடுப்புகள், உணவுப் பழக்க வழக்கங்கள். பொதுவாக நடுத்தர குடும்பங்களின் நிலை இது. இதனால் பிள்ளைகள் தாம் பழகும் சூழலிலும், நண்பர்கள் மத்தியிலும் பெரியளவிலான மனப் பாதிப்புகளுக்கு உள்ளாகின்றார்கள். உயர் கல்லூரிகளில் வீட்டில் இருந்து அணிந்து வந்த உடுப்பை locker களில் வைத்துவிட்டு, வேறூ விதமான உடைகளை கல்லூரியில் அணிந்து திரிபவர்கள் பலரைக் காணலாம். வீட்டில் இருந்து படிய வாரிய தலையுடன் வந்து பாடசாலையில் Gel அணிந்து திரிந்துவிட்டு வீடு போகமுன்னர் தலையை தண்ணீரால் அலசிச் செல்லும் ஒரு மாணவனை நான் நன்கறிவேன். இதனால் மாணவர்கள் வீட்டில் இருந்து அந்நியப்பட்டுப் போவதுடன், மெல்ல மெல்ல தம் குடும்பத்தை வெறுக்கவும் தொடங்குகிறார்கள். இந்த நிலையில் தமக்குரிய சுதந்திரத்தை தாம் அனுபவிப்பதாக உணரும் நண்பர்கள் ஆபத்பாந்தவர்களாய் மாற அவர்களுடனான உறவு வலுவடைகின்றது. இவர்களுக்கு ஏற்கனவே குடும்பத்தினருடன் இருக்கின்ற ஒட்டாத மனநிலையும், பாடசாலை மற்றும் வேலை செய்யும் இடங்களில் ஏற்படுகின்ற புறக்கணிப்பு உணர்வுகளும் சேர்த்து தம்மை ஒத்த பிறருடன் நெருக்கமாக்கின்றது. நண்பர்கள் வட்டம் பெருக, குழு மனப்பான்மை வருகின்றது. குழுவாக, கூட்டமாக இருக்கின்ற போது ஏற்படுகின்ற அதிகார போதை அவர்களிடம் அத்து மீறும் தன்மையினை உருவாக்கின்றது. நட்பு என்பது உயிரை கொடுப்பது அல்லது நட்புக்காக ஒருவனின் உயிரை எடுப்பது என்று ஏற்கனவே திரைப்படங்கள் சொல்லிக் கொடுத்திருக்க, நட்பும், காதலுமே வாழ்க்கையாக தெரியும் பதின்மங்களுக்குப் பிந்திய வயதில் இவை இரண்டிற்காகவும் வீணாக தம் வாழ்வைத் தொலைக்க தொடங்குகின்றார்கள்.

நாம் வாழும் சூழலில் திரைப்படங்களும் இதைத்தானே சொல்லித் தருகின்றன. 95 முதல் 99 வரையான ஐந்து ஆண்டுகளும் மென்மையான உணர்வுகளைக் கொண்ட திரைப்படங்களே பெரிதும் வெளியாகின. அவையே பெரிதும் வெற்றியும் பெற்றன. (இந்த மென்மையான திரைப்படங்களும் கூட விதம் விதமான காதல், நம்பவே முடியாத அளவு குடும்பப் பாசம் போன்ற அபத்தங்களைத்தான் காட்டின என்பது வேறுவிடயம். ஆனால் அவற்ரில் வன்முறைகள் பெரிதாக இருக்கவில்லை) இந்த நிலையில் அமர்க்களம் என்கிற திரைப்படம் வருகின்றது. முழுக்க முழுக்க குழுத்தலைவன் ஒருவனின் நாயகத் தன்மையை முன்னிலைப்படுத்தி, அவன் பக்கத்தை நியாயப்படுத்தி எடுக்கப்பட்ட அந்த திரைப்படம் வெற்றிபெறுகின்றது. அந்த இளைஞன் அந்த நிலைக்கு வர அவன் அனுபவித்த மோசமான குழந்தைப் பருவம்தான் காரணம் என்று இயக்குனர் தெளிவாக காட்டியபோதும் அதை பார்த்த பெரும்பாலான இளைஞர்களுக்கு நாயகன் செய்யும் அடிதடிகளும், அவன் மேல் இரக்கமுற்று துரத்தி துரத்தி காதலிக்கும் நாயகியும் மட்டுமே கண்ணில்பட்டார்கள். இந்த திரைப்படத்தின் வெற்றி இது போன்ற ரவுடிகளையும், தாதாக்களையும் முன்னிலைப்படுத்தும் நிறையப் படங்களை உருவாக்கியது. அவர்களுக்கான புதுப் புது நியாயங்களை உருவாக்கியது. அவை பலவற்றில் உண்மைகள் இருந்தபோதும், அது பற்றிய சமூக ரீதியான கண்ணோட்டம் இன்றி, அடிதடி செய்யும் நாயகன், அவனை துரத்தி துரத்தி காதலிக்கும் நாயகி, அவன் புகழ் பாடும் சமூகம் அல்லது நாயகனின் சமூக அக்கறை என்ற பெயரில் அவன் செய்யும் அத்துமீறல்களுக்காக முன்வைக்கப்படும் நியாயங்கள் என்பனதான் பதின்மங்களில் இருக்கும் பல இளைஞர்களின் பார்வையில்பட்டன. தாம் திரையில் பார்த்த நாயகத் தன்மைகளுடன் தம்மையும் ஒப்பிட்டபோது அவர்களுக்கு தம்மை ஒரு குழு சார்ந்தவனாகவோ, இல்லை குழுக்கள் சார்ந்த அத்துமீறல்களை செய்தவன் என்றோ வெளிக்காட்டுவதில் எந்த தயக்கமும் இல்லாமல் போயிற்று.

பொதுவாக குழு மோதல்களுக்கான காரணங்கள் ஆரம்பத்தில் ஈழத்தில் வாழ்ந்த ஊர் சார்ந்ததாகவே இருந்தது. அதன் பின்னர் பல மோதல்களுக்கு காரணமாக காதல் சார்ந்த பிரச்சனைகளே இருந்தன. இலங்கையில் அதிலும் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் பொதுவாக பதின்மங்களின் பின்னர் ஆண்களுக்கும், பெண்களுக்கும் இடையில் மிகப்பெரும் திரை விழுந்துவிடுகின்றது. அதனால் ஒருவன் / ஒருத்தி தன் உறவினர்களைத் தவிர்த்து பல்கலைக்கழகம் செல்லும்வரை அல்லது திருமணமாகும் வரை எதிர்ப்பாலாருடன் பழகுவதற்கான சந்தர்ப்பங்கள் இருப்பதில்லை. இதனால் எதிர்ப்பாலர் பற்றிய புரிதல்கள் இல்லாமல் வளரும் ஒரு சமூகம் திரைப்படங்களில் காட்டப்படும் காதல் பற்றிய கதையாடல்களை உண்மை என்று நம்பி அதன் வழி தானும் நடந்து கொள்ளுகின்றது. அதிலும் தற்போதைய காலங்களில் கூட உயர்கல்லூரிகளில் படிக்கின்ற தமிழ் மாணவர்களிடையே ஒரு பெண்ணை எவன் முதலில் காதலிக்கின்றானோ அவனைத்தான் அந்தப் பெண் காதலிக்கவேண்டும் (அந்த பெண்ணிற்கு அவன் மீது காதலோ அல்லது சாதாரண ஈடுபாடோ இல்லாமல் கூட இருக்கலாம்.) என்ற எழுதப்படாத ஒரு சட்டம் இருக்கின்றது. அது போல தன் சகோதரியை ஒருவன் காதலிக்கின்றான் என்று தெரிந்தாலே அவனை அடித்து நொறுக்கி, மிக மோசமாக மிரட்டும் இயல்பும் நிறைய இளைஞர்களிடையே இருக்கின்றது. இப்படி மிரட்டும்போது மிரட்டப்படுபவனும் தனக்குரிய ஆட்பலத்துடன் இருந்தானென்றால் நிச்சயம் அது ஒரு குழு மோதலாக வெடிக்கும். தொடர்ச்சியாக தொடரும் இப்படியான நிகழ்வுகள் இறுதியில் கொலைவரை கூட சென்று முடியலாம்.

புலம்பெயர்ந்து ஒரு புதிய சூழலில் தன்னைப் பொறுத்திக்கொள்ள போராடும் ஒரு இனத்தில் எழக்கூடிய இப்படியான உறவு முறைச் சிக்கல்களும் அதனால் எழும் விளைவுகளும் ஓரளவுக்கு எதிர்பார்க்கக்கூடியனவே. ஆனால் தற்போது பெரும்பாலான தமிழ்க் குழுக்களிடம் வேரூன்றியுள்ள கடனட்டை மோசடி, காப்புறுதி மோசடி போன்றவை இன்னும் பல ஆண்டுகளுக்கு இந்த மோதல்கள் தொடரப் போவதையே காட்டுகின்றன. ஆரம்ப காலத்தில் பணம் உழைப்பதற்காக கார்களையும், கார்களில் இருந்து விலை உயர்ந்த பொருட்களையும் திருடி ஓரளவுக்கு தமது ஆடம்பர தேவைகளுக்கு பயன்படுத்தி வந்தனர். அதிலும் பெரும்பாலும் கார்களில் பொருத்தப்பட்டுள்ள ஸ்டீரியோ சாதனங்களும், கார்களை அழகுபடுத்துவதற்காக பொருத்தப்பட்டவைகளுமே குறிவைக்கப்பட்டன. இதற்குப் பிறகு மெல்ல மெல்ல இதர மோசடிகளும் பரவ ஆரம்பித்தன. கிட்ட தட்ட எல்லாக் குழுக்களை சார்ந்த இளைஞர்களும் ஏதோ ஒரு வகையில் இந்த மோசடி வலையில் பங்கெடுத்தனர். பெருமளவு பணம் இளைஞர்களிடையே பரவ இந்த மோசடிகள் காரணமாக இருந்தன. ஆரம்பத்தில் இந்த மோசடிகளில் கைது செய்யப் பட்டவர்கள் சட்டங்களில் உள்ள ஓட்டைகளைப் பாவித்து சுலபமாக் தப்பிவிட, விழித்துக் கொண்ட காவல் துறையினர் சட்டங்களை கடுமையாக்கி, ”தீவிர வாத தடுப்பு சட்டம்” போன்ற கடுமையான சட்டங்களின் கீழும் கூட பலரை கைது செய்தனர். இந்த நேரம் கவனிக்க வேண்டிய இன்னொரு விடயம் போலிக் கடனட்டைகளை பயன்படுத்தி பொருட்களை வாங்கி மிக மலிவு விலைகளிற்கு இவர்கள் விற்கின்றபோது இவர்களின் நெருங்கிய உறவினர்களும், சில சமயங்களில் பெற்றோரும் கூட இவர்களிடம் இருந்து மலிவு விலைக்கு பொருட்களை வாங்குகின்றனர். பெரிய அளவு திரைகளை கொண்ட தொலைக்காட்சிகளை போலிக் கடனட்டைகள் மூலம் பொதுவாக 65%ற்கு விறகப்பட்டபோது ஒரு இளைஞன் 60% என்ற விலைக்கு விற்று வந்தான். அவனை அவனது தந்தையே விபரம் புரியாதவன் என்று சொல்லி கவலைப்ப்பட்டதை நான் காதாரக் கேட்டிருக்கின்றேன். இது போன்ற சந்தர்ப்பங்களில் நாம் நிச்சயமாக இந்தக் குழு மனப்பானமைக்கு, அதன் மூலமாக செய்யப்படுகின்ற இது போன்ற மோசடிகளுக்க்கும் இளைஞர்களை மட்டுமல்லாமல், எம் சமூகத்திலேயே கலந்துள்ள, அதிலும் பெரும்பாலும் உறவுகளுக்குள் உள்ள சில குறைபாடுகளைப் பற்றியும் பேசவேண்டிய அவசியம் உண்டாகின்றது.

இன்றைய உலகில் பெரும்பாலும் வெற்றி என்பது பண ஈட்டல் தொடர்பானதாகவும், பொருளாதார ரீதியானதாகவுமே பார்க்கப்படுகின்றது. அதே நேரம் பண ஈட்டல் என்பது பேசப்படுவது போல, அது ஈட்டப்பட்ட முறை பேசப்படுவதில்லை. போர்க்களத்தில் நியாயங்கள் ஏதுமில்லை என்று சொல்வது போல, பணம் உழைப்பதிலும் நியாயம் பார்க்கலாகாது என்று தர்க்கம் பேசுபவர்களிடம் பேச எமக்கு எதுவுமிலை. அவர்களை மோசமாகிக் கொண்டிருக்கும் ஒரு சமுதாயத்தை இன்னும் மோசமாக்கிச் செல்லும் நோய்க்காவிகளாக மட்டுமே பார்க்க முடியும் ஆனால் பல சமயங்களில் பெற்றோரும், குடும்பத்தாருமே இதே மன நிலையுடன் அடைவதைக் காணும்போதுதான் அதிகம் கவலையாக இருக்கின்றது. இவர்களை ஊக்கி வளர்க்கும் ஒரு சமுதாயம், மறைமுகமாக இவர்கள் மீது காட்டும் அபிமானமும், அவர்களை வெற்றியாளர்களாகக் கொண்டாடுவதும் நேர்மையான முறையில் உழைத்து வாழ்பவர்களை, வாழ முற்படுபவர்களை மிகப்பெரிய அவ நம்பிக்கைகளுக்கு உள்ளாக்குகின்றது. அண்மையில் ஒருவர் என்னிடம் “எண்ட அக்காண்ட மகன் படி படியென்று படிச்சு இப்ப ஒன்றரை லட்சம் வருஷத்துக்கு உழைக்கிறான். எண்ட மகன் பள்ளிக்கூடம் படிச்சு முடிக்கவேயில்லை. ஆனால் அவன விட டபிளா உழைக்கிறான். உதான் தம்பி கெட்டித்தனம் என்றது” என்று சொன்னார். அவரது மகன் செய்யும் முறைகேடுகள் பற்றி நன்கு அறிந்தவர் அவர். இப்படி இருக்கின்றபோது இவரே இப்படி சொன்னால், அதை கேட்டு வளரும் அவரின் இளைய மகன்களின் மன நிலை எவ்வாறு மாறும். தாமும் அது போல செய்யலாம், நிறையக் காசு சேர்க்கலாம் என்று அவர்கள் மனம் சிந்திக்காதா? எதற்கெடுத்தாலும் ஔவை, பாரதி என்று பேசுபவர்களே; அவர்கள் தானே எப்போதோ “தீயோர் குண இயல்புகளை பிறர்க்கு உரைப்பதுவும் தீதே” என்றும் “மோதி மிதித்துவிடு பாப்பா, அவ்ர் முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா” என்று பாடிப் போனார்கள்.

இதைத் தவிர குழுக்களை ஆதரிக்கவும், தத்தம் பக்க நியாயங்களை சொல்லவும் இன்னோரு கதையும் அதிகம் சொல்லப்படுகின்றது. அதாவது தமிழர்கள் கனடாவில் குடியேறிய ஆரம்ப காலங்களில் கறுப்பினத்தவரும், சீனர்களும் தமிழர்கள் மீது நிற வெறியுடன் நடந்ததாகவும், அதில் இருந்து தம் இனத்தைக் காக்கவே தமிழர்கள் தம்மிடையே குழுக்களை அமைத்துக் கொண்டனர் என்றும். இப்படிச் சொல்பவர்களை என்ன சொல்லித் திட்டுவது என்றே எனக்குத் தெரியவில்லை. சரி, ஒரு கதைக்கு அப்படியே எடுத்துக் கொண்டாலும் தமிழ் இனக்குழுக்கள் இதர தமிழ்க் குழுக்களிடையே மோதியதைத் தானே எம்மால் அறியமுடிகின்றது இது தவிர தமிழர்களாலேயே ஒழுங்கு செய்யப்படும் நிகழ்வுகளில் இவர்கள் மோதியதை எப்படி எடுத்துக் கொள்வது. உதாரணமாக 2006ல் கனடாவில் வொண்டர்லாண்டில் “தமிழர் நாள்” நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன. அதில் மார்க்கம் பிரதேசத்தையும், டொரண்டோ பிரதேசத்தையும் மையமாக வைத்து இயங்கும் இரண்டு குழுக்கள் மோதின. இரண்டிலும் பெரும்பாலும் 20 வயதுக்கு குறைந்தவர்கள். அதன் பின்னர் இரண்டு குழுக்களும் அந்தக் கோடை விடுமுறை முடிந்து பாடசாலை தொடங்கிய முதல் நாளில், தம்மில் பெரியவர் யார் என்று உறுதி செய்யும் நோக்குடன் இரண்டு பிரதேசங்களிலும் இயங்கும் பாடசாலைகளில் வைத்து அடிதடியில் இறங்கினர். பலர் காயமடைந்தனர். இதை எந்த அடிப்படையில் நியாயப்படுத்துவது?

ஒரு பிரச்சனையை தீர்ப்பதற்கு எடுக்கப்படும் முதலாவது படி அப்படி ஒரு பிரச்சனை இருக்கின்றது என்று ஒத்துக் கொள்வது. முதலில் நாம் தமிழ் இளைஞர்களிடையே இந்த குழுக் கலாசாரம் நன்கு பரவிவிட்டது என்பதை ஒப்புக் கொள்ளவேண்டும். 90களில் இறுதியில் கனடாவில் நடக்கும் தமிழர்களிடையேயான வன்முறைகள் பற்றி கேட்கப்பட்டபோது டி.ஐ.ஜி. சுந்தரலிங்கம் “தமிழர்கள் சமுதாயத்துக்கும், கனேடிய சமுதாயத்துக்கும், போலீசுக்கும் பெரிய இடைவெளி உள்ளது. இதனால் தமிழர்கள் தம்மிடையே நிகழும் வன்முறை பற்றிய போலீசாரின் விசாரணைகளில் ஒத்துழைப்பு தருவதில்லை. இந்த நிலை நீடிக்கும்வரை வன்முறைகள் தொடர்ந்து கொண்டே இருக்கும்” என்ற பொருள்பட கூறியிருந்தார். இந்த கருத்து நிச்சயம் ஆழ்ந்து சிந்திக்கவேண்டியது. இப்படிச் செய்கின்றார்களே என்று அவர்களை முற்று முழுதாக நிராகரிக்க வேண்டும் என்றோ அல்லது இன்னும் சிலர் சொல்வது போல (இலங்கையின் வடக்கு கிழக்கில் செய்தது போல) போஸ்டில் கட்டி வெடி வைக்கவேண்டும் என்றோ நான் ஒரு போதும் சொல்ல மாட்டேன். எல்லா சரி பிழைகளையும் தாண்டி, இத்தனையும் செய்யக் காரணமாய் சில சமூக ரீதியான, உளவியல் ரீதியான, இன ரீதியான/இலங்கையில் இருந்த காலத்தில் ஏற்பட்ட தாக்கங்கள் காரணங்களாய் இருந்திருக்கின்றன என்பதையும், புலம் பெயர் நாடுகளில் தமிழர்களிடையே இப்படியான ஒரு முக்கிய பிரச்சனை இருக்கின்றது என்பதையும் அங்கீகரிக்கும் அதே வேளை அதற்காக அவர்கள் செய்யும் சமூக விரோத செயல்களை முற்றாக நிராகரிப்பது என்ற அடிப்படையில் தொடர்ச்சியான உரையாடல்களையும், செயற்பாடுகளையும் செய்வது மூலமே ஓரளவுக்கு இனியும் இது போன்ற அனர்த்தங்கள் நிகழாமல் தடுக்கலாம். இல்லாவிட்டால் இதற்காக பொறுப்பேற்று எம்மை நாமே சிலுவையில் அறையலாம்.
செய்தி1
————-என்ற 22 வயதான தமிழ் இளைஞனே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார்.
கிரிக்கட் மட்டைகள் மற்றும் பேஸ்போல் மட்டைகளினால் கடுமையாக தாக்கப்பட்ட காரணத்தினால் தலையில் ஏற்பட்ட காயங்களினால் அவர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது – 2009/07/15; GTN
 செய்தி 2
The reputed leader of a Tamil gang whose battle with rival gang members on the streets of Toronto claimed the lives of more than a dozen youths in the late 1990s, and once led to a midday shooting on Highway 404, was deported late last night to Sri Lanka.- மார்ச்/2006
 செய்தி 3
Police said among those who were arrested were leaders of some of the Tamil gangs. Fraud, robbery, drug, immigration, and firearms charges were among the plaints filed against the Tamil gang members. These arrests also mark the first time in Canada the Police have used a section of the Immigration Act that prohibits criminal organizations. In this instance the police applied it to street gangs, as a new tactic, and if convicted could lead to deportations or imprisonments for some who were arrested.
The quasi-political Tamil gangs have been active in the metropolitan area of Toronto for the whole of the last decade. But the last two months saw a sudden increase of violence by the gangs. Two Tamils of Sri Lankan origin in their early twenties and loosely connected to these gangs died during this period in an execution style shooting. – A News Release in 2005
 செய்தி 4
Today according to police a new breed of Tamils hope to fill the void left by the VVT and AK Boys. Gangs such as McF,Keele n Hoes, Westend tamilz, Born to Murdah boyz, Braveheartz have all slowly aimed towards gaining the status that has left behind slowly starting with credit card frauds. Numberous gangs members have been taken in over the last 3 years for violent crimes. A fierce feud is currently underway between the SL Soc and the Selly Oak Souljahs, resulting in casualties on both sides. A known rivalry is between the Murdah Boyz and B3 Juniors which erupted into street wars where members of both sides were arrested numberous times on contempt to commit criminal activities while putting lives in danger. Police believe the new breed of tamil gangs will die of slowly before a fatal crime could happen but if a crime of such was to happen police believe the consequences could be deadly depending on which crews it happens to. The B3 juniors are known to be in the Malvern area and Markham and Ellesmere. The Born to Murdah boyz are said to be in the Markham and Eglinton and also reside in the Mccowan n larence area they are believed to be under the OTK , the rivals of the B3. Keele and Finch Killa are known to reside in Keele n Finch and and Ossinginton areas. The west End Tamils are known to reside in Etobicoke west. And the Bravehearts r known to b in Markham. All these gangs have grown to make a gang profile on the up and coming gangs lists and are all believed to turn to violent actions if felt disturbed.
 செய்தி 5
In Toronto, there are about 200, 000 Tamils. But fewer than 100 are involved in Toronto street gangs, police say. That 5 per cent of the population feeds the racism and misconceptions the general public has about Toronto’s Tamil community, various leaders complain.
It’s street violence, it’s a criminal community,not the Tamil community. In so many ways it’s exactly the same as the gangs that fight up at Kipling or other ones in Scarborough or even the bikers,” said a veteran organized crime officer. “We have to treat these gangs as organized crime because that’s what they are.”
Courtesy: The Star Ontario
 நன்றி: “எம்மை நாமே சிலுவையில் அறையலாம்.” கட்டட காடு கவிதைத் தொகுப்பில் இடம்பெற்ற வியாகூலப் பிரசங்கம் என்ற கவிதையில் வருகின்ற வரி. எழுதியவர் கவிஞர் காலம்செல்வம்.
நன்றி: இரவு இன்னும் எரிந்து கொண்டிருக்கிறது; கூர் 2010

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

Website Powered by WordPress.com.

Up ↑

%d bloggers like this: