சாரு நிவேதிதா, ஜெயமோகன் மற்றும் ஊடகங்கள் இணைந்து வழங்கும் “நித்திய ஆனந்தம்”

நித்தியானந்தர் பற்றி எழுதாமல் வலைப்பதிவே எழுத முடியாது என்பது போல எல்லாப் பக்கம் இருந்தும் நித்தியானந்தர் பற்றிய கட்டுரைகளே குவிகின்றன. எரிகிற கொள்ளியில் பிடுங்கினவரை லாபம் என்பது போல சன்னும், நக்கீரனும் தொடக்கி வைத்த இந்த வியாபாரத்தில் இப்போது எல்லாத் தரப்பாருமே குதித்துள்ளனர். ஒரு கள்ளனைக் காட்டிக் கொடுக்கிறோம் என்ற பெயரில் பல கள்ளர்கள் கூட்டுக் கொள்ளையில் ஈடுபடுகின்றனர். நான் இப்படி எழுதுகிறேன் என்றவுடன் நான் ஏதோ நித்தியானந்தருக்கு வக்காலத்து வாங்குகிறேன் என்று நினைக்கவேண்டாம். நித்தியானந்தர் மட்டுமல்ல எந்த நவீன சாமியார் மீதும் நான் நம்பிக்கை வைப்பது கிடையாது. ஏன் நம்பிக்கை வைக்கக் கூடாது என்பதற்கு உதாரணமாக சதுர்வேதி, ஜெயேந்திரர், விஜயேந்திரர், பிரேமானந்தா என்ற மிக நீண்ட வரலாறு கண் முன்னே விரிகின்றது. தவிர, இந்த சாமியார்கள் மீண்டும் மீண்டும் நிறுவ முயல்வதெல்லாம் மிக மோசமான ஆணாதிகத்தையும், பெண்ணடிமைத்தனத்தையும், பிற்போக்குத்தனத்தையும் தவிர வேறு எதையுமே அல்ல.

விகடன், குமுதம் என்ற என்ற இரண்டு ஊடக வியாபாரிகளும் முன்னெடுத்து விட்டவர்களே சுக போதானந்தாக்களும், ஜக்கிகளும், நித்திகளும். உண்மையில் 80 களில் பி.சி. கணேசன், எம். எஸ். உதயமூர்த்தி என்ற இரண்டு சுய நம்பிக்கை எழுத்தாளர்கள் எழுதியதன் தொடர்ச்சியாகவே இவர்கள் எழுதிய கட்டுரைகள் பார்க்கப் படவேண்டியவை. ஓரளவுக்கு இவர்கள் எழுதிய கட்டுரைகளை மனோ தத்துவக் கட்டுரைகள் என்று பாகுபடுத்திக்கொள்ளலாம். துரதிஸ்ட வசமாக சாரு நிவேதிதா அந்தக் காலப் பகுதிகளில் லத்தீன் இலக்கியங்கள் படிப்பதிலும், உத்தமத் தமிழ் எழுத்தாளர் 1 பற்றிய துண்டுப் பிரசுரங்கள் வெளியிடுவதிலும் பிஸியாக இருந்ததால் அவரால் எம். எஸ் மற்றும் பி.சியின் கட்டுரைகளைப் படிக்க முடியாமல் போய்விட்டது. உத்தம தமிழ் எழுத்தாளர் 1 இறந்து, உத்தம தமிழ் எழுத்தாளர் 2 பற்றி சாரு எழுதாமலே எல்லாருக்கும் தெரிந்து விட்ட காலப்பகுதிகளில், லத்தீன் இலக்கியங்கள் எல்லாம் சாருவால் ஏற்கனவே படித்து முடிக்கப்பட்டதாலும், தொடர்ந்து ஃப்ரான்ஸ் செல்ல ஏதோ காரணங்களால் அழைப்பு வராததாலும் சாரு மெல்ல தமிழில் வாசிக்கத் தொடங்கியபோது அவர் வாசித்த கதவைத்திற காற்று வரட்டும் வகையறாக்கள் அவரை அதிகம் கவர்ந்திருக்கலாம். (கதவைத் திற காற்று வரட்டுமின் எழுத்தாக்கம் வலம்புரி ஜானால் செய்யப்பட்டது என்ற பதிவர் ஒருவர் குறிப்பிட்ட ஞாபகம், பெயர் மறந்து விட்டது). ஆனால் சாரு ஏற்கனவே பாபாவிடம் ஏற்பட்ட கசப்பான அனுபவத்தையும் தாண்டி நேரடியாக நித்தியானந்தரின் பிரசாரகராகவே மாறினார்.

உண்மையில் சாரு இந்தக் காலப் பகுதிகளில் எழுதிய அனேக பத்திகளும் கட்டுரைகளும் வெறும் பித்தலாட்டம் மட்டுமே. நித்தியானந்தர் புற்று நோயைக் கூடு விட்டு கூடு பாய்ந்து குணப்படுத்தினார் என்பது தொடங்கி தனது புத்தகங்களின் விற்பனை நித்தியானந்தரின் சீடராகவோ / பக்தராகவோ மாறிய பின்னர் எவ்வாறு கூடியது என்பது வரை அவர் உளறியதை நினைத்தால் அவரின் எந்த ஒரு தீவிரமான வாசகனுக்கும் கூட வேடிக்கையாகத்தான் இருக்கும். ஆனால் இப்போது நித்தியானந்தரின் வீடியோ சர்சைகளின் பின்னர் திடீரென்று பல்டி அடித்து நித்தியானந்தர் பற்றி தான் முன்னரே அறிந்து தான் மெல்ல மெல்ல அவரை விட்டு விலகியதாகவும், அவர் தனக்கு காய்ச்சல் வந்திருந்தும் கூட தன் மனைவி அவந்திகாவை ஆசிரமத்தை விட்டு விலகாமல் “அய்யாவுக்கு சுகமாகி விடும்” என்று கூறினார் நித்தியானந்தர் என்றும் இப்போதும் கூறும் சாரு, முன்னர் உலகில் உள்ள எல்லாப் பிரச்சனைகளுக்கும் சர்வர்ரோக நிவாரணி போன்று நித்தியானந்தரை முன் மொழிந்ததை இட்டு இது வரை எந்த வருத்தத்தையும் வெளியிடவில்லை. இப்போது, தான் ரிப்போர்ட்டரில் நித்தி பற்றி எழுதவிருப்பதாக அறிவிப்பு விடுகிறார். ஏதோ நித்தியின் அருளால் சாருவுக்கும் குமுதத்துக்கும் இடையில் இருந்த முறுகல் சரியாகிவிட்டது போல தோன்றுகின்றது. (சில வேளை அதற்காகக்த்தான் நித்தி இப்படி வீடியோ வரை போனாரோ தெரியாது).

நித்தியானந்தர் பற்றி முன்னர் ஒரு ஒரு வாசகர் தனக்கு மெயில் அனுப்பியதாகவும், அதை ஒரு மகான் மீது செய்யப்படும்அவதூறு என்றெண்ணி அழித்து விட்டதாகவும் இப்போது கூறி, அந்த வாசகரை அதே மெயில்களை மறுபடி அனுப்பச் சொல்லுகிறார். தனது வாசகர்களுக்கு நித்தியானந்தரை முன் மொழியும் முன்னர் ஒருமுறையேனும் இது பற்றி யோசித்துப் பார்த்திருக்கலாம் தானே?. தான் வள்ளலாருடன் பழகினால் வள்ளலார் கூட கத்தியெடுத்து தன்னைக் குத்த வந்து விடுவார் என்று சுய இரக்கம் தோன்ற பேசிகின்ற சாரு, தான் அப்படிக் கொண்டாடி மற்றவர்களுக்கு பிரேரிப்பவர்களை தானே ஒரு குறுகிய காலத்தின் பின்னர் திட்டித் தீர்ப்பதில் இருந்தாவது மனிதர்கள் பற்றி தான் எடுக்கும் தீர்மானங்கள் எவ்வளவு தூரம் நிலை இல்லாதன என்று ஒரு முறை ஏனும் நினைத்துப் பார்க்கக் கூடாதா?. முன்னர் தன் வாரிசு என்று இவரே சொன்ன வா. மு. கோமு முதல், கனிமொழி, நித்தியானந்தர், பாபா, நாகார்ஜூன் என்ற மிக நீண்ட வரிசையில் இருக்கிறது இவரே கொண்டாடி விட்டுப் பின்னர் இவரே திட்டித் தீர்த்த பட்டியல்.

முன்பு சாரு காளான் கோப்பி பற்றி தொடர்ச்சியாக எழுதித் தள்ளிக்கொண்டிருந்தார். அது பற்றி எனது தம்பி ஒரு முறை அப்பாவிடம் “காளான் கோப்பி பற்றி முன்னெடுப்பவர்களுக்கு (promote பண்ணுபவர்களுக்கு) காளான் கோப்பி விற்பவர்களால் பணம் வழங்கப்படும், அதனால்தான் சாரு இப்படி எழுதுகிறார் என்று சொன்னபோது எந்த அடிப்படையில் இவன் இப்படி சொல்கிறான் என்றே தோன்றியது. ஆனால் அது போன்ற சந்தேகங்கள் உறுதிப்பட சாருவின் செயல்களே காரணமாகிவிடுகின்றன. சாருதான் இப்படி என்றால் சாருவாலேயே புகழபட்ட பின்னவீனத்துவ விமர்சகர் (????!!!!) ஒருவர் “சாருவுக்கு முன்னர் நித்தியானந்தரைப் பிடிக்கும், எனக்கு இப்பவும் சாருவைப் பிடிக்கும்” என்று பதிவிடுகிறார். மேலும், தான் தன் நண்பர்களிடம் நித்தியானந்தர் எதிலாவது மாட்டும்போது சாரு பல்டி அடிப்பார் என்று முன்னரே கூறியதை இன்னொரு நண்பரின் கடிதம் மூலம் உறுதிப்படுத்துகிறார். அனேகமாக இது போன்ற தகுதிகளை முன்வைத்து இவரை சாரு தன் அடுத்த வாரிசு என்று விரைவில் அறிவிக்கலாம். (சாரு தன் வாரிசு என்றோ, அல்லது சிறப்பாகவோ ஒருவரைப் பற்றி எழுதினால் எழுதப் பட்டவருக்கு என்ன நடக்கும் என்பது எல்லாரும் அறிந்ததே!).

நித்தியானந்தர் விவகாரத்தில் சாரு நேர்மையாக தன் தவறுகளை ஒப்புக்கொண்டிருக்கலாம். அதை விட்டு ஆங்கிலத்தில் இது பற்றி முதலிலேயே கதை எழுதினேன் அது இதென்று இவர் செய்யும் அழிச்சாட்டியத்தைத் தாங்கவே முடியவில்லை.

சாருதான் இப்படி என்றால் ஜெயமோகன் செய்யும் அட்டகாசம் இன்னொரு பக்கத்தில் போகிறது. நித்தியானந்தர் பற்றி தான் முன்பே அறிந்ததாயும் நித்தியானந்தரிடம் பணம் வாங்கியே சில எழுத்தாளர்கள் (சாரு??) நித்தியானந்தர் பற்றி எழுதியதாயும் கூறுகிறார் ஜெமோ. இது பற்றி எழுதாததில் எனக்கு எந்த வியப்பும் இல்லை, அவாள் கட்டிக் காக்க விரும்பும் இந்து ஞான மரபிற்கு இது போன்ற விடயங்களை எழுதுவது கூட ஊறாக அமையலாம். நித்தியானதர் விவகாரத்தின் பின்னர் “ஜாக்ரதை” என்று அவர் எழுதிய ஒரு கட்டுரையே காணும் ஜெமோ எடுக்கின்ற நிலைப்பாட்டைச் சொல்ல. போதாதென்று ஆன்மீகம், போலி ஆன்மீகம் என்ற தொடர் கட்டுரை வேறு

எழுத்தாளர்கள் தான் இப்படி என்றால் ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்று தம்மைத் தாமே கூறிக் கொள்ளும் ஊடகத்துறை செய்யும் பித்தலாட்டம் அடுத்த பக்கம். நக்கீரன் தன் அட்டைப் படத்திலேயே இந்தக் காட்சிகளைப் போட்டு வியாபாரம் தேடுகின்றது. முன்னர் கடந்த மே மாதம் கூட பிரபாகரனும் அன்ரன் பாலசிங்கமும் இருந்த ஒரு படத்தை எடிட் பண்ணி பிரபாகரன் செத்துவிட்டதாக தொலைக்காட்சியில் காட்டப்படுவதை பிரபாகரனே பார்த்துக்கொண்டிருப்பது போல ஒரு படத்தை வெளியிட்டது நக்கீரன். இது போலவே இந்த முறையும். மேலும் இந்த முறை ஒரு படி மேலே போய் தம் இணையத் தளத்தில் இந்த வீடியோவை ட்ரெய்லராய் வெளியிட்டு, பின்னர் முழு வீடியோவையும் பார்க்க சந்தாதாரர் ஆகவேண்டும் என்றும் சொல்லி விற்றுத் தள்ளியது நக்கீரன். சொல்லப் போனால் நக்கீரன் செய்தது “நீலப்பட விற்பனை” என்கிற பிரிவில் நடவடிக்கை எடுக்கவேண்டிய குற்றம் அதையேதான் சன்னும் செய்தது. அப்போ இந்த ஊடகங்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்?. அது தான் சொல்வார்களே குருக்கள் — விட்டால் குற்றம் இல்லை என்று, அதான் ஞாபகம் வருகின்றது. இவ்வளவு காலமும் நித்தியை வைத்து / அல்லது நித்தி பெயரால் கட்டுரை போட்டு (கதவைத் திற காற்று வரட்டும் எழுதிக் கொடுத்தது வலம்புரி ஜான் என்று ஒரு பதிவர் குறிப்பிட்டிருந்தார், சாருவுக்கும் நித்திக்கும் அடுத்த ஒற்றுமை) வியாபாரம் செய்த குமுதம் அது பற்றி எந்த சொரணையும் இல்லாமல் தனது தளத்திலேயே நித்தியின் வீடியோ கிளிப்பிங்கினைப் போட்டு வியாபாரம் செய்கின்றது. நிற்காது நித்தியின் சக “ப்ராண்ட் அம்பாசடரான” சாருவுடன் சேர்ந்து ரிப்போட்டரில் நித்தியின் லீலைகள் பற்றி சாரு எழுதும் தொடர் என்று அறிவித்து அடுத்த சரவெடியைத் தொடக்கிவைத்துள்ளது. இதற்குப் போட்டியாக ஏதேனும் விகடனின் எழுதவேண்டும் என்பதற்காக விகடன் ஜக்கி வாசுதேவ் பற்றி ஏதாவது ஒரு விடயத்தைப் புலனாய்ந்து அதை அம்பலப்படுத்தி சுபாவைக் கொண்டே ஜூனியர் விகடனில் ஒரு தொடரை தொடங்கினால் கூட தொடங்கலாம்…..

அந்த மாதிரியான காலத்தில் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்

(இந்தக் கடைசி வசனம் எழுதியவர் மனுஷ்யபுத்திரன், அண்மையில் அவ்ர் ஏற்படுத்திய அதிர்ச்சி பற்றி விரைவில் எழுதுவேன், என்ன செய்வது இந்த மாதிரியான காலத்தில்தானே வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்று நீங்கள் ஏற்கனவே சொல்லி விட்டீர்களே)

24 thoughts on “சாரு நிவேதிதா, ஜெயமோகன் மற்றும் ஊடகங்கள் இணைந்து வழங்கும் “நித்திய ஆனந்தம்”

Add yours

 1. //ஜக்கி வாசுதேவ் பற்றி ஏதாவது ஒரு விடயத்தைப் புலனாய்ந்து அதை அம்பலப்படுத்தி சுபாவைக் கொண்டே ஜூனியர் விகடனில் ஒரு தொடரை தொடங்கினால் கூட தொடங்கலாம்…//சூப்பர் பஞ்ச் !

  Like

 2. நன்றிகள் கோவி. கண்ணன், அண்மைக்காலமாக இந்த வியாபாரிகள் நடந்து கொள்ளும் முறையைப் பார்க்கின்றபோது இதுவும் நடக்கலாம் என்றே தோன்றுகின்றது

  Like

 3. நன்றாக எழுதி உள்ளீர்கள்.சில ஆண்டுகள் முன்பு வரை தமிழ்ப் பத்திரிக்கைகள் மீது நல்ல மதிப்பு இருந்தன, அவையும் தமது கடமைகளை சரி வர செய்து வந்தன.இப்போது பத்திரிக்கை துறையிலும் நேர்மை , நம்பகத் தன்மை இல்லை.இதை எழுதும் இந்த நிமிடத்தில் கூட நக்கீரன் இணையத்தில் விளம்பரம்- நித்தியின் எண்ணெய் குளியல் பார்க்க நூறு ரூபாய், உச்சி கால பூஜை பார்க்க இருநூறு ரூபாய்.நல்ல வேளை, பிரேமானந்தா, சதுர்வேதி காலங்களில் இணையமும், யூடுபும் இல்லை.ஐம்பது ரூபாய் லஞ்சம் வாங்கிய நிகழ்வுகளை எல்லாம் பெரிதாக எழுதும் விகடனின் கழுகார் அமைதி காக்கிறார் நித்தி விசயத்தில். விகடன் பதிப்பகத்தில் இருக்கும் நித்தியின் புத்தகங்கள் குறித்த கவலையோ.குமுதமும் நக்கீரனுக்கு சளைத்தது அல்ல- நித்தியின் தனி பேட்டி இலவசம்,, ரஞ்சிதாவின் பேட்டி பார்க்க ரூபாய் அறுபது, டவுன் லோட் செய்ய ரூபாய் நூறு, ரஞ்சிதா நித்தி இணைந்த பேட்டி பார்க்க ரூபாய் இருநூறு.

  Like

 4. சிறுவயதில் யாராவது அளாப்பினால் ஒரு கோபம் வருமெ அது போல ஒரு உணர்வு தான் சாரு தன் கூத்தை காட்டியபோது விளங்க முடிந்தது.. சற்றெனும் கேவலமில்லாமல் அவன் அப்பிடியிருந்தா நானென்ன செய்வது என்று சொல்லி நித்தியை படுதூசணத்தால் திட்டிவிட்டு வேட்டியை தட்டிக்கொண்டு எழுந்துவிட்டார்.. கடும்கோபம் வந்தது அவரையும் அவரது வெங்காய அபிமானிகளையும் பார்க்க.. சாமியாரை பிடிக்கமுதல் இப்படி எழுத்து விபச்சாரம் செய்யும் அனைவரையும் பிடித்து எண்ணெய்ச்சட்டியில் முக்கியெடுக்குவேண்டும்.. நானும் உது குறித்து எழுதியிருந்தேன்.. ஆனால் உங்களது பதிவு சுவாரசியமாயும் தகவலடங்கியதாகவும் இருக்கிறது.. நல்ல பதிவு..

  Like

 5. நன்றாக எழுதியிருக்கிறீர்கள் இலக்கிய வியாபாரிகள் பற்றி.ஆனால் ஜெமோ பற்றி இன்னும் கொஞ்சம் விசயங்கள் இருந்திருக்கலாம் என்று தோன்றுகிறது.ஏனெனில் தகதிமிதா போல் கண்டதையும் எழுதுபவரல்ல ஜெமோ என்பது என் கருத்து.நான் கூட கோமுவின் தொடர்கதை ஒன்றை என் வலைப்பூவில் வெளியிட்டேன் ‘அஞ்சரைக்குள்ள வண்டி’…சிரித்து சந்தோசப்பட, நேரம் கிடைக்கும்போது படிக்கவும்.நன்றி

  Like

 6. ஜெமோ சாமியார்களிடமிருந்து விடுபடுதல் பற்றியல்லவா சொன்னார் , அவர் நம்பும் ஞானம் பற்றிதானே எழுதினார் ?அவரை இந்த லிஸ்டில் எப்படி சேர்த்தீர்கள் ?

  Like

 7. புற்று நோயை குணப்படுத்துவதாக கூறும் இன்னும் நம்பிக்கொண்டும் இருக்கும் சாரு, நித்தி படுக்கையிலிருந்து துள்ளி எழுந்து ”மாத்திரையை” ஏன் விழுங்குகிறார் என்பதையும் விளக்க வேண்டும்.

  Like

 8. அருமை….அருமை….! நீண்ட நாட்களின் பின்னர் உங்கள் ‘நையாண்டி’த்தனமான எழுத்துக்களை ரசித்தேன். ஆனால் அத்தணையும் உண்மையும் கூட. நித்தி தவறு/சரி என்பதற்கு அப்பால் அந்த ஊடகங்களின் வியாபார நோக்கம் அருவருக்கத்தக்கது. அதையும் தாண்டி சாரு தான் அழித்து விட்ட அந்தக் கடிதங்களை மீளக் கோருகிறார். அதுவும் குமுதம் அவருக்கு ‘கோடி’யை கொட்டிக் கொடுத்திருக்கலாம். இப்படி மானங்கெட்டு கேட்கிறாரே என்று நினைக்கும் போது என்ன சொல்ல…!!

  Like

 9. சாருவின் அடுத்த மொள்ளமார்த்தனம்:-இன்றைய ஜூனியர் விகடனில் அடியேனின் பேட்டி வெளிவந்துள்ளது. அவந்திகா சாமியாரின் ஆசிரமத்தில் மாட்டிக் கொண்டிருந்த சமயத்தில் மிகுந்த பதற்றத்தில் இருந்த போது கொடுத்த பேட்டி. அதில் என்னை வுமனைசர் என்று சொல்லியிருக்கிறேன். மன்னிக்கவும். அந்த வார்த்தைக்கு என்ன அர்த்தம் என்றே எனக்குத் தெரியாது. பெண்களை நேசிப்பவன் என்றுதான் சொல்லியிருக்க வேண்டும். எழுத்தில் இருக்கும் வசதி பேச்சில் இல்லை. எழுத்தில் தவறான வார்த்தைகள் விழுந்தால் அடித்து மாற்றி விடலாம். ஆனால் பேச்சில் பேசியது பேசியதுதான். அப்படி விழுந்த வார்த்தை அது.

  Like

 10. அருமையாக விளாசியுள்ளீர்கள்..//ஜெமோ சாமியார்களிடமிருந்து விடுபடுதல் பற்றியல்லவா சொன்னார் , அவர் நம்பும் ஞானம் பற்றிதானே எழுதினார் ?அவரை இந்த லிஸ்டில் எப்படி சேர்த்தீர்கள் ? //அனானி அன்பரே, ஜெயமோகனைப் பற்றி மானுடன் எழுதியள்ள பதிவு உங்களது வினாவிற்கு பதிலளிக்கும் என நம்புகின்றேன்http://maanitan.blogspot.com/2010/03/blog-post_09.html

  Like

 11. //அனானி அன்பரே, ஜெயமோகனைப் பற்றி மானுடன் எழுதியள்ள பதிவு உங்களது வினாவிற்கு பதிலளிக்கும் என நம்புகின்றேன்//கொடும , அதெல்லாம் ஒரு விளக்கமாய்யா ? எதோ ருத்ரனை விட்டு எழுதினாலும் கொஞ்சம் ஸ்ராங்கா இருக்கும் ,இந்த மாதிரி வெட்டி பதிவுகளை தந்து ?

  Like

 12. கலக்கல்…பேசாம் நானும் சாமியாகலாம் என்றிருக்கிறேன். என்னுடைய போதனைகளை அலங்காரச்சொற்கள் சேர்த்து நீங்கள்தான் எழுதித் தரவேண்டும்…. :))

  Like

 13. அருமையான பதிவு அருண்மொழிவர்மன். தொடர்ந்து எழுதுங்கள். இப்போது இலங்கையில் கல்கியின் அட்டூழியம் நடக்கிறது. இது எப்ப அம்பலமாகுதோ தெரியாதுசிவக்குமார்

  Like

 14. " கடந்த இருபது ஆண்டுகளாக தமிழ் சிறுபத்திரிகைச் சூழலில், ஒரு தமிழ் எழுத்தாளன் தன் தரப்பினை விட்டுக் கொடுக்காமல் இவ்வளவு நீண்ட போராட்டத்தை நடத்திய சந்தர்ப்பங்கள் மிகவும் அரிது. அதிகாரத்திற்கும் மையப்படுத்தலுக்கும் எதிராக பிடிவாதத்துடன் இயங்கிய நிராகரிக்க முடியாத தரப்பு அது. கலை இலக்கிய சூழலிலும் அதற்கு வெளியேயும் பிற்போக்குவாதத்தையும், அடிப்படைவாதத்தையும் இந்தக் கட்டுரைகளில் சாரு நிவேதிதா வன்மையாகத் தாக்குகிறார். வழிபாட்டுக்கான பிம்பங்கள் கட்டி எழுப்பப்படும் இடங்களில் அபத்தங்களின் கேலிச் சித்திரங்களை வரைகிறார். மறுப்பதற்கும் விவாதிப்பதற்குமான சூழலை தொடர்ந்து உயிர்ப்பித்து வந்திருக்கும் சாருவின் இந்தக் கட்டுரைகள் கடந்த கால் நூற்றாண்டு நவீனதமிழ் இலக்கிய வரலாற்றை ஒரு குறுக்குவெட்டுத்தோற்றத்தில் பதிவுசெய்கின்றன" தாந்தேயின் சிறுத்தை என்ற நூல் குறித்த உயிர்மையின் பிரசுரக்குறிப்பு இது. கடந்த ஆண்டுகளில் வெளிவந்த அவர் எழுத்துகளையும் கடந்த இருபது நாளில் அவர் அடிக்கும் பல்டிகளையும் பார்க்கும் போது – இதில் ஏதாவது ஒன்றாவது சரியாக இருக்கிறதா என்று தெரியவில்லை. "பிடிவாதத்துடன் இயங்கிய" என்றுதான் குறிப்பிடுகிறார்கள் இயங்கும் என்றல்ல. மற்றும் மறுப்பதற்கும் விவாதிப்பதற்குமான சூழலை தொடர்ந்து உயிர்ப்பித்து தான் வருகிறார் அவர் எழுத்துகளில் அல்ல அவர் எழுத்துகள் குறித்து.

  Like

 15. அருமை! இக்கட்டுரை இவ்வளவு காலம் என் கண்ணில் படவில்லை.
  சாரு ஒரு உடலுழைப்பின்றி பாடோபமாக வாழத் தெரிந்த “காரியக் கிறுக்கன் “.
  எங்குமே சந்தர்ப்பவாதம் வெகுவாகத் தலைதூக்கி விட்டது.

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

Website Powered by WordPress.com.

Up ↑

%d bloggers like this: