உமா வரதராஜன் சுமக்க வேண்டிய சிலுவை

உமா வரதாரஜனின் “அரசனின் வருகை” சிறு கதையை தமிழில் வெளிவந்த முக்கியமான சிறுகதைகளில் ஒன்றென்று ஜெயமோகனும், எஸ். ராமகிருஷ்ணனும் குறிப்பிட்டிருந்ததை கவனித்து இருக்கிறேன். பல இடங்களில் தேடிய போதும் அது எனக்கு கிடைக்கவில்லை. பத்மனாப அய்யர் தொகுத்து தமிழர் தகவல் வெளியீடாக வந்த ஈழத்து சிறுகதைகள் தொகுப்பு ஒன்றிலும் இந்தச் சிறு கதை இடம்பெற்றிருப்பதாக அறிந்த போதும் அதையும் பெற்றுக்கொள்ள முடியவில்லை. இது போன்ற காரணங்களால் அண்மையில் காலம் செல்வம் ஒருங்கமைத்திருந்த ஈழத்து இலக்கியம் பற்றிய கலந்துரையாடலில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்

த கண்காட்சியில் காலச்சுவடு வெளியிட்ட உமா வரதராஜனின், மூன்றாம் சிலுவை நாவலை வாங்கிய உடனேயே வாசிக்கத் தொடங்கினேன். வேகமும், சுவாரஸ்யமும் நிறைந்த அவரது மொழி நடை வாசிப்பின்பத்தை தந்த அதே வேளை, நாவலில் பேசப்படும் விடயங்களும், நாவல் எழுதப்பட்ட்தன் பின்னால் இருக்கும் வன்ம்மும், எதையும் பணத்தால் எடை போடும் திமிரும், ஆணாதிக்க அலட்டலும் வெறுப்புணர்வையே மனதெங்கும் நிறைத்துச் சென்றிருக்கிறது. போதாததற்கு இது உண்மைக்கதை வேறாம். நாவலின் முதல் அத்தியாயத்தில் லண்டனில் இருந்து தொலைபேசும் அமர்தீப் என்பவன் விஜயராகவனின் ஆண்குறியை அறுத்தெறிய வேண்டும் என்று ஆவசப்படுகிறான். அவன் அதை செய்தால் நிச்சயம் நிறையப் பேர் மகிழ்ச்சியடைவார்கள் என்றே தோன்றுகிறது.
ஏற்கனவே இரண்டு தடவைகள் திருமணமாகி, அவர்கள் இருவரையும் தனித் தனி குடியமர்த்தி வாழும் மூன்று பிள்ளைகளுக்குத் தந்தையான 52 வயது விஜயராகவன், எட்டு ஆண்டுகள் தன்னுடன் பழகி, பல தடவைகள் உடலுறவும் கொண்ட 30 வயது ஜூலி, தன்னை விட்டு நீங்கி திருமணமாகி லண்டன் செல்வதை உருகி உருகி சொல்கிறார். இந்தப் பிரிவைப் பற்றி சொல்லும்போது மூன்றாம் பிறை திரைப்பட்த்தின் இறுதிக் காட்சியை வேறு உதாரணம் காட்டுகிறார். தாங்குமா இது… ஏற்கனவே பாலு மகேந்திரா இதய வியாதிக்காரர். இதை எல்லா வாசித்தால் நிச்சயம் அந்த வியாதி கூடத்தான் செய்யும்.
கதையில் அடிக்கடி நான் உன்மேல் அன்பு வைத்தேன், அன்பு வைத்தேன் என்றூ புலம்பித் தள்ளுகிறார் விஜயராகவன். நாவலில் ஜூலியும் இவரும் சந்திக்கும் காட்சிகளில் எல்லாம், அதிலும் குறிப்பாக இருவருக்கும் பிணக்கு வந்து உறவு முறிந்திருக்கிற இறுதி அத்தியாயங்கள் தவிர ஏனைய எல்லா சந்திப்புகளும், உரையாடல்களும் காமம் கலந்ததாகவோ அல்லது காமத்தை நோக்கி அழைத்துச் செல்வதாகதான் இருக்கின்றது. முழுக்க முழுக்க காமம் சார்ந்த இந்த உறவைக் காவியக் காதல் என்கிற அளவுக்கு புலம்பித் தள்ளுகிறார் கதை சொல்லி. இந்தக் கதாபாத்திரத்தின் காமவெறியை கதையில் வருகின்ற ஒரு சம்பவத்தில் இருந்து தெளிவாக அறிந்துகொள்ளலாம். ஜூலி விஜயராகவனுடனான தொடர்புகளை தவிர்த்து வருகிறாள். அவளது தாய், தமக்கை வீட்டுக் சென்றிருந்த போது ஒருநாள் விஜயராகவன் ஜூலியை தன்னுடன் அந்த நாளை கழிக்குமாறு கேட்கிறார். அவள் தான் தேவாலயம் செல்லவேண்டு என்று சொல்லி மறுக்கிறாள். அப்படி இருந்தும் விஜயராகவன் அவள் வீடு தேடி செல்கிறார். அவளும் தேவாலயம் செல்லவில்லை. ஜூலி தேனீர் தயாரிக்க சமையலறை செல்லும்போது அவளின் பின்னால் சென்று கட்டி அணைக்கிறார். அவள், வேணாம், எனக்கு பீரியட் என்கிறாள். அதன் பிறகு நடந்த்தை அவரே சொல்கிறார்.
நாகரிகமும், விவஸ்தையுமற்று என்னுடைய கைகள் அவள் இறுக்கி வைத்திருந்த தொடைகளை விலக்கின.
பொய்… பொய் சொல்கிறாய்…

அவளைத் தூக்கிக்கொண்டு போய் கட்டிலில் கிடத்தினேன்” (பக்கம் 93)

இவர் சொல்கிற அளவுக்கு அன்பு வைத்திருந்த பெண் திடீரென்று விலகத் தொடங்கினால் பொதுவாக என்ன செய்வார்கள். அவளிடம் மனம் விட்டுப் பேசி என்ன பிரச்சனை என்று அறியத்தானே முயல்வர். மேற்சொன்ன சந்தர்ப்பத்திலும் தொடக்கத்தில் அவர் ஜூலியுடன் கதைக்க முயல்கிறார், ஆனால் ஜூலி உரையாடலுக்கான எந்த ஒரு தயார் நிலையிலும் இருக்கவில்லை. அப்படி இருக்கின்றபோது யாராவது இப்படி பலவந்தமாக உறவு கொள்வார்களா?. ஜூலியின் மீதான இவரது எல்லா விழைவுகளுமே பாலியல் நோக்கில், காம்ம் தீர்க்கும் தேவையுடன் மட்டுமே இருக்கின்றது. தவிர கதையின் போக்கில் தனக்கும் ஜூலிக்குமான் வயது இடைவெளி தம் காதலைக் குறைத்து விடுமோ என்கிற தன் கவலையை நிறைய இடங்களில் வெளிப்படுத்துகிற கதை சொல்லி, அந்த சந்தர்ப்பங்களில் எல்லாம் அவளுடனான ஒவ்வொரு புணர்ச்சியையும் அவள் மனத்தில் கல்வெட்டுகளாக அமைத்துவிடவேண்டும் என்பதில் குறியாக இருக்கிறார்.
“அவனுக்கும் அவளுக்கும் 22 வருடங்கள் இடைவெளி இருந்தது. தன்னை அவள் குறைத்து மதிப்பிட்த் தன் வயது ஒரு காரணமாகிவிடக்கூடாது என்பதில் அவன் கவனமாக இருந்தான். அவளைப் பொறுத்தவரையில் அவளில் கரைபவனாகவும், அவளை ஆழ்பவனாகவும், அவள் முன் திடகாத்திரமானவனாகவும், உச்ச இனபத்துக்கு அவளை அழைத்துச் செல்பவனாகவும், அவளுடனான ஒவ்வொரு புணார்ச்சியையும் அவள் மனத்தில் கல்வெட்டுகளாக அமைத்து விடுபவனாகவும் இருக்க விரும்பினான்” பக்கம் 34-35.

இந்த அளவுக்கு காமத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு ஒரு உறவை தேடுபவர், அந்த உறவு பிரியும்போது புலம்புவது ஆத்திரமூட்ட்த்தான் செய்கின்றது. ஒரு பெண்ணை சக மனுஷியாக, வாழ்க்கைப் பயணத்தில் வரும் சக பயணியாக, நம்மைப் போலவே எல்லா உணர்வுகளும் கொண்டவளாகப் பார்க்காமல் காமம் தீர்க்கும் ஒரே நோக்குடனேயே பார்க்கும் ஒருவரை மனவியல் ரீதியாக தீவிரமாக ஆராயவேண்டியும் உள்ளது. இது தவிர்த்தும் இந்தக் கதாபாத்திரத்துக்கு தன் வயது காரணமாகவோ அல்லது வேறு காரணங்களாலோ தன் பாலியல் வல்லமை குறித்த நிறைய தாழ்வு மனப்பான்மைகள் இருக்கின்றன. அதுதான் கதையில் தன் ஆண்குறி அளவு குறித்த புலம்பல்களாகவும் (”அவள் கொல்லன் உலைக்களத்து நெருப்பாகத் தணல் விட்டுக் கொண்டிருந்தாள். மரக்கிளையொன்றைக் கைப்பற்றிய கிறக்கத்துடன் “எவ்வளவு பெரியது” என்றாள். பெரியதென்றால் உனக்கு வசதியாகப் பென்சிலைப்போலச்சீவிக்கொள் என்றான் அவன்” – பக்கம் 33) உடலுறவின் பின்னர் தான் ஜெயித்தது போன்ற மமதையுமாக வெளிப்படுகின்றது.
தவிர, கதையின் ஆரம்பத்தில் அவளை ஏற்கனவே ஜெயச்சந்திரன் என்ற ஒருவர் திருமணம் செய்யவிரும்பி ஜூலியிடம் விஜயராகவனை தூது அனுப்புகிறார். ஜூலியும் திருமணத்துக்கு சம்மதித்து விடுகிறாள். அப்படி இருந்தும் விஜயராகவன் ஜெயச்சந்திரனிடம் ஜூலிக்க்கு இந்த திருமணத்தில் சம்மதமில்லை என்று கூறிவிடுகிறார். மொத்தத்தில் அவளுக்கு அமைய இருந்த ஒரு நல்ல வாழ்வைக் கூட தன் சுயநலத்தால் அல்லது காம மிகுதியால் குலைத்தவராகவே விஜயராகவன் தெரிகிறார். கதை சொல்லப்படும் விதத்தில் இந்த இடத்தில் சிறு குழப்பம் வருகின்றது. ஜூலியின் திருமணத்துக்கான வாய்ப்பை விஜயராகவன் குழப்பிய பின்னரும் கூட, ஜூலிக்கு ஜெயச்சந்திரனுடன் கதைக்க சந்தர்ப்பம் கிடைக்கின்றது. அப்படி இருந்தும் அவள் ஏனோ விஜயராகவன் கூறியது பொய் என்று கூற முற்படவில்லை. அதில் இருந்து சிலவேளை திருமணத்துக்கு அப்பாற்பட்டும் விஜயராகவனுடன் ஒரு தொடர்பினை ஏற்படுத்திக் கொள்ள ஜூலி விருப்பமாகவே இருந்தாள் என்று கூறிக்கொள்ளமுடியும். மேலும், “உன்னை எப்போது எனக்கு முழுதாகத் தரப்போகிறாய்” என்று விஜயராகவன் கேட்கும்போது ஜூலி ”நான் எப்போது இல்லை என்று கூறினேன்” என்று கூறுகிறாளே தவிர, உறவை ஒரு போதும் மறுக்கவில்லை. எனவே, ஜூலி ஒரு அப்பாவி, அவளை விஜயராகவன் ஏ

மாற்றினார் என்று கூறுவதும் ஏற்க முடியாதது. ஆனாலும் சகிக்கவே முடியாத அளவுக்கு ஒற்றைப் படையாகவே எழுதப்பட்டிருக்கும் இந்த நாவலில் ஜூலி தரப்பினாலான எந்த விளக்கங்களும் தரப்படவும் இல்லை, அவளுக்கு சார்பான எந்த ஒரு விடயமும் சொல்லப்படவும் இல்லை. நாவலில், சொல்லபட்ட விடயங்களை வைத்தும், வெளிப்படையாக தெரிவதில் இருந்தும், துளி கூட காதலே இல்லாத காமத்தால் நிறைக்கப்பட்ட திருமணத்துக்கு அப்பாற்பட்ட, ஒரு உறவுக்கு ஜூலியும் விஜயராகவனும் த்த்தம் தேவைகளின் நிமித்தம் இணங்கி இருந்தனர் என்றும், ஒரு நிலையான வாழ்வை வேண்டியோ அல்லது திருமண பந்தம் மேல் இருக்கின்ற ஆர்வத்தாலோ (ஜுலியின் தமக்கையின் திருமணவிழாவில் ஜூலியின் தோற்றம் பற்றி கதை சொல்லி சொல்லுகிறார் ”சரிகை வேலைப்பாடுகள் கொண்ட கறுப்புப் புடவை அணிந்திருந்த ஜூலி மேலும் ஒல்லியாகத் தெரிந்தாள். எதிலும் பற்றற்றவள் போல் பேசும், தோன்றும் அவள் தன்னை அலங்கரிக்க எடுத்துக்கொண்ட அக்கறை எனக்கு வியப்பளித்தது. தன் மணக் கோலத்தையும் இவ்வேளையில் அவள் கற்பனை பண்ணிக்கொண்டாள் போலும்.”) ஜூலி விஜயராகவனை பிரிந்து சென்றபோது (ஜூலி தொடர்ச்சியாக விஜயராகவனை தன்னை திருமணம் செய்யும்படி கேட்கின்ற போதும் அவர் அதற்கு மறுத்தே வருகின்றார்) விஜயராகவன் தன் அன்பை உதாசீனம் செய்துவிட்டு அவள் தன்னை விட்டுப்போய் விட்டாள் என்று ஓயாது புலம்புகிறார். அவரது புலம்பல் முழுவதும் இருவரும் சேர்ந்து பாவம் செய்தோம், ஆனால் தான் மட்டுமே தண்டிக்கப்படுகிறேன் என்ற ஒற்றை நியாயத்தை மட்டும் வைத்துப் பலகீனமாக வாதிட்டுக் கொண்டிருக்கிறது. அவரது வாதத்தை ஏற்றுக் கதைத்தால் கூட, முதலில் தன்னைப் பயன்படுத்திவிட்டு இப்போது வேறு ஒருவனிடம் சென்று விட்டாள் என்று ஜூலியை நோக்கி புலம்புபவர் தான் கூட தன் முன்னைய இரண்டு மனைவியரிடமும் இதையேதான் செய்தார் என்பதை சற்று யோசிக்கவேண்டும்.
கனடாவில் இந்தப் புத்தகம் பற்றிய கலந்துரையாடல் நடைபெற்றபோது அதில் பேசிய ஒருவர் பெண்ணியம் பேசுபவர்களும், பெண்கள் அமைப்புகளும் இந்தப் புத்தகத்திற்காக உமா வரதராஜனை எதிர்த்துப் போராட்டம் நட்த்தவேண்டும் என்றார். அது போன்ற போராட்டங்கள் எவ்வளவு பயனுள்ளதாக இருக்குமோ தெரியாது. ஆனால் நிச்சயம் இந்த நாவல் கூறும் விடயங்கள் பற்றிய அலசல்கள் விரிவாக நடைபெறவேண்டும். தவிர இந்த நாவலை எழுத எல்லா வகையிலும் உதவியவர் என்றூ ஒரு பெண் கவிஞர் பற்றிக் குறிப்பிடப்படுகிறது. அந்தப் பெண் கவிஞருக்கு இந்த நாவல் பற்றி இருந்த அல்லது இருக்கின்ற அபிப்பிராயம் என்ன என்பதும் அறியவேண்டியதே.
-2-
நாவலின் கருவைத் தவிர்த்து குறிப்பிட்டுச் சொல்லவேண்டிய விடயம் சலிப்பின்றி, பாய்ச்சலுடன் செல்கின்ற உமா வரதராஜனின் எழுத்து நடை. எஸ்.பொ, செங்கை ஆழியான், அ. முத்துலிங்கம், பொ.கருணாகரமூர்த்தி, சுகிர்தராஜா, சாந்தன் ஷோபாசக்தி, உமாவரதராஜன் என்று அங்கதமாய் கதை சொல்லும் ஆற்றல் நிறைய ஈழத்து எழுத்தாளர்களுக்கு சரளமாகக் கைவருகின்றது. உதாரணமாய் முதலாவது அத்தியாயத்தில் கதை சொல்லிக்கும் லண்டனில் இருந்து தொலைபேசியில் பேசியவருக்கும் காரசாரமான வாக்குவாதம் நடந்து முடிந்த பின்னர் அது பற்றிக் கூறுகிறார் “மேல் மாடியில் அவருடன் நான் நிகழ்த்திய தொலைபேசி உரையாடலின் போது அதிகளவு தூஷனை வார்த்தைகளைப் பயன்படுத்தியது அவரா நானா என இன்றைக்கும் அனுமானிக்க முடியாமலுள்ளது. அந்தக் கொதிப்பான சூழ்நிலையிலும் என்னை இரு விடயங்கள் ஆச்சரியத்தில் ஆழ்த்தின. ஒன்று தூஷனை வார்த்தைகளை ஓசை நயத்துடன் பிரயோகிப்பதில் நான் பெற்றிருந்த தேர்ச்சி. மற்றது லண்டன் சென்று இத்தனை வருடங்கள் ஆகியும் அவன் தன் தாய்மொழியாம் தமிழிலுள்ள தூஷனை வார்த்தைகளை மறக்காமல் வைத்து உரிய வேளையில் பயன்படுத்தியமை.” அது போல பிறிதொரு சந்தர்ப்பத்தில் ஜூலியுடான தன் பிரிவு பற்றி விஜயராகவன் சோமசுந்தரம் என்ற மூத்த கவிஞரிடம் (இப்படிக் கூறினால் சோமசுந்தரம் மூத்த கவிஞரும் ________ கவிஞரும் என்பாராம்) கூறும்போது அவர் தானும் கன்னியாஸ்திரி ஆகிவிட்ட தன் பழைய காதலியை நினைத்து உருகி உருகி ஒரு கவிதை எழுதியதாய்க் குறிப்பிடுவார். அப்போது “அவள் அந்தக் கவிதையைப் படித்துவிடக்கூடாது என்று கடவுளை மனதிற்குள் வேண்டினேன். அவள் படித்தால் கன்னியாஸ்திரி கோலத்தையும் கைவிட்டு விட்டு கடலில் பாய்ந்துவிடக்கூடும்” என்று விஜயராகவ்ன் நினைத்துக்கொள்வார். நாவலின் அறிமுகப் பக்கங்களில் உமா வரதராஜன் சொல்வது போல நெடு துயில் கொண்டிருந்த ஒருவர் துயில் கலைந்து இத்தனை சரளமாக எழுதுவது ஆச்சரியம் தான். ஆனால் அந்த எழுத்து நிற்கும் வன்ம்மும், திமிரும் தாங்கி சுய புலம்பல் என்ற மோசடிக்குப் பயன்பட்டிருப்பது வருத்ததுக்குரியது.

5 thoughts on “உமா வரதராஜன் சுமக்க வேண்டிய சிலுவை

Add yours

 1. இவ்வளவு தூரம் காமத்துக்கு அடிமையாக இருக்கிற ஒருவரை செக்ஸ் கிளினிக்குக்கு அனுப்பவேண்டும்

  Like

 2. அருண்மொழிவர்மன், உங்கள் வலைப் பதிவுமனையை சமீபத்தில்தான் கண்டேன். சில பதிவுகளை வாசித்து விட்டேன். கருத்துச் செறிவும், அழகான மொழியும் கொண்டவை உங்கள் எழுத்துக்கள். "மூன்றாம் சிலுவை"யைக் குறித்த உங்கள் விமர்சனம் தொடர்பாக எனது சந்தேகம் என்னவென்றால் உமா வரதராஜனின் பாத்திரப் படைப்பாகிய விஜயராகவனுக்காக உமா வரதராஜன் ஏன் எதிர்க்கப்பட வேண்டும். விஜயராகவன் ஆணாதிக்கவாதி, சுயநலக்காரன், சுயபுலம்பல் புரிகிறானென்றால், உமா வரதராஜன் ஆணாதிக்கவாதி, சுயநலக்காரன், சுயபுலம்பல் புரிபவர் ஆகி விடுவாரா? விளக்கமாக சொன்னால் பயனுள்ளதாக இருக்கும்.

  Like

 3. வணக்கம் ஏவிஎஸ்,இந்த நாவலை நீங்களும் வாசித்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்.முதலில் இந்த நாவலில் இருக்கின்ற புனைவுத் தன்மை பற்றிக் கவனிப்பது மிக முக்கியமானது என்று நினைக்கிறேன். இது நாவல் / குறு நாவல் என்ற வகையில் வெளியிடப்பட்டு இருந்தாலும் இது முழுக்க முழுக்க உண்மைத் சம்பவத்தை மையமாக வைத்து எழுதப்பட்டது என்ற அளவிலேயே, விஜயராகவன் மீது சுமத்தப்படும் குற்றச் சாட்டுகளுக்கு உமா வரதராஜனும் பொறுப்பேற்கவேண்டியவர் ஆகிவிடுகிறார். அப்படி இருக்கின்ற போது எழுத்தைப் பார், எழுத்தாளனைப் பாராதே என்கிற கருத்து எடுபடாமலே போய்விடுகின்றது.அதைத் தவிர்த்து; ஒரு படைப்பாளி ஒரு படைப்பை படைக்கும்போது, அதில் அவர் எழுத்தின் வழியே சில விடயங்களை நியாயப்படுத்தும் போது அந்தப் படைப்பின் மீது எழுப்பபபடும் விமர்சனத்துக்கு படைபாளி பாத்திரவாளி ஆகிவிடுகிறார். இதில் விஜயராஜகவன் என்ற மனிதன் எப்படி இருந்தான் என்று சொல்வதைவிட, விஜயராகவன் எவற்றைச் செய்தான், எவற்றை எல்லாம் சரியென்று நினைத்தான் என்றூ சொல்வதை விட, விஜயராகவன் தரப்பை ஒற்றைப் படையாக எப்படி நியாயப்படுத்தலாம் என்கிற தொனி நாவலை வாசிக்கின்றபோது வெளிப்படையாகவே தெரிகின்றது.

  Like

 4. அருண்மொழிவர்மன்: நான் இன்னமும் வாசிக்கவில்லை. படைப்பிற்காக வாசிக்கவில்லையென்றாலும் கூட, உங்களது விமரிசனத்திற்காகவே வாசித்து விட வேண்டுமென்று தோன்றுகிறது. வாசித்தபின் வருகிறேன்.

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

Website Powered by WordPress.com.

Up ↑

%d bloggers like this: