உமா வரதராஜனின் மூன்றாம் சிலுவை

உமா வரதாரஜனின் “அரசனின் வருகை” சிறு கதையை தமிழில் வெளிவந்த முக்கியமான சிறுகதைகளில் ஒன்றென்று ஜெயமோகனும், எஸ். ராமகிருஷ்ணனும் குறிப்பிட்டிருந்ததை கவனித்து இருக்கிறேன். பல இடங்களில் தேடிய போதும் அது எனக்கு கிடைக்கவில்லை. பத்மனாப அய்யர் தொகுத்து தமிழர் தகவல் வெளியீடாக வந்த ஈழத்து சிறுகதைகள் தொகுப்பு ஒன்றிலும் இந்தச் சிறு கதை இடம்பெற்றிருப்பதாக அறிந்த போதும் அதையும் பெற்றுக்கொள்ள முடியவில்லை. இது போன்ற காரணங்களால் அண்மையில் காலம் செல்வம் ஒருங்கமைத்திருந்த ஈழத்து இலக்கியம் பற்றிய கலந்துரையாடலில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த

கண்காட்சியில் காலச்சுவடு வெளியிட்ட உமா வரதராஜனின், மூன்றாம் சிலுவை நாவலை வாங்கிய உடனேயே வாசிக்கத் தொடங்கினேன். வேகமும், சுவாரஸ்யமும் நிறைந்த அவரது மொழி நடை வாசிப்பின்பத்தை தந்த அதே வேளை, நாவலில் பேசப்படும் விடயங்களும், நாவல் எழுதப்பட்ட்தன் பின்னால் இருக்கும் வன்மமும், எதையும் பணத்தால் எடை போடும் திமிரும், ஆணாதிக்க அலட்டலும் வெறுப்புணர்வையே மனதெங்கும் நிறைத்துச் சென்றிருக்கிறது. போதாததற்கு இது உண்மைக்கதை வேறாம். நாவலின் முதல் அத்தியாயத்தில் லண்டனில் இருந்து தொலைபேசும் அமர்தீப் என்பவன் விஜயராகவனின் ஆண்குறியை அறுத்தெறிய வேண்டும் என்று ஆவசப்படுகிறான். அவன் அதை செய்தால் நிச்சயம் நிறையப் பேர் மகிழ்ச்சியடைவார்கள் என்றே தோன்றுகிறது.

ஏற்கனவே இரண்டு தடவைகள் திருமணமாகி, அவர்கள் இருவரையும் தனித் தனி குடியமர்த்தி வாழும் மூன்று பிள்ளைகளுக்குத் தந்தையான 52 வயது விஜயராகவன், எட்டு ஆண்டுகள் தன்னுடன் பழகி, பல தடவைகள் உடலுறவும் கொண்ட 30 வயது ஜூலி, தன்னை விட்டு நீங்கி திருமணமாகி லண்டன் செல்வதை உருகி உருகி சொல்கிறார். இந்தப் பிரிவைப் பற்றி சொல்லும்போது மூன்றாம் பிறை திரைப்பட்த்தின் இறுதிக் காட்சியை வேறு உதாரணம் காட்டுகிறார். தாங்குமா இது… ஏற்கனவே பாலு மகேந்திரா இதய வியாதிக்காரர். இதை எல்லா வாசித்தால் நிச்சயம் அந்த வியாதி கூடத்தான் செய்யும்.

கதையில் அடிக்கடி நான் உன்மேல் அன்பு வைத்தேன், அன்பு வைத்தேன் என்றூ புலம்பித் தள்ளுகிறார் விஜயராகவன். நாவலில் ஜூலியும் இவரும் சந்திக்கும் காட்சிகளில் எல்லாம், அதிலும் குறிப்பாக இருவருக்கும் பிணக்கு வந்து உறவு முறிந்திருக்கிற இறுதி அத்தியாயங்கள் தவிர ஏனைய எல்லா சந்திப்புகளும், உரையாடல்களும் காமம் கலந்ததாகவோ அல்லது காமத்தை நோக்கி அழைத்துச் செல்வதாகதான் இருக்கின்றது. முழுக்க முழுக்க காமம் சார்ந்த இந்த உறவைக் காவியக் காதல் என்கிற அளவுக்கு புலம்பித் தள்ளுகிறார் கதை சொல்லி. இந்தக் கதாபாத்திரத்தின் காமவெறியை கதையில் வருகின்ற ஒரு சம்பவத்தில் இருந்து தெளிவாக அறிந்துகொள்ளலாம். ஜூலி விஜயராகவனுடனான தொடர்புகளை தவிர்த்து வருகிறாள். அவளது தாய், தமக்கை வீட்டுக் சென்றிருந்த போது ஒருநாள் விஜயராகவன் ஜூலியை தன்னுடன் அந்த நாளை கழிக்குமாறு கேட்கிறார். அவள் தான் தேவாலயம் செல்லவேண்டு என்று சொல்லி மறுக்கிறாள். அப்படி இருந்தும் விஜயராகவன் அவள் வீடு தேடி செல்கிறார். அவளும் தேவாலயம் செல்லவில்லை. ஜூலி தேனீர் தயாரிக்க சமையலறை செல்லும்போது அவளின் பின்னால் சென்று கட்டி அணைக்கிறார். அவள், வேணாம், எனக்கு பீரியட் என்கிறாள். அதன் பிறகு நடந்த்தை அவரே சொல்கிறார்.

“நாகரிகமும், விவஸ்தையுமற்று என்னுடைய கைகள் அவள் இறுக்கி வைத்திருந்த தொடைகளை விலக்கின.

பொய்… பொய் சொல்கிறாய்…

அவளைத் தூக்கிக்கொண்டு போய் கட்டிலில் கிடத்தினேன்” (பக்கம் 93)

இவர் சொல்கிற அளவுக்கு அன்பு வைத்திருந்த பெண் திடீரென்று விலகத் தொடங்கினால் பொதுவாக என்ன செய்வார்கள். அவளிடம் மனம் விட்டுப் பேசி என்ன பிரச்சனை என்று அறியத்தானே முயல்வர். மேற்சொன்ன சந்தர்ப்பத்திலும் தொடக்கத்தில் அவர் ஜூலியுடன் கதைக்க முயல்கிறார், ஆனால் ஜூலி உரையாடலுக்கான எந்த ஒரு தயார் நிலையிலும் இருக்கவில்லை. அப்படி இருக்கின்றபோது யாராவது இப்படி பலவந்தமாக உறவு கொள்வார்களா?. ஜூலியின் மீதான இவரது எல்லா விழைவுகளுமே பாலியல் நோக்கில், காம்ம் தீர்க்கும் தேவையுடன் மட்டுமே இருக்கின்றது. தவிர கதையின் போக்கில் தனக்கும் ஜூலிக்குமான் வயது இடைவெளி தம் காதலைக் குறைத்து விடுமோ என்கிற தன் கவலையை நிறைய இடங்களில் வெளிப்படுத்துகிற கதை சொல்லி, அந்த சந்தர்ப்பங்களில் எல்லாம் அவளுடனான ஒவ்வொரு புணர்ச்சியையும் அவள் மனத்தில் கல்வெட்டுகளாக அமைத்துவிடவேண்டும் என்பதில் குறியாக இருக்கிறார்.

அவனுக்கும் அவளுக்கும் 22 வருடங்கள் இடைவெளி இருந்தது. தன்னை அவள் குறைத்து மதிப்பிட்த் தன் வயது ஒரு காரணமாகிவிடக்கூடாது என்பதில் அவன் கவனமாக இருந்தான். அவளைப் பொறுத்தவரையில் அவளில் கரைபவனாகவும், அவளை ஆழ்பவனாகவும், அவள் முன் திடகாத்திரமானவனாகவும், உச்ச இனபத்துக்கு அவளை அழைத்துச் செல்பவனாகவும், அவளுடனான ஒவ்வொரு புணார்ச்சியையும் அவள் மனத்தில் கல்வெட்டுகளாக அமைத்து விடுபவனாகவும் இருக்க விரும்பினான்” பக்கம் 34-35.

இந்த அளவுக்கு காமத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு ஒரு உறவை தேடுபவர், அந்த உறவு பிரியும்போது புலம்புவது ஆத்திரமூட்ட்த்தான் செய்கின்றது. ஒரு பெண்ணை சக மனுஷியாக, வாழ்க்கைப் பயணத்தில் வரும் சக பயணியாக, நம்மைப் போலவே எல்லா உணர்வுகளும் கொண்டவளாகப் பார்க்காமல் காமம் தீர்க்கும் ஒரே நோக்குடனேயே பார்க்கும் ஒருவரை மனவியல் ரீதியாக தீவிரமாக ஆராயவேண்டியும் உள்ளது. இது தவிர்த்தும் இந்தக் கதாபாத்திரத்துக்கு தன் வயது காரணமாகவோ அல்லது வேறு காரணங்களாலோ தன் பாலியல் வல்லமை குறித்த நிறைய தாழ்வு மனப்பான்மைகள் இருக்கின்றன. அதுதான் கதையில் தன் ஆண்குறி அளவு குறித்த புலம்பல்களாக

”அவள் கொல்லன் உலைக்களத்து நெருப்பாகத் தணல் விட்டுக் கொண்டிருந்தாள். மரக்கிளையொன்றைக் கைப்பற்றிய கிறக்கத்துடன் “எவ்வளவு பெரியது” என்றாள். பெரியதென்றால் உனக்கு வசதியாகப் பென்சிலைப்போலச்சீவிக்கொள் என்றான் அவன்” –  பக்கம் 33

என்று உடலுறவின் பின்னர் தான் ஜெயித்தது போன்ற மமதையுமாக வெளிப்படுகின்றது.

தவிர, கதையின் ஆரம்பத்தில் அவளை ஏற்கனவே ஜெயச்சந்திரன் என்ற ஒருவர் திருமணம் செய்யவிரும்பி ஜூலியிடம் விஜயராகவனை தூது அனுப்புகிறார். ஜூலியும் திருமணத்துக்கு சம்மதித்து விடுகிறாள். அப்படி இருந்தும் விஜயராகவன் ஜெயச்சந்திரனிடம் ஜூலிக்க்கு இந்த திருமணத்தில் சம்மதமில்லை என்று கூறிவிடுகிறார். மொத்தத்தில் அவளுக்கு அமைய இருந்த ஒரு நல்ல வாழ்வைக் கூட தன் சுயநலத்தால் அல்லது காம மிகுதியால் குலைத்தவராகவே விஜயராகவன் தெரிகிறார். கதை சொல்லப்படும் விதத்தில் இந்த இடத்தில் சிறு குழப்பம் வருகின்றது. ஜூலியின் திருமணத்துக்கான வாய்ப்பை விஜயராகவன் குழப்பிய பின்னரும் கூட, ஜூலிக்கு ஜெயச்சந்திரனுடன் கதைக்க சந்தர்ப்பம் கிடைக்கின்றது. அப்படி இருந்தும் அவள் ஏனோ விஜயராகவன் கூறியது பொய் என்று கூற முற்படவில்லை. அதில் இருந்து சிலவேளை திருமணத்துக்கு அப்பாற்பட்டும் விஜயராகவனுடன் ஒரு தொடர்பினை ஏற்படுத்திக் கொள்ள ஜூலி விருப்பமாகவே இருந்தாள் என்று கூறிக்கொள்ளமுடியும். மேலும், “உன்னை எப்போது எனக்கு முழுதாகத் தரப்போகிறாய்” என்று விஜயராகவன் கேட்கும்போது ஜூலி ”நான் எப்போது இல்லை என்று கூறினேன்” என்று கூறுகிறாளே தவிர, உறவை ஒரு போதும் மறுக்கவில்லை. எனவே, ஜூலி ஒரு அப்பாவி, அவளை விஜயராகவனே மாற்றினார் என்று கூறுவதும் ஏற்க முடியாதது. ஆனாலும் சகிக்கவே முடியாத அளவுக்கு ஒற்றைப் படையாகவே எழுதப்பட்டிருக்கும் இந்த நாவலில் ஜூலி தரப்பினாலான எந்த விளக்கங்களும் தரப்படவும் இல்லை, அவளுக்கு சார்பான எந்த ஒரு விடயமும் சொல்லப்படவும் இல்லை. நாவலில், சொல்லபட்ட விடயங்களை வைத்தும், வெளிப்படையாக தெரிவதில் இருந்தும், துளி கூட காதலே இல்லாத காமத்தால் நிறைக்கப்பட்ட திருமணத்துக்கு அப்பாற்பட்ட, ஒரு உறவுக்கு ஜூலியும் விஜயராகவனும் த்த்தம் தேவைகளின் நிமித்தம் இணங்கி இருந்தனர் என்றும், ஒரு நிலையான வாழ்வை வேண்டியோ அல்லது திருமண பந்தம் மேல் இருக்கின்ற ஆர்வத்தாலோ (ஜுலியின் தமக்கையின் திருமணவிழாவில் ஜூலியின் தோற்றம் பற்றி கதை சொல்லி சொல்லுகிறார்

”சரிகை வேலைப்பாடுகள் கொண்ட கறுப்புப் புடவை அணிந்திருந்த ஜூலி மேலும் ஒல்லியாகத் தெரிந்தாள். எதிலும் பற்றற்றவள் போல் பேசும், தோன்றும் அவள் தன்னை அலங்கரிக்க எடுத்துக்கொண்ட அக்கறை எனக்கு வியப்பளித்தது. தன் மணக் கோலத்தையும் இவ்வேளையில் அவள் கற்பனை பண்ணிக்கொண்டாள் போலும்.”)

ஜூலி விஜயராகவனை பிரிந்து சென்றபோது (ஜூலி தொடர்ச்சியாக விஜயராகவனை தன்னை திருமணம் செய்யும்படி கேட்கின்ற போதும் அவர் அதற்கு மறுத்தே வருகின்றார்) விஜயராகவன் தன் அன்பை உதாசீனம் செய்துவிட்டு அவள் தன்னை விட்டுப்போய் விட்டாள் என்று ஓயாது புலம்புகிறார். அவரது புலம்பல் முழுவதும் இருவரும் சேர்ந்து பாவம் செய்தோம், ஆனால் தான் மட்டுமே தண்டிக்கப்படுகிறேன் என்ற ஒற்றை நியாயத்தை மட்டும் வைத்துப் பலகீனமாக வாதிட்டுக் கொண்டிருக்கிறது. அவரது வாதத்தை ஏற்றுக் கதைத்தால் கூட, முதலில் தன்னைப் பயன்படுத்திவிட்டு இப்போது வேறு ஒருவனிடம் சென்று விட்டாள் என்று ஜூலியை நோக்கி புலம்புபவர் தான் கூட தன் முன்னைய இரண்டு மனைவியரிடமும் இதையேதான் செய்தார் என்பதை சற்று யோசிக்கவேண்டும்.

கனடாவில் இந்தப் புத்தகம் பற்றிய கலந்துரையாடல் நடைபெற்றபோது அதில் பேசிய ஒருவர் பெண்ணியம் பேசுபவர்களும், பெண்கள் அமைப்புகளும் இந்தப் புத்தகத்திற்காக உமா வரதராஜனை எதிர்த்துப் போராட்டம் நட்த்தவேண்டும் என்றார். அது போன்ற போராட்டங்கள் எவ்வளவு பயனுள்ளதாக இருக்குமோ தெரியாது. ஆனால் நிச்சயம் இந்த நாவல் கூறும் விடயங்கள் பற்றிய அலசல்கள் விரிவாக நடைபெறவேண்டும். தவிர இந்த நாவலை எழுத எல்லா வகையிலும் உதவியவர் என்றூ ஒரு பெண் கவிஞர் பற்றிக் குறிப்பிடப்படுகிறது. அந்தப் பெண் கவிஞருக்கு இந்த நாவல் பற்றி இருந்த அல்லது இருக்கின்ற அபிப்பிராயம் என்ன என்பதும் அறியவேண்டியதே.

-2-

நாவலின் கருவைத் தவிர்த்து குறிப்பிட்டுச் சொல்லவேண்டிய விடயம் சலிப்பின்றி, பாய்ச்சலுடன் செல்கின்ற உமா வரதராஜனின் எழுத்து நடை. எஸ்.பொ, செங்கை ஆழியான், அ. முத்துலிங்கம், பொ.கருணாகரமூர்த்தி, சுகிர்தராஜா, சாந்தன் ஷோபாசக்தி, உமாவரதராஜன் என்று அங்கதமாய் கதை சொல்லும் ஆற்றல் நிறைய ஈழத்து எழுத்தாளர்களுக்கு சரளமாகக் கைவருகின்றது. உதாரணமாய் முதலாவது அத்தியாயத்தில் கதை சொல்லிக்கும் லண்டனில் இருந்து தொலைபேசியில் பேசியவருக்கும் காரசாரமான வாக்குவாதம் நடந்து முடிந்த பின்னர் அது பற்றிக் கூறுகிறார்

“மேல் மாடியில் அவருடன் நான் நிகழ்த்திய தொலைபேசி உரையாடலின் போது அதிகளவு தூஷனை வார்த்தைகளைப் பயன்படுத்தியது அவரா நானா என இன்றைக்கும் அனுமானிக்க முடியாமலுள்ளது. அந்தக் கொதிப்பான சூழ்நிலையிலும் என்னை இரு விடயங்கள் ஆச்சரியத்தில் ஆழ்த்தின. ஒன்று தூஷனை வார்த்தைகளை ஓசை நயத்துடன் பிரயோகிப்பதில் நான் பெற்றிருந்த தேர்ச்சி. மற்றது லண்டன் சென்று இத்தனை வருடங்கள் ஆகியும் அவன் தன் தாய்மொழியாம் தமிழிலுள்ள தூஷனை வார்த்தைகளை மறக்காமல் வைத்து உரிய வேளையில் பயன்படுத்தியமை.”

அது போல பிறிதொரு சந்தர்ப்பத்தில் ஜூலியுடான தன் பிரிவு பற்றி விஜயராகவன் சோமசுந்தரம் என்ற மூத்த கவிஞரிடம் (இப்படிக் கூறினால் சோமசுந்தரம் மூத்த கவிஞரும் ________ கவிஞரும் என்பாராம்) கூறும்போது அவர் தானும் கன்னியாஸ்திரி ஆகிவிட்ட தன் பழைய காதலியை நினைத்து உருகி உருகி ஒரு கவிதை எழுதியதாய்க் குறிப்பிடுவார். அப்போது

“அவள் அந்தக் கவிதையைப் படித்துவிடக்கூடாது என்று கடவுளை மனதிற்குள் வேண்டினேன். அவள் படித்தால் கன்னியாஸ்திரி கோலத்தையும் கைவிட்டு விட்டு கடலில் பாய்ந்துவிடக்கூடும்”

என்று விஜயராகவ்ன் நினைத்துக்கொள்வார். நாவலின் அறிமுகப் பக்கங்களில் உமா வரதராஜன் சொல்வது போல நெடு துயில் கொண்டிருந்த ஒருவர் துயில் கலைந்து இத்தனை சரளமாக எழுதுவது ஆச்சரியம் தான். ஆனால் அந்த எழுத்து நிற்கும் வன்ம்மும், திமிரும் தாங்கி சுய புலம்பல் என்ற மோசடிக்குப் பயன்பட்டிருப்பது வருத்ததுக்குரியது.

13 thoughts on “உமா வரதராஜனின் மூன்றாம் சிலுவை

Add yours

  1. நாவலை எந்தக் கோணத்தில் அணுக முடியுமோ அந்தக் கோணத்தில் அணுகியிருக்கிறீர்கள். இந்த நாவல் படைப்புக்கான எந்த நியாயமுமற்று வெளியாகியிருக்கிற நாவல் – ஒரு பெரிய பதிப்பகம் ஒரு அறியப்பட்ட எழுத்தாளர் என்பதற்காய் எதையும் வெளியிடக் கூடிய நிலையில் இருப்பது வருத்ததிற்குரியது. இதற்கு முன்னுரை சுகுமாரன் எழுதியிருக்கிறார் பெருந்திணை கைக்கிளை குறித்த கட்டுரைத்தன்மையான இலக்கிய தகவல்கள் அடங்கிய முன்னுரை அது. இதற்கான பின்னணியில் ஒரு அறியப்பட்ட தென்னிலங்கைக் கவிதாயினி இருக்கிறார், வெயிலைத் தனிமை என்கிறாள் அவள் என்ற குறிப்பினூடாகவும் அவர் நன்றி தெரிவித்திருக்கின்ற அடிப்படையிலும் அவரை ஊகிக்க முடிகிறது – இத்தனை பேரின் பார்வையிலும் ஒரு நாவல் சொல்கின்ற அநீதி தெரியாமல் இருப்பது தான் வியப்பிலாழ்த்துகிறது – ஒவையார் பொய்ச் சாட்சி சொன்ன வீட்டில் பேய் குடி புகும் என்று சொன்னது நினைவில் வருகிறது.இதன் கரு ஒன்றும் பேசக் கூடாத பெருங்கதையல்ல ஆனால் அதை பேசிய விதம் நியாயமற்றது. இந்த முறை ஆ.விகடனில் எப்படிக் கடந்து செல்வது என்ற எஸ் ராமகிருஷ்ணனின் சிறிதளவு வெளிச்சம் (45 ஆவது) கட்டுரையிலும் அழகாக பொருந்தாக் காதல் குறித்து அதன் நியாயத்தோடு சொல்லியிருக்கிறார் வாசித்திருப்பீர்கள் என நினைக்கிறேன். மற்றும்படி நாவலை அதன் எல்லாப் பலகீனங்களோடும் உங்கள் கட்டுரை பேசி விட்டதால் நானும் அவற்றோடு உடன்படுகிறேன். இது ஒரு நிராகரிக்கப்படவேண்டிய படைப்பு என்பதில் மாற்றுக் கருத்தில்லை. இன்னும் கொஞ்சம் தாமதித்து நல்ல படைப்பை கொடுத்திருக்கலாம் உ.வ.

    Like

  2. வணக்கம் dr. முருகாணந்தன்நன்றிகள்,இம்முறை வந்த காலம் தழில் குலசிங்கம் தன் நேர்காணலில் உங்கள் இலக்கியப் பணிகள் பற்றியும் குறிப்பிட்டுள்ளார்வாசித்தீர்களா??http://kaalammagazine.wordpress.com

    Like

  3. வணக்கம் துர்க்கா தீபன்../இதற்கு முன்னுரை சுகுமாரன் எழுதியிருக்கிறார் பெருந்திணை கைக்கிளை குறித்த கட்டுரைத்தன்மையான இலக்கிய தகவல்கள் அடங்கிய முன்னுரை அது. இதற்கான பின்னணியில் ஒரு அறியப்பட்ட தென்னிலங்கைக் கவிதாயினி இருக்கிறார், வெயிலைத் தனிமை என்கிறாள் அவள் என்ற குறிப்பினூடாகவும் அவர் நன்றி தெரிவித்திருக்கின்ற அடிப்படையிலும் அவரை ஊகிக்க முடிகிறது – இத்தனை பேரின் பார்வையிலும் ஒரு நாவல் சொல்கின்ற அநீதி தெரியாமல் இருப்பது தான் வியப்பிலாழ்த்துகிறது //முன்னுரை பிரபஞ்சன் எழுதியது,மர்றது அந்த பெண் கவிஞர் நாவல் பற்றிய அவரது அபிப்பிராயங்களை கட்டாயம் முன்வைக்கவேண்டும். நாவல் எழுது அவர் ஊக்கம் அளித்தார் என்று கூறபப்டுகிறாது. அப்படியானால் அவருக்கும் இந்த நாவல் சொல்லும் சேதியில் பங்கு இருக்கின்றது.தவிர, நீங்கள் சொன்னது போலவே அதை எழுதியவர் யார் என்பதும் இலகுவில் ஊகிக்க கூடியதே…முன்னுரையில் கைக்கிளை, பெருந்திணை பற்றி நிறைய குறிப்பிடப் படுகிறது. ஆனால் நாவல் பற்றிய கதைப்பதை இயன்றாவரை தவிர்த்திருக்கிறார் பிரபஞ்சன். அந்தக் கள்ள மௌனத்தைத் தவிர்த்து நேர்மையாக பிரதிய அணுகியிருக்கலாம்…..

    Like

  4. I have not gone thru the book; However, reading your comments, one question arises. How can Uma be responsible for a 'character' in his novel. He may have written about a 'dirty' man. (I may be wrong since I did not read the book)

    Like

  5. அருமைத்தோழா;உமாவரதராஜனின் மூன்றாஞ்சிலுவை பற்றிய உங்கள் பார்வைக்கோணம் முற்றிலும் தவறானதும் நவீனத்துவம் அற்றதுமாகும். உமா வரதராஜனுக்கு முண்டுகொடுக்கிறான் என்று நினைக்கமாட்டீர்கள்.இந்தப்படைப்பிலிருந்து முதலில் வெளியே இழுத்துப்போடப்படவேண்டியவர் உமா வரதராஜன் என்கிற படைப்பாளி. அ. ராமசாமி என்கிற மூத்த விமர்சகரே கதைசொல்லியின் அனைத்துப்பலவீனங்களையும் படைப்பாளிக்குச் சூட்டிப்பர்த்திருக்கிறார். கதைசொல்லியையும் ஒரு பாத்திரமாகப் பார்ப்பதில் உங்களுக்கு வந்திருக்கக்கூடிய தடைகள்தான் என்ன?எனது காதுகளிலும் மூன்றாவது சிலுவை ‘ஒரு உண்மைகதை’ என்கிற மாதிரியான வதந்திகள் விழவே செய்தன. நான் இவ்விஷயத்தை அவரிடம் “எனது கேள்விகள் சங்கடப்படுத்துவதாக இருந்தால் நீங்கள் பதில் எழுதவேண்டியதில்லை” என்கிற ஒரு கவசத்துடன் அவருக்கு நேரடியாகவே எழுதிக்கேட்டேன். “அவர் இது ஒருவருடைய கதையுமல்ல என்னுடைய 100% கற்பனையில் உதித்தகதை என்கிற உறுதிமொழியை சில மணிநேரங்களிலேயே தந்தார். இதுக்குமேலும் அதுபற்றிப்பேச என்ன இருக்கிறது?நாவலில் வரும் கதைசொல்லி நாவலாசிரியரின் வயதினை ஒத்திருப்பாராயின் இவரை அவருடன் பொருத்திப்பார்ப்பது அதமம். உங்கள் வார்த்தைகளில் வன்மமும், திமிரும் தாங்கியஎதையும் பணத்தால் எடை போடும் திமிரும், ஆணாதிக்க அலட்டலும் சுய புலம்பலுமுள்ள ஒரு பாத்திரத்தை அவர் கதைசொல்லியாகப் படைத்துள்ளார் என்றுதான் கொள்ளவேண்டும். என்னுடை “பால்வீதி” என்கிற நெடுங்கதைய படித்திருப்பீர்களோ தெரியாது. அதிலும் இரண்டே இரண்டு பாத்திரங்கள்தான் வருவார்கள். அதில்வரும் ஆண் அறிவுஜீவி, கலைகளின் மிகுந்த சுவைஞன். தத்துவ ஈடுபாடும் தேடலும் கொண்டவன் ஆனாலும் அவனிடம் ஒரு பெண் தனியாக அவனிடம் அகப்படும்போது அவளை அமுக்கப்பார்க்கிறான். இதை ஒரு பெண்ணிய படைப்பாளி + விமர்சகி (தற்போது கனடாவில்தான் இருக்கிறார்) ஒரு பெண்கள் சந்திப்பில் பொ.கருணாகரமூர்த்தி ஒரு ஆணாதிக்க சபலிஸ்ட்டுக்கு வக்காலத்து வாங்குகின்ற ஆணாதிக்க எழுத்தாளர் என்றாராம். எங்கேபோய் முட்டுவது ? பிரபஞ்சனுக்கு அந்தபுரிதல் இருந்தது. அவர் அவைபற்றி அலட்டிக்கொள்ளவில்லை. சுகுமார் என்ன சொல்லியிருக்கிறார் என்று என்பார்வையில் இன்னும் தட்டுப்படவில்லை. ஈழத்து நாவல் வரலாற்றில் இடம்பெற அத்தனை தகுதிகளுமுடையது ‘மூன்றாவது சிலுவை’.

    Like

  6. நன்றிகள் கருணாகரமூர்த்தி, உங்களின் நீண்ட பின்னோட்டத்துக்கு,எனது எந்த விமர்சனமோ அல்லது படைப்பைப் பற்றிய பகிர்வோ அறுதியும் இறுதியுமானது என்று நான் ஒரு போதும் கூறமாட்டேன், எனவே உங்களினதோ அல்லது வேறு எவரினதோ, என்து பார்வைக்கு முரணான விமர்சனத்தை அல்லது கருத்துக்களை இன்னொருவருக்கு அல்லது இன்னொருவரின் கருத்துக்களுக்கு முண்டு கொடுக்கிறான் என்று கூறவும் மாட்டேன்,எனது மூன்றாம் சிலுவை பற்றிய பார்வைக்கோணம் முற்றிலும் தவறானதும் நவீனத்துவம் அற்றதும் என்று கூறி உங்கள் கருத்துக்களை கூற ஆரம்பிக்கின்றீர்கள், நல்லது. ஆனால் எனது பார்வை தவறானது என்று கூறும் போதே, நீங்கள் சரியான பார்வை என்று ஒரு பார்வையை என் மீது திணிக்கின்றீர்கள் என்றுதானே அர்த்தம், அப்படி இருப்பின், ஒரு படைப்பை இப்படித்தான் அணுகவேண்டும் என்று நீங்கள் என் மீது திணிக்கின்றீர்கள் என்றுதானே அர்த்தம். இது மட்டும் நவீனத்துவமா?, உங்கள் கருத்தில் நீங்கள் சொல்கின்றீர்கள், "இந்தப்படைப்பிலிருந்து முதலில் வெளியே இழுத்துப்போடப்படவேண்டியவர் உமா வரதராஜன் என்கிற படைப்பாளி" என்று, இதன் மூலம் நீங்கள் ஆசிரியன் இறந்துவிட்டான் என்ற கருத்திற்கு வருகின்றீர்கள் என்றே கருதுகிறேன். அப்படி இருப்பின், நீங்களே சொன்னது போல உமா வரதராஜன் என்ற படைப்பாளியை வெளியே இழுத்துப் போட்டுவிட்டு இந்தப் படைப்பை அணுகுகின்றீர்கள் என்று வைத்துக் கொள்வோம், அப்படி இருப்பின், அதன் பிறகு நீங்களே சொல்கின்றீர்கள் "“எனது கேள்விகள் சங்கடப்படுத்துவதாக இருந்தால் நீங்கள் பதில் எழுதவேண்டியதில்லை” என்கிற ஒரு கவசத்துடன் அவருக்கு நேரடியாகவே எழுதிக்கேட்டேன். “அவர் இது ஒருவருடைய கதையுமல்ல என்னுடைய 100% கற்பனையில் உதித்தகதை என்கிற உறுதிமொழியை சில மணிநேரங்களிலேயே தந்தார். இதுக்குமேலும் அதுபற்றிப்பேச என்ன இருக்கிறது?" என்று , இதை வைத்துப் பார்த்தால் ஒரு படைப்பாளியின் விளக்கத்தைக் கேட்டுக் கொண்டே படைப்புப் பற்றிய விமர்சனத்தை முன்வைக்கவேண்டும் என்று ஆகிறது இல்லையா, கிட்டத்தட்ட இது ஒரு படைப்பாளியிடம் இருந்தே படைப்புப் பற்றிய பொழிப்புரை, விளக்கவுரை, இலக்கிய நயம் எல்லாவற்றையும் பெறுவது போல் ஆகிவிடாதா?அது மட்டுமல்ல நண்பரே, இந்த நவீன முறை விமர்சனத்தை என்னால் முழுக்க முழுக்க ஏற்றுக் கொள்ள முடியாததற்கு காரணமும் இது போன்ற படைப்பு சார்ந்தே இருக்கின்றது என்றே நான் நினைக்கிறேன். ஒரு உதாரணத்துக்கு ஒருவர் "இலங்கையில் புத்தூரை சொந்த இடமாகக் கொண்ட, பெர்லின் ஜேர்மனியில் தற்போது இருக்கின்ற, 1954ல் பிறந்த, ஒரு எழுத்தாளராக இருக்கின்ற அதே நேரம் தன் வாழ்க்கையை கொண்டு நடத்த "டாக்ஸி" ஓட்டுகின்ற பொன்னையா கருணாகரமூர்த்தி என்பவர் இரண்டு கொலைகளை செய்தார் என்று சிறீரங்கன் எழுதுவது போல ஒரு அவதூறை / வதந்தியை வைத்து ஒரு நாவல் எழுதினால் அதை எப்படிப் பார்ப்பது என்று ஒரு கேள்வி இருந்து கொண்டே இருக்கின்றது அல்லவா?". இந்தப் படைப்பு 100% தன் கற்பனையில் உதித்தது என்று உமா வரதராஜன் உங்களிடம் உறுதி அளித்ததாக கூறுகின்றீர்கள், அதே உமா வரதராஜன் அ.முத்துலிங்கம் இந்த நாவல் பற்றிக் கேட்டபோது என்ன சொல்கின்றார் தெரியுமா, "சமீபத்தில் அவருடன் தொலைபேசியில் பேசியபோது நான் அவரிடம் 'எதற்காக நாவல் ஒருபக்கம் சார்ந்து நிற்கிறது, அந்தப் பெண்ணின் தரப்பையும் கொஞ்சம் சொல்லியிருந்தால் நாவல் பூரணமாக இருந்திருக்கும்' என்றேன். அவர் சொன்னார், 'செய்திருக்கலாம்தான், ஆனால் நான் இதை எழுதியது இதய அறுவை சிகிச்சைக்காக ஆஸ்பத்திரி கட்டிலில் படுத்துக் கிடந்தபோது. நாவல் முடியும் முன்னர் நான் முடிந்துவிடுவேனோ என்ற பயம் எனக்குள் இருந்தபடியால் வேகவேகமாக எழுதவேண்டி நேர்ந்தது. கடிகாரத்துக்கு எதிராக எழுதியபோது எத்தனையோ விவரங்கள் விடுபட்டுவிட்டன. (உயிரோசை 24/05/2010)". அ.முத்திலிங்கத்துக்கு கொடுத்த பதிலூடாக உமா வரதராஜனே இந்த நாவல் ஒரு பக்கம் சார்ந்து விட்டது என்பதை ஒத்துக் கொள்கிறார் என்பதுதானே இதன் விளக்கம். அதே நேரம் இதே உயிரோசை இதழில் இந்தப் படைப்பிற்கு வைத்த மூன்றாவது சிலுவை என்ற தலைப்புப் பற்றிய அ. முத்துலிங்கத்தின் மேலான விளக்கம் பற்றி நான் ஏதும் இங்கே சொல்லப் போவதில்லை, அ.முத்துலிங்கம் அவ்வப்போது பிள்ளையார் பிடிப்பதாக நினைத்துக் கொண்டு குரங்கு பிடித்து விடுவார் அது போன்றதே அந்த விளக்கமும்.

    Like

  7. மேலும் கருணாகரமூர்த்தி, அது போலவே காலச்சுவடில் (ஒக்டோபர் 2010) தமிழ்நதி மூன்றாவது சிலுவைக்கு மதிப்புரை என்ற பெயரில் தனது கானல் வரிக்கும், மூன்றாவது சிலுவைக்கும் இருந்த ஒற்றுமைகளைப் பட்டியலிட்டு சிலாகித்திருந்தார். அதையும் ஒரு முறை படித்துப் பாருங்கள், ஏனென்றால் அந்தக் கதையில் வருகின்ற எத்தனை கதா பாத்திரங்களும், சம்பவங்களும் உண்மையானவை என்று அந்தக் கட்டுரையில் தமிழ்நதி பட்டியலிட்டே இருக்கின்றார். அது மட்டுமல்ல, கதையில் வரும் விஜயராகவனும் படைப்பாளியும் ஒத்த வயதானவர்கள், ஒரே தொழில் செய்பவர்கள், ஒரே பிரதேசத்தில் வாழ்பவர்கள், தவிர ஏற்கனவே இரண்டு முறை திருமணமாகி அவர்கள் இருவரையும் தனித் தனியே குடியமர்த்தி வாழ்பவர்கள். இப்படி இருக்கின்றபோது எப்படி இது 100% கற்பனையாகும் என்று எனக்குத் தெரியவில்லை. தவிர எனது கட்டுரையில் நான் எந்த இடத்திலும் உமா வரதராஜன் " வன்மமும், திமிரும் தாங்கிய எதையும் பணத்தால் எடை போடும் திமிரும், ஆணாதிக்க அலட்டலும் சுய புலம்பலுமுள்ளவர்" என்று கூறவில்லை, அவரது எழுத்து இவற்றைத் தாங்கி நிற்கின்றது என்றே குறிப்பிட்டுள்ளேன், – கவனிக்க : "ஆனால் அந்த எழுத்து நிற்கும் வன்மமும், திமிரும் தாங்கி சுய புலம்பல் என்ற மோசடிக்குப் பயன்பட்டிருப்பது வருத்ததுக்குரியது + நாவலில் பேசப்படும் விடயங்களும், நாவல் எழுதப்பட்ட்தன் பின்னால் இருக்கும் வன்மமும், எதையும் பணத்தால் எடை போடும் திமிரும், ஆணாதிக்க அலட்டலும் வெறுப்புணர்வையே மனதெங்கும் நிறைத்துச் சென்றிருக்கிறது" என்றே குறிப்பிட்டுள்ளேன்- . தவிர இவரது எழுத்து ஏன் ஆணாதிக்கம் நிறைந்தது என்று எழுதுகிறேன் என்பதற்கு எனது கட்டுரையில் குறிப்பிடாத இன்னொரு விளக்கத்தை இந்த நாவலில் இருந்தே தருகின்றேன். இந்த நாவலிலின் கதை சொல்லி ஜீவிதாவின் அக்காவிற்கு அவர் மாணவனுடன் ஏற்பட்ட உறவினை எள்ளலுடன் பார்க்கின்ற அதே நேரம் ஜீவிதாவுடனான தன் உறவினை உருகி உருகி சொல்லுகிறார். இதை நீங்களும் அவதானித்து இருப்பீர்கள் என்றே நினைக்கின்றேன். நீங்கள் குறிப்பிட்ட அ. ராமசாமியின் கட்டுரையை நான் இன்னும் வாசிக்கவில்லை, அதே நேரம் சுகுமாரன் எங்கே இது பற்றி எழுதினார் என்று எனக்குத் தெரியவில்லை. ஓகஸ்ட் / செப்டம்பர் மாத உயிர்மையில் ராஜகோபால் எழுதிய மதிப்புரையையும் வாசித்துப் பாருங்கள், அச்சில் வந்த மதிப்புரைகளில் என்னளவில் அது ஒன்றுதான் ஓரளவு ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இருந்தது. மேலும் எனது கட்டுரையில் எந்த ஒரு இடத்திலும் நான் இது முழுக்க முழுக்க ஒரு உண்மைக்கதை என்று குறிப்பிடவில்லை. முதலாவது பந்தியில் "போதாததற்கு இது உண்மைக்கதை வேறாம்" என்று குறிப்பிட்டுள்ளேன். இது கனடாவில் நடந்த இந்நூல் வெளியீட்டு / அறிமுக விழாவில் பகிரங்கமாகவே கூறப்பட்டது. இதையே தான் இந்தக் கட்டுரையின் பகுதி 1ன் கடைசிப் பந்தியிலும் கூறியுள்ளேன். ஒரு ஆச்சர்யம் என்னவென்றால், இவ்வாறு கூறப்பட்ட போது அதே அரங்கில் இருந்த அ. முத்துலிங்கமோ அல்லது உமா வரதராஜனுடைய நண்பர்கள் என்று சொல்லிக்கொண்டு பேசியவர்களோ அதை கிஞ்சித்தும் மறுக்கவுமில்லை.மற்றது உங்கள் பால்வீது கதையை நான் இன்னும் படிக்கவில்லை, எனவே அது பற்றிய கருத்துக்கள் எதையும் என்னால் கூற முடியாது. ஆனால், இப்போது எனக்கு அனுப்பிய பின்னூட்டத்தில் நீங்கள் "ஆனாலும் அவனிடம் ஒரு பெண் தனியாக அவனிடம் அகப்படும்போது அவளை அமுக்கப்பார்க்கிறான்." என்று குறிப்பிடுகிறீர்கள். இதிப் பிரயோகிக்கப்பட்ட ஒரு பெண்ணை அமுக்குதல் என்ற வார்த்தை ஆணாதிக்கம் சார்ந்தது தானே?நன்றிகள் கருணாகரமூர்த்தி, தொடர்ந்து உரையாடுவோம்

    Like

  8. அன்புடன் அருண்மொழிவர்மனுக்கு;எனது குறிப்புக்கான உங்கள் விளக்கக்குறிப்பைப் படித்தேன். நன்றி.முதலில் இரண்டு விஷயங்களை நான் ஒத்துக்கொண்டேயாகவேண்டும். ‘எனது பார்வையில்உங்கள் பார்வைக்கோணம் முற்றிலும் தவறானதும் நவீனத்துவம் அற்றதுமாகும்’ என்றுதான் எழுதியிருக்க வேண்டும். எனது கருத்தையும் பார்வையையும் உங்கள் மீதல்ல எவர்மீதும் திணிக்கும் எண்ணம் எப்போதுமே எனக்கு இருந்ததில்லை. இக்குறிப்புக்களே ஒரு ஆரோக்கியமான கருத்துப் பரிமாறல்களுக்காகத்தானே ? இன்னும் ஒரு சேவல் பேட்டை அணையும்போது பாருங்கள். அது பேட்டை அமுக்கும். அமுக்கினால்தான் விஷயம் ஆகும். அதன்வழி வந்ததுதான் அவ்வார்த்தை. நவீன பெண்ணிய வெளிச்சங்களில் பார்க்கையில் அது ஆணாதைக்கவார்த்தையாக இருக்கலாம். நான் மடக்கப்பார்க்கிறான் என்றுதான் எழுதயோசித்தேன். அது இன்னும் வன்மமானதுபோல் தோன்றவும் முதலாவதைத்தேர்ந்தேன். இப்போது இரண்டும் ஒன்றே போலவும் தோன்றுகிறது. பால்வீதியைப்படித்த பின்னால் உங்களுக்கே அந்த அபிப்பிராயம் மாறலாம். (எனது தமிழ்குடில் இணையத்தளத்தில் அல்லது அவர்களுக்கென்று ஓர் குடிலில் உண்டு.)//ஒரு படைப்பாளியின் விளக்கத்தைக் கேட்டுக் கொண்டே படைப்புப் பற்றிய விமர்சனத்தை முன்வைக்கவேண்டும் என்று ஆகிறது இல்லையா, கிட்டத்தட்ட இது ஒரு படைப்பாளியிடம் இருந்தே படைப்புப் பற்றிய பொழிப்புரை, விளக்கவுரை, இலக்கிய நயம் எல்லாவற்றையும் பெறுவது போல் ஆகிவிடாதா ?// இக்கூற்றை இன்னமும் முற்றாக மறுக்கிறேன். ஜெயகாந்தன் , எஸ்.பொ, பிரமிள்போல் தம்படைப்புகள் பற்றிய கடும்போக்குகள் கொண்டவரல்ல உமாவரதராஜன். தன் படைப்பைப்பற்றிப்பேசுவதற்கு எந்த மனத்தடைகளும் அற்றவர். இலக்கியர்களின் நட்பைப் பெரிதும் பாராட்டுபவர், மிகமிகமிக எளிமையானவர் அதனால்தான் அவரிடம் சற்றே உரிமை எடுத்துக்கொண்டேன். இன்னும் அவரது தனிப்பட்டவாழ்க்கை பற்றி எனக்கு எதுவும் தெரியாததும் இன்னொரு காரணம். அவர் சொன்னவைக்கப்பால் மேலதிகமாகச்சொல்ல என்னிடம் வேறு தகவல்கள் இல்லை. ராஜகோபாலின் மதிப்புரைப்பிரதி என்னிடம் உள்ளது . வாசிப்பேன்.நன்றி.

    Like

  9. நண்பர்களே,என்னுடைய நாவலைப் பற்றி அக்கறையுடன் பேசிக் கொண்டிருக்கின்றீர்கள்.திட்டுபவர்கள்,திட்டாதவர்கள் எல்லோருக்கும் நன்றி. என்னை உறுத்தும் ஒரே விஷயம், இந்தப் பேட்டியில் போடப் பட்டிருக்கும் என்னுடைய புகைப் படம்.நான் சம்பந்தப் பட்ட வேறு நல்ல புகைப் படங்கள் உள்ளன. அவற்றைப் பதிவேற்றம் செய்தால் பெரும் மன உளைச்சலிலிருந்து விடு படுவேன். கருணை புரிக.அன்புள்ள ,உமா வரதராஜன்

    Like

  10. மன்னிக்கவும் உமா வரதராஜன்,நான் இந்தப் பதிவை எழுதிய போது எனக்கு அந்தப் புகைப்படம் மாத்திரமே கிடைத்தது. அதனால் தான் அந்தப் புகைப்படத்தைப் போடவேண்டிவந்தது.தவிர, இங்கே குறிப்பிட்டதைப் போலவே உங்களின் அரசனின் வருகை கதையை வாசிக்க தேடி அண்மையில்தான் அதை வாசிக்க முடிந்தது. உங்கள் எழுத்துக்களின் மீதும், அதில் இருக்கின்ற பாய்ச்சலும் அங்கதமாய்க் கதை சொல்லும் ஆற்றலும் எனக்குப் பிடித்தே இருக்கின்றன. அதே நேரம் மூன்றாம் சிலுவை கதை மற்றும் அதன் கரு பற்றிய எனது கருத்தினையே இங்கே பதிந்திருக்கின்றேன்

    Like

  11. இப்பொழுது எனக்கு 35 வயது. வாசிப்பில் ஆர்வமுள்ள எனக்கு பத்து வருடங்களுக்கு முன்னர் அதாவது எனது 25வது வயதில் எதேச்சையாக இந்த புத்தகத்தினை வாசிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. அப்பொழுது எனக்கு விமர்சனங்கள் கூறுவதற்கான சந்தர்ப்பங்களோ வயதோ இருக்கவில்லை. என்னைப் பொறுத்த வரையில் காதலோ காமமோ ஒரு எழுத்தாளனின் படைப்பு மற்றவர்களின் வாழ்க்கையை பாதிக்காத வகையில் நாகரிகமாகவே சென்றடைய வேண்டும். இந்த நாவல் அவரது வாழ்க்கை என்று நூலாசிரியர் எளிதாக கூறிவிட்டார். ஆனால் இதனால் எத்தனை மனிதரின் வாழ்க்கை பாதிக்கப் பட்டுள்ளதை அவரால் ஏன் உணர முடியவில்லை? இரு பெண்களை திருமணம் செய்து மூன்று பெண் பிள்ளைகளை கண்டவருக்கு மூன்றாவது பெண்ணின் பிரிவு அவ்வளவு பாதிப்பை ஏற்படுத்தியதை என்னால் நம்ப முடியவில்லை. முதல் இரு பெண்கள் செய்யாமல் மூன்றாவதாக ஒரு பெண் ஏமாற்றிவிட்டாள் என்ற ஆதங்கமா? இல்லை இன்னொரு பெண் தேடுவதற்கு நோயால் காம உணர்ச்சி செத்து விட்டதா? முதல் இரு பெண்களும் பாவம். தாங்கள் பெண் என்றும் பெற்றவை பெண் பிள்ளைகள் என்றும் இயலாமையால் இருந்திருப்பார்கள் போலும். அவர்களின் உள்ளக் குமுறலை எழுதி இருந்தால் இதை விட பெரிய கதை கூட நமக்கு கிடைத்திருக்கும். காதலித்த ஒரு பெண் தனக்குப் பொருத்தமான ஒரு வாழ்க்கையை அமைத்துக்கொண்டிருந்தால் அவளை வாழ்த்தி வாழ விடுவதே உண்மையான காதல். உங்களது உள்ளக் கிடக்கைகளை அந்தரங்கமாக பதிவு பண்ண வேண்டியதுதானே? அதற்கு நூல்களை வடிகாலாக்க வேண்டியதில்லை. அனைவரது வாழ்க்கையிலும் மறக்க முடியாத காதலுண்டு. என்னைப் பொறுத்த வரையில் ஒரு பெண் தன்னை ஏமாற்றி விட்டதை தாங்க முடியாமல் ஒரு ஆணாதிக்கம் படைத்த மனிதர் அதனை வெளிப்படுத்தியதே இந்த படைப்பு. ஒருவேளை முதல் இரு பெண்களில் ஒருவர் இதனை செய்திருந்தால் அன்றே அவர் திருந்தியிருக்கலாம் அல்லது முதலாம் சிலுவையோ இரண்டாம் சிலுவையோ நமக்கு கிடைத்திருக்கும். இந்த விமர்சனத்தைப் படித்தால் நான் ஒரு பெண்ணியவாதி என்று உங்களால் எண்ணத் தோன்றும். இல்லை. நியாயம் அனைவருக்கும் இருக்க வேண்டும் என நினைக்கும் சாதாரண பெண்.

    Like

Leave a comment

Website Powered by WordPress.com.

Up ↑