மஞ்சள் வெயில் நாவலும் மீளவந்த நினைவுகளும்

காதல் பற்றிய பதிவுகளும் படைப்புகளும் வந்தபடியேதான் இருக்கின்றன. காதல் பற்றி எத்தனை படைப்புகள் வந்தாலும் காதல் புதிதாகவே இருக்கின்றது. இதில் பிரிந்து போன காதல் பற்றிய கதறலாக, ஆற்றாமையுடன் கூடிய துயரை ஒரு படைப்பாக இறக்கி வைக்கின்ற முயற்சியே யூமா வாசுகியின் மஞ்சள் வெயில் நாவல். இந்த நாவல் (இதை ஒரு நாவல் என்ற வகைக்குள் அடக்கிவிடலாமோ தெரியாது.) கதிரவன் என்ற பத்திரிகை ஒன்றில் ஓவியனாகப் பணிபுரிபவன், கொஞ்சம் கவிதைகளும் எழுதுபவனுக்கு, அவன் சக ஊழியன் சொல்லி தன் படைப்புகளுக்கு ஒரு ரசிகை இருப்பதாகத் தெரியவருகின்றது. கதை சொல்லியே சொல்வது போல எந்தப் பெண்ணிடமும் பழகி இராத கதிரவனுக்கு, தனக்கு ரசிகை என்று சொல்லப்பட்ட ஜீவிதாவுடன், அவளைப் பற்றிக் கேட்ட மாத்திரத்திலேயே காதல் வருகின்றது.
பொதுவாக எதிர்ப் பாலினரிடம் பழகுவதற்கு வாய்ப்புகள் மறுக்கப்பட்ட தமிழ்ச் சமூகத்தில் பெரும்பாலும் எதிர்ப்பாலினர் பற்றிய அறிமுகம் உடனேயே காதலாகவே மாறிவிடுகின்றது என்பதைப் புரிந்து கொள்ளவேண்டும். இந்த இடத்தில் கதிரவன் ஜீவிதாவை முதன் முதலில் சந்திக்கும் சந்தர்ப்பத்தை எதிர் கொள்வதை யூமா அழகாகக் காட்டுகிறார். இரவு வேளையிலும், தன்னிடம் இருக்கின்ற ஆகச்சிறந்த சட்டையை தோய்த்து, அணிந்து செல்லும் கதிரவன் லிப்டில் தன் முகத்தைப் பார்த்து கைக்குட்டையால் துடைத்து விடுதல் போன்றவை பெரும்பாலும் நம் ஒவ்வொருவர் வாழ்விலும் விரும்பமான பெண்ணை / ஆணை முதன் முதலில் சந்திக்கின்றபோது நாம் செய்தவையாகவே இருக்கும். யூமா வாசுகியின் வார்த்தையிலேயே சொன்னால்

“லிப்ட் கண்ணாடியில் வெளிறித் தெரிந்தது என் முகம். கைக்குட்டையால் அழுத்தித் துடைத்துக் கொண்டேன். முகத் தோலைக் கிழித்துவிடுவது போல அவ்வளாவு அழுத்தமாக. மூக்குத் துவாரங்களின், கண்களின் சுத்தத்தையும் நிச்சயப்படுத்தியாயிற்று. கலைந்த சிகை. சோர்வான- வெயிலடிபட்ட, பீதியில் முக்கியெடுத்த முகம். ……………… கண்களை நம்பலாம். அது ஏதாவது சூசகப்படுத்திவிடும் அவளிடம். நேற்றிரவு அகாலத்தில் துவைத்து பகலில் இஸ்திரி செய்த உடை தோற்றத்தில் கொஞ்சம் பொலிவு கூட்டும். சந்தேகத்துடன் என் கண்ணாடி விம்பத்தையே உற்றுப் பார்த்தேன். காரியம் ஒரு இளம்பெண் சம்பந்தப்பட்டதாயிருக்கிறது. அவள் அழகியாக இருக்கலாம் ஒரு வேளை”

இங்கே அழகியாக இருக்கலாம் ஒரு வேளை என்பது முக்கியமானது. ஒரு பெண் எப்படி இருப்பாள் என்றோ, அவளைப் பற்றிய வேறு எந்த விபரங்களோ தெரியாமல் அவள் தன்னைப் பற்றி விசாரித்தாள் என்பதே அவள் மீது காதல் கொள்ள போதுமானதாயிருக்கிறது. அப்படி இருந்தும் கூட, கதிரவனால அன்றைய தினம் ஜீவிதா வந்த போது அவளிடம் ஒரு வார்த்தை கூட பேச முடியவில்லை. அவளை கவனியாதது போல இருந்து விடுகிறான். இது ஒன்றும் ஈகோ கலந்து செய்யப்படுவதில்லை. அவனால் அவனை முழுக்க முழுக்க நிரப்பி இருக்கும் கூச்ச சுபாவத்தால் அவளிடம் பேச முடியவில்லை. கதிரவன் தன்னிடம் இயல்பாகவே இருக்கின்ற கூச்ச சுபாவத்தால் தன் காதலுக்கு தூதாக அவன் சக ஊழியனான டேவிட்டையும்,அவன் காதலி ஆனந்தியையுமே நாடுகின்றான். இதற்கு ஒரு பெண்ணை இன்னொரு பெண்ணால்தான் புரிந்துகொள்ள அல்லது புரிய வைக்க முடியும் என்கிற அவன் எண்ணம் காரணம். தன் காதல் பற்றிய பகிர்தல்களை பெரும்பாலான இளைஞர்கள் போலவே மதுவுடன் சேர்ந்த பொழுதுகளில் தன் நண்பர்களுடன் நிகழ்திக்கொண்டு போகிறான் கதிரவன். சந்திரன் மற்றும் பாலகிருஷ்ணன் என்ற இரண்டு கதாபாத்திரங்கள் அவன் எல்லா எண்ணங்களையும் பகிர்ந்து கொள்வதற்கேற்றவர்களாக இருக்கின்றார்கள். சொல்லப் போனால் குடும்பத்தை விட்டு தொழில் நிமித்தமோ அல்லது புலம் பெயர்ந்தோ இருப்பவர்கள் எல்லாருக்குமே இது போன்ற சந்திரன்களும், பாலகிருஷ்ணன்களும் டேவிட்டுகளும் இருந்து கொண்டே இருக்கின்றார்கள்.

கதையின் முடிவு அல்லது கடிதத்தின் முடிவு (முழுப் புத்தகமுமே ஜீவிதாவுடனான தன் நினைவுகளை மீட்டி ஜீவுதாவுக்கே கதிரவன் எழுதும் ஒரு கடிதமாக விரிந்து செல்கின்றது) கதிரவன் காதலை மறுத்து ஜீவிதா புதிய வேலை கிடைத்து அமெரிக்கா செல்வதுடன் முடிகின்றது. தன் எல்லா ஆற்றாமைகளையும் தாண்டி, ஜீவிதாவின் மேலான காதலை ஒவ்வொரு எழுத்திலும் நிறைத்து கதிரவன் எழுதுகிறான்

“ஜீவிதா, நீங்கள் கண்காணா தொலைவில் – எட்ட முடியாத உயரத்தில் இருக்கிறீர்கள். நான் பிரார்த்திக்கிறேன். உங்களின் எல்லா நலன்களுக்காவும் இறைஞ்சுகிறேன். என்றென்றும் மகிழ்ச்சியும் அமைதியும் உங்களைச் சூழட்டும். மிகவும் அபூர்வமான பெண் நீங்கள். என் கவிதைகள் உங்களைப் பாடுகின்றன. …….. உங்களின் பரிபூர்ண வாழ்வைத்தவிர வேறு எதையும் இப்பொது நான் எதிர்பார்க்கவில்லை. இதில் உங்களுக்குப் பிடிக்காத வாசகங்கள் ஏதும் இருந்தால் மன்னிக்கவும். நான் உங்களை இன்னும் விரும்புகிறேன். வேறெதை எதையோ எழுதினாலும் இதுதான் சாரம். நான் உங்களைக் காதலிக்கிறேன். நீங்கள் என்னை நேசிக்க வேண்டிய அவசியம் இப்பொது இல்லை. எதுவாயினும் உங்களுக்கு என் நன்றிகள், நன்றிகள். ……………..”

காதலின் பிரிவில் இருந்து மீளமுடியாமல் தவிக்கும் ஒருவரின் அல்லது இன்னும் மீளாதவரின் குரல் எப்படி இருக்குமோ அப்படி இருக்கின்றது யூமாவின் வரிகள்

2
புத்தகத்தின் எல்லா வரிகளும் காதல் கலந்தே எழுதப்பட்டிருக்கின்றன. காதல் பற்றிய பேச்சுக்களே அதிகம் நிறைந்திருந்த பதின்ம வயதின் தொடக்கங்களில் வாசித்த மு. மேத்தாவின் கவிதைகளும் (குறிப்பாக நடந்த நாடகங்கள்) பின்னர் தபூ சங்கரின் கவிதைகளும் கலீல் ஜிப்ரானின் முறிந்த சிறகுகளும் பெயர் மறந்து போன கலீல் ஜிப்ரானின் இன்னுமொரு புத்தகமும் காதலைப் பற்றி மட்டுமே பேசி இருந்தன. அந்தப் புத்தகங்களின் பெரும்பாலான எல்லா வரிகளையுமே அடிக்கோடிட்டு வைத்திருந்தது ஞாபகம் இருக்கின்றது. முறிந்த சிறகுகளில் வரும்
 என்ற வரிகளை எத்தனையோ இடங்களில் குறித்து வைக்கிறேன். என் காதல் பற்றி நண்பர்களுடன் கடிதங்களில் பகிர்ந்துகொண்ட போதெல்லாம் தவறாமல் ஏதாவது வரிகளைத் மேற்கோள் காட்டியுமிருக்கிறேன். இந்தக் கதையில் ஜீவிதாவை ஆனந்தியின் மூலமாகக் கதிரவன் அணுகுவது போலவே என் மீது நம்பிக்கை வரப்பண்ண வேண்டும் என்பதற்காகவும், என் காதலைப் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவும் என் அக்காவிடம் என் காதலைச் சொல்லி, அவரையே என் காதலியிடம் அறிமுகப்படுத்தி காதலுக்கு வலு சேர்த்திருக்கிறேன். நாளொன்றின் முதற்சொல்லை அவளுக்குப் பரிசளிக்கவேண்டும் என்பதற்காக அவளுடன் பேசும் வரை, ஒரு நாளின் எந்த மணித்தியாலமாக அது இருந்தாலும் மௌன விரதம் பூண்டிருக்கிறேன். எலலாக் காதலர்களையும் போலவே

“பெய்ரூட் நகரத்து என் பழைய கால நண்பர்களே / அந்தப் பைன் மரக்காடுகளில் என் செல்மாவின் கல்லறையைக் / கடக்க நேரும் போதெல்லாம் / மெல்லவே நடந்து / மௌனமாய்ச் செல்லுங்கள் / உங்கள் காலடி ஓசையில் / கல்லறையில் தூங்கும் / என் காதலியின் உறக்கம் / கலைந்து விடக்கூடும்.” 

say I’m weary, say I’m sad;
Say that health and wealth have missed me;
Say I’m growing old, but add-
Jenny kissed me
என்ற வரிகள் எனக்கும் பிடித்தே இருக்க்கின்றன. ”Rose is a rose is a rose is a rose.” என்று சொல்வது போல காதலைக் காதல் என்றும் சொல்லலாம் என்ற பூமா ஈஸ்வரமூர்த்தியின் வரிகளும் நிறைய தடவைகள் என்னால் வாழ்த்து மடல்களில் எழுதித் தள்ளப்பட்டிருக்கின்றன.
மரணம் என்று சொல்
வேதனை என்று சொல்
கொடூரம் என்று சொல்
தண்ணீர் என்று சொல்
விவேகம் என்று சொல்
உற்சாகம் என்று சொல்
ரத்தருசி என்று சொல்
திருடும் கை என்று சொல்
சித்ரவதை என்று சொல்
பிணந்தின்னி என்று சொல்
காலையில் எழும்போதே காத்துகிடக்கும் நாய் என்று சொல்
விளக்கு இல்லாத ராத்திரியில் கொட்டின தேள் என்று சொல்
ரயில் ஏறிச் செத்துப்போன அவளின் கழுத்தில் கிடந்த
சேதமில்லா
மல்லிகையென்று சொல்
நல்ல புணர்ச்சியிலும் பாதியில் காரணம் தெரியாமல் அழும் பெண் என்று சொல்
காதலைக் காதல் என்றும் சொல்லலாம்
இதை ஏன் இங்கே செல்கிறேன் என்றால் அறிவு பூர்வமாக மட்டுமே சிந்திக்கத் தெரிந்தவர்கள் இந்த நூல் பற்றியும், இதில் காதல் என்ற பெயரில் செய்யப்படும் முட்டாள்த்தனங்கள் பற்றியும் கேள்விகள் எழுப்பக்கூடும். ஆனால் அந்த முட்டாள்த்தனங்களும் சேர்ந்தது தானே காதல். காதல் பற்றிய நினைவுகளை அல்லது எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள தமிழ் சமூகம் இடம் தராதது தான் நண்பர்களையும், திரைப்படங்களையும் எமக்கு காதலின் தோழர்களாகக் காட்டுகின்றது. இந்த நிலைப்பாடு காதல் இல்லாமல் தமிழ் திரைப்படமே எடுக்க முடியாது என்ற நிலைப்பாடை உருவாக்கிய அதே வேளை இதில் உள்ள முரண் நகை என்னவென்றால் அப்படி உருவான் பெரும்பாலான திரைப்படங்கள் காதல் பற்றிய மோச்மான் பிரதிகளாகவோ (தியாகம் போன்ற பம்மாத்துகள் மற்றும் காதலுக்காக நாக்கை வெட்டல் போன்ற சைக்கோத் தனங்கள் உள்ளிட்ட விடயங்கள் ) அல்லது ஆணாதிக்கத்தின் கூறுகளாகவோ அமைந்து போனது என்றே சொல்லவேண்டும் (ரஜினி, விஜய், சிம்பு, விஜயகாந்த், அண்மைக்காலமாக விஷால் போன்றவர்கள் அவர்கள் படங்களில் வரும் நாயகியரிடம் பெண் எப்படி இருக்கவேண்டும் என்பதுபற்றி சொல்லும் உளறல்கள்.) அண்மையில் வெளியாகி புலம்பெயர் நாடுகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கின்ற விண்ணைத் தாண்டி வருவாயா திரைப்படத்தில் சிம்பு 2, 3 தடவைகள் தன் காதலியாக் இருந்து பின் மனைவி ஆகுபவரிடம் முதற்காதல் பற்றிய நினைவுகள் எப்பவும் மனதில் இருக்கும், அதை மறக்க முடியாது என்று திருவாய் மலர்கிறார். ஒரு ஆணுக்கு மட்டுமல்ல பெண்ணுக்குமே இது உண்மையும் கூட. அப்படி இருக்கின்ற போது ஏதாவது ஒரு தமிழ் சினிமாவில் ஒரு பெண் தன் கணவனிடம் என்ன் இருந்தாலும் முதற் காதல் போல வராது, அதை என்னால் மறக்க முடியாது என்று சொல்வாளாக இருந்தால் எபப்டி இருக்கும் நினைத்துப் பாருங்கள். இதை நினைத்துப் பார்க்கவே முடியாது ஏனென்றால் மீளவே முடியாத அளவுக்கு ஆணாதிக்கத்தில் மூழ்கி இருக்கும் தமிழ் சினிமாவில் அது போன்ற படங்கள் வெளிவருவதற்கான எந்த அறிகுறிகளுமே இல்லை. ஒரு சின்ன உதாரணத்தைப் பார்ப்போம். ஒரு ஆண் ஒரு பெண்ணைக் கண்டவுடனேயே அவளின் சில குண இயல்புகளால் அவனைக் காதலிக்கின்றாள். அவளை யாரிடமும் விட்டுக் கொடுக்காத வெறித்தனமான காதல் அவளுடையது. அவளோ வேறு ஒருத்தனைக் காதலித்துக் கல்யாணமும் செய்து விடுகிறாள். அவளின் நினைவாகவே மணம் முடிக்காமல் 20 வருடங்கள் தனிமையில் இருக்கும் அவன் அதன் பின்னர் வெளிப்பட்டு சமூகத்தில் அவளுக்கு இருக்கும் மதிப்புக்கு எதிராகப் போர் தொடுத்து இறுதியில் மாய்கிறான். இப்படி ஒரு கதையில் நாயகானாக தமிழ் திரைப்பட உலகின் உச்ச நட்சத்திரங்கள் எவர் நடித்திருந்தாலும் படம் ஒரு காவியம் என்று கொண்டாடப்பட்டு இருக்கும். ஆனால், இங்கே நான் அவன் என்று சொன்ன எல்லாவற்றையும் ஒரு பெண் ஒரு திரைப்படத்தில் செய்தார். பெண் செய்ததாக சொன்ன எல்லாவற்றையும் ஒரு ஆண் செய்தார். அந்தப் பெண் ரம்யா கிருஷ்ணன், ஆண் ரஜினி. படம் வரலாறு காணாத பெரு வெற்றியை பெற்றபோதும் அந்தப் பெண் வில்லியாக மட்டுமே பார்க்கப்பட்டார். இது போன்ற ஒரு மோசமான சூழலில் வாழ்ந்து வரும் எம்மில் ஒருவரால் இந்தக் கதையைக் கூட ஒரு பெண் எழுதி இருந்தால் நாம் எத்தனை தூரம் ஏற்றுக் கொண்டிருப்போம் என்ற கேள்வியை இலகுவாக எழுப்பிவிட முடியும். ஒரு போதும் ஏற்றுக் கொண்டிருக்க மாட்டோம்தான், ஆனால் அந்த ஒரு காரணத்துக்காக இந்தப் பிரதியை ஒருபோதும் நிராகரித்துவிடமுடியாது. தோற்றுப் போன தன் காதல் பற்றிச் சொல்ல அல்லது படைப்பாக ஒரு பெண்ணுக்கு இடம் தரப்படவில்லை என்பது எவ்வளவு நிஜமோ, அதே அளவுக்கு தோற்றுப் போன ஒரு காதலின் வலி ஆணையும் இந்தளவுக்கு பாதிக்கும் என்பதும் நிஜம். அதனால் இந்தப் பிரதி பேசும் வலியும் நிஜம்
நன்றிகள் : இந்தப் புத்தகத்தைப் பற்றி என்னிடம் பகிர்ந்து கொண்டு, இதை வாசிக்குமாறு தூண்டிய பதிவர் “தமிழன் கறுப்பிக்கு

4 thoughts on “மஞ்சள் வெயில் நாவலும் மீளவந்த நினைவுகளும்

Add yours

  1. ஏன் தமிழ் சினிமாவின் மகத்தான படங்களில் ஒன்று என்று கொண்டாடப்படுகிற சேரனின் ஆட்டோகிராப் ஒருவேளை சினேகாவின் ஆட்டோகிராப் என்று எடுக்கப்பட்டிருந்தால் ‘சினேகா விலைமாதுவாக நடிக்கிறார்’ என்கிற ரீதியில்கூட விளம்பரப்படுத்தப்பட்டிருக்கும். சினிமாவின் பொற்காலத்தில் அல்லவா வாழ்கிறோம்.

    Like

  2. சேரனின் ஆட்டோகிராப் ஒருவேளை சினேகாவின் ஆட்டோகிராப் என்று எடுக்கப்பட்டிருந்தால் ‘சினேகா விலைமாதுவாக நடிக்கிறார்’ என்கிற ரீதியில்கூட விளம்பரப்படுத்தப்பட்டிருக்கும். சினிமாவின் பொற்காலத்தில் அல்லவா வாழ்கிறோம்//உண்மை தான் கீத். ஆட்டோகிராப் திரைப்படம் வந்த சமயம் இது பற்றிய பரவலாகக் கதைக்கப்பட்டது

    Like

  3. என்னை வெகுவாகப் பாதித்து வரும் புத்தகமிது. நல்ல செறிவான எழுத்து யூமா. வாசுகியுடையது.அறிவு பூர்வமாக மட்டுமே சிந்திக்கத் தெரிந்தவர்கள் இந்த நூல் பற்றியும், இதில் காதல் என்ற பெயரில் செய்யப்படும் முட்டாள்த்தனங்கள் பற்றியும் கேள்விகள் எழுப்பக்கூடும். ஆனால் அந்த முட்டாள்த்தனங்களும் சேர்ந்தது தானே காதல்.//முழுதும் உடன்படுகிறேன்.

    Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

Website Powered by WordPress.com.

Up ↑

%d bloggers like this: