பஷீரின் மதில்கள் ஒரு பார்வை

ஒருதலை ராகம் திரைப்படத்தை எல்லோரும் பார்த்திருப்போம். உருகி உருகிக் காதலிக்கும் காதலனை தன் குடும்பத்தில் ஏற்பட்ட ஆண்கள் பற்றிய கசப்பான அனுபவங்களால் (சகோதரிக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவம்) விலத்திச் செல்லும் பெண், திரைப்படத்தின் இறுதியில் அவனிடம் பிரியப்பட்டு பேசச் செல்கின்றபோது அவன் இறந்து விடுகிறான். 1980ல் வந்த இந்தத் திரைப்படம் இன்றளவும் காதல் தோல்வியைச் சொன்ன காவியமாக அனேகமாக எல்லா இள வயதுக்காரர்களாலும் பேசப்படுகின்றது. பின்னர் நடிகர் முரளி அலுக்காமல் கொள்ளாமல் இதே கதையமைப்பைக் கொண்ட பல  திரைப்படங்களில் நடித்துத் தள்ளினார். இதயம் தொடங்கி காலமெல்லாம் காதல் வாழ்க என்று பல முரளியின் படங்களில் முரளி காதலை சொல்லாமல் தவிப்பவராகவோ அல்லது ஆணும், பெண்ணும் மனம் ஒன்று பட்டு சந்திக்க முனைகின்றபோது புதிதாக முளைக்கின்ற புறக் காரணங்களால் அந்த சந்திப்பு தடைப்படுவதாகவோ காட்டப்படுவது வழக்கம்.

தொண்ணூறுகளின் இறுதியில் காதல் கோட்டை திரைப்படம் பெரு வெற்றி பெற, பார்க்காமலே காதல், பேசாமலே காதல், சொல்லாமலே காதல், காதலிக்காமலே காதல் என்று விதம் விதமாக காதல் விற்பனையாகிக் கொண்டிருந்த காலப்பகுதிகளில் இப்படியான எல்லாத் திரைப்படங்களிலும் ஆணும், பெண்ணும் முதன் முறையாகச் சந்திக்கும் சந்தர்ப்பம் வரும்போது அது ஏனோ தடைப்பட்டு விடுவதாகவோ அல்லது அப்படிக் கண்டும் அந்த அறிமுகம் சரியாக நிகழாமல் / ஒருவரை ஒருவர் அடையாளம் காணாமல் போய்விடுவதாகவோ காட்டிவிடுவார்கள். அனேகமாக, கிளைமாக்ஸ் என்று சொல்லப்படும் திரைக்கதை வேகமெடுக்கவேண்டிய இட்த்தில் இந்தக் காட்சி அமைந்துவிடுவது உண்டு
 
காதலை சொற்களால் வெளிப்படுத்தாமல் செயல்களால் மட்டுமே வெளிப்படுத்தி இருந்த என் நண்பன் ஒருவன் பின்னர் இடப்பெயர்வு ஒன்றின் காரணமாக அந்தப் பெண்ணை சந்திப்பது தடுக்கப்பட்டு, பலத்த நெருக்கடிகளின் மத்தியில் ஒரு குறித்த நேரத்தில் குறித்த இடத்தில் சந்திப்பதாய் இருவருமே ஒரு மூன்றாவது நண்பர் ஊடாக நிச்சயித்திருந்தனர். ஆனால் அந்த நேரங்களில் யாழ் குடாநாட்டில் தொடர்ச்சியாக நடைபெற்றுக்கொண்டிருந்த ஆட்சேர்ப்பு பிரச்சாரக் கூட்டங்கள் காரணமாக அந்தச் சந்திப்பும் தடைபட, அவர்கள் இருவரும் பிறிதொரு முறை சந்திக்கவே முடியாமல் போய்விட்டது. போர் சமூக அளவில் ஏற்படுத்தும் பாதிப்புகளைத் தவிர்த்து இது போன்ற தனி மனித வாழ்வில் ஏற்படுத்தும் வடுக்கள் எண்ணற்றவை.
 
இது போலவே, பிரியப்பட்ட இருவர் முதன் முதலாக சந்திக்க திட்டமிடும்போது அந்த சந்திப்பு நிகழ்வதற்கான சாத்தியம் திடீரென்று இல்லதொழிக்கப்படுவதுடன் வைக்கம்
முகமது பஷீரின் மதில்கள் குறுநாவல் முடிவடைகின்றது. ஆனால் இந்தக் கதையில் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் பஷீர், அவர் அந்தப் பெண்ணை (நாரயணீயை) சந்திப்பதற்காக திட்டமிட்டிருந்த நாளுக்கு ஒரு நாள் முன்னராகவே சிறையை விட்டு விடுதலை செய்யப்பட்டுவிடுகிறார். அப்ப்போது பஷீர் கேட்கிறார்,
“வை ஷூட் ஐ பி ஃப்ரீ?… ஹூ வாண்ட்ஸ் ஃப்ரீடம்?… . ஏதாவது ஒன்றை நாம் அதிகம் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும்போது, எதிர்பார்த்தது நிகழாமல், அதைவிட முக்கியமான ஏதாவது ஒன்று நாம் எதிர்பாராமலேயே கிடைத்துவிடும். ஆனால் நம் மனம் அப்போது நாம் எதிர்பார்த்த்து கிடைக்கவில்லையே என்பதிலேயே அதிகம் கவலைப்படும். இதுதான் இங்கே யதார்த்தமாக இருக்கின்றது. அந்த யதார்த்தம் தான் பஷீரின் கதைகளில், அவர் எழுத்துக்களில் இருக்கின்ற முக்கிய பலம்.
 
பஷீரின் பெரும்பாலான கதைகள் நான் என்று தொடங்கி பஷீரையே (கதை சொல்லியையே) பிரதான பாத்திரமாக கொண்ட கதைகள். அப்படி இருப்பதனால் அவர் கதைகளில் வரும் சம்பவங்களும், அதிகம் சுழிகளில் அகப்படாத, நாளாந்த வாழ்வின் பதியப்பட்ட குறிப்புகள் போலவே நகர்ந்து செல்கின்றன. தவிர, சமூகம் மீதான அக்கறையில் பிறக்கின்ற சமூகம், தலைவர்கள், சம்பிரதாயங்கள் பற்றிய கிண்டல்களும், அதே கிண்டல் கலந்த பார்வையை தன்மீதும் செலுத்துவதும் அப்படிச் செலுத்துவதன் மூலம், சமூக்க் கட்டமைப்புகளில் தனி மனிதனின் சுயங்கள் மற்றும் வெளிகள் பற்றி எழுப்பும் நேர்மையான பார்வைகளும் கேள்விகளும் பஷீரின் எழுத்துக்களில் காணப்படும் முக்கிய அம்சங்கள்.  மதில்கள் பஷீரின் ஆகச் சிறிய குறு நாவல்களில் ஒன்றாக இருக்கவேண்டும்.  வெறும் 33 பக்கங்களே வருகின்றது இந்தக் குறுநாவல். 
 
மதில்கள் அரசுக்கெதிரான போராட்டம் ஒன்றிற்காக சிறையில் அடைக்கப்படும் பஷீர் (உண்மையிலேயே இந்திய சுதந்திரப்போர் நடைபெற்ற காலங்களில் போராட்டங்களில் கலந்து கொண்ட பஷீர் 1941-42 காலப்பகுதிகளில் அதற்காக சிறை சென்றவர். ஆனால் இந்தக் க்தை 1965ல் எழுதப்படுகின்றது. இந்தியா சுதந்திரமடைந்த பின்னர் பஷீர் அரசியலை விட்டு விலகியே இருந்தார். அதனால் அவர் அதன் பிறகு சிறை சென்றாரா அல்லது முன்பு சிறை சென்ற போது கிடைத்த அனுபவங்களை வைத்து புனைவாக எழுதினாரா என்பது தெரியாது. ) சிறையில் இருக்கும்போதே அவருக்கு சிறையில் பெண்கள் பகுதியில் இருக்கும் ஒருவருடன் மதில் ஒன்றின் இரு புறமும் இருந்து கதைப்பதன் மூலம் வரும் காதலையும் பின்னர் இருவரும் ஒருவருக்கொருவர் பரிசுப்பொருட்களைப் பரிமாறுவதையும் (மதில்களின் மேலாக பொதிகளை எறிந்து பரிமாறிக்கொள்ளுகின்றனர், நாராயணீ வறுத்த கேப்பையும், உப்பும் மிளகும் கலந்த பொடியும் அனுப்ப, பஷீர் காய்கறி வற்றலையும் ஊறுகாயையும் அனுப்பி வைக்கிறார்) பின்னர் சிறையில் இருக்கும் மருத்துவமனையில் இருவரும் சந்தித்துக்கொள்ள திட்டமிடுகிறார்கள். அப்போது இருவரும் தத்தமது அடையாளங்களைப் பகிர்ந்துகொள்கிறார்கள். பஷீர் சொல்கிறார், “நான் தனியாகத்தான் வருவேன். என் தலையில் தொப்பி இருக்காது. தலை முழுவதும் வழுக்கைதான். கையில் ரோஜாப்பூ ஒன்று வைத்திருப்பேன்”. பஷீரின் கதாபாத்திரங்கள் எளிமையானவர்கள். ஒருநாளும் தவற விடாமல் நாம் நம் நாளாந்த வாழ்வில் காண்பவர்கள்.
மதில்கள் நாவலில் சிறை பற்றியும், சிறை வாழ்க்கை பற்றியும் முழுமயான சித்திரம் தரப்படுகின்றது. பெரும்பாலும் திரைப்படங்கள் வாயிலாகவே சிறைகளை அறிந்தவர்களே தமிழ் சமூகத்தில் அதிகம். சிறை என்று சொன்னாலே சிறை அறைக் கதவுகளில் இருக்கும் கம்பிகளைப் பிடித்துக் கொண்டிருக்கும் நாயகனையும், எல்லாரும் அரைக் காற்சட்டை அணிந்திருக்க நாயகர்கள் அல்லது பிரபல வில்லன்கள் மாத்திரம் முழுக்காற்சட்டை அணிந்திருப்பதாயும் காட்டப்பட்டதே. (மகாநதி திரைப்படம் ஓரள்வு யதார்த்தமான சிறைகளைக் காட்டி இருந்த்து). மதில்கள் கதையிலோ ஜெயிலுக்குள் இருக்கும் தலைவர்களுக்கு எப்படி எல்லாவித உணவுப் பொருட்களும் கிடைத்துவிடுகின்றன என்பது முதல், சிறைக்குப் போகும்போதே கொண்டு செல்லும் தீப்பெட்டி, பீடி, பிளேட் போன்றவை பற்றி எல்லாம் விபரமாகச் சொல்கின்றது. பீடி கிடைப்பதைவிட தீக்குச்சி கிடைப்பது சிறையில் கடினம் என்பதால் தீக்குச்சிகளை பிளேட்டால் இரண்டாகப் பிளந்து உப்யோகிப்பது முதல், அப்படியும் தீக்குச்சி முடிந்துவிட்டால், பிளேட்டை நிலத்தில் உராஞ்சி அதில் எழும்பும் பொறியில் இருந்து மெல்லிய நூற்பந்துகளை பற்றவைத்துப் பய்ன்படுத்துவது வரை விரிவாகச் சொல்கின்றது.
 
சிறை என்ற நீதி மற்றும் காவல்துறையினரின் கண்காணிப்பின் கீழ் இருக்கும் இடத்துக்குள்ளேயே எப்படி பீடி, அச்சு வெல்லம், ஊறுகாய் என்று நிறையப் பொருட்கள் சர்வசாதாராணமாக விற்கப்படுகின்றன அப்படி விற்கப்ப்டுவதற்கு சிறை வார்டன்களுக்கு வழங்கப்படும் லஞ்சம், சிறைகளின் உள்ளும் தலைவர்கள் வாழும் சொகுசு வாழ்க்கை என்று நிறைய இடங்களில் பஷீர் நேரடியாக்வே கிண்டல் செய்து செல்கிறார். ஒரு எழுத்தாளனாகவும், சமூகம் மீது அக்கறை கொண்டவனாகவும் தனது பணியை சரிவரச் செய்ய வேரும் 33 பக்கங்களே பஷீருக்கு போதுமாயிருக்கின்றது.
 
பின்குறிப்பு: மதிலுகள் என்று மலையாளத்தில் எழுதப்பட்ட இந்த நாவலை தமிழாக்கம் செய்தவர் சுரா. வெளியீடு புதுமைப்பித்தன் பதிப்பகம்

3 thoughts on “பஷீரின் மதில்கள் ஒரு பார்வை

Add yours

  1. மதில்கள் நீல பத்மநாபன் மொழிபெயர்ப்பிலும் வந்திருக்கிறது. புதுமைப்பித்தன் பதிப்பகம் வெளியிட்ட மொழிபெயர்ப்பை செய்தவர் சுந்தர ராமசாமி அல்ல. அந்த மொழிபெயர்ப்பை செய்தவர் சுரா. சுந்தர ராமசாமியும் சுராவும் ஒருவரல்ல.-Shoba sakthi

    Like

  2. நன்றிகள் ஷோபாசக்தி,நான் சுரா என்றவுடன் அது சுந்தர ராமசாமி என்று நினைத்துவிட்டேன். திருத்தி விடுகிறேன். நன்றிகள்.நீல பத்மநாபன் செய்த மொழிபெயர்ப்பு எப்படி?, எனக்குக் கிடைக்கவில்லை. கிடைத்தால் வாசிக்கலாம்

    Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

Website Powered by WordPress.com.

Up ↑

%d bloggers like this: