1
சாரு நிவேதிதாவைப் பொறுத்தவரை நித்தியானந்தா விவகாரம் சொந்தச் செலவில் சூனியம் வைத்துக் கொண்டது போலவே ஆகிவிட்டது. நான் என்ன நடிகையுடன் படுத்தேனா, எனது குற்றம் என்ன, நித்தியானந்தாவை நான் முழுவதும் நம்பினேன், அது குற்றமா என்று தொடர்ந்து வருகிறார் சாரு. ஆனால் நித்தியானந்தா விவாகரத்தில் சாரு நித்தியானந்தரின் நேரடியான பிரசாரகராகவே இயங்கினார் என்பதே உண்மை. தனது வாசகர்களை நித்தியானந்தரின் முகாம்களுக்குப் போகுமாறு தொடர்ந்து பிரேரித்தவர் சாரு.
இதுவரை எந்த ஒரு இடத்திலும் சாரு இதற்கான தன் பக்கத் தவறுகளை ஒப்புக்கொண்டதும் கிடையாது.அந்த வகையில் விஜய் டிவியில் மே 30 அன்று ஒளிபரப்பான நீயா நானாவில் என் போன்ற பலருக்கும் இருந்த, இருக்கின்ற கேள்விகளை சாருவிடமும் நேரடியாக கேட்டிருன்தார் கோபிநாத். விஜய் டிவியின் நிகழ்ச்சிகள் பற்றி நிறைய விமர்சனங்களைக் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் அடை எல்லாம் தாண்டி நிகழ்ச்சிகளின் தரம் என்ற அடிப்படையில் பார்க்கின்றபோது சன், ஜெயா மற்றும் கலைஞர் தொலைக்காட்சிகளை விட விஜய் டிவி பல மடங்கு முன்னிலையிலேயே இருக்கின்றது. சாரு நிவேதிதா, பவா செல்லத்துரை பங்கேற்ற இந்த நீயா நானா நிகழ்வும் அப்படியான ஒன்றே. தனது வலைத்தளத்திலேயே இந்த நிகழ்ச்சியைப் பார்க்கும்படி தன் வாசகக் கண்மணிகளுக்கு சாரு வைத்த வேண்டு கோள் கீழே
“May 30th, 2010இன்று இரவு ஒன்பது மணிக்கு விஜய் டி.வி.யில் ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசுகிறேன்.தொலைக்காட்சி பார்க்கும் வழக்கம் இல்லாததால் இந்த நிகழ்ச்சி பற்றி மறந்து விட்டேன். திடீரென்று இப்போது ஞாபகம் வந்தது. அதனால்தான் இவ்வளவு தாமதமாக இது பற்றித் தெரிவிக்கிறேன். நித்யானந்தாவை ஆதரித்து ஒரு பெண் சாமியார் பேசியதால் மிகுந்த கோபத்துடனும் உணர்ச்சிவசப்பட்டும் பேசியிருக்கிறேன். முடிந்தால் பாருங்கள்.30.5.2010.5.25 p.m.”
இப்படிப் பதிவிட்டு இந்த நிகழ்வைப் பார்க்கும்படி எல்லாரையும் கூவி அழைத்த சாருதான் பின்னர் தன்னை பழிவாங்கும் நோக்குடன் கட்டாயப்படுத்தி மன்னிப்புக் கேட்கப் பண்ணிவிட்டார்கள் என்று இரண்டாம் நாளே பதிவிடுகிறார். சாரு, நீங்கள் இப்படி ஒரு பதிவை எழுதாமல் இருந்திருந்தால் நாங்கள் உண்மையிலேயே நீங்கள் மன்னிப்புக் கேட்டு விட்டீர்கள் என்று மிகவும் மகிழ்ந்திருப்போம். இப்போது நீங்கள் செய்த தவறுக்கு ஒரு போதும் பொறுப்பேற்கப் போவதில்லை என்று தெளிவாகக் காட்டிவிட்டீர்கள். இந்த நேரத்தில் உங்களுக்கு இன்னொரு விடயத்தை நினைவூட்ட விரும்புகிறேன். சுஜாதா விருதுகளில் சிறிது நேரம் மைக் பிடித்த நீங்கள் திடீரென்று அதிரடியாக நீங்கள் சார்த்ர் வழி வந்தவர் என்று அறிவித்து அதிர வைத்தீர்கள். அதே சார்த்தர் ‘பொறுப்பேற்றல்’ என்கிற விடயம் பற்றி நிறையப் பேசி இருக்கிறார். அவற்றை சிறிதேனும் நினைவுக்குக் கொண்டுவருவது நல்லது என்றே நினைக்கிறேன்.
இது போல இந்த நிகழ்விலேயே சாருவின் முன்னுக்குப் பின்னர் முரணான உளறல்களுக்கு ஒரு நல்ல உதாரணம் இருக்கின்றது. நித்தியானந்தாவை தான் நம்பக் காரணம் அவர் எழுதிய புத்தகத்தில் சொல்லப்பட்ட விடயங்கள் என்றும் அதைப் படித்தே நித்தியானந்தாவை தாம் நம்ப / பிரமிக்கத் தொடங்கியதாகவும் சொல்கிறார் சாரு. தொடர்ந்து அந்தக் கருத்துகள் ஓஷோ ஏற்கனவே சொன்ன கருத்துக்கள் என்றும் இந்தக் கருத்துக்களின் மூலம் புத்தர் என்றும் சொல்கிறார். தான் ஓஷோவைப் படித்திராததால் தனக்கு இந்த விடயங்கள் தெரியவில்லை என்கிறார். அதே நிகழ்விலேயே சில நிமிட இடைவெளியில் ‘ஓஷோவை, ஜேகேயை, யூஜியை மறுத்த ஒரு ஆள் தான்’ என்கிறார். ஓஷோவைப் படித்தே இராமல் எப்படி அவரை மறுத்திருக்க முடியும் என்று ஒரு கேள்வி மிக இயல்பாகவே எழுகின்றது. நிச்சயம் சாருவிடம் இதற்கான பதில் இராது. சாரு பற்றி விமர்சிக்கும் பலரும் சொல்வது போல வாசிக்காமலே அது பற்றி எழுதுவது என்ற வகைக்குள் தான் இதையும் அடக்கவேண்டும் போல இருக்கின்றது.
2
இதே நிகழ்வில் பவா செல்லத்துரை பேசிய நிறைய விடயங்கள முக்கியமானவை. யோகி ராம் சுரத்குமார் எபபடி நிறுவன மயமாக்கப்பட்டார் என்பது பற்றி பவா சொன்ன விடயங்கள் கவனிக்கவேண்டியவை. திருவண்ணாமலையில் நடந்த இலக்கியக் கூட்டங்கள் போன்ற பலவற்றிலும் வெகு சாதாரணமாகக் கலந்து கொண்ட யோகி ராம்சுரத் குமார் பின்னர் நிறுவன மயமாக்கப்பட்டார் / அமைப்புக்குள் உள்ளடக்கப்பட்டார் என்பது பற்றி முன்னரும் வா
சித்து இருக்கின்றேன். (அமைப்புக்குள் உள்ளாக்கப் படுவதன் மூலம் நீர்த்துப் போனதற்கு இன்னொரு சிறந்த உதாரணமாகப் பெரியாரையும் சொல்லலாம் என்று நினைக்கிறேன்.) தவிர, சாமியார்களிடம் எழுத்தாளர்கள் அடைக்கலமாகின்றபோது அவர்கள் எழுத்துக்கள் வீழ்ச்சியடைந்து விடுகின்றன என்றூ பவா சொன்ன போது சட்டெனறு பாலகுமாரனின் நினைவு வந்தது. ஆன்மீகத்தில் உருவான் பலமான நாட்டம் பாலகுமாரனின் தனிப்பட்ட வாழ்வில் அவர் மன மற்றும் உடல் நலன்களில் என்ன பாதிப்புகளை ஏற்படுத்தியது என்று தெரியாது. ஆனால் ஒரு எழுத்தாளராக பாலகுமார்ன் வீழ்ச்சியடைந்த புள்ளியும், அவரது ஆன்மீக நாட்டம் பலமான புள்ளியும் ஒன்றாகவே இருக்கின்றது.

3
கிருத்திகா எழுதிய ‘வாஸவேச்வரம்’ என்கிற நாவலை வாசித்து முடித்தேன். மிகக் குறைவாகவே எழுதி இருந்தாலும் நிச்சயம் படிக்க வேண்டிய எழுத்தாளர்களில் கிருத்திகாவும் ஒருவர். 1915ல் பிறந்த இவர் வாஸவேச்வரம் கதையை 1930 களில் வாஸவேச்வரம் என்கிற தமிழகத்தின் தென் கோடியில் இருக்கின்ற கற்பனைக் கிராமத்தில் இடம்பெறுவதாக எழுதி இருக்கின்றார். பிராமண சமுதாயத்தில் நிகழும் சம்பவங்களைப் பற்றிய இந்தக் கதையில் சம்பவங்களை நகர்த்திச் செல்ல அந்தக் கிராமத்தில் இருக்கின்ற பெண்களின் பாலியல் நாட்டங்கள் /விழைவுகளே பயன்படுகின்றன. பிராமண சமூகத்தினர் பிற சமூகத்தினர் மீது ஆதிக்கம் செலுத்தி வந்த – அதே வேளை பிற சமூகத்தினர் இந்த ஒடுக்குதல்களில் இருந்து வெளிப்படவேண்டும் என்று எண்ணத் தலைப்பட்ட காலப்பகுதியில் கதை நடக்கின்றது. எந்தவித நியாயப்படுத்தல்களோ அல்லது துணைக்காரணங்களோ சொல்லப்படாமல் அது அது அப்படியே ஆக பாலியல் சார்ந்த ஒழுக்க மீறல்கள் சொல்லப் படுகின்றன. பெண்களின் எழுத்துக்களில் எந்தளவுக்குப் பாலியல் பற்றிய விபரங்கள் வர்ணனைகள் இருக்கலாம் என்பதை இன்னமும் ஆண்களே தீர்மாணித்துக் கொண்டிருக்கையில் அறுபதுகளிலேயே இப்படியான ஒரு நாவல் வெளிவந்திருப்பது அதிசயம் தான். அண்மைய நிகழ்வுகளைப் பார்க்கின்றபோது இந்த நாவல் 60களின் மத்தியில் வெளிவந்த போது எப்படியான எதிர்வினையை சந்தித்திருக்குமோ என்றே எண்ணத் தோன்றுகிறது. இந்நாவலின் மூன்றாவது பதிப்பிற்கு பெருந்தேவி நல்லதொரு முன்னுரை எழுதி இருக்கிறார். அவரது இணையத்தளத்திலும் அந்த முன்னுரை இருக்கின்றது. http://innapira.blogspot.com/2008/04/blog-post_28.html
இது தவிர்த்து கிருத்திகாவின் தீராத பிரச்சனை என்ற சிறுகதை அ. வெண்ணிலா தொகுத்த மீதமிருக்கும் சொற்கள் என்ற ‘பெண் எழுத்தாளர்களின் சிறு கதைகள்’ தொகுப்பில் இடம்பெற்றிருக்கிறது. கிருத்திகா எழுதிய வாஸவேச்வரம், தீராத பிரச்சனை என்ற இரண்டு படைப்புகளை மட்டும் படித்த அனுபவத்தில் சொல்கிறேன், அவர் எழுதிய 9 புதினங்களும், 2 சிறுகதைகளும் உட்பட்ட எல்லாப் படைப்புகளையும் இயன்றவரை படித்திவிடுவது நலம்
–ஈழநேசன் இணைய இதழுக்காக எழுதப்பட்டது
சாரு தான் ஒரு டம்மி பீஸ் என்பது உலகத்துக்கே தெரிந்த விஷயமாயிற்றே. "எல்லாத்தயும் நிறுத்திக்குவோம்" என்பது போல்தான் "சிவப்பு சட்டை" போட்டுக்கொண்டு வந்திருந்தார். பவாவை பற்றி யும் , கிருத்திகா பற்றி யும் சொன்னவை உருப்படியான maters
LikeLike
சாருவின் ஆரம்பகால எழுத்துக்களில் இருந்த சாரு இப்போது தொலைந்து போனார். அதற்கு இப்பொது அவரது நண்பர்கள் வட்டாரத்தில் (மனுஷ்யபுத்திரன்) தவிர்த்து இலக்கியவாதிகள் வட்டம் குறைவாக இல்லாமல் இருப்பது முக்கியமான காரணம் என்று நினைக்கிறேன்,ஆனால் அவர் நிறுத்துவது மாதிரி தெரியவில்லை, இப்ப திடீரென்று 'உன்னதம்' 6 மாதத்துக்கு ஒருமுறை வார இதழ் என்று எழுதி இருக்கிறார்….
LikeLike
சாருவின் அடிப்படையற்ற அகங்காரம் தான், தன் தவறுகளை ஏற்றுக் கொள்ள விடாமல் தடுக்கிறது. போலிகளை உரித்துக்காட்டிய உங்கள் பதிவு வரவேற்கக்கூடியது. சாரு பற்றிய எனது கருத்துக்களையும் பார்க்க விரும்பின் இந்தத் தளத்துக்கு விஜயம் செய்யுங்கள். http://maarall.blogspot.com/2010/06/blog-post.html
LikeLike
வணக்கம் முஷாரஃப் உங்கள் தளத்தில்நீயா நானா பற்றிய கட்டுரை பார்த்தேன். மிக விரிவாக எழுதி இருக்கின்றீர்கள். நிகழ்ச்சியை பார்க்காதவர்கள் கூட என்ன நடந்தது என்று அறியக்கூடியவாறு ஆழமாக அமைந்தது அந்தக் கட்டுரை.
LikeLike
சாரு எழுதிய குப்பைகளை சுஜாதா கங்கையில் மலம் வருவது போல என்று திட்டியபோது சுஜாதாவை பார்ப்பணன் என்று திட்டிவிட்டு இப்ப சுஜாதா நினைவு நாளில சுஜாதாவைப் புகழ்ந்து தள்ளுது வெட்கம் கெட்ட ஜென்மம்
LikeLike