“சென்னை அரசாங்கம் சுயமாகத் தீர்மானிக்கும் ஆற்றல் முற்றிலும் தனக்குக் கிடையாது என்பதை இந்த விஷயத்தின் மூலம் வெளிக்காட்டி விட்டது. தமிழ் படிக்கும் மக்கள் நேரடியாக இகழ்ந்து அவமானப்படுத்தப்பட்டிருக்கிறார்கள்.இதை அவர்கள் சகித்துக் கொள்ளமாட்டார்கள். இந்த அரசாங்கம் மக்கள்கருத்துக்களுக்கு ஏதேனும் மதிப்புக் கொடுக்கிறது என்றால், இந்த நடவடிக்கையை அது மறுபரிசீலனை செய்யவேண்டும். தென்னிந்திய மக்களின் தேசிய உணர்வினை இந்த நடவடிக்கையின் மூலம் தடுத்து நிறுத்திவிடமுடியும் என எண்ணினால் அவர்கள் கருத்து முற்றிலும் தவறானது”.
இந்த வரிகளைப் பார்த்ததும் அது ஏதோ தமிழக அரசின் அண்மைக்கால நடவடிக்கைகள் பற்றி எழுதப்பட்டவை போல தோன்றும். ஆனால் இவை 82 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்ட/ பேசப்பட்ட வரிகள். பேசப்பட்ட இடம் சென்னை சட்டமன்றம். காலம் : ஒக்டோபர் மாதம் 9ம் திகதி மாலை 3 மணி. பேசியவர் : திரு சி. என். முத்துரங்க முதலியார். பேசப்பட்ட காரணம் பற்றி அறிய சற்றுப் பின்னோக்கிப் பார்க்க வேண்டும்.
2

3
1928ம் ஆண்டு ஆகஸ்டு 7ம் திகதி பாரதியின் சுதேச கீதங்கள் என்ற நூலின் இரண்டு பாகங்களுக்கும் பர்மா அரசு தடை விதித்தது. அந்த நேரம் பர்மாவும் பிரிட்டிஷ் இந்தியாவில் சென்னையைப் போன்ற ஒரு மாகாணமாக இருந்தது. அந்நாளைய பிரிட்டிஷ் இந்தியாவின் அரசாணைப்படி பிரிட்டிஷ் இந்தியாவின் ஏதாவது ஒரு மாகாணத்தில் தடை செய்யப்படும் புத்தகங்கள் பிரிட்டிஷ் இந்தியாவின் அனைத்து மாகாணங்காளிலும் தடைசெய்யப்பட்டனவே என்றிருந்திருக்கிறது. பர்மிய மாகாண அரசு பிறப்பித்த இந்த அரசாணையை சென்னை அரசு தனது கஸட்டில் பதிவு செய்தது. இதனைக் காட்டி சென்னை நகர போலீசார், சென்னை மாகாண மாஜிஸ்ட்ரேட்டை அணுகி பாரதியாரின் பாடற் பிரதிகளை பறிமுதல் செய்யும் ஆணையைப் பெற்று அதனை நடைமுறைப்படுத்தினார். பாரதியாரின் குடும்பத்தினருக்கு தேவையான வாழ்வாதார வருமானத்தை ஈட்டித்தருவதற்காக பாரதியின் நலன் விரும்பிகளால் அமைக்கப்பட்ட பாரதி ஆசிரமம் மற்றும் தண்டபாணி கம்பெனி போன்ற இடங்களில் இருந்த புத்தகங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதனை தடுத்து நிறுத்துவதற்காக இரட்டை ஆட்சி முறையின் கீழ் தமக்குக் கிடைத்த குறைந்த பட்ச அதிகாரத்தைப் பயன்படுத்தி முதற்கட்டமாக இந்த ஆணையின் மீதான ஒத்திவைப்புப் பிரேரனை ஒன்றைக் கொண்டு வந்தனர். அது பற்றிய சட்டமன்ற விவாதங்களின் தொகுப்பினை மிகத் திறம்பட அ.மார்க்ஸ் மொழிபெயர்த்துள்ளார்.
4
சத்தியமூர்த்தி, முத்துரங்க முதலியார், கே. வி, கிருஷ்ணசாமி நாயக்கர் போன்றோர் ஒத்திவைப்புப் பிரேரணைக்கு ஆதரவாக வாதிட்டனர். இந்த விவாதங்கள் யாவும், இலக்கியச் சிறப்புடனும், அலுப்பூட்டாத சுவையுடனும் இருப்பது தனிச் சிறப்பு. திராவிட முன்னேற்றக்
கழக்ம் ஆதிக்கம் பெற்ற பின்னர் தமிழ்நாட்டு சட்ட சபையில் விவாதனங்கள் இலக்கியச் சுவையுடன் நடந்ததாக கூறுவர். கருணாநிதி, அண்ணாத்துரை போன்றோரின் சட்டமன்ற பேச்சுக்கள் தொகுப்புகளாக வெளியிடப்பட்டும் இருக்கின்றன. ஆனல் தி.மு.க உருவாகுவதற்கே 20 ஆண்டுகளின் முன்னர் தமிழ்ப் பாடல்கள பற்றிய விவாதம் சுவையுடன் சட்டமன்றத்தில் நடந்திருக்கிறது. அப்படி இருந்தும் (அ.மார்க்ஸின் குறிப்புப்படி) கே. வி, கிருஷ்ணசாமி நாயக்கர் தவிர வேறு எவரும் தமிழில் பேசவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. (இந்த இடத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியேற முன்னர் கடிதங்களில் சம்பிரதாயமாக எழுதப்படும் ‘நமஸ்காரம்’ என்பது கூட ஆங்கிலத்தில் Namashkarams என்று தான் எழுதப்பட்டது என்கிற பாலமகுமாரனின் வரிகள் நினைவுக்கு வருகின்றன.)
ஆங்கில மொழியில் கவிதைகள் எழுதிய லார்ட் டெனிஸன், வில்லியம் பிளேக், பார்க்கர் போன்றவர்கள் எப்படி இங்கிலாந்தின் பெருமையை பீற்றிக்கொண்டு, அவர்கள் பிறரை அடிமை செய்யப் பிறந்தவர்கள் என்ற தொனியில் பேசும்போது பாரதியின் பாடல்கள் எல்லா இனங்களுக்கும் பொதுவான, எல்லா நாடுகளின் தத்துவ ஆசிரியர்களாலும் ஏற்றுக் கொள்ளப்படக்கூடிய விதமான கவிதகளைப் பாடியிருக்கின்றார் என்று எஸ். சத்தியமூர்த்தி மேற்கோள் காட்டி பேசும் இடம் குறிப்பிடத்தக்கது.
அது போல இங்கு முக்கியமாகக் குறிப்பிடவேண்டிய இன்னொரு விடயம் இறுதியில் நடைபெற்ற வாக்களிப்பு பற்றிய விபரங்கள். 76 பேர் ஒத்திவைப்புப் பிரேரணைக்கு ஆதரவாகவும், 12 பேர் எதிராகவும் வாக்களிக்க 15 பேர் நடுநிலை வகித்தனர். நடுநிலை வகித்த 15 பேரில் அப்போதைய பிரதம மந்திரியான பி. சுப்பராயனும் அடக்கம். அவர் வகித்த பிரத மந்திரி பதவியே அவரை நடுநிலை என்ற நிலைப்பாட்டை எடுக்க வைத்திருக்கும். இல்லாவிட்டால் அவரும் கூட ஆதரவாக வாக்களித்து இருக்கக் கூடும். வாழும் காலத்தில் கவனிக்கப்படாத பாரதி என்கிற கவிஞனுக்கு வாழ்வின் பின் கிடைத்த கௌரவங்களில் இதுவும் ஒன்றே.
5
இந்த நூலை மொழிபெயர்த்த அ.மார்க்ஸ் தன் முன்னுரையில் எஸ். சத்தியமூர்த்தி பற்றிக் கூறும்போது “பாரதி பாடல்கள் மீதான தடையை எதிர்த்துக் குரல் கொடுத்த காரணத்துக்காக சத்தியமூர்த்தி போன்றோரைக் கருத்துரிமை ஆர்வலர்களாகவோ, முற்போக்குச் சிந்தனை உடையவர்களாகவோ நாம் கருதிவிட இயலாது. சத்தியமூர்த்தியின் தீர்மானத்தை ஆதரித்து அன்று வாக்களித்த டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அவர்கள் கொண்டு வந்த தேவதாசி ஒழிப்பு மசோதாவின் மீது இதே சத்தியமூர்த்தி உதிர்த்த சனாதன சாக்கடைக் கருத்துகளை நாம் மறந்துவிடக்கூடாது. இன்றைக்கு தேவதாசிகள் வேண்டாம் என்பார்கள். நாளைக்கு அர்ச்சகர்களே வேண்டாம் என்பார்கள் என்று பேசி பலவழிகளில் எதிர்த்தவர் சத்தியமூர்த்தி” என்று தெளிவாகக் குறிப்பிடுகிறார்.
ஒருவர் ஓரிடத்தில் சரியான அல்லது தெளிவான பார்வையுடன் இருக்கிறார் என்றால் அவர் எல்லா இடத்தும் அப்படி இருக்கவேண்டும் என்பது இல்லை. எழுத்தாளர்கள் உள்ளிட்ட நிறைய ஆளுமைகளை அணுகும்போது இதே கருத்துடன் அணுகுவதே எனது வழக்கம். துரதிர்ஸ்டவசமாக அதில்
முக்கியமானவர் அ.மார்க்ஸ். வர்க்கப் போராட்டங்களிலும், ஒடுக்குமுறைகளுக்கு எதிரான போராட்டங்களிலும் அ.மார்க்ஸ் எடுக்கும் பல நிலைப்பாடுகளையும் செயற்பாடுகளையும் ரசித்த என்னால் இலங்கைப் போராட்டத்தில் அ.மார்க்ஸின் பார்வையில் இருக்கும் சொத்தைத்தனத்தை எந்த அடிப்படையில் எழுந்தது என்று அனுமானிக்கவே முடிவதில்லை. ஈழப்பிரச்சனையில் எத்தனையோ விதமான பரிமாணங்களில் ஒடுக்குமுறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்க, புலிகள் முஸ்லீம்களை யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேற்றினர் என்பதையும் புலிகள் வலது சாரித்தனமாகச் செயற்பட்டனர் என்பதையும் மட்டுமே தொடர்ச்சியாக அ.மார்க்ஸ் உதிர்த்து வருவதற்கு அவருக்கு பிறவியிலேயே புலிகள் என்ற பெயரைக் கேட்டாலே வரும் ஒவ்வாமையத் தவிர வேறு எந்தக் காரணங்களும் இருக்க முடியாது.
இதற்கு அண்மைக்கால உதாரணம் லும்பினியில் எழுதிய கட்டுரை ஒன்றில் இலங்கையில் அண்மையில் நடைபெற்ற தேர்தலில் தாழ்த்தப்பட்ட மக்கள் யாழ்ப்பாணத்தில் டக்ளசுக்கே வாக்களித்தனர் என்று நிறுவும் முயற்சியுடன் எழுதிய கட்டுரை ஒன்று. இலங்கைப் பிரச்சனையில், தமிழகக் கட்சிகளின் நிலைப்பாடு, மத்திய அரசின் நிலைப்பாடு என்பன பற்றி இவர் கூறும் கருத்துக்கள் முக்கியம் வாய்ந்தனவாக இருப்பினும், ஒரு காலத்தில் வியந்து பார்த்த அ.மார்க்ஸ் இத்தனை சிறு பிள்ளைத்தனமாகவா ஓரின மக்களின் வாழ்வாதார பிரச்சனை பற்றி செயற்படுவார் / சிந்திப்பார் என்பது புரிவதே இல்லை.
ஈழநேசன் இணையத் தளத்துக்காக எழுதப்பட்டது.
hi.. just dropping by here… have a nice day! http://kantahanan.blogspot.com/
LikeLike