G8/G20 கொண்டாட்டங்களில் தொலைந்துபோன மனித நேயம்

கனடாவில் G8 மற்றும் G20 கூட்டங்களுக்கான ஆயத்தங்கள் நடந்து கொண்டிருக்கும்போது நண்பர் ஒருவர் G20 என்றால் என்னவென்று கேட்டார். இயலுமானவரை சுருக்கமாக எப்படி விளங்கப்படுத்தலாம் என்று யோசித்தேன். சட்டென்று பொறி தட்டக் கூறினேன் “பாட்ஷா திரைப்படத்தில் ரகுவரன் எல்லாக் கொள்ளைக்காரர்களையும் அழைத்து தாம் ( கொள்ளைக்காரர்கள்) நன்றாக இருக்கவும் மென்மேலும் கொள்ளை அடிக்கவும் தம்மிடையே புரிந்துணர்வுடன் இருப்பது எவ்வளவு அவசியம் என்று (சாத்தான்) வேதம் ஓதுவார். அது போல உலகின் மிகப் பெரிய கொள்ளைக்காரர்களின் பிரதிநிதிகள் 20 பேர் சந்தித்து “chill” பண்ணுவதும் சாத்தான்களாக வேதம் ஓதுவதும் G20 என்றழைக்கப்படும்” என்று.


G20 என்னவென்று அவர்கள் சொல்லும் விளக்கம் கூட இதைத்தான் மறைமுகமாகச் சொல்லுகின்றது என்று நினைக்கிறேன். உலகின் மொத்த உற்பத்தியில் 85%இனையும், மொத்த வர்த்தகத்தில் 80% இனையும் இந்த G20ல் அங்கம் வகிக்கின்ற நாடுகளே தம் கைக்குள் வைத்திருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. (கவனிக்க ஐ.நாவில் உறுப்பிரிமை பெற்றிருக்கும் நாடுகள் மொத்தம் 192 ). உலகில் தொழிற்துறையில் முக்கியத்துவம் பெற்றிருக்கும் 19 நாடுகளையும், ஐரோப்பிய ஒன்றியத்தையும் சேர்ந்த நிதியமைச்சர்கள், அரசு தலைவர்கள். மத்திய வங்கி ஆளுனர்கள் ஒன்றிணைந்து உலகப் பொருளாதாரத்தை மென்மேலும் கட்டியெழுப்ப அல்லது திடப்படுத்த என்ன நடவடிக்கைகள் எடுக்

கவேண்டும் என்று ஆலோசனை செய்வதும், முடிவெடுப்பதுமே இதன் முக்கிய அம்சங்களாகும். பொருளாதார ரீதியில் வளரும் நிலையில் உள்ள இந்தியா, மெக்சிகோ, ஆஜெந்தீனா உள்ளிட்ட பல நாடுகளும் இதில் அங்கம் வகிப்பது, வளர்ந்து வரும் முக்கிய நாடுகளின் வளர்ச்சியில் இந்தத் தலைவர்கள் எவ்வளளவு அக்கறையுடன் உள்ளனர் என்பது போன்ற தோற்றத்தை உருவாக்கலாம். ஆனால் நடைமுறையில் எந்த G7ன் தொடர்ச்சியாக G8 உருவானதோ அந்த நாடுகள் 90களின் இறுதியில் சந்தித்த பொருளாதார வீழ்ச்சியின்போது தம்மைத் திடப்படுத்திக் கொள்ளவே இந்த G20 இனை தோற்றுவித்தார்கள் என்பதே வரலாறு. இன்னும் தெளிவாகச் சொல்வதானால், குடி உயரக் கோன் உயர்வான் என்றார் ஔவையார், ஆனால் இவர்கள் சொல்வது கோன் உயரக் குடி உயரும் என்பது போன்றது. உலகின் மிகப் பெரும்பானமை பொருளாதாரத்தை தமது கைக்குள்ளே வைத்திருக்கும் இந்த நாடுகள் பொருளாதார நெருக்கடிகளைச் சந்திக்கும் போது அது உலகப் பொருளாதாரத்தைப் பாதிக்கும் என்கிற வாதம் ஓரளவு ஏற்றுக் கொள்ளக்கூடியதுதான். ஆனால் இப்படியான ஒரு தங்கியிருத்தல் நிலையை உருவாக்கியவர்களே இந்த G2 இலும் முயக்கியத்தவர்களாக இருக்கின்றனர் என்பதுதானே உண்மை. எனவே இந்த G20 போன்ற ‘நிறுவனங்கள்’ எடுக்கும் முடிவுகள் பற்றியும், நடவடிக்கைகள் பற்றியும் நாம் மிகுந்த அவதானத்துடன் கவனிக்கவேண்டியதும், எமது எதிர்ப்பை பதிவுசெய்யவேண்டியதும் அவசியமானதாகவே இருக்கின்றது.

கனடாவில் ரொரன்ரோ நகரில் இந்த G20 மாநாடு ஜூன் 27ல் நடைபெறுவதற்காக ஆயத்தங்கள் தொடங்கியபோதே அதற்கான எதிர்ப்புணர்வும் வளர்ந்து வந்தது என்றே சொல்லவேண்டும். அதிலும் முக்கியமாக ரொரன்ரோவின் மையப் பகுதியில் இந்த மாநாடு நடக்க திட்டமிட்டவுடனேயே, அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் நிச்சயம் மக்களின் அன்றாட நடவடிக்கைகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதும் தெளிவாகவே தெரிந்தது. அதன்படியே “Red Zone” மற்றும் “security zone” என்ற பெயரில் வலயங்கள் உருவாக்கப்பட்டு பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டது. 10,000 காவல்துறையினர் நாடெங்கும் இருந்து குவிக்கப்பட்டனர். காவல்துறையினரின் அதிகாரம் அதிகரிக்கப்பட்டது. இந்தப் பாதுகாப்பு வலயங்களில் தமது அடையாள அட்டைகளை காட்ட மறுப்பவர்களை கைது செய்யும் அதிகாரம் காவல்துறைக்கு ஜூன் 25 வெள்ளிக்கிழமை “ரகசியமாக” வழங்கப்பட்டது. (இது பலத்த எதிர்ப்பினை சந்தித்த பின்னர் G20 முடிந்த பின்னர் அப்படி ஒரு அதிகாரம் வழங்கப்படவே இல்லை என்று காவல்துறை ஆணையர் சாதிக்கிறார். இதில் என்ன வேடிக்கை என்றால் இதற்கு முன்னர் ஒரு ஊடகவியலாளர் சந்திப்பில் இதை ஏற்கனெவே ஒத்துக்கொண்டவரும் இவரே!). கனேடிய அரசு இந்த G20 திருவிழாக்களுக்கான தனது செலவுகள் மொத்தம் 1.24 பில்லியன் டொலர்கள் என்று அறிவித்தது. அதில் பாதுககாப்பு செலவுகள் மாத்திரம் 930 மில்லியன் டொலர்கள். கனேடிய அரசு இப்படிப் பணத்தை அள்ளி வீசியதும் (அண்மைக்காலமாக பல்கலாசார நிகழ்வுகளுக்கும், மக்களின் வாழ்வாதார தேவைகளுக்கும் ஒதுக்கப்படும் நிதியை ஒவ்வொரு பட்ஜெட்டின் போதும் நிதி நெருக்கடி என்று காரணம் காட்டி கனேடிய அரசு குறைத்து வருவது தெரிந்ததே) புதிய குடிவரவாளர்கள் மீது காட்டும் கறார்த் தனமும் குறிப்பாக தற்போது ஆட்சியில் இருக்கும் “பழமைவாதக் கட்சியின்” பிறகலாசார, மத எதிர்ப்பு மனப்பாண்மையும் மக்கள் மத்தியில் எதிர்ப்புணர்வைக் கிளப்பி இருந்தது உண்மை. அவற்றின் தொடர்ச்சியாகவே இந்த G20 எதிப்பு நடவடிக்கைகள் ஆரம்பமாகின.

ஜூன் 21 முதல் நடைபெற்ற இந்த எதிப்புகளில் அனைத்து அமைப்புகளும் கலந்து ஒரு ஊர்வலத்தை ஒழுங்கு செய்திருந்தனர். அதில் நாமும் கலந்து கொண்டோம். அன்றைய தினம் தான் காவல்துறையினரின் வரம்பு தாண்டிய அதிகாரம் மக்கள் மீது பாயத் தொடங்கியது. அதன் தொடர்ச்சியாகவே சனிக்கிழமையும், ஞாயிற்றுக்கிழமைகளும் இருந்தன. மொத்தம் 900 பேர் கைது செய்யப்பட்டனர். எல்லா விதமான அடிப்படை மனித உரிமைகளும் மீறப்பட்டன. கைது செய்யப்பட்டவர்கள் தமக்குரிய வக்கீல்களைத் தொடர்புகொள்ளவோ, உறவினர்களுக்கு தாம் கைது செய்யப்பட்டதை அறிவிக்கவோ கூட அனுமதி வழங்கப்படவில்லை. முதலில் கைது செய்யப்பட்ட இளைஞர் காது கேளாதவர். அவர் மீது சுமத்தப்பட்ட குற்றம் “காவல் துறையினர் சொன்னதைக் கேட்கவில்லை / கீழ்ப்படியவில்லை”. என்பது. ஒரு ஊடகவியலாளார் தூக்கி வீசப்பட்டு முகத்தில் குத்தப்பட்டார். பின்னர் அவர் காவல்துறை அதிகாரி ஒருவரிடம் ” Are your orders to punch journalists in the face? ” என்று கேட்டபோது அதிகாரி சக காவல்துறையினரிடம் சொன்ன பதில் “ok, just give him another punch”. அதைத் தொடர்ந்து ஊடலவியலாளரின் “மைக்கும்” பறித்து வீசப்பட்டது.

வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமை நடந்தவை பற்றி டிசே தமிழன் விரிவாக எழுதி வருகிறார். அவரது பதிவிற்கான இணைப்பு. மேலும் இது பற்றிய முக்கியமான வீடியோ இணைப்பொன்று இந்த இணைப்பிலே கிடைக்கின்றது சனிக்கிழமை நான்கு காவல்துறை வாகனங்கள் எரிக்கப்பட்டதையும், ப்ளாக் ப்லொக்கினரால் கட்டடங்கள், கடைகள் அடித்து நொறுக்கப்பட்டதையும் பற்றியே தொடர்ச்சியாக கூறி அவர்களைத் தீவிரவாதிகள் என்று கூறிவரும் காவல்துறையினரும் அவர்களுக்கு வக்காலத்து வாங்கும் ரொரன்ரோ மேயர் மில்லரும் இவற்றுக்கான தோற்றுவாய் தாம் தான் என்பதை ஒரு போதும் ஒத்துக் கொள்ளவில்லைப் போலத்தான் தெரிகிறது. அப்படி இருக்கும் பட்சத்தில் கனடாவில் இனி வரும் காலம் இது வரை இருந்த கனடா பற்றிய விம்பத்திலிருந்து முழுக்க முழுக்க வேறுபட்டதாய்ப் போகும் வாய்ப்புகள் மிக அதிகமாகவே இருக்கும். இந்த ஊர்வலத்தில் ரொரன்ரோவில் வாழும் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய சிறுபான்மையினருள் ஒருவரான தமிழர்கள் மொத்தம் பத்துக்கும் குறைவாகவே கலந்து கொண்டிருந்தனர். ஒடுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் சிறுபான்மையினருள் ஒருவரான நாம் இது போன்ற ஊர்வலங்கள், கூட்டங்களில் கலந்து கொள்வதன் மூலமே எம்மை வலுப்படுத்திக் கொள்ளவும், எமக்கான ஆதரவை அவர்களிடம் இருந்து பெற்றுக் கொள்ளவும் முடியும். சென்ற ஆண்டு ஈழத்தில் போர் உச்சமடைந்திருந்த போது No One Is Illegal அமைப்பினர் எமக்கு ஆதரவாக போராட்டத்தில் கலந்து கொண்டது நினைவிருக்கிறது. இது போன்ற வாய்ப்புகளைத் தவறவிட்டு விட்டு, இந்தியப் பிரதமருக்கு தந்தி, அமெரிக்க ஜனாதிபதிக்குத் தொலைபேசி போன்றவற்றையே எமது போராட்ட வடிவங்களாக வைத்திருந்தால் எம்மால் அடுத்த கட்டத்துக்கு நகரவே முடியாமல்தான் இருக்கும்.

பின்குறிப்பு:
ஒரு எதிர்ப்பு ஊர்வலம் ஒன்றில் இது போன்ற செயற்பாடுகள் ஊர்வலத்தின் ஒட்டு மொத்த நோக்கையே திசை திருப்பிடக்கூடியனவ. அதே நேரம் பல்வேறு அமைப்புகள் சேர்ந்து ஒருங்கிணைத்த இந்த ஊர்வலத்தை Black Bloc என்ற ஒரு அமைப்பு செய்த அத்து மீறல்களுக்காக ஒரு போதும் நிராகரிக்க முடியாது.

One thought on “G8/G20 கொண்டாட்டங்களில் தொலைந்துபோன மனித நேயம்

Add yours

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

Website Powered by WordPress.com.

Up ↑

%d bloggers like this: