1

அண்மையில் அதிகம் பாதித்த புத்தகம் என்று அடிக்கடி எழுதுவது சலிப்பைத் தந்தாலும், அண்மைக்காலமாக வாசித்த அனேகம் புத்தகங்கள் மனதளவில் பாதிப்பைத் தந்தனவாகவே இருக்கின்றன. “லிவிங் ஸ்மைல்” வித்யாவின் “நான் வித்யா”வை வாசித்தது அரவாணிகள் பற்றி இன்னும் அதிகம் வாசிக்கவேண்டும், அவர்கள் வாழ்க்கையைப் பற்றி, அவர்கள் எதிர் நோக்கும் பிரச்சனைகள் பற்றி தெரிந்து கொள்ளவேண்டும் என்ற ஆர்வத்தை ஏற்படுத்தி இருந்தது.


அந்த வகையில் ரேவதி தொகுத்த “உணர்வும் உருவமும்”, மற்றும் மகாராசன் தொகுத்த “அரவாணிகள்; உடலியல் – உளவியல் -வாழ்வியல்” என்ற இரண்டு புத்தகங்களை தொடர்ச்சியாக வாசித்தேன். ப்ரியா பாபு எழுதிய “மூன்றாம் பாலின் முகம்” நாவலை இப்போது வாசிக்கத் தொடங்கியுள்ளேன்.


இதில் “அரவாணிகள்; உடலியல் – உளவியல் -வாழ்வியல்” தொகுப்பில் கிட்டத்தட்ட அரவாணிகள் பற்றித் தமிழில் வந்த அனேகமான எல்லாக் கட்டுரைகள் பற்றியும், நாவல்கள் பற்றியும், சிறு கதைகள் பற்றியும் குறிப்பிட்டுள்ளதோடு, அரவாணிகள் பற்றிய சமூக ஆர்வலர்கள், மருத்துவர்கள், இலக்கியவாதிகள் என்று பலதரப்பட்டவர்களின் கருத்துக்களையும் பதிந்து உள்ளார்கள். அலிகள், அரவாணிகள், திருநங்கைகள் என்று பல்வேறு பெயராலும் இவர்கள் குறிபிடப்பட்டு வருகிறார்கள்.


முதலில் இந்தப் பெயர் குழப்பமே எம்மில் நிறையப் பேருக்குத் இன்றுவரை குழப்பமாகவுள்ளது. அலிகள் என்றே இவர்கள் அழைக்கப்பட்டு வந்துள்ளார்கள். சமூகத்தின் எல்லா மட்டத்தாலும் ஒதுக்கப்பட்டு, அலி என்பதே ஒரு வசைச் சொல் போலாகிவிட்ட நிலையில், 1998ல் விழுப்புரத்தில் மருத்துவர் மனோரமா ஒழுங்கு செய்திருந்த எய்ட்ஸ் விழிப்புணர்வுக் கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட காவல்துறை கண்காணிப்பாளர் ரவி என்பவரே, மகாபாரதத்தில் வருகின்ற அரவான் கதையைச் சுட்டிக்காட்டி, இனிமேல் அரவாணி என்றே இவர்கள் அழைக்கப்படவேண்டும் என்று அறிவித்தார்.


அதன் பின்னர், எந்த விதமான ஜாதி மத வேறுபாடுகளும் காட்டாமல் ஒன்று பட்ட ஒரே சமூகமாக அரவாணிகள் வாழ்கின்ற போது இந்து மதம் சார்ந்த அரவாணி என்கிற பெயர் பாவிக்கப்படுவது முறையாக இருக்காது என்ற விவாதம் வந்த போது அதற்கு மாற்றாக மூன்றாம் பாலினர் என்ற சொல் முன்மொழியப்படுகிறது. அதே நேரம் நர்த்தகி நடராஜ் போன்றவர்கள் திருநங்கை என்ற பெயரையும், அரவாணிகளுக்கான இந்திய அளவினாலான முதலாவது அமைப்பான “தா (THAA)”வினைத் தோற்றுவித்த ஆஷா பாரதி போன்றவர்கள் பாலியல் திரிந்தவர்கள் என்ற பெயரையும் முன்வைக்கின்றனர்.


சமூகத்தின் முன் மாதிரிகளாக இருக்கவேண்டிய திரைப்படத் துறையினர் மூன்றாம் பாலினரைச் சித்திரிக்கும் விதம் பற்றிய இவர்களின் நியாயமான கோபம் இந்தப் புத்தகத்தில் பல இடங்களில் சொல்லப்பட்டிருக்கின்றது. முன்பு வேட்டையாடு விளையாடு திரைப்படம் வெளியான போது லிவிங் ஸ்மைல் வித்யா ஜூனியர் விகடனில் அத் திரைப்படத்தில் மூன்றாம் பாலினர் காட்டப்பட்ட விதம் பற்றி காட்டமான கட்டுரை ஒன்றை எழுதி இருந்தார்.


உண்மையில் பெரும்பாலான திரைப்படங்களில் மூன்றாம் பாலினர் வரும் காட்சிகள் எல்லாம் அவர்களைக் கேவலமாக சித்திரிப்பதாகவே இருக்கின்றன. அதிலும் இதில் ஒரு கட்டுரையில் “திரைப்படங்களில் பத்து கேவலமான காவல் துறையினரைக் காட்டினால் ஒரு நல்ல காவல் துறையினரையாவது காட்டுவார்கள், பத்து கேவலமான அரசியல்வாதிகளைக் காட்டினால் ஒரு நல்ல அரசியல்வாதியையாவது காட்டுவார்கள். இது பொதுவாக இருக்கின்ற ஒரு வழமை. அப்படி இருக்கின்ற போது ஏன் மூன்றாம் பாலினரை மாத்திரம் ஏன் ஏன் முழுக்க முழுக்க கேவலமாகவே சித்திகரிக்கின்றனர்” என்ற நியாயமான கேள்வி ஒன்றை முன்வைக்கின்றார். இது பற்றி பெரும்பாலானவர்கள் – இதை எழுதி கொண்டிருக்கும் நான் உட்பட – சிந்திப்பதேயில்லைத் தானே. பம்பாய் திரைப்படத்தில் தப்பி ஓடும் சிறுவனை ஒரு அரவாணி காப்பாற்றுவது போல காட்சி அமைத்தார் என்பதற்காகவே மணிரத்னத்துக்கு நன்றி சொல்லும் அளவுக்கு தமிழ்த் திரைப்படங்களில் அரவாணிகள் பற்றிய சித்திகரிப்புகள் இருக்கின்றன.
அது போல மூன்றாம் பாலினரை முக்கிய கதாபாத்திரங்களாக வைத்து க. சமுத்திரம் எழுதிய “வாடாமல்லி” நாவல் பற்றியும் நிறையப் பேர் சொல்லி இருக்கின்றனர். நான் இது வரை அந்தப் புத்தகத்தை வாசிக்கவில்லை. அதே நேரம் “மதி எனும் மனிதனின் மரணம் குறித்து” என்ற இரா. நடராசன் எழுதிய சிறுகதை எல்லாரும் வாசிக்க வேண்டிய ஒன்று. இந்த தொகுப்பில் கி.ரா எழுதிய இரண்டு சிறுகதைகள் இருக்கின்றன. அந்தக் கதைகளை கி.ரா என்ன காலப்பகுதியில் எழுதினார், அவர் எழுதியபோது அரவாணிகள் பற்றிய விழிப்புணர்வு எந்தளவு இருந்தது என்று தெரியாது. ஆனால் இரண்டு கதைகளிலும், கிரா அரவாணிக் கதாபாத்திரங்களை கடைசிவரை அவன் என்றும் அது என்றுமே குறிப்பிடுகிறார். கதையின் இறுதி பகுதியிலாவது அவள் என்ற பிரயோகத்தை மேற்கொண்டிருக்கலாம்; ஆனபோதும் கிரா போன்ற முக்கியமான எழுத்தாளர்களின் அரவாணிகளின் பிரச்சனைகளை, வாழ்க்கையை சரியான புரிதலுடன் எழுதுவது முக்கியமானதென்றே நினைக்கிறேன்.
2

இரண்டு வாரங்களுக்கு முன்னர் உயிரோசை இணைய இதழில் வாஸந்தி அருந்ததி ராய் எழுதிய ஒரே புத்தகம் என்ற பெயரில் ஒரு கட்டுரையை எழுதி இருந்தார். ஒரு கட்டுரை என்று உயிரோசையில் குறிப்பிடப்பட்டிருந்தாலும்’ இதில் வாஸந்தி அடக்கி இருந்ததெல்லாம் அவர் அப்படிச் சொன்னார், இவர் இப்படிச் சொன்னார், இன்னொருவர் அப்படிச் சொன்னார் என்ற வகையில் பெயர்களைக் கூடக் குறிப்பிடாமல் அருந்ததி ராய் மீதான வசைபாடல்களின் தொகுப்பே. இப்படி எல்லாம் சொல்லி விட்டு கட்டுரையில் தனது கருத்தாக அருந்ததி ராய் எழுதிய god of small things பற்றி வாஸந்தி முன்வைப்பது

“நான் அவரது நாவலை மிகவும் ரசித்துப் படித்தேன். ஹார்ப்பர் லீயின் நாவல் அவருக்கு ஆதர்ஷமாக இருந்திருக்கலாம். ஆனால் God of Small Things அருந்ததி கையாண்ட ஆங்கில மொழிக்கும், மனித நேயப் பார்வைக்கும் நாவலின் கட்டுமானத்துக்கும் தனிச் சிறப்பு வாய்ந்ததாக எனக்கு மகிழ்ச்சி அளித்தது.

இதைத்தான் பிடி கொடுக்காமல் எழுதுவது என்று சொல்லுவார்கள் என்று நினைக்கிறேன். வாஸந்தியின் பிடி கொடுக்காமல் எழுதும் எழுத்துக்கு இன்னொரு உதாராணம் இதே கட்டுரையின் கடைசிப் பந்தியில் இருக்கிறது. 

“அவர் அடுத்ததாக படைப்பிலக்கியத்தில் கவனம் செலுத்தாமல் சமூகப் போராளியாக தன்னை இனம் காட்டிக்கொண்டதும் படைப்புத்திறன் விடைபெற்றது. அவரது சமீபகால பேச்சுக்கள் சர்ச்சைக்குரியவை. முரணானவை. படைப்பிலக்கியவாதிகள், எழுத்தாளர்கள் அவரிடமிருந்து விலகிவருகிறார்கள். அவர் தனிமையில் தனது வெறித்தனமான கருத்துக்களை மெல்லிய குரலில், கன்னக் குழிவிழும் புன்னகையுடன் சொல்கிறார். புலிவாலைப் பிடித்துக்கொண்டுவிட்ட நிலையில் அவர் இருப்பதாகத் தோன்றுகிறது.

அதாவது இவர் அருந்ததி ராயை திட்டுகிறாரா அல்லது பாராட்டுகிறாரா என்பதே தெரியவில்லை. இதே கட்டுரையில் ஓரிடத்தில் 

“ஆனால் அருந்ததியின் சமீபகால பேச்சுக்கள், ஜனநாயக விரோதமான அதிரடி அறிக்கைகள், மாவோயிஸ்டுகளின் கொடூரமான வன்முறைச் செயல்களுக்கு தூபம் போடுவதுபோல வக்காலத்து வாங்குவதுபோலப் பேசும் பேச்சுக்கள், தொலைக்காட்சியில் பலர் பார்க்க சொல்லும் கருத்துக்கள்” 

என்றெழுதுகிறார் வாஸந்தி. இந்தக் கட்டுரை வெளியானது இதழ் 95, யூன் 2010 ல். ஆனால் யூலை 2010 உயிர்மை இதழில் ரவிக்குமார் அருந்த்தி ராய் பற்றி எழுதிய கட்டுரையில் அருந்ததி ராய் வன்முறையத் தூண்டுவதுபோலவும், வன்முறையை ஆதரிப்பது போலவும் இந்திய அரசு இயந்திரம் மற்றும் அதன் கைக்கூலிகளால் பிரச்சாரம் செய்யப்படுகின்றது என்கிறார். அப்படியானால் வாஸந்தி……??.

3

அண்மையில் ட்வீற்றரில் நண்பர் ஒருவர் விஜய் டீவியின் நீயா நானா நிகழ்ச்சியொன்றில் கரும்புலிகள் குடும்பத்தில் மூத்த பிள்ளைகள் கொல்லப்படும்போது பெற்றோர்கள் பழி தீர்க்கப் புறப்படுவதால் உருவாகின்றார்கள் என்ற அபத்தமான கருத்தொன்றைத் தெரிவித்திருந்ததாகச் சுட்டிக் காட்டியிருந்தார்.


சற்று யோசித்துப் பார்த்தால் இது போன்ற அபத்தங்கள் நிகழ்வது ஒன்றும் எமக்குப் புதியது அல்ல. இதிலும், இது போன்ற அபத்தமான கருத்துக்களை அள்ளி வீசுபவர்கள் பொதுவாக ஏதாவது பிற துறைகளில் தனித்த ஆளுமைகளுடன் விளங்குபவர்கள். எனவே இது போன்ற விடயங்களுக்கு மூல காரணம் ஏதாவது துறைகளில் சிறப்பாகச் செயற்படுபவர்கள் குறுகிய காலத்திலேயே கருத்துக் கந்தசாமிகளாக மாறி, எந்த வித அறிவும் இன்றி / போதிய அறிவு இன்றி பொறுப்பில்லாமலும், மேலோட்டமாகவும் இது போன்ற கருத்துக்களை அள்ளி வீசிச் செல்லுகிறார்கள். குறித்த துறைகளைப் பற்றிய ஆழமான ஆரிவும், படிப்பும் கொண்டோரால் இது போன்ற கருத்துக்கள் உடனடியாக நிராகரிக்கப்படும் அதே வேளை, இவர்களுக்கு இருக்கும் புகழ் வெளிச்சம் காரணமாக கணிசமான மக்களிடம் இவர்கள் சொல்லும் கருத்துக்கள் போய்ச் சேர்ந்து விடுவதும் உண்டு. அப்படியாகும் பட்சத்தில் இவர்கள் மறைமுகமாக சமூகத்தில் நச்சு விதைகளை அள்ளித் தூவும் பணிகளையே செய்துவருகிறார்கள்.


நடிகர்களிடம் அரசியல் ரீதியான மிக முக்கியமான விடயங்களில் கருத்துக் கேட்பது (இந்தியாவில் நதி நீர் இணைப்பு போன்றவை), புனைவெழுத்தாளர்களிடம் அரசியல் சார்ந்த விடயங்களையும், கோட்பாடு சார்ந்த விடயங்களையும் கேட்பது என்று பலதரப்பில் அடங்கும் இது போன்ற கருத்து கந்தசாமித்தனங்கள். எந்த துறையிலும் பிற துறைகள், நடப்பு விவகாரங்கள் என்பன குறித்து தெளிவாகவும், ஆழமாகவும் சிந்திக்கவும், கருத்துச் சொல்லவும் கூடிய நிறையப் பேர் இருப்பார்கள். ஆனால் அதெல்லாம் விதிவிலக்காக நிகழ்வன. விதிவிலக்குகளைத் தவிர்த்து, தமக்கு தெரியாத / தெளிவில்லாத விடயங்கள் பற்றி கேள்விகள் கேட்கப்படும்போது சம்பந்தப்பட்டவர்கள் தாமாகவே இது பற்றித் தமக்குத் தெரியாது என்று சொல்லி விலகிவிடுவதே நலம்.


இப்பொழுது சாரு நிவேதிதா தான் தான் அடுத்த சுஜாதா என்று அறிவித்து விட்டு எல்லாவற்றைப் பற்றியும் ஏதாவது உளறி வைக்கிறார். சாரு முன்னர் சில நல்ல அரசியல் கட்டுரைகள், உலக இசை பற்றிய கட்டுரைகள், இலக்கியப் பிரதிகள் மீதான கட்டுடைத்தல் விமர்சனம் என்று எழுதி இருகிறார். ஆனால் இப்போது அவர் எழுதும் நிறைய விடயங்கள் எந்த விதமான ஆழமான பார்வையும் இன்றி வெறும் நுனிப்புல் மேய்ந்து செல்பவை.


சுஜாதாவை எடுத்துக் கொண்டால் கூட, அவரது பத்தி எழுத்துக்களிற்குரிய முக்கியத்துவம் அவை நிறைய விடயங்களை, புத்தகங்களை அறிமுகம் செய்துவைப்பவை என்பதே. ஆனந்த விகடனில் அவர் இருத்தலியம் பற்றி ஒருமுறை எழுதி இருந்தார். அதில் இருத்தலியம் என்பதற்கு பதில் ‘இருத்தல் கொள்கை’ என்று பாவித்ததுடன் சார்த் பொறுப்பினமையைப் போதித்தார், அவரே வாழ்வில் பொறுப்பில்லாமல்தான் திரிந்தார் என்றெல்லாம் எழுதி இருந்தார் சுஜாதா. அதற்கு ரவி ஸ்ரீநிவாஸ் தன் பதிவுகளில் எதிர்வினை ஆற்றி இருந்தார். இதெல்லாம் நடந்தது 2005ல் என்று நினைக்கிறேன். எனக்கு அப்போது சார்த் பற்றியோ, இருத்தலியம் பற்றியோ எதுவுமே தெரியாது. இப்போது ஓரளவு சார்த் பற்றியும் இருத்தலியம் பற்றியும் வாசித்த பின்னர்தான் சுஜாதா எழுதியது எவ்வளவு பிழையானது ஏன் ஒரளவுக்கு நேர் எதிரானது என்பது தெரிகிறது. சுஜாதா ஒப்பீட்டளவில் மற்றவர்களை விட அதிகளவு விடயங்களை வாசகர்களுக்கு அறிமுகம் செய்து வைத்திருக்கின்றபோதும் அவரது எழுத்துக்கள் பூரணமாகவோ அல்லது ஆழமாகவோ எதுவித அறிவையும் அவர் வாசகருக்குத் தரப்போவதில்லை. இங்கு ஒரு உதாரணத்துக்கு சுஜாதாவை எடுத்துக் காட்டியிருந்தாலும் தமிழ் ‘இலக்கியவாதிகள்’ மத்தியில் வளர்ந்துவரும் கருத்துக் கந்தசாமிகள் பற்றி நாம் தெளிவாக இருக்கவேண்டியது அவசியம்.published in http://www.eelanation.com/