எந்த ஒரு மொழியிலும் சொற்கள் கால ஓட்டத்தில் தமக்கான அர்த்தத்தை இழந்து விடுவது அல்லது வேறு அர்த்தங்களுடன் அழைக்கப்படுவது நடந்து கொண்டு இருப்பதுடன் சில சொற்கள் அவை கொண்டிருந்த அர்த்தத்துக்கு எதிரான அர்த்தத்துடன் பொருள் கொள்ளப்படுவதும் நடந்து கொண்டேதான் இருக்கின்றது. கற்பூரம் நாறுமோ கமலப்பூ நாறுமோ என்று கிருஷ்ணனின் கையில் இருக்கின்ற வெண்சங்கிடம் கேட்பதாக ஆண்டாள் பாடிய பாடலில் நாற்றம் என்பது இப்போது வாசனை என்ற பொது வழக்கில் பயன்படுத்தப்படும் சொல்லாக மாறிவிட்ட்து. நாற்றம் என்பது கெட்ட வாசனை அதாவது ஏற்கனவே இருக்கின்ற துர்நாற்றம் என்ற சொலுடன் ஒத்த பொருள் கொண்ட சொல்லாகவே தொடர்ந்து பயன்படுத்தப்படுகின்றது.
இப்படியாக தற்கால தமிழில் பொருள் நீக்கம் செய்யப்பட்ட சொற்களைக் கொண்டு மிகப்பெரிய பட்டியல் ஒன்று தயாரிக்கலாம். கால ஓட்ட்த்தில் மெல்லப் பொருள் இழந்தவை தவிர, மிகக் குறுகிய காலத்தில் அரசியல், திரைப்பட மற்றும் இலக்கியத் துறையினரால் பொருள் நீக்கம் செய்யப்பட்ட சொற்களும் அதிகம் உண்டு. சுயமரியாதை, பகுத்தறிவு, கம்யூனிஸ்ட் போன்ற சொற்களின் அர்த்தம் இவற்றை அடிக்கடி உச்சாடனம் செய்பவர்களுக்குக் கூட தெரிந்திருப்பதில்லை என்றே நினைக்கிறேன். அண்மையில் கருணாநிதி எஸ். வி. சேகர் என்கிற கோமாளி நாடகக்காரரை எம். ஆர் ராதாவுடன் ஒப்பிட்டுப் பேசியதெல்லாம் இந்த வகையில்தான் அடங்கும். இது போலத்தான் முன்னரும் பெரியாரின் சீடன் அடிக்கடி தன்னைத்தானே அழைத்துக் கொள்ளும் நடிகர் விவேக்கை சின்னக் கலைவாணர் என்று அழைத்துத் தூக்கி வைத்துக் கொண்டாட அவர் குமுதம் இதழுக்கு வழங்கிய பேட்டி ஒன்றில் தன்னுடன் சீண்டினால் தேவர் சமுதாயமே பொங்கி எழும் என்ற பொருள் பட பேசி தன்னை வெளிக்காட்டிக் கொண்டார். ஊருக்கெல்லாம் பிரம்மசாரியம் போதித்த நித்தியானந்தர் அவரது புகழ் பெற்ற வீடியோ ஒளிபரப்பாகுவதற்கு சில நாட்களுக்கு முன்னர் எழுதிய கட்டுரை ஒன்றில் இந்திரியங்களை அடக்குவது, புலனடக்கம் பற்றியெல்லாம் விளாசித்தள்ளி இருக்கிறார்.

தமிழ் அரசியல் பரப்பில் அண்மைக்காலமாக மாற்றுக் கருத்து என்ற சொல் பார்க்கும் இடமெல்லாம் நீக்கமற நிறைந்திருக்கிறது. மாற்றுக் கருத்து, மாற்றுக் கருத்து என்று பேசுபவர்களில் பலருக்கு மாற்றுக் கருத்து என்றால் என்ன என்ற எண்ணம் தோன்றியதே கிடையாது. மாற்றுக் கருத்தாளர்கள் என்போர் கிண்டலடிக்கப்படுவதற்கான காரணமும் இதுதான். புலி எதிர்ப்பாளர்கள் எல்லாருமே மாற்றுக் கருத்தாளர் என்றே அழைக்கப்படுவதுடன் அவர்களும் அப்படியே நினைத்துக் கொள்ளுகின்றனர். புலியை எதிர்ப்பது மாற்றுக்கருத்து என்றால் சோ ராமசாமி தமிழ் அரசியல்பரப்பில் மிக முக்கியமான மாற்றுக் கருத்தாளர். தவிர ராஜபக்சே குடும்பம் முதல் சுப்ரமணியம் சாமி வரை இந்தப் பட்டியலில் அடக்கப்படும் மாற்றுக் கருத்தாளர்களின் பெயர்களைப் பார்த்தால் ஏதாவது ஒரு நெடுஞ்சாலையில் நடு இரவில் போய் பிரதட்டை அடிக்க வேண்டும் போல இருக்கின்றது. புலிகளை எதிர்ப்பது, புலிகள் செய்த தவறுகளைப் பட்டியல் போடுவது என்பதில் மட்டும் கண்ணும் கருத்தாக தம்மை மாற்றுக் கருத்தாளர்கள் என்று கூறிக்கொள்வோர் அதிகம் அக்கறை காட்டி வந்ததால்தான் புலிகள் செய்வது தவறு, தவறு என்று கூறினீர்கள். இப்போது புலிகள் முற்றாகவோ அல்லது பெருமளவோ அழிக்கப்பட்டு ஓராண்டும் ஆகிவிட்ட்து. நீங்கள் இனி என்ன செய்யப் போகிறீர்கள் என்கிற கேள்விக்கு எந்த விடையுமே சொல்ல முடியாமல் இருக்கின்றார்கள். குறைந்த பட்சம் புலிகளுக்கென்று ஒரு செயற்திட்டமேனும் (அதில் நிறைய குறைகள் இருந்தாலும் கூட) இருந்தது. ஆனால் இவர்களுக்கோ புலி எதிர்ப்பு என்ற விடயம் மாத்திரமே நிகழ்சி நிரல் முழுவதுமாக இருந்தது என்று மக்கள் எண்ணத் தலைப்படுகிறார்கள்.(இதே நேரம் 24 வருடங்களாக புலிகள் மிகப் பெரும்பான்மையான் தமிழ் மக்களின் ஆதரவுடன் இருந்தார்கள். அதன் பின்னர் நினைத்துப் பார்க்கவே முடியாத ஒரு வீழ்ச்சிக்கு அல்லது அழிவுக்கு உட்பட்டார்கள். ஆனால், ஈழத்தில் தமிழ் இனமே பேரழிவொன்றுக்கு உட்படுத்தப்பட்ட பின்னரும், புலிகளின் தோல்வியை ஒப்புக் கொள்ளாமல் உங்களாலும் செய்ய முடியவில்லைத்தானே என்று புலி ஆதரவாளர்கள் கேட்பதுவும் அயோக்கியத்தனமானது. நாம் தமிழீழத்தை அடைந்தே தீருவோம் என்று சொல்லிப் பெரும்பான்மைத் தமிழர்களின் ஆதரவுடன் புலிகள் போராடினார்கள். தமது கருத்துகளுடன் உடன்படாதவர்களை எல்லாம் துரோகி என்று முத்திரை குத்தி ஒதுக்கினார்கள். அப்படி ஒதுக்கப்பட்டவர்கள் சொன்னவற்றைப் பெரும்பான்மைத் தமிழ் மக்கள் கேட்கவும் இல்லை, நம்பவும் இல்லை. இப்படி ஒட்டு மொத்த தமிழ் மக்களின் ஆதரவையும் தாண்டி ஒரு மாபெரும் அழிவுக்கு உட்பட்டு சிங்களத்தின் கையில் தமிழர் வாழ்ந்த அனைத்துப் பிரதேசங்களையும் தாரை வார்த்துக் கொடுத்தபின்னர், அந்த வீழ்ச்சியை ஒப்புக் கொள்ளாமல், அதற்குரிய காரணங்களை நேர்மையாக ஆராயமல், உங்களாலும் ஏலாதுதானே என்று அலட்டிக் கொண்டிருப்பது கூட எம்மால் ஒரு நல்லது நடக்காவிட்டால் வேறு எவராலும் நடக்க்க்கூடாது என்று நினைக்கிற அழுகுணித்தனமன்றி வேறில்லை)
தமிழகத்தில் லீனா மணிமேகலையின் கவிதைகளை ஒட்டி சில சர்ச்சைகள் எழுந்தபோது “வந்தேன் சார்” என்று வரவுப் புத்தகத்தில் பதிவு வைத்துக் கொள்வது போல காலச்சுவடில் சில கருத்துகள் உதிர்க்கப்பட்டிருந்தன. இதற்கு எதிர்வினையாக மனுஷ்யபுத்திரன் உயிரோசையில் எழுதிய கட்டுரை ஒன்றில் மாற்றுக் கருத்து/சிந்தனை பற்றி சொன்ன சில கருத்துக்கள் முக்கியமான்வை.
“கட்டுரையாளர் தன்னை மாற்றுச் சிந்தனையாளர் மற்றும் தனது பத்திரிகையை மாற்றுச் சிந்தனைக்கான தளம் என பேச்சோடு பேச்சாக நிறுவ முற்படுகிறார். இது மிகவும் ஆபாசமானது. ‘உயிர்மை’, ‘காலச்சுவடு’, ‘தீராநதி’ போன்ற இதழ்கள் எதுவும் பரந்த கருத்துகளுக்கான ஒரு களமே தவிர மாற்றுச் சிந்தனைக்கான இதழ்கள் அல்ல. மாற்றுச் சிந்தனை என்பது திட்டவட்டமான அரசியல் கருத்தியல்களையும் கோட்பாடுகளையும் கொண்டது. Alternative thinking என்பதையும் difference of opinionஎன்பதையும் கட்டுரையாளர் குழப்பிக் கொள்வது அவருக்குத்தான் ஆபத்தானது. தி.மு.க. எதிர்ப்பு என்பதை மாற்றுச் சிந்தனை என்று கொண்டால் ‘நமது எம்.ஜி.ஆர்’ தான் தமிழின் சிறந்த மாற்றுப் பத்திரிகை. ‘காலச்சுவடு’ அல்ல.” – உயிரோசை மே 17,2010.
இங்கு கட்டுரையாளர் இதழ்கள் பற்றிக் குறிப்பிட்டிருந்தாலும், அவை அரசியல், மற்றும் சமூக அமைப்புகளுக்கும் கூட முழுக்கப் பொருத்தமானதே
எத்தனை பேர் கொல்லப்பட்டார்கள் என்றோ அல்லது எத்தனை பேர் கொல்லப்பட்டார்கள் என்ற என்ற எந்த எண்ணிக்கையுமே தெரியாத அளவுக்கு மக்கள் கொத்துக் கொத்தாக கொன்று தள்ளப்பட்டு ஒரு வருடம் ஆகியும் கூட இன்று வரை போதுமான நகர்வுகளோ அல்லது சலனங்களோ ஏற்படவில்லை என்பதுதான் உண்மை. புலிகளுக்குப் பின்னாலான அரசியலை கட்டியெழுப்ப்ப் போவதாகச் சொல்லிக்கொள்பவர்கள் அல்லது கட்டியெழுப்ப முற்படுபவர்கள் கூட தமது கூட்டங்களில் தமது செயல்திட்டங்கள் பற்றியோ அல்லது, மாற்று அரசியல் எப்படியாக இருக்கப் போகிறது என்பது பற்றியோ இதுவரை எதுவிதமான கருத்துக்களையும் கூறவில்லை என்பது மாத்திரமல்ல அனுமான்ங்களைக் கூட ஏற்படுத்தவுமில்லை. மக்களும் கூட புலித்தலைமையின் இருப்பு/இறப்புக் குறித்தான விவாதங்களிலும், கற்பனைகளிலும் செலுத்தும் கவனத்தை போருக்குப் பின்னரான ஈழம் பற்றிய விடயங்களில் செலுத்துவதில்லை. புலிகளுக்குப் பின்னரான அரசியற் கூட்டங்களை புலம்பெயர் நாடுகளில் நடத்துபவர்களுக்கு ஈழத்தில் மக்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள் அல்லது அவர்களுக்கு தற்போதைய தேவை என்ன என்பது பற்றி எந்த அக்கறையும் இல்லை. அவரவர்க்கு அவரவர் “கல்லா” நிரம்பவேண்டும். இந்தியாவில், குறிபாக தமிழகத்தில் இப்போது ஈழம் சுடச் சுட வியாபாரம் ஆகும் பண்டம். அரசியல் கட்சிகள் தமக்குறிய ஆதாயத்திற்கேற்ப ஈழ ஆதரவு மற்றும் எதிர்ப்பு நிலைபாடுகளை எட்டுக்கின்றன. புதிய மற்றும் வளர்ந்து வரும் கட்சிகளுக்கு ஈழவிவகாரம் தம்மைப் பிரபலப்படுத்தும் ராஜதந்திரம். இதழ்கள் தத்தம் வழியிலேயே தம் இதழ்களை விற்றுத் தள்ளிவிட ஈழம் பற்றிய கதைகளை அள்ளி விடுகின்றன. நக்கீரன் தொடக்கி வைத்த பிரபாகரன் இறந்த செய்தியை பிரபாகரனே தொலைக்காட்சியில் பார்ப்பது போன்ற அட்டைப்படம் முதல், ஜூனியர் விகடனில் வந்த “குருவி பறந்திடுச்சி” போன்ற கட்டுரைகள் உட்பட, கல்கியில் பிரபாகரன் பற்றி கேட்ட ஜோசியம் முதற்கொண்டு ஈழப் பிரச்சனை தமிழக வணிகப் இதழ்களுக்கு அள்ள அள்ள தங்கம் தரும் சுரங்கம். எரிகிற வீட்டில் பிடுங்கியது லாபம் என்று கிழக்குப் பதிப்பகம் புலித்தலைமையின் அழிப்பு பற்றிய செய்திகள் பரவிய கையோடே பிரபாகரன் வாழ்வும் மரணமும் என்றும் ராஜீவ் காந்தி கொலை வழக்கு என்றும் வழமை போலவே அரை குறைத் தகவல்களும் திரிப்புகளுமாக புத்தகம் வெளியிட்டு கொள்ளை அடித்த்து.

இலங்கையில் தமிழர் வாழ்ந்த பூர்வீக நிலங்கள் மெல்ல மெல்ல சூறையாடப் பட்டு, சட்ட பூர்வமான முறையிலேயே தமிழர் பிரதேசங்கள் சிங்கள பௌத்த மயமாக்கப்பட்டு வருகின்ற அதே காலத்தில் புலம் பெயர் நாடுகளிலும், தமிழகத்திலும் இருக்கும் ஈழ மக்கள் நலனில் அக்கறை கொண்டோரினதும், அப்படி அழைத்துக் கொள்வோரினதும் கவனம் ஐஃபா திரைப்பட விழா புறக்கணிப்பிலும், அசினின் இலங்கை விஜயம் பற்றிய விமர்சனங்கள் மற்றும் ஆய்வுகளிலும் மட்டுமே தங்கிவிட்டது அல்லது குவிந்திருப்பது நிச்சயமாகக் கவனிக்க வேண்டியது. இலங்கைக்கு ஐநா குழுவினர் அனுப்பப்படுவதை எதிர்த்து சுவிஸில் வாழும் சிங்களவர்கள் கூடி தம் எதிர்ப்பைக் காட்டியபோது புலம்பெயர் நாடுகளில் இருந்து தமிழர்கள் இலங்கைக்கு ஐநா குழு அனுப்பப்படுவதற்கு ஆதரவு தெரிவித்தும் அதன் அவசியம் குறித்தும் தம் பரப்புரையை நிச்சயம் காட்டியிருக்கவேண்டும். ஆனால் துரதிஸ்டவசமாக இப்படி எதுவுமே நடக்கவில்லை. ரொரன்ரோவில் நடைபெற்ற G20 காலப்பகுதியில் தமிழர்களும் அந்த எதிர்ப்புகளில் கலந்து கொள்வது என்று முதலில் ஒரு தீர்மாணம் இருந்ததாகவும், இறுதி நேரத்தில் அரச தரப்பினையோ அல்லது காவல் துறையினரையோ சமரசம் செய்யும் நோக்குடன் அந்த தீர்மாணம் கைவிடப்பட்டதாகவும் அண்மையில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் ஒருவர் கூறியிருந்தார். அந்த செய்தி எத்தனை தூரம் உண்மை என்று தெரியாதிருப்பினும், G20 பற்றி கனடாவில் இருந்து வெளிவரும் பெருவாரியான பத்திரிகைகளும் புகழ்ந்து எழுதி இருந்தைப் பார்க்கின்றபோது அவர் சொன்ன தகவல் உண்மையானதாகவே இருக்கும் போல் தெரிகின்றது. அதிகாரத்தின் கீழ் நசுங்கிக் கிடக்கும் நாம் நமக்காக உதவுவார்கள் என்று அமெரிக்கா, இந்தியா என்கிற பிற அதிகார வர்க்கங்களின் நட்பைப் பெறும்படியாகவும், அவர்கள் சலனத்தைக் கவரும்படியாகவும் நம் நிகழ்ச்சி நிரலை அமைப்பதைப் போல முட்டாள்த்தனம் பிறிது இருக்காது.
ஈழத்தமிழர்களின் 30 ஆண்டுகள் நீண்ட அரசியல் போராட்டமும் பின்னர் 30 ஆண்டுகள் நடைபெற்ற ஆயுதப் போராட்டமும் நினைத்தே பார்த்திராத அளவு மிகக் கோரமான முறையில் முடிவுக்கு வந்திருக்கின்றன. இந்த நிலையில் எமது உடனடித் தேவை போரால் பாதிக்கப்பட்டு ஈழத்தில் வாழும் மக்கள் பற்றிய அக்கறைகளும், கைது செய்யப்பட்டு சிறையில் இருப்பவர்கள் தொடர்பான விடயங்களுமே. அதே நேரம் ஒரு நீண்ட கால அடிப்படையில் பார்க்கும் போது, எமது உரிமைகளை வென்றெடுப்பதற்காக இது வரை காலம் நிகழ்ந்த போராட்டங்களில் நிகழ்ந்த தவறுகளை நிச்சயம் மீளாய்வு செய்ய வேண்டியது அவசியம். அதற்காக ஒரு மாற்று அரசியலும் அவசியம். ஆனால் அந்த மாற்று அரசியல் அல்லது மாற்றுக் கருத்து என்பது இப்போது வழக்கில் இருக்கும் மாற்றுக் கருத்து என்ற அர்த்தத்தில் அல்ல.
புகைப்படங்கள் இணையத்தளத்தில் இருந்து பெறப்பட்டன. அவற்றிற்கு நன்றி
Like this:
Like Loading...
Related
//எத்தனை பேர் கொல்லப்பட்டார்கள் என்றோ அல்லது எத்தனை பேர் கொல்லப்பட்டார்கள் என்ற என்ற எந்த எண்ணிக்கையுமே தெரியாத அளவுக்கு மக்கள் கொத்துக் கொத்தாக கொன்று தள்ளப்பட்டு ஒரு வருடம் ஆகியும் கூட இன்று வரை போதுமான நகர்வுகளோ அல்லது சலனங்களோ ஏற்படவில்லை என்பதுதான் உண்மை. //:(மீண்டும் மாபெரும் எழுச்சி போராட்டம் பாதிக்கப்பட்டவர்களால் முன்னெடுக்கப்பட்டு மொத்த நாடும் அழிவை நேக்கி நகரும் வரை இலங்கை அரசு விழித்துக் கொள்ளாது.
LikeLike
@கோவிகண்ணன்//மீண்டும் மாபெரும் எழுச்சி போராட்டம் பாதிக்கப்பட்டவர்களால் முன்னெடுக்கப்பட்டு மொத்த நாடும் அழிவை நேக்கி நகரும் வரை //இல்லை இப்போது சிங்கள அரசு அப்படி ஒரு சிந்தனை முனையளவு கூட வரக்கூடாது என்ற கவனத்துடனேயே காய்களை நகர்த்துகிறது. அதன் ஒவ்வொரு அசைவும் தமிழ் மக்களின் ஆதார நம்பிக்கைகளை ஆட்டம் காண வைப்பதிலேயே குறியோடு இருக்கின்றது.
LikeLike
(இதே நேரம் 24 வருடங்களாக புலிகள் மிகப் பெரும்பான்மையான் தமிழ் மக்களின் ஆதரவுடன் இருந்தார்கள். அதன் பின்னர் நினைத்துப் பார்க்கவே முடியாத ஒரு வீழ்ச்சிக்கு அல்லது அழிவுக்கு உட்பட்டார்கள். ஆனால், ஈழத்தில் தமிழ் இனமே பேரழிவொன்றுக்கு உட்படுத்தப்பட்ட பின்னரும், புலிகளின் தோல்வியை ஒப்புக் கொள்ளாமல் உங்களாலும் செய்ய முடியவில்லைத்தானே என்று புலி ஆதரவாளர்கள் கேட்பதுவும் அயோக்கியத்தனமானது. நாம் தமிழீழத்தை அடைந்தே தீருவோம் என்று சொல்லிப் பெரும்பான்மைத் தமிழர்களின் ஆதரவுடன் புலிகள் போராடினார்கள். தமது கருத்துகளுடன் உடன்படாதவர்களை எல்லாம் துரோகி என்று முத்திரை குத்தி ஒதுக்கினார்கள். அப்படி ஒதுக்கப்பட்டவர்கள் சொன்னவற்றைப் பெரும்பான்மைத் தமிழ் மக்கள் கேட்கவும் இல்லை, நம்பவும் இல்லை. இப்படி ஒட்டு மொத்த தமிழ் மக்களின் ஆதரவையும் தாண்டி ஒரு மாபெரும் அழிவுக்கு உட்பட்டு சிங்களத்தின் கையில் தமிழர் வாழ்ந்த அனைத்துப் பிரதேசங்களையும் தாரை வார்த்துக் கொடுத்தபின்னர், அந்த வீழ்ச்சியை ஒப்புக் கொள்ளாமல், அதற்குரிய காரணங்களை நேர்மையாக ஆராயமல், உங்களாலும் ஏலாதுதானே என்று அலட்டிக் கொண்டிருப்பது கூட எம்மால் ஒரு நல்லது நடக்காவிட்டால் வேறு எவராலும் நடக்க்க்கூடாது என்று நினைக்கிற அழுகுணித்தனமன்றி வேறில்லை):) 🙂 : )
LikeLike
உங்கள் கட்டுரையுடன் முற்றாக உடன்பட முடியாவிட்டாலும் உரையாடல் ஒன்றுக்கான பல புள்ளிகளைத் தொட்டுச் சென்றிருக்கிறது உங்கள் கட்டுரைஇரா. தணி
LikeLike
ஆக்கத்தில் முரண்படும் ஒருசில கருத்துக்களை எதிர்வினையாக வெளியிட முனைந்தபோது அது ஒரு பெரிய ஆக்கமாகவே வந்துவிட்டது. அதனை எனது தளத்தில் பகிர்ந்துள்ளேன்.http://alaiyosai.blogspot.com/
LikeLike
@ இரா தணிநீங்கள் மண்வாசம் தணி தானே. எப்படி இருக்கிறீர்கள்..உங்கள் தொலைபேசி இலக்கத்தை தொலைத்து விட்டேன்…..
LikeLike
@மருதன்மருதன்,உங்களுக்கான பதிலை அல்லது விளக்கத்தையும் ஒரு பதிவாகவே தந்துள்ளேன்….http://solvathellamunmai.blogspot.com/2010/07/blog-post_21.htmlபகிர்தலுக்கு நன்றிகள்
LikeLike
மாற்றுக் கருத்தாளர்கள் ஏன் எதையும் செய்யவில்லை என்ற குற்ற சாட்டுக்கு , ஏன் புலி ஆதரவாளர்கள் செய்யவில்லை என்று கேட்பதன் மூலம், மாற்றுக் கருத்தாளர்கள் களத்துக்கு அப்பால் உள்ள வெறும் விமர்சகர்களே என்பதை ஏற்றுக் கொள்கின்றீர்கள். ஏனெனில் இந்த ஒப்பிடு அதனையே சுட்டுகின்றது.
LikeLike