(நேற்று நான் எழுதியிருந்த மக்களும் மாற்றுக் கருத்தாளர்களும் தேவைகளும் என்ற பதிவிற்கு மருதன் ஒரு எதிர்வினையை எழுதி இருந்தார். அதற்கான என் விளக்கத்தை, விளக்கம் அளவில் சற்றுப் பெரியதாக போய் விட்டதால் தனிப் பதிவாகவே இடுகின்றேன்)
இது போன்ற விவாதங்களின் / உரையாடல்களின் தொடக்கத்தைத்தான் நான் விரும்புவதும், தமிழ் மக்கள் மத்தியில் ஏற்படுத்த விரும்புவதும். அதை விடுத்து மக்கள் பங்கேற்காமல் ஈழப் பிரச்சனை போன்ற விவகாரங்களில் ஒதுங்கி நின்றதும் பிழை,அப்படி மக்கள் ஒதுங்கி நிற்கவேண்டும், தாம் சொல்வதின் படி பணிய வேண்டும் என்று எதிர்பார்த்ததும், எதிர்பார்ப்பதும் பிழை.
முதலில், விசிலடிச்சான் குஞ்சுகள், ஒக்டோபஸ் என்றூ நிறைய விடயங்களை மேற்கோள் காட்டி இருந்தீர்கள். ஆனால், மக்கள் இனிமேலும் விசில் அடிச்சான் குஞ்சுகளாகவே இருந்துவிடக் கூடாது என்பதால்தான் இது போன்ற உரையாடல்கள், விவாதங்கள் அவசியமாகின்றன. போராட்டத்தின் தலைமையை புலிகள் வகித்திருந்தாலும் அனைத்து இன்னல்களையும் மக்களுமே சேர்த்து அனுபவித்தனர். எனவே நடந்தது நடப்பது, நடக்கப்போவது என்று ஒவ்வொரு விடயத்திலும் மக்கள் அவதானமாக இருக்கவேண்டும். மேலும் “எவரையும் செவிமடுக்காத புலிகள் தோற்றுவிட்டார்கள் என்று கூறுவதில் இந்த வகையினர் சதா ஆத்ம திருப்தி அடைந்துகொள்கிறார்கள்.” என்று சொல்லி இருந்தீர்கள். இல்லை, புலிகள் தோற்றுவிட்டார்கள் என்று எவருமே ஆத்ம திருப்தி அடைந்திருக்க முடியாது. ஆனால், புலிகளின் தவறுகளை விமர்சித்தவர்களை எல்லாம் அவதூறுகளாலும், கேலிகளாலும், அவர்கள் சிங்கள அரசிடமோ அல்லது இந்திய அரசிடமோ எலும்புத் துண்டுக்காக பிச்சை இருப்பதாயும் கூறுவதாலும் மாத்திரமே எதிர்கொண்டவர்கள்தான் இன்று “புலிகள் தோற்று விட்டதால் மாற்றுத் தரப்பினர் ஆத்ம திருப்தி அடைந்துவிட்டார்கள்” என்று அடுத்த குற்றச்சாற்றைத் தொடுக்கின்றனர்.
“துரோகிகள் என்று புலிகள் தம்மை நிந்தித்தார்கள் என்று கூறுபவர்கள் யார்? சுப்பிரமணிசுவாமியா? சோவா? அல்லது சோபா சக்தியா? சிறீரங்கன், ரியாகரன் போன்றவர்களா?” என்று கேட்டிருக்கிறீர்கள். புலிகள் துரோகிகள் என்று நிந்தித்தது இவர்களை மாத்திரம் தானா? தம்மை நோக்கிய விமர்சனங்களை வைப்பவர்களையும், தமக்கு எதிரான கருத்துக் கொண்டோரையும் ஒட்டுமொத்தமாகவே புலிகள் துரோகி என்றே அழைத்தார்கள். நீங்கள் பட்டியலிட்ட 5 பேருமே என்னென்ன காரணத்துக்காக புலிகளை விமர்சித்தார்கள் என்றும், இது போல புலிகளை விமர்சித்த காரணத்துக்காக இன்னமும் யார் யார் மேல் துரோகி பட்டம் சுமத்தப் பட்டுள்ளது என்று யோசித்துப் பாருங்கள். ஈழப் பிரச்சனையின் ஒருவர் என்ன நிலை எடுத்து நிற்கிறார் என்பதை விட அவர் எதற்காக, எந்தெந்தக் காரணிகளுக்காக அந்த நிலையை எடுத்து நிற்கிறார் என்பதில் அவதானமாக இருகக்வேண்டும். அதை விடுத்து பூம் பூம் மாடுகளை எல்லாம் பார்த்து பரவசப்பட்டதால் தான் கடந்த மே 2009ற்குப் பின்னர் யார் யார் துரோகம் செய்தார்கள் என்ற பட்டியல் இன்னமும் இன்னமும் அதிகம் நம்பியவர்கள் பெயர்களை தொடர்ச்சியாக வெளிக்கொண்டு வந்தபடி இருக்கின்றது.
“மக்கள் உரிமைக்கான இராணுவ போராட்டம் ஒன்றை பகிரங்க விவாதத்துக்கு உட்படுத்த முடியாது என்பதுகூட தெரியாது, விமர்சனம் – விளக்கம் – விவாதம் என்ற தொனிகளில் புலிகளுக்கு பதிலறிக்கை விடுத்தவர்களின் தற்போதைய குறைந்த பட்ச சாதனை என்ன?”
முதலில் ஒரு விடயத்தைத் தெளிவாக்கிவிடுவது நலம். போராட்டம் ஒன்று பற்றிய பகிரங்க விவாதம் எனும்போது போராட்டத்தின் ஓவொரு நடவடிக்கைகளையும் பகிரங்கமாக விவாதிக்க வேண்டும் என்றோ / இராணுவ நடவடிக்கை ஒன்றை எடுக்கும் முன்னரோ அல்லது எடுத்த பின்னரோ அதை அணு அணுவாக அறிவிக்க வேண்டும் என்றோ எந்த முட்டாளுமே எதிர்பார்க்கமாட்டான். போராட்டம் ஒன்றின் மூல உத்தி (strategy), தந்திர உத்தி (tactics) என்ற கருத்துக்களில் மூலவுத்தி என்பது விவாதங்களுக்கு உட்படுத்தப் பட்டு தெளிவுடன் அணுகப்படவேண்டியது. போராட்டத்தில் வரும் ராணுவ நடவடிக்கைகள், மோதல்கள் போன்ற தனித் தனி நிகழ்ச்சிகள் தந்திரவுத்தியின் கீழ்வரும். இவை மூலவுத்தியை செயற்படுத்துவதில்,அதன் செயற்பாட்டிற்கு உதவுவன. இந்தத் தந்திரவுத்திகள் பற்றிய ரகசியங்களை பரகசியப்படுத்தவேண்டும் என்று யாருமே கேட்கவில்லை.
அடுத்து, “தாங்கள் தோல்வி அடைந்தமைக்கான காரணத்தை புலிகள் ஆராய்ந்து அறிந்து, இனிவரும் காலங்களில் அவற்றை தவிர்க்க வேண்டும் என்று விண்ணப்பமிடும் விற்பனர்களுக்கு உறுதியான வரிகளாக இதனை கூறிக்கொள்கிறேன்.”
முதலில் உறுதியான வரிகள், இறுதியான வரிகள் என்றெல்லாம் எழுதி இந்தப் போராட்டத்தை ஒரு “முடிந்த முடிபு” ஆக்கவேண்டாம். “இதைவிட, வரைவிலக்கணமான ஒரு உரிமை போராட்டத்தை இந்த உலகுக்கு தமிழினம் இனி தரமுடியாது. இதில் எங்கும் பிழையும் இல்லை” இறுதிப் போரில் நடந்த நிறைய விடயங்களைப் பேசாமலே மூடி மறைத்து விடமுடியாது. தவிர போரில் எங்குமே பிழை நடக்கவில்லை என்று கூறுகிறீர்கள். இதற்கு என்ன பதில் சொல்வது என்றே தெரியவில்லை. “எந்த கணத்திலும் தமது கொள்கையை விட்டுக்கொடுக்காது இறுதி மூச்சுவரை போராடினார்கள். தமது மக்களின் உரிமையை வேண்டி எந்த மண்ணிலிருந்து போராடினார்களோ, அந்த மண்ணிலேயே தமது இறுதி மூச்சையும் விட்டார்கள்.” என்று சொல்கிறீர்கள். அத்தனை பேரும் இறப்பது என்கிற லட்சியவாத அணுகுமுறை எல்லாம் மக்களுக்கான போராட்டத்திற்கு எத்தனை தூரம் சரிவரும் அல்லது நியாயமானதாகும் என்று நினைத்துப் பார்த்தீர்களா? மேலும் அத்தனை பேருமே இறுதி வரை போராடியே அந்த மண்ணில் இறந்தார்கள் என்று சொல்லிக்கொள்வதில் பலருக்கு மன நிம்மதி கிட்டலாம். ஆனால் உண்மை என்பது அதற்கு மாறானதாகவே இருக்கின்றது
Leave a Reply