“ஈழத்தமிழர்களின் 30 ஆண்டுகள் நீண்ட அரசியல் போராட்டமும் பின்னர் 30 ஆண்டுகள் நடைபெற்ற ஆயுதப் போராட்டமும் நினைத்தே பார்த்திராத அளவு மிகக் கோரமான முறையில் முடிவுக்கு வந்திருக்கின்றன. இந்த நிலையில் எமது உடனடித் தேவை போரால் பாதிக்கப்பட்டு ஈழத்தில் வாழும் மக்கள் பற்றிய அக்கறைகளும், கைது செய்யப்பட்டு சிறையில் இருப்பவர்கள் தொடர்பான விடயங்களுமே. அதே நேரம் ஒரு நீண்ட கால அடிப்படையில் பார்க்கும் போது, எமது உரிமைகளை வென்றெடுப்பதற்காக இது வரை காலம் நிகழ்ந்த போராட்டங்களில் நிகழ்ந்த தவறுகளை நிச்சயம் மீளாய்வு செய்ய வேண்டியது அவசியம். அதற்காக ஒரு மாற்று அரசியலும் அவசியம். ஆனால் அந்த மாற்று அரசியல் அல்லது மாற்றுக் கருத்து என்பது இப்போது வழக்கில் இருக்கும் மாற்றுக் கருத்து என்ற அர்த்தத்தில் அல்ல.”
இரண்டாவது எதிர்வினை – ஈழப்போராட்டம்
மருதன்,
நீங்கள் எனது பதிவுக்கு ஆற்றிய எதிர்வினைக்கு மீண்டும் நான் பதில் அளித்திருந்தேன். அதற்கு மீண்டும் எதிர்வினையாற்றி இருக்கின்றீர்கள். தொடர்ச்சியாக விவாதம் நிகழ்வது வரவேற்கத்தக்கது என்றாலும், எந்த விதமான அர்த்தமும் இல்லாமல் சொன்னதையே சொல்லிக் கொண்டிருப்பதில் எந்த அர்த்தமும் இல்லை. முதலில் எனது கட்டுரையில் நான் மாற்றுக் கருத்தாளர்கள் விடும் தவறுகள், ஊடகங்கள் ஈழப் பிரச்சனையை வணிக நோக்கில் அணுகுவது, மற்றும் உண்மைக்குப் புறம்பான செய்திகளை தொடர்ந்து வெளியிடுவது, புலி எதிர்ப்பையே மாற்றுக் கருத்து என்ற அர்த்தத்தில் ஏற்றுக் கொள்வது, புலிகள் இழைத்த தவறுகள் மீதான விமர்சனங்கள் என்று நிறைய விடயங்களைச் சொல்லியிருந்தேன். அதற்கான எதிர்வினையை “ஆக்கத்தில் முரண்படும் ஒருசில கருத்துக்களை எதிர்வினையாக வெளியிட முனைந்தபோது அது ஒரு பெரிய ஆக்கமாகவே வந்துவிட்டது. அதனை எனது தளத்தில் பகிர்ந்துள்ளேன்.” என்று தொடங்கி எழுதி இருந்தீர்கள். இதில் நான் புலிகள் மேல் வைத்த எல்லா விமர்சனங்களையும் நிராகரித்த நீங்கள், “அவர்கள் எங்குமே தவறு இழைக்கவில்லை” என்று வாதிட்டீர்கள். அதாவது, ஈழப் போராட்டத்தின் புலிகள் தவிர்த்து அனைத்து இதர தரப்புகளும் தவறிழைத்தன, அப்படி இழைத்த தவறுகளே ஈழப் போராட்டத்தின் வீழ்ச்சிக்குக் காரணமாகின என்கிற அளவில் இருக்கிறது உங்கள் வாதம். இது போன்ற ஒற்றைப் படையான வாதங்களால் எந்தப் பலனுமில்லை.
மேலும், உங்கள் இரண்டாவது எதிர்வினையில்
“விடுதலைப்புலிகள் தமது போராட்ட காலத்தில் இழைத்த பிழைகளை மூடிமுறைக்காது அவற்றின் மீது பகிரங்கமான விமர்சனத்தை முன்வைப்பதன் மூலம் அடுத்த கட்டத்தை நோக்கி தமிழ்மக்கள் ஆரோக்கியமாக நகரலாம் என்பது குறித்து அருண்மொழிவர்மன் எழுதிய பதிவு ஒன்றில் குறிப்பிடப்பட்ட விடயம்”
என்று கூறி இருக்கின்றீர்கள். நான் எனது கட்டுரையில் விடுதலைப் புலிகள் இழைத்த பிழைகளை மட்டுமல்ல, வேறு என்னென்ன விடயங்கள் பற்றி நாம் பேசவேண்டும் என்றும் விமர்சனங்களை முன்வைக்க வேண்டும் என்றும் கடைசிப் பந்தியில் தெளிவாகவே குறிப்பிட்டுள்ளேன். இதை மீண்டும் ஒரு முறை உங்கள் பார்வைக்காக இங்கே தருகிறேன்
ஈழத்தமிழரின் இத்தனையாண்டு காலப் போராட்டத்திலும் நடந்த தவறுகளை மீளாய்வு செய்யவேண்டியது அவசியம் என்று நான் கூறியதை நீங்கள் நான் புலிகள் குறித்து மட்டும் குறிபிட்டிருந்தது போல திரித்துள்ளீர்கள். 50களில் ஆரம்பித்து ஈழத்தமிழர்கள் நடத்திய அரசியல் மற்றும் ஆயுதப் போராட்டங்கள் முழுவதையுமே விடுதலைப் புலிகளே கொண்டு நடத்தினர் என்று வாதிட மாட்டீர்கள் என்றே நம்புகிறேன். அப்படி இருக்கும் போது இது போன்ற திரிப்புகளூடாக விமர்சனத்தை அணுகுவதும் எழுதியதைத் திசைமாற்றுவதும் ஒரு போதும் ஆரோக்கியமாக மாட்டா.
தவிர இனியொருவர் போராட்டத்தை ஆரம்பிக்கப் போவதாக இருந்தால் மாத்திரமே புலிகள் மேலான தவறுகளை விமர்சிக்கலாம் அல்லது சீர் தூக்கிப் பார்க்காலாம் என்று நீங்கள் கூறியிருப்பதில் எந்த விதமான தர்க்கம் இருப்பதாக கூறுகிறீர்கள். புலிகள் அமைப்போ பிற ஆயுத அமைப்புகளோ உருக்கொள்ளும் முன்னரும் கூட ஈழத்தமிழரின் உரிமைக்கான போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது என்பது எவ்வளவு உண்மையோ, அந்த நியாயமான உரிமைகள் கிட்டாதவிடத்து புலிகளுக்குப் பின்னான போராட்டங்களும், உரிமை மீட்புக்கான முனைவுகளும் நடந்து கொண்டே இருக்கும் என்பதே உண்மை. போராட்ட வடிவங்கள் மாறலாம, ஆனால் போராட்டம் நடைபெற்றே தீரும். உங்கள் வாதத்தில் தென்படும் புலிகளுக்குப் பின்னரான போராட்டம் நடக்கவே போவதில்லை என்கிற தொனியில், புலிகளால் இயலாதது வேறு ஒருவராலும் நிறைவேறிவிடக்கூடாது என்கிற ஆதங்கமே ஒட்டிக்கொண்டுள்ளது. மேலும் உங்கள் கருத்தில் துருத்திக் கொண்டு வெளிப்படையாகத் தெரிவது புலிகளின் புனித பிம்பம் ஒரு போதும் கலைந்துவிடக் கூடாது என்கிற பதற்றத்தைத் தவிர பிறிதொன்றுமில்லை. அது போலவே ஆரோக்கியமான முறையில் அணுக வேண்டிய விவாதம் ஒன்றை “நீங்கள் எழுத்துக்களில் கூறும் மனக்கிடக்கைகளுக்கு நீதியான உருவம் வழங்கவேண்டும் என்று பார்த்தால் மேற்கூறியவையாக மட்டுமே இருக்கமுடியும். இல்லாவிடின், தனியே விமர்சனம் செய்கிறோம் பேர்வழிக்குள் நின்றுகொண்டு, தமிழர் போராட்ட வரலாற்றை ஆய்கிறோம் என்று கூறினால், அதன் நோக்கம் பதிவுலகில் சில நூறு பின்னூட்டங்களை பெறுவதற்கும் அல்லது அந்த விமர்சன கொத்துக்களை புத்தகமாக வெளியிட்டு பணம் சம்பாதித்துக்கொள்ளவதற்காகவுமே இருக்கும்” என்றெல்லாம போற போக்கில் சேற்றை அள்ளி இறைத்துவிட்டுச் செல்கிறீர்கள். அதாவது உங்கள் பார்வையில் உங்களுக்கொவ்வாத எழுத்தெல்லாமே புகழ்பெறவும், பணம் உழைக்கவும் எழுதப்படுவது என்கிறீர்கள் போல் இருக்கிறது. இந்தச் சிந்தனையின் அடுத்தகட்டம் தான் உங்களுக்கு பிடிக்காத கருத்துக்களைச் சொல்பவர்களைத் துரோகிகள் என்று சொல்லவைக்கும். அந்த எல்லைவரை நீங்கள் செல்லமாட்டீர்கள் என்று நம்புகிறேன்.
மேலும் போராட்டத்தின் இறுதிவரை மக்கள் விருப்பத்துடன்தான் புலிகளுடன் இருந்தார்கள் என்றும் தங்கள் பிள்ளைகளை எல்லாருமே விரும்பிக் கொண்டுபோயே புலிகள் வசம் ஒப்படைத்தார்கள் என்றும் புளித்துப் போன பொய்களையே திரும்பத் திரும்பச் சொல்லாதீர்கள். இது போன்ற கருத்துக்களைக் கூடக் கடந்துவராமல் இருக்கும்போது மேற்கொண்டு பேசியோ விவாதித்தோ எந்த முன்னேற்றமும் வரப் போவதில்லை. களத்தில் இருப்பவனின் நிலை அப்படித்தான் செய்யவைக்கும் என்றோ அல்லது, அந்த நெருக்கடியில் யார் இருந்தாலும் அப்படித்தான் செய்திருப்பார்கள் என்றோ நீங்கள் வாதிடக்கூடும். அப்படி வாதிட்டால் கருணாவையும், டக்ளசையும், ஆனந்த சங்கரியையும் கூட அவர்கள் எதிர்கொண்ட நெருக்கடிகளே அவர்களின் இன்றைய நிலைப்பாடுகளுக்குக் காரணம் என்ற வாதத்தையும் ஏற்றுக் கொள்ளவேண்டும். புலிகள் விட்ட தவறுகளைச் சொல்வதன் மூலம் தமிழர்களின் மூன்று தசாப்த கால போருக்கு கறை படியவைக்கவேண்டாம் என்கிறீர்கள். வரலாற்றை இப்படி மறைத்து, மறைத்து போலியான புனைவுகளுடனேயே எழுதி என்ன பயன். விவாதம் ஒன்றுக்கு உட்படும் போது உண்மையைப் பேசாமல், உண்மை பேசுவது எமது வரலாற்றை கறை படிந்ததாக்கிவிடும் என்று சொல்லி புனைவுகளை முன்வைத்தே வாதிக்க விரும்பினால், அப்படியான விவாதத்தில் நேரத்தைச் செலவழிப்பதே விரயம் என்று கருதுகிறேன்.
பின்குறிப்பு
மக்களும் மாற்றுக்கருத்தாளர்களும் தேவைகளும் என்ற ஒரு பதிவை நான் எழுதி இருந்தேன்.
அதற்கான தன் எதிர்வினையை மருதன் தமிழருக்காக யாராவது போராட்டம் தொடங்க போகிறாரா? என்ற தலைப்பில் பதிவு செய்திருந்தார்.
அந்த எதிர்வினைக்கான எனது விளக்கமாகவே மேற்படி பதிவு அமைகின்றது
I wished the younger generation to hanle these sensitive issues with a broae view an mindJega T.
LikeLike
Hi… Looking ways to market your blog? try this: http://bit.ly/instantvisitors
LikeLike