தொ. பரமசிவன், பொ. ரகுபதி ஊடாக அறியப்படாத வரலாறு

 
இந்த மே மாதம் 5வது தமிழியல் மாநாட்டில் கலந்து கொள்ள கனடா வந்திருந்த கார்மேகம் என்கிற ஜவகர்லால நேரு பல்கலைக்கழகத்தில் கலாநிதி பட்ட மாணவரை(நாட்டாரியல் பற்றி அதிகம் அக்கறையும், தேர்ச்சியும் கொண்டவர்)    நண்பர்கள் சந்தித்து ஒரு மாலை நேரத்தில் சிறிது உரையாடினோம்.  எழுதப் பட்ட வரலாறுகளை சற்றே மறந்துவிட்டு நாட்டாரியல் பற்றியும், பண்பாட்டு அம்சங்கள், அவற்றின் தொன்மை பற்றியும் வாசிக்கும்போது அல்லது பேசிக் கொண்டு மெல்ல மெல்லப் பின்னோக்கி செல்லும் போது எம் மக்களின் உண்மை வரலாறுகள் பற்றி மெல்ல அறிய முடிகின்றது.   நாம் படிக்கும் வரலாறுகளும், கல்விக் கூடங்களில் படிப்பிகின்ற வரலாறுகளும், அரசாங்கங்கள் நூதனசாலைகளிலும், ஆவணாங்களிலும் சேமித்து வைக்கின்ற வரலாறும், ஆளும் வர்க்கம் எப்படி வரலாறு இருந்திருக்கவேண்டும் என்று விரும்புகிறதோ அந்த வரலாறாக இருக்க, உண்மையான வரலாறு எவராலும் சீண்டப்படாமல் பாழடைந்த கட்டடங்களிலும், எவருமே தேடாத நூல்களிலும், கிராமத்து மனிதர்களின் வாழ்க்கையிலும், அவர்களிடையே வாய் வழிப் பேச்சுக்களாகவுமே நிலைத்திருக்கின்றது.  வரலாற்றை அறியவேண்டிய தேவை, எழுதப்பட்ட வரலாறுகளின் நீட்சியால் ஒடுக்கப்பட்ட அனைவருக்குமே உண்டு.  கார்மேகம் பேசிக் கொண்டிருக்கும்போது தொ. பரமசிவன் பற்றி அடிக்கடி குறிப்பிட்டார். (அதே போல சோ தர்மன் பற்றியும் குறிப்பிட்ட போதும் சோ. தர்மன் கதைகளில் இருக்கின்ற சில அரசியல்கள் பற்றி எனக்கு முரண்பாடுகள் உண்டு; அதே நேரம் நான் சோ. தர்மனை முழுமையாக வாசிக்கவில்லை என்பதையும் ஒப்புக் கொள்ளுகின்றேன்).
 
தொ. பரமசிவன் எழுதிய அறியப் படாத தமிழகம், தெய்வங்களும் சமூக மரபுகளும் ஆகிய இரண்டு புத்தகங்களில் வருகின்ற கட்டுரைகளுடன் சில புதிய கட்டுரைகளையும் சேர்த்து ‘பண்பாட்டு அசைவுகள்’ என்கிற பெயரில் காலச்சுவடு வெளியீடாக வந்திருக்கின்றது.  வரலாறு நோக்கிப் பின்னோக்கிப் பயணிப்பவர்களுக்கு இது நல்லதொரு ஆரம்ப நிலைப் புத்தகமாக இருக்கும் என்றே எண்ணுகின்றேன்.  முற்றாக வாசித்தே தீரவேண்டிய புத்தகம் என்று இதனைப் பிரேரிக்கின்ற அதே வேளை, வாசித்த சில பகுதிகளை பகிர்ந்து கொள்ளலாம் என்றும் நினைக்கிறேன்.
 
இந்தப் புத்தகத்தில் வருகின்ற கறுப்பு – ஒரு சமூகப் பார்வை என்கிற கட்டுரையில் அழகோடு சேர்த்து எண்ணப்பட்ட கறுப்பு நிறம் பின்னர் எப்படி அழகின்மையின் எடுத்துக் காட்டாக மாறிப்போனது என்று சுருக்கமாகவும், விளக்கமாகவும் தன் வாதங்களை முன்வைக்கிறார் தொ. பரமசிவன்.  அதை அவர் எழுத்துக்களில் அப்படியே தருகின்றேன்,

தாழ்வுக்கும் இழிவுக்கும் உரியதாகக் கறுப்பு நிறம் கருதப்பட்டதன் சமூக வரலாற்றுக் காரணிகள் யாவை?இக்கேள்விக்கான விடையை சமூக அமைப்பில் காண இயலாது. மாறாக அதிகாரம் சார்ந்த அரசியல் அமைப்புக்குள்ளே தேடவேண்டும். அதுவும் தமிழ் அரசுகள் வீழ்ச்சியடைந்த 13ம் நூற்றாண்டின் இறுதிக்குப் பின்னரே தேட வேண்டும்.

கி.பி. 1310 முதல் 1323 வரை தமிழ்நாடு இசுலாமியர் படையெடுப்பால் அலைக்கழிந்தது. மீண்டும் 1383ல் விஜய நகரப் பேரரசின் தளபதிகளின் படையெடுப்பால் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. விஜய நகரப் பேரரசு இசுலாமியருக்கு எதிராக வைதிக நெறியை உயர்ந்த இலட்சியமாகக் கொண்டு தோன்றிய அரசமரபாகும். ஆட்சியதிகாரம் விஜய நகரப் பேரரசின் தள்பதிகளின் கைக்கு மாறியவுடன் தமிழ்நாடு ஒரு பண்பாட்டு நெருக்கடியை எதிர்கொண்டது. அதாவது வரலாற்றில் முதல்முறையாகத் தமிழ்நாட்டின் அரசியல் அதிகாரம் பிறமொழி பேசும் ஆட்சியாளர்களிடம் மாறியது. இந்த ஆட்சியாளரைத் தொடர்ந்து தெலுங்கு மொழி பேசும் மக்கள் பெருமளவு குடியேறத் தொடங்கினர். பிராமணர் தொடங்கிச் சக்கிலியர் ஈறாக இந்தக் குடியேற்றம் அமைந்தது. பிராமணர், பிராமணரை அடுத்த ‘மேல் சாதியினரான’ புலால் உண்ணாத ரெட்டியார், ராஜுக்கள் இவர்களுக்கு அடுத்த படிநிலைகளில் அமைந்த நாயுடு (வெலமா, கம்மவார், கவர, காப்பு, பலிஜா), இவர்களுக்கும் அடுத்த நிலையில் உள்ள ஆசாரிகள், பெரும்பாலும் புன்செய் நிலத்து விவசாயிகளான நாயக்கர், மிகத் தாழ்நிலையில் உள்ள செருப்புத் தைக்கும் சக்கிலியர், தோட்டி வேலை செய்யும் சக்கிலியர் என இவர்களை வகைப்படுத்துக் காணலாம்.  இவர்களோடு செளராட்டிரப் பகுதியிலிருந்து ஏற்கனவே வெளியேறி ஆந்திரத்தில் இருந்த நெசவுத் தொழில் செய்யும் சாதியான செளராட்டிரர்களும் தமிழகத்தில் வந்து குடியேறினர். இக்கால கட்டத்தில் தமிழ்நாட்டில் தனித்து வளர்ந்திருந்த சைவ, வைணவ மதங்கள் பின்னுக்குத் தள்ளப்பட்டன. வைதிக நெறியே முன்னிறுத்தப்பட்டது. ‘இந்து மதம்’ அதிகாரத்தில் அமர்ந்தது. தமிழ் அக்காலத்தில் ஆட்சி மொழியாக இல்லை. ஆட்சியாளர்களின் மொழியாகிய தெலுங்கு பேணப்பட்டது. அரசியல் அதிகாரத்தில், வைதிக நெறியின் காவலர்களான பிராமணர்க்கும் சம்சுகிருதத்திற்கும் முன்னுரிமை தரப்பட்டது.

 

இவர்களின் ஆட்சி முடியும் தறுவாயில் கி.பி. 1700க்குப் பிறகு உருது பேசும் வடநாட்டு முசுலீம்கள் அங்காங்கே சில பகுதிகளில் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றினர். மிகச்சில பகுதிகளில் பிரஞ்சுக்காரரும் ஏனைய பகுதிகளில் பிரிட்டிஷ்காரர்களும் ஆட்சியைக் கைப்பற்றினர்.  கி.பி. 14ஆம் நூற்றாண்டின் தொடக்கம் முதலாகத் தமிழ்நாட்டின் அரசியல் அதிகாரத்தைக் கையிலே வைத்திருந்த அனைத்து ஆட்சியாளர்களும், தமிழர்களின் சாரசரி நிறத்திலிருந்து வேறுபட்ட சிவந்த நிறமுடையவர்கள். அவர்களால் ஆதரிக்கப்பட்ட வடநாட்டில் இருந்து வந்த இசுலாமிய ஞானிகள், ஐரோப்பியத் பாதிரிமார்கள், பிராமணர்கள் ஆகிய அனைவரும் தமிழர்களைவிடச் சிவந்த நிறமுடையவர்கள். எனவே ஐந்து நூற்றாண்டுக்கு மேலாகத் தமிழ்நாட்டில் அரசியல் அதிகாரமும், அரசியல் சித்தாந்தங்களையும் நடைமுறைகளையும் உயர்ந்த்திப் பிடிக்கின்ற ஆன்மீக அதிகாரமும் சிவந்த நிறமுடையவர்களின் கையிலேயே இருந்தது. எனவே இந்த நிறம் அதிகாரத்தின் நிறமாக, உயர்ந்த ஆன்மீகத்தின் நிறமாக, உயர்ந்த ஆன்மீகத்தின் நிறமாக, மேட்டிமையின் சின்னமாக, அழகு நிறைந்ததாகக் காட்டப்பட்டது. சுருக்கமாகச் சொல்வதானல், தமிழ் பேசும் பெருவாரியான மக்கள் கூட்டத்தாரின் மரபுவழி அழகுணர்ச்சி மனிதத் தோலின் நிறத்தைப் பொறுத்த மட்டில் திசைமாற்றம் பெற்றது.  எதிர்நிலையில் சொல்வதனால். கருப்பு நிறமுடைய மக்கள் அழகற்றவர்களாகவும், ஆளப்படுவர்களாகவும், அதிகாரத்திற்குத் தகுதியற்றவர்களாகவும், இழிவின் சின்னமாகவும் கருதப்பட்டனர். இன்றளவும் இதுவே தொடர் கதையாகி வருகிறது.

 

எனவே தான் ‘கறுப்பு – சிவப்பு’ என்பது வெறும் அழகுணர்ச்சி சார்ந்த பிரச்சனையன்று. அது மரபுவழி அழகுணர்ச்சியிலிருந்து திசை மாற்றப்பட்டவர்களின் அதிகார வேட்கைக்கும் மரபுவழிச் சங்கிலியால் பிணைக்கப்பட்ட எளிய மக்களுக்கும் இடையிலே நிலவிவரும் ஒரு முரண்பாடு ஆகும்.

இது தவிர நிறையக் கட்டுரைகளில் வரலாற்று ரீதியாக தமிழர்களின் பூர்வீக வழிபாடுகளான சைவ வழிபாடும், கண்ணன் வழிபாடும் பின்னர் எப்படி இந்து மதம் என்கிற கட்டமைப்பில் உள்வாங்கப்பட்டன என்றும், அக்கால கட்டத்தில் உழவர்களின் ஆதித் தெய்வமான பலராம வழிபாடு பின்னர் கண்ணன் வழிபாட்டுடன் ஒன்றித்தது பற்றியும் தர்க்கரீதியாக நிறுவுகிறார்.  ஒரு காலத்தில் மக்களின் பிரதான வழிபாடாக திகழ்ந்த வழிபாட்டுமுறைகள் தமிழர் பிரதேசங்களின் மீதான் அந்நியப் படையெடுப்புகளாலும், பார்ப்பனியச் செல்வாக்கினாலும் மெல்லப் புறக்கணிக்கப் பட்டுச் செல்வாக்கிழந்து சிறு தெய்வ வழிபாடு என்ற பெயரில் அங்கொன்றும் இங்கொன்றுமாக நடை பெறுவதை நாம் அறிந்தே இருக்கின்றோம்.  
 
காலம் இதழில் (இதழ் 26, 2006 யூன், பக்கம் 28-36) பொ. ரகுபதி வல்லியக்கனும் வல்லிபுரநாதரும் என்ற பெயரில் ஒரு கட்டுரை எழுதி இருக்கிறார்.  அதில் இலங்கையின் வட பகுதியில் பழமையான யக்ஷ வழிபாட்டில் இருந்து வந்த வல் + இயக்கன், அதாவது வலிமையான இயக்கன் என்று பொருள்படும் வல்லியக்கன் கோயில்கள் பின்னர் பார்ப்பணிய மயப்படுத்தப்பட்டு கிருஷ்ணன் கோயிலாகவும் (நெல்லியடி), பெருமாள் கோயிலாகவும் (வல்லிபுரநாதர் கோயில் – கோண்டாவில்) மாற்றப்பட்டிருக்கின்றன.  இது தவிர மானிப்பாய், உடுவில், சங்கானை, வேலணை என்று நிறைய இடங்களில் இன்னமும் வல்லியக்கன் கோயில்கள் வேறு வேறு பெயர்களுடனும் / அடையாளங்களுடனும் இன்றளவும் இருக்கின்றன. 
 
இன்று நாம் தமிழ்த் தேசியத்தைப் பலமாகப் பேசும் சிலர் கூட இந்துத்துவத்தை மீற முடியாமல், அதற்குள் கட்டுண்டு பேசுவதை நிறையவே கண்டிருக்கின்றோம்.  தமிழ்த் தேசியம் பேசுபவர்கள் எல்லாம் நாத்திகர்களாக இருக்கவேண்டும் என்ற அர்த்தத்தில் நான் இதைக் கூறவில்லை.  ஆனால், எமக்கென்றே இருந்த தெய்வ வழிபாடுகளும், வழிபாட்டு முறைகளும் எம் மக்களின் வாழ்வோடு அதிகம் பிணைந்திருந்தன என்பது அவை பின்னர் எப்படி ஆரிய, அந்நிய, பார்ப்பனிய செல்வாக்குகளின் எழுச்சியால் புறக்கணிக்கப்பட்டபோது நாம் எப்படி மெல்ல மெல்ல மதத்தின் பெயரால் அடிமையாக்கபட்டோம் என்று அறிய எம் தொன்மங்களையும், அறியப்படாத வரலாற்றையும் அறிவது அவசியமாகின்றது.  அண்மையில் கூட நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்த போது நண்பர் ஒருவர் பிற மதத்தைச் சார்ந்த இன்னொரு நண்பரைப் பார்த்து ‘நீங்களெல்லாம் முந்தி இந்துக்களாக இருந்து மதம் மாறினவர்கள் தானே’ என்று குறிப்பிட்டார்.  பொதுவாக தமிழ்ச் சூழலில் மலிவாகக் காணப்படும் கருத்துக்களில் ஒன்றுதானே இது.  பொதுவாக இலங்கையில் கிறீஸ்தவர்களை, இந்துக்கள் “வேதக்காரர்” என்று அழைப்பர்.  இந்த வேதக்காரர் என்ற பதம் கூட வைதீக மதங்கள் தமிழர் பிரதேசங்களில் பரவியபோது அவர்களை நோக்கி சைவர்களால் பிரயோக்கிக்கப்பட்டதுதானே.  இப்போது அதே வைதீகச் செல்வாக்குடன் இருக்கும் , முன்னர்கள் சைவர்களாக இருந்து பின்னர் இந்து மதத்தின் கூறான சைவர்கள் அதே பதத்தை கிறீஸ்தவர்கள் மீது பாவிப்பது கூட முரணானது தானே?  பிற மதத்தவர்களைப் பார்த்து நீங்கள் முன்பு இந்துக்களாக இருந்தவர்கள்தானே என்று சொல்லும்போது, அதே மண்ணில் முன்னர் வாழ்ந்த தமிழ் பேசும் பௌத்தர்களும், சமணர்களும், ஜைனர்களும் என்னவானார்கள் என்று ஒரு முறையேனும் நினைத்துப் பார்க்கின்றோமா?  அல்லது அவர்கள் இல்லாமல் போனதுற்கான காரணம் என்ன என்றாவது நினைத்துப் பார்த்திருக்கிறோமா?
 
 
நன்றிகள்:
1.தொ. பரமசிவன் எழுதிய கட்டுரையின் ஒரு பகுதியை குருத்து http://socratesjr2007.blogspot.com)  என்கிற வலைப்பதிவில் பெற்று பயன்படுத்தி உள்ளேன்
 
2. படங்கள் இணையத்தளத்தில் இருந்து பெறப்பட்டன
 
3. காலம் இதழ் http://www.noolaham.org ல் கிடைக்கின்றது
 

3 thoughts on “தொ. பரமசிவன், பொ. ரகுபதி ஊடாக அறியப்படாத வரலாறு

Add yours

  1. சரியாகத் தெரியவில்லை கிருத்திகன்,கட்டுரை ஆசிரியர் இந்தக் கோயில் 1950ல் இந்தக் கோயில் கிருஷ்ணர் கோவிலாக மாறியதென்று குறிப்பிடுகிறார். அதை வைத்துத்தான் பார்க்கவேண்டும். நான் இணைப்புக் கொடுத்த காலம் கட்டுரையை வாசித்தீர்களா?

    Like

Leave a comment

Website Powered by WordPress.com.

Up ↑