இலங்கை சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு – சில குறிப்புகள்: அருண்மொழிவர்மன்

இலங்கையில் வருகின்ற வருட ஆரம்பத்தில் நடைபெற இருக்கின்ற சர்வதேசத் தமிழ் எழுத்தாளர் மாநாடு பற்றி முதன் முதலில் எஸ்.பொ. கீற்று இணையத் தளத்தில் தன் எதிர்ப்பினைப் பதிவு செய்திருந்தார். அதனைத் தொடர்ந்து அந்த மாநாட்டினை ஆதரித்தும் எதிர்த்தும் பல்வேறு தமிழகத்துச் சஞ்சிகைகளில் கட்டுரைகளும் கருத்துரைகளும் வெளியாகி இருந்தன. எஸ்.பொவின் கட்டுரையை எனது முகப்புத்தகத்தில் தொடுப்புக் கொடுத்திருந்த நான் அது பற்றிய எனது நிலைப்பாட்டையும் கூடவே பதிவு செய்திருந்தேன். இந்த நிலையில் இந்த மாநாட்டைப் நிராகரிக்கின்றோம் என்ற பத்மநாப அய்யர், யமுனா ராஜேந்திரன், காலம் செல்வம் போன்றோர் எழுதி இருந்த அறிக்கைக்கும் ஒப்புதலைக் கொடுத்திருந்தேன். இந்த நிலையில எல்லா விடயங்களையும் போல சாதகங்களையும் பாதகங்களையும் தன்னகத்தே கொண்டமையப் போகின்ற இந்த மாநாடு பற்றிப் பேசமுன்னர் மாநாடு பற்றிய முகப் புத்தகத்தில் பதிவுசெய்திருந்த எனது கருத்துக்கு வருகிறேன்.
“கொழும்புவில் சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு ஒன்று நடக்கப் போகின்றது என்பது, மேலோட்டமான பார்வை ஒன்றில் மகிழ்ச்சியையே உண்டாக்கும். ஆனால் அதே நேரம், இலங்கையில் இப்படித் தொடர்ச்சியாக தமிழர் விழாக்கள் நடப்பது – இவை முன்னர் தடைபெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது – இப்போது எல்லாம் வழமைக்கு திரும்பி விட்டது, தமிழர்கள் சுபீட்சமாக வாழ்கின்றனர் என்பது போன்ற ஒரு தோற்ற மயக்கத்தை உண்டாக்கும் நோக்கில் நடைபெறுகின்றதோ என்கிற நேர்மையான சந்தேகம் எனக்குண்டு. இந்த மாநாடு மூலம் நிச்சயம் தமிழ் மொழிக்கு சிறிதளவேனும் பயன் கிடைக்கும் என்பது உண்மை ஆயினும், அப்படி கிடைக்கும் பலன்கள் ‘நெல்லுக்கும் ஆங்கு பொசியுமாம்’ என்று தலைகீழாகவே நடைபெறப்போவதாக நான் கருதுகிறேன்… தமிழ்ச் செம்மொழி மாநாடு தமிழ்நாட்டில் நடைபெற்றபோதும், செம்மொழி மாநாட்டினால் கிடைத்த நன்மைகள் என்று பட்டியலிட்டவற்றுள் இப்படியான சில அம்சங்கள் இருந்தது நல்ல முன்னுதாரணம். அதே நேரம் முழுக்க முழுக்க இது இலங்கை அரசின் செலவிலேயே நடைபெறுகின்றது என்பதையும், இதில் கலந்து கொள்ள வருபவர்களுக்கு அரசே முழு செலவையும் ஏற்கின்றது என்பதையும் சற்று மிகைப்ப்படுத்தல் என்றே என்னால் பார்க்க முடிகின்றது.”
குமுதம் ரிப்போர்ட்டரில் வெளிவந்திருந்த இந்தச் செய்தி பின்னர் வழமை போலவே பூதாகரமாக உருவெடுத்தது. இது பற்றிக் கேட்டிருந்தபோது, அப்படி அரசாங்கம் செலவுகளை முன்னெடுத்திருந்தால், அவர்களின் பட்டியலையும் குமுதம் ரிப்போர்ட்டர் வெளியிடலாமே என்று விழா அமைப்பாளர்களில் ஒருவரான லெ.முருகபூபதி குறிப்பிட்டிருந்தார். இது போன்ற அரசாங்கமே விமானச் செலவுகளைப் பொறுப்பேற்கின்றது போன்ற செய்திகளின் நம்பகத் தன்மை பற்றி எனக்கு சந்தேகம் உண்டு. தவிர தமிழ்ச் சூழலில் அரசாங்கத்திடம் காசு வாங்குவதாக எந்த ஆதாரமும் இல்லாமல் குற்றச் சாற்றுகள் முன்வைக்கப்படுவதை அவதானிப்பதும் எமக்குப் புதியதல்லவே.
இந்த மாநாடு தொடர்பாக எனக்கு இருக்கின்ற முக்கியமான ஆதங்கம் என்னவென்றால், இலங்கையில் சென்ற ஆண்டு நடைபெற்ற யுத்தத்தில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணைகளுக்கு அழுத்தம் கொடுத்துக் கொண்டும், அது பற்றிய தகவல்களை ஆவணப்படுத்திக்கொண்டும் இருக்கின்ற இந்த வேளையில் இப்படியான ஒர் எழுத்தாளர் மாநாடு அதே இலங்கையில், அதுவும் அரசினால் ஒடுக்கப்பட்டதாகக் கூறப்படும் தமிழ் எழுத்தாளர்களின் மாநாடு, அதே இலங்கையின் தலைநகரில் நடைபெறுவது எப்படியான விம்பங்களை உலக அரங்கில் உருவாக்கப் போகின்றது என்பதைப் பற்றியதாகவே இருக்கின்றது. இலங்கையில், அதுவும் குறிப்பாக மகிந்த ராஜபக்சேவின் ஆட்சிக் காலத்தில் எழுத்துச் சுதந்திரம், ஊடக சுதந்திரம் என்பன ஒடுக்கப்பட்டு ஊடகவியலாளர்கள் அச்சுறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்டனர், கொலை செய்யப்பட்டனர் என்று தொடர்ந்து குற்றச் சாற்றுகள் இருக்கின்ற வேளையில் அதே இலங்கையில் போய் எழுத்தாளர் மாநாடு ஒன்றினை வைக்கின்றபோது, நாம் முன்வைத்த நியாயமான குற்றச்சாற்றின் நம்பிக்கைத் தன்மையை நாமே குலைப்பது போலாகிவிடாதா?.
இது பற்றி த.அகிலனும், மு.மயூரனும் செய்த நேர்காணலில் விழா அமைப்பாளர்களில் ஒருவரான தி ஞானசேகரன் “17. இந்த ஆய்வரங்கங்களில் பேசப்படுகின்ற விசயங்களிற்கு தணிக்கை இருக்கிறதா?” என்று கேட்கப்பட்டபோது, “நிச்சயமாகத் தணிக்கை இருக்கிறது அதாவது. எந்த அரசியல் விடயங்களும் அதற்குள் வரக்கூடாது” என்று கூறுகிறார். அதைத் தொடர்ந்து19. ஆனால் இதனை நடைமுறைப்படுத்துவதில் சிக்கல்கள் வரலாமில்லையா.. நீங்கள் புகலிட இலக்கியம் என்றொரு அரங்கை வைத்து விட்டு அதில் ஆய்வு செய்கிற ஒருவர் தான் ஏன் புலம்பெயர்ந்தேன் என்று சொல்ல வெளிக்கிட்டாலேஅங்கே அரசியல் வந்துவிடுகிறதில்லையா?
அதெல்லாம் உண்மைகள், உதாரணமாக கலவரங்கள் நிகழ்ந்தன அதற்கு இனவாதம் காரணம் இது வெளிப்படையான உண்மை. அந்த உண்மைகளைப் பேச இங்கே தடையில்லை. அதைப் பேசத்தான் இந்த மாநாடே. ஆனால் அவதூறுகளைப் பேச  தனிமனிதர்களைத் தாக்குதல் செய்ய, இன்னொருவரின் அரசியல் நிலைப்பாட்டை கேலி செய்கிற விடயங்களை மாத்திரமே நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம். மற்றபடி உண்மைகளைப் பேச இங்கே தடையில்லை.”
இந்த இடம் எனக்குக் குழப்பமாகவே இருக்கின்றது. முதலில் எந்த அரசியல் விடயங்களும் இங்கு பேசப்படக் கூடாது என்கிற ஞானசேகரன் பின்னர் சொல்கிறார் உண்மைகளைப் பேசத் தடையில்லை என்று. இலங்கையில் இன்றிருக்கின்ற சூழ்நிலையில் பகிரங்கமான அரசியல் பேசுவதில் இருக்கின்ற அபாயங்களை அறிந்திருக்கின்ற அதே நேரம், எழுத்தாளர் மாநாடு என்ற ஒன்றைக் கூட்டிவிட்டு, அதிலே அரசியல் பேசாமல் மற்ற விடயங்கள் பேசலாம் என்பதன் சாத்தியப்பாடு எனக்கு விளங்கவில்லை. எழுதும் போதாவது படிமங்கள் மூலமும், குறியீடுகள் மூலமும் நேரடியாகச் சொல்ல முடியாத விடயங்களை எழுதி வைக்கலாம். 2009 மே-க்குப் பிறகு வெளிவந்திருந்த மறுகா இதழின் ஆசிரியர் தலையங்கத்தை த.மலர்செல்வன் அப்படி எழுதி இருந்தார், ஆனால் உரையாடல்களில் என்ன சாத்தியம் இருக்கின்றது என்பது கேள்விக்குறியே. ஏறத்தாழ 30 ஆண்டுகளை போர்ச்சூழலிலேயே இருந்துவிட்ட ஈழத்தமிழர்களின் எழுத்துக்களில் அரசியலின் தாக்கம் இருக்கவே செய்யும். அப்படி இருக்கின்ற போது அரசியல் பேசாமல் தமிழ் எழுத்தாளர் மாநாடு நடத்துவது என்பது ஒரு கேலிக்கூத்தாகவே அமையும்.
இது தன்னும் பரவாயில்லை, தி ஞானசேகரனுடன் ஒப்பிடும்போது லெ. முருகபூபதியின் கருத்துக்கள் இன்னும் அபத்தமாகவே இருக்கின்றன. ஷோபா சக்திக்கு கொடுத்த நேர்காணலில்“எழுத்தாளர் மாநாட்டில் இலங்கை அரசின் போர்க் குற்றங்களைக் குறித்தும் மகிந்த குடும்பத்தினரின் அராஜக ஆட்சி குறித்தும் பேசுவதற்கான வாய்ப்புள்ளதா” என்று ஷோபா சக்தி கேள்வி எழுப்ப அதற்கு முருகபூபதி சொல்கிறார், “சூப்பர் ஸ்டாரின் எந்திரன் பட வசனகர்த்தாவிடம் இப்படி ஒரு கேள்வியை நிச்சயமாகக் கேட்கமாட்டீர்கள். ஆனால் சூப்பர் ஸ்டாரின் படங்களில் என்ன வசனங்கள் எப்படி வந்தாலும் எத்தனை முறை வந்தாலும் இலங்கையில் தமிழ்ப் பிரதேசங்களிலும் ஈழத் தமிழர்கள் புலம்பெயர்ந்த நாடுகளிலும் வசூலைக் குவித்துக்கொண்டு ஓடிக்கொண்டிருக்கும்.
ஆனால் ஒன்றுகூடல் போன்ற அனுபவப் பகிர்வின் மூலம் தன்னை வளர்த்துக்கொள்ள விரும்பும் படைப்பாளியோ, கலைஞனோ ஊடகவியலாளனோ நீங்கள் எதிர்பார்ப்பதுபோன்று பேசவேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள். தமிழகத்திலிருந்து ஈழத்தமிழர் புலம்பெயர்ந்த நாடுகளுக்கு வரும் வைரமுத்து, ஜெயமோகன் போன்றவர்கள் கூட அரசியல் பேசுவதைத் தவிர்த்துக்கொள்கிறார்கள். ஆனால் எரியும் சூழலுக்குள் வாழ்ந்துகொண்டிருப்பவன் தன்னைத்தானே தகனம் செய்துகொள்ளவேண்டும் என்று வெளியிலிருந்து குரல் கொடுக்கிறீர்கள், கட்டளையிடுகிறீர்கள்.. இது என்ன நியாயம்? இது கொடுமை.”.
என்ன தான் கொடுமை கொடுமை என்று முருகபூபதி சொன்னாலும் அவர் சொன்ன பதில் போல கொடுமையே கிடையாது. வைரமுத்து புலம்பெயர் மேடைகளிலும் தமிழ்நாட்டு அரசியல் மேடைகளில் தருணம் பார்த்தும் பேசுகின்ற மிகைப்படுத்திய அரசியலையோ அல்லது ஜெயமோகன் பேசுகின்ற அதி அபத்தமான அரசியலையோ புரியாமல் அதை உதாரணம் காட்டுவது ஏனென்று புரியவில்லை. தவிர எந்திரன் படத்திற்கான ரசிகர் வரவேற்பை இந்த மாநாட்டுடன் ஒப்பிட்டுப் பார்க்கின்ற அளவுகோல் எந்தவிதத்திலாவது ஏற்புடையதா என்று முருகபூபதிதான் சிந்தித்துப் பார்க்கவேண்டும். ஏற்கனவே, நல்லூரில் கந்தனுக்கு தேரிழுப்பவர்களையும், நயினை நாகபூஷணி அம்மன் கோயிலுக்கு மக்கள் தொடர்ந்து செல்வதையும், ஆடி வேல் விழாவில் ராஜபக்சே கலந்துகொண்டதையும் சொல்லிச் சொல்லி ஆதரவு திரட்டுபவர்கள், இந்த எழுத்தாளர் மாநாடும் அலகு குத்தல், காவடி எடுத்தல், தேர் இழுத்தல், பிரதட்டை அடித்தல் வகையறாவா என்பதையும் யோசிக்கவேண்டும்.
இது தவிர இந்த மாநாடு பற்றி ஷோபா சக்தி “இலங்கையில் எழுத்தாளர்களால் எதையும் சுதந்திரமாகப் பேசிவிட முடியாத நிலையிருக்கையில் இந்த மாநாடு சாதிக்கப் போவது என்ன என்ற கேள்விக்கு உங்களது பதில் என்ன? என்று கேட்கின்றபோது லெ.முருகபூபதி சொல்கிறார் மீண்டும் எமது நோக்கங்களையே பாருங்கள் என்றுதான் சொல்லத்தோன்றுகிறது. பேச்சுச் சுதந்திரம், எழுத்துச் சுதந்திரம் என்று நாம்தான் வெளியிலிருந்து பேசிக்கொண்டும் எழுதிக்கொண்டுமிருக்கின்றோம். இதே சுதந்திரம் போர் முற்றுப்பெறுவதற்கு முன்னர் வடக்கிலிருந்ததா? கிழக்கிலிருந்ததா? குறிப்பாக தமிழ்ப் பிரதேசங்களில் இருந்ததா? நீங்கள் ஐரோப்பாவிலிருந்து சுதந்திரமாக எழுதுவது போன்று, பேசுவது போன்று உங்களால் வடக்கிலிருந்து முன்பு பேச முடிந்ததா? எழுத முடிந்ததா? இந்த அவலச் சூழல்களிற்கும் உள்ளேயிருந்து இலங்கையில் எழுத்தாளர்கள் எழுதிக்கொண்டுதானிருக்கிறார்கள். அவர்களை நாம் கைவிட்டு விடுவதா” என்று.
சரி. இலங்கையைப் பொறுத்தவரை ராணுவமோ அல்லது விடுதலைப்புலிகளோ அல்லது மாற்று இயக்கங்களோ கருத்து சுதந்திரம் என்ற வஸ்துவையே கண்டு கொள்ளவில்லை என்பதுதான் நிஜம். அதை ஏற்றுக் கொள்வதில் எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை. ஆனால் புலிகள் கருத்துச் சுதந்திரத்தை மறுத்தார்கள் என்பதையே தொடர்ந்து சொல்லிக் கொண்டிருந்த தம்மை மாற்றுக் கருத்தாளர்கள் என்று சொல்லிக் கொண்டிருந்தோர் கூட (தமிழ்ச் சூழலில் பாவிக்கப்படும் மாற்றுக் கருத்து என்ற சொல்லின் மீதே எனக்கு விமர்சனம் உண்டு. மாற்றுக் கருத்து என்பது எதிர்ப்புக் கருத்து / எதிர்க் கருத்து என்ற அர்த்தத்துடனேயே இங்கே பாவிக்கப்படுகின்றது) இன்று அதே தவறை அரசு செய்யும்போது, இதைப் புலிகளும் செய்தார்கள் தானே என்று சப்பைக்கட்டுவது கேவலமாகத்தான் இருக்கின்றது. இழைக்கப்பட்ட ஒரு தவறு இன்னொரு தவறு இழைக்கப்படுவதற்கான நியாயம் ஆகிவிடக் கூடாது நண்பர்களே.
ஆடிவேலில் ராஜபக்சே கலந்துகொண்டார் என்று சப்புக் கொட்டுபவர்கள் இன்று கொழும்புவில் பிரபலமான மயூரபதி அம்மன் ஆலயம் எவ்வாறு ஆட்சியாளர்கள் கையில் வீழ்கிறது என்ற விடயத்தில் மௌனம் மட்டுமே பேசுவது வேடிக்கைகளில் ஒன்று. மேலும் இலங்கையில் இருந்து இன்னும் ஒரு எதிர்ப்புக் குரலும் வரவில்லை என்று சொல்கிறார்கள், உண்மையில் அப்படி எதிர்க்க விரும்புபவர்கள் கூட அதை வெளிப்படையாகத் தெரிவிக்க முடியாத நிலையே அங்கு நிலவுகின்றது. சென்ற வாரம் விக்கிலீக்ஸில் இலங்கை பற்றிய ஆவணங்கள் வெளியானபோது அதில் அமெரிக்கத் தூதர் கூறுகிறார், இலங்கையில் இருக்கின்ற அரசியல்வாதிகள் போர்க்குற்றங்கள் பற்றி அறிந்திருந்த போதும் கூட பாதுகாப்புக் காரணங்களுக்காக அவற்றைத் தற்போதைய சூழலில் கதைக்க விரும்பவில்லை என்று. இதையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.
அதே நேரம் இந்த விடயத்தை இலங்கையில் இருக்கின்றவர்களின் பார்வையில் இருந்து பார்க்கவேண்டிய கடப்பாடும் எமக்கிருக்கின்றது. தவிர ஆட்சியில் இருப்பவர்களிடம் இருந்து எந்த ஆதரவையுமோ அல்லது அனுமதியையோ பெறாமல் எந்த ஒரு அமைவையும் நிகழ்த்தக் கூடிய ஒரு சூழ்நிலை இலங்கையில் மட்டுமல்ல எங்குமே இல்லை. இப்படி இருக்கின்ற போது அரச சார்பில் எவருமே கலந்து கொள்ளக்கூடாது என்றும், நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ அரசிற்கு எந்தத் தொடர்பும் இருக்கக் கூடாது என்றும் இங்கிருந்து கொண்டு இலங்கையில் இருப்பவர்களுக்குக் கட்டளை பிறப்பிப்பது முழுக்க முழுக்க அயோக்கியத்தனமானது. இந்த மாநாட்டில் முன்பு எப்படி தமிழகத்தலைவர்களும் இந்திய அரசியல்வாதிகளும் எமக்குரிய முடிவை தாமே எடுத்து தம் பெரியண்ணன் மனப்பாங்கை எமக்கு துலக்கமாக்கினார்களோ அதே விதத்தில் இன்று புலம்பெயர் நாடுகளில் இருக்கின்ற நாங்களும் இலங்கையில் இருக்கின்றவர்கள் விடயத்தில் செய்துவிடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கவேண்டும்.
ஈழத்தில் இருப்பவர்கள் சார்பில், அதைப் புறக்கணி, இதைப் புறக்கணி என்று அறைகூவல் விடும் நாம் அதற்கேற்ப ஒழுகுகின்றோமா என்ற நியாயமான கேள்வி எழத்தானே செய்கின்றது. ஈழப்போரின் ஓலங்கள் அடங்கும் முன்னரே இங்கே இருக்கின்ற வானொலி ஒன்று ஒரு ஒன்று கூடல் நடத்துவதற்கு, இதை இந்தச் சூழலில் நடத்தலாமா இல்லையா என்ற முடிவை நேயர்களிடமே விடுகின்றோம் என்று சொல்லி ஒரு கருத்துக்கணிப்பை நடத்தியபோது நடத்தலாம் என்றுதானே பெரும்பான்மை வாக்குகள் விழுந்ததாக அறிவிக்கப்பட்டது, இது பற்றி கனேடிய வாழ் தமிழர்களாகிய நாம் என்ன எதிர்ப்பை பதிவுசெய்திருக்கின்றோம்?. போரின் இறுதிக்கட்டங்களை திட்டமிட்ட முறையில் இருட்டடிப்புச் செய்த சன் டிவிக்கோ அல்லது கலைஞர் டிவிக்கோ நாம் ஏதாவது எதிர்ப்பைக் காட்டி இருக்கின்றோமா, துரதிஸ்டவசமாக கனடாவில் இயங்குகின்ற இரண்டு தமிழர் தொலைக்காட்சிகளுமே இந்த இரண்டு இந்தியத் தொலைக்காட்சிகளையும்தானே நம்பிக்கொண்டிருக்கின்றன.
தென்னிந்திய சின்னத்திரைக் கலைஞர்கள் இலங்கை சென்று சில நிகழ்ச்சிகளை செய்தபோதும், திரை நட்சத்திரங்கள் இலங்கை சென்ற போதும் அவர்களுக்கு துரோகிப் பட்டம் தந்தும், அவர்கள் படுக்கை அறை வரை கூடச் சென்றும் விமர்சித்த அதே நாங்கள், இன்றுவரை புலம்பெயர் நாடுகளில் அதே சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரைக் கலைஞர்களை வரவைத்து கேளிக்கை நிகழ்ச்சிகளைச் செய்துகொண்டுதானே இருக்கின்றோம். அப்படிப் பார்க்கின்றபோது இலங்கையில் இருக்கின்ற ஒரு வாசகரை, அல்லது எழுத்தாளரை நாம் நம் பெரியண்ணன் மனப்பான்மையுடன் கட்டுப்படுத்துகிறோம் என்றுதானே அர்த்தம்.
ஏன், இன்னும் ஒன்றையும் பார்ப்போமே, புலிகளின் அரசியலும் அதை அவர்கள் கொண்டு நடத்திய விதமும் விமர்சனத்துக்குரியது என்பதில் எனக்கு ஆட்சேபனை இல்லை, ஆனால் ஒரு உதாரணத்துக்கு தமிழகத்தில் இருந்து ஒருவர் கொழும்பு சென்று புலி எதிர்ப்புப் பேசிவிட்டுச் சென்றால் அவரை இங்கிருந்து துரோகி என்று வசை பாடும் நாம், இலங்கையில் இருந்து இங்கு வந்து எந்தவித ஆதாரமும் இல்லாமல் புலி எதிர்ப்பையும் முழுக்க முழுக்க தங்கள் கற்பனையில் எழுந்த காழ்ப்பினையும் மாத்திரம் பேசிவிட்டுச் செல்கின்ற போது, அவர்களை மாற்றுக் கருத்தாளர் என்று மௌனித்துத் தாமே இருந்தோம். இது பற்றி எல்லாம் நிறைய யோசிக்கவும், பேசவும் வேண்டி இருக்கின்றது. அப்படிப் பேசவும், யோசிக்கவும் இது ஒரு தொடக்கமாக அமையும் என்ற நம்பிக்கையில் ……
சந்திப்போம்….
(தேடகம் ஒழுங்கு செய்திருந்த கலந்துரையாடலில் -டிசம்பர் 05 2010- வாசிக்கப்பட்ட கட்டுரை)

4 thoughts on “இலங்கை சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு – சில குறிப்புகள்: அருண்மொழிவர்மன்

Add yours

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

Website Powered by WordPress.com.

Up ↑

%d bloggers like this: