தொலைக்காட்சிகளில் சிறுவர் நிகழ்ச்சிகள் / பால்யத்தை தொலைக்கும் சிறுவர்கள்

அண்மைக்காலமாக நான் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்ப்பது மிகக் குறைவென்றாலும், மிக நீண்ட காலத்தின் பின்னர் கடந்த இரண்டு வாரங்களில் நிறையத் தென்னிந்தியத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்க்க நேர்ந்தது.  மிக மிக பெரும்பான்மையான தமிழ் தொலைக் காட்சி நிகழ்ச்சிகள் ஏனோ தானோ என்ற அளவிலேயே இருந்ததில் எந்த வியப்பும் இல்லை என்றாலும், சில நிகழ்ச்சிகள் பற்றி கவலைப்படுவதற்கு நிறைய அம்சங்கள் இருக்கின்றன.

கனேடியத் தமிழ் கூறு நல்லுகத்தில் இப்போது ஜூனியர் சூப்பர் ஸ்டார் போன்ற சிறுவர் நிகழ்ச்சிகள் அதிக வரவேற்பைப்பெறுகின்றன என்பதை வீடீயோக்கடைகள் வைத்திருக்கின்றவர்களில் பலரை நண்பர்களாக வைத்திருப்பதால் அறிய முடிந்தது.  நிறையப் பேர் இந்த நிகழ்ச்சிகளை தமது குழந்தைகளுக்குப் போட்டுக் காட்டுவதன் மூலம் அவர்களுக்குத் தமிழ்க் கலாசாரத்தை அறிமுகப்படுத்தி வைக்கலாம் என்று கருதுவதைக் காணமுடிகின்றது.  இன்றைய காலத்தில் தமிழ்க் கலாசாரம் என்பது தமிழ் சினிமாவில் காட்டப்படுகின்ற ராக்கி கட்டுதல், ஹோலி, மெஹந்தி வைத்தல்  போன்ற விடயங்களை உள்ளடக்கியதென்றே பரவலாக நம்பப்படுகின்றது.  தவிர, தென்னிந்தியத் தமிழ் சினிமாக்களில் காண்பிக்கப்படும் சீமந்தம், வளைகாப்பு, பிள்ளையை தொட்டிலிடல், ஊஞ்சலாட்டுதல் போன்ற பல்வேறு விடயங்கள் தென்னிந்திய மக்களின் சடங்குகளாக இருந்தபோதும் கூட, புலம்பெயர் நாடுகளில் அதிக அளவில் வாழ்கின்ற ஈழத்தமிழர்களின் வாழ்வில் இவையெல்லாம் இடம்பெற்றிருக்கவில்லை.  ஆனால் இன்று திரைப்படங்களை மையப்படுத்தியே கட்டமைக்கப்படும் தமிழ்க் கலாசாரத்தின் படி ஈழத்தமிழர்களின் சடங்குகளாகவும் இவை கருதப்பட்டு வருகின்றன.  இது போன்ற விடயங்களைத் தாண்டி, எல்லாத் தரப்பு மக்களாலும் நிச்சயமாக விமர்சிக்கப்படவேண்டிய நிறைய விடயங்கள் இது போன்ற நிகழ்வுகளில் இருக்கவே செய்கின்றன.

முதலில் இந்த சூனியர் சூப்பர் ஸ்டார் நிகழ்வில் நகைச்சுவை கலந்த தொகுப்பாளர்களுல் ஒருவராக சிறீக்காந்த் என்ற சிறுவன வருகிறான்.  அதிக பட்சம் 10 வயது மாத்திரமே மதிக்கக்கூடிய சிறுவன்.  இந்த நிகழ்ச்சி வார இறுதிகளில் ஒளிபரப்பாகின்றது.  குறைந்த பட்சம் இதற்கான ஒத்திகை மற்றும் ஒளிப்பதிவுத் தேவைகளுக்காக இரண்டு முழு நாட்களைச் செலவிடவேண்டி வரும்.  அப்படி இருக்கின்ற போது இது அந்தச் சிறுவனின் கல்வியையும், அந்த வயதில் இருக்கக்கூடிய அவனது பொழுது போக்குகள், விளையாட்டுகள் போன்றவற்றையும் எவ்வளவு தூரம் பாதிக்கும்.  இது போலவே இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுகின்ற ஏனைய சிறுவர்களுக்கும் மிகச் சிறுவயதிலேயே, அதாவது தமது தெரிவுகளை தாமாக மேற்கொள்ளத் தொடங்காத வயதிலேயே இது போன்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிற்காகப் பாவிப்பது நிச்சயம் அவர்களது எதிர்காலத்தை அழிக்கவே செய்யும்.

அது மட்டுமல்லாமல் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுகின்ற சிறுவர்கள் பாடுகின்ற பாடல்களும் ஆட்சேபத்துக்குரியவை.    நடிகர் ரஜினிகாந்தின் பிறந்த தினத்தை முன்னிட்டு நடைபெற்ற விசேட ஜூனியர் சூப்பர் ஸ்டார் நிகழ்ச்சியில் சிறுவர்கள் ஆண் – பெண் என்று ஜோடியாக சேர்ந்து பாடிய பல பாடல்கள் ஆபாசத்தின் உச்சம்.  உதாரணமாக ராத்திரியில் பூத்திருக்கும் தாமரை தான் பெண்னோ, சுத்தி சுத்தி வந்தீக, ஸ்டைலு ஸ்டைலுதான் போன்ற பாடல்கள் பாடப்பெற்றன.  இதில் என்ன கொடுமை என்றால் ஒரு சிறுமி ஸ்டைலு ஸ்டைலுதான் பாடலைப் பாடியபோது அவர் “ஏழு மணிக்கு மேல் நானும் இன்ப லட்சுமி” என்ற வரிகளை உச்சரித்த விதம் சிலாகித்துப் பேசப்பட்டது.   தமிழ் திரைப்படப் பாடல்களின் இசைத்தட்டு வெளியிடப்படும்போது அவற்றுக்குத் தணிக்கையோ அல்லது தணிக்கைச் சான்றிதழோ பெறுகின்ற வழமை இருக்கின்றதா என்பது தெரியவில்லை.  எனக்குத் தெரிந்து “காட்ஃபாதர்” திரைப்பட இசைத்தட்டு ஒன்றில் மாத்திரமே இதுவரை குழந்தைகளுக்கானது அல்ல என்ற அறிவித்தல் வெளியானது.  அதிலும், இசைத்தட்டுடன் சேர்த்து பாடல்வரிகள் அடங்கிய போஸ்டர் ஒன்றும் வழங்கப்பட்டதாலேயே இவ்வாறு அறிவுறுத்தப்பட்டிருக்கலாம்.  சமூக ஆர்வலர்களும், செயற்பாட்டாளர்களும் ஒன்றிணைந்து குழந்தைகள், சிறுவர்களைத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் சேர்க்கின்ற போது அதற்குரிய தணிக்கை விதிகளை உடனடியாகச் செயற்படுத்தவேண்டும், அல்லது கடுமையாக்கவேண்டும் என்கிற போராட்டங்களை முன்னெடுக்கவேண்டும்.  இது போலவே திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரங்களைச் சேர்க்கின்ற போதும் அவர்களின் கல்வி பாதிக்கப்படக்கூடாது என்பதிலும், வாரம் ஒன்றிற்கு எத்தனை மணித்தியாலங்கள் அவர்கள் படப்பிடிப்புகளிற்குச் செல்லலாம் என்பதிலும் கடுமையான சட்டங்களைப் பிறப்பிக்கவேண்டும்.  அடுத்து, நிறையப் படங்களில் 18 வயதை எட்டாத பெண்கள், பல சமயங்களில் 14 வயதுச் சிறுமிகள் கூட திரிஅப்படங்களில் 50 வயது அங்கிள்களுடன் டூயட் பாடி நடிப்பதைக் காணக்கூடியதாக இருக்கின்றது.  சட்டம் இதை எப்படிப் பார்க்கின்றது என்று தெரியவில்லை, ஆனால் கடுமையான கண்காணிப்பின் கீழ் கொண்டுவரப்படவேண்டிய விடயங்கள் இவை.

நான் இங்கே ஜூனிய சூப்பர் ஸ்டார் நிகழ்ச்சியைச் சொல்லுகின்றேன் என்பதற்காக, இது குறிக்கப்பட்ட அந்த நிகழ்ச்சியை மாத்திரம் முன்வைத்து எழுதப்படுவதல்ல.  இந்த நிகழ்ச்சி போலவே சிறுவர்களையும், குழந்தைகளையும் வைத்து நடாத்தப்படும் எல்லா நிகழ்ச்சிகளுக்கும் சேர்த்தே எனது கருத்துக்களை முன்வைக்கின்றேன்.  இதுவரை காலமும் தென்னிந்தியத் தொலைக்காட்ச்சிகளிலேயே நடைபெற்ற இந்த கோமாளிக் கூத்தை இப்போது கனேடியத் தமிழ்த் தொல்லைக்காட்சிகளும் ஆரம்பித்திருக்கின்றன.  எனது ஆதங்கம் எல்லாம் இப்படி சிறுவயதிலேயே தொலைக்காட்சி நிகழ்ச்சிகளூடாக அதிக நேரத்தைச் செலவளிக்கின்ற சிறுவர்கள் தமது இயல்பான வாழ்க்கையை எவ்வளவு தூரம் இழககின்றார்கள் என்பதாகவே இருக்கின்றது.  தமது வயத்துக்குரிய கல்வியையோ அல்லது பொழுது போக்குகளையோ சரியாகப் பெறாத இந்தக் குழந்தைகள் வளருகின்ற போது வாழ்க்கையை எதிர்கொள்வதில் எவ்வளவு சிக்கல்களை  அனுபவிக்கப்போகின்றார்கள்?

தயவுசெய்து இங்கே முட்டாள்தனமாக மைக்கேல் ஜாக்சன் இத்தனை வயதில் மேடை நிகழ்ச்சிகளில் பாடவில்லையா, சார்ளி சாப்ளின் இத்தனை வயதிலேயே மேடைகளில் கலக்கவில்லையா என்று பட்டியலிடவேண்டாம்.  தமிழைப் பொறுத்தவரையில் பாடல்களுக்கு கொப்பி ரைட்டின் மூலம் எந்த வருமானமும் வருவதில்லை.  தவிர, இப்போது தமிழ் இசைத்தட்டுகளை காசு கொடுத்து வாங்குவதே குறைவாகிவிட்டது.  கனடாவில் இருக்கின்ற இசைத்தட்டு விற்பனை முகவர் ஒருவர் சொன்னார், 2000களின் முன்னர் ஒரு படப்பாடல்கள் ஹிட்டானால் 1500 இசைத்தட்டுகளாவது இலகுவாக விற்பனையாகும், இப்ப 300 தாண்டிறதே பெரிய பாடென்று.  இப்படித்தான் இருக்கின்றது தமிழ் இசைத்துறை.  அதிலும் குறிப்பாக புலம்பெயர் நாடுகளில் இருக்கின்ற வானொலி நிலையங்கள் தமது வானொலிக்களில் பாடல்களை ஒலிபரப்புவதற்கு எந்தவித அனுமதியையும் வாங்குவதில்லை என்றே நினைக்கின்றேன்.  ஏனென்றால் சிவாஜி திரைப்படப் பாடல்கள் இசைத்தட்டு வெளியாகும் முன்னரே இணையத்தில் வெளியானபோதே CMR வானொலியிலும் ஒலிபரப்பத் தொடங்கி இருந்தார்கள்.  அது போலவே கீதவாணி வானொலி முன்னர் போட்டி நிகழ்ச்சிகளை நடத்தி இசைத்தட்டுகளைப் பரிசாக வழங்கியபோது திருட்டு இசைத்தட்டுளை பரிசாக வழங்கி இருக்கின்றது.  இதுபோன்ற ஒரு சூழலில் ஒரு சிறுவனையோ அல்லது சிறுமியையோ பாடகராக்குகின்றேன் என்று அவர்களின் இயல்பு வாழ்க்கையை சீர்குலைத்து, எதிகாலத்தில் அவர்களுக்கு இருக்கக் கூடிய தேர்வுகளைச் சிதைப்பது எந்த விதத்திலும் ஏற்புடையதல்ல.  மேலே குறிப்பிட்ட நடிகர் ரஜினிகாந்தின் பிறந்த தின சிறப்பு நிகழ்வில் சிறுவன் சிறீகாந்த் பாட்ஷா திரைப்படத்தில் ரகுவரன் பேசியது போல பேச கடுமையாக முயன்றுகொண்டிருந்தான்.  எனக்கு அவனது முயற்சிகளைப் பாராட்டத் தோன்றவில்லை.  அவனை நினைத்து பரிதாபப்படவும், சிறுவர்களை வைத்து இது போன்ற நிகழ்வுகளைச் செய்வோரை எண்ணிக் கோபப்படவுந்தான் முடிந்தது.

15 thoughts on “தொலைக்காட்சிகளில் சிறுவர் நிகழ்ச்சிகள் / பால்யத்தை தொலைக்கும் சிறுவர்கள்

Add yours

 1. I am 100% accept your argument. When the programme was started I thought it is a good programme. I came to your conclusion after that. I blame the TAMIL CINEMA for everything. I don’t know the reason that why in INDIA all the programmes are related to CINEMA. It should have change. It is clear state that there is circle around most of people binding with CINEMA.” தமிழைப் பொறுத்தவரையில் பாடல்களுக்கு கொப்பி ரைட்டின் மூலம் எந்த வருமானமும் வருவதில்லை.”It is 100% true. But my opinion, it should have to change rather than giving money for the face of the person. INDIA is always copying the British/American TV programmes even though it is not suitable for their culture and the state of living. I can simply say the example is that BIG BROTHER (one the worst sexual programme) is telecasting in India as BIGG BOSS.

  Like

  1. நன்றிகள் சயந்தன்,
   நீங்கள் சொன்னது போலவே தமிழ்த் தொலைக்காட்சிகள் முழுக்க முழுகக் சினிமாவைச் சர்ந்தே இயங்குகின்றன. உண்மையில் ஆரம்ப காலங்களில் விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் தான் சற்று வித்தியாசமாக இயங்கி, சீரியல் என்கிற கொடுமையில் இருந்து மக்களை சற்று விடுவித்தன. ஆனால் பின்னர் விஜய் டீவியும் template tv channel ஆகவே மாறியது. இன்றைய தமிழ் இசைப்பாடல்களை எடுத்துக் கொண்டால் கூட, திரை இசைப்பாடல்களை மாத்திரமே இசைப்பாடல்களாகக் காணக்கூடியதாகின்றது. இசைத் தொகுப்புகளோ அல்லது வேறு இசை முயற்சிகளோ பெரிதாக வெளிவருவதுமில்லை, வந்தால் சரியாகக் கவனிக்கப்படுவதுமில்லை. இசை விமர்சிக்கிறேன் பேர்வழி என்று சாரு அபத்தமாக இளையராஜாவையும் நான்சி அஜ்ரமையும், பாப் மார்லியையும் ஒப்பிட்டு இளையராஜாவைத் திட்டுவதற்கு அடிப்படிக் காரணங்களில் ஒன்று கூட தமிழ்ச் சூழலில் இருக்கின்ற வறட்சியே

   Like

 2. புதுசு… கலக்குங்கோ. Weebly Account முடிகிறபோது நானும் WordPress ஐ நாட எண்ணியிருக்கிறேன்.

  பதிவு பற்றி என்ன சொல்ல???

  Like

 3. தொட்டிலில் போடும் சடங்கு எங்களிடம் இருந்ததுதானே????

  Like

  1. துடக்கு கழிவு செய்கின்ற வழக்கம் இருந்தது. தொட்டிலில் போடுவதை சடங்காகச் செய்கின்ற வழக்கம் இருந்ததாக நினைவில்லை…..

   Like

 4. நல்ல பதிவு..சிறுவர்கள் சினிமா பாடல்களை ஜோடி சேர்ந்து பாடுவது ரொம்ப வேதனை
  விஜய் டிவி யில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் அவர்கள் ‘ஆசை நூறு வகை வாழ்வில் நூறு சுவை’ என்றெல்லாம் பாடுகிறார்கள்..நடுவர்களும் ‘அஹா ஓஹோ’ என்று அவர்களை புகழ்வது இன்னொரு வேதனை…

  Like

  1. சமுத்ரா,
   நீங்கள் சொன்ன அதே ஆசை நூறுவகை பாடல் பாடப்பட்டதை நானும் கண்டிருக்கிறேன், எனது கேள்வியெல்லாம் சட்டம் இது பற்றி என்ன சொல்கின்றது என்பது பற்றியதாகவே இருக்கின்றது. தவிர, சமூக அக்கறை கொண்டவர்களும், செயற்பாட்டாளர்களும் இது விடயத்தில் தொடர்ந்து மௌனம் சாதிப்பது ஏற்புடையது அல்ல……

   Like

 5. இது குறித்து வருந்தத்தான் முடியும். பெற்றோர்கள் எந்தவித யோசனையும் இன்றி பிள்ளைகளை அழிக்கிறார்கள் என்றே சொல்ல வேண்டியுள்ளது. எதனையும் ஆரம்பத்தில் இருந்து கசடறக் கற்பதில் தவறில்லை. அப்படிக் கற்று வந்தால் ஒரு பருவத்தின் பின் பிள்ளை தனக்கு உகந்த துறையை நாடிச்செல்லும். ஆனால் அதனை பிள்ளையின் இளம்பிராயத்திலேயே திணிப்பது கேள்விக்குரியதே.

  ஒருமுறை ஜூனியர் சுப்பர் சிங்கர் நிகழ்வில் சிறீகாந்த் இடம் பாடகி சித்திரா என்று நினைக்கிறேன், கேட்பார் “வீட்டில் ஐஸ்கீறீம் குடிப்பீர்களா?” அதற்கு அவன் இல்லை “அப்பா விடமாட்டார்” என்பான். விளையாடப் போவீர்களா என்றால் அதற்கும் சிறீகாந்த இல்லை அப்பா விடமாட்டார் என்று சொல்வான். அப்போதே சித்திரா சொல்வார். ஏன் இந்த சின்னப் பிள்ளையை இப்படிக் கஷ்டப் படுத்துகிறீர்கள் என்று.

  3 இடியட்ஸ் படத்தின் சாரமே பெற்றோர்கள் தங்களின் விருப்பத்தைப் பிள்ளைகளிடம் திணிப்பதால் ஏற்படும் சிக்கல்தான். அதே போல விஜய் ரீவியின் கலக்கப் போவது யாரு ஜுனியர் நிகழ்ச்சியில் சிறுவர்களின் நகைச்சுவை என்ற பெயரில் அவர்களின் அதிகப் பிரசங்கித்தனமான கருத்துகள் முகத்தை குனியவைக்கின்றன. அவர்கள் நமீதாவையே நக்கல் அடிக்கிறார்கள். விழிப்புணர்வான சமூகமாக உருவாகாமல் வக்கிரமான சமூகமாகவே இது உருவாகும்…!!!

  சட்டம் இது குறித்து என்ன செய்ய உள்ளது என்று தெரியவில்லை. ஆனால் இதற்கு எதிராக சட்டம் கொண்டு வரப்பட்டது. நான் தவறாக விளங்கி விட்டேனோ தெரியவில்லை….!! இந்த இணைப்பில் உள்ள சட்டம் இந்த நிகழ்ச்சிகளுக்குப் பொருந்தாதா? அல்லது இங்கும் ஏதாவது ‘அது’ நடக்குதா?

  http://thatstamil.oneindia.in/movies/specials/2008/09/22-ban-on-children-participation-in-reality-shows.html

  Like

  1. உண்மைதான். தவிர இங்கே இசைத்துறை என்ற அளவில்கூட திரைப்பட இசைக்குத்தான் அதிகம் இடம் தரப்படுகின்றது. அத்துடன் இந்தப் பிள்ளைகளின் பால்யம் மிக முக்கியமாக அழிக்கப்படுகின்றது.

   நீங்கள் குறிப்பிட்ட அந்த இணைப்பு 2008ல் வெளியிடப்பட்டுள்ளது. இன்றுவரை நடைமுறைப்படுத்தப் பட்டதாகத் தெரியவில்லை. ஏதாவது அமைப்புகள் இதற்கான போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என்பதே என் எண்ணம்

   Like

 6. தொட்டிலிடும் வைபவம் யாழ்பாணத்தில் ஒரு சமுக மக்களிடம் இருந்ததாக கேள்விபட்டருகின்றேன்,என்னிடம் ஆதாரம் இல்லை.

  Like

 7. சுதன் எனக்கு நல்ல ஞாபகம் இருக்கிறது. தாய்வழி மாமன் முப்பத்தொன்று/நாற்பத்தொன்று அன்று தொட்டிலில் இடுவார். என்னுடைய தம்பியைத் தொட்டிலில் இடும்போது சண்டைபிடித்து நானும் ஒரு கை பிடித்தேன். அதே தொட்டிலில் கிட்டத்தட்ட 10-15 குழந்தைகள் கிடத்தப்பட்டதாக வீட்டில் சொல்வார்கள்.

  Like

 8. நான் டி.வி’ யே பார்ப்பதில்லை. அதிலும் குறிப்பாக இது போன்ற ஆபாசக் கூத்துக்களை பார்க்க விரும்புவதுமில்லை. சிறுவயதில் நாம் விளையாடக் கூட நேரமில்லாமலிருந்தோம். இன்று சிறுவர்களுக்கு என்ன விளையாடுவது என்றே தெரியவில்லை. இன்றைய இளைய தலைமுறையனரை நினைத்தால் மிகவும் வருத்தமாக இருக்கிறது. நாம் பேசியும் எழுதியும் என்ன செய்ய? பெற்றவர்களையே இந்த ஊடகங்கள் மயக்கி வைத்திருக்கின்றனவே. நல்ல பதிவு.நன்றி

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

Website Powered by WordPress.com.

Up ↑

%d bloggers like this: