ஷோபா சக்தி மீதான முகப்புத்தக விவாதங்கள் பற்றி சில பகிர்தல்கள்

ஷோபா சக்தியின் புனைவுகளும் அதில் அவர் செய்யும் எள்ளல்களும் எனக்கு மிகவும் பிடிக்கும் என்று தொடர்ந்து குறிப்பிட்டே வந்துள்ளேன்.  ஆனால் அண்மைக்காலமாக ஷோபா சக்தி மீது செய்யப்படும் விமர்சனங்களை முன்வைத்து அவரது அனேகம் எழுத்துக்களை மீளப்படித்தபோதுதான் அவர் மீதும் எனக்கொரு அவநம்பிக்கை பிறந்தது.  இதற்கு Dse கேட்டிருந்த நான்காவது கேள்விக்கான (http://djthamilan.blogspot.com/2011/02/blog-post_15.html) பதிலை அவர் கடந்து சென்ற விதம் ஒரு நல்ல உதாரணம்.

அது மட்டுமல்ல, ஹரிகரசர்மா தன் பெயரின் பின்னொட்டாக வந்திருந்த சர்மா என்ற சாதிய அடையாளம் பற்றிக் கேள்வி கேட்டபோது ஷோபா சக்தி சொல்கிறார், ” ஹரி எழுதவந்த குறுகிய காலத்திலேயே சாதிப் பெயரைத் துறந்துவிட்டார். பத்மநாபர் இப்போதும் சுமககிறார். அவரும் துறக்கும்வரை ‘தனகுவதை’த் தவிர வேறு வழியில்லை.” என்று.  ஆனால் இன்றுவரை ஹரியின் முகப் புத்தகம் தவிர்த்த ஏனைய இடங்களில் google profile, you tube போன்றவற்றில் அவர் இன்றுவரை ஹரிஹர சர்மாவாகத்தான் இருக்கின்றார்.  இது பற்றி ஷோபா என்ன சொல்லப் போகிறார். Dse யிற்கு ஒரு பின்னூட்டத்தில் அந்தப் பெயர் ஒட்டை தான் அறியாத வயதில் பாவித்ததாக ஹரியும் சொல்லி இருந்தார்.  ஆனால் அவ்வாறு சொல்லும் வயதிலும் ஹரி சர்மா என்கிற ஒட்டுடன் தான் google profile, you tubeல் இருக்கின்றார்.  இதை ஏன் எங்கே சொல்கிறேன் என்றால் பத்மநாப ஐயர் விடயத்திலும் முன்னர் பரனீதரன் விடயத்திலும் இதே ஐயர்/சர்மா என்கிற ஒட்டுப் பாவிக்கப்பட்டதாலேயே அவர்களை எதிர்த்த ஷோபாவும் அவ்வாறு எதிர்ப்பதை ஆதரித்த ஹரியும் இந்த விடயத்தில் நடந்து கொள்வதில் இருக்கின்ற முரணைச் சுட்டிக்காட்டவே.

அது மாத்திரமல்ல, பிலால் முகமது என்கிற பெயரில் ஒரு ஆதிக்க சாதி இந்து கட்டுரை எழுதியதில் இருக்கின்ற அரசியல் + கோட்பாட்டு ரீதியான பிழைகள் பற்றி வளர்மதி கேள்வி எழுப்பியபோது அவ்வாறு எழுதியதற்குப் பின்ணனி என்ன என்று கேள்வி எழுப்பி இருந்தார்.  மேலும் அந்தப் பின்னணியை இடையில் (விஜயகுமார் என நினைக்கின்றேன்)சொல்ல வந்த போதும் “சற்றே தள்ளி இரும் பிள்ளாய்” என்று விலக்கி வைத்தார்.  ஆனால் இதே ஷோபா சக்தி வேலைக்காரிகளின் புத்தகம் என்றா தொகுப்பில் யாழ் மத்திய கல்லூரி அதிபரின் கொலை பற்றி எழுதி இருந்த போதும் அதற்குச் சில நாட்களின் முன்னர் அதே யாழ்ப்பாணத்தில் இன்னொரு பாடசாலையான கோப்பாய்க் கிறீஸ்தவக் கல்லூரி அதிபரான நடராசா சிவகடாட்சம் என்பவரும் சுட்டுக் கொல்லப்பட்டார் என்பதையும், அதன் தொடர்ச்சியாகவே மத்திய கல்லூரி அதிபரின் கொலை நடைபெற்றது என்பதையும் மெல்லக் கடந்தே சென்றார்.  நாங்களெல்லால் புலிகள் மீதிருந்த அதிருப்தியாலும் அதே நேரம் மாற்றுக் கருத்தாளர்கள் என்று தம்மைக் கூறிக்கொள்பவர்கள் அள்ளி இறைத்த கருத்துக்களாலும் கவரப்பட்டவர்கள் தாம்.  ஆனால் இன்று இவர்கள் செய்யும் அரசியல்கள் சகிக்கவே முடியவில்லை.  அப்படி இருந்தும் பிறழ் சாட்சியம் என்ற கட்டுரையை ஷோபா சக்தி எழுதியபோது (http://www.shobasakthi.com/shobasakthi/?p=503) அவரது அறச்சீற்றம் கண்டு உண்மையாகவே மகிழ்ந்தேன்.  ஆனால் அதே ஷோபா இன்று கேட்கிறார் சுகனின் அரசியலில் என்ன வீழ்ச்சியைக் கண்டீர்கள் என்று.  சரி சுகனின் அரசியலில் என்ன வீழ்ச்சி என்று கேள்வி எழுப்பும் ஷோபா, சுகனின் அண்மைக்கால அரசியல் பற்றிய விமர்சனங்கள் எழுந்த போது தான் முழுவதும் சுகனை ஆதரிக்கின்றேன் என்று எழுதி இருக்கலாம் தானே.

தவிர DSe எழுப்பிய “(4) 50, 000 ரூபாயை அருந்ததி ரோய் திரும்பிக்கொடுக்காமல் இருப்பது ‘நேர்மையற்றது’ என்கின்ற முடிவுக்கு வருகின்றீர்கள். நல்லதே. உங்களிடமும் இன்னுமிரு நண்பர்களிடமும் தமிழகத்தில் இருந்து X எனும் நண்பர் 50 நூற்களை விமானத்தில் அனுப்பி வைக்கின்றார். அந்நூலின் விலை கனடாவிலேயே 30 டொலருக்குத்தான் விற்கப்படுகின்றது. ஆக 50 * 30 = 1500 டொலர்ஸ் + விமானச் செலவு. ஒரு கனடியன் டொலர் = 40 இந்திய ரூபாய் என்றாலே. அனுப்பிய புத்தகங்கள் மட்டுமே 60, 000 ரூபாய்  வரும். விமானச் செலவை விடுவோம். அவை தடிமனான புத்தகங்கள். அந்த எக்ஸ் நண்பர் நீங்கள் அந்தச் செலவை அனுப்பவில்லை என என்னிடம் நேரடியாகச் சொன்னார். உங்களிடம் கேட்டால், அந்த நூலை எழுதியவர் எமது ‘வளர்ப்புத் தந்தை’ போன்றவர் எனக் கூறி தப்பிவிடுகின்றீர்கள் என்றும் கூறுகின்றார். (வாசிக்கும் மற்றவர்களுக்கு சார்பு நிலை வரக்கூடாது என்ற முன்னெச்சரிக்கைக்காய்…, இதைச் சொன்னவர் வளர்மதி இல்லை எனவும் கூறிவிடுகின்றேன்). ஆக, 50, 000 ரூபாய் நீங்கள் அந்த நண்பருக்கு கொடுக்க வேண்டியிருக்கிறதல்லவா? அருந்ததிரோயின் நேர்மையற்றதனத்தைக் கண்டிக்கும் நீங்கள் இதுகுறித்து ஏன் உங்கள் மனச்சாட்சியின் நேர்மையைக் கேள்வி கேட்கவில்லை?” என்ற கேள்விக்கான பதிலை அளிக்காமல் அதற்கு முன்னர் கேட்ட “(3) அருந்ததிரோய் உயிர்மை கொடுத்த முற்பணத்தைத் திரும்பிக்கொடுக்கவில்லை என்பதற்காய் ஒரு ஸ்டேட்டஸ் செய்தி விடுகின்றீர்கள். நல்ல விடயமே. நமக்கான சார்புகளைத்தாண்டி பாதிக்கப்பட்டவருக்காய் நாம் குரல் எழுப்பவேண்டுந்தான். ஆனால் இதே உயிர்மைதான் மெலிஞ்சிமுத்தனின் ‘வேருலகு’ விடயத்தில் தம் வியாபார முகத்தைக் காட்டியது என 2-3 மூன்று இடங்களில் பதிவு செய்திருந்தேன். அண்மையில் ________ கூட அதே பதிலைக் கூறியிருந்தேன். அந்த விடயத்துக்கு ஏன் எதுவுமே கூறவில்லை? அருந்ததிரோய் ரேஞ்சில் மட்டுந்தான் பேசுவீர்களா? என் பல்லி மூளையோ, எதிரிக்கு எதிரி நமக்கு நண்பன் என சொல்கிறது. அஃது உண்மைதானா? என்ற கேள்விக்கும் சேர்த்து “ஷோபாசக்தி: (3.4).பாருங்கள் நண்பரே புத்தகங்களை வெளியிடுவதற்காக காலச்சுவடு உயிர்மை போன்ற நிறுவனங்களிடம் நமது புலம்பெயர்ந்த படைப்பாளிகள் செல்வது எனக்கு உள்ளபடியே வருத்தத்தைத் தருவது. மனிதன் பாம்பைக் கடித்தால்தான் செய்தி. பாம்பு மனிதனைக் கடிப்பது சாதாரணம். அருந்ததிராய் பிரச்சினை அவ்வகைப்பட்டது” என்று பதில் சொல்கிறார்.  கனவுப் பட்டறை சார்பாக புத்தகம் கொண்டுவருவதிலும், இதழ்கள் கொண்டுவருவதிலும் சில முறைகேடுகள் நடைபெற்றதாக நான் கேள்விப்பட்டிருக்கின்றேன்.  இது பற்றி ஷோபா என்ன சொல்கிறார் என்பதையும் அறிய ஆவலாக இருக்கின்றேன். அத்துடன் சீமான் இயக்கிய படங்களில் இருக்கின்ற பெண்ணடிமைக் கருத்துக்களைப் பற்றிக் கட்டுரை எழுதிக் கண்டிக்கின்ற ஷோபா சக்தி C. Jerold இயக்கத்தில் வெளிவந்து கொண்டிருக்கின்ற பிற படைப்புக்களில் இருக்கின்ற பெண்ணடிமைத்தனமான, வெறுப்பூட்டும் அரசியலைப் பற்றி ஏன் ஒரு வார்த்தை கூட கதைப்பதில்லை என்று அறியவே முற்படுகின்றேன்.  இங்கு நான் ஆதரவுக் குரல் கொடுப்பவர்களில் எவரும் நான் 100% ஆதரிப்பவர்கள் என்பது அவசியம் இல்லை.  ஆனால் ஷோபா தொடர்ந்து எள்ளல் தொனியையும் எதிர்க்குரலையும் எழுப்புபவர்களுக்கிடையில் இருக்கின்ற பொதுத்தனைமையையும், அவர் ஆதரவளிப்பவர்களுக்கும் காபந்து பண்ணுபவர்களுக்கும் இடையில் இருக்கின்ற பொதுத்தன்மையையும் மிகத் தெளிவாகவே புரிந்து கொண்டதாலேயே இந்தப் பகிர்தல்.

7 thoughts on “ஷோபா சக்தி மீதான முகப்புத்தக விவாதங்கள் பற்றி சில பகிர்தல்கள்

Add yours

  1. சுதன், டிசேயுடைய பதில்களும் வாசித்தேன். நாம் நிறையப் பேர்களை மற்றவர்களால் கற்பிதப்படுத்தப்பட்ட பார்வையால் பார்த்து வந்திருக்கிறோம் என்பதை மட்டும் இப்போதைக்குச் சொல்ல விரும்புகிறேன்.

    Like

  2. //google profile, you tube போன்றவற்றில் அவர் இன்றுவரை ஹரிஹர சர்மாவாகத்தான் இருக்கின்றார். //
    பிழையான தகவல். எனது Name on display (காட்டப்படும் பயனர் பெயர்) youtubeஇல்: harifromnowhere கூகிள் profileஇல் Hari Rajaledchumy. Other names என்பதில் ஹரிஹரசர்மா (hidden from public view, but redirects the search results for ‘Hariharasharma) மறைத்தேதான் இணைக்கப்பட்டிருக்கிறது.
    இதுதான் கடந்த ஆண்டு 2010 மார்ச் வரையிலிருந்தான நிலமை. அதற்கு முன்னால் Hari Fernandezஆக இருந்தேன். இது நண்பர்கள் அறிந்தது.
    நீங்கள் URLகளை சொல்கிறீர்கள் என நினைக்கிறேன். அவை அக்கவுண்ட் ஏற்படுத்தப்பட்ட(2005இல்) போது வழங்கப்பட்ட default, permanent URLகள் அவற்றை மாற்ற முடியாது. முழுதாக அக்கவுண்டை அழித்து புதிய அக்கவுண்ட் தொடங்க வேண்டும். URLஐக் கவனிப்பவர்களுக்கு மட்டுமே புலப்படக் கூடியது இந்த சாதிப்பெயர். அதனால்தான் அதை விட்டுவிட்டு hari.rajaledchumy@yahoo.co.ukஎன்று புதிய ஈமெயில் முகவரி திறந்து அதனுடன் பப்ளிக் ப்ரோஃபைலை இணைத்துக் கொண்டேன். எனது ப்ழைய முகவரி அலுவலக நண்பர்கள், மேலதிகாரிகளின் பாவனையில் இருப்பது மற்றிம் முக்கியமான சப்ஸ்க்ரிப்ஷன்கள் கொண்டது. இலகுவில் கடாச முடியாத ஒன்று.
    பிறப்புச்சான்றிதழிலும், பாஸ்போர்ட்டிலும், மாணவர் விபரங்களிலும் இன்னமும் என் பெயர் அதுதான். பிரசாவுரிமை இல்லாமல் ஐக்கிய இராச்சியத்தில் என்னால் பெயரை மாற்றமுடியாது.

    குடும்பத்தினரை, சமூகத்தைப் பகைத்துக் கொண்டு குறித்த பெயரைக் களைவதற்கு எடுத்துக் கொள்ளப்படும் பிரயத்தனம் ஒன்றும் பொதுநல நோக்கில் வருவது அல்ல. அந்தப் பெயரில் எனக்கிருக்கிற அசூயையால் வருவது.

    இதை பல இடங்களில் விளக்கியும் இருக்கிறேன். இட்ப்படி URLஐயும் கூர்ந்து கவனித்து என்னை விமர்சிப்பதுதான் ஷோபா சக்தியின் priorityயாக இருக்கவேணும் என்று நீங்கள் கருதுகிறீர்களா?
    பத்மநாப அய்யர் மதிப்பீட்டுக்குட்படுத்தப்படும் தளம் வேறு, அவரின் சாதியம் தொடர்பான நிலைப்பாடுகள் வேறு, நான் வேறு… இது பெயர் மட்டுமே தொடர்பான பிரச்சனை அல்ல. நீங்கள் இதை பெயர் என்கிற ஒரேயொரு புள்ளியில் மட்டுமே வைத்துப் புரிந்துகொள்கிறீர்கள்.

    Like

  3. ஹரி, கூகிள் போன்ற பொது வெளிகளில் பெயரை மாற்றுவதில் உள்ள நடைமுறைச் சாத்தியங்கள் பற்றி நீங்கள் பேசுகின்றீர்கள். அதை ஏற்றுக் கொள்ளுகின்றேன். நான் இங்கே கேட்டது எழுத வந்த குறுகிய காலத்திலேயே ஹரி தனது சாதிப் பெயர் ஒட்டைத் துறந்து விட்டார். ஐயர் இன்னமும் ஒட்ட வைத்துக் கொண்டுள்ளார் என்று ஷோபா சொன்னதை வைத்தே இதைக் கேட்டேன். முதலில் நீங்கள் சொன்னீர்கள், “எனது முகநூல் முகவரி கூகிள் முகவரிகளை மாற்ற இயலாது. இலக்கிய வாசிப்புக்குள் முழுதாக வர முன்னர் ஏற்படுத்தப்பட்ட விசயங்கள் அவை. இது default url பற்றி அறிந்த யாருக்குமே விளங்கும். நீங்கள் அவை குறித்து கேள்வி எழுப்பிய படியால்தான் பதில்சொல்ல நேர்ந்தது.”. என்று. சரி. அது போலவே ” எனது ப்ழைய முகவரி அலுவலக நண்பர்கள், மேலதிகாரிகளின் பாவனையில் இருப்பது மற்றிம் முக்கியமான சப்ஸ்க்ரிப்ஷன்கள் கொண்டது. இலகுவில் கடாச முடியாத ஒன்று.
    பிறப்புச்சான்றிதழிலும், பாஸ்போர்ட்டிலும், மாணவர் விபரங்களிலும் இன்னமும் என் பெயர் அதுதான். பிரசாவுரிமை இல்லாமல் ஐக்கிய இராச்சியத்தில் என்னால் பெயரை மாற்றமுடியாது.”
    என்றும் சொல்கின்றீர்கள். அதாவது நடைமுறையில் பெயரை மாற்றுவதில் இருக்கின்ற சிக்கல்களையும் மாற்றாமல் இருப்பதில் இருக்கின்ற வசதிகளையுந்தான் திரும்பத் திரும்பச் சொல்கின்றீர்கள். நான் இங்கே உங்களது பெயரை ஒன்றும் மாற்றச் சொல்லவில்லை. பெயரை மாற்றுவதால் மாத்திரம் எல்லாம் சரியாகி விடுமா?. இப்ப, பத்மனாப அய்யரே பெயரில் இருக்கின்ற அய்யர் என்ற ஒட்டை நீக்கிவிட்டால் எல்லாம் சரியாகிவிடுமா.

    நான் சொன்னது என்னவென்றால், எழுத வந்த குறுகிய காலத்திலேயே ஹரி சாதிப் பெயரைத் துறந்துவிட்டார் என்று சிலாகிக்கின்றபோதும் கூட, ஹரியின் பெயர் இன்னமும் நிறைய இடங்களில் ஹரிஹரசர்மாவாகவே உள்ளதென்பதைக் காட்டவே. பரணீதரன் சர்மா என்ற பின்னொட்டுடன் பெயரைப் பாவித்தபோது அவர் பன்னாடை என்று திட்டப்படும்போது ஒன்றைக் கவனிக்கவேண்டும். ஈழத்தின் சாதிய அடுக்கில் மேலே வைக்கப்பட்டிருப்போர் பார்ப்பனர்கள் அல்லர். இந்தியச் சாதீய அடையாளங்களுடன் அப்படியே தொடர்புபடுத்தி, சர்மா என்ற பின்னொட்டைப் பார்த்தவுடனேயே, எல்லாரையும் அடக்கி வைத்த பார்ப்பனர்கள் என்று பொங்கி எழுவதில் எந்த நியாயமுமல்ல. இன்னமும் ஒன்றைக் கூடச் சொல்லலாம். பரணீதரனை அவரது சாதிப் பெயருடன் இழுத்து பன்னடை என்று திட்டும்போது, அவ்வாறு திட்டிய ஷோபா சார்ந்திருந்த சாதிதான் ஆதிக்கசாதிகளின் உச்சத்தில் இருந்தது. தென்னிந்திய சாதிய நிலைகளை அப்படியே ஈழத்திற்கு டவுன்லோடு செய்து பார்த்தால் இதுபோன்ற விபரீதங்கள்தான் ஏற்படும்.
    ஷோபா சொல்கின்றார் “அவர்கள் பேசிய சமூக – அரசியல் கருத்துகளையும் இணைத்துப் பார்த்தே நான் அவர்களை வெவ்வேறு விதமாக மதிப்பிட்டேன். வெவ்வேறான எனது மதிப்பீட்டை உறுதி செய்வதாகவே இன்றைய அவர்களது செயற்பாடுகளும் வெவ்வேறாக உள்ளன.”. நீங்கள் சொல்கின்றீர்கள் “பரணீதரன் வரையான புலிக்காய்ச்சல் பிடித்த அறிவில்லாத, இலக்கிய அவநம்பிக்கையும் அரைவேக்காட்டு உணர்வெழுச்சிகளும் கொண்ட மனிதர்களின் காய்தல் உவத்தல்களுக்குத்தான் உங்களுடைய இந்த விசயங்கள் பயன்படுகின்றன”. இப்போது கேட்கின்றேன், உங்களுக்கு உவப்பில்லாத அரசியலை முன்னெடுப்பவர்களை, நம்புபவர்களை நீங்கள் அறிவில்லாதவர்கள், அறியாமையில் பேசுவோர், புலிக்காய்ச்சல் பிடித்தோர், பன்னாடைகள், புலிப் பினாமிகள் என்று திட்டுவதற்கும், குழுக்களாக்கி லேபிள் ஒட்டுவதற்கும் முன்னர் புலிகள் செய்த தியாகி – துரோகி அரசியலுக்கும் என்ன வித்தியாசம்……

    Like

  4. ஹரி சாதிப் பெயரைத் துறந்துவிட்டார் என்று சிலாகிக்கின்றபோதும் கூட, ஹரியின் பெயர் இன்னமும் நிறைய இடங்களில் ஹரிஹரசர்மாவாகவே உள்ளதென்பதைக் காட்டவே.
    சுகன், ஷோபா சக்தி ஆகியோர் நீக்கும்படி கோரியபிற்பாடு அப்பெயர் துறக்கப்பட்டுவிட்டது. நிறைய இடங்களில் என்று நீங்கள் சொல்வது தந்திரமான வார்த்தை உபயோகிப்பு. தவிர்க்கமுடியாத வெகு சில இடங்களில் மாத்திரம் கையாளப்படுவதில் ஒரேயொரு உதாரணத்தை (dafault URL on google) மட்டுமே நீங்கள் பிரச்சனைப்படுத்தினீர்கள், பதிலும் சொல்லியாகிவிட்டது.

    இதைப் பெயர் சம்பந்தப்பட்ட பிரச்சனையாக முன்னிறுத்துவது ஷோபா சக்தியோ நானோ அல்ல. பெயர் சாதியத்தின் முக்கியமான இண்டிக்கேட்டர். அதை ஷோபா சக்தி எதிர்கொண்ட மூன்று வெவ்வேறு நிகழ்வுகளை ஒரே தளத்தில் வைக்க முயலும் நீங்கள்தான் இந்த விவகாரத்தைப் பெயர் சம்பந்தப்பட்ட ஒன்றாக மாற்றி இருக்கிறீர்கள்.

    `பெயரில் என்ன இருக்கிறது` என்ற கேள்விக்கான விடையைத்தான் ஈழநிலவரங்களின் கீழ் அப்பெயரைக் கொண்டிருந்த ஒருவனின் அனுபவங்களாக நான் பகிர்ந்துகொண்டேன். பிராமண ஆதிக்கம் என்பது தமிழக/இந்திய நிலவரங்களில் இருந்து நுட்பமான வேறுபாடுகளுடன் தான் இலங்கையில் நிலவுகிறது. பார்ப்பன மேலாண்மை இலங்கையின் பொருளாதாரத்தளத்திலன்றி சைவவேளாளப்பண்பாட்டுத்தளத்தின் முக்கிய கண்ணியாக இருப்பது. அதுவும் இன்றைய நிலவரங்களின் கீழ், தென்னிந்திய போலச்செய்தல்கள் நிறைந்துபோய்விட்டதில் பார்ப்பனருக்கான மரியாதையின் முக்கியத்துவம் அதிகரித்தே வருகிறது. பார்ப்பனர்களை பழிநீக்கம் செய்துவிடும் உங்கள் அவசரத்தைக் காண மெய்குளிர்கிறது.

    Like

  5. <b) நீங்கள் சொல்கின்றீர்கள் “பரணீதரன் வரையான புலிக்காய்ச்சல் பிடித்த அறிவில்லாத, இலக்கிய அவநம்பிக்கையும் அரைவேக்காட்டு உணர்வெழுச்சிகளும் கொண்ட மனிதர்களின் காய்தல் உவத்தல்களுக்குத்தான்…
    எடுத்துக்கொண்ட விடயப்பரப்புக்குள் நின்றுபேசுங்கள். விடயம் தீர்ந்துபோனால் தனிமடலில் இருந்தும் கொப்பி பேஸ்ட் பண்ணி மாற்றுக்கருத்தை எதிர்கொள்ளும் திறமைபெற்றவராக உங்களை அறிவித்துக்கொண்டிருக்கிறீர்கள். தெரிந்துகொள்கிறேன்.

    Like

  6. ‎@ஹரி “சுகன், ஷோபா சக்தி ஆகியோர் நீக்கும்படி கோரியபிற்பாடு அப்பெயர் துறக்கப்பட்டுவிட்டது. *நிறைய இடங்களில்* என்று நீங்கள் சொல்வது தந்திரமான வார்த்தை உபயோகிப்பு. தவிர்க்கமுடியாத *வெகு சில இடங்களில்* மாத்திரம் கையாளப்படுவதில் *ஒரேயொரு உதாரணத்தை* (dafault URL on google) மட்டுமே நீங்கள் பிரச்சனைப்படுத்தினீர்கள், பதிலும் சொல்லியாகிவிட்டது”

    ஹரி திரும்பத் திரும்பச் சொல்லுகின்றேன். பெயரை மாற்றுவதால் / துறப்பதால் மாத்திரம் தீருகின்ற பிரச்சனை அல்ல இது.

    நீங்கள் சொல்கின்றீர்கள் “இதைப் பெயர் சம்பந்தப்பட்ட பிரச்சனையாக முன்னிறுத்துவது ஷோபா சக்தியோ நானோ அல்ல. பெயர் சாதியத்தின் முக்கியமான இண்டிக்கேட்டர். அதை ஷோபா சக்தி எதிர்கொண்ட மூன்று வெவ்வேறு நிகழ்வுகளை ஒரே தளத்தில் வைக்க முயலும் நீங்கள்தான் இந்த விவகாரத்தைப் பெயர் சம்பந்தப்பட்ட ஒன்றாக மாற்றி இருக்கிறீர்கள்.” என்று.

    இப்படித் திரித்து விடயங்களைத் திசை திருப்பிப் பழகாதீர்கள். ஷோபா சக்தி டிசேயுக்கு கொடுத்த பதிலில் சொன்னதை வைத்துத்தான் நான் இந்தக் கேள்வியையே எழுப்பி இருந்தேன். ஷோபா சொல்கிறார் ஷோபாசக்தி: (8.)ஹரி போன்ற யாழ்ப்பாணத்திலிருந்த பதின்ம வயது இளையவரையும் பழுத்த இலக்கிய இயல் வாழ்நாள் சாதனையாளரான பத்மநாபரையும் ஒரே மாதிரியாக மதிப்பிடுவது தவறு. ஹரி எழுதவந்த குறுகிய காலத்திலேயே சாதிப் பெயரைத் துறந்துவிட்டார். பத்மநாபர் இப்போதும் சுமககிறார். அவரும் துறக்கும்வரை ‘தனகுவதை’த் தவிர வேறு வழியில்லை.”

    இப்போது புரிந்திருக்கும் இந்த விவகாரத்தைப் பெயர் சம்பந்தப்பட்ட ஒன்றாக மாற்றி இருப்பது யார் என்று

    Like

  7. து, உங்கள் வலைத்தளத்தில் இட்ட அதே பின்னூட்டம் தான் மேலேயும் இருப்பது. மூன்று வெவ்வேறு இடங்களில் (தனிமடல், முகநூல் சுவர், வலைப்பதிவு) நீங்கள் பகிர்ந்ததால் வந்த வினை இது.

    தனி மடல் என்று நான் குறிப்பது வளர்மதிக்கு அனுப்பிய தனி மடலையே. அதில் இருந்து கொப்பி பேஸ்ட் செய்து என்னை எதிர்கொள்ளும் (அந்த வரிகளுக்கான விளக்கம் அவரது திரியிலேயே தரப்பட்டுவிட்டது) உங்கள் விவாதமுறை ரசிக்கும்படியாக இல்லை

    எனது வலைத்தளத்தில் இட்ட பதிலும் மேலே இருக்கின்ற பதிலும் ஒன்றுதானா என்பதை நீங்களே ஒரு முறை பார்த்து விடுங்கள். எனது வலைப்பதிவில் எழுதிய கட்டுரையைத்தான் நான் முகப் புத்தகத்திலும் பகிர்ந்திருந்தேன். வளர்மதிக்கு அனுப்பிய தனிமடலை வளர்மதி பொது வெளியில் பதிவேற்றியபின் நீங்களும் அதற்கு எதிர்வினையாற்றி இருக்கின்றீர்கள். அதன் பின்னர் தான் அதையும் விவாதத்தில் சேர்த்துள்ளேன். ஆனால் அதைத் தவிர வேறு இடங்களிலும் நீங்கள் இது போன்ற வார்த்தைப் பிரயோகங்களைக் கையாண்டும் இருக்கின்றீர்கள்

    Like

Leave a comment

Website Powered by WordPress.com.

Up ↑