ஜெயமோகனின் இணையத்தளத்தில் என் பெயர் இடம்பெற்ற ஜென்ம சாபல்யத்துடன்…….

-1-

நேற்று ரொரன்ரோவில் நடைபெற்ற குறும்பட விழா பற்றி ஜெயமோகன் அவர்கள் சில கருத்துக்களை எழுதி இருந்தார்.  அதில் என் பெயரும் குறிப்பிடப்பட்டிருந்தது.  ஜெயமோகன் சொல்கிறார், “‘நீங்கள் தமிழ் சினிமா குப்பை என்று சொல்கிறீர்கள். அப்படியென்றால் ஏன் அதில் பணியாற்றுகிறீர்கள்?’ என்று ஒரு கேள்வி. அருண்மொழி வர்மன் என்பவர் கேட்டது. ‘அய்யா நான் சொன்னது நேர் மாறு’ என்று சொன்னவற்றை அப்படியே திருப்பிச் சொன்னேன். உடனே அடுத்த கேள்வி ‘சரி, ஆனால் தமிழ் சினிமாவில் தரம் இல்லை என்று சொல்கிறீர்களே ஏன்?’ கன்யாகுமரி மொழியில் மனசுக்குள் ‘வெளங்கிரும்’ என்று சொல்லிக்கொண்டேன்.” என்று.  முதலில் நான் அவரிடம் கேட்ட கேள்விகள் என்னவென்பதையும், அதை ஏன் கேட்க நேர்ந்தது என்பதையும் சொல்கிறேன்.

நேற்று நடைபெற்ற குறுந்திரைப்பட விழாவிலே இறுதியில் ஜெயமோகன் பேசுமாறு அழைக்கப்பட்டார்.  அதில் நேற்று திரையிட்ட எந்த ஒரு படங்களுமே தன்னைக் கவரவில்லை என்று அதிரடியாக பேச ஆரம்பித்த ஜெமோ (முன்னால் இருப்பவர்களை எல்லாம் முட்டாள்கள் என்று சொல்லும் மேட்டிமைவாதம் ஜெமோவுக்கு ஒன்றும் புதிதானதல்ல.  அத்துடன் முதன்மைப் பேச்சாளர் என்றா சலுகை அவருக்கு இன்னமும் உதவி செய்தது) தனது பேச்சினூடாக நிறுவ முயன்றது தமிழர்களுக்கு குறுந்திரைப்படங்களை விட வணிகரீதியான திரைப்படங்களே ஏற்புடையன என்பதையே.  அதற்காக அவர் சொன்னவை, மக்கள் வாழ்வை, அதில் அவர்களுக்கு இருக்கின்ற ஏக்கங்களை, எதிர்பார்ப்புகளை வணிக ரீதியான திரைப்படங்களே அதிகம் பிரதிபலிக்கின்றன (மக்கள் எதிர்பார்ப்பவற்றை எஇறாைவு செய்பவை) என்று.  60களிலும் 70களிலும் தமிழகத்தில் உணவுப் பற்றாக்குறை நிலவியதாகவும் அதனாலேயே அந்த நாட்களில் திரைப்படங்களில், குறிப்பாக எம்ஜிஆரின் திரைப்படங்களில் கதாநாயகன் மேஜை முழுவதும் உணவுப் பொருட்கள் நிரம்பி இருக்க அதை உண்பதைப் போன்ற காட்சி காட்டப்படும் என்றும், முக்கியமாக அந்த மேஜையில் அப்பிள் இருப்பதுபோலக் காட்டப்படும் என்றும் கூறினார் ஜெமோ.  சராசரி மனிதன் இந்த உணவுப் பொருட்களை திரையில் பார்க்க விரும்புவானாம்.  அதே போல பெண்களைக் கவர, கதாநாயகியில் dessing table, மற்றும் அலங்காரப் பொருட்களைக் காட்டுவார்களாம்.  அதே போல தமிழ்த் திரைப்படங்களில் காதல் கட்டாயம் இருக்கவேண்டுமாம்,  காதல் இல்லாமல் தமிழில் திரைபடம் எடுக்க முடியாது என்று கூறிய ஜெமோ அதற்குக் கூறிய காரணம் தமிழ் மக்களின் நடைமுறை வாழ்வில் காதல் இல்லை என்பதால் திரையில் அதைப் பார்க்க விரும்புகின்றார்கள் என்பதாகும்.  (இதைச் சொன்னபோது எனக்கு ஒரு கேள்வி எழுந்தது.  தென் தமிழகத்தை மையமாகக் கொண்டு வரும் படங்களில் வன்முறை அதிகமாக இருகக் காரணம் அங்கே என்ன பரிபூரண அமைதியா நிலவுகின்றது? ).

அது போல இன்னொரு புதிய கண்டு பிடிப்பையும் பகிர்ந்து கொண்டார் ஜெமோ.  அதாவது தமிழ்ப் படங்கள் உலக சினிமாக்கள் போல 80 நிமிடங்களில் எடுக்க முடியாதாம்.  ஏனென்றால் தமிழர்களுக்கு திரைப்படம் பார்ப்பது என்பது ஒரு முழு நாள் நிகழ்வாம்.  குழந்தைகளை வெளிக்கிடுத்தி, பெரியோர் வெளிக்கிட்டு படத்துக்குப் போய்ச் சேர ஒரு மணித்தியாலமாவது எடுக்கின்றதாம்  அவ்வளவு நேரம் எடுத்து திரைப்படத்துப் போகின்றவர்கள் 2 மணித்தியாலம் 15 நிமிஷம் அல்லது 2 மணித்தியாலம் 20 நிமிஷத்துக்கு குறையாமல் படம் இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்கின்றார்களா.  ஒரு கருத்துக்கு இந்த 2 மணித்தியாலம் 20 நிமிஷம் என்பதற்கு ஜெமோ சொன்னது சரியான காரணம் என்று வைத்துப் பார்ப்போம், அப்படியானல், இந்த கால நேரத்தை விட நீண்ட திரைப்படங்கள் வெளியானபோது நீளம் அதிகம் என்று குறை எழுந்ததற்கும்  காட்சிகள் வெட்டப்பட்டதற்கு என்ன காரணம் என்று ஜெயமோகன்தான் சொல்லவேண்டும்.  அது போல ஜெயமோகன் சொன்ன இன்னொரு காரணம் ஒரு முழுவாழ்க்கையச் சொல்ல இந்த நேர அளவு தேவைப்படுகின்றதாம். இபப்டிச் சொல்லும் ஜெயமோகன் தமிழில் முதல் பாகம், இரண்டாம் பாகம் என்று வருகின்ற படங்கள் தோல்விபெறுகின்றனவே அதற்கு என்ன காரணம் சொல்வாரோ என்றறியவும் சித்தமாயுள்ளேன்.

சராசரி மனிதர்கள் திரைப்படங்களில் என்ன எதிர்பார்க்கின்றார்களோ அதையே அல்லது அதற்கேற்றபடியே தமிழ்த் திரைப்படங்களும் வெளியாகின்றன என்று இன்று ஜெயமோகன் சொல்வது இதுவரையான வணிகரீதியிலான திரைப்படங்களின் தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், நடிகர்கள் சொல்லிவந்ததைத்தவிர புதிதாக வேறொன்றுமில்லை.  அடிப்பபையில் ஒரு புனைவெழுத்தாளர் என்ற வகையில் மற்றவர்களை விட ஜெயமோகனால் இதை அழகாகச் சொல்ல முடிகின்றது.  அதாவது நேர்காணல்களில் நடிகர் விஜயோ அலல்து விஜயகாந்தோ தாம் பங்கேற்கும் திரைப்படங்களை எப்படி நியாயப்படுத்துவார்களோ அதையேதான் ஜெயமோகனும் செய்கிறார்.  இன்று ஒரு திரைப்பட வசனகர்த்தாவாக வலம் வருவதால் தன்னை இப்படி நியாயப்படுத்த ஜெயமோகன் இதையெல்லாம் செய்யவேண்டி இருக்கின்றது.

ஆனால் தனது பேச்சில் தான் திரைப்பட உலகில் ஈடுபட்டிருப்பதைப் பற்றி  ஜெயமோகன் சொல்லிக்கொள்ளவில்லை.  அதன்பின்னர் கேள்விநேரம் ஆரம்பிக்கப்பட்ட பின்னர் ஒருவர் ஜெயமோகனிடம் கேட்டார் “சென்ற முறை கனடா வந்த போது எந்த ஒரு கட்டத்திலும் நான் சினிமாவிற்குப் போகமாட்டேன் என்று சவாலாகச் சொன்னீர்களே இப்போது நீங்கள் சினிமாவிற்குப் போய்விட்டீர்களே” என்று.  அதற்கு ஜெயமோகன், அப்படி எனக்கொரு எண்ணம் இருந்து ஆனால் தமிழ் சினிமாவில் இருக்கின்ற புதிய முயற்சிகளும், அதை வேறு திசையில் திருப்பலாம் / தரத்தை உயர்த்தலாம் என்பதாலும், நண்பர் லோகிதாசாலும் தான் சினிமாவில் ஈடுபட்டதாகக் கூறினார்.  (ஜெயமோகன் சொன்ன சரியான வார்த்தைகள் நினைவில் இல்லை.  நண்பர் ஒருவர் ஒலிப்பதிவு செய்திருப்பதைப் பார்த்து பின்னர் அவர் சொன்ன வார்த்தைகளிலேயே தருகின்றேன்.)  அது போலவே பேச்சின் ஓரிடத்தில் “முன்பெல்லாம் சிற்றிதழ் எழுத்தாளர்களுக்கு புகழ் இல்லை.  நானெல்லாம் சிற்றிதழில் எழுதி வந்தவன்.  ஆனால் இப்போது சிற்றிதழ் எழத்தாளர்கள் எழுத்துலகின் மையமாக உருவாகி இருக்கின்றார்கள்.  சுந்தர ராமசாமி புகழின் உச்சத்தில் இருந்த காலத்தில் கூட அவருக்கு எனக்கு இருக்கும் புகழ் அளவு இருந்ததில்லை” என்று கூறினார்.  இதில் ஜெயமோகன் சொல்லாமல் விட்ட விடயம், ஜெயமோகனோ அல்லது ராமகிருஷ்ணனோ அல்லது சாரு நிவேதிதாவீ அதிகம் அறியப்பட்டது அவர்கள் விகடனில் எழுத ஆரம்பித்த பின்னர்தான்.  தவிர சினிமா பின்புலமும் கை கொடுத்தது.  அதே நேரம் இவர்கள் விகடனில் அல்லது அது போன்ற இதழ்களில் எழுதும்போது தம்மை சமரசம் செய்து கொண்டே எழுதினார்கள்.  எனவே ஜெயமோகன் தன்னை சிற்றிதழ் எழுத்தாளர் என்ற அடையாளத்துடன் போன தலைமுறை சிற்றிதழ் எழுத்தாளர்களுடன் ஒப்பிட்டு எழுதுவது தன்னை முன்னிறுத்துவதற்கான முயற்சி தவிர்த்து வேறொன்றில்லை.  இன்று ஜெயமோகனையோ அல்லது ராமகிருஷ்ணனையோ அல்லது காலச்சுவடு, உயிர்மையையோ சிற்றிலக்கியத்துடன் தொடர்புபடுத்திப் பார்ப்பது என்னளவில் எள்ளளவும் ஏற்பில்லாதது.  இவையெல்லாம் நடுவாந்தர அலல்து இடைநிலை எழுத்துக்களே என்பதே என் கருத்து.

நான் ஜெயமோனிடம் கேள்வி கேட்க கை உயர்த்தியபோது நானே கடைசிக் கேள்வி கேட்கலாம் என்று மட்டுறுத்துபவரால் சொல்லப்பட்டது.  நான் அவரிடம் கேள்வி கேட்பது என்பதை விட மூன்று விடயங்களைச் சுட்டிக்காட்ட விரும்பினேன்.
1.  ஜெயமோகன் தன் உரையில் தமிழ்த் திரைப்படங்கள் பற்றி குறைகளே கூறினார்.  (அவர் தான் சாதகமாகவே கூறினார் என்று பின்னர் கூறியபோதும் மக்களின் ரசனை அல்லது எதிர்பார்ப்பு இருப்பதால்தான் அதை ஈடுசெய்யும் பொருட்டு தமிழ்த் திரைபப்டங்களும் இருக்கின்றன என்று சொன்னதை தமிழ்த் திரைப்படங்கள் பற்றிய பலவீனமான ஒரு புள்ளியாகவே என்னால் கருதமுடிகின்றது.  இவை எல்லாம் வணிக ரீதியில் செய்யப்படும் சமரசங்கள்.  அப்படிப் பார்த்தால் விகடனும், குமுதமும், குங்குமமுமே முக்கியமான இதழ்கள் என்றும் நிறுவமுடியும்)  பின்னர் இன்னொருவர் தமிழ்த் திரைப்படங்களில் ஜெமோ ஈடுபடுவதைப் பற்றிக் கேட்டபோது அதன் தரத்தை மேம்படுத்தும் முயற்சி என்பது போன்ற கருத்தை ஜெமோ சொல்லி இருந்தார்.  இங்கே திரையிட்ட கதைகளை குமுதம் கூட வெளியிடுமா என்று ஜெமோ தனது உரையில் ஓரிடத்தில் சொன்னார்.  என்னைப் பொறுத்தவரையில் குமுதமும் விகடனும் ஒன்றுதான்.  இன்று நீங்கள் அடைந்திருப்பதாகச் சொல்லும் சுந்தர ராமசாமியை விஞ்சிய புகழ் விகடனில் எழுதியதாலேயே உங்களுக்குக் கிடைத்ததே தவிர சிற்றிலக்கியம் மையவிலக்கியம் ஆனதால் அமையவில்லை.  ஆனால் இதையெல்லாம் உங்கள் உரையில் குறிப்பிடாமல் மற்றவர்கள் சுட்டிக்காட்டியபின்னர் அதற்கு ஒரு காரணம் சொல்லித் தப்பிக்கின்றீர்கள்.  (இதைச் சொல்லும்போது இடையில் ஜெமோ குறுக்கிட்டதாலும், இயல்பாகவே பொது இடங்களில் எனக்கிருக்கின்ற பட படப்பினாலும் என்னால் திக்கித் திக்கியே சொல்ல முடிந்தது என்பதை ஒப்புக்கொள்ளுகின்றேன்.)

2. அடுத்து இந்தப் படங்களை எடுத்தவர்களை தி. ஜானகிராமன் உட்படப் சிலரைப் (எல்லாரும் ஜானகிராமன் தலைமுறை எழுத்தாளர்கள்) படிக்கவேண்டும் என்று சொன்ன ஜெமோ, தொடர்ந்து கூறினார் எமது பண்பாடுகளை, வாழ்வை அறிந்திருகாதவர்களால் நல்ல குறும்படங்களை / படைப்புகளை கொடுக்க முடியாதென்று,  அதை முன்வைத்தே அவரிடம் சொன்னேன் இன்று புலம் பெயர் நாடுகளில் தம் படைப்புகளைச் செய்யும் நிறைய இளைஞர்கள் புலம்பெயர் நாடுகளிற்குச் சிறு வயதிலேயே வந்தவர்கள்.  அவர்கள் படைப்புகளில் காட்டுபவை கூட புலம்பெயர் மக்களின் பிரச்சனைகளே.  அதை அவர்கள் தமது கோணத்தில் இருந்து சொல்வதற்கு அவர்களுக்கு ஈழத்து / தமிழகத்து வாழ்க்கை முறை அல்லது பண்பாடு பற்றித் தெரியவேன்டும் என்று சொல்லமுடியாது என்று.  இத்ததைய படைப்புகளைச் செய்பவர்களுல் பலர் இளைஞர்கள்.  தமிழில் வாசிப்பதில் சிக்கல் உடையவர்கள்.  அவர்கள் தம் பெற்றோரின், பேரன் பேத்திகளின் தாயக வாழ்வை அவதானங்களினூடாகவே அணுகுபவர்கள்.  அதையே சுட்டிக் காட்ட விரும்பினேன்.  இதை ஜெமோ எந்த இடத்திலும் கூறவுமில்லை. மேலும் புலம்பெயர்ந்து இங்கேயே கல்விகற்ற இவர்கள் பாடசாலைக் கல்வியில் ஒன்பதாம் தரம் முதலாகவே பாடத்திட்டத்திலேயே செவ்வியல் இலக்கியங்களை வாசிக்கின்றார்கள்.  ஒவ்வோராண்டும் ஷேக்ஸ்பியரின் ஏதாவது ஒரு படைப்பு இவர்களுக்குப் பாடத்திட்டத்திலேயே இருக்கின்றது.  எனவே அவர்கள் தமிழில் வாசிக்காவிட்டாலும், ஜெயமோகன் கேட்ட ஜானகிராமன், சுந்தர ராமசாமி உள்ளிட்டவர்களை தெரியாமல் இருந்தாலும் பாடத்திட்டத்தின் ஊடாகவே இலக்கிய பரிச்சயம் கொண்டவர்கள்.  இதுபற்றிய அறிதல் ஜெயமோகனுக்கு இருக்கவும் இல்லை என்பதையும் சுட்டினேன்.

……..2…..

அடுத்து சொல்வதற்குச் சற்று சங்கடமாக இருந்தாலும் சொல்லவேண்டியதென்பதால் சொல்லுகின்றேன்.  தனது கட்டுரையில் ஜெமோ சொல்கிறார் “வெளியே வந்தபோது பலரும் கேள்விநேரத்தில் இப்படி நிகழ்ந்தது பற்றி வருத்தம் தெரிவித்தார்கள். கேள்வி கேட்ட பெரும்பாலானவர்கள்,நான் எழுதுவது எதையும் வாசிக்காதவர்கள். நான் இன்னவகைக் கருத்துக்கள் கொண்டவன் என்று ’யாரோ’ சொன்னதை நம்பி அதை ஒட்டி நான் சொல்வது இதுவாகவே இருக்கும் என ஊகித்துக்கொண்டு கேள்வி கேட்டார்கள் என்றார்கள். அப்படி ஒரு குழுவாக அவர்கள் கேட்கும்போது பிறர் அமைதியாகிவிடுகிறார்கள்.” என்று.  கனேடிய இலக்கிய நண்பர்கள் பலரிடத்தில் இருக்கின்ற பெரிய குறையே இதுதான்.  தாம் யாரை விழாவில் நாயகப்படுத்துகின்றார்களோ அவர்களை விழாவுக்கு அல்லது சந்திப்புக்கு வரும் எவருமே கேள்வியோ அல்லது விமர்சனமோ செய்யக் கூடாது என்று எதிர்பார்ப்பதுதான்.  2009ல் அ.முத்துலிங்கம் எழுதிய உண்மை கலந்த நாட்குறிப்புகள் என்கிற கட்டுரைத் தொகுப்பு வெளியானபின்னர் நடைபெற்ற ஒரு பாராட்டுக் கூட்டம் ஒன்றில் அ. முத்துலிங்கத்தை விமர்சனம் செய்யக் கூடாது என்ற முன் நிபந்தனையுடனே அ.முத்துலிங்கம் நிகழ்வுக்கு ஒத்துக்கொண்டதாக நிகழ்விலேயே அறிவிக்கப்பட்டது.

கேள்வி கேட்டவர்களில் பலர் எதையுமே வாசிக்காதவர்கள் என்று கூறினார்கள் என்று ஜெமோ கூறுகிறார்.  அப்படிச் சொன்னவர்கள் என்னையும் சேர்த்துச் சொல்லி இருக்கவும் கூடும்.  அவர்களில் பலர் நான் ஜெயமோகன் மீது விமர்சனங்களை முன்வைக்கின்றேன் என்பதாலேயே நான் சாருவின் ஆள் என்று அடையாளப்படுத்துவதில் அதிகம் அவா உடையவர்கள்.  அவர்களுக்கு ஒரு தகவலாகவும், உங்களுக்குச் ஞாபகமூட்டலாகவும் சொல்கிறேன்.  ஒரு 7 வருடங்களின் முன்னர் உங்களுக்கு சூர்ய புத்திரன் என்ற பெயரில் நிறைய மின்னஞ்சல்கள் அனுப்பி இருக்கின்றேன்.  உங்களின் நிறையக் கதைகளைப் பற்றி உங்களிடம் சிலாகித்திருக்கின்றேன் வாதித்து இருக்கின்றேன். அந்த நேரத்தில் நான் பாலகுமாரன் பள்ளியில் இருந்து மெல்ல வெளியேறிக்கொண்டிருந்ததாலோ என்னவோ நீங்கள் அதிகம் என்னைக் கவர்ந்திருந்தீர்கள்.  எனது அப்போதைய வயதிற்கு எனது வாசிப்பைப் பாராட்டிய நீங்கள் (இதை எனக்கான ஊக்குவிப்பு என்றே எடுத்துக் கொண்டேன்)  கனடாவில் காலம் செல்வத்தில் தொலைபேசி இலக்கத்தையும் தந்தீர்கள்.  அப்போது நான் அறிந்திருந்த அனேகமான உங்கள் படைப்புகளை வாசித்து இருந்ததால் நான் செல்வத்திடம் பேசிய முதல் வார்த்தையே “ஜெயமோகன் உங்களின் போன் நம்பர் தந்தவர்.  உங்களிட்ட சாரு நிவேதிதாவின் புத்தகங்கள் இருக்கா” என்பதுதான்.  செல்வத்திற்கு இப்போதும் இது நினைவில் இருக்கும் வேண்டுமானால் கேட்டுப் பார்க்கலாம்.  அதன் பின்னர் இடையில் சிலகாலம் வாசிப்பில் தொய்வேற்பட்டபின்னர் மீண்டும் உங்களை வாசித்த போது எந்த ஒரு விடயத்தையும் (ஆளுமைகள், கோட்பாடுகள், வரலாறு) உங்களூடாக அணுகுவது எத்தனை எதிர்மாறாக அமையும் என்று அனுபவ பூர்வமாக உணர்ந்தேன்.  எனவே உங்களுக்கு “கேள்வி கேட்ட பெரும்பாலானவர்கள்,நான் எழுதுவது எதையும் வாசிக்காதவர்கள்” என்று சொன்னவர்கள் அதில் என்னையும் சேர்த்துச் சொல்லி இருந்தால் அவர்களுக்குச் சொல்லிக்கொள்வது நான் ஜெயமோகன் மீது விமர்சனங்களை முன்வைபப்தே அவரை வாசித்ததால்தான் என்ற ஒன்றையே.

-3–

ஜெயமோகன் மீது எனக்குத் தனிப்பட்ட கோபம் ஒன்றும் கிடையாது.  அவர் மறுத்தாலுல் ஏற்றாலும் அவர் எழுத்துக்களில் துருத்திக் கொண்டு தெரியும் அரசியல் மீதெனக்கு நிறைய விமர்சனம் உண்டு.  அதே நேரம் ஜெயமோகனை விட அதிகம் கண்டிக்கவேண்டியது இந்தியப் படைப்பாளிகளிடம் தமக்கான் அங்கீகாரத்துக்காக அலையும் எம்மவர்களைப்பற்றியே.  இன்று கனடாவில் அதிகம் பேர் புகழும் ஜெயமோகன் மீதும் ராமகிருஷ்ணன் மீதும் நான் வைக்கின்ற முக்கியமான விமர்சனம் அவர்கள் எல்லா விடயத்தையும் romantisize செய்தே பழகினவர்கள் என்பதில் இருந்து தொடங்குகின்றது.  அவர்கள் அடிப்படையில் புனைவெழுத்தாளர்களாக இருப்பதால் எந்த விடயத்திலும் தம் கற்பனையில் உதித்தவற்றை புனைவுகள் எழுதும் அதே லாவகத்துடன் எல்லாரும் நம்பும்படி எழுதிவிடுவார்கள் என்பதே. ஈழத்தின் முக்கிய படைப்பாளிகள் எத்தனையோ பேர் இருக்க அவர்களை சர்வ சாதாரணமாக ஒதுக்கிவிட்டு தனது இணையத்தளத்தில் எந்த விமர்ச்னமும் இல்லாமல் இலங்கை ஒரு சிறிய நாடாக இருப்பதால் இலங்கையர்கள் எல்லாரும் குறுகிய மனப்பான்மை கொண்டோராய் இருக்கின்றனர் என்கிற பின்னூட்டங்களை எல்லாம் வெளியிடுகின்ற ஜெயமோகன் போன்றோரை சிறப்பு விருந்தினராய் அழைப்பதும், பிரதான பேச்சாளார் என்கிற அதிகாரத்தைக் கொடுப்பதும் அடிமைத்தனத்தில் உச்சத்தனம் என்பதைத்தவிர வேறொன்றுமில்லை.

13 thoughts on “ஜெயமோகனின் இணையத்தளத்தில் என் பெயர் இடம்பெற்ற ஜென்ம சாபல்யத்துடன்…….

Add yours

 1. //விகடனில் எழுதியதாலேயே //

  விகடனில் சங்கச்சித்திரங்கள்தானே எழுதினார் ? ரஜினியை புகழ்ந்தா எழுதினார் ?

  எந்த ஊடகத்தையும் தன் கருத்துக்களை சொல்ல முடியுமா என்றால் உபயோகப்படுத்தலாம்தானே ?

  அங்கெ போய் தரத்தில் சமரசம் செய்துகொண்டு எழுதினார் என்பது வெறும் தூற்றுதான் .

  Like

 2. அவர் சொல்வது உண்மை இருப்பதால்தான் அவரை அழைக்கிறார்கள். நிலமை எப்படி இருக்கிறதோ அதைதான் கூறுகிறார். பிடிக்கவில்லைஎன்றால் அழைகாதீர்கள் அல்லது அவரது கூட்டத்திற்கு போகாதீர்கள். அது உங்களை போன்றவர்களுக்கு நல்லது

  Like

 3. //…ஈழத்தின் முக்கிய படைப்பாளிகள் எத்தனையோ பேர் இருக்க அவர்களை சர்வ சாதாரணமாக ஒதுக்கிவிட்டு தனது இணையத்தளத்தில் எந்த விமர்ச்னமும் இல்லாமல் இலங்கை ஒரு சிறிய நாடாக இருப்பதால் இலங்கையர்கள் எல்லாரும் குறுகிய மனப்பான்மை கொண்டோராய் இருக்கின்றனர் என்கிற பின்னூட்டங்களை எல்லாம் வெளியிடுகின்ற ஜெயமோகன் போன்றோரை சிறப்பு விருந்தினராய் அழைப்பதும், பிரதான பேச்சாளார் என்கிற அதிகாரத்தைக் கொடுப்பதும் அடிமைத்தனத்தில் உச்சத்தனம் என்பதைத்தவிர வேறொன்றுமில்லை….// உண்மைதான் இது ஒரு வகையான தாழ்வுச்சிக்கலே. அறிஞர்கள்/கலைஞர்கள்/எழுத்தாளர்கள் என்று வரும் போது தமிழகத்தில் இருந்து வருபவர்கள்தான் திறமையானவர்கள் என்ற சிந்தனையோட்டம் எம்மிடையே இருக்கத்தான் செய்கிறது. எம்மவர்களை நாம் ஒரு போது கவனிப்பது இல்லை. தமிழகத்து பிரபலங்களை அழைத்தால் தாம் பிரபலமாகிவிடலாம் என்று நினைக்கிற ஏற்பாட்டாளர்கள், எம்மவர்களை வளர்க்கவேண்டும் என்று கிஞ்சித்தும் எண்ணுவதில்லை. ஜெமோ என்ற ஆளுமை மீதான காட்டம் கட்டுரையில் தெரிகிறது.

  Like

 4. அன்பின் அனாமியே, ஒரு சிறு சந்தேகம், ஜெயமோகனை ஆதரிப்பதில் அப்படி என்ன அவமானம். ஏன் அவரை ஆதரிக்கின்ற போது அனாமி அவதாரம் எடுக்கின்றீர்கள். \

  Like

 5. @அனாமி
  //ஓ , நீங்க பாலகுமாரன் லெவல் ஆள்தானா , உங்க கிட்ட பேசி என்ன உபயோகம் //

  அன்பின் அனாமி,
  பாலகுமாரன் பற்றி இன்று மிகக் கடுமையான விமர்சனங்கள் இருப்பினும் ஒரு காலத்தில் அவரை மாத்திரமே வாசித்துத் தள்ளியிருக்கின்றேன். இந்தப்பதிவை வாசித்தால் அதில் நான் என்ன எழுதி இருக்கின்றேன் என்று தெரியும். ஏன் ஜெயமோகன் போலவே வாசிக்காமலேயே கருத்தை நிறுவ முயல்கின்றீர்கள்

  Like

 6. @அனாமி
  //அவர் சொல்வது உண்மை இருப்பதால்தான் அவரை அழைக்கிறார்கள். நிலமை எப்படி இருக்கிறதோ அதைதான் கூறுகிறார். பிடிக்கவில்லைஎன்றால் அழைகாதீர்கள் அல்லது அவரது கூட்டத்திற்கு போகாதீர்கள். அது உங்களை போன்றவர்களுக்கு நல்லது

  அவர் சொல்வது உண்மை இருப்பதால்தான் அவரை அழைக்கிறார்கள். நிலமை எப்படி இருக்கிறதோ அதைதான் கூறுகிறார். பிடிக்கவில்லைஎன்றால் அழைகாதீர்கள் அல்லது அவரது கூட்டத்திற்கு போகாதீர்கள். அது உங்களை போன்றவர்களுக்கு நல்லது

  //
  பிடித்தவர்கள் போய்ச்சாப்பிடவும், பிடியாதவர்கள் தவிர்கக்வும் ஜெமோ என்ன சாப்பாட்டுக கடையா நடத்துகின்றார். அன்று நடைபெற்றது குறும் திரைப்பட விழா. அதில்தான் ஜெமோ பேசினாரே தவிர, அதில் ஜெமோ பேசுகிறார் என்பதைக்கூட கடைசிவரை ரகசியமாகவே வைத்திருந்தனர்……..

  Like

 7. @வாகுகன்

  //து பிரபலங்களை அழைத்தால் தாம் பிரபலமாகிவிடலாம் என்று நினைக்கிற ஏற்பாட்டாளர்கள், எம்மவர்களை வளர்க்கவேண்டும் என்று கிஞ்சித்தும் எண்ணுவதில்லை.//

  ஏற்றுக் கொள்ளுகிறேன்

  //மேலே வந்த மூன்று அனானிகளும் ஜெமோவின் பக்த சிரோன்மணிகளாக இருப்பார்களோ//

  அவரின் பக்த சிரோண்மணிகளுக்குக் கூட அவர்கள் பெயரைச் சொல்ல அவமானமாக இருக்கும் என்கிறீர்கள?…. என்னவோ போங்கள் வாகுகன்

  Like

 8. > (இதைச் சொன்னபோது எனக்கு ஒரு கேள்வி எழுந்தது. தென் தமிழகத்தை மையமாகக் கொண்டு வரும் படங்களில் வன்முறை அதிகமாக இருகக் காரணம் அங்கே என்ன பரிபூரண அமைதியா நிலவுகின்றது? ).

  “இந்தமாதிரிச் சங்கடமான கேள்விகளைக் கேட்பவர்களுக்கு ஊரில் வாத்திமார்கள் குட்டுக் கொடுப்பார்கள்”, ஜெ.மோ, அப்படி நினைத்திருப்பார்.

  —–

  நிற்க எல்லாப் தெரிந்தவர்போல் அதிரடிச் “ஸ்டேற்மென்ற்” விடுவதில் ஜெ.மோ வாத்தியார் கில்லாடி. ஒருமுறை “ஊரில் தெருச் சண்டியர்கள் எல்லாம் எதோவொரு விதத்தில் ஒரு சிறிய அங்கக் குறைப்பாடுடன் இருப்பார்கள்” என்ற அரிய கண்டுபிடிப்பை வெளியிட்டார். எனக்குத் தெரிந்தா ஊர்ச் சண்டியர்கள் எல்லாம் நல்ல “நேரிய” நடைகொண்ட பலசாலிகள் 😦

  Disclaimer: ஜெ.மோ சொன்ன exact வசனங்கள் ஞாபகம் இல்லை. சாரம் நான் சொன்னதுதான்.

  Like

 9. //ஊரில் தெருச் சண்டியர்கள் எல்லாம் எதோவொரு விதத்தில் ஒரு சிறிய அங்கக் குறைப்பாடுடன் இருப்பார்கள்” என்ற அரிய கண்டுபிடிப்பை வெளியிட்டார். எனக்குத் தெரிந்தா ஊர்ச் சண்டியர்கள் எல்லாம் நல்ல “நேரிய” நடைகொண்ட பலசாலிகள் :-(//

  ஒப்புக்கொள்ளுகின்றேன். தனக்குக் கிடைத்த ஒற்றை அனுபவத்தைப் பொதுமைப்படுத்துவது ஜெமோவின் இயல்பு. இது எப்படி முடியும் என்றால் 2010ல் நியூசிலாந்துடன் 1வது டெஸ்டில் டெண்டுல்கர் 49 & 12 ஓட்டங்கள் எடுத்தபோது ஹர்பஹன் 69 & 115 ஓட்டங்களையும் இரண்டாவது டெஸ்டில் டெண்டுல்கர் 13 ஓட்டங்களைப் பெற்றபோது ஹர்பஜன் 112 ஓட்டங்கள் பெற்றதையும் வைத்து ஹர்பஜன் டெண்டுலகரை விட நல்ல பாட்ஸ்மன் என்றெழுதுவார் ஜெயமோகன். அப்படி இல்லை என்று வாதிட்டால் உடனே இந்த ரெண்டு போட்டிகளையும் உதாராணம் காட்டி, தனது கருத்தை எதிர்த்தோரை வாசிக்காமல் எழுதுவோர், விஷய்ம தெரியாதோர் என்பார். ஜெமோவின் இந்தக் குள்ளத்தனம் தெரியாமல் இன்னும் அவரைக் கொண்டாடுவோரைப் பாத்தால் கவலையாக இருக்கின்றது.

  Like

 10. 0களிலும் 70களிலும் தமிழகத்தில் உணவுப் பற்றாக்குறை நிலவியதாகவும் அதனாலேயே அந்த நாட்களில் திரைப்படங்களில், குறிப்பாக எம்ஜிஆரின் திரைப்படங்களில் கதாநாயகன் மேஜை முழுவதும் உணவுப் பொருட்கள் நிரம்பி இருக்க அதை உண்பதைப் போன்ற காட்சி காட்டப்படும்

  ஜெயமோகன் இதுபோன்ற பிதற்றல் ஆராய்ச்சிகளை விடவேண்டும். இது அவர் மனநலத்துடன் சம்பந்தப்பட்ட பிரச்சினை.

  Like

Leave a Reply to எஸ் சக்திவேல் Cancel reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

Website Powered by WordPress.com.

Up ↑

%d bloggers like this: