நான் ஒரு படைப்பாளியல்ல; பாணன் – எஸ். பொ

ஈழத்துப் படைப்பாளிகளும் முக்கியமானவர்களுல் ஒருவரும் எனக்குப் பிடித்தவருமான எஸ் பொவிற்கு இவ்வாண்டு இயல் விருது வழங்கப்படவிருப்பதாக அறிந்து மகிழ்ச்சியடைந்தேன்.  இயல்விருது பற்றிய விமர்சனங்கள் நிறைய இருந்தபோதும் இவ்வாண்டுக்குரிய இயல்விருது எஸ்பொவிற்கு வழங்கப்பட்டிருப்பதன் காரணமாக எஸ்பொவை காணும் வாய்ப்புக் கிட்டியிருப்பது குறித்தும் மகிழ்ச்சியே.  ஈழத்துப் படைப்பாளிகளில் எஸ்பொவையும், மு. தளையசிங்கத்தையும் முழுவதும் தொடர்ச்சியாகவும், விரிவாகவும் வாசிக்கவேண்டும் என்ற விருப்பம் இருந்தாலும் நிறையத் தடவைகள் காலந்தாழ்த்தியே வந்துள்ளேன்.  அண்மையில் எஸ்பொ கனடா வருகின்றார் என்று அறிந்ததும் அதற்கிடையில் அவரை முழுமையாக வாசிக்கவேண்டும் என்ற ஆர்வமும் ஏற்பட்டது.
 ஆனாலும் அதே நேரத்தில் அவரது புத்தகங்கள் முழுமையாகக் கிடைக்காமையாலும், நான் நேரம் கிடைக்கும் போதெல்லாம் காலத்தின் தேவை கருதி The Cage: The fight for Sri Lanka and the Last Days of the Tamil Tigers மற்றும் Prosecuting Heads of State போன்ற புத்தகங்களை தொடர்ச்சியாக வாசித்துக் கொண்டிருந்ததாலும் துரதிஸ்டவசமாக எஸ்பொவை அவரது கனேடிய வருகையின்போது முழுமையாக வாசிப்பது என்பது சாத்தியமில்லாதது ஆகிவிட்டது.  அதே நேரம் எஸ்பொ எழுதியவற்றில் நான் வாசித்தவற்றைப் பற்றி சில குறிப்புகளை இங்கே பகிர்ந்துகொள்ளலாம் என்று நினைக்கின்றேன்

சடங்கு  
சடங்கு என்கிற எஸ். பொ எழுதிய நாவலை சில காலங்களிற்கு முன்னர் மீண்டும் ஒரு முறை வாசித்திருந்தேன்.  கலாசாரம், புனிதம் என்றெல்லாம் கட்டியமைக்கப்பட்டு, கட்டியழுது கொண்டிருக்கும் தமிழ்ச் சமூகத்தில், அதிலும் யாழ்ப்பாணச் சமூகம் பற்றிய இந்நாவலுக்குரிய சாத்தியம் பேரதிசயம் தான். அதிலும் குடும்பம் என்ற கட்டி எழுப்பப்பட்ட ஓர் அமைப்பை முதன்மைப்படுத்தி, தனி நபர் ஆசாபாசங்களை முக்கியப்படுத்தாமல் தியாகம், விட்டுக் கொடுத்தல், புனிதம் என்றெல்லாம் பேசப்படும் சமூகங்களில், குடும்ப உறவுகளைப் பேணவும், குடும்பத்தை நிலைப்படுத்தவும் (முக்கியமாக பண ரீதியில்) எடுக்கும் முயற்சிகளில் தனி மனித உணர்வுகளும் விருப்பங்களும் எப்படி நிராகரிக்கபடுகின்றன என்று சொல்கிறது சடங்கு கதை.
செந்தில்நாதன் என்கிற குடும்பத் தலைவர் மனைவியையும், ஐந்து பிள்ளைகளையும், மனைவியின் தாயாரையும் பராமரிக்க வேண்டும் என்பதையே கருத்தாகக் கொண்டு கொழும்பில் இருந்து கடுமையாக உழைத்து வருகிறார். குடும்பம் மீது தீராத காதலும், மனைவி மீது அடங்காத காமமும் கொண்ட செந்தில்நாதன் தனக்குக் கிடைக்கும் பணத்தைக் குடும்பத்திடம் சேர்க்க யாழ்ப்பாணத்துக்கு வருகிறார். இது வெளியில் சொல்லும் காரணம் என்றாலும், தன் காமம் தீர்க்க ஒரு வடிகால் கிடைக்கும் என்ற எண்ணமும் ஒரு காரணம். (காமம் பெருகக் காரணம் பணம் கிடைத்த மகிழ்ச்சியில் அவர் பார்த்த ஓர் ஆங்கிலப்படத்தில் வரும் காட்சி). மாறாக தன் விடுமுறையை நீட்டித்தும் கூட அவரால் ஒரு நாள் கூட மனைவியுடன் கூட முடியவில்லை. கூட்டுக் குடும்பம், தியாகம் என்று திணிக்கப்பட்ட கற்பிதங்கள் எப்படி தனி மனித வாழ்வின் இயல்பு நிலையையும், சந்தோஷங்களையையும் நிராகரிக்கின்றன என்று சொல்லும் கதையூடாக அவ்வப்போது நடுத்தர வர்க்க மக்கள் பற்றிய நக்கல்களும் யாழ்ப்பாணத்து மனநிலை பற்றிய கேலிகளுமாக கதை செல்கின்றது.


வெளியில் செல்லும் செந்தில்நாதன் குடித்து விட்டு வருகிறார். செந்தில்நாதன் கொழும்பில் மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ என்று குடிப்பது இல்லை. ஊரில் கூட சந்தர்ப்பமும் ஓசிச் சரக்கும் கிடைத்தால் மட்டுமே குடிப்பவர் (இதைத்தானே நடுத்தர வர்க்க மனநிலை என்பார்கள்). கூடலுக்கான எதிர்பார்ப்புடன் அவரைத் தேடிவரும் மனைவி, அவர் சத்தி எடுத்துவிட்டுப் படுத்திருப்பதைப் பார்த்துவிட்டு ஏமாற்றத்துடன் திரும்புகிறாள் (நடுத்தர வயதே ஆனபோதும், மற்றவர்கள் பார்த்தால் மரியாதை இல்லை என்பதற்காக செந்தில்நாதனும் மனைவியும் ஒரே அறையில் படுப்பதில்லை). இந்த நேரத்தில் தாபத்துடன் அவர் மனைவி சுய இன்பம் செய்வதாக எழுதுகிறார் எஸ், பொ. அது போலவே கொழும்பில் செந்தில்நாதனும் சுய இன்பம் செய்வதாக வருகிறது. இந்தக் கதை எழுதப்பட்டது 60களில் என்று அறியும்போது ஆச்சரியமாக இருக்கின்றது. ஆபாசமாக கதை எழுதினார் என்பதற்காக மு. தளையசிங்கம் அடித்துக் கொல்லப்பட்டார் என்றெல்லாம் உளறித்தள்ளும் மேதாவிகள் இந்தக் கதை பற்றி என்ன சொன்னார்களோ தெரியவில்லை.


சடங்கு நாவலைப் பற்றிய குறிப்பினை நான் முன்னர் ஒரு முறை வலைப்பதிவில் எழுதி இருந்தபோது தொடர்புகொண்ட காலம் செல்வம், இந்த நாவலை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கும் முயற்சிகள் நடைபெற்றுக் கொண்டிருப்பதாகக் கூறியிருந்தார்.  அதன் பின்னர் அது பற்றி எதுவுமே நான் கேள்விப்படவில்லை.  குறிப்பிடப்பட்டது போல ஆங்கில மொழிபெயர்ப்பு பொருத்தமான மொழி பெயர்ப்புடன் வரும்போது அது ஈழத்து இலக்கியத்தின் முக்கியமான சாதனைகளில் ஒன்றை பரவலாக அறிமுகம் செய்துவைக்க அதிகம் தோதாக அமையும்.


தீ
எஸ்பொவின் தீ மனிதனின் அடிப்படை உணர்ச்சியும் உறவுகளின் அடிப்படையும் காமத்தை அடிப்படையாகக் கொண்டதாக இருக்கின்றது என்பதை தத்துவ நோக்கில் (ஆழமாக இல்லாத விடத்தும்) அதே நேரம் ஒரு நாவல் வடிவில் சொல்கின்ற படைப்பாகும்.  கதையில் கதையின் நாயனுக்கு அவன் வாழ்வில் சந்திக்கின்ற 7 பேருடன் பாலுறவின் அடிப்படையிலான தொடர்பு உருவாகின்றது.  (இதில் சிறு வயதில் பாதிரியார் ஒருவரால் அவன் பாலியல் தேவைகளுக்காக அறிந்தும் அறியாமலும் பலியாக்கப்படுவதும், பின்னர் அவனே பூப்பெய்தாத சிறுமியை தனது தேவைகளுக்காக பலியாக்க முயல்வதும் உள்ளடக்கப்பட்டுள்ளது.  கலாசாரம் பண்பாடு என்ற போர்வைகளில் வெளிப்படுத்தப்படாது  ஈழத்தில் நான் சிறுவனாக இருந்த காலத்திலே கூட நிறையப் பாலியல் துன்புறுத்தல்கள் நடைபெற்றிருப்பதைக் கேள்விப்பட்டிருக்கின்றேன்.  எமது சக மாணவன் ஒருவன் அப்போது மாணவ முதல்வனாக இருந்த ஒருவனால் மாணவ முதல்வர்களுக்கான அறையில் வைத்து சுயமைதுனம் செய்யக் கட்டாயப் படுத்தப்பட்டான் என்பதை எமது வகுப்பில் அனேகம் பேர் அந்நாட்களில் அறிந்தே இருந்தோம்.  எனினும் பயம் காரணமாகவும், வெட்கம் காரணமாகவும் இது பற்றிப் பெரிய அளவில் பேசப்படவில்லை என்பதே உண்மையாகும்.  ஆனால் 1957 களிலேயே இது பற்றி எஸ்பொ எழுதி இருக்கின்றார் என்பதை அறியும் போது வியப்பாகவே இருக்கின்றது.  இந்த ஏழு பேருடனும் கதை நாயகனுக்கு இருக்கின்ற உறவும், உணர்ச்சிகளும் வேறுபட்டிருப்பதும் கதாபாத்திரம் பார்க்கின்ற கோணங்களும் பார்வைகளுமே கூட வேறுபட்டிருப்பதும் முக்கிய அவதானங்களாகும்.


பனிக்குள் நெருப்பு
2006ல் புதுவைப் பல்கலைக்கழகத்திலே நடைபெற்ற கூட்டம் ஒன்றிலே இரண்டு அமர்வுகளாக  புலம் பெயர்ந்தோர் இலக்கியம் என்ற பெயரில் எஸ்பொ பேசியவற்றின் எழுத்துவடிவிலான தொகுப்பே பனியும் என்கிற இந்த நூலாகும்.  1990ல் சிட்னியில் இலங்கை அகதிகள் சார்பாகப் பேசுகின்றபோது “The Tamil Diaspora” என்பதற்குப் பதிலாக  புலம்பெயர்ந்த தமிழர் என்ற சொற்றொடரை முதன் முதலில் பாவித்தது முதல் நிறைய விடயங்களிந்தப் புத்தகத்தில் உள்ளன.  எனக்குத் தெரிந்து புலம்பெயர் இலக்கியம் பற்றிய ஆய்வாக முதலில் வெளிவந்த நூல் (புலம் பெயர் எழுத்தாளரால் எழுதப்பட்ட) இதுவாகத்தான் இருக்கவேண்டும் என்று நினைக்கின்றேன்.  இந்த நூலில் அந்தக் காலப்பகுதிவரை புலம்பெயர் நாடுகளில் வெளிவந்த இதழ்கள், சஞ்சிகைகள், மற்றும் இலக்கியம் சார்ந்த நடவடிக்கைகள் பற்றி ஆவணப்படுத்தி இருப்பதுடன், தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழ்ந்த நாடுகளிற்கு தான் சென்ற போது தனக்குக் கிட்டிய அனுபவங்களையும் கூறியுள்ளார்.  அண்மைக்காலத்தில் துவாரகனும் புலம்பெயர் இலக்கியம் பற்றிய சில கட்டுரைகளைத் தொடர்ந்து எழுதி இருந்தார்.  இளங்கோவும் தற்காலத்து ஈழத்து இலக்கியம் என்ற கடந்த பத்தாண்டுகளில் ஈழத்து இலக்கியம் பற்றி எழுதிய கட்டுரை ஒன்றில் புலம்பெயர் இலக்கியம் பற்றியும் மிகப் பெரும்பான்மையான அளவிற்கு ஆவணப்படுத்தி இருந்தார்.  சில வாரங்களிற்கு முன்னர் GTN TVயிற்காக யமுனா ராஜேந்திரனும் குருபரனும் சேர்ந்து புலம்பெயர் நாடுகளில் இருந்து ஆரம்ப காலங்களில் வெளியான சில சிற்றிதழ்களின் ஆசிரியர்களிடம் அது தொடர்பான அவர்களது அனுபவங்களை நேர்காணல் செய்திருந்தனர்.  இவை எல்லாம் புலம்பெயர் இலக்கியம் பற்றிச் செய்யப்பட்ட காத்திரமான பதிவுகள். 
(சிறு சந்தேகம் ஒன்று:- எஸ்பொ பாரிஸ் சென்றிருந்த போது அங்கே ஒரு இளைஞரை pub ஒன்றில் சந்தித்ததாகவும் கருத்து முரண்பாடுகள் இருப்பினும் அறிவுச் சுதந்திரத்தை முன்னெடுக்கும் பொருட்டே அந்தச் சந்திப்பைச் செய்ததாகவும் பின்னர் அந்த இளைஞர் அந்த உரையாடலை “வானத்திலே சென்ற பிசாசை ஏணி வைத்துப் பிடித்த தாகக்” கதை பண்ணிப் பிரசுரித்ததாகவும் கூறுகிறார்.  பின்னர் அந்த இளைஞர் உண்மைக்குப் புறம்பான தகவல்களுடன் எழுதிய புலி எதிர்ப்பு நாவல் ஒன்று அற்புதம் என்று புலி எதிர்ப்பர்களால் விளம்பரம் கொடுக்கப்பட்டு தமிழ்நாட்டில் பிரபலமாக்கப்பட்டது (பக்கம் 45) என்றும் கூறுகிறார்.  அவர் யாராக இருக்கும் என்று யோசித்துப் பார்க்கின்றேன்.)


நனவிடை தோய்தல்
நனவிடை தோய்தல் (nostalgia) என்றாலே காதலுடன் மாத்திரமே தொடர்புபடுத்திப் பார்க்கின்ற காலத்தில் முதன் முதலாக இந்தப் புத்தகத்தை வாசிக்கத் தொடங்கியதாலோ என்னால் முதல் வாசிப்பில் லயிக்கமுடியவில்லை.  ஆனால் அண்மையில் திரும்பவும் வாசித்த போது எனக்கு மிக மிகப் பிடித்த புத்தகங்களில் ஒன்றாகிவிட்டது.  50 ஆண்டுகளுக்கு முன்னைய யாழ்ப்பாணத்து மக்களின் வாழ்க்கை முறை மிக மிக அழுத்தமாகவும் அதே நேரம் உணர்வுபூர்வமாகவும், அதே நேரம் வீண் அலங்காரங்களைத் தவிர்த்துப் பதிவு செய்யப்பட்டிருக்கின்றது.  எம் போன்றவர்களுக்கு இனி ஒருபோதும் கிட்டப் போகாத யாழ்ப்பாணத்து வாழ்க்கையை எஸ்பொவின் எழுத்துக்களூடாகத் தரிசிப்பதே ஒரு சுகமான அனுபவம்தான்.  அதே நேரம் அந்நாளைய மக்களின் வாழ்க்கை முறை பற்றிய சிறந்த ஆவணப்பதிவாகவும் இந்தப் புத்தகம் உள்ளது.  உதாரணத்துக்கு ஒரு சின்னப் பகிர்வை எஸ்பொவின் எழுத்துக்களிலேயே தருகின்றேன்

“பின்னர், ஐந்து சத நோட்டுக்களும் பாவனைக்கு வந்தன.  இது புதினமான நோட்டு.  ஒரே தாளில் இடப்பக்கம் இரண்டு சத முத்திரை போலவும் வலப்பக்கம் மூன்று சத முத்திரை போலவும் அச்சிடப்பட்டிருந்தன.  தேவை கருதி அந்தத் தாளை இரண்டு முத்திரைகளாகக் கிழித்து, இரண்டு சதமாகவும் மூன்று சதமாகவும் பாவித்துக் கொள்ளலாம்.  மூன்று சய இரண்டு சமன் ஒன்று என்கிற வாய்ப்பாட்டில் ஒரு சதக் கணக்கும் சரி செய்யப்பட்டது ”  

இது போல பணம், துட்டு என்கிற பிரயோகங்கள் மெல்ல வழக்கொழிந்து எப்படி ரூபா சதம் என்கிற பாவனை வந்தது என்பதையும் மிகச் சுவாரசியமாகச் சொல்லுகின்றார் எஸ்பொ.  நாலு பணம் என்பது இருபத்தைந்து சதம். இந்தக் கணக்கின் அடிப்படையில் 3 பணம் என்றால் அது பதினெட்டுச் சதமா அல்லது பத்தொன்பது சதமா என்று பெரிய வாக்குவாதம் கூட நடைபெற்றதாம்.


(எஸ்பொ எழுதிய ஆண்மை, வீ, அப்பாவும் மகனும், அப்பையா, முறுவல் போன்றவற்றை வாசித்திருந்தாலும் அதை இன்னொரு பதிவில் பகிர்ந்து கொள்ளுகின்றேன்.)




5 thoughts on “நான் ஒரு படைப்பாளியல்ல; பாணன் – எஸ். பொ

Add yours

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

Website Powered by WordPress.com.

Up ↑

%d bloggers like this: