இயல்விருது பெறுவதற்காக கனடா வந்திருந்த எஸ்பொவுடனான விருது வழங்கும் விழாவிற்கு அடுத்த நாள் நடைபெற்ற காலம் செல்வம் ஒழுங்கு செய்திருந்த “எஸ்பொ நனவிடை தோய்தல்” என்கிற சந்திப்பொன்றிற்குச் சென்றிருந்தேன். நிறைய எழுத்தாளர்கள் அவர்கள் எழுத்தினூடாக அவர் எப்படி இருப்பார் என்று தோன்றுகின்ற விம்பம் போல இருப்பதில்லை. ஆனால் எஸ்போ, அவர் எழுத்துகளூடாகத் தெரிவது போன்ற கலகம் செய்யும் இயல்புடையவராகவே தெரிந்தார். சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு, தமிழ் தேசியம், மகாவம்சம் என்று நிறைய விடயங்களைத் தொட்டுத் தொட்டுப் பேசினார். அதே நேரம் தமிழ்த் தேசியத்தை வலியுறுத்திக் கூறும்போது சிங்களவர்கள் பற்றிக் கூறிய சில கருத்துக்கள் மிகுந்த ஏமாற்றத்தையே தந்தன. இது போன்ற பேச்சுக்களை எஸ்போ போன்ற அனுபவமும் ஆளுமையும் நிரம்பிய ஒரு மூத்த எழுத்தாளரிடம் இருந்து எதிர்பார்க்கவேயில்லை.
சடங்கு, தீ போன்ற படைப்புகளூடாக பாலியல் பற்றி மக்களிடையே இருந்த, பாலியலைப் பேசக் கூடாத ஒன்றாக கருதும் மனப்பாங்கை உடைத்துப் போட்ட எஸ்பொ, “கற்பு நிலை” பற்றிப் பேசியதும், ஆதியிலே தமிழராக இருந்தவர்கள் பின்னர் சிங்களவர்களாக மாறியதற்குக் காரணம் கூறும்போது “சிங்களப் பெண்கள் கற்பு நெறி பிறழ்ந்ததும் ஒரு காரணம்” என்று கூறியதும் மிகுந்த ஏமாற்றத்தையே தந்தன. அதே நேரம் நிறைய விடயங்களில் எஸ்பொ ஒரு ரசிக மனநிலையுடனேயே என்னால் ரசிக்க முடிந்தது என்பதையும் சொல்லித்தான் ஆகவேண்டும்.
தனது உரையின் ஆரம்பத்தில் முதல்நாள் இயல் விருது வழங்கும் விழாவில் பேசுவதற்குக் கூறப்பட்டிருந்த “ஒழுக்க விதிகள்” பற்றிக் கிண்டலடித்து தன்னைக் காட்டான் என்றும், இங்கே எப்படியும் பேசலாம் என்று கூறிக்கொண்டே பேசிய எஸ்பொ, தனது கருத்துக்களையும் அரசியலையும் நேரடியாகவும் ஆணித்தரமாகவும் முன்வைத்தார் எஸ்பொ. இது பற்றிய முழு ஒலிப்பதிவும் இருப்பதால் அதையும் இந்தப் பதிவுடன் இணைக்கின்றேன்.
இதே நிகழ்விலேயே ஆபிரிக்க இலக்கியங்களுடன் தமிழர்களுக்கு கலாசார ரீதியில் இருக்கின்ற தொடர்புகளைக் குறிப்பிட்ட எஸ்பொ ஐந்து ஆபிரிக்க எழுத்தாளர்களின் படைப்புகளைத் தமிழில் மொழிபெயர்த்த புத்தகங்களின் வெளியீடும் எந்த சம்பிரதாயமும் இல்லாமல் நடைபெற்றது. இந்த ஆறு புத்தகங்களுடன் எஸ்பொ கவிதை நடையில் எழுதிய காமசூத்திரம் நூலும் சேர்த்து ஒரு தொடகுதியாக விற்கப்பட்டது. இதனைக் குறிப்பிட்ட எஸ்பொ, தான் லேகியம் விற்பவனைப்போல தனது படைப்புகளைத் தானே விற்பனை செய்வதாகத் தன்னைத் தானே கேலி செய்யவும் தவறவில்லை. எஸ்பொவின் இயல் விருது ஏற்புரைப் பேச்சு மிகச் சிறப்பாக இருந்தது என்று நண்பர்கள் கூறியபோதும் அந்த விழாவிற்குச் செல்லாததால் அதனைக் கேட்கமுடியவில்லை. மறுநாளே அதற்குப் பரிகாரமும் கிடைத்தது போல அமைந்தது இந்த நிகழ்ச்சி.
எஸ்பொவுடனான சந்திப்பின் ஒலிப்பதிவிற்கு கீழ்வரும் இணைப்பிற்குச் செல்லவும்
இயல் விருது
இயல் விருது பற்றியும் வழமைபோலவே சொல்வதற்குச் சில இருக்கின்றன. இயல் விருது என்பது தொடக்கம் முதலே தனக்கேயுரிய ஒளிவு மறைவுகளுடனும் அபத்தங்களுடனுமே நடந்தேறிவருகின்றது. இதைச் சொல்லும் போதே நான் இதுவரை இயல் விருதுவழங்கும் எந்த ஒரு விழாவிற்கும் நான் போகவில்லை என்பதையும் நான் ஒத்துக்கொள்ளவேண்டியே இருக்கின்றது. ஒரு விழாவிற்கும் போகாமல் எப்படிக் குறை கூறலாம் என்று கேட்டால், அழைப்பிதழ்களின் அடிப்படையில் மாத்திரமே பார்வையாளர்கள் / விருந்தினர்கள் அனுமதிக்கப்படும் இயல் விருது விழாவிற்கு இதுவரை எனக்கோ அல்லது என்னிலும் அதிகமான இலக்கியத்திலும், வாசிப்பிலும் அக்கறை உள்ள நண்பர்கள் பலருக்கோ அழைப்புகள் வழங்கப்படுவதில்லை. கனேடியச் சூழலில், இலக்கியச் சந்திப்புகளில் கலந்து கொள்பவர்கள் ஒரு குறிப்பிட்ட 50க்கும் உட்பட்டவர்களே. அந்த ஐம்பது பேரிலேயே அனேகருக்கு அழைப்புகளில்லை.
இது பற்றிக் கதைத்தபோது சொல்லப்பட்ட பதில், நீங்கள் வேண்டுமானால் தொலைபேசியில் அழைத்துக் கேட்டிருந்தால் தந்திருப்போம் தானே என்பது. என்னளவில் இதை ஒரு சாக்குப் போக்குச் சொல்லும் பதிலாக மாத்திரமே கருதமுடிகின்றது. அனேகக் கூட்டங்கள், சந்திப்புகள் நடைபெறுகின்றபோது தொலைபேசியில் அழைத்தோ, மின் அஞ்சல் ஊடாகவோ அல்லது சமூக ஊடகங்களூடாகவோ அறியத்தரப்படுகின்றது. ஆனால் இயல் விருது வழங்கும் விழாவைப் பொறுத்தவரை இந்த நடைமுறை கிடையாது. அழைப்பிதழ்கள் அனுப்பப்படுபவர்களுக்கே அனுமதி. அழைப்பிதழ் இல்லாமல் செல்வோர் திருப்பி அனுப்பப் படாதபோதும் பட்டியலில் அவர்கள் பெயர் இருக்கின்றதா என்று பரிசோதிக்கப்பட்டு, அதன் பின்னர் அவர்களது பெயர் பட்டியலில் இணைக்கப்பட்டு, ஒரு பட்டியில் பெயர் எழுதப்பட்டு அதை பெயர்ப் பட்டி போல ஆடையுடன் குத்தியே அனுமதிக்கப்படுகின்றனர் என்றும் அறியமுடிந்து.
அடுத்து இயல் விருதில் பரிசுகள் வழங்கப்பட்டவர்கள் விபரத்தைப் பார்ப்போம்.
“புனைவுஇலக்கியப்பிரிவில்’பதுங்கு குழி’ நாவலுக்காக பொ. கருணாகரமூர்த்திக்கும், ’காவல் கோட்டம்’ நாவலுக்காக சு.வெங்கடேசனுக்கும், அபுனைவுஇலக்கியப்பிரிவில்’பண்பாட்டுப் பொற்கனிகள்’ நூலுக்கு சச்சிதானந்தன் சுகிர்தராஜாவுக்கும், ‘இன்னும் பிறக்காத தலைமுறைக்காக’ நூலுக்கு சு.தியடோர் பாஸ்கரனுக்கும், கவிதைப் பிரிவில் ’இருள் யாழி’ தொகுப்புக்காக திருமாவளவனுக்கும், ’அதீதத்தின் ருசி’ தொகுப்புக்காக மனுஷ்யபுத்திரனுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன”. (அ. முத்துலிங்கத்தின் இணையத்தளத்தில் இருந்து. http://goo.gl/07jHy இதைப் பார்த்துவிட்டு, அப்ப பதுங்குகுழியும் நாவல்தானா என்று கேட்கிறார் நண்பர் ஒருவர் ;)))
ஒவ்வொரு பிரிவிலும் ஒரு ஈழத்து எழுத்தாளருக்கும் ஒரு இந்திய எழுத்தாளருக்கும் என்று விருதுகள் வழங்கப்பட்டிருக்கின்றன. இது ஏன் அல்லது யாரைத் திருப்திப் படுத்த அல்லது எந்த அடிப்படையில் நடைபெறுகின்றது. இயல் விருது வழங்குவதில் இருக்கின்ற அபத்தங்கள் ஒன்றும் புதுமையானதல்ல. மிக எளிமையானதென்று சொன்னால், 2008ம் ஆண்டிற்கான புனைவிற்கான இயல் விருது எஸ். ராமகிருஷ்ணனுக்கு யாமத்துக்காக வழங்கப்பட்டது. 2009ம் ஆண்டிற்கான புனைவிற்கான இயல் விருது ஜெயமோகனின் கொற்றவைக்காக வழங்கப்பட்டது. இத்தனைக்கும் கொற்றவை 2005லேயே வெளியானது. யாமம் 2007/8 அளவில் வெளிவந்திருக்கவேண்டும். இம்முறையும் திருமாவளவன், கருணாகரமூர்த்தி, சுகிர்தராஜா போன்றவர்களுக்கு விருது கிடைத்திருப்பது மகிழ்ச்சியாக இருந்தாலும், எல்லா விருதுகளும் கவனமாக ஒரு இந்திய எழுத்தாளருக்கும் ஒரு ஈழத்து எழுத்தாளருக்கும் என்று வழங்கப்பட்டிருப்பதன் அரசியல் எனக்குப் புரியவேயில்லை.
கா. சிவத்தம்பி மறைவு
இந்தப் பதிவை எழுதிக் கொண்டிருக்கின்ற போது கா. சிவத்தம்பியின் மரணம் பற்றிய செய்தியையும் அறிய முடிந்தது. சிவத்தம்பியின் பிற்கால அரசியல் பற்றியும், செம்மொழி மாநாட்டில் அவர் கலந்துகொண்டது பற்றியும் கடுமையான விமர்சனங்கள் இருப்பினும் அவற்றை வைத்து அவரை ஒரு போதும் நிராகரித்துவிடமுடியாது. அவர் வாழ்ந்த காலத்தில் சமூகவியல், இலக்கிய திறனாய்வு ரீதியில் பலரை ஏதாவது ஒருவகையில் பாதித்தே இருக்கின்றார். அவரது எழுத்துக்களில் சிலவற்றையே படித்திருந்த போதும், அவற்றில் சில விமர்சனங்கள் இருந்தபோதும், அவரை இயன்றவரை முழுமையாக வாசிக்கப்படவேண்டிய ஒருவராகவே என்னால் பார்க்கமுடிகின்றது. எந்த ஒரு மரணத்தையும் எந்த ஒரு வார்த்தையாலும் வெளிப்படுத்திவிடமுடியாது. இரங்கல்கள்.
நண்பரே!
எல்லாத்திலேயும் அரசியல்தான் இருக்கிறது.(என்னுடைய இனணப்பை நீங்க தூக்கியதிலும்)
என்னைப் பொறுத்த மட்டில் இயல் விருதை குறை சொல்வதில் எந்தப் பிரயோசனம் இல்லை. ஒன்றும் இல்லாமல் இருப்பதை விட இது நல்லது போல்இருக்கிறது.நம்முடைய நண்பர்களில் சிலர் தங்களுடைய கடின உழைப்பையோ,பணத்தையோ செலவிடமால் சும்மா கத்திக் கொண்டு காலத்தை விரயம் செய்கிறார்கள்.இவர்களை விட எவ்வளவோ மேலானவர் எழுத்தாளர் அ.முத்துலிங்கம்.என்னுடைய இலக்கிய வாழ்கையில் இப்படியோரு மனிதரை நான் பார்க்கவில்லை.
இயல் விருது ஏற்ப்புரையில் எஸ்.பொ.வின் பேச்சு எனக்கு பிடிக்கவில்லை.இது என்னுடைய தனிப்பட்ட கருத்து.ஆனால் நான் உட்பட என்னோடு கதைத்தவர்கள் பலர் திருமாவளவனின் பேச்சு நன்றாகவே இருந்தாக கதைத்துக் கொண்டார்கள்.இதை ஏன் உங்களுடைய நண்பர் வட்டம் உங்களுக்கு சொல்லவில்லை.இங்கேயும் ஒரு அரசியல் இருக்கல்ல…
மிக்க அன்புடன்
டானியல்ஜீவா
LikeLike
This post has been removed by the author.
LikeLike
அன்பின் டானியல் ஜீவா,
//எல்லாத்திலேயும் அரசியல்தான் இருக்கிறது.(என்னுடைய இனணப்பை நீங்க தூக்கியதிலும்//
டானியல், எனது வலைப்பதிவை நான் https://arunmozhivarman.com/ என்கிற தளத்திற்கு மாற்றி இருந்தேன். பின்னர் அதில் இயங்குதில் இருக்கின்ற வசதியீனங்கள் காரணமாக மீண்டும் எனது blogspot முகவரிக்குத் திரும்பியபோது தொடர்ச்சியாக இயங்கிக் கொண்டிருக்கின்ற / நான் மற்றவர்களுக்குப் பிரேரிக்க விரும்புகின்ற வலைப்பதிவுகளின் முகவரியையே எனது தளத்தில் இணைப்புக் கொடுத்தேன். இந்த அடிப்படையில்தான் உங்கள் வலைப்பதிவு தவற விடப்பட்டிருக்கிறது. டானியல், உங்கள் வலைப்பதிவுகளில் இருக்கின்ற பெரும்பாலான ஆக்கங்கள் நீங்கள் உங்களுக்குப் பிடித்தவற்றுக்குக் கொடுத்த இணைப்புகளும் மீள் பதிவுகளுமேதானே. இப்படி இருக்கின்போது உங்கள் வலைப்பதிவிற்கான இணைப்பை நான் நீக்கியதில் என்ன அரசியல் இருக்கின்றது. அல்லது உங்களின் என்ன அரசியலில் எனக்கு உடன்பாடு இல்லாமல் இருக்கின்றது என்றாவது கூறுவீர்களா??????
//இவர்களை விட எவ்வளவோ மேலானவர் எழுத்தாளர் அ.முத்துலிங்கம்.என்னுடைய இலக்கிய வாழ்கையில் இப்படியோரு மனிதரை நான் பார்க்கவில்லை.///
என்னது அ. முத்துலிங்கம் போல ஒருவரை நீங்கள் பார்கக்வேயில்லையா..??
டானியல் இதை நீங்கள் எழுதி இருப்பது மிகுந்த ஆச்சரியமாக இருக்கின்றது. சென்ற முறை கொற்றவைக்குீயல் விருது வழங்கப்பட்டபோது விழா முடிந்த அடுத்த நாள் என்னைத் தொலைபேசியில் அழைத்து இயல் விருது வழங்குதல் பற்றியும், அ, முத்துலிங்கத்தின் செயற்பாடுகள் பற்றியும் அதிகம் குறைப்பட்டவர்கள் நீங்கள். அது போல கூர் வெளியீட்டு விழாவிற்கு அ. முத்துலிங்கம் தனக்கு அழைப்பு அனுப்பப்படவில்லை என்பதால் வரவில்லை என்று கூறியபோது அதை நீங்கள் எவ்வாறு எதிர்கொண்டீர்கள் என்பதுவும் இன்னமும் உங்களுக்கு நினைவிருக்கும் என்று நம்புகின்றேன்.
//இயல் விருது ஏற்ப்புரையில் எஸ்.பொ.வின் பேச்சு எனக்கு பிடிக்கவில்லை.இது என்னுடைய தனிப்பட்ட கருத்து//
உங்களிற்கு அப்படி ஒரு கருத்திருப்பின அதை வெளியிடும் உரிமையை நான் முழுமையாக ஏற்றுக் கொள்ளுகின்றேன். ஆனால் சென்ற வார இறுதியிலும் நீங்கள் இதைக் கூறியபோது உங்களிடம் எஸ்பொவின் பேச்சு ஏன் பிடிக்கவில்லை என்று கேட்டேன், நீங்கள் சொன்னீர்கள் “ரொரன்றோ முழுக்க இதுதானே பேச்சு, எஸ்போ கொடுத்த நேர்காணல் பிழையானது. ஆள் குழப்படிகாரன்தான்” என்று. உடனே உங்களிடம் கூறினேன் அந்த நேர்காணலில் ஒன்றுமே பிழையாக எனக்குத் தெரியவில்லை, உங்களுக்கு என்ன பிழையாக இருக்கின்றது என்று சொல்லுங்கோ என்று. “இல்லை இப்படித்தான் ரொரன்றோ முழுக்க கதை” என்றீர்கள். அதைத்தான் இப்பவும் சொல்கிறேன். எஸ்பொ என்றில்லை எவராகவும் இருக்கட்டும். உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றாலோ அல்லது உடன்பாடில்லாவிட்டாலோ அதை உங்கள் பார்வையில், அல்லது உங்கள் சிந்தனையூடாக உங்கள் கருத்து என்று சொல்லியே வெளிப்படுத்துங்கள். அதை விட்டு, மற்றவர்கள் சொல்கிறார்கள் என்று சொல்லி (அதுவும் யார் சொல்கிறார்கள் என்று சொல்லாமல்) குறைபட்டுக் கொண்டிருக்காதீர்கள்
*முன்னர் இட்ட பின்னூட்டத்தில் சில எழுத்துப் பிழைகள் இடம்பெற்றுவிட்டதால் திருத்தி மீண்டும் பின்னூட்டமிடுகின்றேன்
LikeLike
அன்பின் டானியல் (தொடர்ச்சி)
//நான் உட்பட என்னோடு கதைத்தவர்கள் பலர் திருமாவளவனின் பேச்சு நன்றாகவே இருந்தாக கதைத்துக் கொண்டார்கள்.இதை ஏன் உங்களுடைய நண்பர் வட்டம் உங்களுக்கு சொல்லவில்லை.இங்கேயும் ஒரு அரசியல் இருக்கல்ல//
அன்றைய விழாவில் ஆரம்பம் முதல் இருந்த காலம் செல்வம், தேவகாந்தன், நீங்கள் உட்பட எல்லாருமே எனக்கு நண்பர்கள்தான். ஆனால் எவருமே அடுத்த நாள் நான் நனவிடை தோய்தல் நிகழ்வில் சந்தித்தபோது திருமாவளவனின் பேச்சுப் பற்றி ஏதுமே கூறவில்லையே. மற்றவர்கள் இருக்கட்டும். நான் உங்களிடம் அன்று எஸ்பொவின் பேச்சுப் நன்றாக இருந்தது என்று கூறியபோது நீங்கள் அதைப் பற்றி ஏதும் சொல்லாமல் ஜெயமோகன் பேச்சு அவற்ற வழமையான பேச்சுப் போலவே இருந்தது என்று கூறினீர்களே தவிர, திருமாவளவன் பற்றி ஒரு வார்த்தையேனும் கூறவில்லையே, இதற்குப் பின்னால் என்ன அரசியல் இருக்கின்றது.
நீங்கள் எனது நண்பர்கள் என்று யாரைக் குறிப்பிடுகின்றீர்களோ அவர்கள் அன்று,எஸ்பொவின் பேச்சு நடைபெற்றுக் கொண்டிருக்கும்போதே அரங்கிற்கு வந்தார்கள் என்று நினைக்கின்றேன். அப்படி இருக்கின்றபோது அவர்களால் எப்படித் திருமாவளவனின் பேச்சினைக் கேட்டிருக்க முடியும்.
தவிர்த்து நீங்கள் எந்த சம்பந்தமும் இல்லாமல் இங்கே ஏன் திருமாவளனை இழுத்து ஏதோ திருமாவளவன் எனக்கு விரோதமானவர் என்று காட்டமுயல்கின்றீர்கள் என்று தெரியவில்லை. திருமாவளவன் எனக்கும் இனிய நண்பரே. நனவிடை தோய்தல் சந்திப்பிற்கு வந்திருந்தபோதும் கூட கிட்டத் தட்ட ஒரு மணித்தியாலம் அளவு அவருடன் சேர்ந்துதான் கதைத்துக்கொண்டிருந்தோம். அப்போதும் கூற இயல் விருது பற்றி எனக்கிருக்கின்ற அபிப்பிராயங்களைச் சொன்ன நினைவு.
இறுதியாகச் சொல்லிக் கொள்வது, எல்லாவற்றிற்குப் பின்னரும் அரசியல் இருக்கின்றது என்று அ.மார்க்ஸ் வெளியிட்ட்ட புத்தகத்தலைப்பை வைத்துக்கொண்டு அ.மார்க்ஸ் போல எல்லாவற்றையும் ஊகங்களின் அடிப்படையில் அணுகிப் பழகிவிடாதீர்கள்
LikeLike