எனது பார்வையில் கொலை நிலம் – புத்தக அறிமுக விழாவில் வாசிக்கப்பட்ட கட்டுரை

உரையாடல் என்பது எனக்கு எப்போதும் பிடித்தமான ஒன்றாகவே இருந்திருக்கின்றது.  வெவ்வேறு கருத்துகளை, பார்வைகளை, அரசியலைக் கொண்டோர் மேற்கொள்ளும் உரையாடல்களை ஆர்வத்துடன் தேடி வாசித்து வந்திருக்கின்றேன்.  இவ்வாறான உடையாடல்கள் மூலம் தெளிவும், நாம் கட்டமைத்து வைத்திருக்கின்ற கருத்துகளை, அரசியலை மீள்பார்வை, மீள் பரிசீலனை செய்வதற்கான வாய்ப்பும் கிடைக்கின்றன.  அண்மையில் பிளேட்டோவின் குடியரசை வாசிக்கத் தொடங்கியபோது உரையாடல் என்பது எத்தனை வீச்சான வடிவம் என்பதையும் அறிய முடிந்தது.  வெறும் வாதத்துக்காக என்றில்லாமல் ஆழமாக தத்தம் நிலைகளை முன்வைத்துப் பேசுகின்ற விவாதங்களும் கூட மிக முக்கியமான ஆவணங்களாகவும், பதிவுகளாகவும் மாறி விடுவதுண்டு.  சார்த் – சிமன் த பூவாவிடையான உரையாடலும், ஃபூக்கோ – சோம்ஸ்கி இடையிலான human nature பற்றிய விவாதமும் இரண்டு வடிவங்களுக்குமான உதாரணமாகச் சொல்லமுடியும்..  தமிழில் இவ்வாறான வெவ்வேறு மாறு பட்ட பார்வை கொண்டவர்கள் சந்தித்து ஓரிடத்தில் இருந்து பேசுவது என்பதே அபூர்வமாக நிகழும் ஒன்று.  இந்த அடிப்படையில் வடலி பதிப்பகம் மூலமாக தியாகு – ஷோபா சக்தி இடையிலான உரையாடல் ஒன்று தொகுக்கப்பட்டு புத்தகமாக வருகின்றது என்பது மிக முக்கியமான ஒன்றாகவே எனக்கு இருந்தது.  ஏற்கனவே இந்தியாவில் இருந்து ஈழத்தமிழர்களின் புத்தகங்களை வடலி தொடர்ந்து பதிப்பிக்க இருக்கின்றது என்பதுவும் முக்கிய விடயமாகவே இருந்தது.  இது பற்றி வடலி பதிப்பகம் ஆரம்பிக்கப்பட்ட புதிதிலேயே வடலி பதிப்பகம் ; எழுத்தாளனும் பதிப்பகங்ளும் என்ற கட்டுரையில் குறிப்பிட்டிருக்கின்றேன்.

அதே நேரம் ஒரு பிரதியாக கொலை நிலம் என்பது இன்னும் பன்மடங்கு சிறப்பாக வந்திருக்கவேண்டும் என்பதே என் அவா.  முதலில், பதிப்பகத்தினர் இந்த உரையாடலுக்காக செய்த தேர்வே பொருத்தமானதல்ல என்றே சொல்வேன்.  தியாகு முதன்மையாக ஒரு சமூகப் போராளி, கோட்பாட்டாளர், தமிழ்த் தேசிய ஆதரவாளர்.  பிறப்பால் இந்தியர் அல்லது தமிழகத்தைச் சேர்ந்தவர்.  ஷோபா சக்தி வெற்றிகரமான ஒரு புனைவெழுத்தாளர், பிறப்பால் இலங்கையர்.  தன்னை முன்னை நாள் விடுதலைப் புலி போராளி என்றும், பிறமொழி முக்கியமாக ஆங்கில ஊடகங்களில் தன்னை குழந்தைப் போராளி என்றும் அடையாளப்படுத்திக் கொள்ளுபவர்.  இங்கே குழந்தைப் போராளிகள் என்று வரும்போது விடுதலை இயக்கங்களிற்கும், அரசுகள் ஈடுபடுத்தும் குழந்தைப் போராளிகளிற்கும் அவதானிக்கவேண்டிய வேறுபாடுகளையும், கீழை, ஆசிய, ஆபிரிக்க நாடுகளில் குழந்தைப் போராளிகளை மேற்கத்திய கண்ணோட்டங்களில் பார்ப்பதில் இருக்கின்ற அபத்தங்களையும் சுட்டிக் காட்டவிரும்புகிறேன்.  அத்துடன் போரில் கட்டாயமாக மக்கள், அதிலும் முதன்மையாக குழந்தைகள் ஈடுபடுத்தப்படுவதை முழுவதும் எதிர்க்கும் நான், ஷோபா சக்தி அவர்கள் குழந்தைப் போராளியாக புலிகளில் இணைந்து கொண்டபோது அவர் எந்தக் கட்டாயத்தின் கீழும் இயக்கத்தில் சேரவில்லை என்பதையும் சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.

இங்கே நான் ஷோபா சக்தியின் புலிகள் இயக்க பிண்ணனியைச் சுட்டிக்காட்டக் காரணம் இந்தப் புத்தகத்தில் “புலி அரசியலை முற்றாக ஈழத்திலும் புலம்பெயர்ந்து வாழும் ஈழத் தமிழர்களிடம் அற்றுப் போகவேண்டும்.  அந்த வெற்றிடத்திலிருந்து புதிய அரசியல் வழிமுறைகளை நாம் உருவாக்கவேண்டும்” என்று தொடர்ந்து வலியுறுத்துகின்றார் ஷோபா.  அவ்வாறு வலியுறுத்தும்போது விடுதலைப் புலிகளை எதிர்க்க அவர் ஒரு முன்னாள் புலி உறூப்பினர் என்ற அடையாளம் வலுச்சேர்க்கின்றது.புத்தகத்திலும் புலிகளின் அரசியல் ஏற்றுக் கொள்ளாத பலர் இயக்கதில் இருந்து ஒதுங்கினர் என்றும் குறிப்பிடுகின்றனர்.  (இந்த இடத்தில் தவிர்க்கவே இயலாமல் சயந்தன் எழுதிய மோட்டார் சைக்கிள் குரூப் என்கிற சிறுகதை நினைவுக்கு வருகின்றது http://goo.gl/hnNd0 ).  அவரது குறிப்பை அவர் தெளிவாக்கி, தான் ஏன் புலிகள் இயக்கத்தை விட்டு விலகினார் என்பதை அவர் நேர்மையாக அறிவிப்பதே சரியானதாக இருக்கும்.  தவிர, ஷோபா விடுதலைப் புலிகளின் உறுப்பினராக இருந்த காலத்தில் அவரது பணி என்னவாக இருந்தது, விடுதலைப்புலிகள் பற்றி அப்போதே விமர்சனம் இருந்ததா, அன்று நடந்த மாற்று இயக்கப் படுகொலைகளுக்கு ஷோபா எப்படி எதிர்வினை ஆற்றினார் என்பதையும் குறிப்பிடவேண்டும்.  சுய விமர்சனம் என்பது இவ்வாறாகத்தான் அமையவேண்டும்.  இன்று மிகப் பெரிய அழிவுக்குப் பின்னர் எதிர்கால அரசியல், தீர்வு என்று பேசும் எவருமே முதலில் தன்னை சுய விமர்சனம் செய்ய முன்வரவேண்டும்.  துரதிஸ்டவசமாக இன்று மற்றவர்கள் மீதான விமர்சனத்தை விருப்புடன் செய்யும் எவருமே சுயவிமர்சனம் ஒன்றை செய்ய உடன்படுவதேயில்லை.  எதிர்கால தமிழ்த் தேசிய / தமிழ் விடுதலை அரசியல் சந்திக்கக் கூடிய மிகப் பெரிய போதாமை இந்த சுய விமர்சனம் இன்மை என்பேன்.

இந்தப் போதாமை இந்தப் புத்தகத்திலேயே அழகாக வெளிப்படுகின்றது.  தியாகு, ஷோபா சக்தி இருவருமே இந்தப் புத்தகத்தில் இறுதிப் போர் பற்றிப் பேசும்போது அதில் இந்தியா ஆற்றிய பங்கு, விடுதலைப் புலிகள் அரசியல் ரீதியாக செய்த பிழைகள், ஏகாதிபத்திய நாடுகள் போரில் ஆற்றிய பங்கென்று பட்டியல் இடும்போது புத்தகத்தில் எந்த இடத்திலும்  போரில் சீனாவின் வகிபாகத்தைக் குறிப்பிடவேயில்லை,  இது மிக மோசமான சாய்வென்றே சொல்லமுடியும்.  இங்கே இவர்கள் இருவரும் தம்மை இடது சாரிச் சார்பானவர்கள் என்று சொல்லிக்கொள்வதும், சீனா ஒரு இடது சாரி நாடு என்று நம்பப்படுவதுமே இந்த சாய்வுக்கான காரணி என்றே கருத முடிகின்றது.  அண்மையில் இன்னொரு இடது சாரியான சி. சிவசேகரம் எழுதிய இலங்கை ; தேசிய இனப்பிரச்சனையும் தீர்வுக்கான தேடல்களும் என்ற புத்தகத்தை வாசித்த போது அவரும் இந்தப் போரில் சீனாவின் பங்கை குறித்து, சிறீலங்கா அரசு இழந்த விமானப் படை விமானங்களை ஈடு செய்யவே சீனா உதவியது என்று மிக அபத்தமாகக் கூறி இருந்தார்.  நான் இடது சாரிகளுக்கு எதிரானவன் கிடையாது.  ஆனால், தொடர்ச்சியாக இடது சாரிகள் ஈழப் பிரச்சனையில் சீனாவின் பங்கை மறைத்து வருவது அவர்கள் செய்யும் துரோகம் என்றே கூறமுடியும்.

விடுதலைப் புலிகள் வலதுசாரித்தன்மையுடனேயே பிரச்சனைகளை அணுகினர் என்ற குற்றச் சாட்டில் ஓரளவு உண்மை இருந்தாலும் புலிகள் இடது சாரி நாடுகளை அல்லது இடது சாரித்துவத்தை அணுகவில்லை என்பதை முன்வைத்து புலிகளை நிராகரிப்பது பற்றி யோசிக்கவேண்டி இருக்கின்றது.  புலிகள் ஒரு அமைப்பாகப் பலம்பெற்று கட்டமைத்தது 90களில்தான்.  அந்த 90களில் சோவியத் ரஷ்யாவின் வீழ்ச்சியை தொடர்ந்து உலகெங்கும் இடது சாரித்துவம் பற்றிய நம்பிக்கையீனம், ஏற்பட்டது.  அது மட்டுமல்லாமல் இடதுசாரித்துவத்தைப் பின்பற்றாதது விடுதலைப் புலிகளின் தவறு என்பவர்கள், இன்றுவரை இடது சாரி நாடுகள்  மிக மிகப் பெரும்பான்மையாக இலங்கை அரசையும், அதன் போர்க்குற்றங்களையும் போர் நடந்த காலங்களிலும் அதை தொடர்ந்து ஐ.நா வரையிலும் மறைக்கவும், இலங்கை அரசை காபந்து செய்யவும் செய்யும் வெளிப்படையான எத்தனங்களை விமர்சனம் செய்யவும் வேண்டும்.  ஈழப்பிரச்சனை தொடர்பாகப் பேசுபவர்கள் தொடர்ந்து வலதுசாரி X இடது சாரி, புலிகள் X மாற்று இயக்கத்தினர், புலி ஆதரவாளர்கள் X எதிப்பாளர்கள் என்ற எல்லைகளுக்குள் நின்று கொண்டு கம்பன் கழகப் பட்டி மன்றம் போல உரையாடுவதால் ஏற்படும் விளைவு இது,

இது போன்ற இன்னுமொரு சென்ரிமென்டல் அபத்தம் தியாகு அவர்களிடம் இருந்தும் இந்தப் புத்தகத்தில் வெளிப்பட்டிருக்கின்றது.  போரின் இறுதி நாட்களில் புலிகள் மக்களை பலவந்தமாகப் பிடித்து வைத்திருந்தனர் என்ற உண்மையை புலி ஆதரவாளர்கள் நேர்மையாக ஒப்புக்கொள்ளவேண்டும்.  அதை விடுத்து தியாகுவிடம் மனிதக் கேடயங்கள் குறித்துக் கேட்கும் போது அவர் கூறுகிறார் “புலிகள் யார் மக்கள் யார்.  புலிகள் எங்கிருந்தோ வந்தது போலவும், அவர்களுக்கும் இந்த மக்களுக்கும் சம்பந்தமே இல்லாததும் போலவும் பேசுவதே அடிப்படையில் முரணானது.  பிடித்து வைத்திருந்தார்கள் என்பது உண்மையாக இருந்தால் மகன் அம்மாவைப் பிடித்து வைத்திருந்தான் என்றோ, அண்ணன் தங்கையைப் பிடித்து வைத்திருந்தான் என்றோதான் அர்த்தம். ” என்று கூறுகிறார்.  இது போன்ற வாதங்கள் உரையாடலை நகர்த்தாமல் வெறும் விரயம் ஆக்கிவிடுபவை.  தொடர்ந்து தியாகு குறிப்பிடுவதைப் போல, இதை இலங்கை ராணுவம் செய்த தாக்குதல்களுடன் சமப்படுத்த முடியாது என்பது உண்மையானாலும், போரின் இறுதிக் காலங்களில் புலிகள் உரிமை மீறல்களில் ஈடுபட்டார்கள் என்பதை தமிழ்த் தேசியர்கள் மறுத்துவருவது பிழையானதே.

அதே நேரத்தில் புலிகள் மீது இவ்வளவு தவறு இருந்ததென்று சொல்கின்றீர்களே, அப்படியானால் அவர்களுக்கு மாற்றான ஒரு இயக்கம் தோன்றியிருக்கவேண்டுமே என்கிற இயல்பான கேள்வியை தியாகு முன்வைக்கின்றார்.  எல்லா அமைப்புகளையும் தமது கட்டுப்பாட்டுக்குட்பட்ட பிரதேசங்களில் தமது கண்காணிப்பின் கீழ் புலிகள் வைத்திருந்த காலங்களில் அவ்வாறான ஒரு இயக்கம் தோன்றுவதற்கு எந்த வெளியுமே இருக்கவில்லை என்றாலும் ஷோபா சக்தி அதற்கு சொல்கின்ற பதில் மிகுந்த வக்கிரமும், காழ்ப்பும் உடையது.  ஷோபா சொல்கிறார்

“புலிகள் தவறிழைத்தார்கள் எனில் அதற்கு மாற்றான ஒரு இயக்கம் அங்கு தோன்றி இருக்கவேண்டும் என்று சொன்னீர்கள்.  புலிகளுக்கு மாற்றாக புலிகளைப் போலவே அங்கே ஈபீடீபீயும் டீஎம்விபியும் இயங்கிக் கொண்டு தானிருந்தார்கள்.  இப்போதும் இயங்கிக் கொண்டிருக்கிறார்கள்.  கிழக்கு மாகாண சபை ரிஎம்விபி வசமும் யாழ் மாநகர சபை ஈபிடிபி வசமும் உள்ளன.  புலிகளுக்கு எதிராக நின்று பிடிக்க இவர்களும் புலிகளைப் போலவே இயங்கினார்கள் என்பதுதான் இதில் கவனிக்கத்தக்கது.  இவர்களும் கொலைக்கு அஞ்சாதவர்கள்.  சந்தர்ப்பம் கிடைக்கும் இடங்களிலெல்லாம் தங்களது கைகளைக் கோர்த்துக்கொண்டு தமது இருப்பை உறுதி செய்யத் தயங்காதவர்கள்.  கண்ணுக்கு கண், பல்லுக்குப் பல்லென்று இவர்கள் அரசியல் செய்ததால் இவர்களால் புலிகளை எதிர்த்து நிற்க முடிந்தது.  டக்ளஸ் தேவானந்தா 13 தடவைகள் புலிகளின் கொலைத் தாக்குதல்களிலிருந்து தப்பித்திருக்கிறார்”.

ஈழத்து அரசியலைத் தொடர்ந்து அவதானித்து வரும் எவருக்குமே ஷோபா சொல்வது எத்துணை பிழை என்பதும் புரட்டு என்பதும் தெளிவாகத் தெரிந்திருக்கும்.  புலிகளுக்கு மாற்றாக வந்ததாக ஷோபா சொல்லும் ஈபிடிபி, டிஎம்விபியினர் மக்கள் நலனுக்காகவோ / விடுதலைக்காகவோ போராடுவதை தமது கொள்கைகளாகக் கொண்டா அவ்வவ் இயக்கங்களைத் தொடங்கினார்கள்?  மக்கள் நலனை முன்வைத்து அவர்கள் இதுவரை காலம் செய்த போராட்டங்கள் என்பதை ஷோபாசக்திதான் விளக்கவேண்டும்.  தவிர, ஷோபாசக்தி சுட்டிக்காட்டும் இரண்டு இயக்கங்களும் அவர்களின் ஆரம்பகாலத்தில் இருந்தே அரசின் நிழலில் வளர்ந்தவர்கள் என்பதையும் கவனிக்கவேண்டும்.  விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்த புலிகள் சில தவறுகள் செய்தார்கள் என்பது உண்மை.  ஆனால் தொடர்ச்சியாக தமிழ் மக்கள் விரோத அரசியலையே மேற்கொள்ளும் ஈபிடிபி, டிஎம்விபியினரை புலிகளுக்கான மாற்றாக  உருவானவர்கள் என்று ஷோபா சொல்வதில் இருக்கின்ற வக்கிரம் கவனிக்கப்படவேண்டியது.

இந்தப் புத்தகத்தை முழுமையாக வாசிக்கும் ஒருவர் மிக இலகுவாக ஷோபாவின் வாதங்கள் தொடர்ச்சியாக அவர் கட்டுரைகளிலும், புனைவுகளிலும் எழுதும் தமிழ்க் கட்சிகளில் சாதித் திமிர், புலிகளின் ஜனநாயக மறுப்பு, சோழப் பேரரசு குறித்த கனவு, இடதுசாரிகளின் மீதான் வெறுப்பு, முஸ்லீம் விரோதம்,  கருத்து சுதந்ததிரங்களை தடை செய்தமை என்கிற எல்லைகளுக்குள்ளேயே நின்று உழல்வதை அவதானிக்க முடியும்.  புலிகளின் ஜனநாயக விரோத அரசியல், கருத்து சுதந்திர மறுப்பு, போன்றவையும், தமிழ்க் கட்சிகளிடையே குறிப்பாக கூட்டணியிடையே இன்றும் இருக்கும் சாதி மற்றும் உயர்வுத் திமிர் முக்கியமான குற்றச்சாற்றுகளே.  ஆனால் அவற்றை வைத்து அவர்களின் ஒட்டு மொத்த அரசியலையும் நிராகரிப்பது அபத்தமானதே…….  மிக முக்கியமாக தேச விடுதலை இயக்கம் ஒன்றிடம் சமூக விடுதலை குறித்தான செயற்திட்டங்கள் ஒரே நேரத்தில் எவ்வளவு இருக்க முடியும் என்பதே பேசப்படவேண்டிய ஒரு விடயம்தான்.  நம்மில் நிறையப் பேர் இரண்டையும் போட்டுக் குழப்பிக் கொண்டிருக்கின்றோம் என்றே தோன்றுகின்றது.

இந்தப் புத்தகத்தில் ஓரிடத்தில் “சரியான முற்கோள்களில் இருந்து தவறான தவறான முடிவுகளுக்கு” என்ற லெலினின் கூற்றைச் சுட்டிக் காட்டுகிறார் தியாகு.  துரதிஸ்டவசமாக இந்தப் புத்தகமும் அப்படியே அமைந்துவிட்டது.  எனினும் வடலி பதிப்பகத்தின் இந்த முயற்சிக்கு எனது முழு ஆதரவும்.  இது போன்ற உரையாடல்களை தொடர்ந்து சாத்தியப்படுத்துவது முக்கியம் என்றாலும் உரையாடுபவர்களுக்கிடையே ஒரு பொருத்தம் இருப்பது நல்லது.  உதாரணமாக தியாகுவுடன் உரையாட புலி எதிர்ப்பு நிலையை கொண்டிருக்கக் கூடிய இந்தியாவைச் சேர்ந்த தியாகு போன்ற சமூக செயற்பாட்டாளர் / கோட்பாட்டாளர் ஒருவரோ அல்லது ஷோபா சக்தியுடன் உரையாட விடுதலைப் புலி ஆதரவு நிலையைக் கொண்டுள்ள முன்னாள் விடுதலைப் புலிப் போராளியான ( குழந்தைப் போராளியாக தன்னை அடையாளப் படுத்தி இருக்கத் தேவையில்லை) இன்னுமொரு புலம் பெயர் எழுத்தாளரோ தெரிவுசெய்யப்பட்டிருப்பின் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.  இன்னும் ஒரு சிறு வேண்டுதலாக இந்தக் கூட்டத்திற்கு வந்திருக்கும் /  கனடாவில் இருக்கும் சிலரிடம் புலிகளுக்குப் பின்னைய அரசியல் பற்றிய ஒவ்வொரு கட்டுரைகளைப்  பெற்று ஒரு புத்தகமாக வெளியிடவேண்டும் என்பதையும் ஒரு வேண்டுதலாக வைக்கின்றேன்.  எனது பார்வையில் ஈழப்பிரச்சனை பற்றிய இவர்களது பார்வைகளுக்கும், இவர்கள் பின்பற்றும் அரசியல்களுக்கும், இவர்களது பிண்ணனிகளுக்கும் இடையே இருக்கின்ற வேறுபாடுகள் முக்கியமானவை.  எனவே இவர்களது கருத்துக்களைத் தொகுப்பது நல்லதோர் முயற்சியாக அமையும். (பார்க்க பின்குறிப்பு 1)

புலிகளுக்குப் பின்னைய அரசியல் என்பதை  புலிகளின் தோல்விக்குப் பிறகு யார் அல்லது எப்படி என்று பார்ப்பதைவிட post tigers என்கிற அர்த்தத்தில் தமிழர்களின் உரிமைப் போரட்டம், விடுதலை, தேசியம், தமிழீழத் தனியரசுக்கான கோரிக்கைகள், இவற்றைக் கணிசமான காலம் முன்னெடுத்த புலிகளின் அமைப்பின் அரசியல், ராணுவ, சமூக செயற்பாடுகள், வெற்றிகள், தோல்விகள் அவை மீதான விமர்ச்னங்கள் 2009ல் புலிகள் சந்தித்த ராணுவ ரீதியான அழிவு, அதற்கான காரணங்கள் பற்றிய விமர்சனங்கள், மற்றும் நடப்பு அரசியல், உலக ஒழுக்கு, நமது சூழலில் இவை ஏற்படுத்தி இருக்கும் தாக்கங்கள் என்று விரிவாக ஆராயவேண்டியது அவசியம் என கருதுகின்றேன்.

பின் குறிப்புகள்

1 கட்டுரையை விழாவில் வாசித்தபோது மீரா பாரதி, சேரன், ரஃபேல், சுமதி ரூபன், காலம் செல்வம், தேவகாந்தன், இளங்கோ, கீத் குமாரசுவாமி, பிரதீபா, தான்யா, மயூ மனோ, முரளிதரன், ஜெயகரன், தீபன் சிவபாலன், சுல்ஃபிகா, அகிலன், ரவி (வைகறை), சக்கரவர்த்தி, தர்ஷன், ரமேஷ் ஸ்டீபன், பிரஷாந்த், ரகுமான் ஜான், ஈழவேந்தன் போன்றவர்களின் பெயர்களை முன்மொழிந்திருந்தேன்.

2. கூட்டத்தில் கலந்து கொண்ட இரயாகரன் நான் ஒடுக்குறைகளை ஆதரிக்கும் தொனியில் பேசியதாக குறிப்பிட்டார்.  அவரது கவனத்துக்கு மேலே எனது கட்டுரையில் இருந்து

“புலிகளின் ஜனநாயக விரோத அரசியல், கருத்து சுதந்திர மறுப்பு, போன்றவையும், தமிழ்க் கட்சிகளிடையே குறிப்பாக கூட்டணியிடையே இன்றும் இருக்கும் சாதி மற்றும் உயர்வுத் திமிர் முக்கியமான குற்றச்சாற்றுகளே.  ஆனால் அவற்றை வைத்து அவர்களின் ஒட்டு மொத்த அரசியலையும் நிராகரிப்பது அபத்தமானதே…….  மிக முக்கியமாக தேச விடுதலை இயக்கம் ஒன்றிடம் சமூக விடுதலை குறித்தான செயற்திட்டங்கள் ஒரே நேரத்தில் எவ்வளவு இருக்க முடியும் என்பதே பேசப்படவேண்டிய ஒரு விடயம்தான்.  நம்மில் நிறையப் பேர் இரண்டையும் போட்டுக் குழப்பிக் கொண்டிருக்கின்றோம் என்றே தோன்றுகின்றது”

13 thoughts on “எனது பார்வையில் கொலை நிலம் – புத்தக அறிமுக விழாவில் வாசிக்கப்பட்ட கட்டுரை

Add yours

  1. >…டும்போது புத்தகத்தில் எந்த இடத்திலும் போரில் சீனாவின் வகிபாகத்தைக் குறிப்பிடவேயில்லை, இது மிக மோசமான சாய்வென்றே சொல்லமுடியும்.

    நல்ல உன்னிப்பான சரியான கவனிப்பு.

    நல்ல விமர்சனம். வாழ்த்துக்கள்.

    Like

  2. நான் அன்று கூட்டத்திற்கு பிந்தியே வந்திருந்தேன்.ஆயினும் தவற விடப்பட்டதை இங்கு வாசிக்கக் கூடியதாக இருந்தது. அதற்கு நன்றி!

    “இங்கு புலிகளின் ஜனநாயக விரோத அரசியல், கருத்து சுதந்திர மறுப்பு, போன்றவையும், தமிழ்க் கட்சிகளிடையே குறிப்பாக கூட்டணியிடையே இன்றும் இருக்கும் சாதி மற்றும் உயர்வுத் திமிர் முக்கியமான குற்றச்சாற்றுகளே. ஆனால் அவற்றை வைத்து அவர்களின் ஒட்டு மொத்த அரசியலையும் நிராகரிப்பது அபத்தமானதே……. மிக முக்கியமாக தேச விடுதலை இயக்கம் ஒன்றிடம் சமூக விடுதலை குறித்தான செயற்திட்டங்கள் ஒரே நேரத்தில் எவ்வளவு இருக்க முடியும் என்பதே பேசப்படவேண்டிய ஒரு விடயம்தான். நம்மில் நிறையப் பேர் இரண்டையும் போட்டுக் குழப்பிக் கொண்டிருக்கின்றோம் என்றே தோன்றுகின்றது”. என்று நீங்கள் குறிப்பிட்டதை இன்னும் விளக்கமாகவும், விபரமாகவும் எடுத்துரைத்திருந்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்குமென எண்ணத் தோன்றுகிறது.

    முரளி

    Like

  3. நன்றிகள் முரளி…

    எனது நோக்கில் விடுதலைப் புலிகள் மீது அவர்கள் சமூகவிடுதலையை முன்வைக்கவில்லை என்ற குற்றச்சாற்றை முன்வைக்கின்றபோது அதை விரிவாகப் பார்க்கவேண்டியிருக்கின்றது. விடுதலைப் புலிகள் ஒரே நேரத்தில் இராண்டையும் முன்னெடுக்கவில்லையே தவிர, அவர்களிடம் அதற்கான வேலைத்திட்டம் ஒன்று இருக்கவே செய்தது.

    தவிர, பெண்விடுதலை, பெண்களை இழிவு படுத்தலுக்கு வழங்கப்பட்ட கடுமையான தண்டனைகள், மணக்கொடை தடுப்புச் சட்டம், என்று பெண்கள் சார்பாக விடுதலைப்புலிகளின் சரியான நிலைப்பாட்டை புலம்பெயர் பெண்ணியவாதிகள் ஒருபோதும் சுட்டிக்காட்டிப் பேசியதும் கிடையாது… புலிகள் பெண்ணியவாதிகள் என்று தம்மை அழைத்துக்கொள்ளவில்லையே தவிர பெண்விடுதலை தொடர்பாக ஆக்கபூர்வமாக செயற்பட்டார்கள் என்றே சொல்வேன்,,,,

    இவை பற்றி விரிவாக பேசவேண்டி இருக்கின்றது

    நன்றிகள் முரளி

    Like

  4. சுதன்
    //பெண்விடுதலை, பெண்களை இழிவு படுத்தலுக்கு வழங்கப்பட்ட கடுமையான தண்டனைகள், மணக்கொடை தடுப்புச் சட்டம், என்று பெண்கள் சார்பாக விடுதலைப்புலிகளின் சரியான நிலைப்பாட்டை புலம்பெயர் பெண்ணியவாதிகள் ஒருபோதும் சுட்டிக்காட்டிப் பேசியதும் கிடையாது.\\ இதை நீங்கள் சரியாக ஆராயாமல் எழுதியிருக்கின்றீர்களோ என்று எண்ணதெ தோன்றுகின்றது. இங்கு உலகத்தமிழ் அமைப்பில் பெண்கள் பிரிவு இயங்கிக்கொண்டிருந்தது. அவர்கள் மாதமாதம் கூட்டங்களை நடாத்தி வந்தார்கள் அக்கூட்டங்களுக்கு உங்கள் சார்பில் யாராவது பெண்கள் சென்றார்களா?
    புலிகளை ஏற்றுக்கொள்ளாத பெண்ணியவாதிகள் இதைப் பேசியிருக்க வாய்ப்பில்லைத்தான்.
    மேலும் எனது கேள்வி புலிகளால் கொல்லப்பட்ட செல்வி, ராஜணி, மற்றும் சரோஜினி ஆகியோரின் மரணம் குறித்து நீங்கள் என்ன சொல்ல விரும்புகின்றீர்கள்? இது விவாதம் இல்லை. உண்மையிலேயே உங்கள் கருத்தை நான் அறிய விரும்புகின்றேன்.

    கறுப்பி

    Like

  5. கறுப்பி

    அவர்கள் பெண்ணியவாதிகள் என்பதால் கொலப்பட்டார்கள் என்கின்றீர்களா?

    Like

  6. புலிகள் பல ஆண்களை கொன்றார்கள் எனவே புலிகள் ஆண் எதிர்ப்புவாதிகள் என்பீர்களா? அய்யோ அய்யோ

    Like

  7. தமிழன் நீங்களாகவே ஏதோ கேட்டு நீங்களே கத்திக் கொள்கின்றீர்கள். தயவுபண்ணி நான் சுதனிடம்தான் கேள்வி கேட்டேன். அவருக்கு எனது கேள்வி விளங்கியிருந்தால் பதில் அவர் சொல்லட்டும்.

    karupy

    Like

  8. கறுப்பி வாழ்க உங்களது ஜனநாயகம்.
    நீங்கள் மட்டும் எல்லோரிடமும் கேள்வி கேட்பீர்கள் ; அவர்கள் பதில் அளிக்காவிட்டால் சர்வாதிக்கரம் என்பீர்கள்; இப்போது நான் உங்களிடம் கேட்கின்றேன்; பதில் சொல்லுங்கள்

    Like

  9. கறுப்பி,
    //எனது கேள்வி புலிகளால் கொல்லப்பட்ட செல்வி, ராஜணி, மற்றும் சரோஜினி ஆகியோரின் மரணம் குறித்து நீங்கள் என்ன சொல்ல விரும்புகின்றீர்கள்? இது விவாதம் இல்லை. உண்மையிலேயே உங்கள் கருத்தை நான் அறிய விரும்புகின்றேன்// இவர்கள் பெண்கள் என்பதால் விடுதலைப் புலிகளால் கொல்லப்பட்டால்தான் இவர்களின் கொலைகளை வைத்து புலிகளை பெண்களுக்கு எதிரானவர்கள் என்ற முடிவுக்கு வரமுடியும். இவர்களை புலிகள் கொலைசெய்தமை அவர்களிடம் இருந்த மாற்றுக் கருத்தாளர்களை ஏற்றுக் கொள்ளாத அரசியல் என்றே சொல்லமுடியும். ஆனால் இது புலிகளுக்கு மாத்திரமுள்ள அரசியலும் கிடையாது. ஈழத்துத் தமிழ் அரசியல் குழுக்கள் எல்லாவற்றிலுமே இந்த மனப்பாங்கு இருந்தது.

    Like

  10. கறுப்பி, தவிர உலகத் தமிழர் நடத்தும் கூட்டங்களை வைத்து புலிகளின் அரசியலை மதிப்பிட முடியாது. நான் கூட உலகத் தமிழர் நடத்தும் கூட்டங்களில் அதிகம் கலந்துகொண்டவன் கிடையாது. உங்கள் தர்க்கத்தின்படி பார்த்தால் நானும் புலி எதிர்ப்பாளனாகிவிடுவேன். நிற்க, புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் புலிகள் மேற்கொண்ட மணக்கொடை தடுப்பச் சட்டம், பெண்களுக்கான பாதுகாப்புச் சட்டங்கள் பற்றிய உங்கள் அபிப்பிராயம் என்ன/…. இந்தச் சட்டங்கள் குறைபாடுடையன என்றால் இன்னும் எப்படி இவற்றைச் சீர் செய்திருக்கலாம் என பிரேரிக்கின்றீர்கள்….

    Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

Website Powered by WordPress.com.

Up ↑

%d bloggers like this: