பிரதீஸ் என்றொரு நண்பன் அல்லது ஜூலை 09, 1995

downloadபிரதீஸுடன் நான் எப்போது நெருக்கமாக இருந்தேன் என்பது எனக்கு இன்றும் சரிவர தெரியவில்லை எனது முதல் நண்பன் யாரென்று இப்போது இணைய தளங்களில் கடவுச்சொல்லை ஞாபகப்படுத்தக் கேட்கும்போதெல்லாம் அவனது பேர் தான் ஞாபகம் வருகின்றது. ஆனால் எந்தக் காலப்பகுதியிலும் எனக்கு ஆக நெருக்கமான நண்பனாக அவன் இருந்ததில்லை.

அப்போது நாங்கள் நவாலியில் இருந்தோம். நவாலி மகாவித்தியாலயம் என்ற பள்ளிக்கூடத்தில் இரண்டாம் வகுப்பு படித்துவந்தேன். புதிய இடம். புதிய சூழல். எவருடனும் பெரிதாக நெருங்கி பழக முடியவில்லை. கொழும்பில் இருந்துவிட்டு வந்திருந்ததால் எனது பேச்சுத் தமிழ் கூட ஊரில் பேசிய தமிழுடன் வேறுபட்டு இருந்திருக்கலாம். இதனால் பள்ளிக்கூடம் போவதே ஏதோ சிறைக்கு போவதைப் போன்று இருந்தது. இந்த நாட்களில் தான் பிரதீஸ் அறிமுகம் ஆனான். ஏதோ அவனுடனும் துளசி(1) என்ற இன்னொருவனிடமும் தான் கொஞ்சம் பழக ஆரம்பித்தேன்.

எப்போதும் அந்த பள்ளிக்கூட நண்பர்களை விட்டு விலகியே இருந்த என்னை அவன் மெல்ல மெல்ல பூமிக்கு இழுத்துவந்தான். ஒரு மழை நாளில் பள்ளிக்கூட ஆசிரியர்கள் வராமல் மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்தபோது இரண்டு கற்களை எப்படி காந்தம் ஆக்குவது(2) என்ற ரகசியத்தை எனக்கு மட்டும் சொல்லி தந்தான். அந்த வயதிலேயே அவனுக்கு நிறைய விடயங்கள் தெரிந்திருந்தன. பூக்களை அவற்றின் காம்பை பிடித்து கிள்ளும்போது அவை விழும் விதத்தில் இருந்து ஆண் பூவா பெண் பூவா என்று கண்டறியும் வித்தையை(2) ஒரு முறை எனக்கு பள்ளிக்கூடம் விட்டு வரும்போது பொறுமையாகச் சொல்லித் தந்தான்.

அப்போதெல்லாம் அவன் ஒரு சிறிய அளவிலான சூட்கேசில்தான் பள்ளிக்கூடத்துக்குப் புத்தகம் கொண்டு வருவான். நானும் எனது அப்பாவிடம் அடம் பிடித்து அது மாதிரி ஒரு சூட்கேஸ் வாங்கிக்கொண்டேன். அவனது சொந்தக்காரர் யாரோ அவனுக்கு கொடுத்த ஒரு தோடம்பழத்தின் (orange) அரைவாசியை அவன் எனக்குத் தந்தான். அதை ஒரு பேப்பரால் சுற்றி அந்த சூட்கேசில் வைத்திருந்தேன். சனி, ஞாயிறுகளில் வீட்டில் எடுத்து உண்டால் யார் தந்தது என்று கேட்பார்களோ என்று பயந்து அதை ஒளித்தே வைத்திருந்ததில் எனது புத்தகம் எல்லாம் தோடை வாசம் அடிக்க தொடங்கியது. இந்த நேரம் பார்த்து காந்தம், விளையாட்டு பொருட்களில் வரும் மோட்டார், சைக்கில் பாகங்கள் என்று சேர்க்கும் ஆசையும் வந்தது. பள்ளிக்கூடத்தில் இருந்து வீட்ட போற வழியில் அரசடி சந்தி கடந்தவுடன் வரதனின் சைக்கிள் கடை வரும். கடைக்கு முன்னால இருந்த நிலத்தில் பழைய சைக்கிள் போல்ஸ், நட்டுகள் எல்லாம் எறிந்திருக்கும். நாங்கள் அவற்றைப் பொறுக்கிச் சேர்ப்போம். என்னிலும் நிறைய உற்சாகமான பிரதீஸ் நிறைய சேர்த்து எனக்கும் பாதி தருவான். ஒரு முறை எனது பெரியம்மா நைஜீரியாவில் இருண்டு கொண்டுவந்து தந்திருந்த ஒரு பழைய விளையாட்டு ஹெலிகொப்டரை உடைத்து அதில் இருந்த காந்தத்தை இருவரும் பகிர்ந்து எடுத்தோம். எம்மிடம் இருந்த எல்லா இரும்பு உதிரிபாகங்களுக்கும் காந்தத்தை ஏற்றவேண்டும் என்பது எமது திட்டம்.

download (1)அப்போது நான் ஒரு மோதிரம் போட்டிருந்தேன். அடிக்கடி பிரதீஸ் அதை வாங்கி அணிந்து பார்ப்பான். ஒரு நாள் நான் அவனையே அதை வைத்திருக்க சொல்லிவிட்டேன். பிறகு இருவரும் வரதன் கடையை தாண்டி, ரோட்டோரத்தில் காயப்போட்டிருக்கிற எள்ளை(3) எல்லாம் எடுத்து சாப்பிட்டபடி வீட்ட போனோம். கொஞ்ச நேரத்தால எங்கட வீட்ட பிரதீஸ் அவன்ட அம்மாவோட வந்து நிற்கிறான். ஏனோ தெரியேல்லை, அந்த மோதிரத்தை அவன் என்ட அம்மாவிடம் திருப்பி கொடுத்துவிட்டான். அதைப் பற்றி அவனிடம் அடுத்த நாள் கேட்கோணும் என்றிருந்தேன்.

இதற்குபிறகு சிறிது நாளில் அந்த ஆண்டும் முடிய நான் பாடசாலையில் மிகச் சாதாரணமான புள்ளிகளையே பெற்றதாலும் அப்பம்மா தனியாக சுதுமலையில் இருந்ததாலும் என்னை சுதுமலையில் இருந்த எனது அப்பம்மா வீட்டிற்கு அனுப்பி அங்கு இருந்த பள்ளிக்கூடத்தில் சேர்த்தார்கள் இப்படியே மெல்ல மெல்ல பிரதீஸ்டனான உறவு அப்போதைக்கு முடிவடைந்தது.

இதற்கு பிறகு அவனுடன் மீண்டும் பழக தொடங்கியது 10 வருடம் கழித்து, நானும் அவனும் ஒரே டியூஷனில் படிக்கும்போது. அவன் நிறைய வளர்ந்திருந்தான். பெரிதாக மீசை கூட வந்திருந்தது. நிறைய சதை போட்டிருந்தான். முன்பிருந்த நெருக்கம் தொலைந்துபோயிருந்தாலும் அன்பாகக் கதைத்தான். டியூஷன் முடிய அடிக்கடி ஒன்றாக வருவோம். நவாலியில் எம் இருவர் வீட்டிற்கும் நடுவில் இருந்த எனது பாடசாலை தோழனும்(4) அவனும் மிக நெருக்கமாகியிருந்தார்கள். சந்தோஷமாக நாட்கள் போய் கொண்டிருக்கும்போது, அந்த எனது பாடசாலை நண்பனுக்கும் எனது நண்பன் ஒருவனுக்கும் ஏதோ சில சிறுபிள்ளை கோபங்கள் வர நட்பு இரண்டு அணியாக பிரிந்தது. எனது நண்பன் பக்க நியாயங்களை ஏற்று நான் பிரதீஸுடனும் மற்ற நண்பனுடனும் கதைப்பதை தவிர்த்தேன். ஒரு நாள் டியூஷன்(5) முடிய நவாலி அரசடி சந்தியில் நாகேஸ் கடையில் பொறித்த வேர்கடலை வாங்கி கொறித்தபடி வீடு செல்லும்போது பிரதீஸும் மற்றைய நண்பனும் அருகில் வந்து “எமக்கும் உனக்கும் ஒரு பிரச்சனையும் இல்லை, ஏன் நீ எம்மோட கதைக்கிறதில்லை” என்று கேட்டனர். ஒன்றுமில்லை என்றுவிட்டு நான் என் பாட்டில் போவிட்டேன். ஆனால் ஏனோ சின்ன வயது பிரதீஸின் ஞாபகங்கள் நிறைய வந்தன.

இதற்கு பிறகு பிரதீஸை நான் சந்தித்தது ஜூலை 9, 95ல். முதல் நாள் யாழ் இந்துக் கல்லூரி விளையாட்டு போட்டியை பார்த்து அதில் சாம்பியன் கிண்ணத்தை தவற விட்ட நண்பன் அனுஷனுக்கு(6) நானும் தயா என்ற நண்பனும் ஆறுதல் சொல்லிவிட்டு வீட்ட வர நேரமாகிவிட்டது. விடிய டியூஷனுக்கு போய்ட்டு வாறன். ஆமி முன்னேற அராலி பக்கத்தால முன்னேறுகிறான் என்று சனமும் இடம்பெயர வெளிக்கிட்டுது. ரேடியோ எல்லாம் எதோ முன்னேறிப்பாய்ச்சல் என்று அலறுது. டியூஷன் முடிஞ்சு போனா உயரப்புலம் பிள்ளையார் கோயில், மூத்த நாயனார் கோயில், சிந்தாமணிப்பிள்ளையார் கோவில் என்று எல்லா இடமும் இடம்பெயர்ந்த சனம். நவாலி தேவாலயம் முன்னாலும் பெரிய கூட்டம். முன்னுக்கு இருந்த சைவக்கோயிலிலும் நிறையச் சனம். ஊரில் எனக்கு நன்கு தெரிந்த சனம் வேற நின்று உதவிசெய்து கொண்டிருந்தது. சர்ச்சுக்கு முன்னால் பிரதீஸ் அவன் ஒன்று விட்ட தமக்கையுடன் நின்றான். அவ அப்ப ஊர் விதானை. அதால இடம்பெயர்ந்த சனத்தின் விபரங்களை திரட்டி அவர்களுக்கு உதவிகள் வழங்க ஏற்பாடுகள் செய்துகொண்டிருந்தனர். நிறைய நாட்களின் பின்னர் அவனுடன் கதைத்தேன். தூரத்தில் ஷெல் விழுந்து வெடிக்கும் ஓசைகள் கேட்கக் கேட்க அவனுடன் கதைத்துக் கொண்டிருந்தேன். சம்பந்தமேயில்லாமல் சின்ன வயசில் நான் கொடுத்த மோதிரம் பற்றி சொன்னேன். இதை இப்ப சொன்னால் பெடியள் பகிடி பண்ணுவாங்களடா என்று சிரித்தான். சில நாட்களின் முன்னர்தான் (அல்லது அன்று காலையோ) தகப்பன் சவூதியில் இருந்து நீண்ட நாட்களின் பின்னர் ஊர் வந்திருப்பதாக சொன்னான். குண்டுகள் வெடிக்கும் சத்தம் நெருங்குவதுபோல கேட்க, என்ன நடக்கும் என்று கேட்டேன். விட மாட்டங்களடா. ஏதாவது செய்வாங்கள் பாரன் என்றான். சிறிது நேரத்தில் விடைபெற்று வீட்ட வந்துவிட்டேன்.

நவாலிக்கு அருகில் குண்டுகள் விழ தொடங்க நாமும் சுதுமலை நோக்கி சென்றுவிட்டோம். பின்னேரம் ஒரு நான்கரை மணி அப்படி இருக்கும் தொடர்ச்சியான சத்தம். புக்காராவில்(7) வந்து ராணுவம் குண்டு போட்டு நிறைய சனம் செத்துவிட்டது(7) என்று ரோட்டால சனம் குளறிக்கொண்டு ஓடித் திரியிது. எதுவுமே செய்யமுடியாத நிலை. இரண்டு நாட்களின் பின்னர் செத்தவர்கள் பேர் பேப்பரில் வருகிது. அதில் அவனது அக்காவின் பெயருடன் அவனது பெயரும். என் நினைவுகள் எல்லாம் ஒரு வெட்ட வெளியில் குவிக்கப்பட்டு ஒரு கணம் செயலிழந்தேன். கிட்ட தட்ட நான் யாழ்ப்பாணம் வந்த நாள் முதல் அறிமுகமான நண்பன். மற்றவர்கள் முன்னர் உணர்ச்சிகளைக் காட்டாமல் கழிவறை சென்றேன். என்னைக்கட்டுப்படுத்த முடியவில்லை. அழு அழு என்று அழுதேன். இனிய நண்பன் ஒருவன் இறந்துவிட்டன் என்று, வீணாக் கதையாமல் விட்டு விட்டோமே என்று, அவன் சாவதற்கு கொஞ்ச நேரம் முன்னர் கூடக் கதைத்துள்ளோமே என்று எத்தனையோ எண்ணி எண்ணி அழுதேன். கிட்ட தட்ட 150 க்கு மேற்பட்டவர்கள் அந்த இடத்திலேயே இறந்திருக்கிறார்கள். நிறைய பேரின் உடல்களை எடுக்க முடியாமல் கட்டட இடிபாடுகளின் இடையேயே மண்ணெண்ணெய் ஊற்றி கொழுத்தி எரித்தார்கள். அவனது உடலை எடுக்க முடிந்ததாம். ஆனால் தலை வெடித்து பிளந்திருந்த அவனது உடலை பார்த்து அவனது தந்தை கதறி கதறி அழுதாராம்.

இதற்கு பிறகு எத்தனையோ நடந்துவிட்டது. எமது ஊரில் இருந்து நிறைய பேர் விடுதலை போராட்டத்தில் குதித்தார்கள். அந்த பகுதியில் கிட்ட தட்ட எல்லா வீட்டிலும் ஒரு சாவு விழுந்திருந்தது. பாலகுமார் என்ற உதைபந்தாட்ட வீரன் தன் கால்களை இழந்தான். ரெக்ஸன் என்கிற நண்பனின் தங்கை கொல்லப்பட்டாள். நிறைய இழப்புகள். ரத்தங்கள்.

இப்போதும் கையில் ஒரு மோதிரம் அணிந்துள்ளேன். எப்போதும் பேசாமல் இருக்கும் மோதிரம் திடீரென்று கையை உறுத்துவதுபோல தோன்றும்போது பிரதீஸுடன் கடைசியாக கதைத்த ஞாபகம் வரும்


அடிக்குறிப்புகள்

(1) துளசி – இவன் மானிப்பாயை சேர்ந்தவன் விடுதலை போராட்டத்தில் குதித்து அண்மையில் வீரமரணம் அடைந்தவன்

(2) புத்தகத்தில் வைத்த மயிலிறகு குட்டி போடும் என்பதுபோல எமது பால்யகால நம்பிக்கைகள்


(3) நவாலி, ஆனைக்கோட்டை பகுதிகள் நல்லெண்ணெய், அதாவது எள்ளில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய் செய்வதில் பேர்போனவை அதனால் பல வீடுகளின் வாசலில் காய் விடப்பட்ட எள்ளும், காதுகளில் விழும் செக்கிழுக்கபடும் ஓசையும் எப்போதும் நிறைந்திருக்கும்

(4) இந்த நண்பன் இப்போது திருமணமாகி மனைவி மற்றும் குழந்தையுடன் நவாலியில் வசித்து வருகிறான்.

(5) இந்த டியூஷன் கால நினைவுகள் பற்றி முன்பு ஒரு முறை எழுதியுள்ளேன். அதன் சுட்டியை பெற இங்கே அழுத்தவும்

(6) அன்று அவன் பிறந்த தினம் வேறு, இதனால் அவன் சகஜ நிலைக்கு வரும்வரை காத்திருந்தோம்

(7) புக்காரா (Pucara) இவை ஆர்ஜெந்தீன தயாரிப்பு யுத்த விமானங்கள் 90களின் மத்திய பகுதிகளில் பெருமளவு இன அழிப்பில் பயன்பட்டவை. பின்னர் போராளிகளால் சுட்டு வீழ்த்தப்பட்ட இந்தவகை யுத்த விமானத்துடன் அப்போது குண்டுகளை வீசிய விமானியும் கொல்லப்பட்டதாக செய்திகள் வந்தது குறிப்பிடத்தக்கது.

(8) கிட்ட தட்ட 150 பேர் செத்தனர். இது பற்றிய பதிவுகள்
http://en.wikipedia.org/wiki/Navaly_church_bombing
http://www.tamilnation.org/indictment/genocide95/gen95012.htm
http://www.ltteps.org/?view=1750&folder=25
கனடாவில் இருந்து வெளியான கோடை என்கிற இணைய இதழில் வெளியானது

32 thoughts on “பிரதீஸ் என்றொரு நண்பன் அல்லது ஜூலை 09, 1995

Add yours

 1. நல்லதொரு சந்தர்பத்தில் அருமையான நினைவுப்பதிவு

  Like

 2. நிச்சயமாக, இது ஒரு நெஞ்சை உலுக்கும் நினைவு. காலங்கள் தந்த பதிவுகள் காலம் காலமாய் நெஞ்சில் பதியவேண்டும். நண்பனை இழந்த பிரிவுத்துயர், அவன் தந்த ஒவ்வொரு நினைவுகளிலும் எம்மை வாட்டும். நல்லதொரு பதிவு. தொடரட்டும்.

  Like

 3. நெஞ்சோடு சுமந்து திரிந்த தோழன் கொடூரமான முறையில் கொன்று வீசப்பட்டிருக்கும்போது எப்படி இருக்கும்……யுத்தம் என்றால் மரணம் சகஜம் தானே என்று தத்துவம் சொல்லும் ஏ சி பகட்டுக்காரர்கள் இதை எங்கே உணரப்போகிறார்கள்.

  Like

 4. நமக்கான கதையை நாமே எழுதுவோம்……!நவாலிப் படுகொலைகளின் முதலாண்டு “எத்தனை எத்தனை வித்துகள் விழுந்தன” என்ற தலைப்பில் நினைவு கூரப்பட்டபோது எழுத்தாளர் கோகிலா மகேந்திரன் குறிப்பிட்டதை நீங்கள் பதிவு செய்திருப்பதாகவே படுகிறது. தூக்கம் இழந்த அந்த இரவுகளில் நான் எனக்கு தெரிந்த ஒவ்வொரு நாவலி மனிதனையும் எண்ணிக்கொண்டேன் அவனுக்கு என்ன ஆகியிருக்கும் இவனுக்கு என்ன ஆகியிருக்கும் என்று…இங்கு எழுதப்பட நிறைய கதை இருப்பதாகவே நான் உணர்கிறேன்.“உணர்வுகள் அழிவதில்லை அவை பிரபஞ்சத்தில் அலைகின்றன” என்றான் முருகதாஸ் ஒருநாள், அந்த அலையும் பிரபஞ்ச உணர்வுகள் தாம் எம்மை எடுத்து தம்மை வெளிப்படுத்துகின்றன. காலத்தின் சாட்சிகளாகும் ஒவ்வொரு பதிவும் கௌரவப்படுத்தப்பட வேண்டியவையே.

  Like

 5. சில பாடல்களும் இது போன்ற நினைவுப் பதிவுகளும் கடந்த காலங்களை மீண்டும் மீண்டும் கண்முன் கொண்டுவருகின்றன.. நவாலிப்படுகொலைகள் தொடக்கம் பலவற்றின் சாட்சிகளாக நாங்கள் இருக்கிறோம். இன்று இடம்பெறும் மிக மோசமான அவலங்கள் இன்னும் பல கதைகளை எதிர்காலத்தில் சொல்லும். இதுவே தொடர்கதையாகாமல் இருக்க வேண்டும்…

  Like

 6. ஒன்றல்ல இரண்டல்ல ஒரே தாக்குதலில் 150 பேரை காவு கொண்ட அந்த புக்காரா விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டு வீதி வீதியாக கொண்டு செல்லப்பட்ட போது நாம் அடைந்த மகிழ்விற்கு அளவேது. உங்களுக்கு ஒரு பிரதீஸ் அதே போல் எல்லோருக்கும் ஒவ்வொரு பிரதீஸ்கள் இருப்பார்கள். வாழ வேண்டியவர்கள் குருத்தோடு சாய்வது உள்ளத்தை குமுற வைக்கும் ஒன்றுதான். நல்ல பதிவு.

  Like

 7. மனதை தொடுகிற பகிர்வு…:(யாரோ சொன்னது போல எவரேனும் ஒரு வரை யுத்தத்தில் பறிகொடுக்காத யாராவது இருக்கிறார்களா எங்கள் ஊரில்…

  Like

 8. நவாலி,(மறக்க முடியாததொன்று) யாழ்ப்பாணத்து ஜனங்கள் நம்பிய கடவுளர்களும் கைவிட்ட தருணம் அது… நாகர் கோயில், இப்பொழுது வன்னி!

  Like

 9. //நமக்கான கதையை நாமே எழுதுவோம்……!//இனி இந்த நோக்குடன் தான் எமது நகர்வுகள் அமையவேண்டும். எமது பிரச்சனைகள் சரியான முறாஇயில் பதிவு செய்யப்படவில்லை என்ற உண்மையை நாம் ஏற்றுக்கொள்ளவேண்டும். தமிழக எழுத்தாளார்கள், கலைஞர்கள் தான் இதை செய்யவேண்டும் என்பதில்லை. நாம் கூட செய்யலாம். இந்த பிரச்சனையின் ஆழமும் வீச்சும் அவர்களைவிட எமக்கு தானே அதிகம் தெரியும்.

  Like

 10. I know prathees for a shorter period as he came to home once or twice. He was the monitor in the school I suppose.His father went to search his son among the people killed, but couldn’t identified in first time.Then somebody help him to get his body.That was a cowardice act air bombing the innocent people while they displaced.Nowadays everybody forgot that no?Thank you for keeping updates

  Like

 11. வணக்கம் அனாமிஅனாமிகளுக்கு மட்டுமே வரக்கூடிய சந்தேகம் இது. ஐயா, இதில் கொல்லப்பட்ட 150 பேரின் பட்டியலும் தொகுக்கப்பட்டவை. ஆனால் எனக்கு தெரிந்து இந்த குண்டு வீச்சு தாக்குதலில் ஏற்பட்ட காயங்களால் பிற்பாடு இறந்தவர்களையும் சேர்த்தால் அது இன்னும் அதிகம் வரும். நான் தந்த சுட்டிகளை சாவகாசமாக அழுத்தி பாருங்கள்பதில் கிடைக்கும்

  Like

 12. //இன்று இடம்பெறும் மிக மோசமான அவலங்கள் இன்னும் பல கதைகளை எதிர்காலத்தில் சொல்லும்.//வணக்கம் கிருஷ்ணா,எதிர்காலத்தில் சொல்ல காத்திருக்காமல் உடனுக்குடன் சொல்வதும் செய்வதும் மிகுந்த பலன் தரும். உதாரணமாக இஸ்ரேல் – காஸா பிரச்சனை பதியப்பட்ட அளாவு அதே அளாவு அவலங்கள் நிறைந்த எமது பிரச்சனை பதியப்படவில்லை. வணிக இதழகளை நம்ப வேண்டியதில்லை. ஆனால் சிற்றிதழ்களில் கூட இவை சரியான முறாஇயில் முன்னெடுக்கப்படவில்லை என்பது என் கருத்து. எனக்கு தெரிந்த வரை உயிர்ம்மை ஓரளவு சரியாக செயலாற்றுகின்றது

  Like

 13. //ஒன்றல்ல இரண்டல்ல ஒரே தாக்குதலில் 150 பேரை காவு கொண்ட அந்த புக்காரா விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டு வீதி வீதியாக கொண்டு செல்லப்பட்ட போது நாம் அடைந்த மகிழ்விற்கு அளவேது. //அதே விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது என்ற தகவலை உறுதி செய்தமைக்கு நன்றி.

  Like

 14. //யாரோ சொன்னது போல எவரேனும் ஒரு வரை யுத்தத்தில் பறிகொடுக்காத யாராவது இருக்கிறார்களா எங்கள் ஊரில்…//ம்ம். தன் சாம்பலில் இருந்து உயிர்த்தெழும் ஃபீனிக்ஸ் போல எமது சாம்பல்களில் இருந்து மீண்டும் மீண்டும் புதிதாய் நாங்கள் பிறப்போம் இந்த மண்ணில்

  Like

 15. //His father went to search his son among the people killed, but couldn’t identified in first time.Then somebody help him to get his body.//உண்மைதான். நீண்ட நாளின் பின்னர் அப்போது தான் அவர் நாடு திரும்பியிருந்தார். நினைக்கவே விசர் வருகுது

  Like

 16. நீங்கள் சொல்வதெல்லாம் உண்மை உங்கள் பதிவைப்போல. 1990 ல் ஈழத்தை விட்டு வெளியேறினேன் மரணம் மலிந்த பூமியாக போனகதை நெஞ்சில் முள்ளை விதைத்தது. போரின் தாக்கத்திலிருந்து தப்பிய எனக்கு கிடைத்தது வரமா? இல்லை சாபமா?

  Like

 17. //மரணம் மலிந்த பூமியாக போனகதை நெஞ்சில் முள்ளை விதைத்தது. போரின் தாக்கத்திலிருந்து தப்பிய எனக்கு கிடைத்தது வரமா? இல்லை சாபமா?//வணக்கம் பூபதி,சாபங்களையே வரங்களாக்கி கொண்ட ஒரு தலைமுறையில் பிறந்து வளர்ந்தவர்கள் நாங்கள்.இந்த பிரச்சனை பற்றிய அடிப்படை அறிவும், ஆழ்ந்த தேடலும் கட்டாயம் ஒவ்வொருவருக்கும் தேவை என்பது என் கருத்து

  Like

 18. //Suthan,Really Prathees’ tragic end was a great shock to me//வணக்கம், உங்கள் கருத்துக்கும் அதை தொடர்ந்த உடனடியான உங்கள் அழைப்பிற்கும்.பிரதீஸின் தாயும் நீங்களும் ஒன்றாக பாள்ளிக்கூடம் சென்று வந்தீர்கள் என்பது நான் அறியாதது.நன்றி

  Like

 19. எமது தேவாலயமும் அந்த நினைவுகளும் என்றும் மறக்க முடியாதவை. thanks 4 writing about our church guru! yes I know prathesh! we lost so many near n dear ones in that incident! info for anony! not 150 also more than that around 200.
  its happy to know ur chikdhood was in Navaly! we never met! hehe i think still….

  Like

 20. எமது தேவாலயமும் அந்த நினைவுகளும் என்றும் மறக்க முடியாதவை. thanks 4 writing about our church guru! yes I know prathesh! we lost so many near n dear ones in that incident! info for anony! not 150 also more than that around 200.
  its happy to know ur chikdhood was in Navaly! we never met! hehe i think still….

  Like

 21. எமது தேவாலயமும் அந்த நினைவுகளும் என்றும் மறக்க முடியாதவை. thanks 4 writing about our church guru! yes I know prathesh! we lost so many near n dear ones in that incident! info for anony! not 150 also more than that around 200.
  its happy to know ur chikdhood was in Navaly! we never met! hehe i think still….

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

Website Powered by WordPress.com.

Up ↑

%d bloggers like this: