ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : சில குறிப்புகளும் கருத்துக்களும்

ஒரு புத்தகம் அது உள்ளடக்கியிருக்கின்ற விடயங்களில் மாத்திரம் அல்லாமல் அது வெளிவரும், எழுதப்படும், வாசிக்கப்படும் காலங்களாலும் முக்கியத்துவம் பெறுகின்றது.  அந்த வகையில் ஈழப்போராட்டம் மிகப்பெரியதோர் இனப்படுகொலையுடன் ராணுவ ரீதியாக முடிவுக்கொண்டுவரப்பட்டிருக்கின்ற காலப்பகுதியில் வந்திருக்கின்ற கணேசன் என்கின்ற, ஈழப்போராட்ட வரலாற்றில் ஐயர் என்று அறியப்பட்டவர் எழுதிய “ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்” என்கிற நூலை முக்கியமானதாகவே நான் உணர்கின்றேன்.  மிகப் பெரியதோர் அழிவிற்குப் பின்னரும் தமிழரின் தேசிய விடுதலைப் போராட்டத்திற்கான தேவைகள் அப்படியே இருக்கையில், இன ரீதியிலான ஒடுக்கல் இன்னமும் அதிகரித்து வருவதாக அவதானிக்கப்படுகின்ற காலப்பகுதியில், தமிழ்த் தேசிய உணர்வு இன்னமும் கூர்மை அடைந்திருப்பதை அவதானிக்கக்கூடியதாக இருக்கின்ற இந்நாட்காளில் தமிழரின் தேசிய விடுதலைப்போராட்டத்தையும் அது முன்னெடுக்கப்பட்ட விதத்தையும் ராணுவ, அரசியல் ரீதியிலான அணுகுமுறைகளை சுய பரிசோதனை செய்வதற்கும், மீள்பரிசீலனை செய்வதற்குமான தேவையும் அதிகரித்தே இருக்கின்றது.  மேற்குறித்த பார்வைகள் மற்றும் கூறுகள் தொடர்பான முழுமையான பிரக்ஞையுடன் ஈழப்போராட்டத்தில் எனது பதிவுகள் என்கிற இந்தப் புத்தகத்தைப் பற்றிய எனது பார்வையை இங்கே பதிவாக்குகின்றேன்.

 

இனியொரு இணையத்தளத்தில் தொடர்ச்சியாக வெளியாகி பின்னர் இனியொருவின் முதலாவது அச்சு வடிவ வெளியாடாகி இருக்கின்ற இந்நூல் தொடர்பான இந்நிகழ்வினை தேடகம் ஒருங்கமைத்திருக்கின்றது.  இனியொருவிற்கும், தேடகத்திற்கும் இந்த முயற்சிக்கு நன்றி சொல்லிக்கொள்ளுகின்ற அதேவேளை அவை இரண்டின் அரசியல் தொடர்பாக இருக்கின்ற விம்பத்தில் இருந்து விடுபட்டு இந்நூலில் சொல்லப்படுகின்ற காலப்பகுதியில் பிறந்தவன் என்கிற முறையில் எனது தலைமுறையின் பார்வையை இயன்றவரை இதில் பதிய முனைகின்றேன்.

 

இந்நூலில் 1972ல் தமிழ் இளைஞர்கள் ஆயுதம் தாங்கிய போராட்டங்களைத் தொடங்கிய காலப்பகுதிகளில் இருந்து அதில் ஈடுபட்டு பின்னர் தமிழ்ப் புதிய புலிகள் அமைப்பிலும் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பிலும் ஆரம்பகால மத்திய குழு உறுப்பினர்களுல் ஒருவரான ஐயர் பின்னர் புலிகள் அமைப்பு இரண்டாக உடைந்தமை, பின்னர் புளொட் இயக்கத்தின் தோற்றம் வரையான காலப்பகுதிகளிலான தனது அனுபவங்களை பதிவாக்கியுள்ளார்.  இதில் முக்கியமாகக் குறிப்பிடவேண்டிய விடயம் என்னவென்றால் இயன்றவரை தான் சார்ந்திருந்த அமைப்பின் தவறுகளைச் சுட்டிக்காட்டுகின்ற போது, அந்தத் தவறுகளில் இருந்து தன்னை விடுவித்து பிறர் மீது பழி சுமத்துவதைத் தவிர்த்து அந்நாட்களில் மேற்குறித்த முடிவுகள் எடுத்தபோது அதிலிருந்த தன்து வகிபாகத்தையும், தனது நிலைப்பாட்டையும் ஒத்துக்கொண்டே ஐயர் எழுதிச்செல்லுகின்றார்.  அதே நேரம், புலிகள் இயக்கத்தை விட்டு வெளியேறி கிட்டத்தட்ட 25 வருடங்களின் பின்னர் அன்றைய புலிகள் இயக்கத்தின் தவறான நடவடிக்கைகளாக எவை அமைந்திருந்தன, அவற்றை எவ்வெவ்வாறு செய்திருக்கலாம் என்று சொல்லிக்கொள்ளுகின்ற ஐயருக்கின்ற சலுகை புலிகள் இயக்கத்தில் தொடர்ந்து இருந்தவர்களுக்கு அதன் தலைமை உட்பட இருந்திருக்காது என்றே சொல்ல விரும்புகின்றேன்.  இதனை சிந்தனைக்கும் அதனை நடைமுறையில் பிரயோகிப்பதற்கும் இடையில் இருக்கின்ற நடைமுறைப்பிரச்சனைகள் சார்ந்தே இங்கே குறிப்பிடுகின்றேன்  அதுவும் குறிப்பாக தொடர்ச்சியாக ராணுவ நடவடிக்களில் ஈடுபட்டுக்கொண்டிருக்குகின்ற ஒரு குழுவினர் எதிர்கொள்ளக் கூடிய புற அழுத்தங்களின் மத்தியில் எதிர்கொள்ளக்கூடிய சிக்கல்களை நாம் கருத்தில்கொள்ளவேண்டும்.

 

குறிப்பாக இந்த நூலிலும், இன்னும் நிறைய இடங்களிலும் பிரபாகரனின் தூய ராணுவ நோக்கு தொடர்ச்சியாக விமர்சிக்கப்பட்டுகின்றது.  அதே நேரத்தில் வரலாற்றில் பிரபாகரனின் பாத்திரத்தை அணுக முற்படும்போது அன்றைய அரசியல் சமூக சூழல், அவர் எதற்காக போராட முன்வருகின்றார், தனது போராட்டத்தை அவர் ஆரம்பிக்கின்ற போது அதற்கான தேவை எப்படி இருந்து, என்ன தேவையாக இருந்தது என்று அவர் கருதினார், அவரைப் பாதித்த தலைமைகள் போன்ற காரணிகளையும் சேர்த்தே ஆராயவேண்டி இருக்கின்றது.  அதன் தேவை கருதி தனது ஆரம்ப கால நேர்காணல்களில் பிரபாகரன்  தெரிவித்த சில கருத்துக்களை அவதானிப்போம்,

1984 ல் சண்டே (இந்தியா) இதழில் வெளியான அனிதா பிரதாப்பிற்கு வெளியான நேர்காணலில்,

இலங்கைத் தமிழர்களுக்கு ஆயுதப் போராட்டமே ஒரே வழியென்று நீங்கள் தீர்க்கமான முடிவுக்கு வர நிர்ப்பந்தித்த உங்களின் தனிப்பட்ட  அனுபவங்களைச் சற்றுக் கூறுவீர்களா? கல்வி, வேலை வாய்ப்பு ஆகியவற்றில் இலங்கை அரசு காட்டிய பாரபட்சமான கொள்கையால் நீங்களோ உங்கள் குடும்பத்தவரோ அல்லது உங்கள் நண்பர்களோ நேரடியாகப் பாதிக்கப்பட்டுள்ளனரா?

என்கிற கேள்விக்கு

“நான் பள்ளிச் சிறுவனாக இருந்த போது 1958 ஆம் ஆண்டின் இனக் கலவரங்களில் நிகழ்ந்த பயங்கரச் சம்பவங்கள் என் மனதில் ஆழமான பாதிப்பை ஏற்படுத்தின.  சிங்கள இன வெறியர்களால் எம் மக்கள், ஈவிரக்கமில்லாமல் கொடூரமாகக் கொல்லப்பட்ட  நெஞ்சை உலுக்கும் சம்பவங்களை நான் கேள்விப்பட்டேன்.  எங்கள் குடும்பத்துக்குத் தெரிந்த  ஒரு விதவைத் தாயை நான் ஒரு முறை சந்தித்த போது அவர் இந்த இன வெறியாட்டத்தால் தனக்கு நேர்ந்த துயரமான அனுபவத்தை என்னிடம் சொன்னார்.  இனக்கலவரத்தின் போது சிங்களக் காடையர்கள் கொழும்புவில் இருந்த அவர் வீட்டைத் தாக்கினார்கள்.  அவரது வீட்டிற்குத் தீ வைத்து அவருடைய கணவரையும் கொடூரமாகக் கொண்டார்கள்.  அவரும் அவரது பிள்ளைகளும் பலத்த எரி காயங்களுடன் தப்பினார்கள்.  அவரது உடம்பில் காணப்பட்ட எரிகாயத் தழும்புகளைப் பார்த்த போது நான் மிகவும் அதிர்ச்சியடைந்தேன்.  சிறு குழந்தைகளைக் கொதிக்கும் தாருக்குள் உயிருடன்  வீசிக்கொன்ற கோரச் சம்பவங்களை நான் கேள்விப்பட்டேன்.  அநாதரவான அப்பாவித் தமிழர்கள் எவ்வாறெல்லாம் கொடூரமான தாக்குதலுக்கு உள்ளாகின்றார்கள் என்று கேட்கும்போதெல்லாம் எம்மக்கள் மீது ஆழ்ந்த அனுதாபமும் அன்பும் ஏற்பட்டன.  இந்த இனவெறி அமைப்பின் பிடிக்குள் இருந்து  எம்மக்களை மீட்கவேண்டும் என்ற பெரும் உந்துதல் என்னிடம் தோன்றியது.  நிராயுத பாணிகளான  அப்பாவித் தமிழர்களுக்கெதிராக  ஆயுத வலிமையைப் பிரயோகிக்கும்  இந்த அமைப்பினை  ஆயுதப் போராட்டத்தின் மூலமே எதிர்கொள்ளமுடியும் என்று நான் ஆழமாக உணர்ந்தேன்” (மாவீரர் உரைகள், நேர்காணல்கள் – பக்கம் 254-255)

என்று பதிலளிக்கின்றார் பிரபாகரன்.  இதை ஒத்த கருத்துக்களையே இதே கருத்தையே பின்னர் 30/12/1985 ஃப்ரொன்ட்லைன் இதழிற்கு வழங்கிய நேர்காணலிலும், பின்னர் 23/மார்ச்/1986 ல் வீக் இதழிற்கு வழங்கிய நேர்காணலிலும் தெரிவித்துள்ளார்.

எனவே தமிழ்மக்கள் மீது இலங்கை அரசின் நேரடியான மற்றும் மறைமுகமான ஆதரவுடன் நிகழ்த்தப்பட்ட ஆயுத மற்றும் அரசியல் ரீதியான வன்முறைகளை எதிர்கொள்வதற்கு தமிழர்களுக்கென ஒரு ராணுவம் தேவை என்பதே பிரபாகரன் உள்ளிட்ட பலரின் கருத்தாக அந்நாட்களில் இருந்தது.  இதனையே ஐயரும் குறிப்பிடுகின்றார்,

“பிரபாகரன் உட்பட நாம் அனைவருமே இன அடக்குமுறைக்கு எதிரான எமது கோபத்தை, பெருந்தேசிய வன்முறைக்கு எதிரான எமது  உணர்வுகளை, ஆயுதப் போராட்டமாக முன்னெடுக்க, தமிழர் விடுதலைக் கூட்டணி சட்ட வரம்புகளுக்கு உட்பட்ட வகையில் போராட்டத்தை முன்னெடுத்தது என்பதே எமது நம்பிக்கை” (பக்கம் 62)

என்றும்

“பிரபாகரனது நோக்கமும் அதன் வழி எமது நோக்கமும் ஒரு பலமான இராணுவக் குழு ஒன்றைக் கட்டியமைத்துக் கொள்வதே.  தமிழர் விடுதலைக் கூட்டணியின் அரசியலை நாம் போதுமானதாக எண்ணியிருந்தோம்” (பக்கம் 65)

என்றும் குறிப்பிடுகின்றார்.  தவிர இன்னோரிடத்தில்

“நான் இந்தியாவில் இருந்த வேளையில் எமது மத்திய குழுவும் தமிழர் விடுதலைக் கூட்டணியும் ஒரு எழுதப்படாத ஒப்பந்தத்திற்கு வந்திருந்தனர்.  தமிழர் விடுதலைக் கூட்டணி அரசியல் அமைப்பு என்றும், இளைஞர் பேரவை வெகுஜன அமைப்பு என்றும் புலிகள் இவற்றிற்கான ராணுவ அமைப்பு என்றும் முடிவிற்கு வருகின்றனர்” (பக்கம் 56).

இந்தச் சம்பவம் கிட்டத்தட்ட 77ல் நடக்கின்றது.  எனவே புலிகள் ஆரம்பகாலத்தில் இருந்தே தம்மை ஒரு ராணுவக் குழுவினராகவே வளர்ந்து வந்தனர்.  ஏற்கனவே இருந்த தமிழர் விடுதலை கூட்டணியை தமக்கான அரசியலை முன்னெடுப்பவர்களாகவே அவர்கள் அன்று நம்பி இருந்தனர்.  அந்த அடிப்படையிலேயே தமிழ்ப் புதிய புலிகளின் முதலாவது அமைப்பு விதிகளும் தூய ராணுவ நோக்கிலேயே அமைந்திருந்தன.  தமிழர்களுக்கென வலிமையான ராணுவம் ஒன்றைக் கட்டியெழுப்புவதே முதன்மையான தேவை என்பதில் உறுதியாக இருந்த பிரபாகரன் அவ்வாறு கட்டியெழுப்பபப்படும் ராணுவம் ராணுவ ஒழுக்கத்துடனும் கட்டுப்பாடுனும் இருக்கவேண்டும் என்று கருதினார்.  1986ல் நியூஸ் வீக் இதழிற்காக தீபக் மஷூம்தாரிற்கு வழங்கிய நேர்கானலிலும் இந்தக் கருத்தையே பிரதிபலித்துள்ளார் பிரபாகரன்.  இந்தப் புத்தகத்தில் புலிகள் இயக்கத்திற்குள் பிரபாகரன் செலுத்திய ராணுவப் போக்குப் பற்றிய விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டிருக்கின்றபோதும், அவற்றை மேற்குறித்த நிபந்தனைகளுடன் சேர்த்து ஆராய்வதே பொருத்தமானதாக இருக்கும்.

அது போல அன்றைய சூழலில் ஐயர் உள்ளிட்ட இளைஞர்கள் தமது அரசியல் பாதையைத் தீர்மாணிப்பதில் செல்வாக்குச் செலுத்திய காரணிகளையும் பார்ப்போம்.  1970ல் லங்கா சம சமசமாஜக் கட்சியும், இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சியும் சிறீமாவோ தலைமையிலான சுதந்திரக்கட்சியுடன் இணைந்து ஆட்சி அமைந்திருந்த காலப்பகுதியில்  இனவாரியான தரப்படுத்தல், பௌத்த மதச்சார்பான அரச கொள்கை, சிங்களம் அரச கரும மொழி ஆக்கப்படல் போன்றவை நடைமுறைப்படுத்தப்படுகின்றன.  இக்காலப்பகுதி பற்றி ஐயர் சொல்வதைப் பார்ப்போம்,

“இந்த நேரத்தில் நாமெல்லாம் தூய தேசியவாத சிந்தனையுடனேயே செயற்பட ஆரம்பித்தோம்.  எமக்குத் தெரிய சண்முகதாசனின் மாவோயிசக் கட்சி போன்றன தீவிர இடதுசாரிக் கருத்துகளுடன் வெளிவந்திருந்தாலும், தேசியப் பிரச்சனையில் அவர்கள் அக்கறை காட்டவில்லை.  தமிழ் பிரச்சனைகள் பற்றிப் பேசுவதெல்லாம் அண்ணாத்துரை, கருணாநிதி, தமிழரசுக் கட்சி என்பன என்பதே எமக்குத் தெரிந்திருந்தவை” (பக்கம் 8)

 

இங்கே கருணாநிதி, தமிழரசுக்கட்சிகளை ஐயர் சுட்டிக்காட்டியிருப்பது இன்று நகைப்பிற்கு உரிய ஒன்றாகக் கருதப்படலாம் என்றாலும், அவர்களின் அன்றைய காலப்பகுதியிலான பங்களிப்புகளை அவர்களின் பின்னைய அரசியல்களைக் காரணங்காட்டி மறுத்துவிடமுடியாது.  ஈழப்போராட்டத்தின் ஆரம்பகாலப்பகுதியில் அதன் எல்லாப் பலவீனங்களையும் தாண்டி எவ்வாறு தமிழரசுக்கட்சி போன்றவற்றின் செயற்பாடுகள் மிகுந்த ஆதரவாக இருந்தன என்று அண்மையில் “தமிழர்களின் நாடு கடந்த அரசியல்” என்கிற புத்தக வெளியீட்டு விழாவில் செழியனும் குறிப்பிட்டிருந்தார்.

 

தவிர இக்காலப்பகுதி இலங்கையைப் பொறுத்தவரை அரசாங்கம் தமிழர்கள் மீது இன ரீதியிலான ஒடுக்குதல்களை மீகத் தீவிரப்படுத்தியிருந்த, அதே நேரம் இடது சாரிக்கட்சிகள் இனப் பிரச்சனை பற்றிய கரிசனைகளை தமது நிகழ்சி நிரலில் இருந்து அகற்றியிருந்த காலம்.  இந்தச் சூழ்நிலையில் ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்த அன்றைய இளைஞர்களுக்கு ஏற்ற அரசியல் ரீதியான தலைமை அமையவில்லை என்றே கருதவேண்டும்.  புலிகள் இயக்கத்தைப் பொறுத்தவரை பிரபாகரன் அதன் ஆளுமை செலுத்தியவராக இருந்த போதும் அதன் தலைவர் என்று ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுகின்ற போது அவர் உமா மகேஸ்வரனையே பிரேரிப்பதையும் இங்கே அவதானிக்கவேண்டும்.  பிரபாகரனைப் போலவே வலிமையான ராணுவம் ஒன்றைக் கட்டமைக்கவேண்டும் என்ற கருத்துடையவராக இருந்தபோதும் ஏற்கனவே இளைஞர் பேரவையின் செயலாளர் என்ற வகையில் அறியப்பட்டவராகவும், தம்மை விட அதிகம் தொடர்புகளைக் கொண்டிருந்தவரும் உமா மகேஸ்வரன் என்றும், ஏற்கனவே அரசியல் போராட்டங்களில் அவர் தொடர்ந்து ஈடுபட்டுவந்தார் என்றும் ஐயர் குறிப்பிடுவதையும் இங்கே சுட்டிக்காட்டுவது முக்கியமானதாகவே தோன்றுகின்றது.  ஏனெனில் உமா மகேஸ்வரனுக்குப் புலிகள் இயத்துடன் ஏற்பட்ட பிளவே பிரபாகரனை அதிகம் இறுக்கமானவராக்கியது என்று ஐயரும் (பக்கம் 211) குறிப்பிடுகின்றார்.  அது போல பின்னர் புலிகளில் ஜனநாயகத் தன்மை இல்லை என்பதைக் காரணம் காட்டிப் புலிகளில் இருந்து சுந்தரம் போன்றோர் பிரிந்து செல்கின்ற போது அவ்வாறான குற்றச்சாற்றுகள் இயக்கத்தை இரண்டாக உடைக்கும் நோக்குடையவை என்றே பிரபாகரன் மறுக்கின்றார்.  அதன் பின்னரும் சுந்தரம் தலைமையில் சிலர் பிரிந்துசெல்கின்ற போதும் உடனடியாகவே உமா மகேஸ்வரனும் சுந்தரம் போன்றோருடன் இணைந்து கொள்வதுடன் அந்நிகழ்வு பற்றி ஐயர் தொடர்ந்து,

“ஊர்மிளா தொடர்பான பிரச்சனையில் உமா மகேஸ்வரனைக் கொல்வதற்காக அனுப்பப்பட்டவர்களில் சுந்தரமும் ஒருவர்.  அவ்வேளையில் இருந்தே உமா மகேஸ்வரனுடன் சுந்தரத்துக்குத் தொடர்பிருந்திருக்கலாம் என்று எம்மில் பலருக்கிருந்த சந்தேகம்  இப்போது உறுதியானது போலிருந்தது.

சுந்தரத்தின் அனுசரனையோடு சுழிபுரம் பகுதியிலேயே உமா மகேஸ்வரன் தங்கியிருந்ததாகவும் அவர்கள் (இங்கே அவர்கள் என்று ஐயர் குறிப்பிடுவது கண்ணன் மற்றும் சுந்தரத்தை – அருண்மொழிவர்மன்) எமக்குத் தெரிவிக்கின்றனர்” (பக்கம் 210).

இதைத் தொடர்ந்து நடைபெற்ற PLOTE மத்திய குழு விவாதங்களில் புலிகள் இயக்கத்தில் இருந்தது போலவே ராணுவத் தாக்குதல்களை முன்னெடுக்கவேண்டும் என்ற கருத்தை  உமா மகேஸ்வரன், சந்ததியார், சுந்தரம் போன்றோர் முன்வைப்பதுடன் உமா மகேஸ்வரன், சுந்தரம் போன்றோரால் பணத் தேவைகளை நிவர்த்தி செய்ய கொள்ளைகளில் ஈடுபடவேண்டும் என்ற கருத்தும் முன்வைக்கப்படுகின்றது.  தவிர PLOTE இயக்கத்திலும் உமா மகேஸ்வரன், சந்ததியார், சுந்தரம் போன்றோர் அதிகம் செல்வாக்கு செலுத்தியதாகத் தாம் உணைர்ந்ததாகவும் ஐயர் இங்கே பதிவுசெய்கின்றார்.  அதாவது எந்தக் குற்றச்சாற்றுகளை முன்வைத்து புலிகள் இயக்கத்தை விட்டுப் பிரிந்து புளொட் இயக்கம் உருவாக்கப்படுகின்றதோ அதே செயற்திட்டங்களையும், அரசியலையுமே புளொட் இயக்கத்தினரும் தமது மிகத் தொடக்க கால மத்திய குழு விவாதங்களில் இருந்தே முன்னெடுத்தனர் என்பது தெளிவாகின்றது.  தவிர சுந்தரம் முதலானோர் மீதான் தனது சந்தேகம் சரியானதுதான் என்பதில் பிரபாகரன் உறுதியடைந்திருக்கவும் முடியும்.

இவற்றை நான் இங்கே பதிவுசெய்வது புலிகளை முழுக்க பழி நீக்கம் செய்யவேண்டும் என்கிற முனைப்போடு அல்ல.  புலிகள் பற்றிய விமர்சனங்களை முன்வைப்பவர்கள் அவர்களுக்காக நியாயங்களைப் பரிசீலனை செய்வதில்லை என்பதே எனது வாதம்.  இந்தப் புத்தகத்தில் புலிகள் மக்கள் அமைப்புகளை உருவாக்கவில்லை என்பதுவும், அரசியல் ரீதியான போராட்டங்களில் ஈடுபடவில்லை என்பதுவும் இந்தப் புத்தகத்தில் அடிக்கடி சொல்லப்பட்டிருக்கின்றது.  அதே நேரம் 83ல் இருந்த அதே புலிகளை அமைப்பாகவே 2008 வரை இருந்த புலிகள் அமைப்பைப் பார்ப்பது ஏற்புடையதல்ல.  90களிற்குப் பின்னர் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் நிறைய அமைப்புகள் புலிகளால் உருவாக்கப்பட்டிருந்தன.  எத்தனையோ நூலகங்கள், படிப்பகங்கள், மாணவர் அறிவியல் கழகம் போன்ற அமைப்புகள், இது தவிர நிறைய வெளியீடுகள் என்று பல்வேறு தளங்களிலும் அதன் பின்னர் புலிகளின் செயற்பாடுகள் இருந்தன.  Building the Tamil Eelam State: Emerging State Institutions and Forms of Governance in LTTE-controlled Areas in Sri Lanka  என்கிற Kristian Stokke எழுதிய ஆய்வறிக்கையினை இது பற்றிய முக்கியமான பதிவொன்றென்று  குறிப்பிடவிரும்புகின்றேன்.

 

இங்கே எனது கட்டுரையின் நோக்கம் யாரையும் புண்படுத்துவதோ அல்லது புலிகளைப் பாவ நீக்கம் செய்வதோ அல்லது பழியை பிறர் மீது சுமத்திச் செல்வதோ அல்ல.  ஈழத்தில் மிக மோசமாக அடக்கப்பட்டிருக்கின்ற தமிழர்களின் தேசிய உரிமைப் பிரச்சனைகளைத் தொடர்ந்து முன்னெடுக்க, எமது கடந்த கால போராட்டங்களை சுய விமர்சனம் செய்யவும், மறு பரிசீலனை செய்யவும் வேண்டி இருக்கின்றது.  ஆனால் மறு பரிசீலனை என்பது எல்லாத் தவறுகளையும் ஒரு தரப்பில் சுமத்தி விடுவதல்ல.  இன்று பல்வேறு கட்டுரைகளிலும், விவாதங்களிலும் புலிகளை வெறும் பயங்கரவாதிகளாகச் சித்திரிப்பதையும், அடையாள அரசியல் என்ற பெயரால் நிராகரிப்பதையும், பாசிஸ்டுகள் என்று கடந்து போவதையும் அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது.  முதலில் அரச பயங்கரவாதத்தையும் அரசுக்கு எதிராக பயங்கரவாதத்திற்குமான வேறு பாட்டை இவர்கள் உணர்ந்து இது போன்ற வாதங்களை முன்வைக்க வேண்டும்.  பாசிஸ்டுகள் என்று கூறும்போது எதனால் புலிகள் பாசிஸ்டுகள் என்று சொல்கிறோம் என்பதை முன்வைக்க வேண்டும்.  பாசிஸ்டுகள் என்ற வார்த்தையை பொதுவாக தம்மை அடையாளபடுத்துவதை விட தமக்கு எதிரானவர்களை களங்கம் கற்பிக்கவே பிரயோகிக்கின்றனர் என்கிற Samanth Power ன் கூற்றையே இங்கே குறிப்பிடவிரும்புகின்றேன்.  ஒரு விடுதலைப் போராட்ட அமைப்பொன்றினை பாசிஸ்டுகள் என்று குறிப்பிடுவதில் இருக்கின்ற அபத்தத்தை இங்கே வலியுறுத்த விரும்புகின்றேன்.

 

இங்கே என்னுடன் பேச அல்லது கட்டுரை வாசிக்க அழைக்கப்பட்டிருக்கும் மற்றையவர்கள் அனேகம் வெவ்வேறு இயக்கங்களில் பங்கேற்றவர்கள், 90களின் முன்னர் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களை விட்டு வெளியேறியோர். அவர்களின் பார்வையிலிருந்து, 90 களின் பின்னர் புலிகளின் பூரண கட்டுப்பாட்டுப் பகுதிகளிலும் பின்னர் சில காரணம் ராணுவ ஆக்கிரமிப்பின் கீழும் வாழ்ந்த எனது பார்வை நிச்சயம் வேறுபட்டே இருக்கின்ற அதே வேளை, இந்தக் காலப்பகுதியில் புலிகளின் நிர்வாகத்தின் கீழ் காவல்துறை, நீதி மன்றம், அரசியல் துறை, வைப்புழி என்று பல்வேறு நிர்வாக அலகுகளுடன் கூடிய நிகர் அரசாங்கமே நிகழ்ந்தது.  புத்தகம் உள்ளடக்கும் காலப்பகுதியைத் தாண்டி இவற்றை நான் சுட்டிக் காட்டக் காரணம், புலிகள் போராட்டத்தை மக்கள் மயப்படுத்தவில்லை, அரசியலில் அக்கறை காட்டவில்லை என்று இந்தப் புத்தகத்தில் சுட்டிக் காட்டப்படுகின்ற போதும் அதன் பின்னர் தமது பூரண கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் புலிகள் செய்த திறமையான நிர்வாகம் பற்றி ஏதும் சொல்லப்படவில்லை என்பதே.  அதே நேரத்தில் புலிகளில் அரசியல் பிரிவினரைவிட ராணுவப் பிரிவினரே அதிகம் செல்வாக்குச் செலுத்தியவர்களாக இருந்தார்கள் என்பதையும் மறுப்பதற்கில்லை.  அறிவுஜீவிகளுடன் புலிகள் இணைந்து செயற்பட விரும்பவில்லை, அவர்களின் கருத்துக்களை புலிகள் செவிமடுக்கவில்லை என்பதில் ஓரளவு உண்மை இருப்பினும், நாட்டை விட்டு வெளியேறிய அனேக அறிவு சீவிகள் புலிகள் மீதான தமது கசப்புணர்வினை தொடர்ந்து புலிகளை நிராகரிப்பதன் மூலமாகவே வெளிக்காட்டினர்.  மேற்கத்திய சட்டகங்களுக்குள் நின்று புலிகளை மதிப்பிடுவதும், அரச தரப்பு, புலிகள் தரப்பு வன்முறைகள் போன்றவற்றை ஒரே சட்டகத்தில் வைத்து மதிப்பிடுவதுமாகவே அவர்களின் செயற்பாடு அமைந்தது,  அது போலவே புலிகள் தரப்பினை கடுமையாக விமர்சிக்கின்ற இவர்கள் ஒரு போது புலிகள் தரப்பு நியாயங்களை ஏற்றுக்கொள்ளத் தவறியதுடன், அரச தரப்பு தவறுகளில் சில சமயங்களில் கள்ள மௌனம் சாதித்ததுடன், பல சமயங்களில் அது எல்லாருக்கும் தெரிந்ததுதானே எனவே நாம் அது பற்றிக் கூறவேண்டியதில்லை என்றும் விலகிக் கொண்டனர்.  புலிகள் மீதான காழ்ப்புணர்வினால் ஒட்டு மொத்த போராட்டத்திற்கான நியாயங்களையும் நிராகரிப்பதும் எதிர்ப்பதும் முறையாகாது.

 

நான் அறிந்து இதுவரை ஈழப் போராட்டம் பற்றிய பதிவுகளாக புதியதோர் உலகம், முறிந்த பனை,  அடேல் பாலசிங்கத்தின் சுதந்திர வேட்கை, புஷ்பராஜாவின் ஈழப் போராட்டத்தில் எனது சாட்சியம், செழியனின் வானத்தைப் பிளந்த கதை, எல்லாளனின் ஒரு மனிதனின் நாட்குறிப்பு, ஐயரின் ஈழப் போராட்டத்தின் எனது பதிவுகள் புத்தகங்களாக வெளிவந்திருக்கின்றன.  இவற்றிற்கிடையே சில முரண்கள் இருந்தாலும் இவை அனைத்துமே ஈழப்போராட்டத்தில் அக்கறை கொண்டோர் வாசிக்கவேண்டிய புத்தகங்கள் என்றே சொல்வேன்.  இவர்களிலும் இவர்கள் சார்ந்து நின்ற இயக்கங்களிலும் விமர்சனங்கள் இருந்தாலும் தமிழரின் தேசிய விடுதலைப் போராட்டத்தில் இவர்கள் எல்லாருமே களமிறங்கிப் போராடியவர்கள்.  எனவே இவர்களின் அனுபவங்களும் இவர்கள் கூறும் வரலாறுகளும் முக்கியமானவை.

 

அதே நேரம், ஐயர் தொடர்ந்து PLOTE மற்றும் NLFT தொடர்பான தனது அனுபவங்களையும் பதிவாக்கவேண்டும் என்பதையும் ஒரு வேண்டுதலாக முன்வைக்கின்றேன்.  இன்றைய சூழலில் ஈழம் மற்றும் தமிழ்த் தேசியம் தொடர்பான வாசிப்புகளிலும் விவாதங்களிலும் ஈடுபடுவது முக்கியத்துவம் வாய்ந்ததாகவே கருதுகின்றேன்.

 

உதவிய புத்தகங்கள்

  1. ஈழப்போராட்டத்தில் எனது பதிவுகள்: கணேசன், இனியொரு வெளியீடு
  2. மாவீரர் உரைகள், நேர்காணல்கள் – தோழமை பதிப்பகம்
  3. Building the Tamil Eelam State: Emerging State Institutions and Forms of Governance in LTTE-controlled Areas in Sri Lanka –

குறிப்பு: ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் புத்தகத்தில் 1970 தேர்தல் பற்றிக் குறிப்பிடும்போது நவ சமாஜக் கட்சி என்றே குறிப்பிடப்பட்டிருந்தது.  ஆனால் உண்மையில் அன்று கூட்டணி வைத்திருந்தது லங்கா சமசமாஜக் கட்சி.

 

ரொரன்றோவில் பெப்ரவரி 25, 2012ல் நடைபெற்ற ஈழப்போராட்டத்தின் எனது பதிவுகள் என்கிற ஐயர் (கணேசன்) எழுதிய புத்தகத்தின் வெளியீட்டு விழாவில் வாசித்த கட்டுரை

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

Website Powered by WordPress.com.

Up ↑

%d bloggers like this: