தமிழர் உணவுகள் என்கிற பக்தவத்சல பாரதி தொகுத்து காலச்சுவடு பதிப்பாக வெளியான புத்தகத்தைப் பார்த்ததும் உடனே படிப்பதில் ஆர்வம் உண்டானது.

என்னுடன் வேலைத் தளத்தில் பணிபுரிகின்ற ஈரானைச் சேர்ந்த வர்லாறு, வாசிப்பில் அதிகம் அக்கறை கொண்ட நண்பர் ஒருவருடன் மத்தியான சாப்பாட்டு நேரத்திலும் பேசுகையில் எமக்கும் பாரசீகர்களுக்கும் உணவுப் பழக்கங்களில் இருக்கின்ற அனேக ஒற்றுமைகளை அவதானிக்க முடிந்தது.  ஒரு உதாரணத்துக்கு நாம் குத்தரிசிச் சோற்றில் கஞ்சியை வடித்துக் குடிப்பது வழக்கம் (தமிழகத்தில் இவ்வழக்கம் இருக்கின்றதோ தெரியவில்லை).  அனேகம் அக்கஞ்சியுடன் தேங்காய்ப்பாலைக் கலந்து குடிப்பதும் வழக்கம்.  பாரசீகர்களும் இதே போன்றே கஞ்சியுடன் தயிரைக் கலந்து குடிப்பதை வழக்கமாக வைத்துள்ளனர்.

தவிர, புலம்பெயர் நாடுகளில் தமிழர்களின் உணவுகளில் நாம் உணவில் சேர்த்துக்கொள்ளுகின்ற செத்தல் மிளகாய்  காரம் அதிகம் பிற நாட்டவர்களுக்கு கலக்கம் தரவல்லது.  தமிழர்களின் உணவென்றாலே செத்தல் மிளகாய் காரந்தான் நிறையப் பேருக்கு நினைவுக்கு வரும்.  ஆனால் ஒப்பீட்டளவில் செத்தல் மிளகாயை உணவில் சேர்த்துக்கொள்ளுகின்ற வழக்கம் எமக்கு மிக அண்மைக்காலத்திலேயே ஏற்பட்டது.

இது போன்ற விடயங்களை “பண்பாட்டு மானிடவியலாளரான” பக்தவத்சல பாரதி தொகுத்த இந்தப் புத்தகத்தில் காணலாம் என்ற ஆர்வமே புத்தகத்தை வாசிக்கத் தூண்டியது.  காலையிலும் மாலையிலுமாக வீடு –> வேலை, வேலை — > வீடு வரையான பயண நேரங்களில் வாசிக்கவும் அதிகம் ஆழமான் வாசிப்புத் தேவைபப்டாத புத்தகமாக அதனைத் தேர்ந்து வாசிகக்த் தொடங்கினேன்.  என் போதாத காலம், புத்தகம் நான் எதிர்பார்த்த விதத்தில் இருக்காததுடன் (நான் எதிர்பார்த்தது போல புத்தகம் இருக்க வேண்டும் என்பதோ அப்படி இருக்காதது பெருங்குற்றம் என்றோ இதை விளங்கிக் கொள்ளவேண்டாம்) மிகுந்த வெறுப்புணர்வுடனும் குரூரமான கேலியுடனும் எழுதப்பட்ட மோசமான கட்டுரை ஒன்றை வாசித்துத் தொலைக்கவேண்டியும் ஏற்பட்டுவிட்டது.  கட்டுரையின் தலைப்பு புலம்பெயர்ந்தோர் சமையல்.  நாம் பெற்ற இன்பம் பெறுக என்று கட்டுரையை கீழே இணைத்துள்ளேன்.  அண்மைக்காலமாக கருத்துச் சுதந்திரம், ஊடக சுதந்திரம் என்று கூறிக்கொண்டு காலச்சுவடிற்கு வக்காலத்து வாங்குவோர் இது போன்ற காலச்சுவடின் குரூரமான முகத்தினையும் கண்டுணர வேண்டும் என்பது என் வேண்டுகோள்.