##நாம் தமிழர் ஆவணத்தை ஒருவாறாக இன்று வாசிக்கக் கிட்டியது. ஆவணத்தில் திராவிடர்கள் யாரென்பது தொடர்பாகக் கூறப்பட்டிருக்கின்ற கருத்துக்களிலும், தமிழ்நாட்டில் நிலவுகின்ற முகாமையான முரண்பாடுகள் என்று பட்டியலிடப்பட்டுள்ள 10 முரண்பாடுகளில் முகமதியர்கள், கிறீஸ்தவர்கள் தொடர்பாக எச்சரிக்கையோடும், விழிப்போடும், அன்போடும் கையாளப்படவேண்டிய தரப்பினர் என்று குறிப்பிடப்பட்டிருப்பதிலும் உடன்பாடு இல்லை. முகமதியர்கள், கிறீஸ்தவர்கள் தொடர்பான இந்தப் பார்வை முழுக்கத் தவறானதும் கூட. (இந்த முரண்பாட்டுப் பட்டியலில் எனக்கு உடன்பாடில்லாத வேறு முரண்பாடுகளுன் இருந்தாலும், முக்கியத்துவம் கருதி இங்கே இதனைச் சுட்டிக்காட்டுகின்றேன்.)
##அது போல சில இடங்களில் திராவிடத் தேசியம் எதிர் தமிழ்த் தேசியம் என்று குறிப்பிடப்படுகின்றது. திராவிடத்தினை தேசியம் என்று எந்த இடத்திலும் குறிப்பிடாத பெரியாரின் தெளிவு இன்னமும் இவர்களுக்கு வரவில்லை என்பது ஏமாற்றமே..
##நாம் தமிழர் கட்சியினர் சொல்வதுபோல ஆவணத்தில் எந்த இடத்திலும் நேரடியாக பெரியார் மீதான குற்றச்சாற்றுகளை முன்வைக்கவில்லை என்றபோதும் “திராவிடம் சொன்னது”. ” திராவிடம் சொன்னது” என்று அவர்கள் பட்டியலிடும் குற்றச்சாற்றுகள் பல பெரியாரையே குறிவைக்கின்றன என்பதை இலகுவில் புரிந்துகொள்ளமுடிகின்றது. ஆனால் ஆவணத்தில் குறிப்புடப்பட்டுள்ளது போன்று சிங்களத்தை திராவிட இனம் என்று எப்போது சொன்னார்கள் என்பது எனக்குத் தெரியவில்லை. எனது நினைவில் அவ்வாறு கூறப்பட்டதாகத் தெரியவில்லை. இதனைத் தெளிவுபடுத்தவேண்டியது நாம் தமிழர் கட்சியினர் அல்லது ஆதரவாளார்களின் பொறுப்பு.
## பக்கம் 42ல் தமிழ்த்தேசிய வழிகாட்டிகள் என்று பட்டியலிடப்பட்டுள்ளவர்களின் பெயர்களில் இராச இராச சோழன், இராசேந்திர சோழன், பாரதிதாசன் போன்றோரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. இராச இராச சோழன், இராசேந்திர சோழன் பற்றி no comments. அடுத்து ஆவணத்திலும், நாம் தமிழர் கட்சியினர் இணையத்திலும் முன்வைக்கின்ற பாரதிதாசனின் வைத்திருந்த சுய சாதிப்பற்றுப் பற்றி நாம் தமிழர் கட்சியினர் எந்த விமர்சனமும் இல்லாமல் இருக்கின்றனரோ என்றே தோன்றுகின்றது.
##அடுத்து திராவிடர் என்கிற பெரியாரின் கருத்துக்களுக்கும், பின்னாட்களில் திராவிடக் கட்சிகள் என்ற பெயரில் தமிழகத்தில் உருவாக அரசியல் கட்சிகளிற்கும் இருக்கின்ற பாரிய வித்தியாசத்தப் புரிந்துகொள்ளவேண்டும்.
##அடுத்து விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனது பெயரினை பெரும்பாகரன் என்று தூயதமிழ்ப்படுத்தி இருக்கின்றார்கள். இது போன்ற கோமாளித்தனங்களை உடனே நிறுத்தவேண்டும். (இவர்களின் தமிழ்ப்படுத்தலுக்கு இன்னமும் சில உதாரணங்கள் இராச ராசன் à அரசர்க்கரசன், இராசீவ் காந்தி à அரசீவ் காந்தி
ஒரு கட்சியின் முதன்மை ஆவணம் இத்தனை தவறுகளுடனும், தவிர்த்திருக்கவேண்டிய கருத்துக்களுடனும் வெளியாகி இருப்பது மிகுந்த ஏமாற்றத்தையளிக்கின்றது என்றே சொல்லவேண்டும். இந்த ஆவண ஆக்கக் குழுவில் இருந்தவர்கள் தம்மைநோக்கி முன்வைக்கப்பட்டிருக்கின்ற குற்றச்சாற்றுகளைக் கவனித்து, ஆராய்ந்து தேவையான திருத்தங்களை உடனடியாகச் செய்யவும், அவற்றை நடைமுறைப்படுத்தவும் முன்வரவேண்டும் என்பதே என் அவா. மேலும், பெரியார் தொடர்பாக தொடர்ச்சியாகக் குற்றச்சாற்றுகளை முன்வைக்கின்றபோது பெரியாரை ஒருமுறை முழுமையாகப் படித்துவிடுவது நலம். அண்மையில் கீற்று இணையத்தளத்திற்கு வழங்கிய நேர்காணலில் தொ.பரமசிவன் கூறிய “பெரியாரை யார் எதிர்க்கின்றார்கள் என்று பார்த்தால் பெரியாரின் வெற்றி புலப்படும்” என்ற கருத்து அத்தனை இலகுவாகத் தாண்டிச் செல்லக்கூடியதல்ல.
ஆவணத்தை மீள ஒருமுறை வாசித்துவிட்டு விரிவாக எழுதும் எண்ணம் உண்டு
(நாம் தமிழர் கட்சி தொடர்பாக எனக்கு ஆரம்பம் முதலே விமர்சனங்கள் இருக்கின்றபோதும் சில புள்ளிகளில் உடன்பாடும் இருந்தே இருக்கின்றன. இன்று நாம் தமிழர் ஆவணத்தில் சொல்லப்படுகின்ற கருத்துக்களை வைத்து அவர்களை திமுகக் காரர்களும், மாற்றுக் கருத்தாளர்களும் மிக உற்சாகமாக எதிர்ப்பதைக் காணமுடிகின்றது. அந்த வகையில் பாராது நாம் தமிழர் மீது அக்கறை கொண்டவனாகவே எனது கருத்துக்களை இங்கே பகிர்ந்துகொள்ளுகின்றேன்.)
தொடர்புள்ள இன்னுமொரு முக்கிய பதிவு
உயிரோட்டமுள்ள எழுத்து.
இன்றைக்குத் தான் வழி தவறி உங்கள் வலையில் விழுந்தேன். எழ மனம் வரவில்லை.
LikeLike