Capture.PNGசென்ற கோடைகாலத்தின் தொடக்கத்தில் ஸ்ரீஸ்கந்தன் அவர்களுடன் பேசிக்கொண்டிருந்தபோது பல்வேறு சஞ்சிகைகளிலும், இதழ்களிலும் தொடர்ச்சியாக தான் எழுதிய கட்டுரைகளில் இருந்து தேர்ந்தெடுத்த சில கட்டுரைகளை  அரியாலையூர் நாடகக் கலைஞர்கள் பற்றிய ஒரு தொகுப்பாகவும், தனது அனுபவங்களை, நினைவுப்பதிவுகளை, அவரே சொன்ன வார்த்தையையில் குறிப்பிட்டால் முசுப்பாத்திகளை ஒரு தொகுப்பாகவும் ஆக இரண்டு புத்தகங்களாக்கும் எண்ணம் இருப்பதாகவும் கூறினார்.  அடடே, நல்ல விஷயம் தானே.  அது முக்கியமானதும் கூட என்று எனது ஆர்வத்தை வெளிப்படுத்தி இருந்தேன்.  நினைவுப்பதிவுகளாகவும், அனுபவப் பகிர்வுகளாகவும், நனவிடை தோய்தல்களாகவும் எழுதப்படும் எழுத்துக்கள் இலக்கியமாகுமா என்கின்ற விமர்சனங்களும், விவாதங்களும் நடப்பதை பலவிடங்களிலும் அவதானித்திருக்கின்றேன்.  ஆனால் அண்மைக்காலமாக சமூகவியல், சமூக வரலாற்றியல் என்பவற்றில் அக்கறை காட்டி அவற்றையே எனது முதன்மையான வாசிப்புப் பரப்பாகக் கருதுபவன் என்ற வகையில் இது போன்ற பதிவுகள் சமூக வரலாற்று ஆசிரியர்களுக்கான முக்கிய ஆவணங்களாகப் பயன்தரத்தக்கவை என்ற வகையில் மிகவும் முக்கியம் வாய்ந்தன என்றே கருதுகின்றேன்.

இத்தகைய எழுத்துக்களுக்கு நல்லதோர் உதாரணமாக ஈழத்துச் சூழலில் இருந்து வெளிவந்த இரண்டு நூல்களை சுட்டிக்காட்டுவது இன்னும் பொருத்தமாகவிருக்கும் என்று கருதுகின்றேன்.  எஸ் பொ எழுதிய நனவிடை தோய்தல் என்கிற நூலை அனைவரும் அறிந்திருப்பீர்கள்.  60 ஆண்டுகளுக்கு முன்னைய யாழ்ப்பாணத்து மக்களின் வாழ்க்கை முறையை மிக மிக அழுத்தமாகவும் உணர்வுபூர்வமாகவும், அதே நேரம் வீண் அலங்காரங்களைத் தவிர்த்தும் பதிவு செய்யப்பட்டிருக்கும் ஒரு ஆவணப்பதிவாக இந்தப் புத்தகம் இருக்கின்றது.  உதாரணத்துக்கு நண்பர்கள் பலரிடம் தனிப்பட்ட உரையாடல்களில் பகிர்ந்துகொண்ட, இந்நூலில் இருக்கின்ற ஒரு சிறிய பகிர்வை எஸ்பொவின் எழுத்துக்களிலேயே தருகின்றேன்

பின்னர், ஐந்து சத நோட்டுக்களும் பாவனைக்கு வந்தன.  இது புதினமான நோட்டு.  ஒரே தாளில் இடப்பக்கம் இரண்டு சத முத்திரை போலவும் வலப்பக்கம் மூன்று சத முத்திரை போலவும் அச்சிடப்பட்டிருந்தன.  தேவை கருதி அந்தத் தாளை இரண்டு முத்திரைகளாகக் கிழித்து, இரண்டு சதமாகவும் மூன்று சதமாகவும் பாவித்துக் கொள்ளலாம்.  மூன்று சய இரண்டு சமன் ஒன்று என்கிற வாய்ப்பாட்டில் ஒரு சதக் கணக்கும் சரி செய்யப்பட்டது ” 

இந்தப் புத்தகத்தைப் படிக்கும்வரை இப்படியான ஐந்து சத நோட்டுக்கள் புழக்கத்தில் இருந்தன என்பதையே நான் அறிந்திருக்கவில்லை.  பலரிடம் இதுபற்றிப் பகிர்ந்திருந்தபோதும் எவருமே இதுபற்றிய விபரங்கள் வேறேதாவது ஆவணங்களில் இருக்கின்றனவா என்று பகிர்ந்துகொள்ளவும் இல்லை. எனவே, வரலாற்று சமூகவியல், பண்பாட்டு வரலாற்றியல் என்பன பற்றிய அக்கறை உள்ளவனுக்கு இந்நூல் ஒரு முக்கிய ஆவணமாகின்றது.

அது போலவே வரதர் எழுதிய “மலரும் நினைவுகள்: 1930-40 களில் யாழ்ப்பாண மக்களின் வாழ்வியல்” என்கிற நூல் பற்றியும் குறிப்பிடவேண்டியிருக்கின்றது.  இந்நூல் வரதரின் சிறுவயதில் நடந்த விடயங்களையும், தனது ஊர் பற்றியும், மக்களின் வாழ்வியல் பற்றியும் மல்லிகையில் எழுதிய தொடர் கட்டுரைகளின் தொகுப்பாகும்.  இக்கட்டுரைகளில் பொன்னாலை ஊர் பற்றியும், அவ்வூர் 1930 களில் புன்னாலை என்றே வழங்குப்பட்டுவந்ததாகவும், பொன்னாலை வரதராஜர் கோவிலுக்கு ஏதோவொரு காலத்தில் பிரம்மாண்டமான கட்டிடங்களும், ஏழு வீதிகளும் இருந்ததாகவும், ஒல்லாந்தர் காலத்தில் இக்கட்டிடங்கள் இடிக்கப்பட்டு அக்கற்கள் சங்கானை வரை மக்களை சங்கிலித் தொடராக நிறுத்திவைத்து காவ வைக்கப்பட்டதாகவும் குறிப்பிடுகின்றார்.  அதுபோலவே,

“எனக்குத் தெரிய தேயிலையும் சீனியும் இலவசமாகக் கொடுத்து ஒரு பொது இடத்தில் தேநீர் தயாரித்து வீட்டுக்கு வீடு இலவசமாகத் தேநீர் கொடுத்துப் பழக்கினார்கள்.  தேயிலைப் பிரசாரச் சபையின் வேலையாய் இருந்திருக்கும்.  அதன் பயன் ? இன்றைக்குக் காலையில் எழுந்தவுடன் தேநீர் கொடுக்காவிட்டால் ஏதோ வாழ்க்கையே நாசமாகிவிட்டது போன்ற மனப்பான்மை வந்துவிடுகின்றது.”(பக்கம் 111) 

வரதரின் மலரும் நினைவுகள் நூலில் இவ்வாறான பதிவுகள் முக்கியமானவையாக அமைந்துவிடுகின்றன.

இது போன்ற அறியப்படாத, பகிரப்படாத எத்தனையோ விடயங்களைப் பகிர்ந்துகொள்வதற்கு நினைவுப்பதிவுகள் / அனுபவப் பகிர்வுகளே மிகப் பொருத்தமான வடிவம் என்றே நான் கருதுகின்றேன்.  எனது அவதானிப்பில் 90 – 95ல் இடம்பெற்ற பாரிய இடப்பெயர்வு உள்ளிட்ட விடயங்களில் இவ்வாறு பதியப்படாத எத்தனையோ விடயங்கள் எஞ்சி இருக்கின்றன.  96 இடப்பெயர்வின்போதும் சாதியமும், மேட்டிமைத்தனமும் எவ்விதம் வெளிப்பட்டன என்பதை சயந்தன் பதிவுசெய்திருக்கின்றார். அக்காலப்பகுதிகளில் பாடல் கேட்பதற்கான நாம் எத்தனை பாடுபட்டோம் என்பதை கானா. பிரபா பலதடவைகள் பதிவுசெய்துள்ளார்.   டைனமோ சுற்றிப் பாட்டுக்கேட்பது பற்றி த. அகிலன் “ஜேசுதாஸ் ஏன் அழுதார்” என்று நல்லதோர் பதிவு எழுதி இருந்தார்.  அந்த நாட்களில் எமக்கான மிகப்பெரிய பொழுதுபோக்குச் சாதனமாக இருந்த வானொலி பற்றியும், வானொலிச் சேவைகள் பற்றியும் கதியால் என்கிற பெயரில் எழுதிய விசாகன் என்கிற பதிவர் வானொலியே வரம் என்கிற பதிவை எழுதி இருந்தார்.  90களில் யாழ்ப்பாணத்து வாழ்வியலை, சமூக பண்பாட்டு வரலாற்றை எழுதவோ அறியவோ முனையும் ஒருவருக்கு மிக முக்கியமான ஆவணங்களாக இவையெல்லாம் அமையும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

அதுபோலவே, ஶ்ரீஸ்கந்தன் எழுதிய மனசுலாவிய வானம் நூலில் இருக்கின்ற பல்வேறு கட்டுரைகளிலும் அரியாலை என்கிற கிராமத்தின் சமூக, பண்பாட்டு வாழ்வியல் பற்றிய பல்வேறு தகவல்கள் ஆவணப்படுத்தப்பட்டிருகின்றன.  அத்துடன் தமிழாராய்ச்சி மாநாடு, 83ம் ஆண்டு ஆடிக்கலவரம் போன்றவை தொடர்பான அவரது அனுபவங்கள் ஒரு சாமானியனின் பார்வையில் நின்று பகிரப்பட்டிருக்கின்றன.  அவரது புலம்பெயர் வாழ்வு மற்றும் பயணங்களின் வழியாக சிறுவயதில் அறிமுகமாகித் தொடர்புகள் இல்லாமல் இருந்தவர்களை நீண்டகாலத்தின் பின்னர் சந்திக்கின்றபோது ஏற்படுகின்ற உணர்வுகள், எதிர்பார்ப்புகளும் ஏமாற்றங்களும், விழுமியங்களின் வீழ்ச்சி போன்றவற்றை வாசகர்களிடம் அணுக்கமாகப் பகிர்ந்துசெல்கின்றார்.  அதற்கு ஈடுகொடுக்கின்றது அவருக்கு இயல்பாகவே வருகின்ற நகைச்சுவை கலந்த எழுத்துநடை.

பெரும்பாலான இளஞர்களைப்போலவே அவரும் நண்பர்களுடன் மிகவும் நெருக்கமாகப் பழகியிருக்கின்றார்,  கல்லடி நினைவுகள், சிற்றம்பலம் டீம் போன்ற பகிர்வுகள் முறையே அரியாலையில் மாலை நேரங்களில் விளையாட்டுக் கழகங்களாக நண்பர்களுடன் காலம் கழிக்கின்ற காலப்பகுதியின் நினைவுகளையும், கல்லடி நினைவுகள் குடும்பத்தை விட்டுத் தனியாகக் கொழும்புசென்று தன்னை நிலைநிறுத்திக் கொள்வதற்கான பொருளாதார, சமூகக் காரணங்களை எதிர்கொண்டு பின்பு அவற்றை மீறித் தன்னை நிலைநிறுத்திக்கொண்டகாலங்களில் உருவாக்கிக் கொண்ட நட்பு வட்டாரத்தைப் பற்றிய நினைவுமீட்டல்களாவும் அமைந்திருக்கின்றன.  கல்லடி நினைவுகள் என்பதன் தொடர்ச்சியாக அமையக்கூடிய, ஆனால் இந்தப் புத்தகத்தில் கல்லடி நினைவுகளிற்கு முன்னதாகவே தொகுக்கப்பட்டுள்ள கட்டுரை 83 ஆடிக்கலவர நினைவு.  ஆடிக்கலவரம் நடைபெற்றபோது நாமும் கொழும்பிலேயே வசித்துவந்தோம்.  அப்போது நான் மிகவும் சிறியவனாக இருந்தேன்.  எனினும் எனது குடும்பத்தினர் பெரிதும்ஆடிக்கலவரத்தின்போது கொழும்பிலேயே வசித்து வந்தார்கள் என்பதால் ஆடிக்கலவரம் பற்றியும் அப்பாவும், அம்மாவும் பல சமயங்களில் எமது நெருங்கிய உறவுகளும் பேச நான் கேட்டுக்கொண்டிருந்திருக்கின்றேன்.  அதே நினைவுகளை மீளவும் மீட்டியிருக்கின்றன சிறீஸ்கந்தனின் ஆடிக்கலவரம் பற்றிய குறிப்புகள்.

அதுபோல சிற்றம்பலம் டீம் என்கிற கதையில் சிறீஸ்கந்தனின் காலத்தில்  பாழடைந்து போய் இருந்த சிற்றம்பலம் என்பவரின் வீட்டின் வரலாறு சொல்லப்படுகின்றது.  அந்த வரலாற்றின் ஊடாக அவ்வக் காலப்பகுதியில் இடம்பெற்ற அரசியல் மாற்றங்களும் பேசப்படுகின்றன.

 

“இந்த வீட்டின் சொந்தக்காரர் யார் என்பதை அறிய நல்லூர் ராஜதானி இருந்த காலத்துக்குச் செல்லவேண்டியுள்ளது.  நல்லூர் ராஜதானியில் பெரும் பதவி வகித்த கனசேகர கோதண்ட வம்சத்தின் வழிவந்த விநாயகர் என்பவருக்கு விஸ்வநாதர் என்பவர் மகனாக அரியாலையில் பிறந்தார். ”

என்று தொடங்குகின்ற இக்கட்டுரை, 1840 களில் இருந்து இந்த வீட்டின் உரிமை பரம்பரை பரம்பரை வழியாக உரித்து மாறிச் செல்லுகின்றபோது அவ்வாறு உரித்துப் பெற்றவர்களின் அரசியல் பங்களிப்பைச் சொல்லும்போதே அக்கால அரசியல் மாற்றங்கள் பற்றியும் சுருக்கமாகக் கடந்து செல்லுகின்றார்.  1840 களில் இருந்து விளக்கமாக இவர் சொல்லத்தொடங்கிய இவ்வரலாற்றில் ஶ்ரீஸ்கந்தனின் காலத்தில் வீட்டின் உரிமையாளாராக இருந்த சிற்றம்பலம் அவர்களையும் தாண்டி, அவரது பேரனும், மிக இளவயதில் இலண்டன் பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகி கின்னஸ் சாதணை படைத்த கணேஷ் சிற்றம்பலம் வரையிலான அவ்வீட்டின் வரலாறும், நாட்டின் அரசியல் மாறுதல்களும் சுருக்கமாகப் பதிவுசெய்யப்படுகின்றன.  இவ் அத்தியாயத்தின் இறுதியில் சிறீஸ்கந்தன் கூறுகின்றார்,

“வரலாற்றை அறியமுடிவதும், வரலாற்றுத் தடங்களைப் பாதுகாப்பதும் போன்ற விடயங்களில் எங்களுக்கு அப்போது அக்கறை இருக்கவில்லை.  ஒரு நாள் அந்த வீட்டின் பூட்டிய அறையை உடைத்த எங்களூர் சில்லறைத் திருடன் பெருமைக்குரிய புகைப்படங்களைக் கிழித்து எறிந்துவிட்டு அதன் கண்ணாடியைக் காசாக்கினார்

புத்தகங்களின் பக்கங்கள் கிழிக்கப்பட்டுக் கச்சான் சுருள்களாக மாறின.  பல நிறைக்கு விற்கப்பட்டன. 

வீட்டின் சுவர்களும் அத்திவாரங்களும் தகர்க்கப்பட்டு கற்கள் களவாடப்பட்டன.  நாங்கள் குந்தியிருந்து அரட்டையடித்த மரக்குற்றியைக்கூட யாரோ எரிப்பதற்கு எடுத்துச் சென்றுவிட்டனர்

இறுதியாக அந்தக்க்காணி நாலு கூறுகளாகப் பிரிக்கப்பட்டு விற்கப்பட்டது.  அந்த மண்ணைக் கூடப் பார்க்கமுடியாமல் ஆளுயரத்துக்கு வேலி அடைத்தனர் வாங்கியவர்கள்.

எங்கள் நினைவுகளைச் சுமந்து நின்ற சிற்றம்பலம் டீம் இருந்ததற்கான அல்லது புகழ்மிக்க பரம்பரை வாழ்ந்ததற்கான எந்தத் தடயங்களும் இன்று அங்கு இல்லை“

இங்கே ஆசிரியர் கூறுகின்ற சிற்றம்பலம் குடும்பத்தினர் சாமானியர்களும் அல்லர், அவர்களின் வரலாறே அரியாலையின் ஒட்டு மொத்த வரலாறும் அல்லவென்றாலும் நவீனத்துவம் என்ற பெயரில் எமது வரலாற்றையும் வாழ்வியலையும், பண்பாட்டையும் அடையாளங்களையும் எத்தனை வேகமாக இழந்தும் அழித்தும் வருகின்றோம் என்று யோசிக்கவைத்தது இந்தக் பதிவு.

இந்த இடத்தில் முக்கியமான இன்னுமொரு விடயத்தையும் பகிர்ந்துக்கொள்ள விரும்புகின்றேன்.  எனது சொந்த ஊரில் இருக்கின்ற பாடசாலை ஓன்றிற்கு 125 வருட நிறைவை ஒட்டிய மலர் ஒன்றினைத் தயாரிக்கின்றார்கள்.  கிராமம் ஒன்றில் இருக்கின்ற அந்தப் பாடசாலையோ 1883-1885 க்கு இடைப்பட்ட காலப்பகுதியில் கட்டப்பட்டிருக்கின்றது.  அந்த வகையில் யாழ்ப்பாணத்தில் கட்டப்பட்ட ஆரம்பகால சுதேச பாடசாலைகளுல் ஒன்றாக அது இருக்கவேண்டும்.  எனவே அதற்கான வரலாற்றுக் காரணங்களும் இருக்கவேண்டும்.  அனேகம் நாவலர் வழி வந்த சைவப் பாடசாலையாகவோ / சைவத்தமிழ் பாடசாலையாகவோ இருந்திருக்கவேண்டும் என்பது எனது ஊகம்.  இடையில் 1905 அளவில் தீமூட்டி எரிக்கப்பட்டிருக்கின்றது. இவை பற்றிய விபரங்களை அறிந்தவர்கள் அந்தப் பாடசாலை நிறுவனர் குடும்பத்திலோ அல்லது ஊரிலோ இல்லை.  சிற்றம்பலம் வீடு பற்றி எழுதிய ஶ்ரீஸ்கந்தன் போல இன்னொருவர் வந்துதான் அந்தப் பாடசாலையின் வரலாற்றையும் எழுதவேண்டும்.

அரியாலை என்கிற கிராமத்தில் நடைபெற்ற கோவில் திருவிழாக்கள் பற்றியும் அவற்றை ஒட்டிய சடங்குகள் பற்றியும் பல இடங்களிலும் பதிவுசெய்யப்பட்டுள்ளன.  இன்றைய அரியாலையிலோ / யாழ்ப்பாணத்திலோ இத்தகைய சூழலை எதிர்பார்க்கவே முடியாது.  ஒரு காலத்தில் மக்களின் மிகப் பெரிய பண்பாட்டு மையங்களாகவும், பொழுதுபோக்கு மையைங்களாகவும் ஆலயங்களே திகழ்ந்தன.  கிட்டடத்தட்ட 95 வரையும் அவ்வாறே யாழ்ப்பாணது நிலைமை இருந்தது.  ஆனால் பெரிய கோவில்கள் என்று சொல்லக்கூடிய சிலவற்றைத் தவிர்த்து ஏனையவற்றில் வாகனம் தூக்குவதற்குக் கூட ஆட்கள் இல்லாமை கைப்பேசியில் அழைத்து வாகனம் காவக் கேட்கின்ற நிலையே இன்று இருக்கின்றது.  இதனை சென்றமுறை யாழ்ப்பாணம் சென்றிருந்தபோது நேரடியாகவே அவதானித்திருந்தேன்.  ஆனால் ஸ்ரீஸ்கந்தன் பதிவுசெய்திருக்கும் 80 களுக்கு முந்தைய அரியாலை வித்தியாசமானது.  வேட்டைத் திருவிழா, சின்னமேளம், சுவாமி தேரை விட்டு இறங்குவதற்கு இடையிலான காலத்தில் இடம்பெறும் நல்லை ஆதீன சுவாமிநாதத் தம்பிரான் சுவாமிகளின் பிரசங்கங்கள், தினகரன் விழா, சந்திரபோஸ் என்பவர் நடத்திய காணிவல்கள்,  பொப்பிசைப் பாடல்களின் அறிமுகம் என்று எழுபதுகள் பற்றிய குறுக்குவெட்டுமுகத் தோற்றத்தைத் தருகின்றார்.  இவற்றையெல்லாம் எழுதும்போது இவற்றுக்குப் பிண்ணனியில் இருந்த அறியப்பட்டிராத கலைஞர்கள் பற்றி விவரிக்கின்றார் ஸ்ரீஸ்கந்தன்,  உதாரணமாக, பாட மறந்த பாடல்கள் என்கிற பாடல் என்கிற கட்டுரையில் பொப்பிசைக் கலைஞர்கள் நித்தி கனகரட்ணம், குமார் கனகரட்ணம், எஸ் ராமச்சந்திரன், டேவிற் ராஜேந்திரன், ஏ ஈ மனோகரன், விபுலாநந்தமூர்த்தி, அப்புக்குட்டி ராஜகோபால், அமுதன் அண்ணாமலை, இசையமைப்பாளர் கண்ணன், ஸ்ரனிஸ் சிவானந்தன், இமானுவல், கனகாம்பாள் சதாசிவம், பரமேஸ்-கோணேஸ், அக்காலத்தில் இலங்கை வானொலியில் உருவாகிய இசைக்கலைஞர்கள், அறிவிப்பாளர்கள் என்று பலரது அறிமுகம் இக்கட்டுரையில் கிடைக்கின்றது.  இசைத்துறையிலோ அல்லது ஆவணப்படுத்தல்களிலோ அக்கறை உள்ள எவராவது இவ்வாறு ஈழத்தில் உருவான பொப்பிசைப்பாடல்கள் அனைத்தையும் முறையாக ஆவணப்படுத்த வேண்டும்.  ஈழத்தில் ஒவ்வொரு ஊரிலும் வாழ்ந்த கலைஞர்கள் ஆவணப்படுத்தப்படவேண்டும் என்பதன் அடுத்த கட்ட வெளிப்பாடாக ஶ்ரீஸ்கந்தனின் “அரியாலையூர் நாடக ஆளுமைகள்” நூலைக் குறிப்பிடலாம்.

நாடகங்கள் மீது பெரும் ஈடுபாடு அற்றவன் என்பதாலும், சொல்லிக்கொள்ளும் அளவுக்கு நாடகங்களைப் பார்த்திராதவன் என்ற வகையில் இந்த நூலின் முக்கியத்துவத்தை என்னால் ஆவணப்படுத்தல் சார்ந்தே அணுக முடிகின்றது.  கனடாவில் இருக்கின்ற தமிழர்கள் மத்தியில் இருக்கின்ற மிகப் பெரிய சமூக நிறுவனங்களான ஊர்ச்சங்கங்கள் தமது முதன்மையான செயற்திட்டங்களாகத் தத்தம் ஊர்களை ஆவணப்படுத்துவதையும், தமது ஊர்களுக்கு அருகாமையில் உள்ள சிறிய ஊர்களை அல்லது பொருளாதார பக்கபலம் குறைந்த ஊர்களை ஆவணப்படுத்துவதற்கு உதவுவதையும் கொள்ளவேண்டும் என்பதை நான் தொடர்ச்சியாக வலியுறுத்திவருகின்றேன்.  அரியாலையூர் நாடக ஆளுமைகள் நூலின் ஆசிரியர் உரையில் ஶ்ரீஸ்கந்தன் பின்வருமாறு எழுதுகின்றார்,

அரியாலை நாடகக் கலைஞர்களின் முழுமையான வரலாறை எவராலும் எழுதமுடியாது.  ஏனெனில் எனது ஊரில் ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொரு நாடகக்கலைஞன் இருப்பான்.  ஆதலால் இந்நூலில் நிறையப் பெயர்கள் விடுபடுவதற்குச் சாத்தியம் உண்டு.  ஆயினும் அரியாலையூர் நாடக வரலாற்றின் ஒரு பகுதியை இந்நூல் சொல்லும்.  அந்த வகையில் எனது ஊரின் வரலாற்றின் ஒரு பகுதியை முதன் முதலாக நூலுருவில் வெளிக்கொணர்வதில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி”

 

முழுமையான வரலாற்றை எழுதுவது ஒருபோதும் சாத்தியமாகாது.  முழுமையான வரலாற்றை எழுதுவதற்கான முயற்சிகளுக்கு ஆவணப்படுத்தல்கள் துணையாகும்.  இங்கே நாடகத் துறையக் குறிப்பிட்டு எல்லா நாடகக்கலைஞர்களும் ஆவணப்படுத்தவில்லை என்று குறிப்பிட்டிருப்பதைப் போன்றே, சமூக வரலாற்றில் ஒவ்வொரு தனி மனிதனும் ஆவணப்படுத்தப்படவேண்டியவனே.  ஒவ்வொரு நிகழ்வும் ஆவணப்படுத்தப்படவேண்டியதே.  முழுமையான ஆவணப்படுத்தல் என்கிற நோக்கிலான ஶ்ரீஸ்கந்தனின் முயற்சி அவரது இளவயதிலேயே ஆரம்பித்திருக்கின்றது.  இதனை,

“அந்த வகையில் நாடகக் கலைக்குப் பெயர்போன எமது ஊரின் நாடக வரலாற்றுக் குறிப்புகளைப் பதிவாக்கும் முயற்சியில் நானும் உருத்தி அண்ணையும் ஈடுபட்டோம்.  1978-ம் ஆண்டும் எமது பழம்பெரும் நாடகக் கலைஞர்களைச் சந்தித்துப் பல அரிய தகவல்களைச் சேகரித்தோம்.  இ. சுப்பிரமணியம், சி. பொன்னையா, ம. இராமநாதன், சி. குலத்தங்கம்……………. போன்ற கலைஞர்களைச் சந்தித்து உரையாடியது எங்கள் வாழ்வில் மறக்கமுடியாத சுகந்தமான அனுபவம்.”

 

என்று தனது உரையிலும் அவர் குறிப்பிட்டிருக்கின்றார்.  இது போன்ற முயற்சிகளும் அர்ப்பணிப்புமே ஶ்ரீஸ்கந்தன் மீதான எனது மதிப்பை உயர்த்தி நிற்கின்றன.  இந்தக் கட்டுரகளில் நான் பெரிதும் மகிழ்ந்தது தனது பதிவுகளில் அறியப்படவர்களை மாத்திரம் அல்லாமல் நாடகங்களில் பின்னணிக் கலைஞர்களையும், அவர்களது உழைப்பையும் தனது ஒவ்வொரு கட்டுரையிலும் சரியான முறையில் ஶ்ரீஸ்கந்தன் பதிவுசெய்திருக்கின்றார் என்பதாகவும்.  அவரது “மனசுலாவிய வானம்” நூலிலும் காணிவல்கள், பொப்பிசை பற்றியும் எழுதும்போதும் கூட இந்தக் கடமையில் இருந்து அவர் வழுவவில்லை.  இவ்வாறாக பல்வேறு சந்தர்ப்பங்களிலும் அவர் சேகரித்த தகவல்களை கட்டுரையாக்க களம் கொடுத்தது தாய்வீடு பத்திரிகையின் “ஆழத்து முத்துக்கள்” பகுதி.  தாய்வீடு பத்திரிகையின் வருடாந்த, தாய்வீடு எழுத்தாளர் சந்திப்பில் சென்ற ஆண்டு கலந்து கொண்டபோதும் இதே கருத்தையே தெரிவித்திருந்தேன்.

யாழ்ப்பாணத்தில் 1997ம் ஆண்டுவரை வாழ்ந்தவன் என்ற வகையில் அக்காலப்பகுதியில் அங்கே வாழ்ந்த எத்தனையோ கலைஞர்களும், விளையாட்டு வீரர்களும், சுருக்கமாக சொல்வதானால் எமக்காக அக்காலப்பகுதியின் “Celebrity” களும் எந்தத் தடயமும் இல்லாமல் எம்மால் மறக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றார்கள்.  மின்சாரம் கூட இல்லாத அந்தக் காலப்பகுதியின் (1990-1997) வாழ்க்கையை கற்பனை செய்வது அத்தனை இலகுவானதல்ல.  ஆனால், அதற்குள்ளும் வாழ்ந்தோம்.  வாழ்வாங்கு வாழ்ந்தோம்.  எம் வாழ்வைக் கொண்டாடினோம். அக்காலப்பகுதியின் வாழ்வியலின் சில பகுதிகளை மடத்து வாசல் (http://www.madathuvaasal.com)  என்கிற வலைப்பதிவு ஊடாக கானா பிரபாவும், படலை (வேலிகள் தொலைத்த படலையின் கதை) http://www.padalay.com என்கிற இணையத் தளம் ஊடாக ஜேகே என்பவரும் தொடர்ந்து பதிவுசெய்து வருகின்றார்கள்.  கிடுகுவேலி என்கிற தளத்தில் எழுதிவரும் விசாகன் (கதியால்) http://www.kidukuveli.com என்பவர் வீரமணி ஐயர், ஈழத்துச் சதன், பஞ்சாபிகேசன், போன்ற ஆளுமைகளைப் பற்றி பல்வேறு தகவல்களைத் திரட்டியும், அந்நாட்களில் உள்ளூர் உதைபந்தாட்டப் போட்டிகளில் பெரும்புகழ் பெற்றிருந்த வெள்ளை என்பவரை நேரே சந்தித்தும் ஆவணப்படுத்தியிருக்கின்றார்.  இதுபோன்ற முயற்சிகள் மென்மேலும் தொடரவேண்டும்.  ஶ்ரீஸ்கந்தன் அவர்கள் செய்திருக்கின்ற பெரும்பணியும் அதற்குக் கிடைக்கின்ற ஆதரவும் எதிர்காலத்திலும் இதுபோன்ற முயற்சிகளுக்கான ஊக்கத்தினை வழங்கவேண்டும் என்பது எனது அவா.

அத்துடன், முன்னரே சொன்னதுபோல அனுபவக்குறிப்புகளாகவும், நினனைவுப்பதிவுகளாகவும் எழுதப்பட்டிருக்கின்ற இந்நூல்களின் கட்டுரைகள் பெரும்பாலும் ஏதோ ஒரு விடயத்தையோ, சடங்கையோ, நிகழ்வையோ, மனிதர்களையோ, அவர்களின் வாழ்வியலையோ ஆவணப்படுத்துவதாக அமைந்துள்ளதுடன் அரியாலை பற்றிய ஆவணமாகவும் இந்நூல் அமைந்துள்ளது.  இதுபோல ஒவ்வொருவருக்கும், தாம் வாழ்ந்த பிரதேசத்தை, மக்களை, அவர்கள் வாழ்வியலை பதிவுசெய்யவேண்டி தேவை இருக்கின்றது.  ஈழத்திலும், புலம்பெயர்ந்தும் வாழும் தமிழர்கள் பெருமளவில் இவ்வாறான பதிவுகளைச் செய்துவந்தால் அதுவே எதிர்காலத்தில் ஈழத்தமிழர்கள் பற்றிய சமூக, பண்பாட்டு வரலாற்றெழுதுகைக்கும், ஆய்வுகளுக்கும் பெரியதோர் பங்களிப்பாக அமையும்.

 

 

 

 

 

நன்றி:

ரொரன்ரோவில்நடைபெற்றஶ்ரீஸ்கந்தன்அவர்களின்புத்தகவெளியீட்டுவிழாவில்அவரதுமனசுலாவியவானம்நூலைமையமாகவைத்துஎழுதிவாசிக்கப்பட்டு, பின்னர்மார்ச் 2014 தாய்வீடுஇதழில்வெளியானகட்டுரை.