download (1)

காலஞ்சென்ற பாலுமகேந்திரா அவர்கள் தமிழ்நாட்டு மையசினிமாவில் நல்லசினிமாக்கள் என்று சொல்லக்கூடிய சில சினிமாக்களை இயக்கியவர்,  ஆனால் அவரது மறைவுக்குப் பின்னர் அவரைப் போற்றிப் புகழும் விதம் மிகமிக அளவுக்கு மிஞ்சியதாகவே அவதானிக்க முடிந்தது.   ஒரு படைப்பாளி என்பதைத் தாண்டி பாலுமகேந்திராவின் தனிப்பட்ட வாழ்வில் அவருக்கும் மௌனிகாவிற்கும் இடையிலான உறவு, அவ் உறவு பற்றி பாலுமகேந்திராவும், மௌனிகாவும் வழங்கிய பேட்டிகள், பகிர்வுகள் போன்றன மீண்டும் மீண்டும் பகிரப்பட்டன.  (பாலுமகேந்திராவின் மரணச்சடங்கில் கலந்துகொள்ள வந்த மௌனிகா இயக்குனர் பாலாவினால் தடுக்கப்பட்டமையும் இவ் உறவு மீண்டும் மீண்டும் பகிரப்படக் காரணமாக இருந்திருக்கலாம்.  ஆனால் மௌனிகா – பாலுமகேந்திரா உறவு பற்றிப் பேசிய பலருக்கு வசதியாக ஷோபா மறக்கப்பட்டவர் ஆனது ஒருவித செலக்ரிவ் அம்னீஷியா என்றே தோன்றுகின்றது.   அது கூட பரவாயில்லை என்னும் அளவுக்கு, ஷோபாவுடனான அவரது உறவு குறித்து எழுந்த பல்வேறு விமர்சனங்களயும் தாண்டி அவரது ஷோபாவுடனான உறவை தெய்வீகக்காதல் என்று கொண்டாடுவோரைப் பார்க்கின்றபோது அதுவும் ஆனந்த விகடனுக்கு அவர் வழங்கிய பேட்டியொன்றில் குறிப்பட்ட, “அந்த வண்ணத்துப்பூச்சி எனது தோளிலும் சிறிதுகாலம் உட்கார்ந்து என்னை மனசு நிறைந்த மகிழ்வில் ஆழ்த்திவிட்டுப், பின் ஒரு நாள் சட்டென்று பறந்துபோன சோகத்தையா..?” என்ற வார்த்தைகளைக் கூறி உருகுகின்றபோது எனக்கு சில கேள்விகள் எழுகின்றன.

  1. அவரது அழியாத கோலங்கள் திரைப்படத்தின்போது ஷோபாவை உதவி / துணை இயக்குனர் என்று பெயரிட்டுக் காட்டி இருப்பார்.   அந்தத் திரைப்படத்தில் நடிக்கின்றபோது ஷோபாவுக்கு எத்தனை வயதிருக்கும்?.  நிச்சயம் 16 வயதிலும் குறைவாகவே இருந்திருக்கும்.  அந்தளவு இளவயதினரை உதவி / துணை இயக்குனர் என்று; அதுவும் அந்தப் பட்டியலில் வந்த 3 பெயர்களில் முதன்மையானதாக பட்டியலிட்டது ஏன்?   இதனை இயக்குனர் என்கிற அதிகாரம் கொண்டிருந்த பாலுமகேந்திரா அவர்கள் செய்த அதிகாரபீடத்தின் அலட்டல் என்றும் மிக மிகக் கேவலமான உள்நோக்கம் கொண்டதென்றுமே பார்க்க முடிகின்றது.
  2. மூடுபனி திரைப்படத்தின் ஆரம்பத்தில் வருகின்ற “எனக்கு எல்லாமுமாய் இருந்த அம்மு(ஷோபாவுக்கு) ஆத்ம சமர்ப்பனம்” என்கிற டைட்டில் கார்ட் பெரும் ஆயாசத்தைக் கிளப்பியது.  மூடுபனி திரைப்படம் வெளியாகி கிட்டத்தட்ட 25 வருடத்தின் பின் வெளியான அவர் மௌனிகாவுடனான தனது உறவை பகிரங்கமாக வெளிப்படுத்திய விகடன் பேட்டியிலோ அல்லது பின்னர் நிகழ்ந்த பல்வேறு சந்தர்ப்பங்களிலோ ஷோபாவை மனைவி என்று சொன்னது இல்லை.  தேவதை என்றும்,, சிறுபிள்ளைத்தனமானவர் என்பதுவுமாகவே அவரது கருத்துப்பகிர்வு ஷோபா குறித்து நிகழ்ந்து இருக்கின்றது.  தற்கொலைசெய்துகொண்ட ஷோபாவோ அல்லது தற்கொலை நோக்கித் தள்ளப்பட்டவர் என்றவகையில் கொலைசெய்யப்பட்ட ஷோபாவோ மாத்திரமல்லை, அவரது வாழ்க்கையில் துணைவியாகின்றபோது மௌனிகாவும் கூட 16 வயது அல்லது அதற்கு உட்பட்டவரே.  இதனை  ஆனந்த விகடனுக்கு வழங்கிய பேட்டியில் “இருபது வருடங்கள் தன்னுடைய எல்லாவற்றையும் எனக்காக அர்ப்பணித்துவிட்டு இப்போது 35 வயதாகும் மௌனியை எப்படி நான் தூக்கிப் போடுவது என்று அவரே கூறி இருக்கின்றார்.   பின்னர் பாலுமகேந்திராவின் இறப்பிற்குப் பின்னர் மௌனிகாவும் தமிழ் இந்துவிற்கு வழங்கிய பாலுமகேந்திரா குறித்து வழங்கிய நினைவுப் பகிர்வில் “1985ம் ஆண்டு வெளியான “உன் கண்ணில் நீர் வழிந்தால்” படத்தில் ரஜினியின் தங்கையாக நடித்ததன் மூலம் இயக்குனர் பாலுமகேந்திராவிற்கு அறிமுகமானேன்.   எங்கள் திருமணம் 2000ல் நடைபெற்றது.   28 வருட அன்பு சேர்ந்த வாழ்க்கை எங்களுடையது” என்று குறிப்பிட்டுள்ளார்.   இதனை பாலுமகேந்திரா ஒளிப்பதிவாளார்/இயக்குநர் என்கிற அதிகாரத்தினை பயன்படுத்தி செய்ததாகவே கருதமுடிகின்றது.   குறிப்பாக பாலுமகேந்திராவிற்கு மேற்குறிப்பிட்டவர்களுடன் இருந்த உறவுகள் பற்றிய ஓயாத புகழ்ச்சிகளே மீள மீள இவற்றை நினைவுறுத்துவனவாயும் இருக்கின்றன.

அதேநேரம் இந்தக் கட்டுரையின் ஆரம்பவசனத்தில் குறிப்பிட்டதுபோல ஒரு படைப்பாளியாக பாலுமகேந்திரா தமிழ்நாட்டு மையநீரோட்ட திரைப்படங்களில் நல்ல திரைப்படங்கள் என்று கூறக்கூடிய சில நல்ல திரைப்படங்களை இயக்கியவர்.  குறிப்பாக வீடு, சந்தியாராகம் மற்றும் அழியாதகோலங்கள்.  இவற்றில் சந்தியாராகமும், அழியாத கோலங்களும் எனக்கு மிகப் பிடித்த திரைப்படங்களும் கூட.   எனினும் அவை மட்டுமல்லவே பாலுமகேந்திரா.  அவர் சமரசமே செய்யாதவர் என்று எப்படிக் கூறுவது?   மூன்றாம் பிறை, மறுபடியும் திரைப்படங்களில் கலைநேர்த்தியும், திருத்தமான இயக்கமும் இருந்தாலும், அவற்றில் வணிக நோக்கிற்காக திணிக்கப்பட்ட கவர்ச்சி பாடல்கள் அவர் செய்த சமரசம் தானே.  அவர் விரும்பியோ, முழுமனதுடனோ செய்திருக்காவிட்டாலும் கூட!

பாலுமகேந்திராவின் மறைவிற்குப் பின்னர் அவர் இயக்கிய எல்லாத் திரைப்படங்களையும் அடுத்தடுத்துப் பார்த்தேன்.  (ரொரன்றோவில் இருக்கின்ற திரைப்பட சீடீக்கள் விற்கின்ற கடை ஒன்றில் அவரது மறைவின் பின்னர் சில வாரங்கள் “பாலுமகேந்திரா வாரம்” என்கிற பெயரில் தனியாக ஒரு பகுதியில் வைக்கப்பட்டு விற்கப்பட்டன)  ரெட்டை வால் குருவி திரைப்படத்தை மறுபடியும் பாருங்கள்.  மிக மலினமான வணிகத் திரைப்படம்.  குறிப்பாக ஒரு மத்திய தர வர்க்க திருமணமான இளைஞன் ஒருவனின் பாலியல் விருப்புகளை/வேட்கைகளை அல்லது காமத்தை பேசுவது என்கிற விடயத்தைக் கையாண்ட திரைப்படம் என்றபோதும் அதனைக் காட்சிப்படுத்துவதில் மலினமான ரசனையைக் கையாண்டிருப்பார் பாலுமகேந்திரா.   அதுபோலவே சதி லீலாவதியும், வண்ண வண்ணப்பூக்களும், ராமன் அப்துல்லாவும், அது ஒரு கனாக்காலமும் கூட.   இவற்றை இங்கே குறிப்பிடுவது பாலுமகேந்திரா குறித்த எந்த காழ்ப்புணர்வினாலும் அல்ல, அவர் பற்றி தொடர்ச்சியாக கூறப்படும் அளவுக்கு மீறிய புகழுரைகள், அவர் பற்றிய எனது மதிப்பீட்டுடன் ஏற்படுத்திய சலனமே இந்தக் கட்டுரை.

பேசாமொழி இதழ் வீடு திரைப்பம் வெளியாகி 25 ஆண்டுகள் நிறைவை ஒட்டி பாலுமகேந்திராவுடன் செய்த நேர்காணலில் பாலுமகேந்திராவிடம் “முழுக்க முழுக்க உங்கள் திருப்திக்காக எடுக்கப்பட்ட படமா வீடு?” என்கிற கேள்வியினைக் கேட்டிருப்பார்கள்.  அதற்கு பின்வருமாறு பதிலுரைத்திருப்பார் பாலுமகேந்திரா;

“என்னோட திருப்திக்கு என்பதைவிட, தமிழுக்கு இப்படியொரு படம் கண்டிப்பாக வேண்டும்.  I have my own way.  எனக்கு சுதந்திரம் இருந்தால் இப்படியான திரைப்படங்களைத்தான் நான் எடுக்க விரும்புவேன்.  இப்படியான படங்களை எடுக்கவேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை.  ஆனால் சினிமாக்களைத்தாண்டி எனக்கும் குடும்பம் இருக்கின்றது.  சினிமா என்பது என் கலாரீதியான  வழிபாடு மட்டுமல்ல.  என் தொழிலும் கூட.  தொழில் என்கையில் அதில் வரும் வருவாயை வைத்துத்தான் நான் சாப்பிடவேண்டும்.  அதனால மத்த படங்களை சமரசங்களோடு பண்ண வேண்டிய வேலைக்கு நான் தள்ளப்படுகிறேன். (பேசாமொழி இதழ் 2, தை 15, 2013)“

பாலுமகேந்திரா கூறுகின்ற நியாயங்களும், காரணங்களும், சேர்ந்தே இருப்பது புலமையும், வறுமையும் என்பதைப் பெருமையுடன் சொல்லத் தலைப்படும் தமிழ்ச்சூழலில் என்னால் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கின்ற அதேவேளை அவர் பற்றி எழுப்பப்படும் மிகைப்படுத்திய விம்பங்கள் சலிப்பையே ஏற்படுத்துகின்றன.  தன் தனிப்பட்ட வாழ்வின் பலவீனங்களுடன் தொடர்ந்து போராடிக்கொண்டிருந்த, நல்ல வாசகனாக இருந்து அவற்றின் பாதிப்பில் நல்ல சினிமாக்கள் சிலவற்றை இயக்கிய, தன் பெரும்பாலான படைப்புகளில் வணிகத்தை முன்னிறுத்தும் தமிழ் சினிமாவின் வியாபாரத் தேவைகளுக்கும் தன் தனிப்பட்ட கலை ரீதியான/அழகியல் ரீதியான தேர்வுகளுக்கும் இடையில் தடுமாறிய, தன் வழிவந்த / தன்னால் பயிற்றுவிக்கப்பட்ட / தன்னால் நெறிப்படுத்தப்பட்ட, தற்கால தமிழ் சினிமாவின் முக்கியமான சில இயக்குனர்களின் ஆசானாக இருந்த ஒரு கலைஞராகவே பாலுமகேந்திராவின் விம்பம் என்னில் எஞ்சி நிற்கின்றது


குறிப்பு:  எனது நண்பன் விசாகனுடன் சென்ற ஆண்டின் இறுதிப் பகுதியிலும், பாலுமகேந்திராவின் மறைவிற்குப் பின்னும் அவர் பற்றிப் பேசியவற்றின் நினைவுகளில் இருந்து இப்பதிவு எழுதப்படுகின்றது.