நான் மகாபாரதம் சொல்லும் அரசியல் என்ன? என்கிற என் முன்னைய குறிப்பில் வலியுறுத்தியது, இங்கே குறிப்பிடப்படும் அறம் என்பது, “ஆள்வோர்க்கான அறம்” என்பதை வலியுறுத்தவே. அவ் அறம், எல்லாருக்கும் பொதுவானதாகவோ அல்லது எல்லாருக்கும் அறமாகவோ இருப்பதில்லை. புராணக்கதைகள், தொன்மங்கள் என்பவற்றைப் பற்றி ஆராயும்போது அன்றைய காலப்பகுதியுடன் வைத்தே பேசவேண்டும். அன்றைய வழமைகளை ஆராயவேண்டும். அவற்றுடன் பொருத்திப் பார்க்கவேண்டும். அவையெல்லாம் புராணங்களை நியாயப்படுத்துவதற்காக அல்ல. அதே நேரத்தில் புராணங்கள், அடிப்படைவாதம் ஒன்றினையோ அல்லது மதவெறியையோ தூண்டவோ அல்லது பிற இனங்களை அல்லது குழுமங்களை ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கவோ பிரயோகிக்கப்படக்கூடும் என்ற அவதானத்துடனும் அவற்றை அணுகுவதே நன்று.
மகாபாரதம் தொடர்பான எனது குறிப்பினைத் தொடர்ந்த தனது பதிவுகளில் ஆனந்தராம் அவர்கள் “இவற்றில் பெண்கள், சாதாரண மக்கள் வெறும் காய்களே. அப்படியானால் இக்காவியங்களில் பேசப்படுவது அறமா வெறும் சந்தர்ப்ப வாத அரசியலா?” என்று கேட்டிருக்கின்றார். நான் குறிப்பிட விரும்பியது, அந்நாளில் அதுவே ஆள்வோரின் அறமாக இருந்தது என்பதையே. இதன் அர்த்தம், இதை நான் ஏற்றுக்கொள்ளுகின்றேன் என்பதோ அல்லது விரும்புகின்றேன் என்பதோ அல்ல. மகாபாரதம் போதிக்கின்ற ஆள்வோருக்கான அறம் என்பது அதுதான். அவ்வளவே.
சில நாட்களின் முன்னர் நண்பர் இளங்கோ தனது முகநூலில் எழுதி இருந்த சிறு குறிப்பின் மூலம் தூண்டப்பட்டு பெருமாள் முருகனின் ஆளண்டாப்பட்சி, மாதொருபாகன் இரண்டையும் வாசித்து முடித்தேன். இதில் மாதொருபாகன் பற்றி சில விடயங்களை இங்கே குறிப்பிடுவது பொருத்தமானதாக இருக்கும்.
மாதொருபாகன் பிரித்தானியர் ஆட்சிக்காலத்தின் இறுதிப்பகுதியில் கொங்கு பிரதேசத்தில் நடைபெறும் கதை. இந்நாவலிற்காக அவர் திருச்செங்கோடு ஆலயத்தினையும், அவ் ஆலயத்தில் இடம்பெறும் சடங்குகளையும், மக்களின் பண்பாட்டு வாழ்வியலையும் பற்றி களப்பணியாற்றி ஆய்வுகளைத் திரட்டி நாவலாக்கியுள்ளார். குறிப்பாக, திருச்செங்கோடு ஆலயத் திருவிழாவின் பதினான்காம் நாள் திருவிழா பற்றிக் குறிப்பிடுகின்றார். இந்நாளின்போது ஆலயத்திற்கு குழந்தைப் பேறற்ற தம்பதியரில் பெண்கள் அவ்விழாவிற்கு வரும் ஆண்களில் விருப்பமானவர்களுடன் உறவுகொண்டு குழந்தைப் பேறடையை முயலலாம் என்பது வழக்கமாக இருந்திருக்கின்றது. இந்நாவலில் பெண்ணின் கணவனுடன் இது பற்றி உரையாடப்படுகின்றது. பெண்ணின் பெற்றோர், சகோதரன் மற்றும் கணவனின் தாய் அனைவரும் இதற்கு விருப்பம் தெரிவிக்கின்றனர். குடும்பப் பேறடையாத தம்பதியரில் ஆணுக்கு இரண்டாம் திருமணம் என்பது உரிமையாக இருந்தது போன்றே, பெண்ணுக்கும் இத்திருவிழாவில் கலந்துகொள்வது உரிமையாக இருந்திருக்கின்றது. இந்நாவல் இடம்பெறுவது 1930 கள் முதல் 1947 வரையாக இருக்கலாம். ஆனால் இவ்வழமை “நானறிந்து முப்பதாண்டுகளுக்கு முன்வரை தமிழ்நாட்டில் நான் பணிபுரிந்த இரண்டு இடங்களில் நடந்த திருவிழாக்களில் இத்தகைய பழக்கம் இருந்ததைப்பற்றி அறிந்திருக்கிறேன். ஒன்று கோடைக்காலத்தில் அகண்ட காவிரி நதிப்படுகையில் நடக்கும் ஒரு திருவிழா……………………………………………………………… இன்னொரு திருவிழா அன்றைய வட ஆர்க்காடு மாவட்டத்தில் விஸ்தாரமான, நீண்ட பிரகாரம் கொண்ட ஒரு கோயிலில் நடைபெறுவது” என்று இந்நாவலுக்கு காலச்சுவடில் எழுதிய மதிப்புரையில் தியடோர் பாஸ்கரன் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மரபு மகாபாரத காலத்திலும் கூறப்பட்ட மரபே. இது சரியா, பிழையா என்பதை விட, இப்படி இருந்தது என்றே கூறமுடியும். பண்பாட்டு வாழ்வியலின் அடிப்படையில் சொல்லக்கூடியதும் அதுவே.
குறிப்பு
பெருமாள்முருகனின் மாதொருபாகன் Cultural Studies தொடர்பான அக்கறை உள்ளவர்கள் படிக்கவேண்டிய நாவல். அதுபோலவே குமாரசெல்வா எழுதிய குன்னிமுத்துவும். அதே நேரம் குன்னிமுத்துவில் கலையன் கருணைநாதன், அலையன் கண்ணாயிரம், தன்மான முன்னேற்றக் கழகம், தந்தை பெரியவர், அரவிந்தன் கன்னையன் என்கிற பெயர்கள் எழுப்பக்கூடிய கிசு கிசுத்தன்மை தவிர்த்திருக்கக்கூடியதே!
நீங்கள் சொல்வது போல புராணக்கதைகள், தொன்மங்கள் என்பவற்றைப் பற்றி அன்றைய காலப்பகுதியுடன் வைத்தே பார்க்கிறேன். சரி பிழையாக அல்ல. அந்த காலப்பகுதியின் வழமை நான் முன்பு குறிப்பிட்டபடி கலியுக ஆரம்ப காலம். இக்கால கட்டத்தில் அரச, புரோகித, சூத்திர வேறுபாடுகள் சரியாக நிலை நிருத்தப்படாத காலம். மகாபாரதத்திற்க்கு முற்பட்ட காலம் என்றும் பிற்பட்ட காலம் என்றும் இந்திய சமூக அமைப்பை பார்க்க வேண்டிவருகிறது. முற்பட்ட காலமானது சிற்றரசுகளைக் கொண்டதாகவும் கணசமாஜங்கள் என்னும் கூட்டு குடும்ப அமைப்பை கொண்டதாகவும் பிற்பட்ட காலம் இப்பழைய கணசமாஜ உறவுகள் அழிக்கப்பட்டு புதிய வர்ணாச்சிரம உறவுகள் ஸ்தாபிக்கப்பட்டு பேரரசுகள் உருவான காலம்.
இங்கு குழப்பத்தை தருவது அறம் என்ற சொல் பிரயோகம். அறம் என்றால் தர்மம் என்ற எண்ணத்தில்தான் எனது கேள்விகளை முன்வைத்தேன். மகாபாரதம் ஆள்வோருக்கான அரிசியல் அறம் பேசும் நூல் மட்டுமா அல்லது சகலருக்குமான அறம் பேசும் நூலா? இங்கு ஆள்வோருக்கான அறத்தை சொல்லிவிட்டு அதையும் பலமுறை மீறிவிட்டு பொது மக்களை, பெண்களை அதை ஏற்று நடக்கும்படி சொலப்படும் போது அது எல்லோருக்குமான அறநூலாக தான் செயல்படுகிறது. உதாரணத்திற்க்கு, ஏகலைவன், இடும்பி, கடோற்கஜன் பாத்திரங்கள். இவர்கள் வஞ்சிக்கப்பட்டாலும் அதை தமது பிறவியாலான நியதியாக ஏற்றுக்கொள்கிறார்கள். அது அவர்களுக்கு சொல்லப்பட்ட அறம். இடை(கடை)ச்செருகல் என்று ஏற்றுக்கொண்டாலும் கீதை எல்லோருக்குமாக சொல்லப்பட்ட அறமே.
சாணக்கியரின் அர்த சாஸ்திரத்தை பொது அறமாக யாரும் கொண்டாடுவதில்லை. ஆது ஆள்வோருக்கான நூல். ஆனால் மகாபாரத மாந்தர்களை உதாரண புருஷர்களாகவும் அதில் சொல்லப்பட்ட (அ)தர்மத்தை அரசரை மட்டுமல்லாது சகலரையும் ஏற்றுக்கொள்ள இன்றுவரை ஊக்குவிக்கப்பட்டு அல்லது நிர்பந்திக்கபட்டு வந்துள்ளது. இக்கதை இரு வளர்ந்து வரும் அதிகார மையங்களுக்கிடையே உள்ள போட்டியும் அதற்கான சமரசமும் அதில் பொது மக்களை புதிய யுக(கலி)தர்மம் (new world order) என்ற பெயரில் கட்டுப்படுத்தலுமாகவே நான் பார்க்கிறேன்.
மேலும் உங்களது பதிவில் பெண்கள் வேறு ஆணுடன் கூடி குழந்தை பெறுவதை பெண்மீது உருவாக்கும் நிர்பந்தம் இல்லை என்று சொல்ல முயலுகிறீர்கள். “குழந்தைப் பேறற்ற தம்பதியரில் பெண்கள் அவ்விழாவிற்கு வரும் ஆண்களில் விருப்பமானவர்களுடன் உறவுகொண்டு குழந்தைப் பேறடையை முயலலாம் என்பது வழக்கமாக இருந்திருக்கின்றது.” முக்கிய விடயம் இதில் “ஆண்களில் விருப்பமானவர்களுடன்”. மகாபாரத பெண்கள் யாருக்கும் இந்த தேர்வு இருந்ததில்லை. வியாசர் அம்பிகையிடம் சென்றபோது அம்பிகை அவரைக் கண்டதும் வெறுப்படைந்து கண்களை மூடிக் கொண்டாள்,அவளுக்குப் பிறந்த குழந்தை குருடாக பிறந்தது. வியாசர் அம்பாலிகையிடம் சென்றார். அவள் வெளிறி வெலவெலத்துப் போனாள், அவளுக்கு பிறந்த குழந்தை பலவீனமாக பிறந்தது, அக்குழந்தைக்கு பாண்டு என பெயரிட்டனர். மூன்றம் முறை பணிப்பெண் எந்த அச்சமுமின்றி அவருடன் இருந்தாள். அவளுக்கு ஆரோக்கியமாகவும் புத்திசாலியாகவும் குழந்தை விதுரன் பிறந்தான். இங்கு அரசருக்கு மட்டுமா அறம் போதிக்கப்படுகிறது? பொது மக்கள் மிரட்டப்படவில்லையா?
LikeLike