The cricket monthly என்ற பெயரில் ESPN Cricinfo தளத்தினரால் அண்மையில் வெளியிடப்பட்டிருக்கின்ற கிரிக்கெட்டிற்கான இதழில் The Lost Boys of Jaffna என்கிற பெயரிலான கட்டுரை ஒன்று வெளியாகி இருக்கின்றது. இக்கட்டுரையில் போர்க்காலங்களில் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த திறமையான கிரிக்கெட் வீரர்களான காண்டீபன் (சென்.ஜோன்ஸ் கல்லூரி பழைய மாணவர்), நிஷாந்தன் (சென். பற்றிக்ஸ் கல்லூரி பழைய மாணவர்) இருவரும் கட்டுரைக்காக சந்திக்கப்பட்டிருப்பதுடன், அவர்கள் பற்றிய பல்வேறு தகவல்களையும் கொண்டதாக இக்கட்டுரை அமைதிருக்கின்றது. இக்கட்டுரையை பலர் மகிழ்வுடன், எம் மண்ணைச் சேர்ந்தவர்களைப் பற்றி முக்கியமான தளங்களில் கட்டுரை பிரசுரமாகியுள்ளது என்கிற புளகாங்கிதத்துடன், போர் இருந்திராவிட்டால் இவர்கள் இலங்கை அணியில் விளையாடி இருப்பார்கள் என்கிற தொனி கட்டுரையில் இருக்கின்றதே என்கிற பெருமிதத்துடன், தமது நினைவலைகளை கட்டுரை மீட்டியிருக்கின்றதே என்ற பரவசத்துடன் பகிர்ந்துவருவதையும், குறிப்பிட்டுவருவதையும் அவதானிக்கக் கூடியதாக உள்ளது. அவர்கள் அனைவரும் மேற்படி கட்டுரையை முழுமையாக ஒருமுறை படித்துப்பார்க்கும்படி வேண்டிக்கொள்ளுகின்றேன்.

இக்கட்டுரை முன்வைக்கும் கருத்து அபத்தமானது மட்டுமல்ல விஷமத்தனமானது. போர்க்காலங்களில் புலிகளின் கட்டுப்பாட்டுப்பகுதியில் வாழ்ந்த திறமையான கிரிக்கெட் வீரர்கள் இலங்கை அணியில் இடம்பெறும் வாய்ப்பை தடுத்தது புலிகளின் “பாஸ்” நடைமுறையே என ஓயாது பிரசாரம் செய்கின்றது இக்கட்டுரை. உண்மையில் நிலைமை அப்படியா இருக்கின்றது? சென்ற மாதம் (ஜூலை 2014) அதாவது போரினை நிறைவுக்குக்கொண்டுவந்து 5 ஆண்டுகளின் பின்னரும் தேசிய இளைஞர் விவகார அமைச்சினால் நடத்தப்பட்ட கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் அம்பாந்தோட்ட அணியினை காலிறுதிப்போட்டியில் வெற்றிபெற்று அரை இறுதியில் கம்பஹா அணியுடன் ஆட இருந்த யாழ் அணி மீது தாக்குதல் இடம்பெற்றிருக்கின்றது. தமிழர்கள் அல்லது சிறுபான்மையினர் மீதான ஒவ்வாமை / வெறுப்புணர்வு இவ்விதம் வெளிப்படையாகவே காண்பிக்கப்படுகின்றபோது இச்சம்பவம் இடம்பெற சில நாட்களின் முன்னர் மேற்படி கட்டுரை வெளியாகி உள்ளது.

தயவு செய்து இக்கட்டுரையை சரியான முறையில் பரிசீலிக்கவேண்டும் என்பதை ஒரு வேண்டுதலாக மறுபடியும் முன்வைக்கின்றேன். ஏற்கனவே பல்வேறு சந்தர்ப்பங்களில் “அரசியல் வேறு விளையாட்டு வேறு” என்று தம்மை முதிர்ச்சியான சிந்தனைப்போக்குடையவர்கள் என்பதாகக் காட்டிக்கொண்டு பலர், குறிப்பாக தமிழ் தேசியம் பேசுவோர் சிலரும் கூட இலங்கைக் கிரிக்கெட் அணியைக் கொண்டாடுவதையும் அவதானித்துள்ளேன். இந்த இடத்தில் நண்பர் ஒருவர் முன்னர் எழுதிய குறிப்பு ஒன்றில் இருந்து சிறுபகுதியின இங்கே பகிருகின்றேன்.

“கருத்தியல் ரீதியில் இருக்கின்ற விடயங்கள் தவிர்த்து நடைமுறையில் இருந்துவருகின்ற பிரச்சனைகளையும் ஆராயவேண்டியுள்ளது. இலங்கைக் கிரிக்கெட் அணியில் சிறுபான்மை அடையாளத்துடன் எத்தனைபேர் இடம்பெற்றுள்ளனர், சிறுபான்மைக் கருத்தியல் உடையோர் எத்தனைபேர் அணியில் இடம்பெற்றுள்ளனர் என்கிற பல்வேறு கேள்விகளூடாக இவ்விவாதம் விரிவுறும். அத்துடன் தொடர்ச்சியாக இலங்கைக் கிரிக்கெட் வீரர்கள் அரசியலுக்கு வருவதும், அரசியலில் அவர்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் கருத்துநிலைகள் என்ன என்பதும், கிரிக்கெட் வீரர்கள் சிறுபான்மை இனத்தவர்கள் மீதான ஒடுக்குமுறை மற்றும் இனப்போராட்டம் குறித்து தெரிவிக்கும் கருத்துகள் என்பவற்றையும் நாம் உரையாடவேண்டியிருக்கின்றது. அரசியல் பிரக்ஞையுள்ள எவரும் இந்த விமர்சனங்களை கடந்தோ தவிர்த்தோ இலங்கைக் கிரிக்கெட் அணிக்கு ஆதரவளிப்பது (அல்லது கிரிக்கெட்டுக்கு) தொடர்பான கருத்துக்களைக் கூறமுடியாது என்பதே எனது புரிதல்.”

தொடர்பான கட்டுரைகள்
http://www.thecricketmonthly.com/story/761915#_=_

The attack on Jaffna District Cricket players condemned – Vavuniya District Youth Parliament Member J.M. Jawaz speech