library

நூலகங்களுடனான என் உறவு எப்போது தொடங்கியது என்று யோசித்துப் பார்க்கின்றேன். மிகச் சிறுவவதில் இருந்தே புத்தகங்களுடனான என் உறவு ஆரம்பித்துவிட்டிருக்கின்றது. இதற்கு காரணம் என் பெரியப்பா அவர்கள். வாசிப்பின் மீது மிகப் பெரும் காதலுடன் இருந்த அவர் தனது உழைப்பின் பெரும்பங்கினை புத்தகங்களாகவே வாங்கிக் குவித்தார். கிட்டத்தட்ட அந்த காலகட்டத்தில் வந்த அனைது இதழ்களையும் வாங்கி வாசிப்பதுடன், தான் வாசித்தபின்னர், அவற்றை எமக்கும் அனுப்பி வைப்பார். இந்த வகையில் அம்புலிமாமா, ரத்னபாலா, கோகுலம், பாலமித்ரா,, பூந்தளிர், கல்கண்டு, முத்தாரம் என்பன எமது வீட்டிற்கு கொழும்பில் இருந்து அனுப்பிவைக்கப்படும். இது தவிர, மாலைமதி, ராணிமுத்து என்று அப்போது வந்துகொண்டிருந்த இதழ்கள் பைண்ட் செய்யப்பட்டு வரும், அவற்றை வீட்டில் அம்மாவும் மாமியும் வாசித்தபின்னர் எடுத்துக்கொண்டு ஆனைக்கோட்டையில் இருந்த பொது நூலகத்திற்கு அன்பளிப்பாக வழங்க நான் மாமியுடன் செல்வேன். இதுவே எனது நினைவில் நூலகம் ஒன்றுடன் எனக்கேற்பட்ட முதலாவது தொடர்பு என்று சொல்வேன்.

அதன்பின்னர் யாழ் இந்துக்கல்லூரியில் சேர்ந்த பின்னர், அப்போது எமது தமிழாசிரியராக இருந்த தங்கவேல் என்பவர் வகுப்பு நூலகம் ஒன்றினை ஆரம்பித்தார். அதாவது, 35 பேர் இருந்த எமது வகுப்பில் அனைத்து மாணவர்களும் ஆளுக்கு ஒன்று ஒரு புத்தகத்தினை கொண்டுவரவேண்டும் என்றும் வகுப்பு மாணவர்கள் சுழற்சிமுறையில் இப்புத்தகங்களை வாசிக்கலாம் என்பதும் ஏற்பாடு. ஜனார்த்தனன், கிருஷ்காந்தன் என்ற இரண்டு சகமாணவர்கள் இவ் வகுப்பு நூலகத்திற்கு பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டனர். எனினும் அப்போது தீவிரமான போர்ச்சூழ்நிலையால் இரண்டாண்டுகளில் இத்திட்டம் மெல்ல மெல்ல கைவிடப்பட்டது. இதற்கு இன்னுமோர் காரணமாக, அப்போதுதான் யாழ் இந்துக்கல்லூரியில் அதிபராகப் பொறுப்பேற்றிருந்த பஞ்சலிங்கம் அவர்கள் யாழ் இந்துக்கல்லூரியில் ஆரம்பித்திருந்த சிறுவர் நூலகத்தின் உருவாக்கமும், அதற்காக கொள்வனவு செய்யப்பட்ட பெருமளவு புத்தகங்களும் வகுப்பு நூலகம் என்கிற தேவையை இல்லாமல் செய்தது எனலாம்.

இதேசமயம் 91ம் ஆண்டளவில் நவாலியில் YMCA நூலகத்திலும் இணைந்துகொண்டேன். தமிழ்வாணனின் அனேகமான நூல்களை வாசித்தது இங்குதான். அதுதவிர வாண்டுமாமாவின் நூல்கள் சிவசங்கரியின் சில கதைகள் என்று வாசித்ததும் நினைவுக்கு வருகின்றது. இங்கே சிறுவருக்குரிய நூல்கள் என்றும், அனைத்து நூல்களுக்கும் என்றும் இரண்டு பிரிவுகளாக நூலக உறுப்புரிமை வழங்கப்பட்டது. சிறுவர்கள் பிரிவிற்கு 15 ரூபாயாகவும், அனைத்து நூல்களுக்கான பிரிவிற்கு 20 ரூபாயாகவும் இருந்ததாக ஞாபகம். சில நாட்களில் யுத்தம் அகோரமாக, பாடசாலைகள் இடைநிறுத்தப்பட்டிருந்தன. அனேகமான பொழுதுகள் புத்தக வாசிப்பிலேயே கழிந்தன. ஏற்கனவே நண்பர்கள் பலர் எமது வீட்டிற்கு வந்து புத்தகங்களை இரவல் வாங்கிச்செல்வது வழமையாக இருந்தது. நானும் வீட்டில் புத்தகங்களை ஒரு கொப்பியில் பட்டியலிட்டு, ஒரு நூலகம் போல ஒழுங்குபடுத்தி வைத்திருந்தேன். புத்தகங்களை தொடர்ச்சியாக எமக்கு அனுப்பி வைத்த எனது பெரியப்பாவும் வளர்ந்து ஒரு நூலகம் ஒன்றை அமைக்கவேண்டும் என்று எமக்கு அடிக்கடி சொல்லிவந்திருந்ததுடன் அதற்கென Little Library என்ற பெயரையும் வைத்திருந்தார். அவர் அனுப்பும் புத்தகங்களில் அவர் கையெழுத்திலோ அல்லது ரப்பர் ஸ்ராம்ப்பாலோ இந்தப்பெயர் எழுதப்பட்டிருக்கும். இதே Little Library என்ற பெயரில் சிறிய நூலகம் ஒன்றினை எனது 12 வயதிலே வீட்டில் ஆரம்பித்தேன். இதேவேளை எமது ஊரிலேயே இருந்த என்னைவிட சில வயது மூத்தவரான சர்வேஸ்வரன் என்பவரும் வள்ளுவன் கோட்டம் என்ற நூலகத்தினை நடத்தினார். என்னிடம் புத்தகங்களை வாங்கிச்சென்ற பலர் புத்தகங்களை திரும்பித்தராத நிலையில் நூலகம் இடையில் நிறுத்தப்பட்டது. எனினும் நண்பர்களுக்கிடையில் புத்தக பரிமாற்றம் நடந்துகொண்டேயிருந்தது.

மெல்ல மெல்ல சக மாணவர்கள் சரித்திர நாவல்களை வாசிக்கத் தொடங்கியிருந்தனர். வீட்டில் கல்கியில் தொடராக வெளியாகி பைண்ட் செய்து வைக்கப்பட்டிருந்த தொடர்கள் பெரிதும் கறையான் அரித்து அழிந்துபோயிருந்தன. எனவே மானிப்பாய் சென்ற் ஆன்ற்ஸ் சிறுவர் பாடசாலைக்கு அருகில் இருந்த நாயகபாலன் புத்தகநிலையம் என்ற கடையில் புத்தகங்களை கட்டணத்துக்கு வாடகைக்கு விடப்படுவதை அறிந்து அங்கே இணைந்து பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம், பாண்டிமாராணி, வேங்கையின் மைந்தன், பார்த்திபன் கனவு, கடல் புறா, அலை ஓசை, யவன ராணி என்பவற்றை அடுத்தடுத்து வாசித்தேன். எனது நினைவில் அனேக நண்பர்கள் தமது 14வது வயது அல்லது அதற்கு முன்பாக சரித்திர நாவல்களை, குறிப்பாக பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம் போன்றவற்றை வாசித்தவர்களாக இருந்தனர். பின்னாட்களில் பாலகுமாரன் தனது சுயசரிதையாக எழுதிய முன்கதைச் சுருக்கத்தில் தான் தன் 12வதோ 13வதோ வயதில் பொன்னியின் செல்வன் வாசித்தை ஆச்சரியமாக எழுதியபோது இதிலென்ன ஆச்சரியம் என்ற உணர்வே உடனே எழ இதுவே காரணமாக அமைந்தது. சம காலத்திலேயே மானிப்பாய் இந்துக்கல்லூரிக்கு முன்னால் இருந்த கடையொன்றிலும், மானிப்பாய் மருதடிப்பிள்ளையார்கோயிலுக்கு அருகில் இருந்த ஒரு கடையிலும் கூட இவ்வாறு புத்தகங்களை வாடகைக்கு விடும் வழக்கம் இருந்தது. இவற்றிலும் உறுப்பினராக இணைந்திருந்தேன். அனேகமான கடைகளில் 25 – 50 ரூபாய்கள் வரை வைப்புத்தொகையாகப் பெறப்பட்டு மேலதிகமாக ஒவ்வொரு புத்தகத்தினை வாடகைக்கு எடுத்துச் செல்லும்போதும் 2 ரூபாய்கள் முதல் 5 ரூபாய்கள் வரை கட்டணமாகவும் அறவிடப்பட்டதாக ஞாபகம்.
யாழ்ப்பாணத்தில் இருந்த பொது நூலகங்கள் எதிலும் அப்போது நான் உறுப்பினராக இருந்ததாக நினைவில்லை. ஆயினும், கொக்குவில் நாச்சிமார் கோவிலடியில் உள்ள பொது நூலகத்திற்கு வாரத்திற்கு ஒருமுறையேனும் செல்லும் வழக்கம் இருந்தது. அது போலவே இணுவிலில் மாணவர் அறிவியல் கழகத்திற்குள் இயங்கிவந்த நூலகத்திற்கும் தொடர்ச்சியாக செல்லும் வழக்கம் இருந்தது.

97ல் கொழும்பு வந்து மாமா வீட்டில் தங்கியிருந்த சிறிய இடைவெளியில் ஹம்டன் லேனில் அப்போது இருந்த ஒரு புத்தக வாடகை நிலையத்தில் நண்பன் குணாளனுடன் போய் இணைந்துகொண்டேன். பாலகுமாரனையும், சுஜாதாவையும், ஒஷோவையும் தொடர்ந்து படிக்கத் தொடங்கியது அப்போதுதான். ஓஷோ பெரிதாக பிடிபடவில்லை. பாலகுமாரன் மிக நெருக்கமானவராக இருந்தார். யாழ்ப்பாணத்தில் இருந்தவரை எனக்கு நெருக்கமாக இருந்த அனேகமான நட்புகள், புத்தகப் பரிமாற்றங்களூடாகவோ அல்லது வாசிப்புப் பழக்கத்தின் ஊடாகவோ அறிமுகமானவர்களே. முதன்முதலாக கொழும்பிலேதான் புத்தகம் சார்ந்த ரசனை தவிர்த்து, நண்பர்கள் அறிமுகமாயினர். ஆனால் நிலைமை இன்னும் மோசமானது புலம்பெயர்ந்து கனடா வந்த பின்னரே.

கனடாவைப் பொறுத்தவரை முதல் பத்தாண்டுகளில் வாசிப்புப் பழக்கம் உள்ள எந்த நண்பர்களும் கிடைக்கவில்லை. ரொரன்றோ பொது நூலகக் கிளைகளிற்கு கனடா வந்த புதிதில் சென்றிருக்கின்றேன். இப்போதிருப்பதுபோல அருமையான புத்தக தேர்வுகள் அப்போது இருக்கவில்லை. இதனால் ரொரன்றோ நூலகங்களிற்கு செல்வதும் இல்லாதுபோயிருந்தது. ஆயினும் இந்த நிலை இன்று மாறி இருக்கின்றது. கடந்த இரண்டு வருடங்களாக அனேகமான புது நூல்களை ரொரன்றோ பொதுநூலகத்தில் இருந்து பெற்று வாசித்துவருகின்றேன்.

இன்றைய காலப்பகுதியில் இணையத்தின் பரவலாலும், வலைப்பதிவுகள், மற்றும் சமூக வலைத்தளங்களின் பாவனையில் ஏற்பட்ட பெருக்கத்தாலும், நூலகங்கள் குறைந்திருக்கலாம். குறிப்பாக ஈழத்தில் முன்னர் போர்ச்சூழலில் எத்தனையோ புத்தக வாடகைநிலையங்கள் இயங்கிவந்தன என்பதையும் எனையொத்த பதின்மங்களின் ஆரம்பத்தில் இருந்தோர் கூட அவற்றினை பயன்படுத்திக்கொண்டனர் என்பதையும் இந்தப் பதிவினூடாகவே அறியமுடியும். ஈழத்தில் நான் இருந்த காலப்பகுதியில், குறிப்பாக 90 முதல் 95 வரையான காலப்பகுதியில் அங்கே இயங்கிவந்த நூலகங்கள் பற்றிய ஒரு சிறிய பதிவினைச் செய்வதே இப்பகிர்வின் நோக்கமாகும்.

குறிப்பு : இக்கட்டுரை யாழ் உதயன் பத்திரிகையின் வார இறுதிச் சிறப்பிதழாக சூரியகாந்திக்காக எழுதப்பட்டது. 19.10.2014 இதழில் வெளியானது. பத்திரிகையில் பிரசுரமானபோது எனது பெயரை தவறுதலாக அருண்மொழித்தேவன் என்று குறிப்பிட்டுவிட்டார்கள்.

இக்கட்டுரைகளை போர் சூழ்ந்த 90 முதல் 97 வரை, தன் பதின்மங்களை ஒட்டிய வயதுகளிலும், பதின்மங்களிலும் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த ஒருவனின் அன்றைய வாழ்வு பற்றிய நினைவுமீட்டல்களாகவே எழுத திட்டமிட்டுள்ளேன். அந்த வயதுக்குரிய ஆச்சரியங்களையும், அப்பாவித்தனத்தையும் இயன்றவரை பதிவுசெய்ய முயன்றுள்ளேன். இயன்றவை அன்றைய மாணவன் ஒருவனின் வாழ்வியலைப் பதிவுசெய்வதே இப்பதிவுகளின் நோக்கமாகும்.

-அருண்மொழிவர்மன்