கையெழுத்துப் பிரதிக் கலாசாரமும், கடிதங்களும்

கையால் எழுதும் கலையானது மெல்ல ஒழிந்துவருகின்றது என்று சில ஆண்டுகளிற்கு முன்னர் வெளியான ரொரொன்றோ ஸ்ரார் நாளிதழில் ஒரு கட்டுரயொன்று வெளியாகி இருந்தது. குறிப்பாக ஆங்கிலத்தில் எழுத்துக்களை தொடுத்தெழுதும் வழக்கமும், அதற்காக பயிற்சியளிப்பதும் கிட்டத்தட்ட இல்லாதே போய்விட்டது. அதுபோல கடிதம் எழுதும் வழக்கமும் மிக மிகக் குறைந்துவிட்டது. நாம் கடைசியாக எப்போது உறவினர் ஒருவருக்கோ அல்லது நண்பருக்கோ கடிதம் ஒன்றை எழுதினோம் என்றோ, கடந்த சில ஆண்டுகளில் எத்தனை கடிதங்கள் எழுதியிருக்கின்றோம் என்றோ நினைத்துப்பார்க்க திகைப்பாக இருக்கின்றது.

நான் யாழ்ப்பாணத்தில் இருந்தபோது யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேறிய ஓரிரு நண்பர்களிடம் இருந்தும், நான் யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேறிய 97ன் பின்னர் யாழ்ப்பாணத்தில் இருந்த நண்பர்களுடனும் தொடர்ச்சியான கடிதப்போக்குவரத்து இருந்துவந்தது. கடிதம் என்றால் ஒரு பக்கம், இரண்டு பக்கம் என்றல்ல, ஃபுல்ஸ்கப் அளவில் 10 பக்கம் அளவில் நீளும் கடிதங்கள், அதுவும் மாதம் ஒன்றிற்கு இரண்டு கடிதங்களாவது ஒவ்வொரு நண்பரிடம் இருந்தும் வரும். இன்றும் அந்த கடிதங்கள் என்னிடம் ஒழுங்காக கோப்பில் இடப்பட்டுள்ளன. கடிதம் என்கிற தொடர்பாடல் வடிவத்தை, உறவுகளை வளர்க்கும் முறையை நாம் கடந்த பத்தாண்டுக்குள் அந்நியப்படுத்திக்கொண்டோம். தன் வாழ்நாளில் எந்த உறவுக்கும் நட்புக்கும் ஒரு கடிதம் கூட எழுதியிராத தலைமுறையொன்று உருவாகிவிட்டது என்று நினைக்கும்போது பிரமிப்பாகவும் நம்பமுடியாமலும் இருக்கின்றது.

அதுபோல கையெழுத்துப் பிரதி ஒன்றைக் கடைசியாக எப்போது பார்த்தோம் என்று யோசித்துப்பாருங்கள். கிட்டத்தட்ட இல்லாமல் போய்விட்ட இன்னொருவடிவிலான எழுத்துமுயற்சி கையெழுத்துப்பிரதி என்றே நினைக்கின்றேன். நாம் யாழ்ப்பாணத்தில் படித்துக்கொண்டிருந்த காலப்பகுதியில் கையெழுத்துப் பிரதி எழுதுவது என்பது அனேகமான பாடசாலைகளில் ஒரு கலாசாரமாகவே இருந்துவந்தது. குறிப்பாக கொக்குவில் இந்துக்கல்லூரியில் இருந்து யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரிக்கு அதிபராக மாற்றலாகி திரு பஞ்சலிங்கம் அவர்கள் வந்த காலப்பகுதியில் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியிலும், அதேபோல கொக்குவில் இந்துக்கல்லூரியிலும் (திரு சுடர் மகேந்திரன் அவர்களாலும் இம்முயற்சிகள் ஊக்குவிக்கப்பட்டதாக நினைவுள்ளது) இவ்வழக்கம் தொடர்ந்துவந்தது. முதலில் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்துவந்த இவ்வழக்கம் பின்னர் கிட்டத்தட்ட ஒவ்வொரு வகுப்பும் ஒரு கையெழுத்துப் பிரதியேனும் வெளியிடும் அளவிற்கு போனது. ஒவ்வொரு வகுப்பின் வெவ்வேறு பிரிவுகளும் வெளியிடும் பிரதிகளுக்கிடையில் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகளும் வழங்கப்பட்டன. எமது வகுப்பில் “C” பிரிவில் கையெழுத்துப்பிரதிகள் வெளியிடும்நோக்கில் மூன்று கழகங்கள் இயங்கின. அதில் அமலன் என்ற நண்பனும், தவரூபன் என்ற நண்பனும் சேர்ந்து அமைத்த ஒரு கழகத்தினர் ஒருமுறை எம் வகுப்பிற்கிடையில் ஒரு பொது அறிவுப் போட்டி நடத்தி பரிசுகள் வழங்கினர். பரிசுகள் என்னவென்பது சுவாரசியமானது. அப்போது மிகப் பிரபலமாக இருந்த ஒக்ஸ்ஃபோர்ட் கொம்பாஸ் என்ற Oxford Set of Mathematic Instrumentsன் உபகரணங்களை பிரித்து முதல் 3 பரிசுகளும் வழங்கப்பட்டன. இவற்றுடன் முதலாம் பரிசாக ஒரு “மிக்” நாலு கட்டு (180 பக்க) கொப்பியும் வழங்கப்பட்டது.

இந்தக் கையெழுத்துப்பிரதிகளின் உள்ளடக்கம் பெரிதும் தகவல்களாக – அதாவது நாடுகளின் தலைநகரம், பண அலகுகள், பிரதமர்கள், விஞ்ஞானக் கண்டுபிடிப்புகள் போன்றவற்றைப் பட்டியலிடுவதாக – அமைந்திருந்தன. பெரிய அளவில் புனைவுகள் இடம்பெறவில்லை. சில விஞ்ஞானக் கட்டுரைகளும் இடம்பெற்றிருந்தன. ஓவியங்களும் ஊக்குவிக்கப்பட்டன. சில காலங்களிற்கு முன்னர் வெற்றி எஃப் எம்மில் பணியாற்றிய பிரதீப் என்ற நண்பரின் ஓவியங்களைத் தாங்கி, குகப்பிரசாதன் என்ற நண்பரின் எழுத்தில் “பனிமலர்” என்ற ஒரு மாய ஜாலக் கதையை நூலாக்கி ரோனியோ பிரதிகள் எடுத்து 15 வயதில் விற்பனை செய்தனர். அன்றைய காலகட்டத்தில் இது ஒரு சாதனை. பொருளாதாரத் தடை காரணமாக காகிதங்கள் ஒழுங்காக வராத மூடுண்ட அன்றைய யாழ்ப்பாணத்தில் பத்திரிகைகள் ஃபைல்மட்டை என்று சொல்லப்படுகின்ற தரத்திலான காகிதத்தில் கூட – அதுவும் பச்சை, மஞ்சள், நீலம் என்று பல்வேறு நிறங்களில்ல் – பத்திரிகைகள் வெளியாகிவந்த காலப்பகுதி அது. மாட்டுத்தாள் பேப்பர் என்று சொல்லப்படுகின்ற, காகிதப் பைகள் செய்யப்பயன்படுகின்ற காகிதத்தில்தான் பல பத்திரிகைகள் வெளியாகின. சஞ்சிககள் சர்வ சாதாரணமாக கோடிட்ட, அப்பியாசக் கொப்பிகளில் காகிதங்களிலேயே வெளியாகின. இப்படியான காலப்பகுதியில் 15 வயது மாணவர்கள் இருவர் இணைந்து செய்த இம்முயற்சி நிச்சயம் சாதனைதானே.

அப்போது கிரிக்கெட் பைத்தியமாக இருந்த நானும், பிரசன்னா, மமான்ஸ் ஜான்சன் என்ற இரண்டு நண்பர்களும் இணைந்து கிரிக்கெட் பற்றி ஒரு புத்தகம் எழுத எமது 12வது வயதில் ஆரம்பித்தோம். அப்போது மின்சாரம் இல்லாமையால் எந்த கிரிக்கெட் ஆட்டங்களையும் நேரலை ஒலிபரப்பில் பார்த்தது இல்லை. நேரடி வர்ணனைகளைக் கூடக் கேட்டதில்லை. ஆனால் கிரிக்கெட் பற்றி அறியவேண்டும் என்பதற்காகவே எல்லாப் பத்திரிகைகளையும் தேடுவோம், ஆட்டங்கள் பற்றிய விபரங்களை அறியவேண்டும் என்பதற்காக. அப்போதெல்லாம் விளையாட்டுச் செய்திகள் பெரிதும் பத்திரிகைகளின் பின்பக்கத்தில்தான் இடம்பெறும்; அவ்வாறு பழகிய பழக்கம் இன்றுவரை பத்திரிகைகளின் பின்பக்கத்தினை முதலில் படித்துப் பார்க்கும் பழக்கமே தொடர்கின்றது. இவ்வாறு திரட்டிய தகவல்களை எல்லாம் வைத்து, அப்போது யாழ்ப்பாணத்தில் பிரபலமாக இருந்து நாலு கட்டுக் கொப்பிகளில் இரண்டினை ஒன்றாக பைண்ட் பண்னி எழுதினோம். அந்த வயதில் முக்கியமானது என தெரிந்திருந்த ஆட்டங்களின் ஓட்ட விபரங்களை (ஸ்கோர்) தேடித் தேடிச் சேகரித்தோம். ஒஸ்ரேலியாவுக்கும் இங்கிலாந்திற்குமான முதலாவது ரெஸ்ற் போட்டியின் ஓட்ட விபரங்களை அந்த வயதில் தேடிப் பிடித்ததை இப்போதும் ஒரு சாதனை என்றே சொல்லுவேன். விவேகானந்தா பழைய புத்தகசாலை, அதற்கு முன்னால் ஒரு வயதான ஐயா வைத்திருந்த பழைய புத்தகசாலை என்று யாழ்ப்பாணத்தில் இருந்த அனைத்துப் பழைய புத்தகசாலைக் கடைக்காரரும் பழக்கமானது அப்போதுதான்.

இந்தக் கட்டுரையை எழுதிக்கொண்டிருக்கும்போது, சுவாரசியமான இன்னொரு விடயம் தோன்றுகின்றது. அப்போதெல்லாம் பரீட்சைகளில் தமிழ், ஆங்கில மொழிப்பரீட்சைகளில் உங்கள் ஊரில் நடைபெற்ற கோவில் திருவிழா பற்றியோ, வேறேதேனும் நிகழ்வுகள் பற்றிய ஒரு விவரணக்கடிதத்தை கொழும்பில் இருக்கின்ற உறவினர் ஒருவருக்கு எழுதும்படி ஒரு கேள்வி வரும். இப்போதும் இக்கேள்வி வருகின்றதா தெரியாது. கையெழுத்துப் பிரதிகளிலும் இதேபாணியைப் பின்பற்றி கடிதங்கள் எழுதுவோம். உடன்பிறப்புக்கு கடிதங்கள், தம்பிக்கு கடிதங்கள் என்கிற திமுகவினரின் பாதிப்பாக இருக்கலாம். இப்போதும் எனது சேகரிப்பில் இருக்கின்ற நண்பர்களின் கடிதங்களைப் புரட்டிப்பார்த்தால் 97ம் ஆண்டு முதல் 2002 ஆண்டுவரை யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற பாரிய மாற்றங்களையும், அக்காலங்களில் நடைபெற்ற பாடசாலை, பல்கலைக்கழக நிகழ்வுகள் பற்றியும், பொருட்களின் விலை உயர்வுகள் பற்றியும், மின்சார வருகை ஏற்படுத்திய மாற்றங்கள் பற்றியும் நல்லதோர் அவதானத்தினைப் பெறமுடிகின்றது. இன்று இவை எல்லாம் காலவதியாகிவிட்டன.

பாடசாலை மட்டங்களில் இப்போதும் கையெழுத்துப் பிரதிகள் வருகின்றனவா என்று தெரியாது. நிச்சயம் ஏதோ ஒரு மூலையில் தனிச்சுற்றுக்கான கையெழுத்துப் பிரதிகள் வழக்கில் இருந்துகொண்டிருக்கும். ஆனால் ஒரு கலாசாரமாக, முக்கியமான பாடசாலைகளின் மைய நிகழ்வுகளில் ஒன்றாக அவை இல்லை என்றே அறியமுடிகின்றது. பொருளாதாரத் தடைநீக்கமும், மின்சாரத்தின் வருகையும், வீடுகளில் இலகுவாக இருக்கக்கூடிய நூல் வடிவமைப்பிற்கான மென்பொருட்களும் நூலொன்றினை உருவாக்கத்தை இலகுவாக்கியிருக்கின்றன. இது கையெழுத்துப்பிரதிகள் என்பவற்றிற்கான தேவையை வெகுவாகக் குறைத்திருக்கின்றன. ஆனால் ஒரு அச்சு நூல் ஒருபோதும் கையெழுத்துப் பிரதியை ஈடுசெய்யாது. முன்னர் வெளியான கையெழுத்துப்பிரதிகள் கல்லூரி நூலகங்களில் வைக்கப்பட்டிருந்தன. இப்போதும் அவை இருக்கின்றனவா என்றும் தெரியாது. ஆவணப்படுத்தல் முயற்சி ஒன்றுக்காக விசாரித்தபோது அப்படி ஒன்றையும் காணமுடியேல்ல என்றார்கள். “அப்படி ஒன்றையும்” என்பதில் இருந்த அந்நியத்தன்மையை குரலில் இருந்து அவதானிக்கமுடிந்தது; அதுவே சிலவே விடயங்களைச் சொல்லிற்று.

குறிப்பு :
இக்கட்டுரை யாழ் உதயன் பத்திரிகையின் வார இறுதிச் சிறப்பிதழான சூரியகாந்திக்காக எழுதப்பட்டது. 26-10-2014 ல் வெளியானது.

இக்கட்டுரைகளை போர் சூழ்ந்த 90 முதல் 97வரை, தன் பதின்மங்களிலும், பதின்மங்களை ஒட்டிய காலங்களிலும் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த ஒருவனின் அன்றைய வாழ்வு பற்றிய நினைவுமீட்டல்களாகவே எழுதத் திட்டமிட்டுள்ளேன்.

-அருண்மொழிவர்மன்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

Website Powered by WordPress.com.

Up ↑

%d bloggers like this: